வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)

October 19, 2013

எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக  என்றெல்லாம்…

… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.

calvinhobbes-tv

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)

மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில்,  சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.

ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன்  என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும்.  யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம்.  ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !

1. தொலைக்காட்சியில்லாமல் – அது இல்லாத வாழ்க்கையை, நான் கற்பனை செய்யவே முடியவில்லை.

அய்யா, நீங்கள் கற்பனை கிற்பனையெல்லாம் செய்யவேண்டாம். எனக்குத் தெரிந்தே சில குடும்பங்களில் தொலைக்காட்சிப் பெட்டியே வைத்துக் கொள்ளாத அற்பக் கேனையர்கள்  இருக்கிறார்கள் – இவர்களில் குறைந்த பட்சம் ஐந்து குடும்பங்கள் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. இக்குடும்பங்கள் மூளைக் குடைச்சல்காரத்தனம், மேட்டிமைத்தனம் கொண்டவையுமில்லை –  இக்குடும்பத்தினர் வெகு சாதாரணமாகவும் இயல்பாகவுமே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன், உங்களுக்கெல்லாம் நன்றாக அறிமுகமாகியிருக்கக் கூடிய, என் அன்புக்குரிய ஜெயமோகன் அவர்கள் வீட்டில் கூட, இந்தப் பெட்டி இல்லை.

2. ஏன் உன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லை?

அதற்குப் பல  தத்துவ / அறிவியல் / வாழ்வியல் / மனோதத்துவ ரீதியான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இப்போது வேண்டாமே.

இப்பதிவில் நான், தொலைக்காட்சியில்லாமல் உயிர்தரித்தலுக்கான  சில செயல்முறை விளக்கங்களையும், லோகாயதமான விஷயங்களையும் பற்றி மட்டுமே எழுதப் போகிறேன்.

3. ஹ்ம்ம்… புரிகிறது –இருந்தாலும், ஏன் உன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லை? ஒரு காரணமாவது சொல்லமுடியுமா??

சரி, ஒரு லோகாயதமான காரணம்:  நாம் சராசரியாக, 75 வருடங்கள் வாழக் கூடும் என்றால் அதில் சுமார் 25 வருடங்களைத் தூங்கியே கழிக்கிறோம். சரி, இப்போது ஒரு நாளைக்குச் சராசரியாக, 3 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறோம் என்றால், மீதியிருக்கும் 50 வருடங்களில் ஒன்பது  வருடங்களை இப்படி அந்தப் பெட்டியின் முன் உட்கார்ந்து செலவழிக்கிறோம். என் நோக்கில், இந்தப் பொன் போன்ற ஒன்பது வருடங்களை (இது என்னுடைய ‘விழித்திருக்கும் நேரத்தில்’ சுமார் 20%! இருபது சதம்!!)  சுளையாக வாரிக் கொடுத்து, எப்படியாகவேனும் தொலைக்காட்சி மூலம் நான், என் ஒரேயொரு வாழ்வில் — கற்றுக் கொண்டே ஆக வேண்டியது என்பது ஒரு இழவும் இல்லை. அதனாலும்.

4. பின் எப்படி என் தினசரி நடவடிக்கைகளின் , வேலைகளின் நடுவே கிடைக்கும் நேரத்தை ’டைம்-பாஸ்’ செய்வது?

அய்யா, காலம் பொன்னானது என்பது உங்களுக்கே தெரியும். டைம்-பாஸ் செய்து காலை ஆட்டிக்கொண்டு, கொஞ்சம் பின்பாகத்தை உயர்த்தி வாயுவை வெளியேற்ற சொற்ப வினாடிகளேயாகும். இதற்கு ஏன் தொலைக்காட்சி முன் உட்காரவேண்டும்? மற்றவர்களுடைய வாயு வெளியேற்றங்களைப் பார்த்து மனம் மகிழ வேண்டும்?

5. அலுவலகத்திலிருந்து அலுப்புடன் திரும்பி  வந்தபின், ஒரு ‘ரிலேக்ஸேஷன்’ தேவைப் படுகிறது. இதற்கு,  தொலைக்காட்சி முன் சிறிது உட்கார்ந்தால் அது தவறா?

ஹ்ம்ம். இல்லை. ஆனால் அதிர்ச்சியூட்டும் செய்திகளைப் பார்த்துப் பார்த்து — எப்படித்தான் இந்த ‘ரிலாக்ஸேஷன்’ இழவைச் செய்யமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

calvinhobbes-more-popculture-tv

காட்டுக் கத்தல் விளம்பரங்களை, சுடச்சுடப் பொய்ச் சேதிகளை, ரத்தக் களறிகளை, அனைத்து  மொழிகளையும் சித்திரவதை செய்து கொல்லும் பேச்சுக்களை, விஜய் குஜய் ரஜினி கிஜினி சூர்யா கீர்யா என்று படங்களை, கண்டமேனிக்கும் தொப்புள்களையும், துடைகளையும், பாற்சுரப்பிகளையும் ( “அந்தப் படத்தின் கதாநாயகி யார்?”  “பேரா? ஹிஹி, மொகத்தையெல்லாம் யார் பார்த்தாங்க!”) பார்ப்பதை – இளித்துக் கொண்டிருப்பதை என்னால் ‘ரிலேக்ஸேஷன்’ என்று கருத முடியவில்லை. மன்னிக்கவும்.

தேவையற்ற படபடப்புகளை, ரத்தப் பாதைகளில் அட்ரினலின் சுழித்தோடிப் போவதை, கோபதாபங்களை வளர்த்தெடுப்பதை எப்படித்தான் நீங்கள்  ‘ரிலேக்ஸேஷன்’ என்று சொல்கிறீர்களோ? ஆனால், ஒருவேளை, உங்களுக்கு அப்படிக் கருத முடியும் மனவலியிருக்கலாம்.

6. என் அலுவலகப் பணிக்கு, பொது அறிவு வளர்ச்சிக்கு தொலைக்காட்சி பார்க்க வேண்டியது மிக அவசியம். உலகளாவிய நிகழ்ச்சிகளை அவைகள் நடக்கும்போதே அறிந்து கொள்வதும், அவற்றைப் பற்றி கருத்துகளை உருவாக்கிக் கொள்வதும் ஒரு குடிமை உணர்ச்சியுடன் இருப்பவன் செய்ய வேண்டிய வேலையில்லையா?

அ. இப்படிப்பட்ட கந்தறகோளங்களை செய்யவைக்கும் வேலையில் நீங்கள் இருக்க வேண்டுமா என்று தயவுசெய்து யோசிக்கவும்.

ஆ: நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்வது தகாது. தொலைக்காட்சியைப் பார்த்து, ஒருவன் (அல்லது ஒருத்தி) குடிமையுணர்ச்சி பெருகிறார், அல்லது பொதுப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பட்டு அவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளைப் பெற்று, அவ்வழிகளின் படி ஒழுகவும் செய்கிறார் என்பது ஒரு அழகான கற்பனைதான். இப்படியெல்லாம் இருந்தால், நம்முடைய மட்டைகள் ஊறும் குட்டையான தமிழகத்தையே விடுங்கள், உலகமே சொர்க்கலோகமாகி விடும்.

இ: வேறு விஷயங்கள் குறித்த உங்கள் கருத்து உருவாக்கங்களையே விடுங்கள் – உங்களால் தொலைக்காட்சி பற்றிய கருத்துகளை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்க முடிந்துள்ளது என்பதை — இந்தப் பதிவை (இன்னமும்) படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் மீண்டும் யோசிப்பீர்களாக.

7. பின்னர் பொது அறிவுக்கு என்னதான் செய்வது?

அ: நல்ல, ஓரளவுக்குத் தரமான நாளிதழ்களைப் படிக்கலாம். (தற்போதைக்கு அவை எனக்கு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் + தினமணி; அதுவும் வாரம் ஒருமுறை.  நிச்சயம் தமிழ்+ஆங்கில ‘த ஹிந்து’ அல்ல.

இந்த  ‘த ஹிந்து’வின் செய்தித் திரித்தலையே விடுங்கள் – குறைந்த பட்சம், ஒருகாலத்தில், சரியான ஆங்கிலத்துக்காவது இதைப் படிக்கலாம் என்ற கதையெல்லாம் இருந்தது. இப்போது பக்கத்துக்கு பத்து பிழைகளாவது இருக்கின்றன. சமயத்தில், இவர்களின் எடிட்டோரியலில்   கூடப் பிழைகள்! காலத்தின் கோலம்தான், வேறென்ன சொல்ல. தமிழ் ‘த ஹிந்து’வில் என்னுடையதை விடவும் மோசமான தமிழ் உலா வருகிறது, செய்தித் தலைப்புகளிலேயே தவறுகள்! இதணை கேட்பாறிள்ளையா!!

ஆ: நல்ல வாராந்தரிகளை / மற்ற பத்திரிக்கைகளைப் படிக்கலாமே? அதாவது —  பிஸினெஸ் இந்தியா, துக்ளக், ஆழம், சுதேசி செய்தி, காலச்சுவடு, தீராநதி, பசுமை விகடன் போன்றவை.

நிச்சயம்  — ஆனந்தவிகடன், குமுதம்,  ஜூனியர்விகடன், நக்கீரன், சரோஜாதேவி, குங்குமம், உயிர்மை இன்னபிற அல்ல; கல்கி கடந்த சில வருடங்களில் ஒரு அரைவேக்காடாகியிருக்கிறது – நடிகை மார்பகப் பிளவுப் படம் போடுவதா வேண்டாமா, மார்பகத்தைக் காண்பிக்காதமாதிரி காண்பிக்கலாம் என்றால் எந்த கோணங்களோடுள்ள ஜிகினாப் புகைப்படங்களை வெளியிடலாம் போன்ற தலையாய பிரச்சினைகளை, பாவம் இவர்கள் இன்னமும் தீர்க்கவில்லை. பரிதாபத்துக்குரிய இந்த ஜீவன்களுக்கு எனது பரிந்துரைகள்: பொன்னியின் செல்வனை இன்னொரு சுற்றுக்கு விடவும். n = n +1; சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அவர்களின் கவைக்குதவாத அருள்வாக்கைக் கடாசி விடவும்; தைரியமாக உயிர்மை போல பொய்களை எழுதப் பழகவும்; மோதியுடன் மோதவும். கடுகு பதில்களில், ஆண்களின் பிலிம் நடிக ஆண்களின் தொப்புள்களை வரிசையிடுவதிலிருந்து ஆரம்பிக்கலாம்; பின்னர் பாற்சுரப்பிகளுக்குத் தாவலாம்; உங்களிடம் அடோபி ஃபோட்டோஷாப் இருக்கவே இருக்கிறது அல்லவா? உதடு மார்பகம் துடை தொப்புள் என்று புகுந்து விளாசலாம். உங்கள் புதுப்பொலிவுக்கு நல்வாழ்த்துக்கள். )

ஆனால், எனக்கு மேற்கண்ட பத்திரிகைள் அனைத்தையும் கூடப் படிக்காமல், ஓரளவு பொது அறிவு இருக்கிறது – இத்தனைக்கும் நான் ஒரு மகாமகோ புத்திசாலியோ, கடும் உழைப்பாளியோ அல்லன்.ஒரு வெகு சாதாரணன் தான்.

என்ன, இந்த தொலைக்காட்சி இல்லாததால் – ஸுனாமி வந்து முழுசாக மூன்று நாட்களுக்குப் பின்தான் அதனைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.முன்னாலேயே தெரிந்திருந்தாலும் கூட, நான் ஓடிப்போய் ஆர்எஸ்எஸ், ஸேவாபாரதி அமைப்பினர் போல உடனே  புனருத்தாரண வேலைகளில் ஈடுபட்டிருக்க மாட்டேன். பொய்  சொல்லக் கூடாது.

நம் தலைவர் கருணாநிதி அவர்கள் சும்மா ஒரு அரைமணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஸ்ரீலங்கா பிரச்சினையை சிடுக்கவிழ்த்து, பின்னர் போரையும் தவிர்த்த மகாமகோ செய்தியையும், ஒரு வாரத்துக்குப் பின் தான் அறிந்து கொண்டேன். ஆனால் பாதகமில்லை. எப்படியும் இம்மனிதரின், உண்ணாவிதத்துக்கு முன்னாலும் பின்னாலும் – எந்த ஒரு துக்கிணியூண்டு உலக நடப்பிலும் ஒரு எழவு  வித்தியாசமும் இல்லை.

என்னுடைய ‘பொது அறிவு’ சராசரி அளவில் தான் இருக்கிறது. என் குடும்பத்தின், எனது நாட்டின் மேன்மைக்கு – இவற்றையே விடுங்கள் — என் சொந்த  மேன்மைக்கேகூட – எனக்கு இது போதும். தொலைக்காட்சியில்லாமைக்கு நன்றி.

calvinhobbes-more-no-tv-inroom

8. என் அலுவலக /வெளியுலக நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசுவதற்கு – பொதுவான விஷயங்கள், தொலைக்காட்சி சேனல்கள் / நிகழ்ச்சிகள் பற்றியும், திரைப்படம் சார்ந்த கருத்துகளும், பிரபலமானவர்கள் பற்றிய கிசுகிசுக்களும், அரசியல் அரட்டையும்தான். ஆக, நான் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்றால், எனக்கு அவர்களுடன் பேச ஓன்றுமே இருக்காதே!

சரியாகச் சொன்னீர்கள். சரியாகவேதான் சிந்திக்கிறீர்கள். ஆக – நீங்கள் இம்மாதிரி கவைக்குதவாத வெட்டி, உரையாடல்களைக் குறைத்துக் கொண்டு, உபயோகமான விஷயங்களில் ஈடுபடலாமே!

என்ன சொல்லவந்தேனென்றால் – பல விஷயங்களில் மகாமகோ சாதாரணனான என்னாலேயே முடியும் இந்த எதிர்த்-தொலைக்காட்சி விஷயம், ஆக, உங்களால் நிச்சயம் முடியும். கவலை வேண்டேல்.

9. நாம் பிரதிமைகளின் மூலம் பார்க்கும் ஊடகச் செய்திகள் மூலமாக நிறையவே கற்றுக் கொள்ள முடியுமில்லையா? A picture is worth a thousand words – ஒரு சித்திரம், ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமில்லையா?  ஏன் இந்த நோக்கில் தொலைக் காட்சியைப் பார்க்கமாட்டேனென்கிறாய்?

அய்யா, ‘ஒரு சித்திரம், ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது’ என்பதெல்லாம் வெற்றுச் சங்கொலிதான். இந்த மாதிரி க்லிஷேக்களுக்கும், அவற்றின் உவமான உவமேயங்களை எப்படி, எந்தப் பின்புலத்தில் உபயோகிக்கலாம் என்பதெற்கெல்லாம் ஒரு வரைமுறையுண்டு; இவற்றை வெறுமனே உச்சாடனம் செய்ய வேண்டாம்.

நான் ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடிகிறவற்றை நீங்கள் ஒரு சித்திரம் வரைந்து காண்பிக்க முடியுமா?

ஜேஜே சில குறிப்புகளிலிருந்து:

“செய்து முடித்துவிடக் கூடிய காரியங்களையும் செய்யமுடியாமல் செய்து விடும் இந்த அசட்டை என்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.”

இதற்கு நீங்கள் 1000000000 சித்திரங்கள் வரைந்தாலும், அதை ஆதிமூலம் அவர்களே வரைந்திருந்தாலும், எனக்கு இந்த வரியின் செய்தியைத் தெரிவிக்க முடியாது; மன்னிக்கவும்.

ஆக, நான் சொல்வேன்:

A picture is NOT even worth a 0.000000001 Word என்று – ஒரு வார்த்தையின் ஒரு தூசுக்குக் கூட ஒரு சித்திரம் சமமில்லை என்று.

இதுவும் சரிதான். இந்தச் சொற்றொடருக்கும் எல்லைகள் இருக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள்.

வெறும் உச்சாடனங்கள், வாதங்களாக முடியாது.

அடுத்த பாகம்:

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (2/3)

3 Responses to “வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)”


  1. //ஒரு வார்த்தையின் ஒரு தூசுக்குக் கூட ஒரு சித்திரம் சமமில்லை//. – இந்த சொற்றொடருக்கு //எந்தப் பின்புலத்தில் உபயோகிக்கலாம் என்பதெற்கெல்லாம் ஒரு வரைமுறையுண்டு; இவற்றை வெறுமனே உச்சாடனம் செய்ய வேண்டாம்// என்கிற தங்களின் மருதலிப்பு வாக்கியம் பொருந்தும் என்றே நினைகின்றேன்.. சில ஓவியங்கள்/படங்கள் விளக்குவதை, பல வாக்கியங்களாலும் விவரிக்க முடியாது. இரண்டும் வேறு வேறான தன்மைகள் மற்றும் சிறப்புகளை கொண்டிருக்கும் ஊடகங்கள், இரண்டிலும் பலம், பலவீனங்கள் இரண்டும் உண்டு. அதே போல தொலைக்காட்சியும் ஒரு ஊடகமே.


  2. அருமையான பகிர்வு. எங்க வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறதென்றாலும் நான் அதிகம் பார்ப்பதில்லை. அதுவும் விடுமுறை தினங்களில் தொலைக்காட்சியையே போடவும் மாட்டோம்; பார்க்கவும் மாட்டோம். :))))


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...