கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 1

02/04/2011

மக்கள்தொகை வளர வளர, அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தனி வீடுகளும், சாலைகளும், வணிக வளாகங்களும், பொழுதுபோக்கிற்கான இடங்களும், மருத்துவ மனைகளும், உணவகங்களும், கல்வி நிறுவனங்களும் இன்ன பிற கான்க்ரீட் காடுகளும் வளருகின்றன.

பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக நம் தமிழகத்திலும் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கிற அசுர வளர்ச்சியை (மன்னிக்கவும் , நான் கருணாநிதி கும்பலைப் பற்றிப் பேசவில்லை இங்கு) – அதிலும்,  ‘real estate’  (இதை surreal estate என்று  சொல்வதே  தகும்) வணிக வளர்ச்சியை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே இந்த ரியல் எஸ்டேட் , இதன் இடுபொருட்கள், நில-ஆர்ஜிதம், நிதி, கருணாநிதி  போன்ற  இந்தப் பின்னணியில் தான் இந்த இடுகை.

நான் பலமுறை கட்டுமானப் பணிகளில் பெரிய அளவில் ஈடுபடும் சிலரிடம் பேசியிருக்கிறேன், பேசிக்கொண்டிருக்கிறேன். இவர்களில் அரசாங்கப் பணி ‘கான்ட்ராக்ட் ‘ எடுப்பவர்களும், அடுக்குமாடி வீடுகள் கட்டுபவர்களும் அடங்குவர். இதில் சிலர் என் நண்பர்கள். பலர் முன் அறிமுகம் அற்றவர்கள். இருப்பினும், அண்மையில் மனமுவந்து (மனம் வெந்து?) அவர்கள் சொன்ன விஷயங்கள் ஆச்சரியப் பட(!) வைத்தன.

ஆச்சரியம் என்று ஏன் எழுதுகிறேன் என்றால், கடந்த 35 வருடங்களாக தமிழகத்தைப் பார்த்துவரும் என்னால்.திமுக வின் (அதாவது, ஊழலின்) பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும் என நினைத்திருந்தேன். ஆனால், கடந்த சில வருடங்களாக இத்தொழிலில் மற்றும் அதன் பின்னணிகளில்  நடைபெறும் ஊழல்களும், சதிகளும் என்னுடைய படு மோசமான கற்பனைகளின் நீட்டிப்புக்களை மீறி, அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு உள்ளன. உண்மை நிகழ்ச்சிகளை அவற்றிற்கான ஆதாரங்கள் கூட பல பார்த்தும் நம்பவே முடியவில்லை. இந்த பூமியில் தான் காமராஜ், கக்கன், ராஜாஜி போன்றவர்கள் இருந்தார்களா என்ன? எப்படி ஒரு குடும்பம் (குறைந்த பட்சம் நான்கு தலைமுறைகள் கொண்டது) இப்படி வேகமும், வீச்சும், வெறியும் பெற்று தமிழ் நாட்டின் ரத்த நாளங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது? இந்த குழப்பமான, பயங்கரமான சூழ்நிலையில் என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்தேன்? நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

இவை எல்லாம் எழுத ஆரம்பித்தால், ஒரு பத்து புத்தகம் எழுதும் அளவிற்கு என்னிடம் ( ‘ரியல் எஸ்டேட்’  பற்றி மட்டும்) குறிப்புகள் உள்ளன. ஆனால், நான், இந்த மாபெரும் ‘ரியல் எஸ்டேட்’  தளத்தில், ஒரு மிகச் சிறு பகுதியான ‘மணல் கொள்ளைகளை’ எடுத்துக் கொள்கிறேன். மற்றவைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். ஆனால் எனக்குத் தெரியும், உங்களால் என்ன கற்பனை செய்தாலும், உண்மை நிலையை உணர முடியாது – ஏன், அதற்கு அருகில் கூடச் செல்ல முடியாது.

மணல் கட்டுமானப் பணிகளுக்கு இன்றியமையாத ஒன்று தான். மணல் இல்லாமல் இருந்தால் கட்டுமானத் தொழிலே ஸ்தம்பித்து விடும் என்பதும் உண்மை.

வீடு கட்டுபவர்களின் அழகுணர்ச்சியும், சுற்றுச்சூழல் காக்கும் எண்ணங்களையும் பொறுத்து மணல் தேவை மாறுபடும், இப்போது நான் வசிக்கும் வீடும் குறைந்த பட்சம் ஐந்தில் ஒரு பங்கு மணலால் ஆனது தான். ஒரு குத்து மதிப்பாக, மணலின் மதிப்பு, மொத்த கட்டிடத்தின் மதிப்பில்  5-10 % வரை இருக்கலாம். வீடுகளல்லாமல் மற்ற கட்டுமானங்களுக்கு இந்த சதவிகிதம்  மாறுபடும்.

மணல்  முக்கியமாகவும், படு சுலபமாகவும், நல்ல தரத்துடனும்  கிடைக்குமிடம் ஆற்றுப் படுகைகள். ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுப்படுகை இல்லாத பகுதிகளிலும் தேவையான, கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவான  மணல் கிடைக்கிறது.(இந்தப் பிரதேசங்களில் பலகோடி வருடங்கட்கு முன் ஆறுகள் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்). ஆனால் இம்மணல் பெரும்பாலோரால் விரும்பப் படுவதில்லை – காரணம் ‘இவை பார்ப்பதற்கு சிறிது கரடுமுரடாய் இருக்கும். சிறிய சரளைக் கற்கள் மிகுந்து இருக்கும். ஆனால் பாதகமில்லை.

இருப்பினும், நாம் ஆற்று மணல் வாங்குகிறோம். ஆற்று மணல் மட்டுமே வாங்குகிறோம். இது தேவையில்லை என்றாலும், விலை கூடுதலாக இருப்பினும்…ஏன்? நமக்கு சொந்த மதிப்பீடுகள் இல்லை.  நம் அனுபவங்கள், சொல்லாடல்கள் எல்லாம் கடன் வாங்கியவை. (நமக்கு மூளை பெரும்பாலும் வேலை செய்யாததால் – கருப்பு என்றால் கேவலம், வெள்ளை என்றால் அழகு என்றும், ஒருவர் சிறிது வெள்ளையாக இருந்தால்  ‘அவர் நல்ல ‘fair’ ஆக இருக்கார்’ என்றும் (அப்படியென்றால் கருப்பு ‘unfair’ ஆ?), மற்றொருவர் கருப்பாக இருந்தால், ‘அவருடைய நிறம் கொஞ்சம் ‘மட்டு” என்றும் சொல்கிறோம் இல்லையா? என்ன வடிகட்டிய முட்டாள் தனம் இது! இந்த மனப்பான்மை தான் மணல் குறித்த அறியாமைகளுக்கும் காரணம்.

நாம் அனைத்தையும் ‘பார்வைக்கு நன்றாக இருக்க வேண்டும்’ என விரும்புபவர்கள்.  நம் முட்டாள் தனத்தால், இந்த நீரோட்டம் அற்ற, வறண்ட மண்ணடிப் படுகைகள்,  உபயோகப் படுத்தப் படுவதே இல்லை. ஆனால், இவற்றை பயன் படுத்தவேண்டுமானால்  சிறிது மேற்புறம் மண்ணை அகற்ற வேண்டும் – சிறிது செலவு ஆகலாம்.  சிறிது கஷ்டப் பட வேண்டும்.  அவ்வளவு தான். ஆனால் செய்ய மாட்டோம். ஏனெனில் ஆற்றுமண் பார்க்க வெள்ளை நிறத்தோடு அழகாக, ஒரே அளவில், ஆலைச்சர்க்கரை போல இருக்கிறது… ஆகவே ஆற்று மணல் மட்டுமே வாங்குகிறோம்.

ஆற்று மணலுக்கு  ஏதேனும் மாற்று உள்ளதா என்று நாம் ஆராய்வது கூட இல்லை – ஏன் ஆராய்ச்சிக்குப் போவானேன்?, நினைப்பது கூட இல்லை!

இதுவரை நம் தரப்பு அநியாயம்  பற்றி – இப்போது, நமது கனிமொழி தரப்பு  அநியாயத்தைப்’ பார்ப்போம்..

ஆற்று மணல் ‘கேட்பாரற்றுக்’ கிடக்கிறது.  மக்களுக்கு, கட்டுமானப் பணிகளுக்கு. இந்த ஆற்று மணலுக்கு ஏக கிராக்கி. ஆட்சியோ(!) நமது. காவல் துறை, வருவாய்த் துறை எல்லாம் நம் கையில். மக்களையும் பிச்சைக்காரர், குடிகாரர், சோம்பேறிகளாக்கி  நம் கிடுக்கிப் பிடியில் கொணர்ந்தாயிற்று. ஒரு மூலதனமும் தேவை இல்லை. மாவட்டம் மாவட்டமாக ‘தகுதி’ பெற்றவர்களுக்குப் ஆற்றுப் படுகைகளை பிரித்துக் கொடுத்து விட்டு, களைப்பின்றி, உடல் உழைப்பின்றி பணம் பண்ணலாம்… அவர் கையோ துறுதுறு என்கிறது. அவர் மனப்பான்மையோ எது கிடைத்தாலும் ஒரேயடியாக ‘லபக்‘ பண்ணுவது.

பாவம், கனிமொழி என்னதான் செய்வார்? தயவுசெய்து, அவருடைய நிலைமையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…

அவர் தந்தையார் ‘விஞ்ஞான முறையில் நாற்பது ஆண்டுகள் முன்னரே ஊழல் செய்ததை நாடறியும். உங்களுக்கும் தெரியும், கருணாநிதியின் நேரடி வாரிசு கனிமொழி தான் என்பது…  முதுபெரும் சோழன் செய்த / செய்யும் ஊழல்களை விட பட்டத்து இளவரசி அதிகம் அறிவியல் பூர்வமாகச் செய்யவேண்டாமா?

ஆகவே தான் ஆற்றுப் படுகைகள் சூறையாகப் படுகின்றன. அரசு யந்திரங்கள் (!) ‘அடக்கமாக’ வேலை செய்கின்றன. தப்பித் தவறி ஏதாவது நேர்மையான அதிகாரி வாலை ஆட்டினால், அவரையே நறுக்க, லாரிகளால் நசுக்க, அடிப்பொடிகள் தயார்…

ஆனால், இப்படுகைகளைக் காலி செய்வது என்பது பூமித்தாயைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். இந்த மணல் வேண்டிய அளவு  இல்லாமல் இருந்தால், ஆற்றின், பூமியின் உறிஞ்சிக்கொள்ளும் திறன் மிகுந்த அளவு பாதிக்கப் படும் . மழை பெய்தால் தேங்காது. நிலத்தடி நீர் அபாயகரமாகக் குறையும். வெள்ளம் வந்தால் சேதம் அதிகமாக இருக்கும். நில அரிப்பு அதிகமாகும். பயிர்களுக்கு நீரும் குடிநீரும் அரிதாகும். பூமி வறண்டு போகும்.

கனிமொழி அவர்களுக்கு நல்ல படிப்பு இருக்கிறது என நினைக்கிறேன். அவருக்குத் தெரியாதது அல்ல, அவர் பணமோகத்தின், மணல் கொள்ளையின் விளைவுகள். ஆனால் அவர் இவ்விஷயங்களை, மொக்கை கிவிதை எழுதவும், நேர்காணல்களில் பேசவும், மேடைகளில் பிலாக்கணம் வைக்கவும் தான் உபயோகிப்பாரே தவிர… ச்சே! என்ன கிவிதாயினி இவர்.

லாலாபேட் காவிரி படுகையிலிருந்து அவசரம் அவசரமாக மணல் கொள்ளையிடப்படும் காட்சி - பழைய படம் - இப்போது கொள்ளை இதைவிட மிக மிக அதிகம். படம்: ரங்கநாதன் (Frontline)

ஆக சில ஆண்டுகளில் தமிழகம் என்பது வரலாறு ஆகிவிடும். மெய்யாலுமே.

மாண்பு மிகு கனிமொழியாருக்கு இதன்பேர் கவலை இல்லை என்றால் பரவாயில்லை, அவர் இளவரசி, என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால் நமக்கு?

ஆஹா, அதனால் என்ன? நமக்கா பிரச்சினையாகப் போகிறது? அல்லது,  நாம் ஒருவர் இம்மணல் உபயோகிப்பதால் என்ன பெரிய பிரச்சினை – என்கிற  மனப்பான்மை. அல்லது, நாம் ஒருவர் மற்றும் உபயோகிக்காமல் இருப்பதால் என்ன பயன் – மற்ற அனைவரும் உபயோகிக்கத்தானே  போகிறார்கள் என்கிற எண்ணம்.

ஆனால், உண்மையாகவே ஓரிருவர் இப்படிச் செய்தால் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் இப்படிச் செய்வதால் தான் பூதாகாரமான பிரச்சினைகள் எழும்புகின்றன. ‘Tragedy of the Commons‘ – ‘பொதுச் சொத்துக்களின் சோகக் கதை’ – எனப்படுவது இதுதான்.

(ஆகவே நண்பர்களே, இந்த கயமைநிதியின் மற்றும் இவர் வழித்தோன்றல்களையும் ஒழிக்க நாம் எல்லாரும் முனைய வேண்டும்.’பொதுச் சொத்துக்களின் சோகக் கதை’  கோட்பாட்டினால் /நடைமுறை  உண்மையினால் – இந்தப் பதர்கள் மறுபடியும் மேலே வரக் கூடாது;

ஒருவர் வாக்களிப்பதினால் என்ன லாபம், அல்லது அரசியலைப் பற்றி பேசி என்ன பயன் என்றெல்லாம் நினைத்து நாம் விட்டேற்றியாக இருந்தோமானால், நமக்கு சோகம் தான் மிஞ்சும்…
இம்மாதிரி அவ்வப்போது ‘அறிவுரைகள்’ கொடுப்பதற்கு மன்னிக்கவும்.)

அடுத்த பதிவில் — கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன  ‘மணல் கொள்ளை’ நடந்து கொண்டிருக்கிறது எனப் பார்க்கலாம். (ஏன் கனிமொழி அவர்களை ‘அம்மன்‘ ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டேன் என்பதையும்…)

2 Responses to “கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 1”


  1. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது

    ஒரு பதிவில் கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கும் போது அடுத்த பதிவுக்கு சென்று விடுகின்றது. அதற்கு பதிலாக அந்த பதிவு அப்படியே இருக்க வேண்டும். அடுத்த பதிவு திறக்க வேண்டும். உங்கள் செட்டிங்ஸ் கொஞ்சம் மாற்றி வைக்க வேண்டுகின்றேன்.

    ஜோதிஜி திருப்பூர்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s