ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1

05/04/2011

எனக்குத் 4 ஸ்டாலின்களைப் பற்றித் தெரியும்.

முதலாவது ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரிஜினல் அக்மார்க் ஸ்டாலின். (சொல்வதற்கு சிறிது வெட்கமாக இருக்கிறது. அரைகுறையாக இவர் பற்றிப் படித்துவிட்டு, நான் சிற்றிளம் வயதில் இவருக்காக வாதித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன் – ஒரு நீண்ட, மிக நீண்ட சுற்று சுற்றி அலெக்சாண்டர் சோல்ழெநிட்சின் மற்றும் ‘The God that Failed‘ வரும் வரை ஒரே ‘ஆகாசம் வரே ந்யங்கள செங்கொடி உயரட்டே’ தான்!)

இரண்டாவது – மதிப்புக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். என்ன உழைப்பு, என்ன திறமை!

மூன்றாவது ஸ்டாலின் அய்யங்கார் – இது ஒரு சோகக் கதை. பாவம், இவர் தந்தை இளைஞராக இருந்தபோது   பொதுவுடமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தன் மகனுக்கு இப்படியொரு பெயர் வைத்து, எங்கு சென்றாலும் பையனை மற்றவர்கள் கிண்டல் செய்யக் காரணமானார்; அவன் நிலைகுலைந்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தால், அவனுக்கு புரட்சிகர தியாகம் பண்ண வேண்டியது ஒரு கம்யூனிஸ்டின் கடமை என்று போதித்தார்.

அவர் சமூகத்தில் பையனுக்கு பூணூல் போடும் வயதில் கையில் தாஸ் கபிடல் கொடுத்தார், பையன் மிரண்டதைப் பொருட்படுத்தாமல்

பொருள் முதல்வாத சிந்தனையை ஊட்டினார், பையன் திமிறிக்கொண்டு போனாலும்

வீட்டில் ஏதாவது சிரிக்கவேண்டும் என்றாலும், அவன் தகப்பனார் இப்படி  ஒருமொக்கை நகைச்சுவையை உதிர்த்திருக்கலாம்: கம்யூனிசத்திற்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன தொடர்பு?  (கால் மார்க்ஸ், ஹ ஹா!).

ஸ்டாலின் பாவம், தகப்பனின் தொல்லை  தாங்காமல், அவரை எதிர்த்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் புத்தி பேதலித்து, குடுமி வைத்த, திருமண்ணிட்ட  வைதீக அய்யங்காராக மாறினார் (தன் தந்தை வழிப் பாட்டனார் உதவியுடன்). ஒருமுறை வெறி கொண்டு ஒரு சிபிஐ மாநாடு ஒன்றுக்குப் (ஐயோ, இது வேறு ஒன்றுக்கு!) போய் – உரக்க ‘ஸ்டாலின் ஒழிக’ என்று கத்தி, தோழர்களிடம் அன்பளிப்பு வாங்கினார்.   இவை நடந்தது 40 வருடங்களுக்கு முன்னர்.

ஆனால் இவ்விடுகையின் கதாநாயகர் நான்காம் ஸ்டாலின் – ‘தளபதி’ ஸ்டாலின். – ‘தள பதி’ = ‘படைத்  தலைவர்’ – மன்னிக்கவும் – ‘படைத்தலைவர்’ சுடாலின் அல்லது படையப்பா சுடாலின் – அல்லது பசு?

இது என்ன படைத்தலைவர் சொறித்தலைவர் சிரங்குத்தலைவர் என்று நீங்கள் குமுறாதீர்கள். இதுதான் தமிழர் பண்பாடு. அப்படித்தான் நாங்கள் சொல்லுவோம். இவையெல்லாம் – நகைப்புக்கிடமாக மிகைப்படுத்துதல், அடுக்காதமொழி நடை, புல்லரிப்பு, உளறல் போல உங்களுக்குத் தோன்றினால் எங்களுக்கு நட்டமில்லை!

எந்த நாட்டுடன் போர் புரிகிறார் இந்தத் தளபதி என்று வெள்ளந்தியாகக் கேட்காதீர்கள். அது ஒரு ரகசியம். கிட்டே வாருங்கள் சொல்கிறேன்… உம்ம்ம்ம் – அது, அது… நம் தமிழ்நாடுதான்! தமிழகம் படும் பாட்டைப் பார்த்தாலே இது உங்களுக்குத் தெரியவில்லையா?

பச்சைத் மஞ்சள் தமிழர் ஏன் ஸ்டாலின் அவர்களுக்கு சுடாலின் என்று பெயர் வைக்கவில்லை என்று தெரியவில்லை. பரவாயில்லை – அது அவர் உரிமை. மற்றவர்கள் இப்பச்சோந்தித் தலைவரின் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் கேட்டுக் கொள்வது, அவர்கள் கடமை!

ஸ்டாலின்! (!)

இவர் திமுகவிற்காக உழைத்திருப்பது உண்மையே. அதுபோலவே இவர் ஒரு மக்கள் தலைவர் என்பதும். (அந்த மக்களுக்கு மூளையையே காயடித்திருக்கிரார்கள் என்பது வேறு விஷயம்) ஆனால், மிக்க வருத்தத்துடன் சொல்கிறேன். தகப்பன் எட்டடி பாய்ந்தால்,பிள்ளையும் கூடவே பாய வேண்டும். ஏனெனில் இந்தப் பிள்ளை தகப்பன்மேல் தான் எப்போதும் சவாரி செய்துகொண்டிருக்கிறது. ஆகவே, தவிர்க்க இயலாமல் கருணாநிதியின் அரசியல் ஜீன்ஸ் (மன்னிக்கவும், திமுக கறை படிந்த வேட்டி) ஸ்டாலினையும் வந்தடைந்துவிட்டது.

இவர்,  தந்தையாரைப் போல தமிழ் கிமிழ் திரைச்சதை வசனம் என்று நேரத்தை விரயம் செய்யவில்லை. கருணாநிதி போல அடுக்காத மொழி பேச்சுக்களோ, சுத்தமாகத் தெரியாத விஷயங்களைப் பற்றி முற்றும் உணர்ந்த ஞானி போன்று முத்துக்களை உதிர்க்கும் காட்சிகளோ காண்பிப்பதில்லை. (மதிப்புக்குரிய கோவை ஞானியும், பரீக்க்ஷா ஞாநியும் என்னை மன்னிக்க வேண்டும்).

இவர், கருமமே கண்ணாயினார் – இது என்ன கருமமோ! சுருட்டுவது, திருட்டில் பங்கு கொடுத்து ஆதரவு வட்டங்களைப் பெருக்கிக் கொள்வது (அண்ணன் அஞ்சும்நெஞ்சன் போலவேதான்), அமைதியாகவும், கமுக்கமாகவும், கயமையுடனும் ‘காரியங்களை’ முடித்துக்  கொள்வது (இதில் அண்ணனைப் போலல்லாமல் – வெளிப்பார்வைக்கு அடாவடியே இல்லை). திமுகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு(!) மாறாக, ஒளிந்து ஒளிந்து  கோவில் குளம் செல்லவேண்டுமா, சாய்பாபா காலில் விழவேண்டுமா, ப்ரத்யங்கிரா அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டுமா – அனைத்தையும் செய்வார் அல்லது இவர் குடும்பத்துக்கு இதனை விட்டுவிடுவார். இவர் மெய்யாலுமே கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி – அடுத்த தளம் நோக்கி விரையும் வேகம்! ‘விஞ்ஞான பூர்வமாக’ ஊழல் செய்த தந்தைக்கு அப்பால் – ஊழலின் உன்னதத்தையே  நோக்கி வளர்ச்சி…

ஆகவே, கருணாநிதி குடும்பத்தில், அனைவரைக் காட்டிலும், தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் அவர்கள் தான்.

இவர் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்: பிறந்தது 1953-ல். பதினான்காம் வயதில் இருந்து திமுகவில் பணி செய்கிறார் என்று சொல்கிறார்கள். 1975-ல் MISA வின் கீழ் சிறையில் போடப்பட்டார். ஒரு வருடம் போல சிறையில் இருந்தார். இவர் அடிக்கப்பட்டார், சித்திரவதைபட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவருடன் அக்காலத்தில் சிறையில் இருந்து, இன்று வரை மனம் வெதும்பிய தொண்டனாக  இருக்கும் ஒரு நேர்மையான ‘தனித்தமிழ்’ திமுகக் காரர் (இப்படியும் சில சோப்ளாங்கிகள்  திமுகவில் இருக்கின்றனர், இன்னமும்! இப்படிக் கண்மூடித்தனமாக கருணாநிதியை பூஜிக்கும் ஆட்கள் இருக்கும்வரை, தமிழகத்தை அந்த பிலிம் ரஜினியே வந்தால் கூட காப்பாற்ற முடியாது)  சொன்னார்: இரண்டு மூன்று முறை அப்படியும் இப்படியும் தள்ளப் பட்டார் ஸ்டாலின், அவ்வளவுதான் – அதுவும் முரண்டு பிடித்ததால் என்று! அதற்கு, என்னமோ இவரை சித்திரவதை செய்ததாக கதை பரவியுள்ளது!

குடமுருட்டி குண்டரின் மகனார் அல்லவோ ஸ்டாலின்! ‘ஐயையோ அடிக்கறாங்க’ வின் அடுத்த தலைமுறை அல்லவா நம் தளபதி!

வை கோபால்சாமி  வசீகரம் கொண்ட வளர்ந்துவரும் நேர்மையான இளம் திமுக தலைவராக அடையாளம் காணப் பட்டபோது, சூழ்ச்சி செய்து தகப்பனார் மூலம் ஒரு பொய்யைக் கசிய விட்டு ஸ்டாலின், வைகோவை அவமானம் செய்து திமுகவை விட்டுத் துரத்தினார். (நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத், எம்ஜிஆர் போன்ற உண்மையான தலைவர்களை சதி செய்து  திமுகவை விட்டு விரட்டியவரின் மகனார் அல்லவா ஸ்டாலின்?)

ஸ்டாலின் மீது அரசால் புரசலாக – பெண்கள், வன்புணர்ச்சி போன்ற மிகப்பல குற்றச்சாட்டுகள் இருந்தன, இருக்கின்றன. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி நேரடியாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார், காவல் துறையிடமும் போனார் – ஆனால் விஷயம் அமுக்கப் பட்டது. (இதைப்பற்றி மேலும் எழுதினால் பெயர்களைக் குறிப்பிட வேண்டும், எனக்கு அது தேவையில்லை எனத் தோன்றுகிறது – மேலும், ஒருவர் கருணாநிதிக்கு அருகாமையில் உள்ளவர் என்றாலே, அவர் ஸ்திரீலோலராகத்தான் இருக்க வேண்டும்  என்பது வெள்ளிடை மலை; சோகமாக, இதற்கு ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.)

இந்தியன் வங்கியிலிருந்து தன் மனைவி துர்கா பெயரில் பெரிய அளவில்  ‘கடன்’ வாங்கி (திருப்பிக் கொடுக்கவே இல்லை, என்ன கேவலம்!) “ரெயின்போ ஒப்செட்’ (rainbow offset) என்ற பிரிண்டிங் தொழிலை ஆரம்பித்தார். இதற்கு முரசொலி, திமுக மற்றும் கழகக் கண்மணிகள் கொடுத்த வேலைகளே ஏராளம். இது திமுக கட்சியையே சுரண்டுவது போல் தானே? (இது எப்படி இருக்கு?)

பின்பு ஊழல், மேலும் ஊழல், தொட்டுக்கொள்வதற்கு உதிரிப் படங்கள், டிவி சீரியல்கள் என உலா வந்தார், வேலையற்று.

இவருக்கும் எம்ஜிஆர் போலவே நடிப்பு சுட்டுப் பொசுக்கிப் போட்டாலும் வராது. ஆனால் எம்ஜிஆர்-இடம் இருந்த மிக நல்ல பண்புகளும், ஏன், வசீகரமும் கூட ஸ்டாலினுக்கு இல்லவே இல்லை. (நிற்க, ஸ்டாலின், நா பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலின் டிவி நாடகமாக்கத்தில் அரவிந்தனாக ‘நடித்திருந்தார்’ – எனக்கு இந்த சீரியலின் ஒரு பகுதியை ஒரு நாள் பார்த்துவிட்டு வயிறு கலங்கி சிரித்ததில் ரத்த பேதியே வந்துவிட்டது, விலா எலும்புகள் நோக, ஸ்டாலின் அப்படியொரு காமெடி இதில்!)

இப்போது இவர் கதை திடுக்கிடும் செய்திகளை வெளியிடப்போகிறது:

1996-ல் திமுக (தமாகா வின் உதவியினால், ஜெயலலிதா எதிர்ப்பாளர்களினால்) திமுக பதவிக்கு வந்தது ஞாபகம் இருக்கலாம். அப்பொழுது ஸ்டாலின் செய்த ஊழல்களில் இருந்து, எப்படிப்பட்ட மாமேதை அவர் என்பது தெரியும். இச்சமயம் அறிவியல் பூர்வமான ஊழல் என்பதிலிருந்து அடுத்த கட்டமாக அதிதொழில்நுட்பம் சார்ந்த ஊழல்களுக்கு உயர்வு பெற்றார் என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் ஒரு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்பது திண்ணம்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் பதின்மூன்று கோடிக்கு மேல் ஊழலை எவ்வளவு தொழில்நுட்பத்துடன் செய்தார் என்று தெரியுமா? நினைத்தாலே என் மனம் உவகையால் நிரம்பி உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

மேலும் என்னதான் ஊழல் செய்தாலும், இவருடைய தேர்ந்த ‘மக்கள் தொடர்பு’ சாதுர்யங்களால், இவர் பெயர் எந்தப் பெரிய ஊழலுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்காது. ஆனால் இவர்தான் அவ்வூழல்களுக்குக் காரணகர்த்தாவாக இருப்பார். பெருமளவில் பணமும் பண்ணியிருப்பார்! ஸ்டாலினின் இந்தத் திறமையையும் மெச்ச வேண்டும்… (ஸ்டாலினிடம் உண்மையிலேயே மெச்ச வேண்டிய விஷயம் – அவர் தன் உடலை, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் விதம்…)

நான், நடந்த எவ்வளவோ இழிநிகழ்வுகளில்,  ஸ்டாலின் சூத்திரதாரியாக இருந்த ஊழல்களில், நல்ல வாசனை கொண்ட ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்… (அடுத்த பதிவு…)

மறக்காதீர்கள் நண்பர்களேஇத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை?

4 Responses to “ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1”

  1. Nitamil Says:

    //ஸ்டாலின் மீது அரசால் புரசலாக – பெண்கள், வன்புணர்ச்சி போன்ற மிகப்பல குற்றச்சாட்டுகள் இருந்தன, இருக்கின்றன. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி நேரடியாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார், காவல் துறையிடமும் போனார் – ஆனால் விஷயம் அமுக்கப் பட்டது//

    I know who is it, most of them in tamilnadu knows about it. No big secret…

    My father used to say “கருணாநிதி தொடப்பத்துக்கு சேலை கட்டியிருந்தாலும் அதை பார்ப்பார்….”


  2. […] ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1 (https://othisaivu.wordpress.com/2011/04/05/post-12/) […]


  3. […] ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1 (https://othisaivu.wordpress.com/2011/04/05/post-12/) […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s