சோழியன் கனிமொழி என்ன மீனவ நண்பரா? மீன் ஆட்சியா? மீன் சுருட்டியா?

10/04/2011

(மன்னிக்கவும், இது உதிரிகளும், தொண்டரடிப்பொடிகளும் பங்குபெறும் பட்டிமன்றம் அல்ல)

சும்மா ஆடாத  கனிமொழி அம்மையார் அவர்கள் குடுமி ஆடினால் என்ன அர்த்தம்? அவருக்கு என்னமோ ஆதாயம் இருக்கிறது என்று தான்! அதுவும் மிகப் பெரிய பண ஆதாயம் இருக்க வேண்டும்.

‘Moneyமொழி, நீ என்னை மறந்துவிடு’ என்று மீனவ நண்பன் கதறினாலும்,  கேட்பாரா அவர்? பெரிய தமிழ்வாணி அல்லவோ இவர்! மீனவர்களுக்காகக் குரல் கொடுக்கும் இவரை கயமையோடு சந்தேகிக்கலாமா? மணல்வாரி அம்மனை மீனம்மன் என்று கூறல் தகுமோ?

அச்சச்சோ! என்ன வெற்றிக் களிப்புப் பாருங்கள்! (அடுத்தக் கால்ஷீட் எங்கே?)

நம் ஊடகங்கள் கனிமொழியின் மீனவநண்பத்தனத்திற்கு, திடீர் போராட்டத்துக்கு, கைதுக்கு என்ன காரணம் என ஆய் ஆய் என்று ஆராய்ந்து கீழ்கண்டவற்றை பலமாதிரி எழுதின.

  1. அவருக்கு, மீனவர்கள், தமிழ்நாடு, தமிழம், நமது கலாச்சாரம் என்பதிலெல்லாம் ஆர்வம் உண்டு. அவர் தம்மை, தமிழுக்காக, தமிழர்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.
  2. ராசா கைய வெச்சு ராங்கா போன ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி கட்டிக்கொண்டிருக்கிறார். சிபிஐ – வலை நெருங்க நெருங்க அவர்களுக்கு மக்களை, மக்கள் கவனத்தை, அதிலிருந்து திருப்பி விட வேண்டியிருக்கிறது.
  3. தமிழ்நாட்டில் இது தேர்தல் காலம். ஆகவே இந்த ஒரு நாள் போராட்டம், இழவு எல்லாம்! அவர்களுக்கு உண்மையாகவே இப்பிரச்சினைகளிலேல்லாம் ஆர்வம் இல்லை.
  4. சில சமயம் முன்பு தமிழக மீனவர்கள் இருவரை சிறிலங்கா கடற்படையினர் கொன்ற பொது, திமுக ஒன்றும் சொல்லவில்லை. அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமாகத்தான் கனிமொழி இப்போது போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்.

இதில், இந்த புதிரான சூழலில், பிலிம் விஜய் (புலவர் உதிரிப்பெருமகனார் பாவி ஜய் அல்ல!) கூட உளறித் தள்ளி, ராஜபக்ஷவிடம் “டேய்! நான் அடிச்சா நீ தாங்கமாட்டே!!” – என்று தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தோள் புடைத்து, தினவு எடுத்து, மயிர்க்கூச்செரிக்கும் கீச்சுக் குரலில் படுபயங்கர வீர சவால் விட முடிகிறது. என்ன இழவெடுத்த உதிரிகள் இவர்கள்!  இட்லிவடை  வலைப்பூவில் ‘முழுமையான அரைகுறை’ என்ற தலைப்பில் இவர் பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது.

நான் மீனவசமுதாயத்தைச் சார்ந்தவன் அல்ல. சென்னையில் வசித்த காலத்தில், நொச்சிக்குப்பத்திலும், டொம்மிங்குப்பத்திலும் சில நண்பர்கள் இருந்தனர். அவர்களுடைய கட்டுமரங்களில் ‘நிலா அது வானத்து மேலே’ (ஆனால் ‘பலானது’ ஓடத்தில் இல்லாமல்) பயணங்கள் சென்றிருக்கிறேன். எனக்கு மீன் பிடி தொழில் ஓரளவுக்குத்தான் அறிமுகம்.

ஆனால், நான்  கடந்த சில மாதங்களில், தமிழகக் கடற்கரையோரம் பயணம் செய்து,  கரையோர மீனவர்களுடன் அளவளாவும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன – அருமையான தருணங்கள் அவை.. (உங்களில் எவ்வளவு பேர் வண்ணநிலவனின் ‘கடல் புரத்தில்  ….’ என்கிற அழகான நாவலைப் படித்திருப்பீர்களோ தெரியாது. இதுவரைப் படிக்காவிட்டால், அவசியம் படிக்க வேண்டும் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும்).

அவர்கள் ‘வெள்ளந்தி’ மனப்பான்மையும், படும் கஷ்டங்களும், திமுக ஆட்சியின் கயமையும், இலங்கைத் தமிழ்/சிங்கள மீனவர்களை (நம் தமிழகம்) ஏமாற்றுதல்களும், நம் தமிழகத்தைச் சார்ந்த சிறு மீனவர்களை ஒடுக்கல்களும், விஜய் போன்ற அறிவுத்திறன் குறைந்த அரைகுறைகளின் ஆரவாரங்களும், கனிமொழி, திருமாவளவன் போன்றோரின் சுயலாபம் கருதிய கயமை வேடங்களும்… இன்னபிற தொடரத் தொடர வேதனை மிகும் விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.

நிற்க , மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன் நான், அம்மையாரின் ஒரே கல்லில் மறையக் கூடிய மாபணப்பானை பற்றி…

நண்பர்களே – உங்களுக்குத் தெரியும் – கனிமொழிதான் கருணாநிதியின் நேரடியான உண்மை வாரிசு என்பது! ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கயமைத் தகப்பனார் அவர்களால், பாவம்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தான் அடிக்க முடியும். ஆனால், ஒரே கல்லில் ஒரு மா-மாமரத்தையே அடித்து வீழ்த்தும் தன்மையும், வன்மையும், கயமையும் படைத்தவர் கனிமொழி அவர்கள்.

கனிமொழி மீனவநண்பரான காரணம் தெரியவேண்டுமானால், நாம் சிறிது மீன், கடல், ரெட்டைமடி வலை (இன்னும் seine, purse seine, wade netting, trawler நெட் போன்ற பலவகையான, தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் பிடிமுறைகள்) , ட்ராவ்லர்  படகு, தமிழக மீனவர், ஈழ மீனவர்,  சிறிலங்கா கடற்படை, மனிதர், பேராசை, ஊழல் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகளாவிய உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகிவரும் இக்காலத்தில்,  மீன்கள் (கடலிலும், உள்நாட்டு நீர்நிலைகளிலும்) கிடைப்பது அரிதாகி வருவதும் அடங்கும். இதற்கான காரணங்களில் முதன்மையானது – வழக்கம் போல, மனிதனின் பேராசை தான்.

நிற்க, நான் கனிமொழி அவர்களின் (இன்னொரு) கபட வேடத்தைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து இந்த மீன் கொள்ளையைப் பற்றி ஆரம்பித்தேன்.  பின்பு, இதுபற்றி இணையத் தளங்களில் ஏதாவது தமிழில் எழுதப் பட்டிருக்கிறதா என்று பார்த்தால், ‘தேனீ’ என்கிற (ஜெர்மனியில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது என நினைக்கிறேன்)  பத்திரிக்கையில் மிகவும் விரிவாக இந்தப் பிரச்சினையைப் பற்றி அலசியிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. அதன் சுட்டி இதோ – நீங்கள் இதனை அவசியம் படிக்க வேண்டும்.

கனிமொழி கைதும், திமுக போராட்டமும் யாருக்காக..? – ஒருவிரிவான பார்வை
http://www.thenee.com/html/170211-2.html
(மிக்க நன்றி ‘தேனீ’ – உங்கள் பணி தொடரட்டும்.)

மேற்கண்ட சுட்டியைப் படித்துவிட்டீர்களா? படித்த பின் தான் கீழ்கண்ட விஷயங்கள் புரியும். ‘மணி’ என்கிற மீன்வளத்தொழிலில் ஈடுபட்டு, விஷயமும் தெரிந்துள்ள ஒருவர், அழகான தமிழில், இந்த விவகாரத்தைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்…

இப்போது, தேனீ ரீங்கரிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.

இந்த சென்னை திருவொற்றியூரைச்  சார்ந்த மேதகு KPP சாமி அவர்கள், நமது தமிழகத்தின் மீன் வளத்துறை அமைச்சர், இவர்  ‘மீன் ஆட்சியின்’ (மன்னிக்கவும், Moneyமொழியின் ) வளத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மீன்வளத்தைப் பற்றி ஒரு புண்ணாக்கும் அறியாத கோலம் வேறு. பதவிக் காலத்திற்குள் சுருட்ட வேண்டியதை சுருட்ட வேண்டும். மீன் சுருட்டிக்கும் மற்றவர்களுக்கும், அள்ளிக் கொடுக்க வேண்டும். (மாதம் 1 கோடி ரூபாய் என்கிறார்கள். சிலர் 75 லட்சம் ரூபாய் தான்(!) என்கிறார்கள்) – இதைத் தவிர அடிக்கட்டுமானப் பணிகளில், பணிகள் சரிவர அல்லது நடக்காமலேயே கையூட்டு வேறு… மேலும் கயமையுடன், கிறிஸ்தவ நிறுவனங்களையும் உபயோகித்துக் கொள்ள வேண்டும் பதிலுக்கு பதில் உதவியான கண்டுகொள்ளாமையையும் செய்ய வேண்டும். எவ்வளவு பணிகள் KPP சாமி அவர்களுக்கு…

எது எப்படியோ, கனிமொழிக்கு – கடலோ, மீன்களோ, அப்பாவி மீனவர்களோ (அவர்கள் தமிழ்த் தமிழர்களோ, ஈழத் தமிழர்களோ, சிங்களவர்களோ – யாராயிருந்தாலும் சரி) எக்கேடு கெட்டால் என்ன? தாம் ‘கவனிக்கப்பட்டால்’ சரி.

ஆகவே தான், மீனவர்களுக்கு ஆதராவாக ‘போராடி,’ கைது செய்யப்படவேண்டிய நாடகமெல்லாம்! என்ன, ஒரு கோடி ரூபாய் மாதாமாதம் வருகிறதென்றால், சில மணிநேரங்கள் (அதுவும் 5 வருடங்களுக்கு ஒரு முறை தான்!)  நடிக்க முடியாதா? இதில் கொசுறு அனுகூலம், கனிமொழி ‘போராடுகிறார்’ என்ற பிம்பம்! ஆனால் மக்களுக்குத் தெரியும், அவர் கயமை…

கனிமொழி பகர்ந்தது அங்கே:

“Poetry is a continuous dialogue with my own self. People find themselves in so many ways. It’s kind of discovering myself…a conversation with myself.”

கனிமொழி  கிவிதை இங்கே:

“அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்”

=-=-=-=-=

மீண்டும் உங்களைச் சிந்திக்க நான் வேண்டுவது என்னவென்றால்… இத்தேர்தலில் நாம் உதிர்க்கப்போவது எதனை?

One Response to “சோழியன் கனிமொழி என்ன மீனவ நண்பரா? மீன் ஆட்சியா? மீன் சுருட்டியா?”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s