தேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3

23/04/2011

தமிழகத் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள மல்லச்சந்தரம் சென்றிருந்தேன்,  பள்ளிச் சிறார்களை அழைத்துக் கொண்டு.

இங்கு சில குன்றுகளின் மீது அழகான, மனம் போதை கொள்ளச் செய்யும் பழைய கற்கால கல்கட்டுகளும் , சிதைவுகளும் உள்ளன. மிகவும் அற்புதமான இடம் இது. நான் பல இடங்களில் இம்மாதிரி கற்கட்டுகளைக் கண்டிருக்கிறேன் – ஆனால் ஒரு இடத்திலும், இந்த அளவுக்கு ஒருசேர, பெரும்பாலும் சிதைவடையாத கல்மேஜைகளையும் (dolmens), வட்டச் சிதைவுகளையும் (cairn circles) நான் இதுவரை கண்டதில்லை. (ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் எழுதிய ‘The Circular Ruins’ எனும் சிறுகதையினுடைய – தருமு ‘பிரமிள்’ சிவராமு அவர்களின் ‘வட்டச் சிதைவுகள்; எனும் மகத்தான மொழி பெயர்ப்பினைப் படித்ததுண்டா? ‘கசடதபற’ என்று 1970 களில் வந்த தமிழ் சிற்றிதழில் இது வெளிவந்ததாக ஒரு நினைவு – விமலாதித்த மாமல்லன் தளத்தில் தருமு சிவராமுவின் பல படைப்புகள் உள்ளன.)

எங்கேயோ போய்விட்டேன். மன்னிக்கவும்.

ஒரு இணைப்புச் சாலை வழியாக மல்லச்சந்திரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம் – ஹோசூர்-கிருஷ்ணகிரி சாலையை நோக்கி. காலை மணி 11. திடீரென்று அந்தச் சிறு சாலையில் விர் விர்ரென்று SUV வண்டிகள் (மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா சுமோ, டாடா சபாரி இன்னபிற மகாமகோ வாகனங்கள் – மொத்தம் 11 அல்லது 12 இருந்திருக்கலாம்) எங்கள் பள்ளிச் சிறார்கள் நிரம்பிய சிறு வாகனங்களை அபாயகரமாக இடமிருந்தும் வலமிருந்தும் முந்திச் சென்றன – ஒரே புழுதிப் படலம்.

இந்த பிணிவகுப்பில் முதல் வாகனங்கள் திமுகவினுடையவை. பின் காங்கிரஸ். பின் பாமக வண்டிகள். கடைசி இரு வண்டிகள் தொல்(லை) திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்.

இந்தப் படை ஒரு சாலையோர உடம்பொடுங்கின ஏழை தலித் கிராம மக்களின் கூட்டத்தருகில் நின்றது.

ஒரு சுமோவிலிருந்து இறங்கிய ‘ஊர் கவுடர்’ – “அல்லாம் எப்டி இருக்கீங்க? ‘வேணுங்றது’ கிடச்தா? ” என்றபடி இறங்கினார்.

ஒரு குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து வெளியே வராமல் அமைச்சர் முல்லை வேந்தன், இப்பாவப்பட்ட மக்களை நோக்கி கைஅசைத்து, அலுங்காமல், நலுங்காமல் கை விரித்து ‘உதய சூரியன்’ காட்டினார். திமுக வினரால் கூட்டி வரப்பட்ட உதிரிகள் விசிலடித்தனர்.

பின்பு இன்னொரு சுமோவிலிருந்து கட்டு கட்டாக திமுக நிறங்களுடைய மப்ளர்கள் (கருப்பு-சிவப்பு) கூட்டத்தை நோக்கி விட்டெறியப் பட்டன. அத்தலித் மக்கள் ஒருவருடன் ஒருவர் முண்டிக்கொண்டு, அவசரம் அவசரமாக தங்களுக்கு ஒரு துணியாவது கிடைக்குமா என்று அல்லாடினர். ஊர் கவுடர் அவர்களை வெறுப்புடன் பார்த்தார்…

நான் சிறிது தள்ளி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் ‘தொண்டர்களுடன்’ பேசினேன் – இதை, – மமதையுடன் நாய்களுக்கு விட்டெறியும் ரொட்டித் துண்டுகளைப் போல திமுகவினர் அம்மக்களை அசிங்கப் படுத்துவதை – சுட்டிக் காட்டி, இப்படி உங்கள் மக்களை பிச்சைக் காரர்கள் போல உதாசீனம் செய்கிறார்களே, ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “பெருசு, இந்த ஜனங்க இப்படித்தான், இவங்க தெளுங்கனுங்க, ஆடு ஒட்ரவனுங்க. தமிள் ஆதி திராவிடர் இல்லை – எங்க மக்களை இப்படி செஞ்சா பொறுத்துப்போமா என்ன ? “., என்று சொன்னார்கள். “இருக்கலாம், ஆனால் இவர்களும் தலித்துகள் தானே” என்றேன். அதற்கு அவர்களில் ஒருவர் வண்டி ஓட்டுனரிடம், “வண்டியை எட்றா!” என்றார்…

இச்சமயம் அந்த பாவப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒரு வேகமான இளைஞர், இவர்களிடம் கை குலுக்கிப் பரவசமாகி “திருமா வாழ்க” என்றார். நான் வி.சி. ‘தொண்டர்களைப்’ பார்த்தேன். அவர்கள் திரும்பி வேறு எங்கோ பார்த்தனர்…

இவர்களா தலித் இயக்கத்தவர்கள்? இவர்களா அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது? இவர்களா சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்கப் போகிறார்கள்? பதர்கள்.- அவர்களின் வாய்ப்பேச்சு வீரத் தலைவன் எவ்வழி, இத்தொண்டர்கள் அவ்வழி.

நான் ஏழெட்டு வண்டிகள் தாண்டி முல்லை வேந்தனிடம் போய் இதைக் கேட்பதற்குள், வண்டிகள் தூசி தட்டிக்கொண்டு பறந்து விட்டன…

கலவரத்தோடு என்னை தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி வாகன ஓட்டுனர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

* * * * * * * *

சென்னையில், தேர்தல் நாளுக்கு முந்தைய நாளில், அதிகாலையில், ‘குப்பை வண்டிகளில்’ வந்து பணம் கொடுத்திருக்கிறார்கள், திமுகவினர். – அடையாறு பகுதியில். கேழ்வரகு, கீரை விதைகளைத் தெளிப்பார்களே, வயல்களில் – அது போல நம் பணத்தை, நம்மிடமிருந்து திருடிய பணத்தைத் ‘தெளித்து’ இருக்கிறார்கள்.

* * * * * * * *

நான் அதிமுகவினர் பணம் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை, இவர்களும் 50 ரூபாய், 100 ரூபாய் என்று கொடுத்திருக்கிறார்கள்; பாமகவினரும், விடுதலைச் ‘சிறுத்தைகளும்’ கூட (எங்கிருந்து இவர்களுக்குப் இவ்வளவு பணம் இச்செலவுகளுக்கு என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம் – திமுகவினரிடம் பெற்ற பிச்சையோ அல்லது வேறு ஏதாவது சட்ட விரோத செயல்களிலிருந்தோ இப்பணம் வந்திருக்கக் கூடும்).

ஆனால் அதிமுகவினர் கொடுக்கும், கொடுத்திருக்கும் அளவை விட பல மடங்கு, பல விதங்களில் திமுகவினர் (+ காங்கிரஸ்) கொடுத்திருக்கிறார்கள். அதுவும் விட்டெறியக் கூடிய அளவிற்கு, தெளிக்கக்கூடிய அளவு இவர்களிடம் பணம் தலை விரித்தாடுகிறது…

மகிழ்ச்சிகரமான விஷயம்: CPI, CPM, BJP போன்ற கட்சிகள் தமிழக தேர்தலில் இப்படி மக்களுக்குப் பணம் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. வைகோவின் மதிமுக கூட இப்படிப்பட்ட கட்சி தான். தொண்டர்களின் பலத்தில், கொள்கைப் பிடிப்பில், ஈடுபாட்டில், கட்டுப்பாட்டில் எழுச்சி பெரும் கட்சிகள் இவை.

* * * * * * * *

மிகுந்த அனுபவமும், நேர்மையும் மிக்க ஒய்வு பெற்ற IAS அதிகாரி ஒருவருடன் அளவளாவியதில் தெரிந்தது – முன்னமே அனுமானித்ததுதான் – ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் இந்தத் தேர்தலில் பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது – ஆனால் நம் தமிழகத்தில் இருக்கும் ராட்சத அளவில் இவை இல்லை. கேரளா, குஜராத்,திரிபுரா, ஏன் பிஹார் போன்ற மாநிலங்களில் இது அறவே இல்லை.

நாம் எங்கே தவறு செய்தோம்?

**********

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகின்றனவோ தெரியவில்லை.

வரலாறு காணாத வாக்குப் பதிவு அளவுகள் என்னை யோசிக்க வைக்கின்றன. திமுக + காங்கிரஸ் உதிரிகள், தேர்தல் ஆணையத்தை மீறி மக்களுக்கு பண அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

நம் மக்களும் ‘வாக்குக் கொடுத்தால், கை நீட்டிப் பணம் வாங்கி விட்டதால், தங்கள் சத்தியத்துக்கும், தருமத்துக்கும் கட்டுப் பட்டு’ உதிரிகளுக்கே வாக்குப் போடுவார்களோ என்னமோ?

மக்களுக்குத் தெரியுமா – தங்கள் வரிப் பணம் – அவர்கள் ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும், அவர்கள் அரசுக்குக் கொடுக்கும் மறைமுக வரி தான் அவர்களுக்கு, மிகவும் நீர்த்துப் போய் வந்து சேர்கிறது என்று?

*******

எனக்கு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை தான்… பார்க்கலாம்…

One Response to “தேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3”

  1. M.S.Vasan Says:

    ‘ப‌ணமும்’ என்றிருந்த‌ தேர்த‌லில், “ப‌ணம்தான்” என ஆக்கிய‌து திரும‌ங்க‌ல புக‌ழ் அழ‌கிரியைத்தான் சேரும். தென் மாவ‌ட்ட‌ தேர்த‌ல்ல‌ளின் வெற்றிதான், அழ‌கிரியின் அள‌வை ஸ்டாலினுக்கு நிக‌ராய் காண்பிக்கும் எடைக‌ல்லாய் இருந்த‌து. அடித‌டி லுங்கிக‌ளில் இருந்து அர‌சிய‌ல் வெள்ளை வேஷ்டிக்கு, அழ‌கிரியின் இட‌த்தேர்த‌ல் வெற்றி தேவைப் ப‌ட்ட‌து. ப‌ணமும், ப‌ய‌முறுத்த‌லும் அதை எளிதாக்கிய‌து. இப்ப‌டி இப்போது ப‌ர‌விய‌து தான் இது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s