ஏன் எழுதுகிறேன்…

10/05/2011

இந்த இடுகையின் தலைப்பை ‘நான் ஏன் திமுக  ஊழல்களைப் பற்றி மட்டும் வளவளா என்று எழுதுகிறேன்…’ எனக் கூட படிக்கலாம்.

நான் இந்த ‘ஒத்திசைவு’ ஆரம்பித்தபோது முதலில், பொதுவாக ஊடகங்களில் வராத, பெரும்பாலும் மக்களால் மறக்கப் பட்ட, பரவலாக வெளியே தெரியவராத,  கருணாநிதி கும்பல் விஷயங்களைத் தான், தேர்தலுக்கு முன், முடிந்தவரை அவசரம் அவசரமாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் இவைகள் ஆவணப் படுத்தாவிட்டால், நம் மக்களுக்கு, எதிர்காலங்களில் நம் தமிழகத்தின், இந்தியாவின் விதியை நிர்ணயம் செய்யப் போகிறவர்களுக்கு, இவைகள் பற்றி ஒன்றுமே தெரிய வராது – எடுத்துக்காட்டாக, நான் சில இளைஞர்களிடம் அண்மையில் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியபோது அவர்கள் மிக ஆச்சரியம் அடைந்தனர் – நானும்தான் – அவர்கள் இவற்றைப் பற்றிக் கேள்வியே படவில்லை! இத்தனைக்கும் இவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இல்லை – சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள் தான்!

உபரிக் காரணங்கள்: இன்டர்நெட் என்கிற மகத்தான வலைப்பின்னலில் ஒருமுறை ஒரு விஷயம் பதிக்கப்பட்டால், அதற்கு பல பிறவிகள், பிரதிகள் உண்டு – ஆகவே அதனை முழுவதுமாக அழித்தொழிப்பது மிகவும் கடினம் என்பதாலும்… மேலும் என் அசிரத்தை, அசட்டை காரணமாக – செய்து முடித்துவிடக் கூடிய விஷயங்களையும், செய்யாமல்  இருந்துவிடக்  கூடாது என்கிற எண்ணத்தாலும்,

பின்பு, இந்த கும்பலைப் பற்றி எழுதி முடித்த பின்னர், எனக்குப் பிடித்த, கவர்ந்த – இலக்கியங்கள், திரைப்படங்கள், இசை, மனிதர்கள், வரலாறு, அறிவியல், கல்வி, கலவி இன்னபிற சார்ந்த விஷயங்களை எழுதலாம் என நினைத்தேன்… எவ்வளவோ அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன…

ஆனால் என்னிடம் இந்த கயமைநிதி மற்றும் பல உதிரிகளின் செயல்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மிக அதிகமாக உள்ளன. ஒரு பதினைந்து-இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் பணி செய்து கொண்டிருந்த அலுவலகங்களின் மூலமும், கட்சி சார்புடைய/சார்பற்ற நண்பர்கள் வாயிலாகவும், இயக்கத் தோழர்கள் (ஆர்.எஸ்.எஸ், மா-லேக்கள் உட்பட) வழியாகவும், நேரடியாக ஊழலை, அயோக்கியத்தனத்தை, துரோகத்தை எதிர்த்தால் என்ன ‘பலன்’ கிடைக்கும் என்கிற பல சொந்த ‘அனுபவங்கள்’ மூலமாகவும் – சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

எப்படியெல்லாம், ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவில் நூதனமாகக் கொள்ளையடிக்கும் கூட்டம், ஊடகங்களின் சக்தியைக் கொண்டு, பாதாளம் வரை பாயும் பணத்தின் திமிரை வைத்துக் கொண்டு, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நமது கலாச்சாரத்தையே காயடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்…

மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் தீராத ஊழல்களும், கயமைகளும் அவை. சில சமயம் இவற்றைப் பற்றிய என் குறிப்புகளைப் பார்க்கும்போதும், எழுதும்போதும் கூட நெஞ்சப் படபடப்பும், வெறுப்பும் மிகுந்தவனாகவும் ஆகிறேன்.  இம்மாதிரி அடிப்படையில் எதிர்மறையான விஷயங்களை எழுதுபவர்களுக்கும் (ஏன், படிப்பவர்களுக்கும் கூட) நிச்சயம் உடல்நலக் குறைவு ஏற்படும் என நினைக்கிறேன். நமது உடல்நலம் என்பது, நம் எண்ணங்களால், நினைவுப் பின்னல்களால், சிந்தனைகளால் மட்டுமே உருவாக்கப் படுகிறது என்பது உண்மையன்றோ?

ஆக, உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு  என்னை மன்னிக்கவும்.

‘Ignorance is Bliss’ என்று ஆங்கிலத்தில் கூறுவது போல் ‘அறியாமையின் பாற்பட்ட அமைதி’ கூட ‘ஜீவன் முக்தியாக’ ஒப்புக் கொள்ளப் படவேண்டியது தானோ?  ஆனால், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் – பின் ‘அறிந்ததினின்றும் விடுதலை’ பெற வேண்டுமோ என்னமோ.  எப்படியோ, இப்போதைக்கு ‘எதிர்மறை’ எண்ணப் பதிவுகளை, செயல்பாடுகளைத் தவிர வேறு வழியில்லை என்றும் தோன்றுகிறது.

… கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், கொஞ்சம் அலுப்பாகவே இருக்கிறது என்றாலும், நமக்குத் தெரியும் – அரசியல் சார்ந்த மற்றும் சாராத உதிரிகளின் எண்ணிக்கை, நம் தங்கத் தமிழ் நாட்டில் மிக அதிகம் என்கிற சோக உண்மை… ஏன் ஒரு கேரளத்திலோ, வங்காளத்திலோ, குஜராத்திலோ, ஏன் கர்நாடகத்திலோ அல்லது பீகாரிலோ கூட இந்த அளவு அயோக்கியர்களோ, ஊழல்வாதிகளோ இல்லை?

எனக்குக் கோபம் கோபமாக வருகிறது.

ஒரு சிறிய எடுத்துக்காட்டாக, நம் தமிழக மகாமகோ ஊழல்வாதிகளின் ஒரு அவசர ஜாபிதா போட்டோமானால், நாம் எங்கு தான் நிறுத்துவது என்று தெரியாமல் தான் இருக்கும்… அது இப்படிப் போகலாம்…

காவல் துறை பழைய IG ஸ்ரீபால் குடும்பத்தினர்களிடமிருந்து புதிய ஜாஃபர் சேட் போன்றவர்கள் வரை; இன்பசேகரன், அலாவுத்தின், மாலதி போன்ற IAS சதிகாரிகள்; துரைமுருகன்,  ஆற்காடு வீராச்சாமி, டி ஆர் பாலு, வீரபாண்டி ஆறுமுகம்,  ராசா, வீரமணி போன்ற கருணாநிதியின் தம்பிகள்; அடைக்கலராஜ், தங்கபாலு, ப சிதம்பரம் (இந்த வெள்ளை உடை ‘நேர்மையாளர்’ வசம் உள்ள மோசடிப் பங்குகளும் (shares), கொடகு மலைகளில் உள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் விஸ்தீரண பினாமி காபி தோட்டங்களும் பற்றி எழுத ஆரம்பித்தால் எங்கோ மணம் பறக்கும்!)  போன்ற கதர்ப்பதர்கள்; இந்தியா சிமென்ட் ஸ்ரீனிவாசன் போன்ற பினாமிகள்; பல தரப்பட்ட ஆன்மிகப்போலிகள்; பிலிம் வகையறாக்கள்; …  இன்னபிற உதிரிகள்!

கருணாநிதி மாஃபியா குடும்பம் இந்த மேற்கண்ட ஜாபிதாவில் இல்லை – ஏனெனில்:

 கொடிது கொடிது, கருணாநிதி  குடும்பம் கொடிது….

எங்கு, எவ்வளவு எழுத இவர்களைப் பற்றி – அவ்வளவு அயோக்கியர்கள் – நாம் இவர்கள் கோலோச்சும், திரைப்படம், டிவி, கட்டுமானப் பணிகள், இலவசங்கள், கட்டிடப் பணி, கட்சிப்பணி  போன்றவற்றில் உள்ள ஊழல்களைப் பற்றிக் கூடப் பேசவேண்டாம் – இவை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தவை…

ஆனால், இவர்கள் வசம் உள்ள  ஆப்பிரிக்க வைரச் சுரங்கங்கள் (ஆந்திரத்து ஜகன்மோகன் ரெட்டி கூட,  போட்ஸ்வனாவில் (Botswana) அண்மையில் ஒரு பெரிய வைரச் சுரங்கம் வாங்கியுள்ளார்! என்னதொரு  உழைப்பு, பாருங்கள்!!), ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அருகாமையில் உள்ள தீவுகள், கிழக்குச் சீமையில் உள்ள காடுகள், நிலக்கரிச் சுரங்கங்கள், குத்தகைகள், பினாமி நிறுவனங்கள், Tax Haven களில், ரகசிய வங்கிகளில் கணக்குகள், வெளிநாடுகளில் Villa வீடுகள் இன்னபிற பற்றி நம் ஊடகங்களில் எவரும் எழுதுவதில்லை. மக்களுக்கும், பெரும்பாலான பத்திரிக்கைகளுக்கும் இவை பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை!  CBI, Enforcement Directorate, Income Tax Dept போன்றவைகளுக்கு இவை தெரியாதவை அல்ல என நினைக்கிறேன்… இருப்பினும் இந்த கும்பல் ‘அறிவியல் பூர்வமாக‘ இந்த அயோக்கியத்தனங்களைச் செய்வதால், இவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை. சோனியா காந்திகளும், மன்மோகன் சிங் போன்ற நபும்சகர்களும் வேறு இந்த தப்பித்தல்களுக்கு உதவி புரிகின்றனர்…

பொதுவாக, இந்த அயோக்கியத்தனங்களைப் பற்றி அறியக்கூடிய ஒருவருக்கு தமிழகத்து அரசியல் வரலாறைப்(!) பற்றித் தெரிந்திருக்க வேண்டும், விரிந்த படிப்பு இருக்க வேண்டும், ஆய்ந்தறியும் தன்மை வேண்டும், நுண்மான் நுழைபுலம் அறிய வேண்டும், பல வட்டங்களில் அறிமுகங்கள் இருக்க வேண்டும், செய்திகளை அவைகளின் பின்புலங்களில் கோர்க்கத் தெரிய வேண்டும், அனைத்துக்கும் மேல் அவர் ஒரு பாதுகாப்பான (‘safe’) ஆளாக இருக்க வேண்டும் – இல்லையேல் அவரிடம், பாதிக்கப் பட்ட ஒருவர் கூட வாய் திறக்க மாட்டார்கள்! இந்தக் கல்யாண குணங்கள், நம்மில் பலருக்கு இருப்பதில்லை – எனக்கும் தான் சுத்தமாக இல்லை.

ஆனால் என்ன, நான் கொஞ்சம் ராசிக்காரன்! 8-)  என் நண்பர்களிடம், இக்குணங்கள் இருக்கின்றன…

நான் சிறிது ஊர்-உலகம் சுற்றியிருக்கிறேன்.  பல விதமான பணிகளிலும் தொழில் முனைவுகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். பல தரப்பட்ட நம்/வெளி  நாட்டு மக்களுடன் பேசிப்-பழகி இருக்கிறேன், சிறிது படித்துமிருக்கிறேன்… ஆகவே என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும், இந்தப் பூவுலகில், திமுக தலைவர்கள், குடும்பத்தினர் போன்ற கடைந்தெடுத்த அயோக்கியர்கள்  வேறெங்குமில்லை…

இவர்கள் முன்  ஷரத்  பாவர், ஜெயலலிதா, எம்ஜிஆர், GK மூப்பனார், எடியுரப்பா, ராஜீவ் காந்தி, அமர்சிங், சுரேஷ் கல்மாடி, கருணாகரன், ‘NTR’ ராமராவ், சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஊழல்கள், சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்…

தேவ கௌடா, ‘YSR’ ராஜசேகர் ரெட்டி, சோனியா  காந்தி போன்ற மகத்தான ஊழல் வாதிகள் கூட இந்த திமுக உதிரிகள் கிட்டே வர மிக மிக அதிக முயற்சி  செய்ய வேண்டியிருக்கும்…

உலகளாவிய ஊழல்களின்  சின்னங்களாகிய – எகிப்தின் ஹோஸ்னி முபாரக் (Hosni Mubarak), இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi), ரோமேனியாவின் நிகோலே ட்சொசெஸ்க்கு  (Nicolae Ceaușescu), பிலிப்பைன்சின் இமெல்டா மார்கோஸ் (Imelda Markos) –  போன்றவர்கள் கூட இவர்களுக்குக் கொஞ்சம் அருகில் இருக்கலாமே அல்லது இருந்திருக்கலாமே ஒழிய  – இவர்களை மிஞ்சவே முடியாது.

சொல்லப் போனால், இந்த திமுக, முக உதிரிகள் பண அளவில் ஊழல் செய்வதை விட –  அயோக்கியத்தனமான கலாச்சார, ஆன்மிக, வாழ்வாதாரச் சுரண்டல்கள் மிக மிக அதிகம்… இவர்கள் நம் சமுதாயத்தைக் காய அடிப்பதை, அதன் அடி நாளங்களை வெட்டி ஒடுக்குவதை, அதன் ஆணி வேர்களைக் கெல்லி எடுப்பதை எவ்வளவு நாள் நாம் பொறுக்க முடியும்…

=-=-=-=-=

இம்மாதிரி விஷயங்களை எழுதிக் கொண்டே போகலாம்.. ஆனால், நல்ல, நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைப் பற்றியும் எழுதவேண்டும். ஆகவே, இத்தளத்தில், இனிமேல் மற்ற விஷயங்களும் வரும். உதிரிகள், அவர்கள் அரசியல், ஊழல்கள் பற்றிய விஷயங்கள் குறைவாக வரும்…

நல்ல வேளை, தமிழகம் இன்னமும் பாலைவனமாக ஆகவில்லை. நல்ல மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள் – அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மிகவாதிகள் வரை… நல்ல விஷயங்கள், அற்புதமானவைகள் அங்கெங்கினாதபடி   இன்னமும் நம்மிடம் உள்ளன.  இவைகளைப்  பற்றியும் எழுதலாம் அல்லவா?

என்ன சொல்கிறீர்கள்?

ராமசாமி-யார் :-)

பின் குறிப்பு: எனது திமுகவினர் மீது எதிர்மறையான இடுகைகள் அனைத்தும் தலைகீழ்க் காலவரிசையில் கோர்க்கப்பட்டு இங்கு உள்ளன: திமுக பக்கங்கள்…  இதற்கான நிரந்தரச் சுட்டி, இத்தளத்தின் வலது பக்கப் பலகையில் ‘இன்னபிற…’ என்கிற தலைப்பின் கீழ் உள்ளது.

7 Responses to “ஏன் எழுதுகிறேன்…”

 1. thendral Says:

  நல்லது…அதற்காக இந்த கயவர்களின் கொள்ளையை பற்றி எழுதுவதை குறைத்து விடவேண்டாம். நீங்கள் குறைக்க நினைத்தாலும் அவர்களின் லஞ்சஊழல் பிரதாபங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து பின்னாளில் நாளுக்கு இருபத்திநாலு மணி நேரம் கூட பத்தாமல் போய்விடும் உங்களுக்கு…

 2. M.S.Vasan Says:

  ச‌ர‌த்ப‌வாரின் கய‌மையை குறைத்து ம‌திப்பிடாதீர்க‌ள்.
  அன்று முத‌ல் 1993 ப‌ம்பாய் ப‌ங்குச்ச‌ந்தை குண்டு வெடிப்பு, கிரிகெட் சூதாட்ட‌ம், எரிபொருள் க‌ல‌ப்ப‌ட‌ம், மும்பை நில‌விவ‌கார‌ம் (டிபி ரியாலிட்டி) என
  இன்று ல‌வாசா உல்லாச‌புரி வ‌ரை எல்லாவ‌ற்றிலும் இந்திய‌ # 1 எதிரி தாவூதுட‌ன் உல‌வும் தேச துரோகிக‌ள். இந்த‌ லிஸ்டில், சோனியா, ப‌சி, பிர‌புஃல் ப‌டேல், எனப் பெரிய‌ லிஸ்டே உண்டு.

  • ramasami Says:

   நண்பர் வாசன் அவர்களே,

   நீங்கள் சொல்வது சரிதான். சரத் பாவர் அவர்களும் ஒரு முன்னோடிக் கேடி தான், ஒப்புக் கொள்கிறேன். சர்க்கரைத் தொழிலை அவர் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே போதும் – அவர திறமைக்குச் சான்று.

   ஆனால் அவருக்கு, நம் தமிழர் தானைத் தலிவரைப் போல அவர் குடும்பத்திலேயே சுமார் 300 பேர் அவரை விட வேக வேகமாக கொள்ளை அடிப்பவர்கள் இல்லை – ஒரு பெண் தான் இருக்கிறார் என நினைக்கிறேன். அதனால் தான் மகாராஷ்டிரா கொஞ்சம் ஒழுங்காக இருக்கிறது.

   மேலும் சரத் பாவர் மராத்தியைக் கொலை செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளவில்லை.

   சோனியா, சிதம்பரம், பிரபுல் பற்றியெல்லாம் எழுத நேரமோ, சக்தியோ கிடையாது, நண்பரே…

   நம் தமிழக குண்டுச்சட்டியிலேயே குதிரை ரேசே ஓட்ட முடியும் நமக்கு, நம் தலீவரால் – அவர் தம் தனித்தன்மையால்… இதற்கே மூச்சு முட்டுகிறது, நமக்கு, அன்றோ??

 3. Sakthivelu K Says:

  எங்களூரில் காந்தியார் பேசிய இடத்தில் அவர் சிலை வைக்கப்பட்டு “ஓர் அணையா விளக்கு” எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்பு அந்த பெரிய மைதானத்தையே ஓட்டுக்காக கொடுத்துவிட்டார்கள் அடையாளத்தையே அழித்துவிட்டார்கள். உங்கள் நெஞ்சில் தமிழ்நாட்டு மக்கள் உய்ய வேண்டும் என்கிற தீபம் அணையாம்லிருக்கிறது. எப்படிப்பட்ட தலைவர் வரவேண்டும் என்கிற கருத்துப்பதிவு தங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

 4. Sugan Says:

  அய்யா வணக்கம், தாங்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா?

 5. Charulatha. Says:

  Sir, are you aware of the webminar to be hosted on mar30 by VA Shiva Ayyadurai in support of the student agitation? The google and wiki info abt him give a very disturbing picture of this man and his intentions. Just feeling helpless and wanted t share with you..
  regards,
  Charu.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s