ஈழத்தை முன்வைத்து நம்மைப் பற்றிய சில எண்ணங்கள்…

06/07/2011

பிரபாகரனும், கருணாநிதியும்…   படித்தீர்களா?

நீங்கள் ஒரு விடுதலைப் புலி உபாசகரா? அல்லது பிரபாகரனை ஒரு விடுதலை போராட்டத்தின் மகத்தான  வீரர் என்று கருதும் நபரா?  அப்படியானால், நீங்கள் இவ்விடுகைகளைப் படிக்காமல் இருப்பது உசிதம். உண்மைகள் உங்களை மனக்கிலேசம் கொள்ள வைத்து விடும்.

நீங்கள் பிரபாகரனை விமர்சனத்துக்குள்ளாக்கும், விடுதலைப்புலிகளைக் கேள்வி கேட்கும் போக்குகளில் இருந்து ஏதாவது தெரிந்து கொள்ள, உண்மைகளின் பல பரிமாணங்களை அறிந்துகொள்ள முயற்சிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இவ்விடுகைகள் ஒருவேளை  உபயோகமாக இருக்கலாம்.

ஏனெனில், நான் திடமாக, தர்க்க ரீதியாக புரிந்து கொண்டுள்ளது – உணர்ந்துள்ளது என்னவென்றால், வி.புலிகளும், பிரபாகரனும் தமிழர்களுக்கு (ஏன், உலகத்திற்கே கூட) ஏற்பட்ட அநியாயமான விபத்துகள் என்பது.

அதாவது, ஹிட்லர், ஸ்டாலின், கருணாநிதி, போல் பாட்,  போன்ற நபர்கள்  வரலாற்றில் நாம் மறக்க வேண்டிய, கற்று மறக்கவேண்டிய, வெறுத்து ஒதுக்க வேண்டிய அயோக்கிய எண்ணப் போக்குகளை / ஊழல்களை / பொறுக்கி சர்வாதிகாரத்தை / பதைக்கக்  கூடிய கொலைபாதகச் செயல்களைச்  சித்தரிக்கின்றார்கள் என்றால், என்னைப் பொறுத்தவரை, இவர்களுடைய வரிசையில், நாம் மறக்காமல் சேர்க்க வேண்டியது, பிரபாகரனும் தான்.

ஆனால், எனக்கு ஆச்சரியம் என்ன வென்றால், நான் ஒரு முந்தைய இடுகையில் எழுதியது போன்று –  ‘தலைவர்’ பிரபாகரனை  நம் மக்கள் கண்டது, காண்பது – உண்மைக்குப் புறம்பான பிம்பங்கள் மூலம் மட்டுமே… அவற்றில் சில – தமிழினத் தலைவர், தந்திரோபாயங்களில் வல்லவர்,  அவர் ஒருவர் தான் ஈழத்துக்காகப் பாடு பட்டவர், சமூகப் புரட்சியாளர்,  மதச் சார்பற்றவர், ஈழப் பெண்களுக்கு சம உரிமை தந்தவர், தியாகி, அஞ்சத் தக்கவர்,  நேர்மையாளர், தன்னலம் கருதாதவர், மாவீரர் – என்ற பல்வேறு எண்ணப் போக்குகள்.

ஆனால், நீங்கள் நம்முடைய, ஈழ வரலாற்றைப் பல கோணங்களிலிருந்தும் பார்க்க, அலச முடியுமானால், நீங்கள் உணர்வீர்கள் – மேற்கண்ட பிம்பங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை…

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், நம்பிக்கைத் துரோகத்தைத் தொழிலாகக் கொண்ட பிரபாகரன், அவர் இறக்கும்போது   கூட, எண்ணிறந்த அப்பாவி மனிதர்கள், குழந்தைகள் (தமிழர்களும் இதில் அடக்கம்) இறப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்…

ஈழத்திற்கு, அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்ட மகத்தான சோகம், இந்தப் பிரபாகரன்!

=-=-=-=-=

ஆனால், பிரபாகரன், தமிழ்நாட்டில் ஒரு ஹீரோ!

இதற்குக் காரணங்களாக நான்

 1. குப்பைத் திரைப்படங்களையே சார்ந்து காலம் காலமாகக் காயடிக்கப் பட்ட நம் தமிழர்களின் மூளை, மிகை உணர்ச்சிகள் / புல்லரிப்புகள் சார்ந்து மட்டும் இயங்குவதும்,
 2. மிகப்பல தமிழ் பத்திரிக்கைகள் துடை-தொப்புள்-முலை-கிசுகிசு வருடிகளாக இருப்பதும்,
 3. தமிழர்களுக்குப் பெரும்பாலும் வரலாற்றுப் பிரக்ஞை இல்லாமல் இருப்பதும் ஆகவே அவர்கள் ஆரிய, ஆறாத, திராவிட, நடிக மாயைப் புனைவுகளில்  உழன்று கொண்டிருப்பதும்,
 4. பொதுவாக ஆரோக்கியமான விவாதங்களிலும், அறிவு பூர்வமான களங்களிலும்  சிரத்தை  இன்மையும்
 5. அனைத்து  ஆன்மிக / பவுதீகத் தேடல்களுக்கும் பிலிம் பார்க்கப் பட்டால் (அல்லது)  டிவி நோக்கப் பட்டால் (அல்லது) இணையச்சுட்டிகள் சொடுக்கப் பட்டால்  பதில் கிடைக்கும் என்கிற ஆய்ந்து அறியாத சோம்பேறி மனப்பான்மையும்

… போன்றவற்றைச் சொல்ல முடியும்.

ஏகபோக, ஒருதன்மைக் கருத்துகளை உருவாக்குவதும், உருவாக்கிக் கொள்வதும்  – மர இழைப்பு வேலை போன்றது தான்; மரத்தை இழைக்கும் போது குறுக்கு இழைப்போ, அல்லது எதிர் இழைப்போ கூடாது – இப்படிச் செய்யாமல் இருந்து, ஒரே திசையிலேயே சீராக இழைத்தோமானால், பளபள என்று மரம் வழுவழுப்பாக பிசிறுகள் இல்லாமல் ஜொலிக்கும். பிரபாகரன் போன்ற வரலாற்று விபத்துகளை இப்படிப் பார்த்தால், அவர் ஒரு மாவீரராகத்தான், ஏன், மகாமகோமாவீரராகத்தான்  தெரிவார்!

ஆனால், வரலாற்று பூர்வமாக, முடிந்த வரை எல்லா பக்கங்களில் இருந்தும் நம்மால் ஒரு விஷயத்தை பார்த்து ஆய முடியுமானால், அவ்விஷயம் பளபளப்பு குறைந்து, ஒரே நிறம் மட்டுப் பட்டு, பல விதங்களில் தெளிவு படும். கருப்பு-வெளுப்பு என்கிற இருமைத் தனத்தின் சர்வாதிகாரத்திலிருந்து, தடுக்கி விழுதல்களில் இருந்து, தவறான  கற்பிதங்களில் இருந்து – நம்மை, இன்னோக்கே – பலவாறு விஷயங்களை இழைத்தாலே, உரிய கேள்விகள் கேட்கப்பட்டாலே  காப்பாற்ற முடியுமென நினைக்கிறேன்…

ஆகவே, நாம் பிரபாகரன் போன்ற பிம்பங்களை அவசியம் பரிசீலனையாவது  (மறுபரிசீலனையை விடுங்கள்!) செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

நிறைய உண்மைகள் வெளியே சொல்லப் படுவதில்லை. அவை வழக்கொழிந்து போனால் அறியப் படுவதில்லை. நேற்றைய ஊழல்கள் இன்று மறக்கப் படுகின்றன. ஏனெனில் இன்றைய ஊழல் நேற்றையதை விட அதி சுவாரஸ்யமானது.

நேற்றைய ஈவிரக்கம் அற்ற கொலைகாரர்கள் (உதாரணம்: பிரபாகரன்) இன்று மாவீரர்களாக மாலை போடப் படுகிறார்கள்.  இதற்கு இன்னொரு காரணம் –  நம் மக்களுக்கு, நினைவாற்றலும் மிகவும் குறைவு.

ஆக திமுக விஷயத்தில் நான் சில எனக்குத் தெரிந்த செய்திகளைத் தெரிவித்தது போல வி. புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சிறிது எழுதலாம் என நினைக்கிறேன்…

=-=-=-=

சென்ற வாரம் திருவண்ணாமலையில்  இருந்து நான் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த பொது, ஒரு சூடான, துடிப்பு மிக்க இளைஞரிடம் பேசிக் கொண்டிருந்தேன்,  நான் அப்போது ஒரு சிறிலங்கா தொடர்புடைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்ததாலோ என்னவோ, அவர் திடீரென்று சொன்னார், ராஜபக்ஷவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, உடனடியாகக் கைது பண்ண வேண்டும் என்று…

நான் கேட்டேன், யார் அப்படி அறிவிக்க வேண்டும் என்று. அவர் சொன்னார்  – ஏன், இந்தியா அப்படி அறிவிக்க முடியாதா? நான்  கேட்டேன் –  உம், நீங்கள் யார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அவர் சொன்னார், ஏன், இந்தியா நினைத்தால் அவரைக் கைது செய்ய முடியாதா? அப்படியா என்றேன். அவர் தொடர்ந்தார் – புலவர் பெருஞ்சித்திரனார் தான் அப்படிச் சொன்னார்!

நான் கொஞ்சம் மரியாதைக் குறைவாகச் சிரித்து விட்டேன்.

அவருக்குக்  கோபம் வந்து விட்டது – மேலும் கேட்டார் – திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் ‘ராஜபக்ஷவை கைது செய்‘ என்று கூட்டங்கள் நடத்துவது தெரியாதா? இந்த மாதிரி புத்தகம் படிக்கிறீர்களே? உங்களைப் போல் படித்தவர்களே போராட்டங்களை ஆதரிக்க வில்லை என்றால்? பிரபாகரன் உயிருடன் இருந்தால் தமிழர் நிலை இப்படி இருக்குமா?

நான் சொன்னேன் – தெரியும், ஆனால் என்னைப் பொறுத்தவரை இவர்கள் ஒன்று – கோமாளிகள், ஆக மன்னிக்கப் பட வேண்டியவர்கள். அல்லது – நயவஞ்சகர்கள், ஆக தண்டிக்கப் பட வேண்டியவர்கள். திராவிடர் கழகத்தில் நிறையவே  ‘புத்தகப் படிப்பாளிகள்’ இருக்கின்றனர் ஆனால் இவர்களில் பெரும்பாலோர் எதையும் ‘அறிந்தாரி’ல்லை – ஆனால் தர்க்கம் சாராத  உணர்ச்சிகளுக்கு அங்கே மரியாதை அதிகம்!

அவ்விளைஞருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. பின் என்னிடமிருந்து சிறிது நகர்ந்து உட்கார்ந்து கொண்டார். மிக்க நன்றி.

=-=-=-=

பொதுவாக, மிகப் பல இககால இளைஞர்களும் அடிப்படையில் ஈழம்  என்கிற குழப்பமடையச் செய்யும் கருத்து பற்றி, படித்து, ஆய்ந்து அறியாமல், அதன் வரலாறு, புவியியல் உள்ளிட்ட எதையும் தெரிந்து கொள்ளாமல் வெகு சீக்கிரமாக, திட்ட வட்டமான முடிவுகளுக்கும், திரிபுகளுக்கும் வந்து விடுகிறார்கள் என்று நான்  எண்ணுகிறேன்.

மேலும் சர்வதேச அரசியல், சட்டங்கள் பற்றிக் கூட வேண்டாம், நம் நாட்டுச் சட்டதிட்டங்களையே ஒழுங்காக அறிந்தாரில்லை; யாரோ எதையோ சொன்னதை காற்றுப்போக்கில் காதில் வாங்கிக் கொண்டு, அவைகளைத் தாம் கண்டறிந்த உண்மை என்று உலாவ விடுகின்றனர்.

ஆனால் என்னுடைய நண்பர்கள்  சொல்லுகிறார்கள்  – இளைஞர்கள்  மட்டுமல்ல, இப்படி பீடிக்கப் பட்டிருப்பது இளைஞரல்லாதவர்களும் தான் என்று.

இருக்கலாம்.

இணையமும் இம்மாதிரி ஆட்களுக்கு, நிலைப்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது. அரைகுறையாக பெட்டிச் செய்திகளையும், மின்னஞ்சலில் வந்தவைகளையும் மேலும் மேலும் பரப்பி அவை மூலமாக தங்கள் இருப்பை, வெறுப்பை பரவ விடுபவர்களுக்கு, வெட்டிப் பேச்சு குமாஸ்தாக்களுக்கு, சுவாரஸ்யமாக எழுதும் எழுத்தாளர்களுக்கு   இங்கு மரியாதை அதிகம்!

மேலும்….

2 Responses to “ஈழத்தை முன்வைத்து நம்மைப் பற்றிய சில எண்ணங்கள்…”

 1. யோகேஷ் Says:

  ராமசாமி அவர்களே…
  உங்கள் பதிவுகளை சில நாட்கள் முன்பு தான் கண்டறிந்தேன்.
  மேற்கூறிய பதிவில் ஈழமோ, பிரபாகரன் பற்றிய தகவல்களோ இல்லையே. மாறாக, நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பரிகாசம் செய்வதாக மட்டுமே எனக்குத் தோன்றியது.

  “மேற்கண்ட பிம்பங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை..”

  தங்களுக்கு தெரிந்த உண்மைகளை மூலத்தகவல் சுட்டியோ அல்லது தகவல் பெறப்பட்ட விபரத்தோடு பகிர்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

  தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

  யோகேஷ்

 2. ramasami Says:

  நீங்கள் தவறாக என்ன சொல்லிவிட்டீர்கள், யோகேஷ். :-)

  நான் எழுதியிருப்பது – ஈழத்தை முன்வைத்து, நம் தமிழர்களைப் பற்றித்தான்.

  ஒரு பதினைந்து புத்தகங்கள், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பதிவுகள், நேரடி அனுபவங்கள், ஈழம் பற்றி நன்கறிந்த நண்பர்களின் தகவல்கள் சேர்ந்து தான் என்னுடைய ஈழப் பிம்பங்களை உருவாக்கியிருக்கின்றன. தரவுகள் இல்லாமல் நான் எதையும் மேம்போக்காக எழுதவில்லை – நகைச்சுவைக்காக எழுதுபவை தவிர. மேலும் இது ஒரு மானுடவியல் ஆராய்ச்சிக் கட்டுரையல்ல. ஆனால், அப்படியும் எழுத முடியும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s