கல்வி, அபார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் – சில எண்ணங்கள்

14/07/2011

சவுக்கு’ தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட ஒரு இடுகையில், IIT பற்றிய ஒரு செய்தியும், அதன் மீதான ‘சவுக்கு’ அவர்களின் எதிர்வினையும் இடம் பெற்றன.  அதனை நீங்கள் படிக்கவேண்டும்: இருட்டறையில் உள்ளதடா உலகம்.

‘சவுக்கில்’ வழக்கமாக இருக்கும் ‘பிரச்சினைகளைத் தெளிவாக, ஒரு தலைப் பட்சமாக இல்லாமல்,  ஆய்ந்து அறிந்து பார்க்கும்’ தன்மை இந்த இடுகையில் பிரதிபலிக்கவில்லை என்பது என் எண்ணம்.   அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  அவை முக்கியமில்லை.

விடுதலை கூட இவ்விஷயத்தைப் பற்றி எழுதியது – சென்னை அய்.அய்.டி.யில் ஆனந்த் அய்யங்காரின் ஆரிய தர்பார்! – என்று.  நாம் இதனைப் புறக்கணிக்கலாம்.

ஏனெனில் படிப்பாளிகள் அதிகமிருந்தாலும், சிந்திக்கமாட்டோம் என்று வாயோர நுரைதள்ளப் பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்தின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது இந்த தி.க வலைத்தளம்.  அவர்கள் தலைவர்களின் வழிகாட்டுதல் அப்படி…

ஆனால், ‘சவுக்கு’ அவர்களின் பார்வை முக்கியமானது என்று எனதெண்ணம். அப்பார்வையைப் பொதுவாக, நாட்டு நடப்புகளைப் பற்றிச் ‘சிந்திக்கும்’ தமிழர்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். ஆகவே, நாம் இது பற்றி விவாதிக்க வேண்டும்.

ஆனால், காலம் காலமாக (அதாவது வெள்ளைக்காரர்கள் வெற்றிகரமாக நம்மிடம் பிரித்தாளும் சூழ்ச்சிகளை முன்வைத்து நம்மை ‘ஆள’ முடிந்ததில் இருந்து, பின்பு அவர்களின் வழிதோன்றிகள் ஈறாக) நம் தமிழகத்தில் பொதுவாக நாம் எல்லா பிரச்சினைகளையும், அவை எப்படிப்பட்டவையாக இருந்தாலும்,  ஜாதி பூர்வமாக மட்டுமே அணுக, புரிந்து கொள்ள முடிகிறது என்பது என்பது வெள்ளிடை மலை. இந்த ஒரு தலைப் பட்சமான அணுகுமுறையில் பிழைகள் இருக்கின்றன என்பது என் எண்ணம். நான் – சமூகப் பிரச்சினைகளுக்கு, மிகுந்த எளிமைப் படுத்தப் பட்ட, நீர்க்கடிக்கப் பட்ட ‘quick fix’ புரிதல்கள் நன்மை பயக்கா – என்பதைத் திடமாக நம்புபவன் கூட…

ஆக, சவுக்கு தளத்தில் நான் என்னுடைய எதிர்வினைகளைப் பதிவு செய்திருந்தேன். அதனை நான் கீழே கொடுத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது மேலும் இது பற்றி எழுதலாமென்று  எண்ணம்.

காயடிக்கப்பட்ட இருமைகளின், இருமுனைகளின் (சமூகவியலாளர்கள் சொல்வது போன்ற ‘ideal types’) சர்வாதிகாரத்திலிருந்து,  அறியாமைகளிளிருந்து, புரிதல்களிலிருந்து, கற்பிதங்களிலிருந்து,   உணர்ச்சிவசப்படுதல்களிளிருந்து, உணர்ச்சி வசை பாடுதல்களிளிருந்து   (கருப்பு-வெளுப்பு, நல்லவன்-தீயவன், கதாநாயகன்-வில்லன்,  ஆரியம்-திராவிடம் …)  நாம் விடுபடுவது எப்போது?

=-=-=-=-=

மதிப்புக்குரிய ‘சவுக்கு’ அவர்களே:

உங்கள் இடுகையை (இருட்டறையில் உள்ளதடா உலகம். ) சிலமுறை படித்துப் பார்த்தேன். நீங்கள் கல்வி முறைகள், இட ஒதுக்கீடு, ஜாதி த்வேஷம், தீண்டாமை ஆகியவை  சார்ந்த  விமர்சனங்கள் வைப்பது வரவேற்கத் தக்கதே.

இருப்பினும், நீங்கள் தொட்டிருக்கும் சில விஷயங்களைப் பற்றி, நான் விரித்துச் சொல்ல வேண்டுமென எண்ணுகிறேன்.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் பிரசுரிக்கவும்.

நான் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (IIT Madras) நான்கு ஆண்டுகள் படித்தவன் (= குப்பை கொட்டியவன்) – சுமார் 30 ஆண்டுகட்கு முன்பு. பின் அங்கு சுமார் இரண்டு வருடங்கள் பணி (= மேலும் குப்பை) புரிந்தவனும் கூட.  அப்போது எனக்கு அங்குள்ள பல விஷயங்கள் – நல்லவை, கெட்டவைகள் நேரடியாக ஓரளவுக்குத் தெரிந்திருந்தன  இப்போதும் சில நண்பர்கள் அங்கு பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் – இப்போதும் ஓரளவுக்கு என் காதுகளுக்கு விஷயங்கள் வந்து கொண்டுதானிருக்கிறன..  ஆகவே நான் சொல்ல வருவது எவற்றை என்றால்:

முனைவர்  MS அனந்த் அவர்களை எனக்கு நேரடியாகத் தெரியும் (அவர் கீழ் பணி புரிந்திருக்கிறேன், படித்திருக்கிறேன் – அதற்காகப் பெருமைப்படுகிறேன் கூட!). முக்கியமாக ஒரு விஷயம் – இவர் ஆனந்த் அல்ல.

அனந்த் அவர்கள் SC / ST சமுதாயத்தினரும்  ‘இந்தியத் தொழில் நுட்பக் கழகம்’    நுழைய வேண்டும் என்று எனக்குத் தெரிந்து 80-களின்  ஆரம்பத்திலிருந்து  பணி செய்து வருபவர். நேர்மையாளர். வேதியியல் தொழில்நுட்பத்தில் உச்சங்களை எட்டியவர். ஆர்ப்பாட்டமில்லாமல், மெலிதான குரலில் தன் வாதங்களை முன் வைத்து, மற்றவர் கருத்துக்கும் மதிப்புக் கொடுப்பவர். பண்பாளர். நேரடியாகவும், மறைமுகமாகவும்  கல்வித்  திறன்  மேன்மை  அடைவதற்கும், இந்திய அறிவுலக வளர்ச்சிக்கும், , SC/ST சமுதாயத்தினரின்  மேன்மைக்கும்  மிகவும்  சிந்திப்பவர்  – முக்கியமாக, செயல்  ஆற்றுபவர். (இவர் நேரடியாக சில அளப்பரிய உதவிகள் தலித்களுக்குச் செய்திருப்பதை நான் அறிவேன் – அவருக்கு ஆனால் அக்கப்போர்களிலும், சுயதம்பட்டங்களிலும் நம்பிக்கை இல்லை – கொஞ்சம் தமிழிலும் பேசுவார் – ‘நமக்கு முடிஞ்சவரை ‘சைலெண்டா’ தேவையானவனுக்கு உதவி செய்யணும்’ என்பார்)

முக்கியமாக இட ஒதுக்கீட்டை, SC/ST சமுதாயங்களில் ஏற்கெனெவே நல்ல நிலையில் உள்ளவர்களே மீண்டும் மீண்டும் பெற்றுக் கொள்வதை மாற்றி, ஒதுக்கீட்டை அச்சமுதாயத்தில் பரவலாக்கும் எண்ணம் உடையவர். இவர் போன்ற சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, யோசித்துத் தயாரித்த ஒரு திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தகவல் கொடுத்தவர் சரியாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்.  இதற்கான பின் புலம் என்று ஒன்று உண்டு – அதனை அவர் கொடுக்கவில்லை என நான் நினைக்கிறேன்.

ஏனெனில், JEE (IIT களுக்கான ‘இணைக்கப் பட்ட நுழைவுத் தேர்வு’) தேர்வினில் ஒரு மாணவர் தேர்வு பெற்றால், அவர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவர் மற்ற மாணவர்களைப் போலப் படிக்கலாம்; இதற்குள் மத்திய  அரசு  பரிந்துரைப்படி, முறைப்படி   இட ஒதுக்கீடு , அதற்குள்  தகுதி  வரிசை, என்று எல்லாமும்  உண்டு. மேலும் SC/ST சமுதாயத்தினருக்கான  JEE நுழைவுத் தேர்வு ‘cut-off’ மதிப்பெண்கள், மற்ற சமுதாயத்திரை விடக் குறைவு – இந்த பிந்தைய விஷயம் நிறையே பேர்களுக்கு வெளியில் தெரியாது கூட.

ஆனால், சில வருடங்கள் முன்பு வரை, ஒரு மாணவர் JEE-இல் தேர்வு பெறவில்லை என்றால், அவர் அவ்வளவு தான். மறுபடியும் அடுத்த வருடம்  JEE எழுத வேண்டும், – அதாவது,  அவருக்கு இன்னமும் தகுதியிருந்தால், ஊக்கமிருந்தால்!  (jEE ஒரு காலத்தில் எழுதிய எனக்கு, இதைப் பற்றி நினைத்தாலே ஒரேயடியாகக் களைப்பு வருகிறது!) ஆனால், அனந்த் போன்றவர்களின் இடைவிடாத முயற்சியினால், JEE-இல் தேர்வடையாத SC/ST மாணவர்களுக்கு மட்டும் IIT-க்குள் வர ஒரு மிகப்பெரிய, நம்பவே முடியாத  சலுகை  கிடைத்தது. இது என்னவென்றால், தேர்வடையாத  SC/ST மாணவர்களில், ஆனால் அவ்வரிசையில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் (சுமார் 40 மாணவர்கள்) IIT செலவில் ஒரு வருடம் தகுதிக்காக இரண்டு செமஸ்டர் பாடம் நடத்தி, இதில் தேர்வு பெற்றால், மறுபடியும் JEE எழுதாமல் அவர்கள் அடுத்த வருடம் IIT-க்குள் செல்ல முடியும். இதில் (‘தகுதி ஏற்படுத்தும் படிப்பு’ உதவியில்) ஒரு மாணவர் தேர்வடையவில்லை என்றால் அவர் மறுபடியும் JEE எழுதலாம், விருப்பமிருந்தால்.

இந்த  SC/ST சமுதாயத்திருக்கு உதவி  செய்யும்  திட்டத்தைத்தான் குறை  சொல்கிறார்கள், புரிந்து கொள்ளாமல். குறை சொல்பவர்களில் எத்தனை பேர்கள், பாவப்பட்ட SC/ST களையே விடுங்கள், குறைந்த பட்சம் பிறருக்கு (தம் சமுதாயத்திற்கே கூட) உதவி செய்திருக்கிறார்கள் எனப் பார்த்தால் வேதனையே மிஞ்சும்.

ஆனால், உங்கள் இடுகையின் படிச் சொல்வதானால், இவர் பார்ப்பனர் – இதுவே இவர் சிலுவையில் அறையப்படப் போதுமானது. மேலும், எனக்குத் நேரடியாகத் தெரியும் அவர் கன்னடம் பேசுபவரும் கூட! ஆகவே இவர் வெறுக்கப் பட வேண்டிய பார்ப்பனக்-கன்னட வெறியர், காவேரி நீர் கொடுக்காத அயோக்கியர் என்று கூடச் சொல்லலாம். ஏன், எனக்கு அருகிலுள்ள விழுப்புரத்தில் உடுப்பி உணவகத்தில் உணவு நன்றாக இல்லை, அதற்கும் இவரே காரணமோ என்ன இழவோ…  என் நமக்கு உரிமையில்லையா, வினவு வினவு என்று வினவுவதற்கு?

உணர்ச்சிக் கொந்தளிப்பில், தகுந்த விசாரணை இல்லாமல் முனைவர் அனந்த் அவர்களைக் கழுவிலேற்ற உடுப்பி இட்லிவடை காரணமா அல்லது அவர் வெள்ளை நிறம் காரணமா அல்லது அரைகுறை செய்திகள் காரணமா இல்லை ‘அவர் பார்ப்பனர் தான் ஆகவே அடிப்படையில் அயோக்கியர்’ என்ற எண்ணப் போக்கு காரணமா, என்று ஆய்ந்து பார்க்க, அய்யா, நமக்கெல்லோருக்கும் ஏது நேரம்!

(இன்னமும் சில விஷயங்கள், அதாவது: IIT களுக்கு எப்படி பணம் வருகிறது – அரசு கொடுக்கும் பணம், நம் வரிப்பணம் அவற்றின் தேவைகளில் குறைந்த விகிதம் தான் – ஆகவே எப்படியெல்லாம் அதன் தொழில்நுட்பாளர்கள் அலைந்து திரிந்து, ஆராய்ச்சி செய்து தேவையான பணத்தை, முதலீட்டைக் கூட்ட வேண்டியிருக்கிறது – எப்படி எல்லாவிதமான நிறுவனங்களிலும் இருக்கக் கூடிய சிடுக்கல்களால், IIT-களிலும் புல்லுருவிகள் இருக்கிறார்கள் –  எப்படி IIT-களில் பெரும்பாலான மாணவர்கள் பார்ப்பனர்கள் அல்ல –  எப்படி மக்கள் நினைக்கும், புகட்டப் படும் அளவுக்கு அயோக்கியத் தனங்கள், ஜாதித்வேஷங்கள் இங்கு இல்லை – எப்படி IIT-களில் ஆராய்ச்சிகளின் அளவும் தரமும் குறைந்து வருகின்றன – இளைஞர்களை எப்படி அடிப்படை ஆராய்ச்சிகள் பக்கம் இழுப்பது, அவர்களை குப்பைக்குதவாத கணினி வேலைகள் இழுத்துச் செல்லப் படாமல் – தகுதி, ஒதுக்கீடு, வாய்ப்புகள், அனைவருக்கும் அவர்கள் விரும்பும் கல்வி எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் – equality of status vs equality of opportunity – எப்படி நாம் அடிப்படைகளே இல்லாத பொய்மைகளை, வேதவாக்காக எடுத்துக் கொண்டு உணர்ச்சி வசப் படுகிறோம் – எப்படி தேவையற்ற வெறுப்புகளை வளர்த்துக் கொண்டு நம்மையும், பிறரையும் வாட்டுகிறோம் – எப்படி  நாம்  கருப்பு அல்லது வெள்ளையிலேயே, அந்த இருமைகளில் மட்டும் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கிறோம்…

…. போன்றவை  பற்றியும் எழுத வேண்டியிருக்கிறது – விரிக்க வேண்டியிருக்கிறது – சமயம் கிடைக்கும்போது மேலும் எழுதுகிறேன்…)

நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

ராமசாம

=-=-=-=

மறுபடியும்: காயடிக்கப்பட்ட இருமைகளின், இருமுனைகளின் (சமூகவியலாளர்கள் சொல்வது போன்ற ‘ideal types’) சர்வாதிகாரத்திலிருந்து,  அறியாமைகளிளிருந்து, புரிதல்களிலிருந்து, கற்பிதங்களிலிருந்து,   உணர்ச்சிவசப்படுதல்களிளிருந்து, உணர்ச்சி வசை பாடுதல்களிளிருந்து   (கருப்பு-வெளுப்பு, நல்லவன்-தீயவன், கதாநாயகன்-வில்லன்,  ஆரியம்-திராவிடம் …)  நாம் விடுபடுவது எப்போது?

=-=-=-=

நீங்கள் என்ன நினைககிறீர்கள்?

One Response to “கல்வி, அபார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் – சில எண்ணங்கள்”

  1. Anonymous Says:

    நம்மடிப்படை முன்னோர் முடிபு. ” சாதியிரண்டொழிய வேறில்லை”, நல்லோர்கள் எங்கும் பிறப்பார்கள்” தற்போதைய அரசியல் நிர்ணயச் சட்டப்படி அனைவரும் சமம். கல்வி பெற, மிகக் குறைந்த சத்வீதமுள்ள சிறுபான்மை மத்ததினர் நடத்தும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பான்மையோர் தரும் வரிப்பணத்தில் உயர்தரமுள்ள படிப்பை சிறுபான்மை மாணவர் முழுக்க படிக்க அனுமதிக்கின்றனர். பெரும்பான்மைமத்தினரென்கிற பொய்யை வைத்து கல்வி மறுக்கப்படுகிறது. சலுகை கால வர்ம்பு சட்டத்தை சகதியில் தள்ளிவிட்டனர்…….


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s