‘சமச்சீர்’ கல்வி, ஜாதி…

07/08/2011

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இன்னமும் மக்கள் குரலுக்கு மதிப்பிருக்கும் நாடு. முடிந்தவரையில் வன்முறையில் ஆழும் எண்ணப் போக்குகளின் வீச்சு குறைவு செய்யப் பட்டு, சமூக சமரசத்துக்கு இயல்பாகவே முயற்சி செய்யும் நாடு. உலகத்தின் எந்த நாட்டையும் விட சுதந்திரங்கள் மிக்க ஒரு நாடு – போராட்டக் காரர்கள், கோழைவாதிகள் (அதாவது ‘தீவிர’ வாதிகள் என்று தவறாக  அழைக்கப் படுபவர்கள்), வன்முறையாளர்கள் இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றாலும்…

ஆனால், இந்த சுதந்திரங்கள்  வெகு விமரிசையாக நம் அனைவராலும் வன்புணர்ச்சி செய்யப் படுகின்றன.

இங்கு யார் வேண்டுமானாலும் (நான் உட்பட) தங்கள் பேச்சினை உரக்கப் பேசலாம். தங்களுடைய பார்வையே சரி என்று வாதாடலாம். கணினி முன் அமர்ந்த வெட்டி அரட்டை குமாஸ்தாவானாலும், கிணற்றுத் தவளையானாலும், ஆழ்ந்த/விரிந்த படிப்பு இல்லாவிட்டாலும்,  எவ்விதமான அனுபவமோ, ஈடுபாடோ இல்லாவிட்டாலும், – – உலகத்தின் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் முடிவுகளை, ஐயம் திரிபு பற்றிய சுய சந்தேகங்கள் – போன்ற குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கும் எண்ணப் போக்குகளைத்  தவிர்த்து , ஆனந்தமாக வாய் வலிக்கும் வரை பேத்தலாம் – அல்லது கை விரல்கள் வலிக்கும் வரை எண்ணவயிற்றுப் போக்குகளைப் பதிவு செய்யலாம், இணையத் தளங்களில்.

நாம் பிடித்த முயலுக்கு நான்கே கால் என்று அடம் பிடிக்கலாம்! ஏனெனில் நம்மிடம் தான் ‘ஒருக்கால்’ அப்படி இருக்குமா அல்லது இப்படி இருக்குமோ என்கிற சந்தேகங்களே இருப்பதில்லையே, எதைப் பற்றியும்! வெகு விரைவில் உண்மை/இருண்மை போன்ற முடிவுகளுக்கு, ஒரு வித முகாந்திரமுமில்லாமல் வந்து விடுகிறோமே!

நிற்க, எப்படியோ… நாம் ‘சமச்சீர் கல்வி’ என்கிற விஷயத்தை இப்போது பார்க்கலாம்…இதனை நாம் நம் ‘சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சித்’ தலைவர், கருணாநிதி [கட்டாய ஒய்வு] அவர்கள் பாணி – நானே கேள்வி நானே பதில் (நானே படிப்பவனும் கூட!) என்கிற பாணியில் எழுதுகிறேன்…

=-=-=-=

கேள்வி: உங்களுக்கு என்ன தகுதி, ‘சமச்சீர் கல்வி’ பற்றி வள வளவென்று எழுதுவதற்கு?

பதில்: உம்ம்ம். நான் முன்னமே சொன்னது போல, என்னிடம் ஒரு கணிப்பொறி இருக்கிறது. இன்டர்நெட் தொடர்பும் உள்ளது. புரிந்ததோ புரியவில்லையோ, எதைப் பற்றியும் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. விரல் நுனிகளில் ஒரு அரிப்பு வேறு, ஒரே தொல்லை… ஆக, நான் எழுதுவதற்குக் கேட்பானேன்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை(!) எனக்கும் உள்ளது.

மேலும் குறிபிட்டுச் சொல்லவேண்டுமானால். கருணாநிதி அவர்கள் போன்ற பொறுக்கி அரசியல் வாதிகளைவிட,  எனக்கு மிக அதிக உரிமை உள்ளது.

கே: நீங்கள் ‘சமச்சீர் கல்வி’  பற்றி எழுதப் போவது கற்பனையான விஷயமா அல்லது உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களின் மீதான உங்கள் எதிர் வினைகளா?

ப: நான் தமிழகத்தில், ஒரு சிறு கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து  வருகிறேன். இது ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உண்மையாகவே சேவை மனப்பான்மையுடன் நடத்தும் கிராம மக்களுக்கான பள்ளி.  பணம் வசூலிப்பு மிக, மிகக் குறைவு. ஆசஈர்யர்களின் (=ஆசிரியர்கள்)  தரம் ஓரளவு நன்றாகவே உள்ளது. எங்கள் கிராமம் உள்ளடக்கிய பகுதியின் மக்கள் விகிதாசாரத்திற்கேற்ப – எங்கள் பள்ளிச் சிறார்களில் சுமார்  80 சதம் வன்னிய ஜாதியினர்; சுமார் 18 சதம்   ஹரிஜனங்கள். மற்ற ஜாதியினர் இரண்டு சதம்.  அனைத்துக் குழந்தைகளும் மணிகள். 200-க்கு மேல் உள்ள இப்பள்ளிக்  குழந்தைகளில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் என்னுடைய நேரடித் தொடர்பில் இருப்பது சுமார் 80 குழந்தைகள்.

எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு இந்த சமச்சீர் கல்வி தேவை இல்லை. ஏனெனில் இதில் சமம் இல்லை. சீர் இல்லை. ஏன், இதில் கல்வியே இல்லை.

எனக்கு மிகவும் நெருக்கமான நேர்மையான, அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கும் இதே எண்ணம் தான். அவர்களின் காரணங்கள் இன்னும் அதிகம்.

இது பற்றி, விரிவாக விவாதிக்கலாம், பின் வரும் பதிவுகளில்…

தேவையில்லாமல் ஏன் ஜாதிகளை இழுக்கிறீர்கள் இங்கு?

எனக்கு, ‘ஜாதி’ என்பது ஒரு கேவலமான, கேட்டவுடன் வெட்கித் தலை குனிய வேண்டிய சமூக அமைப்பு அல்ல.  எவ்வளவோ சமூகவியல் சார்ந்த பரிமாணங்கள் இருக்கின்றன இதற்கு. என்னைப் பொறுத்தவரை, அது ஒரு முறையான, ஒரு பயனுள்ள  சமூகக் கட்டமைப்பே.  உலகில் உள்ள அனைத்துச் சமூக வாழ்க்கைகளிலும் – எறும்புகளில் இருந்து, மனிதன் வரை, இம்மாதிரி கட்டமைப்புகள் உள்ளன.

என்னுடைய ஜாதியைப் பற்றி எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இல்லை. இவ்வளவு நாள் அடக்கி வைத்து விட்டார்களே எம் ஜாதியை, என்கிற வெறுப்பு இல்லை. கற்பிதம் செய்யப் பட்டு, காலம் காலமாகத் தாழ்த்தப் பட்டவன் நான், ஆகவே திருப்பித் தாக்க வேண்டும் என்பது  போன்ற அரிப்புகள் இல்லை.  கற்பிதம் செய்யப் பட்டுக் காலம் காலமாக நான் உயர்ந்த ஜாதி, ஆகவே மற்றவரை ஒதுக்கி வை – என்கிற எண்ணமும் இல்லை. நான் உயர்ந்தவன் மற்றவர் தாழ்ந்தவர் என்கிற அற்ப உணர்வும் இல்லை. என்னுடைய ஜாதியைப் பற்றி எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை.  நான் முழுவதும் நல்லவனும் இல்லை, கடைந்தெடுத்தக் கொடியவனும் இல்லை.  ஆகவே, மேலெழுந்தவாரியாக ஜாதி சார்ந்த பொதுமைப் படுத்துதல்கள், இருமைவாதங்கள் – போன்ற அடிப்படையில் நேர்மையில்லாத எண்ண/வாதப் போக்குகளை நான் வெறுக்கிறேன்.

பிற்காலத்தில், சமூகத் தேவைகளுக்கேற்ப, சுற்றுச் சூழல் மாறுதல்களுக்கேற்ப,  ஜாதி ரீதியான சமூகக் கட்டமைப்பு மாறி, இன்னொன்று வரலாம். ஆனால், அதிலும், சமூக வரிசைக் கிரமங்கள், அமைப்புகள் இருக்கத் தான் செய்யும். .

தீயது என்று நினைத்து, படிப்பிக்கப் பட்டு, இருக்கும் சமூகக் கட்டுமானத்தை உடைத்து, வன்முறைகளில் ஈடுபட்டு, கொலை பல செய்து, கொள்ளைகள் பல புரிந்து சமைக்கப் படும் அ-பரிணாமப் போராட்டங்கள் – நீண்ட கால வெற்றியை எப்போதும் பெற்றதில்லை,  நிலைத்ததும்  இல்லை.. இம்மாதிரிப் போராட்டங்களின் சமரசமில்லாத் தன்மை, பேரழிவுக்கே இட்டுச் சென்றிருக்கிறது, இட்டுச் செல்லும்…

இதற்கு, உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும்  விதி விலக்குகளே இல்லை.

அப்படியென்றால் ஜாதிகளினால் தீமைகள் ஒன்றும் ஏற்படவே இல்லை என்கிறீர்களா?

இல்லை. இதன் தீமைகளும் பல. இவை சரி செய்யப் பட வேண்டியவை தான்.

ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் அல்லது எதன பெயராலும், அநீதிகள் நடப்பது நிச்சயம் தவறு தான். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

ஜாதி என்பது வேறு. ஜாதிப் பற்று என்பது வேறு. ஜாதி  வெறி என்பது வேறு. ஜாதித் துவேஷம் என்பது வேறு. இதில் மூன்றாவது, நான்காவது மனப்பான்மைகள்  அயோக்கியத் தனமானவை என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

தமிழ் பற்றி ஞானக்கூத்தன் அவர்கள் பலகாலம் முன்பு எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது:

எனக்கும் தமிழ் தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதனை விட மாட்டேன்.

நீதி நெறியில் நின்று பிறர்க்குதவும், நேர்மையர் மேலவர் – கீழவர் மற்றோர். என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. ஆனால், ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்கிற வறட்டு வாதப் போக்கை நான் நிராகரிக்கிறேன்.

உதாரணமாக நம் பசிக்கு, பசிப்பிணிக்கு – காரணம் நம் வயிறு தான், அல்லது நம் எண் சாண் உடம்புதான் என்று தெரிய வருவதால், நாம் வயிற்றையோ அல்லது நம் உடலையோவா ஒழிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை நாம் சமுதாயத்தின், சமூகத்தின் ஊற்றுக் கண்களைப்  பற்றி சிந்திக்காமல், அவற்றினால்  ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி மட்டும் எண்ணினோமானால், அதன் பயன் ஏதும் இல்லை. அந்த விளைவுகளை வன்முறைப் போராட்டங்கள் மூலமோ, மேடைப் பேச்சுகள் மூலமோ அல்லது புல்லரிப்புகள் மூலமோ களைந்து விட முடியாது. அவை வாய்ப் பேச்சு வீரத்துக்கு மட்டுமே உதவும்.

ஆனால், ஜாதீய நோக்கு சரியா?

இந்தக் கேள்வி என்னைப் பொறுத்தவரை சரியில்லை.

நீங்கள் ‘ஜாதீய நோக்கு’ என்று ஒரு விதமான ஆயாசத்துடன்  சொல்லும் போதே – மெக்காலே (Thomas Babington Macaulay) எண்ணியது பலித்து விட்டது என்பது வெள்ளிடை மலை. இவர் போன்றவர்கள்  1700-1800-களில் எழுதிய, – அக்காலத்து எண்ணங்களை, திட்டங்களைப் பிரதிபலித்த, பிரித்தாளும் சூழ்ச்சியை உட்கொண்டிருந்த – ஆவணங்கள் (+ அவற்றின் அடிப்படையிலான  முயற்சிகள்)  இந்த மனப்பான்மையை உருவாக்குவதற்குத்தான்   முயன்றன. குறிப்பிடத்தக்க அளவு மாவெற்றியையும் பெற்றிருக்கின்றன. இவர்கள் அக்கால காலனி ஆதிக்கவாதிகளைப் போல – தாங்கள் ஆதிக்கம் செய்த இடங்களில் இருந்த அப்பிரதேச மனிதர்களை, சமூகங்களைச்  சிறுமைப் படுத்தினார்கள். மேலும் அவர்களின் கடந்த காலம் பற்றியும், தற்கால இருப்பைப் பற்றியும் மகத்தான  தாழ்மை உணர்ச்சி கொள்ள வைத்தார்கள்.

இப்படி நாம் காலம் காலமாகப்  ‘புகட்டப்’ பட்டு உள்ளதால், நாம் இந்திய ஜாதிகளைப் பற்றி கேவலமாகத்தான் எண்ணுகிறோம். அப்படி எண்ணாவிட்டாலும் கூட, வெளியே ஒரு “ஜாதி சமுதாயத்தை வெறுப்பவன்” என்று காட்டிக் கொள்ள படாத பாடு படுகிறோம்.

நாம் ‘சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரி’ என்று வெளியே காட்டிக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம்! ஆனால், நாம் தான் அறிவாளி, நாம் தான் புரட்சிக் காரர்கள் – மற்றவர் எல்லோரும் முட்டாள்கள், புரட்சிக்கு எதிரிகள் என்ற எண்ண/செயல் பூர்வமான ஏற்றத் தாழ்வு நமக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த காலங்களில், சமுதாயப் புரட்சி ரஷ்யாவில், சீனாவில்  இருந்து கப்பல் மூலம், ரேடியோ மூலம் அல்லது புத்தகங்கள்  வழியாகத்தான்  தான் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொது இணையம் இருக்கிறதே! புரட்சித் தீ, சமூக நீதி (கவனிக்கவும்: ‘சுமுக நீதி’ இல்லை!) பரவக் கேட்பானேன். .

இந்த வாயோர நுரை தள்ளல்களில் இருந்து விலகி, – நம் வரலாறுகளைப், பாரம்பரியங்களைப் பற்றிக் கொஞ்சம் படித்து, பல நோக்குகளையும் அறிந்து தெளிந்து, நிறைய சிந்தித்து , அதற்கேற்ப நவ நிர்மாணச் செயல்கள் புரிந்து வாழ்வது என்பது, மிகவும் கஷ்டமான விஷயம் தான். ஒப்புக் கொள்கிறேன்.

கடன் வாங்கிய அனுபவங்களும், வெட்டிப் பேச்சு வீரம் காட்டுதலும், இடியாப்பச் சிக்கல்களான சமூகப் பிரச்சனைகளுக்கு  துப்பாக்கிமுனை ‘அதிரடி’ விடைகளும் – ஏன் இவற்றுக்கெல்லாம் போவானேன் – ஆற அமரக் கணினி முன் அமர்ந்து, வினவு வினவு என்று வினவி உலகில் தாங்களில்லாத அனைத்தையும் ஒழிக்கப் பரணி பாடுதல், தாரை தப்பட்டைகளை ஒலித்தல், சங்க நாதம் செய்தல், வெற்றி வாகைசூடல் – இவை இன்னமும் சுலபமன்றோ??

நிற்க. ஜாதிக்கும் கூட தீதும் நன்றும் பிறர் தர வாரா – இதனைப் பற்றிய எண்ணப் போக்குகளுக்கும் கூட அவை நன்மை பயப்பவையோ அலது தீமை பயப்பவையோ – – நாம் அதனைப் பார்க்கும் பார்வைகளே காரணம். ஒரு சமூக மானுடவியலாலறாக இருந்தால் தான், நாம்  இதனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதில்லை – தர்க்க ரீதியாக நமக்கு யோசிக்க முடிந்தாலே அது போதுமானது. .

நீங்கள் கேட்கிறீர்கள் – ஜாதீய நோக்கு சரியா?

இதற்குப் பதில்: சில சமயங்களில் சரி. சில சமயங்களில் சரியில்லை. பல சமயங்களில் இரண்டுமில்லை.

சரி, சரி, ஏன் குழந்தைகள் பற்றிப் பேசும் போது, ஜாதிகள்?? அதற்குப் பதில் சொல்லும்!

ஜாதி என்பது ஒரு வாழ்வியல் முறையாக இருந்தது, மெதுவாக வழக்கொழிந்து போய், அது இப்போது, சில தலைவர்களால்  சலுகைகளுக்கான சமூக அமைப்பாகவும், பேரங்களுக்காகவும், புல்லரிப்பு உணர்ச்சி ஊட்டல்களுக்காகவும். மற்ற ஜாதியினரை நம்பிக்கையற்றுப் பார்த்தல் போன்ற சமூக சமரசத்திற்கு, இணக்கத்துக்கு  எதிரான போக்காகவும்   உபயோகப் படுத்தப் படுகிறது.

மேலும், ஜாதி-அரசியல் தலைவர்கள் – முக்கியமாக, ஒரு பரந்துபட்ட ஒரு சமூக அமைப்பை, அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் பயன் படுத்தும் அற்பர்கள், மக்கள் பகைவர்கள் – ஏன், அவர்கள் சார்ந்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜாதிக்குமே கூட, துரோகிகள், புல்லுருவிகள் இவர்கள் தாம். அனைத்து ஜாதிகளிலும் இந்த அயோக்கியத் தன்மை படைத்தவர்கள் இருக்கின்றனர். எங்கள் குழந்தைகளைப் பொறுத்தவரை, இவர்கள் மருத்துவர் ராமதாசாகவும் , தொல் திருமாவளவனாகவும் இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, இந்த எண்ணப் போக்குகளில் இருந்தும், தலைமைகளில் இருந்தும் நம் சிறார்களை மீட்டெடுக்க வேண்டுவது அவசியம்.

இதற்கு, நம் தமிழகக் கல்வி முறை ஒன்றும் செய்யப் போவதில்லை. ‘சமச்சீர் கல்வி’ என்று சொல்லப் படும் விசித்திர ஜந்துவும் அப்படியே.

இப்படிப் பட்ட சூழலில் நாம் என்ன செய்யலாம், எனன  செய்கிறோம் என்பதற்கு, அதனை விவரிப்பதற்கு இந்த செய்தி தேவைப் படுகிறது. ஆகவே தான் நான் இந்த ஜாதிவாரியான எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறேன். பின்வரும் பதிவுகளில் இவ்விவரம் உபயோகிக்கப் படும்.

நான் ஜாதி வெறியன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் – உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது – இதனை நான் சொல்லவும் வேண்டுமோ?

திருப்தியா?

நீங்கள் இடதுசாரிகள் மேல் காழ்ப்பு உணர்ச்சியும், வெறுப்பும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்களுக்கும் நீங்கள் மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டும் அல்லவா?

ஆம். ஆனால், நான் ஒன்றும் வலதுசாரி இடதுசாரி அல்லது ஏன், என்  துணைவியின் சாரி என்றெல்லாம் பார்க்கவில்லை.

பொதுவாக, இடதுசாரி மனப்பான்மை கொண்டவரகள் என்று நாம் அறிபவர்கள், அதிலும் வெகு தீவிரமாக தாம்  இயங்குவதாக நினைக்கும் பலருக்கு – அவ்விதப் பார்வை, மானுடத்தின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கூடுவதாகத் தோன்றுகிறது. இது எனக்கு அபத்தமாகப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை, மார்க்ஸ் எழுதிய EPM, Grundrisse படித்தவர்கள், மார்க்ஸ்-ஐ  ஒரு கடவுள் அளவுக்கு அல்லது ஒரு மதத் தலைவர் / ஸ்தாபகர் அளவுக்கு உயர்த்த மாட்டார்கள்.

மேலும் மார்க்ஸ் வகுத்த பாதை ஒரு போதும் சமூக சமரசத்துக்கு, அமைதிக்கு, அன்புக்கு இட்டுச்செல்லாது என்பது என் என் எண்ணம். (ஆனால் என் நேரடி அனுபவத்தில், மார்க்ஸ்வாதிகளில் , கம்யுனிஸ்ட்களில்  பல, மிக மதிக்கத் தக்க மனிதர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்; மேலும் RSS போன்ற இயக்கங்களிலும் இப்படியே என நேரடியாக அறிந்திருக்கிறேன்)

நான் வரலாறுகளை அவற்றின் முழுமையுடனும், வீச்சுடனும், அவற்றின் இடம் -தேச -கால- வர்த்தமானங்களுக்குள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். கடந்த காலங்களின் படிப்பினைகள் எனன, அவற்றை நாம் எப்படி தற்காலத்துடன் இணைத்துக் கொள்வது, எப்படி நாம், நம் மேல் சுய மரியாதையும், பிறர் மேல்  நட்பும், இணக்கமும் கொண்டு, பரந்துபட்ட பல்வேறுபட்ட எண்ணப் போக்குகளுக்கு உரிய மரியாதை கொடுத்து,  அனைத்துத் துறைகளிலும்  உன்னதங்களை நோக்கிய எதிர்காலத்தை அடைவது என்று உங்களில் பல பேர் போல சிந்திக்க முனைபவன்.

ஆனால், வருத்தத்துடன் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால்,  எப்போதும் இப்படிப்பட்ட உணர்வுடனும், உந்துதல்களுடனும் இருக்க என்னால் முடிவதில்லை. இருப்பினும் இம்முயற்சிகளைக் கை விடுவதாக இல்லை.

நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியரா?

இல்லை. ஆனால், அரசுப் பணியில், மனச் சாட்சியுடன் ஈடுபடும் சில ஆசிரியர்களைத் தெரியும். இவ்வாறு மேலும் பலர் இருக்கலாம். இவர்கள் மூலமும், என்  பள்ளி, பள்ளிக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மூலமும் – என்னுடைய முன்னனுபவங்கள் மூலமும், நான் அறிந்து கொண்ட விஷயங்களை எழுதுகிறேன்.

அவ்வளவு தானா? நீங்கள் ஆசிரியர் பணி புரிந்தால் உங்களுக்கு எல்லாம் தெரிந்து விடுமா?

உண்மைதான். எல்லாம் எனக்குத் தெரியா என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாம் தமிழ் வழிக் கல்வி பத்தாம் வகுப்பு வரை படித்தவன். அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும், கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய(!) பள்ளிகளிலும்  படித்தவன். கல்விக்கு, பண்பாட்டுக்கு, முக்கியமாகத் தமிழுக்கு எந்த அளவு மிஷனரிகள், தமிழக அரசுகள் (குறிப்பாக திமுக) மதிப்புக் கொடுக்கின்றன என்பதை அறிந்தவன். – நேரடியாக அனுபவித்தவன்.

அது சரி. நீங்கள் பள்ளிப் படிப்பு படித்து பல மாமாங்கங்கள் ஆகி இருக்குமே! இப்போதும் அப்பழைய நோக்குகள் சரியாக இருக்குமா?

உண்மை தான். நான் பள்ளியில் படித்தது 30 ஆண்டுகட்கு முன்பு. ஆனால் அவ்வப்போது பல விதங்களில் பள்ளிகளுடனும், சிறார்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறேன், இருக்கிறேன். பல வருடங்களாக  – பள்ளிகளில், குழந்தைகளுடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  ஆகையால் மிகுந்த ஆயாசத்துடனும், வருத்தத்துடனும் நான் சொல்வது என்னவென்றால் – தமிழகத்து கல்விச் சுற்றுச் சூழல் மாறவே இல்லை. ஏன், அது மிக மோசமாக ஆகிக் கொண்டிருக்கிறது – அவ்வப்போது யாராவது அதனை தூக்கி, இழுத்து நிறுத்த முயன்றாலும்…

சரி, அதனை விடுங்கள். ஒரு பேச்சுக்கு தமிழகக் கல்விச் சூழல் கவலை கிடமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். யார் காரணம் இதற்கு?

இதற்குக் காரணம் என்று நான் சொல்வது: திருடர் முன்னேற்றக் கழகத்தின்  பொறுக்கித் தலைவர்களைத் தான்.   இவர்கள் கேவலம் பணத் திருடர்களாக  (கர்நாடகத்தின் தெல்கி போல)  இருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் இவர்கள் திருடியது, திருடுவது, வன்புணர்ச்சி செய்வது  – தமிழகத்தில் ஆதாரசுருதிகளான –  நம் பண்பாட்டை, பாரம்பரியத்தை, நம் ஒப்பில்லா சொத்துக்களை, நம் சுயமரியாதையை, நம் அறவுணர்ச்சியை, நம் தர்மத்தை…

இன்னொரு வகையில், நாமும் காரணம்தான் – இவ்வகைப் பொறுக்கிகளையும் உதிரிகளையும் காலம் காலமாக தேர்ந்தெடுப்பவர்கள் நாம் தானே?

பொதுப் படையாகப் பேசாமல், இந்த திமுக வகையறா கும்பல் செய்யும், செய்த கலாச்சார வன்புணர்ச்சிகளுக்கு ஏதாவதொரு எடுத்துக்காட்டு கொடுக்க முடியுமா?

நல்ல வேளை – நீங்கள் ஒன்று என்று கேட்டீர்கள் – ஏனெனில் இந்த உதிரிகள் தங்கள் வாழ் நாளில் செய்தது,,செய்வது வன்புணர்ச்சிகள் மட்டும் தானே…

மேலும் படிக்க – வள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்…

->>>> ‘கல்வி’ பற்றி…

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s