பொறுக்கி நடைத் தமிழ்…

07/10/2011

… அல்லது, கருணாநிதி பிள்ளைத் தமிழ்… (மன்னிக்கவும்)

தமிழில், அதன் எழுத்தில், பேச்சில், பொறுக்கி நடை என்று ஒன்று உண்டு. அரசியல் தமிழ், முரசொலித் தமிழ், மேலும் தமிழகத்தினுடன் பரிச்சயம் உள்ளவர்  இதனை அறிவர்.

பொதுவாக, இதனைப் பலர் ‘அடுக்குமொழித்’ அல்லது ‘அடுக்குத் தொடர்’ தமிழ் நடை எனத் தவறுதலாக அழைப்பர். பாவம், ஆனால் அவர்களுக்குத் தெரியாது – இது நம்முடைய அழகான தமிழ் மொழிக்கு அடுக்காத நடைதான் என்பது…

இதனைத் தெரிந்தோ தெரியாமலோ பெரும் முனைப்போடு   ‘நடை’த்த ஆரம்பித்தவர் வைத்தவர், உபயோகித்தவர் – அண்ணாதுரை அவர்கள். ஆனால் அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை.

இந்த, கவைக்குதவாத பொறுக்கி நடையின் – எழுத்துக்கு அலங்காரம் மட்டுமே வேண்டும் – ‘விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம்’ போல;  ஆனால் எந்தவொரு பொருட்படுத்தத் தக்க உருவமோ அல்லது உள்ளடக்கமோ  தேவையே இல்லை – என்கிற இந்த உணர்ச்சிக் குவியல் நடையின் உச்சகட்டத்தை அடைந்தவர், நம் தானைத் தலைவர் கயமைநிதி அவர்கள்.

1952 – கருணாநிதி – சிறுவயது அடுக்குமொழி பொறுக்கி நடையார்…

வெற்றிடத்தை, குப்பை வார்த்தை ஜாலங்களாலும், உணர்ச்சிக் குவியல்களாலும், மயிர்க் கூச்செறிதல்களினாலும் நிரப்பி,  மக்களை முட்டாள்களாக்கும் வேலையில் கயமைநிதி மிக்க அனுபவமுள்ளவர்.

2011 – பொறுக்கிநடையாரின் பரிணாம வளர்ச்சி… (‘இளைஞன்’ போன்ற இக்காலக் குப்பைகள் ஈறாக!)

பொறுக்கி நடைத் தமிழ் என்பதின் பண்புகள் / கூறுகள் கீழ் வருமாறு:

 • எதுகை, மோனை மட்டும் தாம் முக்கியம். வேறெதுவும் அவசியமே கிடையாது.
 • இரண்டு வரிகளுக்கு ஒரு முறை ‘பார்த்திட்டாயா தம்பி’ அல்லது ‘கேட்டிட்டாயா தம்பி’  அல்லது ‘உணர்ந்திட்டாயா தம்பி’ என இருக்க வேண்டும்.
 • இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தை வன்புணர்ச்சிகளை, பேச்சில் / எழுத்தில் பக்கத்துக்கு ஒரு முறையாவது உபயோகிக்க வேண்டும்.
 • அர்த்தமற்ற அடலேறு, திராவிடச் சிங்கம், அரிமா, சிங்கக் குட்டிகள், காளைகள், கரும்புலிகள், சிறுத்தைகள், பாயும் புலிகள் என்ற வார்த்தைகளால் / சொற்றொடர்களால் தங்களைத் தாங்களாகவோ அல்லது ‘இயக்க’ இளைஞர்களையோ அழைக்க, அழைத்துக் கொள்ள வேண்டும்.
 • எதிரிகளை – குள்ள நரிகள், குல்லுக பட்டர்கள் , வீடணர்கள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள், வேலி மேலேறும் ஓணான்கள், கழுதைகள், வல்லூறுகள், ஓநாய்கள், அண்டங் காக்கைகள், வல்லூறுகள், கோட்டான்கள் என அழைக்கவேண்டும்.
 • தப்பும் தவறுமாக உலக வரலாற்றை அறிந்து(!) கொண்டு கோயப்பெல்ஸ் (பாவம் கீபெல்ஸ்!), ஹிட்லர், அலெக்சாண்டர், முஸ்ஸோலினி, சீசர், ஸ்டாலின், மார்க்ஸ்,   ரோம் (‘உரோமா புரி’) , உலகப்  போர்கள், சேரன், சோழன், பாண்டியன்  பற்றியெல்லாம் உளறிக் கொட்டவேண்டும்.
 • சங்க கால மேன்மை, லெமுரியா, பஃறுளியாறு, களிறு, ‘புலியை முறத்தால் விரட்டியது’ இன்னபிற பற்றி,  அவை உண்மையோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ, அள்ளமுடியாமல் உளறிக் கொட்ட வேண்டும்.
 • கண்ணகி-கோவலன்-மாதவி, ராமன்-சீதை. காந்தி-நேரு, அண்ணாதுரை-ஈவேரா  போன்றவர்களைப் பற்றிப் பேத்தத் தெரிந்திருக்க வேண்டும் – இதில் முக்கியமான விஷயம், அண்ணாதுரையும், ஈவேராவும், இவர்களின் பகுத்தறிவுக் கனவுகளில் வந்து, உருக்கமாகப் பேசவேண்டும்.. (ஆனால் இவர்களும் பாவம், இதே அடுக்கு மொழியில் தான் பேச வேண்டும்)
 • பெண்டிரை, நமது மகளிரை – போகப் பொருட்களாக, கவர்ச்சி ஜிகினாக்களாக, அல்லது கற்பிற் (!) சிறந்தவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். இரட்டை அர்த்தப்  பொறுக்கிச் சொல்லாடல்களால் அவர்களைக் கூனிக் குறுக வைக்க வேண்டும்.
 • ஒவ்வொரு வரியிலும். கீழ்க்கண்டவைகளில், குறைந்த பட்சம் ஒரு அர்த்தமற்ற வார்த்தையையாவது அல்லது அர்த்தமற்ற ஒரு சொற்றொடரையாவது,  உபயோகிக்க வேண்டும்:
 • போர் சார்ந்த மயிர்க் கூச்செரிதல்கள்:  வீர மறவர்கள், எரிதழல், விழுப்புண்,  திராவிட ரத்தம், போராட்டம், வெற்றிவாகை, செங்கோல், சோழன், போர்வாள், குத்தீட்டி, தீ, இரத்தஆறு, புரட்சி, வீரமரணம், போராளி, வெற்றி முரசு, புறமுதுகு, இரத்தக் களறி, ரத்தத் திலகம், பாசறை, கழகசெயல்வீரர்கள், , வியூகம், உங்களோடு இரண்டறக் கலந்து, உயிரைத் துச்சமாக மதித்து, களப் பணி, வேரோடு, உயிரைத் திரணமாக மதித்து, கோட்டையைப் பிடிப்போம்…
 • தாய், பேய், சேய் மற்றும் குடும்ப அன்பரிப்புகள், கொஞ்சல்-குலாவல்கள்: தமிழ்த் தாய், பெண்டிர், கற்பிற்சிறந்த கண்ணகிகள், மாதரசிகள், புள்ளிமான், அணங்கு, செந்தமிழ்த் தேன்மொழியாள், தாய், சேய்,  கற்பு, உடன் பிறப்பு, அண்ணன், அன்புத் தம்பி, தொண்டர்…
 • எழுச்சி பற்றிய புல்லரிப்புகள்: இனியும் பொறுப்போமா, சிறை வாசம், அடிமைகள், தடைக் கற்கள், சுக்கு நூறு, முழக்கம், திக்கெட்டும், போராட்டக் களம், பீடு நடை, ஒழிப்பு, திரண்டிருந்த பெருங்கூட்டம், கடும் கண்டனம்,  வெற்றிக்கனி, ஆர்பரித்து, திரண்டு வா, மாபெரும் கடலென, கரைபுரண்டு ஓட, புரட்சி சகாப்தம், தன்மானம் தழைத்தோங்கிடும், இலக்கு நோக்கிய ஏவுகணை, சூளுரை, சூறாவளி, புத்துணர்ச்சி, ஆர்ப்பாட்டம்,  எரிமலை, தீக்கதிர், முறியடிப்போம்,  மீட்டெடுப்போம், ஒழிப்பு, ஊர்வலம், வெற்றி,  போராட்டம் வெடிக்கும்…
 • வெட்டி உயர்வு நவிற்சிகளும் , இல்பொருள் உவமைகளும்: இனமானக் கேடயம், வீரவரலாறு, கழகக் குடும்பம், இனஉணர்வாளர்கள்,  வெற்றிக் கனி பறித்திட, பொங்கும்,  கொள்கைத் திருவிழா,  உண்ணாவிரதம், உயிரைப் பணயம், பொற்கிழி, பொற்சால்வை, மாபெரும், வரலாறு காணாத, கூட்டம் அலைமோதியது, முன்னேற்றம், முன்னோடி, இணையற்ற , பீடுநடை, நாடு தழுவிய,  சாதனை, மேம்பாடு,…
 • தமிழை ஒழிக்க உபயோகிக்கும் ‘தமிழின் மேன்மை’ குறித்த உச்சாடனங்கள்: ஆதி பகவன், வான் புகழ் கொண்ட தமிழ்நாடு, தமிழ் மொழி,  தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் எம் மூச்சு, தமிழ் எம் உயிர், தமிழ்ச்சாதி, கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே, தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ்நாடு அமைதிப் பூங்கா…
 • முழக்கமிடும் குறட்டைகள்: லட்சியம், அறைகூவல்,  திக்கெட்டும், கரவொலி, விண்ணை முட்டும், விண் அதிரும், நாக்கூசும்,  எழுச்சி, வழிகாட்டி, புரட்சிப் பூபாளம்…
 • அற்பத் தனமான ‘தமக்குத் தாமே’ பட்டங்கள்:  தானைத் தலைவர், தமிழர் தலைவர், சமூக விஞ்ஞானி, கொள்கைக் கோமான், பேராசான், பகலவன், செங்கதிரோன், நல்ல தம்பி, அன்புத் தம்பி, தளபதி, மண்டல நாயகர், கொள்கைத் தந்தை, அறிவுலக ஆசான்,  மாமேதை…
 • பரிதாபத்துக்குரிய புலம்பல்கள் : கண்ணீர்க் கவிதை, ஐயகோ, கண்டீரா, கேட்டீரா, நமது கையறு நிலைமை, நம்மால் என்ன தான் செய்ய முடியும், மவுன அழுகை, கண்ணீரும் கம்பலையும், கண்ணீர் பொங்க,  பார்த்தீரா, நம் ஜாதகம், நம் தலையெழுத்து, தண்டனை கொடுத்தது போதாதா,  சூத்திரன், பஞ்சமன், பூணூல் போடாதவன் என்பதாலேதானே, நான் பிறந்த நட்சத்திரம் அப்படி…
 • காலியிடங்களை நிரப்ப வெறுப்புமிழுதல்கள்:  பிற்போக்கு, கூத்தாடி, ஆரியக் கூத்தாடி, கோமாளி, தரகர், ஆரியம், அவாள், இவாள், சைவம், பரதேசி, பண்டாரம், பூணூல், நடிகர், நாட்டியக்காரி, பரத்தை,  விபச்சாரி, மாதவி , மலையாளி, தெலுங்கர், கன்னடியர், சிங்களவன், வடநாட்டான், ஆரிய சதி, கைபர்-போலன் வழி வந்தவர்கள், வந்தேறிகள், பெரு முதலாளிகள், பார்ப்பனர்கள், காவிக் கூட்டம், கொடுங்கோலன், மனுதர்மம், பார்ப்பான், ஆடுகள்-ஓநாய், புல்லுருவி,  அமளிக் காடு, காட்டுமிராண்டித் தனம், அக்ரகார ஆதிக்கம்,  அக்ரஹார சூழ்ச்சி, எட்டப்பர்கள்…
 • கவைக்குதவாத வெறும் சப்தங்கள்:   சகாப்தம், பகுத்தறிவு, முப்பெரும், ஐம்பெரும், கனிந்த கனி, மக்கள் நலம், பொது வாழ்க்கை, தூய்மை, அப்பழுக்கு இல்லாத, வலியுறுத்தல், அரசியல் பண்பு, அரசியல் நாகரீகம், மக்களுக்கான பணி, பொற்காலம், கொள்கை, கேவலம், பெருவிழா, இதயம்,  உவகை, குதூகலம், குவலயம்,    முற்போக்கு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தத்துவம், கொள்கைப் பற்று, தழைத்தோங்கி, கழகம்,   மூடநம்பிக்கை, உண்ணாவிரதம், சமத்துவம்,  திராவிடம், மாயை,  மன்றம், தலைமை, கட்டுப்பாடு,  போராட்டம்,  தொண்டு, உயிர் மூச்சு, இதயத் துடிப்பு, ஓங்கி வளர்ந்திருக்கிறது, அரசியல் காரணம், அரசியல் நோக்கம், பதிலுக்குப் பதில், லாவணி, முகாரி,  கல்வெட்டு, புனிதம், இதயம், ஆல் போல் தழைத்தோங்கி,  கவன ஈர்ப்பு, , இனஉணர்வு, தத்துவார்த்தம், தன்மானம், சுயமரியாதை, தர்மம், கூட்டணி, நல்லிணக்கம், மதச் சார்பின்மை, சான்றோர்,  உரிமை, படுகொலை, விஞ்ஞான ரீதி,  கண்டிடவில்லை …

இன்னமும் எழுதலாம், ஆனால் கொஞ்சம் அலுப்பாக  இருக்கிறது…

சில சமயம் தோன்றுகிறது – ஒரு பேர்ல் (perl) அல்லது பைதன் (python) மொழியில் கணினிக் கட்டளைகள் இட்டு, ஒரு தானியங்கி அடுக்குமொழிப் பொறுக்கிநடை பேச்சு/எழுத்து தயாரிப்பானை உருவாக்கலாமா என்று!

ச்சீ…

தற்பின்குறிப்பு:

நல்லவேளை, சமச்சீரழிவுக் கல்விப் புத்தகத்தில் (பத்தாம் வகுப்புக்கானது) கயமைநிதி-கருணாநிதி அவர்கள் வீறு கொண்டெழுதிய அடுக்கு மொழி, அடக்காத மொழி வகையறா குப்பைகள் கிழித்தெறியப் பட்டு விட்டன.

என் கையால் நான் இப்பக்கங்களைக் கிழிக்க அனுமதி கொடுத்த என் பள்ளி நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கும், என் மனமார்ந்த நன்றி, மெய்யாலுமே!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

38 Responses to “பொறுக்கி நடைத் தமிழ்…”

 1. வடக்குபட்டி Says:

  தம்பி வா தாகம் தணிக்க வா நாம் மகாபலிபுரம் செல்வோம் வா!திராவிட நாடு பெறுவோம் வா!

  அண்ணா செய்த காமெடி இது: -வடக்கே பகரா நங்கள் தெற்கே சக்கரை பொங்கல்!

 2. Rajasekar Says:

  one who give important to sanscrit, he may post this. this effect is in this

 3. ramasami Says:

  அன்புள்ள ராஜசேகர்,

  தமிழ் மொழி vs சம்ஸ்க்ரித மொழி என்று முட்டாள்தனமாக எழுதப் பட்டதல்ல இவ்விடுகை. தமிழ், சம்ஸ்க்ரிதம் நன்கு அறிந்த எவரும் மொழிகளின் பின் அமர்ந்து வெட்டிச் சிலம்பாட்டம் ஆடமாட்டார்கள் என்பது என் எண்ணம். இரண்டு மொழிகளும் வளர்ந்ததற்கு, தழைத்தற்குக் காரணங்கள் – நடந்துள்ள போக்குவரத்துகள், ஒன்றிலிருந்து மற்றொன்று கடன் வாங்கல்கள், கலாச்சாரப் பின்னல்கள், சமரசங்கள் இன்னபிற.

  இப்போது பாருங்கள், நீங்களே ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். ஆனால், ஒத்திசைவு பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களுக்காக, தமிழில் எழுதப் படும் இணைய தளம்.

  இதனை, நான் உங்களுடைய தமிழ் எதிர்ப்பாகவா எடுத்துக் கொள்ள முடியும்? ஆக, தேவையில்லாத தீவிரம் அல்லது முத்திரைக் குத்தல் வேண்டாம் என்பது என் எண்ணம்.

 4. ponventhan Says:

  கலைஞர் மீதும்.திராவிட இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சி பிடித்த

  பொறுக்கி

 5. jeyakumar72 Says:

  வணக்கம் நண்பரே.. உங்களின் ஊட்டி முகாம் பதிவு மூலம் இந்த வலைத்தளத்திற்கு வந்தவன். அருமையான பதிவு. எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது. முழுதும் படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

 6. Suma Says:

  “தொங்கு தசை” என்பதுபோன்ற நரகல் வார்த்தைகளுக்கு நற்பீதாம்பரம் சூட்டும் கண்ணியத்தை விட்டுவிட்டீர்களே.

 7. velumani Says:

  லூசுகளும் எழுதலாம் என்பது இப்போதுதான் தெரிகிறது. கண்ணியம் என்பது எழுத்துலகில் குறைந்து வருகிறது உங்களைப்போன்ற சிலர் எழுதும்போது கண்டு கொள்ள முடிகிறது. எழுத வக்கில்லை என்றால் பேனாவை மூடி வையுங்கள். அல்லது……..மூடி வையுங்கள், இப்படி நான் எழுதினால் கொபம் வருதில்லை. எழுத்தினாலும், பேச்சினாலும் 50 வருடம் தமிழௌகை ஆண்ட ஒருவரை இப்படி எழுதுதல் மிகத்தவறு. மன்னிப்பை எந்த ஆண்டவனும் தர மாட்டான்.

 8. ramasami Says:

  திரு வேலுமணி,

  1, நான் பேனாவால் எழுதுவதில்லை, என் பதிவுகளை.
  2. எனக்குக் கோபம் வரவில்லை. ஆனால், ஒரு எடுத்துக்காட்டாக கருணாநிதி – காமராஜரைப் பற்றிச் சொன்னதையெல்லாம் எழுதினால், உங்களுக்குக் கோபம் வரும்.கருணாநிதி அவர்களை விடக் கண்ணியமாகத்தான் நான் எழுதுகிறேன்.
  3. அப்படியெல்லாம் அபாண்டமாக, ஆண்டார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். அவரே வருத்தப் படுவார்,

  B–)

 9. Chandrasekarenthiran Says:

  திராவிட இயக்கத்தை வெறுக்கும் ஒரு திருடன், சூத்திரர்களை அடிமைகளாக வைத்திருக்க முடியாமல் போனதே என வருத்தப்படும் ஒரு சூதுமதியாளன், தன்னுடைய இனம் மட்டுமே அதிகாரத்தில் இருக்கவேண்டுமென தலையால் தண்ணீர் குடிக்கும் ஒரு இனவெறியன், உரைநடைத்தமிழை (இயற்றமிழை) அதன் அழகியலின் உச்சத்தில் வைத்த அண்ணாவின் பெருமை அறியாத ஒரு உலுத்தன், பொன்னை நிகர்த்த மொழிநடையை உணரத்தெரியாத ஒரு பொறுக்கி, வயிற்றெரிச்சல் வக்கணையாளனுடைய கட்டுரை இது.

  • பொன்.முத்துக்குமார் Says:

   அன்புள்ள சந்திரசேகரேந்திரன்,

   உங்களை நினைத்து மிக மிக பரிதாபம்தான் ஏற்படுகிறது.

   உங்களைப்போன்ற பெரும் இளைஞர் கூட்டத்தை தலைமுறைகளாக சாக்கடையிலேயே அமிழ்த்தி தமிழகத்தை சீரழித்த திருட்டு, சூதுமதியாள, பணவெறி பிடித்த, இலக்கிய / கலாசார / பண்பாட்டு ரீதியாக மூளை சூம்பிப்போன (மற்ற ரீதியில் மட்டும் என்ன வாழுதாம் ?) பொன்னை நிகர்த்த மொழிநடையை, இலக்கியத்தை கொடுத்த உண்மையான இலக்கியவாதிகள் யாரென்று கண்டுகொள்ளவே இயலாத, அவர்களை பெருமைப்படுத்தாத, கலாசார / இலக்கிய / பண்பாட்டு தளத்தில் அவர்களது அர்ப்பணிப்பும் தீவிர பங்களிப்பும் உணரத்தெரியாத உலுத்த, பொறுக்கி மாஃபியா கும்பலால் நீங்கள் எந்த அளவுக்கு மூளை கற்பழிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று பார்க்கும்போது …

   மெய்யாகவே ….

   மிக … மிக … மிக … பரிதாபமாகத்தான் இருக்கிறது.

 10. சான்றோன் Says:

  யப்பா சந்திரசேகரேந்திரா…….

  உன்னைப்போன்ற அல்லக்கைகளைப்பற்றித்தான் திரு.ராமசாமி அவ்வப்போது அங்கலாய்க்கிறார்…. நாங்க திருந்தவே போறதில்லைன்னு காட்டுகிறாய்…..சமீபத்திய பதிவு ஒன்றில் என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு பகுதி இதோ…..

  //இப்படிப்பட்ட அரைகுறைகளையே தொடர்ந்து உருவாக்கி , உலகம் முழுக்க உலாவவிட்டு , தமிழ் இளைஞர்கள் என்றாலே இப்படிப்பட்ட மூளையில்லாத முணடங்கள் தான் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே ,…….அதுதான் கழகங்களின் மாபெரும் சாதனை…….//

 11. Chandrasekarenthiran Says:

  திராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து. அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம். அதற்கு பின்பாட்டு பாடிவருபவர்கள் நீங்கள்.
  வெளிப்படையாய் கேட்கிறேன். அடுக்குமொழி தமிழுக்கு அடுக்காத மொழி என்கிறாரே கட்டுரையாளர் அதற்கும், அந்த மொழிநடையை “பொறுக்கி நடை” என்கிறாரே அதற்கும் இலக்கண ஆதாரத்தை காட்டட்டும். அகத்தியம்- இல்லை. ஆனால் தொல்காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றிலேனும் இதற்கு ஆதாரமிருந்தால் கட்டுரையாளர் காட்டட்டும், அல்லது அவரின் பக்க வாத்தியங்களான நீங்கள் காட்டுங்கள்.
  இது எதுவுமில்லாமல் ஆதாரமின்றி வெறும் வயிற்றெரிச்சலில் பேசுவதாக இருந்தால் கொஞ்சம் ஜெலுசிலை குடித்துவிட்டு வீட்டுக்குளே இருந்து பேசுங்க. பொதுவில் பேசினால் இப்படி கேள்வி வரத்தான் செய்யும்.

  உங்கள் (பொன்.முத்து/ ராமசாமி/ சான்றோன்) அடுத்த பதிவு தொல்காப்பியம் அல்லது நன்னூலிலுள்ள ஆதாரமாக இருக்குமென எண்ணுகிறேன்.

 12. சான்றோன் Says:

  @Chandrasekarenthiran……

  நீங்கள் மேல்மாடியை காலியாகத்தான் வைத்திருப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம்….அதில் எங்களுக்கென்ன சார் வயிற்றெரிச்சல்..?

  இந்த அடுக்குமொழி[பொறுக்கி நடை ] தான் [ ரூபாய்க்கு மூணு படி……இல்லைன்னா முச்சந்தியில் நிறுத்தி செருப்படி ] திராவிட இயக்கம் ஆட்சியைப்பிடித்ததன் காரணம்….. மேற்படி வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் என்ன ஆனதென்று உலகம் அறியும்…….

  ரயில் வராதபோது தண்டவாளத்தில் தலை வைத்ததும் , ரயில் தூரத்தில் வரும்போதே ” யோவ் சீக்கிரம் கைது பண்ணுய்யா ”…….என்று காவலரிடம் கெஞ்சியதும் கழக வரலாறு……

  அரசியல் சட்டத்தை எரிப்போம் என்று புலியென சீறிப்பாய்ந்ததும் , வழக்கு என்று வந்த‌பின் நீதி மன்றத்தில் நாங்கள் பேப்பரைத்தானே எரித்தோம் என்று பூனையாய் பதுங்கியதும் யார்?

  அடைந்தால் திராவிட நாடு …இல்லையேல் சுடுகாடு [மற்றுமொரு பொறுக்கி நடை ] என்று முழங்கியதும் , பிரிவினைவாத தடுப்புச்சட்டம் பாயும் என்றவுடன் திராவிட நாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு , திராவிட நாடு கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று முனகியதும் யார்?

  இவர்களின் பித்தலாட்டத்துக்கு தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஏன் சார் வம்புக்கு இழுக்கிறீர்கள்.?

  தமிழ் இலக்கியம் திராவிட இயக்கங்களின் காப்பிரைட்டா? இன்று நீங்கள் மேடைகளில் சுட்டும் பல பழந்தமிழ் பொக்கிஷங்களை கண்டெடுத்தவர் உ.வே.சாமிநாதய்யர்தான்……. கழக முன்னோடிகள் அல்ல……

  வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டு , திருவள்ளுவருக்கு கன்றாவியாக ஒரு சிலை எழுப்பிவிட்டால் போதுமா. ? குறள் சுட்டும் அறம் ஒன்றையாவது கருணாநிதியோ , இதர கழக கண்மணிகளோ தம் வாழ் நாளில் கடைப்பிடித்ததுண்டா?

  தமிழை பயன்படுத்தி வயிறு வள‌ர்த்தது மட்டுமே கழகங்களின் சாதனை….. அதை சுட்டிக்காட்டினால் கோபம் வருவது உங்களுக்கு …… ஜெலூசிலோ , டைஜீனோ உங்களுக்குத்தான் தேவை….. எங்களுக்கு பிழைக்க நேர்மையான தொழில் இருக்கிறது………

 13. Chandrasekarenthiran Says:

  நான் உங்களிடம் என்ன கேட்டேன்? அடுக்கு மொழி தமிழுக்கு அடுக்காது என்பதற்கோ அல்லது அடுக்குமொழி என்பது ஒரு பொறுக்கி நடை என்பதற்கோ தொல்காப்பியத்திலோ அல்லது நன்னூலிலோ இலக்கண ஆதாரம் உண்டா? அவ்வளவுதான் விஷயம்.
  ஆதாரம் இருந்தால் ஆதாரத்தை கொடுங்கள், இல்லையென்றால் அப்படி சொன்னது கற்பனைச்சரக்கு என்று ஒத்துக்கொண்டு விலகிவிடுங்கள்,

 14. Chandrasekarenthiran Says:

  @Ramasami : //அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல் – போன்றவற்றில் இந்த அடுக்கு மொழி – பொறுக்கி நடை என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை. மன்னிக்கவும். அது என்னுடைய, சொந்தச் சரக்கு – இந்த நடையைக் குறிப்பிட நான் வைத்துள்ள செல்லமான ‘பட்டப் பெயர்.’// ……………………………………………………………………………….அதுதான் விஷயம். இந்த மொழிநடையை “அடுக்காத மொழி” என்றோ “பொறுக்கி நடை” என்றோ தொல்காப்பியமோ, நன்னூலோ குறிப்பிடவில்லை. அவை இதனை அனுமதிக்கின்றன. அவை அனுமதித்துள்ள இலக்கண கட்டுமானத்துட்பட்டே அழகியலோடு சேர்த்து இந்த மொழிநடை கையாளப்பட்டுள்ளது.

  உமக்கு இந்த மொழிநடையினால் திராவிடர்கள் அதிகாரம் பெற்றதை கண்டு வயிற்றெரிச்சல். அது இந்த மொழிநடையையும் வெறுக்க வைக்கிறது. ஆக இது பொறுக்கிநடையல்ல. திராவிடர்களின் வளர்ச்சியை கண்டு உமக்கு பொறுக்காததால் இந்த மொழிநடையை பொறுக்கிநடை என்கிறீர்.

  மற்றபடி நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள சுட்டியில் பக்கம் பக்கமாக எழுதியுள்ளவை எல்லாம் எந்த பயனுமற்றவை.

 15. பொன்.முத்துக்குமார் Says:

  ஏனுங்க சார் சந்த்ரசேகரேந்திரன்,

  நன்னூல்-லயோ தொல்காப்பியத்துலயொ ஒத்துக்கொள்ளப்பட்ட படிதான் நீங்க முழுக்க முழுக்க தமிழ் மொழிய பயன்படுத்துரீங்களா ?

  என்ன காமெடி போங்க.

  இப்போ நீங்க என்ன பண்ணுறீங்க – இப்போன்னாக்க, நீங்க இப்போ ச்ச்சின்ன பையனா இருக்கிறீங்கள்ள, அப்போ, அதாவது இப்போ – ஒரு தப்பு பண்ணிடறீங்க, அப்போ ஒங்க அப்பா, கோவத்துல ஒங்கள பண்ணி-ன்னு திட்டறார்-ன்னு வைங்க. அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க, ஒங்க அப்பா-கிட்ட போயி, ‘அப்பா அப்பா, நா உயிரியல் ஒத்துக்கொண்டபடி மனிதன். உயிரியல் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமானப்படி அழகியலோடு சேர்த்து என் உடல் மனிதனாக படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு திராவிடன் மனித உடம்பு எடுத்தது கண்டு வயிற்றெரிச்சல். அது இந்த உடம்பையும் வெறுக்க வைக்கிறது. திராவிடனின் வளர்ச்சியை கண்டு உமக்கு பொறுக்காததால் அதை பண்ணி என்கிறீர்’ இப்படி சொல்வது எப்படி இருக்குமோ அப்படி இருக்கு நீங்க சொல்லி இருக்கிறது.

 16. பொன்.முத்துக்குமார் Says:

  இப்போ விஷயத்துக்கு வருவோமா ?

  ஒங்களுக்கு என்ன பிரச்சினை ? அடுக்கு மொழி நன்னூல், தொல்காப்பியம் இன்னபிற நூல்கள் அங்கீகரிக்காத நடையா ? (என்னென்னமோ பெரிய பெரிய புக்கு பேரு-லாம் சொல்றீங்க. நா இதெல்லாம் கேள்விப்பட்டதோட சரீங்க, சார், படிச்சதெல்லாம் இல்லீங்க சார். அதனால நா என்ன நெனிக்கிறேனொ அத சொல்றேன் சார், சரீங்களா சார் ?)

  இல்லை என்றே இருக்கட்டும், அவை அடுக்கு மொழி நடையை அங்கீகரித்ததாகவே இருக்கட்டும். அதனாலென்ன ? ஆவணப்படுத்த வழியில்லாத நூற்றாண்டுகளில், வாய்மொழியால் மட்டுமே இலக்கியம் பரவவேண்டும் என்ற நிலை இருந்தபோது, மொழி பரவலுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இலக்கண கட்டுமானத்தை (இந்த அடுக்குமொழியை – எதுகை மோனை என்று எனக்கு வசதியாக பொருள் கொள்கிறேன். எந்த அளவுக்கு அது சரி என்று தெரியவில்லை. அகத்தியம், நன்னூல், தொல்காப்பியமெல்லாம் கரைத்துகுடித்து தெளிந்த தேவரீர் விளக்கினால் நலம் பயக்கும்) அது தேவையே இல்லாத ஒரு நூற்றாண்டில் – அதுவும் ஒலிபெருக்கி முன்னால் நின்று உளறுவதற்கு பயன்படுத்து எப்படிப்பட்ட அபத்தம் என்று யோசித்துப்பார்க்க பெரிய IQ-வெல்லாம் தேவையில்லை அன்பரே. (அது அவர்களது உரிமைதான், மறுக்கவில்லை. நீங்கள் ஒன்றும் ‘எனது உரிமை’ என்று பேண்ட் சட்டை போடாமல், இறுக்கிக்கட்டின தார்ப்பாய்ச்சும், முண்டாசுமாய் உலாவர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

  அந்த அடுக்கு மொழி ‘பொறுக்கி நடை’ என்று சொல்லப்படுவது ஒரு விமர்சனம்தான் என்று புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு உங்கள் புரிதல்திறன் அவ்வளவு கீழா என்ன ? அட, அப்படித்தான் ஏன் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது என்று கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன். நன்னூல், தொல்காப்பியம், அகத்தியம் போன்ற நூல்கள் அங்கீகரிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பும் உங்களுக்கு இது ஒன்றும் பெரிய செயல் இல்லை (என்றுதான் நினைக்கிறேன்)

  ஏனெனில், அந்த நடை இந்த சமூகத்தை எதிர்மறையாக பாதித்ததனால் ; அப்படி பாதித்து உங்களைப்போன்ற உள்ளத்தளவில் நோய்க்கூறுகளை தலைமுறை தலைமுறையாக விதைத்ததனால் ; அந்த நடையை பயன்படுத்தி அவர்கள் செய்த கயவாளித்தனங்களால் ; தாம் தொன்றுதொட்டு செய்துகொண்டிருக்கும் சகல அயோக்கியத்தனங்களுக்கும் முன்னால் இந்த மொழிநடையை முகமூடியாய் முன்னிறுத்தி மறைத்துக்கொண்டதனால் ; அந்த பொறுக்கித்தனங்களை சுட்டிக்காட்டுவோரை எல்லாம் இந்த மொழிநடையை பயன்படுத்தி எச்சில்படுத்தி தன்னை நியாயவான் போல காட்டிக்கொள்வதனால் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். உங்களாலேயே கூட முடியும், கொஞ்சம் அந்தரங்கமாகவேனும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை பாருங்கள்.

  உதாரணத்துக்கு சில. அங்கிங்கு என உதிரி உதிரியாய் படித்தவை, மற்றும் இணையத்தில் தேடினால் (வெள்ளமென கொட்டுகிறது போங்கள்) கிடைத்தவை இவை. தோண்டினால் கூவம் கூச்சப்படும் அளவுக்கு – ச்சே ச்சே எனக்கே அந்த வியாதி தொற்றிவிடும் போலிருக்கே :) – நாறும்.

  1. “தமிழகத்தில் தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி. அதை தோண்டி எடுத்து, தமிழக மக்களின் வாட்டத்தை போக்குவோம்” (அந்த நேரத்தில் இந்தியா முழுக்க பஞ்சத்தில் துடிக்க, உணவு கேட்டு நேரு உலகை நோக்கி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்) உங்களில் யாராவது ‘எந்த ஆதாரத்தில் இப்படி சொல்கிறீர்கள் ? சுரங்கத்துறை, அல்லது சம்பந்தப்பட்ட ஏதேனும் துறை சார்ந்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வெளியிட இயலுமா ?’ என்று கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் சேதி.

  2. “மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” [ ‘ரூபாய்க்கு மூன்று படி’ (சான்றோன் முழு மேற்கோளும் காட்டி இருக்கிறார், படியுங்கள்) ஜாலம் ஆப்பு வாங்கும் என்று தெரிந்ததும் எப்படி சமாளிப்பு வருகிறது பாருங்கள் ]

  3. அவர் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல.

  4. என் மகள் கனிமொழியின் தாய். (ராசாத்தியம்மாள் யார் என்ற கேள்விக்கு பதிலாக – சட்டத்தின் ஓட்டைகளில் நழுவவேண்டுமே)

  5. முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது (காமராஜர் ரஷ்யா சென்றதை முன்னிட்டு பாடிய வாழ்த்துப்பா)

  6. காமராஜர் முதுகுத் தோலை உரித்தால் இரண்டு டமாரங்கள் செய்திடலாம்

  7. பாவாடை – நூலாடை (கருமம்)

  8. விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்

  9. வைகோ போயஸ் தோட்டமா செல்கிறார் இல்லை அவர் உல்லாச புரிக்கு செல்கிறார்

  10. மாதவிடாய் ரத்தம் (விமான நிலையத்தில் தனது குண்டர்களால் தாக்கப்பட்டு நெடுமாறன் சிந்திய ரத்தத்தால் ரத்தக்கறை பட்ட இந்திரா காந்தியின் சேலை ரத்தம் பற்றிய விமர்சனம்)

  இன்னும், மலையாளி, குல்லுகபட்டர், திருமதி.ஜெயலலிதா, ‘எத்தனை பேருக்குத்தான் உடன்கட்டை ஏறுவாய் ?’ போன்ற வாசித்து இன்பமடையும்படியான எண்ணிலடங்கா ….

 17. பொன்.முத்துக்குமார் Says:

  எங்கள் ஊரில் சிறுவயதில் குதிரை வண்டி பார்த்திருக்கிறேன். வண்டியில் பூட்டப்பட்டு ஒட்டப்படும் குதிரையின் கண்களுக்கு இருபக்கமும் பட்டைகளை கட்டிவிடுவார்கள். சிறுவனாய் இருந்த காலத்தில் ‘எதற்கு இப்படி’ என்று எனக்கு புரியவில்லை. பிற்பாடு காரணம் புரிந்தது. ‘வண்டி இழுக்கும்போது அதன் பார்வை சாலையில் மட்டும்தான் இருக்கவேண்டும். வேறெங்கும் இருக்கக்கூடாது.’

  நண்பரே, உங்களிடமும் பூட்டப்பட்டுள்ள அந்த பட்டைகளை கழற்றி வீசிஎறியுங்கள். அப்போதுதான் இன்னமும் சற்று விரிந்த பார்வை பெற முடியும். புரியாத பல விஷயங்கள் இன்னும் தெளிவாக விளங்கும். இல்லை என்றால் உங்களுக்கு பட்டை கட்டிவிட்டு முதுகு வளைத்து கழுத்தில் நுகத்தடி பொருத்தி, உங்களை வண்டி இழுக்கவிட்டு உல்லாசமாய் பவனி வரும் உங்கள் எஜமானனுக்கு என்றென்றும் இப்படித்தான் பரிந்து பேசிக்கொண்டிருப்பீர்கள்.

  பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.

 18. poovannan Says:

  முத்துகுமார் சார்

  உங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை.

  இந்த கேடுகெட்ட திராவிட கட்சிகளின் ஆட்சியை மற்ற மாநிலங்கோடு ஒப்பிட்டு பார்க்கலாமே என்றால் கண்ணை ஒரு பக்கம் கூட பார்க்காமல் இருக்க மூடி கொள்வது யார் .
  20 கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கூட அல்ல ,இலவசமாகவே தருவது கழக ஆட்சிகள் தானே

  தமிழகம் என்ன குறைந்து விட்டது என்ற கேள்விக்கு சிறிதாவது பதில் சொல்ல முயற்சியுங்களேன் சார்.

  மத்திய அரசு பணிகளில் கூட தமிழகம் அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடங்களை தான் கைப்பற்றுகிறது.
  மத்திய அரசு பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் அதிக சதவீதத்தையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் பிடிக்கிறார்கள்
  ஹைதராபாத் வேண்டும் எனபது போல இங்கு சென்னை எங்களுக்கு தான் என்ற போட்டி கூட கிடையாது.ஒவ்வொரு பகுதிக்கும் வேறு வேறு பெரும்பான்மை சாதிகள்.கோவை தான் தலைநகர்,மதுரை தலைநகர் என்று கொங்கு நாடு,தென் தமிழகம் வேண்டும் சாதி இயக்கங்கள் பல ஆண்டுகளாக கத்தி வந்தாலும் இந்த ஒன்றுக்கும் உதவாத மொழிநடை தான் தமிழ் மொழி மீது பற்று/வெறி என்ற மாயையை உருவாக்கி தமிழ்நாடு பல மாநிலங்களாக பிரியாமல் காக்கிறது
  தேசிய கட்சி வலுவாக ஆட்சியில் உள்ள ஆந்திரத்தின் நிலையை சற்று பார்த்தால் ,டேலேன்கானவிர்க்காக போராடும் சங்கபரிவாரங்களின் சேஷ்டைகளை கவனித்தால் பொருக்கி நடையினரால் தமிழகத்திற்கு விளைந்த நன்மைகள் விளங்கும்.ஆனால் அதற்க்கு கண்களை திறந்து பார்க்க வேண்டுமே

  • பொன்.முத்துக்குமார் Says:

   // உங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை. //

   அதற்குத்தான் பட்டையை கழற்றி வீசவேண்டும் என்று சொன்னது :)

   // 20 கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கூட அல்ல ,இலவசமாகவே தருவது கழக ஆட்சிகள் தானே //

   அதில் அடித்த மெகாஆஆ கொள்ளையை பற்றி (போலி ரேஷன் அட்டைகள் உருவாக்கம், அதன் மூலம் மாலத்தீவுக்கு நடத்தப்பட்ட அரிசி கடத்தல், அது பொது வினியோக அரிசிதான் என்று நுகர்பொருள் வாணிப கழகம் சான்றளித்தது, அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அந்த கடத்தலை தடுத்து அரிசியை கைப்பற்றியது, பின்னர் அந்த கடத்தலில் சம்பந்தப்பட்டது பெரீஈஈய இடம் என்பதால் அதே மாவட்ட ஆட்சியரே, அதை காபந்து பண்ணி விடுவிப்பது …. யப்பாஆஆ) ஆதாரபூர்வமாக சவுக்கு தளத்தில் எழுதி உள்ளார்கள். கொஞ்சம் படித்துப்பாருங்கள். ஏன் “விஞ்ஞான பூர்வ” என்ற புகழ்பெற்ற கருத்தாக்கம் உருவானது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கியது எனக்கு.

   ஒரு சமூக மக்களை தன் கால்களிலேயே நிற்க உதவுவதா அல்லது அவனை தலைமுறைகளாக கையேந்த வைத்துக்கொண்டே இருப்பதா ? எது ஒரு அரசு செய்யவேண்டியது என்று யோசியுங்கள் ஐயா. இதன் விளைவு என்ன தெரியுமா ? இலவசம் என்பது எனது பிறப்புரிமை என்று இந்த சமூகத்தை உரிமை கொண்டாட வைக்கும் அளவுக்கு கேவலமாக போய் இலவசத்தில் கை வைத்தால் ஒட்டு போய் விடுமோ என்று பயந்து நீ தடுக்கில் பாய்கிறாயா, நான் கோலத்திலேயே பாய்கிறேன் பார் என்ற அளவுக்கு கந்தரகோலமாக போய்க்கொண்டிருக்கிறது.

   // தமிழகம் என்ன குறைந்து விட்டது என்ற கேள்விக்கு சிறிதாவது பதில் சொல்ல முயற்சியுங்களேன் சார். //

   உங்களைப்போல புள்ளிவிபரங்களை அள்ளி வீச என்னால் இயலாது. அந்த அளவுக்கு என் வாசிப்பு இல்லை. என் வெறுப்பெல்லாம், இந்த சீரழிவு இல்லாமல் இருந்திருந்தால் – வாய்த்த ஆட்சியாளர்கள், ‘ஆட்சியாளர்கள்’ என்ற இலக்கணத்துக்கேற்ப நடந்திருந்தால் – இந்த மாநிலம் எந்த அளவுக்கு இன்னும் உயர்ந்திருக்கும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான். பக்கத்து மாநிலங்களைவிட நாம் குறைந்து போகவில்லை என்ற ஒப்புமை நமது குறையை மறைக்க – நமது இயலாமையை சமாளிக்க மட்டுமே போதுமானது. நம்மால் இதைவிட வெகு எளிதாக மேலே சென்றிருக்க இயலும்.

   // மத்திய அரசு பணிகளில் கூட தமிழகம் அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடங்களை தான் கைப்பற்றுகிறது.
   மத்திய அரசு பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் அதிக சதவீதத்தையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் பிடிக்கிறார்கள் //

   அப்புறம் ஏன், தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழக பகுதிகளை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து இத்தனை ஆண்டுகள் பாடுபட வேண்டி இருந்தது ?

   // இந்த ஒன்றுக்கும் உதவாத மொழிநடை தான் தமிழ் மொழி மீது பற்று/வெறி என்ற மாயையை உருவாக்கி தமிழ்நாடு பல மாநிலங்களாக பிரியாமல் காக்கிறது //

   இந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன என்று சொல்லுங்கள். (புள்ளிவிபரம் வீசும் உங்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைக்கிறேன்) இந்த பொறுக்கி நடை உருவாகாத நாட்களில் – அந்த பொறுக்கி நடை பேசாத காமராஜர், ஓமந்தூரார், பக்தவச்சலம், ராஜாஜி போன்றோர் ஆண்ட காலங்களில் தமிழகம் மாநிலப்பிரிவினைக்காக அடித்துக்கொண்டிருந்தது என்று அர்த்தமா ?

   இந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்றால் – இந்த நடை மூலம் உருவான மாயையால்தான் தமிழகம் ஒன்றுபட்டு இருக்கிறது என்றால் –

   அப்படிப்பட்ட ஒற்றுமை இந்த மாநிலத்துக்கு தேவை இல்லை, அது பிரிந்து போவதே சரி.

   இந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்றால் –

   இந்த மாநிலத்தை உருவாக்கி, ஆண்டு, இந்த பொறுக்கி நடை இல்லாமலேயே கட்டிக்காத்தவர்கள் மேல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் மேலும் சாக்கடை அள்ளி வீசுகிறீர்கள் என்றே பொருள்.

   அதிர்ச்சியாக இருக்கிறது.

 19. சான்றோன் Says:

  பூவண்ணன் சார்……

  நாற்பத்தியாறு வருஷங்களுக்கு முன்னாடி ரூபாய்க்கு மூனு படி ன்னு ஊர ஏமாத்துனீங்களேன்னு கேட்டா, இன்னைக்கு அரிசி இலவசமாவே போடுறோம்னு சொல்லுறது எந்த வகையில் சார் சரி? இன்னிக்கு பசிச்சா ஒரு வருஷம் களிச்சு சாப்பிடுவீங்களா?

  இலவசமா அரிசி போடுறதுல என்ன சார் பெருமை வாழுது? நாற்பது வருஷ ஆட்சிக்குப்பிறகும் , அரிசியை [ கிலோ இரண்டு ரூபாய் என்று விற்றால் கூட ] விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையில் தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

  திராவிட இயக்கங்களின் உண்மையான சாதனை என்பதை சர்க்காரியா அன்றே வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்…..அந்த ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவதற்காக தமிழக [ காவிரி டெல்டா ] விவசாயிகள் பலியிடப்பட்டதை உலகம் அறியும்….

  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் திராவிடப்புரட்டை வைத்து ஊரை ஏமாற்றுவதாக உத்தேசம்……தமிழகம் கருகினாலும் சரி….ஒரு சொட்டு நீர் கூட விடமாட்டேன் என்று கொக்கரிக்கும் கன்னடன் திராவிடன்தானே? முல்லைப்பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்று கொந்தளிக்கும் மலையாளியும் திராவிடன் தானே..? உங்கள் திராவிடப்பருப்பை அவனிடம் கொண்டுபோய் விற்பதுதானே?

  கல்வி அளிப்பது முழுக்க முழுக்க அரசின் பொறுப்பாக இருந்ததை தனியாரிடம் ஒப்படைத்தது கழகங்கள் தானே?கழகங்களில் உள்ள கல்வித்தந்தைகளை பட்டியலிட்டால் இந்த தளம் போதாது……

  காமராசர் ஆட்சிக்காலம் வரை தமிழகம் தான் நிர்வாகத்தில் ஒட்டுமொத்த இந்தியவுக்கே வழிகாட்டியாக இருந்தது,,,ராயப்பாவில் ஆரம்பித்த கழகங்களின் சேவை அன்சுல் மிஸ்ரா ,ஆசிஷ் குமார் வரை நின்று விளையாடுகிறது…… கடந்த ஆட்சியிலும் சரி….இந்த ஆட்சியிலும் சரி …..முக்கியப்பதவிகளில் இருந்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்…….

  இன்னும் ஒருமாசம் பொறுங்க சார்……காற்றாலை மின் உற்பத்தி நின்றுவிடப்போகிறது…..அதுக்கப்புறம் பதினெட்டு மணி நேர மின் வெட்டில் வேர்த்துவடிந்துகொண்டு மின் உற்பத்தியில் கழகங்களின் சாதனை பற்றி விடிய விடியப்பேசலாம்…..[ இருட்டில்…..,கொசுக்கடியில் தூக்கம் வராதே…?]..

 20. சான்றோன் Says:

  பூவண்ணன் சார்……

  அப்புற‌ம்……தெலுங்கானா பற்றி தளம் தளமா பொளந்து கட்டறீங்க….. தனி மாநிலம் தானே சார் கேக்குறாங்க…..உங்கள மாதிரி தனி நாடா கேட்டாங்க.?.[ உங்கள் திராவிடப்பொன் நாட்டைஅதுக்குள்ளேவா மறப்பது?]…….தமிழகத்துக்கு மட்டும் சுதந்திரம் வேண்டாம்னு வெள்ளைகாரன் காலைப்பிடித்து கெஞ்சினதெல்லாம் மறந்து போச்சா?

  தெலங்கானா கோரிக்கை மிகப்பழமையானது…… ஒருங்கிணைந்த ஆந்திராவை தெலங்கானா மக்கள் என்றுமே ஏற்றதில்லை….. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தனி நிர்வாகப்பகுதியாக இருந்தது அது……

  .பாஜக தனிமாநிலங்களைத்தான் ஆதரிக்கிறது.?… ஆனால் திராவிடக்கட்சிகளின் அடிப்படைக்கொள்கையே பிரிவினைவாதம்தானே? நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பது தவறென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரமும் த‌வறென்று ஆகிவிடும் சார்…பிறகு கழக கண்மணிகள் பஞ்சாயத்துப்பணத்தில் முக்குளிப்பது எப்படி?

  சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு….தமிழகத்தின் தொழில் கேந்திரமான கொங்கு மண்டலப்பகுதிக்கு பதினெட்டு மணி நேர மின்வெட்டு….. இதுதானே சார் கழகங்களின் நிர்வாக லட்சணம்? இப்படியே போனா தனி மாநில கோரிக்கை தமிழகத்தில் வருவதற்கு எவ்வளவு நாளாகும் சார்?

 21. poovannan Says:

  சரவணகுமார் சார்

  திரு பத்ரி அவர்களின் பதிவில் உங்களின் இதே கேள்விக்கு எழுதிய பதில்

  1947 காலகட்டத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் தனி நாடு கோரிக்கையை பார்க்க வேண்டும்.அப்போது மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது.இந்தியா இந்து நாடாகும் என்று தான் பலரும் நினைத்தனர்.
  மதம் என்றும் இணைக்காது.கட்டுகோப்பான,முல்லாக்களுக்கு கட்டுப்பட்ட இஸ்லாமியர்கள் கூட சர்வாதிகாரிகளின் கீழ் இருந்தாலும் 25 ஆண்டுகள் கூட ஒன்றாக இருக்க முடியவில்லை.மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் உருவானது

  இந்தியா இந்து நாடாகாமல் (விடுதலையின் போது இந்தி,இந்து நாடு தான் பலரின் எண்ணமும் )நேருவும் /அம்பேத்கரும் புண்ணியம் கட்டி கொண்டார்.அதற்கு பெரிதும் உதவியது திராவிட இயக்கம்
  ஹிந்து நாடாக இருந்திருந்தால் எந்த அழகில் இருக்கும் இருந்திருக்கும் என்பதை நேபாளத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.கிழக்கு வந்காளத்திற்கு முன்பே மொழி /இனம் அடிப்படையில் நாடு சிதறி இருக்கும்

  47 இல் காஷ்மீர் ஹிந்து ராஜா,திருவன்கோரே ராஜா மற்றும் திவான்(அவர் கதியால குத்தப்பட்ட பின் தான் இந்தியாவில் இணைய சமஸ்தானம் ஒப்பு கொண்டது)எல்லாரும் வெள்ளையன் இல்லை என்றால் தனி நாடு என்று தான் கோடி பிடித்து கொண்டிருந்தார்கள்.

  தனி நாடு கோரிக்கை எனபது துருப்பு சீட்டு.வேண்டியது கிடைத்து விட்டால் எதற்கு அந்த கோரிக்கை. இன்று இங்கிலாந்தும் இந்தியாவோடு இருந்திருந்தால் நம்மிடம் அதிக வோட்டு இருப்பதால் இந்தியர் தான் தலைமை பதவியில் இருந்திருப்பார்.நாம் அதிக எண்ணிக்கையில் இருந்தும் ஏன் தனி நாடு வேண்டும் என்று போராடினோம்.அவனோடு சேர்ந்து ஒரே நாடாக இருக்க முடியாது,அவனின் ஆதிக்கம் தான் இருக்கும் என்ற காரணத்தால் தானே.
  பர்மா,இலங்கை,பாகிஸ்தான்,வங்காளம்,நேபாளம் எல்லாம் ஒன்றாக தானே இங்கிலாந்தின் கீழ் இருந்தது.இதில் பர்மா,இலங்கை இந்தியாவை சேர்ந்தது என்றா போராடினோம்
  பல பகுதிகள் தனியாக இருந்தால் தான் வெள்ளையரோ,வடவரோ,மாட்டு கறியை வெறுப்பவரோ அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வர மாட்டோம் என்பதால் தனி நாடு கேட்டார்கள்

  இட ஒதுக்கீடும்,மதசார்பின்மை/போலி மதசார்பின்மை தான் இந்தியாவை காப்பாற்றி வருகிறது.இந்த கொள்கைகள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்.
  இட ஒதுக்கீட்டை காங்கிரஸ்/ஜன சங்கம் இரண்டும் எதிர்த்த கட்சிகள் தான்.ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் கட்சிகள் தான் இரண்டும்.இவைகளை வேண்டாவெறுப்பாக ஆதரிக்கும் நிலை தான் இந்தியா ஒன்றாக இருக்க முக்கிய காரணம்

 22. சான்றோன் Says:

  பூவண்ணன் சார்…..

  பத்ரி அவர்கள் பதிவில் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை……. அவை இங்கே…..

  இப்போ எதுக்கு சார் நேருவையும் , அம்பேத்கரையும் இழுக்கிறீங்க…..இன்று உங்களுக்கு ரொம்ப நல்லவராக தெரியும் நேருவை கழகங்கள் எப்படியெல்லாம் விமர்சித்துள்ளன என்பதை அன்றைய குடிஅரசு , விடுதலை பத்திரிக்கைகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்….அவர் செஞ்சது சரின்னா அப்ப ஏன் சார் அவர அவ்வளவு கேவலப்படுத்துனீங்க…..?

  ஈ.வெ.ரா வின் திராவிடஸ்தான் கோரிக்கையை அம்பேத்கர் இடது கையால் புறம் தள்ளிவிட்டார்…அந்த கடுப்பில் ஈ.வெ.ரா வழக்கம்போல் அம்பேத்கரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்……

  ஒரு வீடு எப்படி இருக்குன்னு கேட்டா . வீட்டில் உள்ள மற்ற பகுதிகளை விட்டுவிட்டு கக்கூசை போய் முகர்ந்து பார்த்துவிட்டு வீடு நாறுதுன்னு சொல்றதுதான் திராவிட இயக்க ஸ்டைல்…….உங்களின் நேபாளம் பற்றிய ஒப்பீடும் அது போலத்தான்……. முற்காலச்சோழர்கள் தொடங்கி விஜய நகர சாம்ராஜ்யம் வரை ஆயிரக்கணக்கான ஹிந்து ராஜ்யங்களை விட்டுவிட்டு , எங்கோ இருக்கும் நேபாளத்தை வைத்து ஹிந்துக்களை இழிவு படுத்தும் உங்கள் நோய் மனப்பான்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது……. நேபாளத்தில் நடந்தது மன்னர் ஆட்சி….. சர்வாதிகாரிகள் மதத்தை தங்கள் தவறுகளுக்கு ஒரு கேடயமாக பயன் படுத்துவார்கள்……. ருஷ்ய ஜார்களுக்கு ஒரு ரஸ்புதீன் , இடி அமீனுக்கு இஸ்லாம் , ஏன் இன்றை சவூதி அர‌சர்களின் ஆட்சியில் பெண்கள் கார் கூட ஓட்ட முடிவதில்லை….. அதற்கும் அந்தந்த மதங்கள் தான் காரணமா?

  ஒரு ஹிந்து அரசனின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை ஜெயமோகன் விளக்கியிருக்கிறார் http://www.jeyamohan.in/?p=8711

  அப்புறம் … மூளையை ஓவரா கசக்கிட்டீங்க போல…..இரண்டு நாடுகள் இணைந்திருக்கணும்னா இரண்டும் அருகில் இருக்கணும் சார்… இங்கிலாந்தின்ஆட்சி என்பது வேறு…..அந்த நாட்டோடு இணைவது வேறு…. இரண்டாவது புவியியல் ரீதியாக சாத்தியமா?

 23. சான்றோன் Says:

  //இந்த கொள்கைகள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்.//

  அப்படியா சார்?….. சொல்லவேயில்ல?….அப்புறம் ஏன் சார் உங்கள் இயக்கம் மட்டும் நாடு முழுவதும் பரவவில்லை? நாட்டின் மற்ற பகுதிகளை விட்டு விடுங்கள்……குறைந்த பட்சம் உங்கள் திராவிட நாட்டின் மற்ற பகுதிகளான கேரளம் , ஆந்திரம் , கர்னாடகம் போன்ற பகுதிகளில் கூட ஒருவரும் சீண்டல?

  இதோட விட்டுட‌க்கூடாது சார்…. கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சதுக்கு , ராக்கெட் விட்டதுக்கு , அணுகுண்டு வெடிச்சதுக்கு , சுனாமி வந்ததுக்கு , லேட்டஸ்ட் எஸ்.யு .வி கார்கள் வந்ததுக்கு எல்லாத்துக்குமே காரணம் திராவிட இயக்கங்கள்தான் காரணம்னு அடிச்சுவிடுங்க…. காசா பணமா?

  • poovannan Says:

   திராவிட கட்சிகளின் கீழ் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல துறைகளில் /அடிப்படை வசதிகளை அமைத்து தருவதில் வளர்ச்சி அடைந்து இருந்து இருக்கிறது என்று ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் உண்மையை ஆராய்ந்து பார்க்க விரும்பாமல் கக்கூஸ்னா நாற தான் செய்யும் எனபது தான் சார் கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு எனபது

   பள்ளிகள்,மருத்துவமனை,தங்கும் விடுதிகள்,ரயில்,பேருந்து நிலையங்கள்,ரயில் கோச்சுகள்,பணியாளர் கோர்டேர்ஸ் ,போர்வீரர்கள் தாற்காலிக தங்குமிடங்கள் பற்றி ஆய்வு செய்ய செல்லும் போது முதலில் பார்க்க வேண்டிய இடம் கக்கூஸ் தான்.கக்கூஸ் நாறாமல் ஒழுங்காக இருந்தாலே நல்ல நிர்வாகம் என்ற முடிவுக்கு பெரும்பாலும் வந்து விடலாம்.

   நீங்கள் கொடுக்கும் திரு ஜெயமோகன் அவர்களின் இணைப்பில் உள்ள அடிப்படை கருத்தான அந்த காலகட்டத்தோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்ற கருத்து 1947இல் திராவிட இயக்கத்துக்கு இருந்த கோரிக்கைகளுக்கு பொருந்தாதா
   பாகிஸ்தானை போல இந்தியாவும் மத அடிப்படையிலான நாடாக உருவாகி இருந்து இருந்தால் பல தனி நாடு கோரிக்கைகள் வலுபெற்றிருக்கும்.கிழக்கு வங்காளத்திற்கு முன் இங்கு பிரிவுகள் ஏற்பட்டிருக்கும்

 24. க்ருஷ்ணகுமார் Says:

  வ்யாசம் சொல்ற Topic பற்றிப் பேசவே பேசாது அவருடைய pet topics பற்றியே ப்ரலாபம் செய்வது பூவண்ணன் சாரோட கீறல் விழுந்த ரெகார்ட் ப்ளேயர் டெக்னிக். வழக்கம் போல மாட்டுக்கறி மாஹாத்ம்யம், பெயிலாப் போன நேபாள ஹிந்து நாடு இத்யாதி இத்யாதி……. எந்தன் த்ராவிட பொன்னாடே என்று முரசறிந்து சங்கை முழங்கி அமக்களம் சார்.

  ராமசாமி சார் த்ராவிட மேடைப்பேச்சு நடையை பொறுக்கி நடை என்று சொல்லியுள்ளார். அதை ஒரு அன்பர் தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கணப்படி உள்ளதா இல்லையா என்று திசை திருப்பி விட பார்த்துள்ளார் (தேவையே இல்லாது).

  பேச்சுக்குப் பேச்சு பகுத்தறிவு என்று அளந்து விடும் கும்பல்கள், மேடையில் தங்கள் பத்ரிகைகளில் அளந்து விடும் விஷயங்களில் லவலேசமாவது ந்யாயம் உள்ளதா பகுத்தறிவு உள்ளதா?

  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – இது த்ராவிட பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் அளந்து விடும் புளுகுமூட்டை. பூவண்ணன் சார், கல் மண் தோன்றுவதற்கு முன் எந்தக்குடியாவது தோன்ற முடியுமா என்று கேழ்க்காத வெள்ளந்திக் கும்பலுக்குத் தானே இப்படி மேடையெங்கும் முழங்க முடியும். இது பகுத்தறிவுப் பற்றி ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் கூசாது புளுகும் பேச்சு நடை? இது என்ன நடை?

  அடைந்தால் த்ரவிட நாடு இல்லையேல் சுடுகாடு. அப்புறம் ஒரு காங்க்ரஸ் சட்டமன்றப் பெண் உறுப்பினர் த்ராவிட நாடு எங்கே என்று கேட்டதற்கு நாடாவைப் பிரித்துப் பார்த்தால் தெரியும் என்று பதில் வேறு. இது என்ன நடை?

  தமிழ் நாட்டில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி? பகுத்தறிந்து சொல்லுங்கள் இதில் லவலேசமும் எங்காவது உண்மை என்பது துக்குளியூண்டாவது இருக்கிறது? இது என்ன நடை?

  மதவாதிகளுக்கு (மிகக் கவனமாக Financiers ஆன இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவர்களை விட்டு) வாய்க்கு வாய் பகுத்தறிவு பற்றி பிலாக்கணம் பாடும் கழகக் கண்மணிகளின் பேத்தல்களில் பகுத்தறிவு என்பது லவலேசம் உள்ளது? கடமை கண்யம் கட்டுப்பாடு என்று நாடகமாடும் இந்த கும்பல்களிடம் (இவர்கள் நடவடிக்கையில் இருக்கிறத என்பதுஅப்புறம்) இவர்கள் பேச்சில் ஏதாவது ஒன்றில் துக்குளியூண்டாவது இருக்கிறதா என்று பாருங்கள்?

  அன்பர் ராமசாமி அவர்கள் மிகக் கடுமையான சொல்லாடலைக் கையாண்டுள்ளார். ஊருக்குப் பகுத்தறிவை உபதேசித்து தாங்களானால் அவ்வாறு நடக்காது நாடாவைப் பிரித்து த்ராவிட நாட்டைக் காண உபதேசிப்பது ….. இத்யாதிகள்…..அன்பர் ராமசாமி அவர்கள் கையாண்ட சொல்லாடலுக்குத் தகுமா என்று பாருங்கள். அவ்வளவு தான் விஷயம். இலக்கணம்…..பிலாக்கணம்….மாட்டுக்கறி…..பன்றிக்கறி……நேபாளம்…..இத்யாதியெல்லாம் red herring techniques. As simple as that.

  த்ராவிட கும்பலகளால் ஏதும் உருப்படியாக நல்லது நடந்துள்ளதா என்பதனை உங்களிடம் விவாதிக்கத் தயாராக உள்ளதாக அன்பர் அவர்கள் சொல்லியுள்ளார். அது சம்பந்தமான வ்யாசத்தில் அந்தக் கச்சேரியை வைத்துக்கொள்ளுங்களேன். இங்கு விதிவிலக்காக ஒருமுறை Topic படி பேச முயலுங்களேன்.

 25. poovannan Says:

  பல ஹிந்து நாடுகள் இருந்தால் நான் ஏன் சார் நேபாளத்தை மட்டும் பிடித்து கொண்டு தொங்க போகிறேன்.
  ஒன்றே ஒன்று கண்ணே கண்ணாக இருந்தது நேபாளம் தானே.இன்று எந்த மன்னனை /மன்னர் ஆட்சியை திட்டுகிரீர்களோ அந்த மன்னனை ஆதரிக்க வேண்டும் என்று தானே சங்க பரிவாரங்கள் போராடின.அவருக்கு ஆதரவாக தானே பா ஜ க,ஆர் எஸ் எஸ் எல்லாம் இன்று வரை இருக்கின்றன.அல்லது கைகழுவி விட்டு விட்டார்களா
  போராட்டங்களால் அங்கு இன்றுவரை எத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பார்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் சேதமில்லாமல் வந்த மாற்றங்கள் புரியும்.

  தமிழன் ஒன்றும் போராடாத இனமல்ல.அருகில் இருக்கும் இலங்கையில் ஏற்பட்ட உயிர் இழப்புகளை கொஞ்சம் பார்த்தாலும்(இந்தியாவில் தமிழர்கள் இருக்கும் சதவீதத்தை விட இலங்கையில் அதிக சதவீதம்)இங்கு பெரிய அளவில் இழப்பில்லாமல் முன்னேறி வருவது புரியும்.இலங்கையில் திராவிட இயக்கம் வலுவாக இருந்திருந்தால் ,அங்கு இருந்த தமிழ் தலைமைகள் போல தமிழ் பேசும் இஸ்லாமியரோடு விரோதம்,தேயிலை தோட்ட தமிழர்களோடு தொடோர்பில்லாத நிலை இருந்திருக்காது.அரசியல் ரீதியான போராட்டங்கள்,விட்டு கொடுத்தல்கள் மூலம் தமிழகத்தில் உள்ள தமிழர் நிலை போலவாவது அங்கு தமிழர்கள் இருந்திருப்பர்

 26. க்ருஷ்ணகுமார் Says:

  \\ உங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை. \\\

  ஆரம்பத்திலேயே *கோவமான* என்று பொன்.முத்துக்குமாருடைய பின்னூட்டத்திற்கு ஒரு adjective கொடுத்து அவரைக் கொக்கி போட்டு விட்டு …….அவர் பாவம் யோசித்திருப்பார். நான் கோபம் எங்கே கொண்டேன். விஷயத்தை விளக்க பாயிண்டு தானே கொடுத்திருக்கிறேன் என்று. கில்லாடி சார் நீங்கள் diversion செய்வதில்.

  அவர் வேலை மெனக்கெட்டு த்ராவிட த்ராபைகளின் வீராப்பு பினாத்தல் நடையின் படியாகிய பத்து பாயிண்டுகள் கொடுத்திருக்கிறார்………அதில் உள்ள நடையின் அழகு……..கண்யமானதா? உண்மையுள்ளதா? பகுத்தறிவுக்குட்பட்டதா? என்றெல்லாம் விசாரிக்கவே விசாரிக்காது……..விஷயத்தையே தொடாது பக்கம் பக்கமாக எழுதி ரொப்புங்கள்.

 27. சான்றோன் Says:

  பூவண்ணன் சார்…..

  நீங்க [உங்க ] வழக்கம்போல , மாட்டுக்கறி ,ஆரிய திராவிட இனவாதப்புரட்டு , முனிவர்களின் கோத்திரம் இவைகளோட நிப்பாட்டிக்குங்க… நமக்கு எதுக்கு சார் சர்வதேச அரசியல்?

  சங்கப்பரிவாரம் மட்டுமல்ல…… காங்கிரஸ் கூட நேபாள மன்னர்களைத்தான் ஆதரித்து வந்தது……அது நேபாளத்தின் நலன் கருதியல்ல…..அதுதான் நம் நாட்டுக்கு நன்மை என்பதற்காகத்தான்……உலகில் எல்லா நாடும் தன்னுடைய நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்துத்தான் செயல்படும்……

  நேபாள‌த்தில் மன்னராட்சி நடந்தவரை நம் நாட்டுக்கு விரோதமான [ சீனா , பாகிஸ்தான் ] சக்திகள் அந்த நாட்டை ஒரு தளமாக பயன்படுத்த முடியவில்லை…… சீனாவால் தூண்டப்பட்ட மாவோயிஸ்டுகள் கை ஓங்கியவுடன் இன்று நேபாளம் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது….

  ஆஃப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானினின் ஸ்வாட் பள்ள‌த்தாக்கிலும் செயல்பட்டுவந்த லஷ்கர் -இ- தொய்பா உள்ளிட்ட பயங்கரவாதிகள் அமெரிக்காவின் நெருக்குதலால் [ இந்திய விரோதியான, கலீதாஜியா ஆட்சியில் இருந்த] பங்களாதேஷுக்கு இடம் பெயர்ந்தனர்……இந்தியாவின் நல்ல நண்பரான [முஜிபுர் ரஹ்மானின் மகள்] ஷேக் ஹசீனா பேகம் ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வங்கதேசத்தில் இடமில்லை என்று அறிவித்தார்…..

  இதைத்தொடர்ந்து பயங்கரவாதஇயக்கங்கள் நேபாளுக்கு இடம் பெயர்ந்தனர்….இன்று ஐ.எஸ்.ஐ யின் பயிற்சிக்கூடம் [சீன ஆதரவுடன் ]நேபாளத்தில் இயங்குகிறது……. இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர் என்று இந்திய உளவுத்துறை விவரிக்கிறது….

  .இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்த்ததால்தான் இந்தியா [ கட்சி வேறுபாடு இன்றி ] தொடர்ந்து மன்னர் ஆட்சியை ஆதரித்து வந்தது….. இந்தியாவை பற்றி ஒன்றுமே தெரியாத சோனியா தலைமைப்பொறுப்பில் இருந்ததாலும் , தேசதுரோகம் செய்வதையே வழக்கமாக கொண்ட மார்க்சிஸ்டுகளின் தயவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர‌சு நடைபெற்றுக்கொண்டு இருந்ததாலும்தான் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்ற நேரிட்டது…..சீதாராம் யெச்சூரி நேபாளத்துக்கே போய் மாவோயிஸ்டுகளை உச்சிமுகர்ந்துவிட்டு வந்தார்……

  இன்று நேபாளம் இந்தியாவின் பெரிய தலைவலியாக மாறிவிட்டது……இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் பூவண்ணன்?

 28. poovannan Says:

  சான்றோன் சார்

  மக்களுக்கு /அவர்களின் கருத்துக்கு மதிப்பு கிடையாது.நமக்கு கப்பம் கட்டும் ராஜா ஒழுங்காக இருந்தால் போதும் எனபது தான் ராஜதந்திரம் என்கிறீர்கள்

  காண்டஹர் விமான கடத்தல் காத்மாண்டுவில் நடந்த போது மன்னர் ஆட்சி தான்

  ராஜீவ் காந்திக்கும் நேபாள ராஜாவிற்கும் 1988 இல் முட்டி கொண்டது.நேபாள பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும் அளவிற்கு ராஜீவ் அரசு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டது

  நேபாள ராஜா இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிய போது நேரு நேபாள மக்களின் விருப்பம் எதிராக உள்ளதால்,காலனி ஆதிக்கத்தில் இருந்து போராடி விடுபட்ட இந்தியா அதே போல நடந்து கொள்கிறதே என்று மற்ற உலக நாடுகள் எண்ண கூடும் என்று மறுத்ததும் வரலாறு.

  http://www.rediff.com/news/2001/jan/01ashok.htm

  Anger comes from frustration and unhappiness over the ups and mainly downs in India-Nepal relations, starting more recently with the Indian economic blockade of 1988 — one of the reasons that triggered the movement for the restoration of democracy.

 29. poovannan73 Says:

  எதிர்வினைகளை மட்டும் சுட்டி காட்டி பொறுக்கி நடை/மிகவும் மோசமானவர்கள் என்று முடிவு கட்டுவது சரியா

  சோ அவர்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கிண்டல் அடித்து அலிகளை ஏன் விட்டுவிட்டீர்கள்.அவர்களுக்கும் வேண்டும் என்று தலையங்கம் எழுதினார்.அதற்க்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மைதிலி சிவராமன் நாங்கள் பெண்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறோம் ,அதே போல அவரை அலிகள் இட ஒதுக்கீட்டிற்காக போராட வேண்டாம் என்று யார் தடுத்தது என்று பதில் அளித்தார்.

  எவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார் என்று மைதிலி சிவராமனை திட்டுவதை போல திராவிட இயக்க தலைவர்களின் சில பேச்சுக்களை பிடித்து கொண்டு இயக்கத்தை பழிப்பது சரியான ஒன்றா.
  எதிர்வினையை பிடித்து கொண்டு தொங்குவது தான் திராவிட இயக்க தலைவர்களின் மரியாதைக்குறைவான எதிர்வினைகளை பிடித்து கொள்வதில் நடக்கிறது

  பாம்பை கண்டாலும் மட்டும் பிடித்து கொண்டு ,அந்த காலகட்டத்தில் திலகர் சொன்ன சூத்திரர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்.அவர்கள் இதில் தலயிட கூடாது போன்றவற்றை விட்டு விடுவது சரியா

  விதவை திருமணம் மிக தவறான ஒன்று என்று சொல்வதை விட பொறுக்கி நடை வேறு ஒன்றும் இருக்க முடியாது.நம்ம காந்தி தாத்தாவே தன வாழ்வில் பெரும்பகுதி அப்படி சொல்லி கொண்டு தான் இருந்தார்.
  தேவதாசி முறைக்கு பெண்களை நேர்ந்து விடுவது மிகவும் தேவையான ஒன்று ,அது கலாசாரம் என்று வாதிடுவது அற்புத நடை என்றால் அதற்க்கு எதிர்வினையான பொறுக்கி நடை தான் மிக தேவையான ஒன்று

  இன்று ஒரு சுப்ரமணியம் சுவாமி.அன்று 1000இல் 999 பேர் சுப்ரமணிய சுவாமி போல தான்.

  இந்த சாதியினர் வந்து சாலை போடுவதாக இருந்தால் எங்களுக்கு சாலைகளே வேண்டாம் என்று அக்ராகரத்தில் இருந்தவர்கள் 1920 களில் போராடிய காலகட்டம் அது.


  • சோ அவர்களை நியாயப்படுத்தவா செய்யுறோம் ?
   மைதிலி சிவராமன் எவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார்-னா சொல்றோம் ?
   திலகர் சொன்னதை ஆதரிக்கவா செய்யிறோம் ?

   அட போங்க பூவண்ணன் சார்.

   பொன்.முத்துக்குமார்.

 30. Observer Says:


  பிழையான உச்சரிப்பு (‘ழகர’ ‘ளகர’ ங்களுக்குக் கடற்கரையில் சமாதி)

  இலக்கணப்பிழைகள் நிரம்பிய பேச்சு ( ஒருமை, பன்மை எல்லாம் எருமைச் சாணி)

  ஆபாசத்துக்குக் கூசாத பேச்சும் எழுத்தும்
  (கண்டிப்பவர்களை இன்னும் அதிக ஆபாச வர்ணனையில் அமுக்கி, அவர்கள் என்றும் எங்கும் தலை காட்டாத வண்ணம் செய்து பரிகசிப்பது)

  தொண்டை கரகரப்பதும் மூக்கால் விளம்புவதுமே முத்தமிழ் என்று நிலை நிறுத்துவது

  எடுத்துக் கொண்ட பொருளுக்கு நேர்த்தியாக வரத் தெரியாமல், ஊரைச் சுற்றி உருண்டு புரண்டு வருத்தமில்லாமல் பேசுவது.

  பகுத்தறிவுக்குச் சற்றும் ஒவ்வாத வர்ணனைகளையும் அடை மொழிகளையும் அடுக்கி மொழியைத் தடுமாற வைப்பது

  நல்ல தமிழ்ப் படைப்புக்களைப் பாராட்டுவது பார்ப்பனர்களைப் பாராட்டியதாகும் என வெறுத்து ஏளனம் செய்வது.

  ஆபாசமான, அருவருக்கத்தக்கத் தமிழ் நடைக்கு நாணும் நற்பண்போ, கண்டனம் தெரிவிக்கும் நாகரீகமோ இன்றி, தொல்காப்பியமும் நன்னூலும் இதனை அங்கீகரித்துள்ளன
  என வம்படியாகச் சாதிப்பது “

  போன்றவை ‘பொறுக்கி நடைத் தமிழ்’ சூத்திரங்களில் சில.

  இதன் சிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் அற்ற வந்தேறிகளான ராமசாமி, சான்றோன், கிருஷ்ணகுமார் போன்றோரின் முகத்திரையை, அடலேறு ‘சந்திர சேகர இந்திர தந்திரர்….’ கிழித்துத் தோரணம் தொங்க விட்டதில் மகிழ்கிறேன். இந்தச் சூது மதியாளர்களைத் தகுந்த அழகியல் மொழி நடையில் எதிர் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

  காமராசரைத் தாக்கிச் சற்றொப்ப ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் பூங்குன்றனார் பதிப்பித்துள்ள திராவிட பிளாக்குகள் மற்றும் தனித்தமிழ் ட்வீட்டுகளுக்குப் பூவண்ணன் அவர்கள் லிங்கு கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.

 31. Anonymous Says:

  ஐயா நீங்கள் இப்படி எல்லாம் எழுதி மதிப்பு மிகுந்த ஒருவரை தாழ்த்தி எழுதி இருக்கீங்க இது மிகவும் தவறான அணுகுமுறை.

 32. ரா ஜ் கண்ணன் Says:

  ஐயா நீங்கள் இப்படி எல்லாம் எழுதி மதிப்பு மிகுந்த ஒருவரை தாழ்த்தி எழுதி இருக்கீங்க இது மிகவும் தவறான அணுகுமுறை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s