இது இவ்வரிசையில் கடைசி பதிவு. (அப்பாடா!)

நீங்கள் இதற்கு முந்தைய இரு பதிவுகளைப் படித்தால் இப்பதிவு புரியக் கூடும்…

… இந்த இரு பிரிவுகள் 1 ) சிந்திக்கும் திறனற்ற வெள்ளைக்கார  மனம் கொண்ட படித்த  மௌடீகர்கள் 2 ) சிந்திக்கும் திறனற்ற படிக்காத கிணற்றுத் தவளைகள்…

இவை தவிர பெரும்பாலோர் மூன்றாம் பிரிவினர் – இந்த, மிகுந்த, மிக்க பெரும் பெரும்பான்மையான மற்றவர்களுக்கு – எந்த விஷயத்தில் அசிரத்தையும், சோம்பேறித் தனமும்… இவர்களைப் பெருமளவும் மந்தை மனப்பான்மை கொண்டவர் எனச் சொல்லலாமோ?

சில சமயங்கள் யோசிக்கிறேன் – இம்மூன்று பிரிவுகள் தானா உள்ளன, இருந்தன நம் நாட்டில்? இந்த, அடுத்த தலைமுறைகளில் தமிழகத்து / இந்திய அதிகார மையங்களில், காவல்-நீதித்  தளங்களில், கல்வியறிவூட்டுதலில், நெறிப் படுத்தல்களில், அரசியல் தளங்களில், தொழில்முனைவோர்களில், விவசாயிகளில்,  கலை-இலக்கியம்-தத்துவம் சார்ந்து பணியாற்றியவர்களில், பணியாற்றுவோர்களில் நேர்மையாளர்களுக்கு, தகுதி வாய்ந்தவர்களுக்கு இடமே இருந்ததில்லையா? கிடையாதா?

நல்லவேளை – ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் – நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய மனிதர்கள் இன்னமும் இருக்கின்றனர்.  மிகுந்த முனைப்போடு அவர்கள், ஆரவாரமில்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த நம்பிக்கை தரும் விஷயமல்லவா இது!

உண்மையிலேயே நாம் மிகவும் பாக்கியசாலிகள்.

ஆம். மேற்கண்ட, பெரும்பாலும் பொருட்படுத்தவேண்டாத இம்மூன்று பிரிவுகளைத் தவிர ஒரு நான்காம் பிரிவினர் ஆனால், மிக மிகக் குறைந்த அளவில் உள்ளனர், இருந்தனர்  – இவர்கள் உண்மையான அறிவு ஜீவிகள். கர்மயோகிகள். ஞான யோகிகள்.நேர்மையாளர்கள். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்கள். சிரத்தை மிக்கவர்கள். தளரா முனைப்பு கொண்டவரகள். நுண்மான் நுழைபுலம் கண்டறிந்தவர்கள். இவர்களில் பலர் நமக்கு அறிமுகம் அற்றவர்களாக இருக்கலாம். நிறைய எழுதாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள், ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் ஒத்திசைவு உடையவர்கள்.

திரு தரம்பால் (வரலாற்றியலாளர்), திரு டி ஆர் நாகராஜ் (சமூக, அரசியல், இலக்கிய சார்பில் – ஆழ்ந்த அற்புதமான கருத்துகள் கொண்டவர், காந்தி-அம்பேத்கர் உரையாடலாளர், கர்நாடகத்தைச் சார்ந்தவர்), முனைவர் சி வி சேஷாத்ரி (விஞ்ஞானி, சமூகவியலாளர்), திரு சங்கர் குஹா நியோகி (சத்தீஸ்கட் மக்கள் தலைவர்), முனைவர் லக்ஷ்மி தாத்தாச்சார் (சம்ஸ்க்ரித, அறிவியல், விவசாய ஆராய்ச்சியாளர்), திரு நரேந்திரநாத் நாயுடு (மக்கள் தலைவர், காந்தியவாதி, சித்தூர், ஆந்திரம் – இவர் நம் ‘மோகமுள்’ தி ஜானகிராமனின் மருமகனும் கூட) –  மற்றும் பலர் இம்மாதிரியினர்.

இவர்களை நான் பலகாலம் படித்து, பின் அறிந்து சிறிதளவு பழக நேர்ந்தது – யாம் பெற்ற பேறு தான்!  (இவர்களில் தாத்தாச்சார் தவிர யாரும் உயிருடன் இல்லை, இப்பொழுது)

இத்தலைமுறையினர்களில் – மாதிரிக்கு ‘முன்றில்’ மகாதேவன் அவர்களை (குறைந்த பட்சம் ஒரு ‘உலகத் தரம்’ வாய்ந்த அற்புதமான சிறுகதையை எழுதிய, நம்முடைய  மா அரங்கநாதன் அவர்களின் மகன் இவர் – அரங்கநாதன் அவர்களும் கொண்டாடப் பட வேண்டியவர் தான்! முன்றில் – ஆம். அதே ‘அணிலாடு முன்றில்’ வழியாகப் பெயர் வைக்கப் பட்டது தான் – சற்றொப்ப 20 ஆண்டுகட்கு முன் உலா வந்த ஓர் அழகான இலக்கியச் சிறு பத்திரிக்கையும் கூட, இப்பெயரில் மாம்பலம் ரங்கநாதன் தெருவில், மகாதேவனின் ஒரு புத்தக விற்பனை நிலையம் கூட இயங்கி வந்தது) எடுத்துக் கொள்ளுங்கள்.  80களில்   90களில் இவர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த முனைப்புடன் செயல் பட்டார். இப்போது விற்பனை வரி தொடர்பான வழக்குரைஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக உள்ளார் சென்னையில்; இவரால் நம் தமிழக அரசுக் கருவூலத்துக்கு வந்துள்ள வரவு குறிப்பிடத் தக்கது – இவர் போன்றோர், சான்றோர்,  நீதிபதிகளாக முடிந்தால் சென்னை உயர் நீதி மன்றம் நிச்சயம் இன்னமும் உயர்வும் பெருமையும் பெறும்.

இன்னொருவர் இரா சாயிநாத் அவர்கள்.  இவர் சிறு வயதில் மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்து தன் தளரா முயற்சியாலும், விடாவுழைப்பினாலும், அறிவு கூர்மையினாலும் மிகவும் முன்னேறியவர், பண்பாளர். இப்போது லண்டனில் வாழ்ந்தது கொண்டிருக்கிறார் – பல சிறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பல விதங்களில் உதவி செய்து வருகிறார்; கணையாழி பத்திரிகை நடத்திய ‘தி ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’யில் 80களில் –  இவருடைய குறுநாவலும் வந்தது – தலைப்பு ஞாபகம் இல்லை.

இன்னும் பலர் இந்த நான்காம் வர்ணத்தில், பிரிவில் உள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிப் பின்னொரு காலத்தில் பார்க்கலாம்…

<… உங்களுக்கு ஆதர்சமானவர்களை, ஆத்மார்த்தமானவர்களை,  நண்பர்களை – பெயர், குணாதிசியங்களோடு   இங்கே நிரப்பிக் கொள்ளலாம்...>

=-=-=-=

மறுபடியும், மேற்கண்ட எளிமைப் படுத்தப் பட்ட நான்கு ‘வர்ண’ங்களுக்கு, புள்ளியியல்ரீதியாக(!) வருவோம்.

நான்காம் வர்ணத்தைச் சார்ந்தவர்கள், மகத்தானவர்கள் மிகக் குறைவு.

மூன்றாம் வர்ணத்தவர் மந்தை சார்பினர் – நம் மக்களின் மிகப் பெரும்பான்மையினர்.

இரண்டாம், முதலாம் வர்ணத்தினர்  பளிச்சென்று முத்திரைகளுடன் தெரிபவர்கள், பவனி வருபவர்கள். ஒதுக்கித் தள்ளப் படவேண்டியவர்கள் என்றாலும், இவர்கள் சார்பினர் தாம் மிக அதிக அளவில் நம் சூழலில், போலி அறிவுத் தளத்தில் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு சிறுவனுக்கு, முதிரா இளைஞனுக்கு, வாழ்க்கை அனுபவங்கள் குறைந்தவனுக்கு — ஏதோ ஒரு விதத்தில், இடதுசாரி – வலதுசாரி – பூசாரி / பிற்போக்கு – முற்போக்கு – வயிற்றுப் போக்கு / பாட்டாளி – முதலாளி – சீக்காளி / மேல் – கீழ் – நடு  / இலக்கியம் – அலக்கியம் / கவிதை – கிவிதை / … போன்ற இலகுவில் வசப் படும் படிமானங்கள், சுலபமான முத்திரை குத்தல்கள் – அவை சார்ந்த எண்ணங்கள், பல பரிமாணங்களற்ற, கவைக்குதவாத   தட்டையான போக்குகள் போன்றவை தான் சாஸ்வதம்.

இதில் சிறிது விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால்- நம் இளைஞர்களில் பெரும்பாலோருக்கு இந்த நான்காம் வர்ணத்தவர் கிடைப்பது மிக மிக அதிசயம்…

ஆனால் இந்தப் போக்கையும் மீறி நான்காம் வர்ணத்தவரை நான் அப்போது அடைந்தது என் பாக்கியம் தான் எனச் சொல்லவேண்டும்.

=-=-=-=

இப்போது நாம் முதலாம் வர்ணத்திற்கு – எப்படி நான் போய்ச் சேர்ந்தேன் என்பதை நோக்கி மறுபடியும் வருவோம்:

… சோவியத் யூனியன், சீனா பதிப்பித்த பல்வேறு புத்தகங்களும் – பொதுவாக, இவை பொது உடைமை பற்றியவை – என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. மாக்சிம் கார்கி-யின் தாய், ஜூலிஸ் புசிக்-கின் ‘தூக்கு மேடைக் குறிப்புக்கள்’ போன்ற புத்தகங்கள்,  மேலும் – ராகுல் சாங்க்ருத்யாயன், ஷிப்தாஸ் கோஷ், சாரு மசூம்தார், கோசம்பி, கோவிந்தன் (கடைசி இருவரை இன்னமும் நான் மதிக்கிறேன்) போன்றவர்களின் பெரும்பாலும் எளிமைப் படுத்தப் பட்ட, வசீகரக்  கருத்தாக்கங்கள்,  இந்தியப் பாரம்பரியத்தை மிகவும் சாராத போக்குகள் –  என் மனதை, கற்பனையைக் கவர்ந்திருந்தன..

ஆனால், நல்ல வேளையாக 19 வயது வாக்கில், திராவிட மாயையிலிருந்து, பிரிவினைக் கோட்பாடுகளில் இருந்து – ஏற்கெனவே விடுபட்டிருந்தேன். பின்னோக்கி யோசித்துப் பார்த்தால், எனக்கு இது கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கிறது. எந்த சுய சிந்தனையுள்ள மனிதனும் – அவனிடம் (அல்லது அவளிடம்) அடிப்படை நேர்மையிருந்தால்,  இதில் இருந்து மீள்வது எளிது.

ஏனெனில், இம்மாயை, திராவிட மாயை – பொய்களினால், காலி அட்டைப் பெட்டிகளினால் அடிப்படைக் கட்டுமானம் செய்யப் பட்டது.

=-=-=-=

ஆனால், சுமார் 25 வயது வாக்கில்தான் ‘பொதுவுடைமை’ (கம்யூனிசம், மார்க்சியம்) மாயையிலிருந்தும் என்னால் விடுபட முடிந்தது. ஏனெனில்  ‘பொதுவுடைமை’ என்பது ஒரு மாயக் கண்ணாடி – இப்படித்தான் வாழ்க்கை, இதுதான் புரட்சி, இப்படித் தான் அதனை வென்றெடுக்க வேண்டும் என்று ஒரு சுலபமான வாழ்க்கைப் பாதையைக் காண்பிக்கிறது, இது.

மனிதர்களை விட்டு, மனித நேயத்தை விட்டு – என்னவோ means of production, relations of production என்று அறிவியல் பூர்வமாகச் சிந்திப்பதாக பாவனை செய்வது – ஆனால் நடைமுறையில் தாங்கொண்ணா வன்முறை தான் இதற்குத் தெரியும். கருத்தியல் சார்ந்த வன்முறைகளைக் கூட (‘பேச்சில் பலாத்காரம், கருத்துலகக் கோழைகளின் கடைசி ஆயுதம்’) நாம் ஓரளவாவது நாம் ஒப்புக் கொள்ளலாம் – ஆனால் நம் மக்களை – நம் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை  – அழித்தொழிப்பது, புரட்சிக்கு ஒரு வழி  அல்ல என்பது சில காலமாவது இயக்கங்களுடன் பரிச்சயம் இருந்தால் தான் தெளிவு படும்.

ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்த வேண்டும்: கோழைத்தனமான வன்முறை  தவிர்த்த – மனிதாபிமானமிக்க் மார்க்சியத்துக்கு (‘இந்தியம்’ படுத்தப் பட்ட மார்க்சியம் என்று இதனைச் சொல்லலாமோ என்னவோ!) தங்களை அர்ப்பணிப்பு செய்த நேர்மையாளர்களும் தமிழ் சூழலில் இருந்தனர், இருக்கின்றனர் – என்  மதிப்புக்குரிய  ‘நிகழ்’ ஞானி போல, எஸ் என் நாகராஜன் போல. ஆனால் அவர்களைப் பற்றி நான் பேசவில்லை.

இங்கும் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும்: நான் தமிழகத்துப் புரட்சிக் கனல்களுடன் அபரிமிதமாகப் பழகியவன் அல்லன். ஆனால் கேடயம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், மனஓசை போன்ற பத்திரிகைகள் மூலமும், இவர்களுடைய ‘கட்சித் திட்டங்கள்’ மூலமும் இவர்களை அறிய முயன்றேன்; சில காரணங்களால், சிலரை நேரடியாக அறிந்திருந்தேன் – அவ்வளவே!

அதில் ஒருவர் 1980-களில் ‘ராஜீவ் காந்தியைக் கொல்லுவோம்’ என்று பாண்டிச்சேரியில் வீராவேச சுவரொட்டி ஒட்டி, பின்னர் காவல் துறையினரால் பிடிக்கப் பட்ட பிறகு குய்யோ முறையோ என்று அழுது, பின் ‘நான் பிள்ளைக் குட்டிக்காரன்’ என்று பிலாக்கணம் வைத்து, நான் ஒரு ‘பொதுவுடைமை செய்யப்பட்ட வங்கியில் பணி புரிபவன்’ என்று தனது ‘மரியாதைக்குரிய’ தகுதிகளை முன் வைத்து  – பின், சில  INTUC தோழர்களால் மனிதாபிமானம் கருதி விடுவிக்கப் பட்டது ஒரு நகைச்சுவை. ஆனால் இம்மாதிரி ஆட்களின் பின்னாலும் தோழர் தோழர் என்று சில வெள்ளந்தி இளைஞர்களும் அலைந்து கொண்டிருந்தனர். தீவிர இடதுசாரி இளைஞர்கள் படிப்பறிவு, யோசிக்கும் முனைப்பு, செயல் திறம் உடையவர்கள் என்று நான் அதுகாறும் நம்பி வந்தது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நான் அப்போது தான் அறிந்தேன்.

இந்த இயக்கங்கள் சார்ந்த சிலர் நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம். தைரியமானவர்களாக இருந்திருக்கவும் கூடும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் மிகப் பலர் மிக சொகுசான அரசுப் பணிகளில் இருந்துகொண்டு – அரசு வன்முறை, தரகு முதலாளித்துவம், பூர்ஷ்வா என்று வெட்டிப் பேச்சு, புரட்சிகரக் கோழைத்தனம் பேசுபவர்கள் தான்.

=-=-=-=-=

அப்போது, நடு 1980-களில் என்பதாக ஞாபகம் – மத்திய இந்தியாவின் மா-லே கண்ணர்களுடன் தான் என்னுடைய தொடர்புகள் இருந்தன – அக்காலத்தை நினைக்கும்போது – அப்போது தமிழகத்தில் இருந்த சுமார் சில நூறுகளில் இருந்த புரட்சிப் புயல் மா-லே க்களில் – மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி, மக்கள் யுத்தம் என ஆயிரமாயிரம்  பிரிவுகள், ஒருவருக்கொருவர் வசவுகள், புலம்பல்கள், புரட்சிகர புழுதி வாரி இரைத்தல்கள் !

சுமார் பத்து வருடங்கட்குள் – பல விதமான, நிறமான அனுபவங்கள் – சேவைகள், அர்ப்பணிப்புகள், துரோகங்கள், அடி-உதைகள், பொச்சரிப்புக்கள், குடுமிப் பிடிச் சண்டைகள், அபாண்டங்கள், கொலைகள் – சம்பந்தப் பட்ட பல விஷயங்கள்… நிற்க,  கொலைகளை நான் செய்யவில்லை – ஆனால் இவை இயக்கக் கோழைத்தோழர்கள், மற்றத் தோழர்களுக்குச் செய்தவை அல்லது ‘வர்க்க எதிரி’களுக்குச் செய்தவை.

எனக்கு நினைவு இருக்கும்படி – அக்காலத்தில் தண்டகாரண்ய பிரிவுகள் இப்படி வெட்டி வீரம் சார்ந்தவையாக இருந்திருக்க வில்லை. ஆனால் சொல்லொண்ணா வன்முறையில் திளைத்திருந்தவை தான் அவை என்பதில் சந்தேகமே இல்லை.

கனவுகள் பகற்கனவுகளானது, அவர்களை சரியான பின்னணியில் புரிந்து கொள்ள முனைந்தது  என்னுடைய பரிணாம வளர்ச்சி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல….

=-=-=-=-=

எது எப்படியோ – சுமார் 25 வயது வாக்கில், 1988-90ல் முழித்துக் கொண்டு,  மலங்க மலங்க நான் விழித்துக் கொண்டதற்கு – மிகப் பல காரணங்கள்  –  திராவிடத் தலைவர்கள் பால் மிகுந்த சோர்வு கலந்த அருவருப்பு ஏற்பட்டதும், மார்க்சிய-லெனினிய இயக்கங்களை பெரும்பாலும் வெறும் பொறுக்கித்தனம் / வன்முறை சார்  குழுக்களாக நான் பார்க்க ஆரம்பித்ததும்  – மிக முக்கியமாக, படிப்பு (பொருளாதார, சமூகமானுடவியல், வரலாறு, அரசியல்  சார்ந்தவை), வாழ்க்கை அனுபவ தளங்கள் விரிந்ததும் காரணங்கள். போற்றத்தக்க தரம்பால் அவர்களிடம் சிறிது கூடப் பழக முடிந்ததும் என் பாக்கியம். ஜோசப் கொர்நீலியஸ் குமரப்பாவும், வென்டெல் பெர்ரியும். ஜோசப் கேம்ப்பெல்லும்  கூட மிகுந்த உதவி செய்தனர்… எண்ணிறந்த எழுத்தாளர்களுக்கு, நபர்களுக்கு,  நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்..

காந்தி தொடர்பான பயணங்கள், க்ஷேத்திராடனங்கள், படிப்பு, தொழில், தோட்டம் என்று சில சுற்றுக்கள் சுற்றியிருக்கிறேன். பல விஷயங்கள் செய்ய முயன்றிருக்கிறேன்… சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்றாலும்…

பின் காந்தியின் கோட்பாடுகளின் ஒன்றான தர்மகர்த்தா முறையில் (trusteeship) – சில காலத்திற்கேற்ற மாற்றங்கள்(!) செய்து சில சிறு தொழிற்சாலைகளை நிறுவினேன்  – சில நண்பர்களுடன் (பாவம், அவர்கள்!) சேர்ந்து கொண்டு. இதில் மிகச்சில சிறு வெற்றிகள் – பல பெரும் தோல்விகள். அவமானங்கள். ஆனால் மிகப் பல படிப்பினைகள்.

எப்படியோ, நல்லபடியாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இப்போதும்  என் பார்வைகள், நோக்கங்கள் மிகவும் விரிந்து விட்டவை என நான் சொல்லவில்லை – பொய்களின் கட்டுமானங்களில் இருந்து உண்மையை நோக்கிச் செல்ல முயல்கிறேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமோ என்னவோ…

=-=-=-=

எது எப்படியோ – கருணாநிதி போன்ற உதிரி நகைச்சுவைகளைப் பற்றி மட்டும் எவ்வளவு நாள் எழுதிக் கொண்டே இருப்பது?

எவ்வளவோ அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன அன்றோ…

ஆக, நேரம் கிடைக்கும் போது நான், என் அறிவுக்கு எட்டிய வகையில், நம் காந்தி பற்றி மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழி பெயர்ப்புகளாகவே இருக்கும் என நினைக்கிறேன்…

காந்தியாயணம்…

ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரகிறது…)

சிறிது அசை போட்டுப் பார்த்தால் – அக்காலத்திலும் இக்காலத்திலும் – மிகப் பல இளைஞர்கள் – பல தரப் பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளாகவே  (குறிப்பிட்ட தத்துவங்களுக்கும், நிலைப்பாடுகளுக்கும், அரசியல்-சமூகக் குறியீடுகளுக்கும்) நிலைத்து விடுவது ஒரு சாதாரணமான, வாடிக்கையான விஷயமே… இதில் விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இம்முதிரா இளமை உணர்ச்சிக் குவியல்களுக்குள் இருந்து மீண்டு வெளிவர, விடுபட முடிவதே இல்லை…

ஏனெனில், படிப்பறிவு மட்டும் போதாது – நிறைந்த, பலவகைப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் வேண்டும் நம் இளைஞர்களுக்கு.

பளிச்சிடும் நேர்மையுள்ள பண்பட்டவர்களின், புடம் போடப் பட்டவர்களின், அதாவது குருக்களின் சகவாசம் வேண்டும், அவர்களை மேன்மேலும் மெருகேற்ற, அந்த குருக்கள் ஞானிகளாக இருக்க வேண்டும்,

அவ்விளைஞர்களுக்கு நுண்மான் நுழைபுலம் அறியும் – பண்பட்ட அறிவும், சாதனையும் வேண்டும். ஆத்மார்த்தமான, நேர்மையான, அனுபவபூர்வமான சிந்தனைகளை மெய் வருத்தக் கூலியாக மட்டுமே  பெற்றுக் கொள்ளும் மனோ திடம் வேண்டும். தோல்வி கண்டு துவளாத திரும்பி எழும் (சுந்தர ராமசாமியின் சவால்  கவிதை போல) மனப்பான்மையும் கற்றுக் கொள்ளப் பட வேண்டும். சுய பச்சாத்தாபம் அற்ற சுய பரிசோதனை மூலம் தங்கள் ஆன்மாவை மீட்டெடுக்க முடியவேண்டும்…

இப்படிப்பட்ட சூழல் ஒரு தமிழ் இளைஞனுக்கு அரிதாகவே கிடைப்பது நம் பழ வினைப் பயன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…

=-=-=-=

வெட்கக் கேடான இத்தேக்கத்துக்கு, இம்மனப்பான்மைக்கு, இப்போக்குக்கு  – என்னைப் பொறுத்தவரை – ஒரு முக்கிய காரணம்: எங்களுடைய வட்டார தமிழ் நூல் நிலையங்களிலும், மெத்தப் ‘படித்த’ பெரியவர்களிடமும் ஒரு தலைப் பட்சமான, நம் பண்பாட்டை நினைத்தாலே வெட்கித் தலை குனிய வேண்டிய, குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய புத்தகங்களும், கருத்துகளும், எண்ணக் குவியல்களும் தான் இருந்தன.

அவர்களுக்கு இந்தியா ‘தேசிய இனங்களின் சிறைக் கூடம்’ – காந்தி ஒரு காந்தியார் – புரட்சி இதோ வந்து கொண்டிருக்கிறது – அட, இதோ வந்தே விட்டது –  நம் பாரம்பரியம் ஒரு கவைக்குதவாத ஒன்று – இந்து மதம் குப்பை – ‘மதச்சார்பின்மை’ தான் கடவுள் – வெள்ளைக்காரன் (அவன் மார்க்ஸ் ஆக இருக்கலாம், க்ராம்ஷியாக இருக்கலாம், ஏன்,  அவர்கள்  நம்முடைய – எம் என்  ராய்-ஆகவோ தர்மா தத் கோசம்பியாகவோ கூட இருக்கலாம். ரோமிளா தாபராகக் கூட இருக்கலாம். அவர்கள் தான் ‘வசிஷ்டர்கள்’ அவர்கள் வாயால் புகழப் பட்டால் சொர்க்கம் கிடைத்தது போல் – அவர்கள் இகழ்ந்தால், அப்படி இகழப்பட்டதற்கு அது நிச்சயம் வேண்டியதே) என்ன உளறினாலும் அவர்கள்  சொல்வது எல்லாம் சரி, அவர்கள் தான் ‘அறிவியல்’ பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கக் கூடியவர்கள்.

ஆக, அவர்களோ பரிணாம வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பிலிருந்து நமக்கு வெவ்வெவ்வே என்று அனைத்துப் பரிமாணங்களிலும் ‘அழகு’ காட்டிக் கொண்டிருக்கின்றனர். நாமோ – அறியாமையிலும், பல கோடி கடவுட்களைப் பிடித்துக் கொண்டும், மோட்சத்தை விரும்பிக் கொண்டும், ஜாதிகளை மாட்டிக் கொண்டும்,  கீழ்மை நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக  உழல்பவர்கள். நாம் ‘கஞ்சி குடிப்பதற்கிலர், அதன் காரணமும் அறிகிலர்.’   நாம் அடிப்படையில் முட்டாள்கள். ஆகவே நமக்கு வெள்ளைக்கார, மேலை நாட்டு ஞானமும் அவர்களின், அவர்கள் சார்ந்த  உள்நாட்டு மேட்டிமைவாதிகளின் உதவியும் மிக முக்கியம். இவை மட்டுமே முக்கியம்…

… இன்ன பிற இப்படிப்பட்ட மனப் பிரமைகள், பிறழ்வுகள் நமக்கு…

வெள்ளைக்காரன் நமக்குச் சொல்வதை, சொல்ல நினைப்பதை, சொல்லக் கூடுவதை, நம்மூர் அசல் அக்மார்க் தேங்காய்க் கொட்டைகள் (இவர்கள் வெளியே தோல் நிறம் நம்மைப் போல பழுப்பாக, கருப்பாக அழகாக இருந்தாலும், உள்ளே அழுக்கான வெள்ளை எண்ணங்கள் தான்) அவற்றை வழிமொழிந்து நமக்கு மேலும் கோனார் உரை எழுதுவது – நம்முடைய ‘தி இந்து’ தினசரியிலிருந்து கலைஞர் டிவி வரை, இன்று வரை, தொடர்கிறது… இந்த போக்கு, பல தளங்களில் நிலவுகிறது – இலக்கியமானாலும் சரி அறிவியலானாலும் சரி. (இந்நிலையில் சில குறிப்பிடத்தக்க விதிவிலககுகள் இருந்தன அன்று – இருக்கின்றன இன்று என்பது சந்தோஷம் தரக் கூடிய விஷயம்.)

=-=-=-=

… இந்த வெள்ளைக்கார இளக்கார மனம்  சார்ந்து இயங்கும் அட்டை மனிதர்களூடே, தேங்காய்க் கொட்டைகளினூடே     ஒரு இளம் மனம் இயங்கினால் அதற்கு வினவு  போன்ற இத்தியாதிகள் தவிர விடிமோட்சமே இல்லை.

புரட்சிகரமான கரமைதுனம் தான் அவன் வாழ்நாளில் அடையக் கூடிய உச்ச கட்ட விஉந்து சக்தி.  (ஆனால்,  சிறிது யோசித்தால், கரமைதுனம் நம் வாழ்வில், இயல்பில், இனக்கவர்ச்சி-உளவியலில், நமது உந்துதல்களில்  ஒரு அங்கம் தான், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது தான்… ஆனால், புரட்சி அப்படியல்ல)

மிஞ்சி மிஞ்சிப் போனால் அவன் திரிபுவாதி / எதிர்ப்புரட்சியாளன் / வர்க்கஎதிரி / போலீஸ் நாய் / இன எதிரி / காடை / குள்ளநரி / சதிகாரன் / இயக்கத் துரோகி  என்று ஏதாவது சொல்லி, பொய்மை பரப்பி –  தன் சுயநல வாயில் நுரை தள்ள  மற்றவர்களைக்  கொல்லலாம் (கிஷேன்ஜி, ‘புலி’ பிரபாகரன் போல). மற்றவர்களால் கொல்லப் படலாம் (கிஷேன்ஜி,  ‘புலி’ பிரபாகரன் போல).

பின்னதில் நாம் அவர்கள் ‘வீர மரணம்’ அடைந்தனர் என்று சந்தோஷப் படலாம். நம் புல்லரிப்புகளுக்கும், புரட்சிகர முதுகு சொரிதல்களுக்கும், அதன் லாகிரிக்கும் கேட்பானேன்?

=-=-=-=-=

நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்…

எது எப்படியோ…  பிற்காலத்தில் தான் தெரிய வந்தது – மேற்கண்டவர்கள் தான் (மக்காலே முதல் துப்வா ஈறாக –  முந்தைய இடுகையைப் பார்க்கவும்) இந்த ‘திராவிட மாயையை’ உருவாக்கம் செய்தவர்கள் என்பது. இவர்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை – பிரித்தாளும் சூழ்ச்சியும், மத மாற்றமும், பொருளாதாரச் சுருட்டலும்  –  மிகமிக முக்கியமாக – கலாச்சார, ஆன்மிகச் சுரண்டலும் தான் — என்பதும் கூட!

மார்க்ஸ், மார்க்சீயம் – அதன் நவீனச் சிந்தனைகள் பற்றி மேலும் படித்து, சிலபல தோழர்களுடன் உழன்ற பின் தான், சிலபல போராட்டங்கள், எழுச்சிகள்-வீழ்ச்சிகள், வலிகள், பொய்மைகள் கண்ட பின் தான் – மார்க்சீயத்தில் மெய்ஞானத்துக்கு, சமரசத்துக்கு, அன்புக்கு –  முக்கியமாக, சுத்த சோஷலிச சன்மார்க்க சத்திய  முன்னேற்றத்துக்கு –  இடமில்லை என்பதும் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்… (ஆனால் என் பெருமதிப்புக்குரிய சிலர் இன்னமும் ‘இயக்கங்களில்,’  இயக்கங்களுக்கு வெளியில் இருக்கின்றனர்; அவர்கள் என் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் என்பதையும், நான் புரிந்து கொள்ள முடிகிறது)

=-=-=-=

அக்காலத்தில் மற்றும் சிலர் இருந்தார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள்  – ஆனால் அவர்கள் மற்றோர் எல்லையில் –  பொறுக்க முடியாத மௌடீகத்தில் – ஆழ்ந்து இருந்தனர் / இருக்கிறார்கள். இவர்களுடையது உப்பு சப்பில்லாத வைதீகம் என சொல்லலாமா? அல்லது வறட்டு வேதாந்தம் என்று சொல்லலாமா? (வைதீகமும் வேதாந்தமும் மிக முக்கியமானவை ஆனால் சரியாகப் புரிந்துகொள்ளப் படாதவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் – நான் இங்கு சொல்லவந்தது பொதுவான, சப்பிய மாங்கொட்டை போன்ற சொல்லாடல்கள் பற்றி)

‘அகில புவனத்துக்கும் தாய் மொழி சம்ஸ்கிருதம் ‘  அல்லது ‘ஜெர்மன் காரன் ராக்கெட் ரகசியத்தை இந்தியாவிலிருந்து தான் திருடினான்’ அல்லது ‘லெமுரியாதான் முதல் கண்டம். உலகின் முதல் மொழி தமிழ் தான்’  அல்லது ‘நடிகர் திலகம்  /  புர்ச்சித் தலைவர் / ரஜினி  / கமல் / …. / …. போல நடிப்பவர் உலகத்தில் யார் உளர்’  அல்லது ‘முதல் குரங்கு திராவிடக் குரங்கு’  அல்லது ‘வால்ட் விட்மனும் பாரதிதாசனும்,’ அல்லது ‘சங்க இலக்கியத்தில் கணினிசார் குழுஊக்குறி’ – போன்ற கவைக்குதவாத தவறான,  நகைச்சுவைச் செய்திகள் தான் இவர்கள் வாழ்க்கையில் உச்சகட்டப் புல்லரிப்பு.

இவர்களில் – இந்த இரண்டாம் வகையின் பெரும்பாலோருக்கு –  ‘வெள்ளைக்காரப் படிப்பறிவு’ குறைவு; உலக ஞானமும் பெற வாய்ப்புகள் குறைவு..  அரவிந்தனின் எலிப்பத்தாயம் (எலிப்பொறி) கதாநாயகன் போல – இவர்களுக்கும் விடிவே இல்லை.

(தொடரும்… )

காந்தியாயணம்…

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களைப் பற்றி – அவரின் ஞான, கர்ம, பக்திக் கீற்றுகளை ஓரளவாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வது, அவருடைய பல் வேறு விதமான ஆச்சரியப்பட வைக்கும் ஆளுமைகளை அவதானிப்பது, அவரால் எப்படி மிகப் பல விஷயங்களைச் செய்ய முடிந்தது – தன்னலம் கருதா தூய அறம் சார்ந்து – ஆன்மாவிலிருந்து அறிவியல் ஊடாக அஹிம்சை வழியில் அரசியலை நோக்கி, ஒவ்வொரு விஷயத்திலும் – அது உணவானாலும் சரி, நுண்நோக்கியானாலும் சரி, விரதமானாலும் சரி, நேரம் தவறாது இருத்தலும் சரி, பிறர் மலம் அகற்றி துப்புரவாக்குவதானாலும் சரி – உன்னதத்தை நோக்கி பயணம் செய்பவராக இருந்து, பளிச்சிடும் நேர்மையுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க முடிந்தது, அவர் எப்படி எப்போதுமே ஒரு மகத்தான செயல் வீரராக இருந்திருக்கிறார் என்று தியானம் செய்வது, அவரால் தூர் வாரப்பட்டு, வெளிச்சம் காட்டப்பட்டு, வாழ வைக்கப் பட்ட இந்தியப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளைப் பற்றிச் சிந்திப்பது – பல காலமாக எனக்கு கனவுக்கும் நனவுக்கும் இடையே உள்ள கலங்கிய, போதை கொண்ட எண்ணப் பரப்பில் இருந்திருக்கிறது.

ஆக, நான் ஒரு காந்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள நினைக்கும் மாணாக்கன் தான் என்பதில் மெய்யாலுமே பெருமையடைகிறேன்.

=-=-=-=

ஆனால், நான் சிறிதளவு வெட்கத்துடன் ஆனால் நிறைந்த துக்கத்துடன் இதனைச் சொல்ல வேண்டும்:

சிறு வயதில் – இளம் வயதில், என் 20களின் ஆரம்பங்கள் வரை   –  நானும் காந்தி அவர்களை காந்தியார் என்று சொல்லும் கும்பலின் சகவாசத்தில் இருந்தவன் தான். கண்மூடித்தனமாக கம்யூனிசத்தையும், திராவிட இயக்கத்தையும் ஆதரித்தவன் தான். ஈவே ராமசாமி அவர்களைப் பெரியார் என்று, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவும் பூஜித்தவன் தான்.

வாய்ப் பேச்சு வெட்டிவீரர்களை, புரட்டாளர்களை, புரட்டு வாதிகளை – புரட்சியாளர்கள் என்று கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தவன் தான்…

ஜாதி பற்றிய புரிதலோ, இந்து மதம் (அல்லது எந்த மதம் பற்றியும்) பற்றிய அடிப்படை அல்லது அனுபவ அறிவோ இல்லாமல், கடன் வாங்கப் பட்ட கோட்பாடுகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டிருந்தவன் தான். ஒரே புரட்சி தான். ஒரே புல்லரிப்பு. வினவு வினவு என்று ஒரே வினவு, என்ன சொல்ல அந்த வெட்கக் கேட்டைப் பற்றி!

தாமஸ் பபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay), வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), மாக்ஸ்ம்யுல்லர் (Max Müller), வில்லியம் ஜோன்ஸ் (William Jones – ஆசியாடிக் ஸோசைடி, கல்கத்தா – இவர் செய்த குழப்படியும் அறிவுஜீவிய துரோகமும் தான், மிகப் பல பார்வைகளில், புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகமான-பார்வையான, பரவலாக அறியப் படாததான, மனு நீதி – மனு ஸ்ம்ரிதி – இந்து மதத்தின் ஆணிவேறாகக் கருதப் படக் காரணம்) – ஜியார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope), ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ‘வீரமாமுனிவர்’ கான்ஸ்டன்ஸோ பெஷி (Constanzo Beschi), ழான் அந்த்வான் துப்வா (Jean-Antoine Dubois – இவர் – ‘அப்பே துபொய்’ என்று அறியப் பட்டு 1800-1823 வருடங்களில் மைசூர் சுற்றுப் புறங்களில் கிறித்துவ மதமாற்றம் செய்தவர் – மகத்தான கருத்தியல், இறையியல் மோசடிகள் பல செய்தவர்) போன்ற போலிப் பாதிரிகள் – போன்ற இத்தியாதிகள் மூலம் மட்டுமே இந்தியாவை, என்னுடைய சிறு வயதில், இளமையில் அறிந்திருந்தேன்… (பராசக்தி போன்ற ஒரு மலினமான பிரச்சாரப் படத்தை, ஒரு முறை கூடப்  பார்க்காமல் அதன் வசனங்கள் அத்துப் படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அடுக்கு மொழி பொறுக்கி நடைக்குத் தான் இதெல்லாம் சாத்தியம்.)

இவை தவிர மார்சிய லெனினிய வெள்ளீய காரீய புத்தகங்கள் வேறு. – ஹெகேலில், மார்க்சிலிருந்து மாவோ வழியாக மார்குசே வரை ஏட்டுச் சுரைக்காயத்தனமாக கரைத்துக் குடித்து தள்ளாடிக் கொண்டிருந்தேன்… பின் சில பல வருடங்களுக்கு ‘இயங்கிக்’ கொண்டிருந்தவனும் கூட… (நல்ல வேளை – அப்போது ஜார்கண்டிலும், சத்தீஸ்கட்டிலும் சமீபத்தில் கொல்லப்பட்ட கிஷேன்ஜி  போன்றவர்கள் இல்லை – அவ்வளவு வாயோர நுரை தள்ளியவர்கள், அயோக்கியத் தனம் நிரம்பியவர்கள், எனக்குத் தெரிந்த வரை அப்போது ‘இயக்கங்களில்’ இல்லை)

=-=-=-=

ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரும்)

காந்தியாயணம்…

வர வர செய்தித்தாள் எதுவுமே படிப்பதில்லை என்கிற கங்கணம்.

விதி விளக்காக, கார்த்திகைக்கு ஓர் நாள், சதுர்த்திக்கு ஓர் நாள் என்று எப்போதாவது படித்தால் அதிகம். பொதுவாக, தினசரிச் செய்திகளில் கொலை-ஊழல்-அழிவு இன்னபிற பற்றிய விவரங்கள் அதிகமென்பதால் ஒரு ஆயாசமும் அலுப்பும்… இவற்றைப் படிக்காமல் இருந்தாலே – நிம்மதியாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் என்றொரு எண்ணம்.

வாரம் ஒரு முறை, எனக்குப் பிடித்த இணைய தளங்களை ஒரு சுற்று வந்தால் அது அதிக பட்ச செய்தி / விவர நுகர்வு. இது தவிர சில சமயம் சில இடுகைகள். விட்டுப் போன டெல்லியிலிருந்து சென்னை வந்த கனிப் பெயர்ச்சிச் செய்திகள்…

=-=-=-=

கடந்த சில தினங்களாக, முதுகெலும்பை, தண்டு வடத்தைப் பதம் பார்த்த கட்டிட, கான்க்ரீட் போடும் வேலை – எனக்குத் தெரிந்த இளைஞர்களின் மையக் கட்டுமானப் பணிகளுக்காக கொஞ்சம் சிரம தானம்.

இன்று எங்கள் பள்ளியில் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கிவிட்டன… ஆகவே , கொஞ்சம் விடுதலை – 3 மணிநேரங்கள், கையில் கிடைத்தன…

ஆகக் காலையில் வந்து  மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் – ஒரு வருந்தத்தக்க செய்தி – ஜான் மக்கார்த்தி (John McCarthy)என்கிற மகத்தான கணிப்பொறியாளர் 24 அக்டோபரிலேயே மறைந்த விஷயம்.

லிஸ்ப் (LISP) என்றொரு அற்புதமான கணினி மொழியை கண்டு பிடித்தவர் –  இந்த ஜான் (1927 – 2011). மிகப் பல கல்யாண குணங்களையும் கொண்டவராக இருந்தார்.  இவர்  கணினியியலிலும், அது சார்ந்த கருத்தாக்கங்களிலும் பல உயரங்களை எட்டியவர்… அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவரும், பண்பு மிக்கவரும் கூட.  (சற்றொப்ப, பதினைந்து வருடங்கள் முன் இவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை இன்னமும் நான் சிறு குழந்தையின் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வருகிறேன் )

ஜான் மக்கார்த்தி - அன்று 1957-ல் இளைஞராக, பின் 2000-களில்...

நான் விளையாட்டாக இந்த லிஸ்ப்-இன் வழி கணினியியலுக்குப் போனவன்; மேலும் செல்லும் இடமெல்லாம் கிறிஸ்தவக் கிளிப்பிள்ளைப் பாதிரியார்களைப் போல இந்த லிஸ்ப் மொழி மதத்தினால்தான் கணினியியலை ஒருவர் அறிந்து தெளிந்து உய்ய முடியும் என எண்ணியவன் (எண்ணுபவனும் கூட).

அக்கால கணினி மொழிகளில் இருந்து சமீபத்திய ரூபி வரை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில் (நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன – கடைசியாக நான் கணினிமொழிக் கட்டளைகள் / உத்தரவுகள் இட்டு) – என்னால் சொல்ல முடியும் – இப்போதும் லிஸ்ப் வழி ஒருவர் கணினியியலை அணுகுவார் என்றால் அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கைக்கூடும். – கணினி சரஸ்வதி அவள்தம் கடைக்கண் பார்வை மட்டுமல்லாமல், முதற் கண் பார்வையே உங்கள் மீது விழும்.

லாம்ப்டா கால்குலஸ் என்கிற மகத்தான பூதத்தை உள்ளடக்கிய இந்தப் புதுமை லிஸ்ப்-ன் சொல்லும் செயலும், பொய்மை கொண்ட ஜாவா-க்களுக்கும் C++களுக்கும் புதிதே அன்றி… (மன்னிக்கவும்)

லிஸ்ப் அழகானது. ஆரவாரமற்றது. அமைதியானது. இயல்பான நடையை, மொழியை, வீச்சை உள்ளடிக்கியது. நம்மை மிகவும் யோசிக்கத் தூண்டுவது. மிக மிகச் சுலபமானது.

இதன் அழகுக்காக, அழகுணர்ச்சிக்காக, தேவையற்றவையவை ஒதுக்கி முக்கியமானதை முழு மூச்சோடு செய்யும் தன்மைக்காக, இதனைக் கற்றுக் கொள்ளலாம் – நாம் அனைவரும்! கணிபபொறிக்குக் கூட அவசியமே இல்லை.

முதலில் ஸ்கீம் (Scheme) என்கிற லிஸ்ப்-ன் குட்டிப் பையன் மூலமாக நீங்கள் அணுகினால், இது இன்னமும் அழகு.

மகத்தான கணினி விஞ்ஞானி ஜான் மக்கார்த்தியின் ஆன்மா இப்பிரபஞ்ச வெளியில், ப்ரும்மத்தில் கலந்து கரையக் கரைய, நம்முலகில் அழகுணர்ச்சி  பெருகும். பெருக வேண்டும்…

நமக்குத் தெரியாதா – ‘சில்லறை’ வணிகம் வர்த்தகம் என்றால் நம் கருணாநிதி அவர்களை, அவர்களின் முந்நூற்றுச் சொச்சம் குடும்ப அங்கத்தினர்களை மிஞ்ச, இப் பிரபஞ்சத்தில் வேறு மனிதர்களே கிடையாது என்பது.

ஆனால்,  நமக்கு  இன்னொரு  உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது – அதாவது, நம் பெரு மிதிப்பிற்குடைய கருணாநிதி அவர்களின் — நம் பாவப் பட்ட தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலும், அகில இந்தியா முழுவதும் உலா வரும் ஊழல் சில்லறைப் பண வாணிகமும் தம்மிடம் தான் வரவேண்டும் என்கிற அடக்க முடியாத ஆவல்.

மேலும், நேற்று முளைத்த ஊழல் மழையில் இன்று முளைத்த பெருச்சாளிக் காளான்களான ஜெகன்மோகன் ரெட்டிகள், குமாரசாமிகள், ராசாக்கள், எடியுரப்பாக்கள், வீரிட்டுக் கொண்டெழுந்து பணம் செய்வதையும் – கலைங்கர் கருணாநிதி ஏற்றுக் கொள்ளாமையை நாம் தெரிந்து தெளியக் கூடியதே…

ஆகவே,  மேற்கண்டவைகளுக்கு மேலாக இவர்,  அந்நிய சோனியா கும்பலின் ஊழல்களால் – தமக்கு வேண்டிய அளவு பணம் கிடைக்க மாட்டேன் என்கிறதே, இன்னும் 2700 தலைமுறைகளுக்கு மட்டுமே தானே நாம் சொத்துச் சேர்த்திருக்கிறோம் என்கிற சோகத்தால் வெந்து கொண்டிருப்பதும் நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

பாவம், இப்படி ஒரு நிலைமை வரலாமா, நம்  தானைத் தலீவருக்கு?

ஆகவே இவர் சோனியா காந்தியை நேரே குற்றம் சாட்ட தைரியமில்லாமல் இப்படி குழப்படி செய்கிறார் என நினைக்கிறேன்.

உங்களுக்குச் சரியாகப் புரிவதற்காக, குழப்படி  தினகரன் செய்தியை உண்மையாக நான் உங்களுக்கு மொழி ‘பெயர்த்துத்’ தருவதில்  பெருமை(!) அடைகிறேன்! …

சென்னை : சில்லறை வணிகத்தில் சோனியா குறுக்கீட்டை அனுமதிப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் சோனியா குறுக்கீட்டை  அனுமதித்தால் எங்கள் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் எனவே இம்முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

சோனியா குறுக்கீட்டால் எம் குடும்ப வர்த்தகம் தனது வாழ்வாதாரத்தை இழந்து விடும் என்றும் சோனியா குறுக்கீட்டால் எங்கள்  சிறுவணிகத்தில் பொருளாதார சீர்கேடு என்ற சுனாமி ஏற்படும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்குத் தானே தண்டனை: மு.க.ஸ்டாலின்

சிரிப்புத்தான் வருகுதய்யா…

கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

யாராவது, எந்தத் தேசத்திலாவது, அது சீனாவாக இருந்தாலொழிய பண ஊழலுக்கு தூக்கு தண்டனை பெற்றதாக சரித்திரம் உண்டா? சரி,  இதனை வேண்டுமென்றால், ஒரு தடாலடி நகைச்சுவைப் பேச்சு என்றுவிட்டுவிடலாம்.

ஆனால் இசுடாலின் அவர்களே, அதே மேம்பால மற்றும் பல ஊழல்களில் உங்களுக்கு ‘உதவி’ பல செய்த உங்கள் நண்பர் (அல்லது பாவப் பட்ட பினாமி) அண்ணா நகர் ரமேஷ், மிகுந்த சந்தேகிக்கத் தக்க வகையில், அவர் நீதி மன்றத்தில் ‘அப்ருவராக’ ஆஜராக இருந்த நிலையில்,  தனக்குத் தானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தை – மூன்று குழந்தைகளையும் மனைவியையும்  – விஷம் வைத்துக் கொன்று கொண்டார் அல்லவா – அதுவும் அதே 5 ஆண்டுகள் ஆட்சியின் போது?

சும்மா சொல்லக் கூடாது, .நீங்கள் பளிச்சிடும் நேர்மையுடனும், மன அவலத்துடனும் எள்ளென்று  தூக்குத் தண்டனை பெற்றுக் கொள்ள விழைந்ததை, பாவம் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பினாமி, எண்ணெயாக நிறைவேற்றினார் அல்லவா?

அல்லது நீங்கள் உங்களுக்குத் தூக்குத் தண்டனை என்பதை (உங்கள் தகப்பனாரின் குடமுருட்டி நகைச்சுவை குண்டு போல) கையில் ஒரு தூக்கை (இது முன்னொரு காலத்தில் – ஒரு மூடியுள்ள, பாத்திரம் – நீண்ட கம்பிக் கைப்பிடி கொண்டது; நாம் பால் வாங்குவதற்கு, தின் பண்டங்களை வைப்பதற்கு, பிரயாணங்களில் கொண்டு செல்வதற்கு உபயோகப் படுத்தப் பட்ட பாத்திரம்; நம் கிராமப் புறங்களில் இன்னமும் பழக்கத்தில் இருக்கிறது)  – எடுத்துக் கொண்டு, அதனை உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ளப் போகிறீர்களா?

இப்படம் ஒரு ரசக் குறைவான நகைச்சுவை; மன்னிக்கவும். இந்து நாளிதழில் வந்த படம் (http://www.hindu.com/2005/01/11/images/2005011110920101.jpg) மேல் நான் ஒரு தூக்கைக் கவிழ்த்துள்ளேன்.

எது எப்படியோ, உங்களுக்கும் சரி, அம்மாவுக்கும் சரி இந்தத் தூக்குத் தண்டனையையாவது அவருக்கு, உங்களைப் போல அதி விஞ்ஞான வழி ஊழல் தொழில்நுட்பத்தை அறிந்து தெளிந்தவரின் –  மேல் செலுத்தமுடிந்தால் நல்லது…

… உங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு, நம் தமிழகமே மிக்க கடன் பட்டுள்ளது. ஏதோ நாங்கள் எல்லாம் உங்கள் நம்பிக்கைக்கு இன்னொரு பாத்திரமானால் சரி…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

அய்யய்யோ இது என்ன புதிதாக கிளம்புகிறது தமிழர் படை, சொறி சிரங்கு என்று தாங்கள் மனக் கிலேசமடைய வேண்டா. ஏனெனில் உங்களுக்குத் தான் தெரியுமே, நம் கலைங்கர் சம்பந்தப் பட்ட எதுவும் ஒரு சமுதாய நோய் தானென்று!

ஏனெனில், அண்மையில் கலைங்கர் அருளிச் செய்த வாயமுதமாக படிக்கக் கிடைத்தது – திடுக்கிடும் விதத்தில், ‘சண்டை போட்டால் நாட்டில் ஒற்றுமை இருக்காது‘ என்ற போக்கில் – முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி – அன்பு – சகோதரத்துவம் – அஹிம்சாவழி – வாய்மை  போன்ற (கலைங்கர் கருணாநிதிக்குச் சம்பந்தமே இல்லாத, ஸ்நானப் ப்ராப்தி அற்ற) பொன் மொழிகளை உதிர்த்திருக்கிறார், நம் தானைத் தலீவர்! ஐயகோ… எல்லாம் நம் பழவினைப் பயன், என் செய்வது…

=-=-=-=

… நம்மில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். 1970 களின் ஆரம்பத்தில் கலைங்கருக்கும் எம்ஜியாருக்கும் போர் அதிகரித்துக் கொண்டிருந்த சமயம். கலைங்கர் கருணாநிதி அவர்களின் கயமைத் தனங்கள் ஒன்றொன்றாக வெளிப்படையாக வந்து கொண்டிருந்த தருணம்.

இப்பொது சிறிது பின்னோக்கி நகர்வோம். 1971. அண்ணாதுரையோ இறந்து போய் இரு வருடங்களாகி விட்டன. முதலில்  எம்ஜியாரின் மகத்தான உதவியுடன், அவர் பணப் பலத்தினால், வசீகரத்தால்,  திமுகவின் மற்ற முன்னணித் தலைவர்களை ஒழித்தாகி விட்டது.  பஞ்ச தந்திரங்களையும் உபயோகித்து, திமுகவின் தன்னிகரற்ற தலைவராகி விட்டாயிற்று – மற்றவர்களையெல்லாம் காலி அட்டைப் பெட்டிகளாக்கி விட்டாயிற்று.  இன்னமும் கட்சியில் போட்டியென்றால் அது  எம்ஜியார் தான்.

ஆக, எந்த  எம்ஜியாரின் பேருதவியால் மறுபடியும் மறுபடியும் மேலுக்கு வந்தாரோ  அந்த எம்ஜியாரையே ஒழிக்க நினைக்கும் எண்ணங்கள், செயல்பாடுகள் மிக்கவரானார் நம் கலைங்கர்.

கட்சியில் எம்ஜியாரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் அனைத்து உள்ளடி-வெளியடி-பக்கடி-கீழடி-மேலடி அனைத்தையும் செய்தார், நம் நம் கலைங்கர். அவரைத் தனிமைப் படுத்த அனைத்துத் தந்திரங்களையும் உபயோகித்தார் – இவற்றில் பல மிகக் கேவலமானவை. அயோக்கியத் தனமானவை. ஒரு பார்வையில் இன்று நினைத்தாலும் ஆச்சரியப் படத் தக்கவை – இப்படிக் கீழ்ததரமானவனாக ஒரு மனிதனால் இருக்க முடியுமா என்று…

நம் கலைங்கர் கோமாளித் தனங்களும் பல செய்தார். உதாரணத்திற்கு – முதலில் சிவாஜி கணேசன் அவர்களை எப்படியாவது தன் தரப்புக்கு இழுத்து வர முயன்றார் – ஆனால் சிவாஜி வழுக்கிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார். பின்னர் கலைங்கர், எம்ஜிஆரிடம் – உனக்கு அரசுப்  பதவி தருகிறேன் ஆனால் நீ திரைப் படங்களில் நடிப்பதை விட்டு விடவேண்டும் என அநியாய பேரம் செய்தார் (ஆனால், இதே கலைங்கர்தான் பிற்காலத்தில், தம் பிள்ளைகளை (ஸ்டாலின் உட்பட) திரைப் படங்களில்  ஈடுபடுத்தினார்; மேலும் தாம் முதலை அமைச்சராக இருக்கும் போதே திரைக்கழுதைப் படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்).

இவைதவிர – தன் மகன் மு க முத்துவை ஒரு வசீகரமான அதிமனிதன் பிம்பத்துக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் செய்தார். முத்துவை ஒரு எம்ஜியார் நகலாக்க முயன்றார்.  எம்ஜியாரை அடக்குவதற்கு முத்து உருவாக்கப் பட்டார் – 1970ல் இருந்து.

மு க முத்து 'சமையல்காரன் (1974)' படத்தில். (அசப்பில் எம்ஜியார் மாதிரி இல்லை?)

நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் – அச்சமயம், முத்து திமுக அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வார் – எப்படி? கோபாலபுரத்திலிருந்து ஒரு பெரிய்ய்ய்ய வெண் புரவியில் அமர்ந்து நம்மூர் பிலிம் ராஜாக்கள் போல் உடையணிந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, பின் பக்கம் கூலித் தொண்டர்கள் முத்துமாரி பொழிய… (கேவலம், மன்னிக்கவும்) – 1970 களின் ஆரம்பத்தில், ஒருநாள் நங்கநல்லூர் திரவியம் காபி கடையில், தினத்தந்தியில் வெண் புரவிப்புகைப் படம் பார்த்து பயம் வந்து விக்கித்துப் போய் இரத்தபேதியானது இன்னமும் நினைவில் இருக்கிறது… ஆனால் அது வேறு கதை.

இன்னொன்று – நம் கலைங்கர் – எம்ஜியார் ரசிகர் மன்றங்களை பெயர் மாற்றம் செய்து – ‘முத்து’ ரசிகர் மன்றங்களாக்க முயற்சி செய்தது… நம் கலைங்கரின் அக்காலக் கோமாளித் தனங்களுக்கும் அளவே இல்லை!

1971 மதுரை திமுக மாநாட்டில் (என எனக்கு நினைவு) தன் மகன் முக முத்துவை மாநாட்டுப் பேரணிக்கு தலைமை தாங்க வைத்தார் – அச்சமயம் இருந்த மற்ற திமுக தலைவர்களையும் குப்பை போல் மதித்து, எம்ஜியாரையும் மட்டம் தட்ட முத்துவையும் திமுகவையும் உபயோகித்தார்…

மற்றுமொன்று, நம் கலைங்கர் தன்னைத் தானே ‘தென்னாட்டின் முஜிப் உர்  ரஹ்மான்’ என்று அழைத்துக் கொண்டது… அவர் என்ன செய்வார் பாவம் – எப்படியாவது தாம் தான் தமிழகத்தின் தரமான, ஒரே ஒரு தலைவர் என்றும், திமுகவின் ஒரே ஒப்பரிய அளப்பரிய தலைவர் என்று பூச்சாண்டி காட்டவேண்டிய அவசியம் அப்போது அவருக்கு இருந்தது… பரிதாப கரமான நிலை தான், இது அல்லவா?

=-=-=-=

எம்ஜியாரும், தம் பங்கிற்கு, தன் பாதுகாப்பு உணர்ச்சியால், உழைப்பால், வசீகரத்தால், ‘கொடுத்துச் சிவந்த கரத்தால்’ தன் மேல் எய்யப் பட்ட அம்புகளை முறித்து, கட்சியில் தமக்கிருந்த செல்வாக்கினை ஸ்திரப் படுத்திக் கொண்டே வந்தார்.

ஆனால் நம் கலைங்கர், ஊழல் மேல் ஊழலால், அதுவும் எம்ஜியாரின் பணத்தையே மிகுந்த அளவு அயோக்கியத்தனமாகக் கையாடல் (மேகலா பிக்சர்ஸ் ஒரு எடுத்துக் காட்டு, அவ்வளவே!) செய்ததால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழு மவனே வொன்னை ஒளிச்சுடறேன், பட்டா – என்று ஆகாவென்று எழுந்தார் பார் நம் யுகப் புரட்சித் தலைவர் எம்ஜியார்… (மன்னிக்கவும்)

கடைசியில், வேறு வழியே தெரியாமல், ஒரு அவசரக் கட்சி கூட்டம் நடத்தி, திமுகவிலிருந்து எம்ஜியாரைத் துரத்தினார், நம் கலைங்கர் கருணாநிதி அவர்கள்.

.  பின்னர் ‘அடுத்துக் கெடுத்தல்’ வழிகள் மூலம் எம்ஜியாரையே  ஒழிக்க கலைங்கர் கருணாநிதி அவர்கள் முயன்றார்.  அதுவும் பலிக்கவில்லை.

அதே சமயம், எம்ஜியார் ஒரு மலையாளி என்கிற கீழ்த்தரமான பிரச்சாரத்தை நடத்தினார். மலையாளிகள் தமிழ் இன(!) துரோகிகள் என்று பேசினார். எம்ஜியார் ஒரு கோமாளி என்றார். ஒரு கபட வேடதாரி என்றார். பேடி  என்றார். அவரை ஒரு ‘அலி’ என்று பேசினார் (அக்காலத்தில் அலி என்றால் இக்காலத்தில் ‘திரு நங்கை’ என்று சொல்லப் படுபவர்கள்) – ‘ஆண்மை’ இல்லாதவர் என்றார். திமுக பொதுக்கூட்டங்களில் திமுக முன்னணி ஏச்சாளர்கள் – கலைங்கர் உட்பட செவி பொறுக்க முடியாத வார்த்தைகளால் எம்ஜியாரை,  மலையாளிகளை அர்ச்சித்தனர்…

இது மட்டுமல்ல – மிக முக்கியமாக , கருணாநிதி + மாறன் கும்பலினால் ‘தமிழர் படை’ என்று ஒன்று தொடங்கப் பட்டது – இந்த அமைப்பில் இருந்தவர்கள் திமுக கூலிப் படையினர்; இந்தப் பொறுக்கி அமைப்பு தொடங்கியதின் காரணம் – மலையாளிகளை அடக்கி ஒடுக்கி, அவர் சொத்துகளை நாசம் செய்து தமிழகத்தில் அவர்களை ஒழித்து அவர்களை விரட்ட வேண்டும் என்பது தான் – இதன் மூலம் எம்ஜியார் அவர்களுக்கு பலத்த நெருக்கடி கொடுக்க முடியும், அவரையும் விரட்ட முடியும் என கருணாநிதி + மாறன் கும்பல் நினைத்தது…

சில வருடங்கள் (1971 – 1973 என நினைக்கிறேன்) மலையாளிகள் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் பட்ட அவமானங்கள், உதைகள், கடை-உடைப்புகள், கடை-எரித்தல்கள் – நம்மால் இன்று மறக்கப் பட்டு விட்டன.

… இவை அனைத்தையும் மீறி, முறியடித்து, கலைங்கர் அவர்களை ஓட ஓட விரட்டியது, எம்ஜியார் என்கிற ஆளுமை – ஆனால் அது நமக்கெல்லாம் தெரிந்த கதை…

=-=-=-=

ஆனால், இதே மகத்தான தலைவர் கலைங்கர் தான் இப்போது மொழிகிறார்!

… முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தமி ழகமக்களும், கேரள மக்களும் ஒற்றுமையு டன் செயல்பட வேண் டும் என்றும், அதற்கான வழிவகைகளை மத்திய அரசு நடுநிலையோடு செய்ய வேண்டும்..l

… முல் லைப் பெரியாறு அணை  நீண்ட காலப் பிரச்சினை.   இதில் தமிழ்நாடு நியாயமாக நடக்கிறது.   ஆனால் வேண்டுமென்றே  பிடிவாதமாக நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என்றெல்லாம்  கேரளா கூறி வருகிறது.   ஆரம்ப காலத்திலிருந்து  கழகத்தின் கொள்கை யாக – கழக அரசின் கொள்கையாக  –  என்னுடைய  கருத்தாக  நான் வெளிப்படையாகச் சொல்லி வருவதெல்லாம்  கேரள மக்களிடமும்,  தமிழ்நாட்டு மக்களிட மும்  எந்தவிதமான  மனக் குழப்பமும் வராமல்,  சகோதர ஒற்றுமையோடு  இரு தரப்பினரும்  செயல் பட வேண்டும்  என்பது தான்.  அதற்கேற்ற வழி வகைகளை  நடுநிலை யாக நின்று  மத்திய அரசு  செய்ய வேண்டும்.  ஏற் கனவே  முல்லைப் பெரி யாறு பிரச்சினைக்காக  நீதியரசர் ஆனந்த் அவர் கள் தலைமையிலே ஒரு குழு  அமைக்கப்பட்டி ருக்கின்றது.   அந்தக் குழு வில்  தமிழ்நாட்டின் சார் பாகவும், கேரளாவின் சார்பாகவும் பிரதிநிதி கள் இடம் பெற்றிருக் கிறார்கள்.   அவர்களின் முடிவையெல்லாம் அறி வதற்கு முன்பு,  இடைக் காலத்தில்  அவசரப்படு வது நல்லதல்ல என்பது தான் என்னுடைய கருத் தாகும்…

… தமிழ் நாட்டு மக்கள்  அமைதியாக இருக்க வேண்டும்.   ஒற்றுமையாக இருந்து  இந்தப் பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு  மத்திய அர சுக்கு உதவி செய்ய வேண் டும்.   நாமும்   கேரளாவைப் போல  வரிந்து கட்டிக் கொண்டு  சண்டை போட்டால் நாட்டில்  ஒற்றுமை இருக்காது, அமைதி இருக்காது.

– இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

எப்படி இருக்கிறது இந்தக் கதை! ச்சீ! (மேலும் படிக்க)

சாத்தான் வேதம் ஓதுவதைக் கூட மனமாற்றம் என்று புரிந்து கொள்ளலாம், வேறென்ன சொல்ல!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…