இரங்கல்: ஜான் மக்கார்த்தி

14/12/2011

வர வர செய்தித்தாள் எதுவுமே படிப்பதில்லை என்கிற கங்கணம்.

விதி விளக்காக, கார்த்திகைக்கு ஓர் நாள், சதுர்த்திக்கு ஓர் நாள் என்று எப்போதாவது படித்தால் அதிகம். பொதுவாக, தினசரிச் செய்திகளில் கொலை-ஊழல்-அழிவு இன்னபிற பற்றிய விவரங்கள் அதிகமென்பதால் ஒரு ஆயாசமும் அலுப்பும்… இவற்றைப் படிக்காமல் இருந்தாலே – நிம்மதியாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் என்றொரு எண்ணம்.

வாரம் ஒரு முறை, எனக்குப் பிடித்த இணைய தளங்களை ஒரு சுற்று வந்தால் அது அதிக பட்ச செய்தி / விவர நுகர்வு. இது தவிர சில சமயம் சில இடுகைகள். விட்டுப் போன டெல்லியிலிருந்து சென்னை வந்த கனிப் பெயர்ச்சிச் செய்திகள்…

=-=-=-=

கடந்த சில தினங்களாக, முதுகெலும்பை, தண்டு வடத்தைப் பதம் பார்த்த கட்டிட, கான்க்ரீட் போடும் வேலை – எனக்குத் தெரிந்த இளைஞர்களின் மையக் கட்டுமானப் பணிகளுக்காக கொஞ்சம் சிரம தானம்.

இன்று எங்கள் பள்ளியில் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கிவிட்டன… ஆகவே , கொஞ்சம் விடுதலை – 3 மணிநேரங்கள், கையில் கிடைத்தன…

ஆகக் காலையில் வந்து  மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் – ஒரு வருந்தத்தக்க செய்தி – ஜான் மக்கார்த்தி (John McCarthy)என்கிற மகத்தான கணிப்பொறியாளர் 24 அக்டோபரிலேயே மறைந்த விஷயம்.

லிஸ்ப் (LISP) என்றொரு அற்புதமான கணினி மொழியை கண்டு பிடித்தவர் –  இந்த ஜான் (1927 – 2011). மிகப் பல கல்யாண குணங்களையும் கொண்டவராக இருந்தார்.  இவர்  கணினியியலிலும், அது சார்ந்த கருத்தாக்கங்களிலும் பல உயரங்களை எட்டியவர்… அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவரும், பண்பு மிக்கவரும் கூட.  (சற்றொப்ப, பதினைந்து வருடங்கள் முன் இவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை இன்னமும் நான் சிறு குழந்தையின் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வருகிறேன் )

ஜான் மக்கார்த்தி - அன்று 1957-ல் இளைஞராக, பின் 2000-களில்...

நான் விளையாட்டாக இந்த லிஸ்ப்-இன் வழி கணினியியலுக்குப் போனவன்; மேலும் செல்லும் இடமெல்லாம் கிறிஸ்தவக் கிளிப்பிள்ளைப் பாதிரியார்களைப் போல இந்த லிஸ்ப் மொழி மதத்தினால்தான் கணினியியலை ஒருவர் அறிந்து தெளிந்து உய்ய முடியும் என எண்ணியவன் (எண்ணுபவனும் கூட).

அக்கால கணினி மொழிகளில் இருந்து சமீபத்திய ரூபி வரை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில் (நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன – கடைசியாக நான் கணினிமொழிக் கட்டளைகள் / உத்தரவுகள் இட்டு) – என்னால் சொல்ல முடியும் – இப்போதும் லிஸ்ப் வழி ஒருவர் கணினியியலை அணுகுவார் என்றால் அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கைக்கூடும். – கணினி சரஸ்வதி அவள்தம் கடைக்கண் பார்வை மட்டுமல்லாமல், முதற் கண் பார்வையே உங்கள் மீது விழும்.

லாம்ப்டா கால்குலஸ் என்கிற மகத்தான பூதத்தை உள்ளடக்கிய இந்தப் புதுமை லிஸ்ப்-ன் சொல்லும் செயலும், பொய்மை கொண்ட ஜாவா-க்களுக்கும் C++களுக்கும் புதிதே அன்றி… (மன்னிக்கவும்)

லிஸ்ப் அழகானது. ஆரவாரமற்றது. அமைதியானது. இயல்பான நடையை, மொழியை, வீச்சை உள்ளடிக்கியது. நம்மை மிகவும் யோசிக்கத் தூண்டுவது. மிக மிகச் சுலபமானது.

இதன் அழகுக்காக, அழகுணர்ச்சிக்காக, தேவையற்றவையவை ஒதுக்கி முக்கியமானதை முழு மூச்சோடு செய்யும் தன்மைக்காக, இதனைக் கற்றுக் கொள்ளலாம் – நாம் அனைவரும்! கணிபபொறிக்குக் கூட அவசியமே இல்லை.

முதலில் ஸ்கீம் (Scheme) என்கிற லிஸ்ப்-ன் குட்டிப் பையன் மூலமாக நீங்கள் அணுகினால், இது இன்னமும் அழகு.

மகத்தான கணினி விஞ்ஞானி ஜான் மக்கார்த்தியின் ஆன்மா இப்பிரபஞ்ச வெளியில், ப்ரும்மத்தில் கலந்து கரையக் கரைய, நம்முலகில் அழகுணர்ச்சி  பெருகும். பெருக வேண்டும்…

2 Responses to “இரங்கல்: ஜான் மக்கார்த்தி”

  1. Anonymous Says:

    தங்களிடுகையில் நன்றி மறவா நலத்தைக் காண்கிறேன், துணிவுடைமை, தெளிவு ஆகியவையும் புலப்படுகிறது. ‘அஞ்சி அஞ்சி சாவார்’ …பாரதியார்.

  2. Sridhar Says:

    லிஸ்ப், ஸ்கீம் பற்றி தெரிந்த மூன்றாவது தமிழ் நாட்டுக்காரர் நீங்கள். என் மகனுக்கு லிஸ்ப் மூலமாக ப்ரோக்ராம்மிங் கற்றுக்கொடுக்க நினைத்தேன். நான் மிக சுமாராகப் படித்ததாலும், நேரமின்மையாலும் அது நிறைவேறவில்லை. அவனும் பேருக்கு ஜாவா படிக்கின்றான். நம் பல்கலைக்கழக ஆசிரியர்கள், அப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதே இல்லை என்று தோன்றுகிறது. என் மகன் இதுவரை கற்றதை அழித்து, புதியதை கற்க, எல்லாம் வல்ல இறைவனும், இறைவியும் அருள் புரிவார்கள் என்று நம்புகிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s