காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்…

25/12/2011

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களைப் பற்றி – அவரின் ஞான, கர்ம, பக்திக் கீற்றுகளை ஓரளவாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வது, அவருடைய பல் வேறு விதமான ஆச்சரியப்பட வைக்கும் ஆளுமைகளை அவதானிப்பது, அவரால் எப்படி மிகப் பல விஷயங்களைச் செய்ய முடிந்தது – தன்னலம் கருதா தூய அறம் சார்ந்து – ஆன்மாவிலிருந்து அறிவியல் ஊடாக அஹிம்சை வழியில் அரசியலை நோக்கி, ஒவ்வொரு விஷயத்திலும் – அது உணவானாலும் சரி, நுண்நோக்கியானாலும் சரி, விரதமானாலும் சரி, நேரம் தவறாது இருத்தலும் சரி, பிறர் மலம் அகற்றி துப்புரவாக்குவதானாலும் சரி – உன்னதத்தை நோக்கி பயணம் செய்பவராக இருந்து, பளிச்சிடும் நேர்மையுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க முடிந்தது, அவர் எப்படி எப்போதுமே ஒரு மகத்தான செயல் வீரராக இருந்திருக்கிறார் என்று தியானம் செய்வது, அவரால் தூர் வாரப்பட்டு, வெளிச்சம் காட்டப்பட்டு, வாழ வைக்கப் பட்ட இந்தியப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளைப் பற்றிச் சிந்திப்பது – பல காலமாக எனக்கு கனவுக்கும் நனவுக்கும் இடையே உள்ள கலங்கிய, போதை கொண்ட எண்ணப் பரப்பில் இருந்திருக்கிறது.

ஆக, நான் ஒரு காந்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள நினைக்கும் மாணாக்கன் தான் என்பதில் மெய்யாலுமே பெருமையடைகிறேன்.

=-=-=-=

ஆனால், நான் சிறிதளவு வெட்கத்துடன் ஆனால் நிறைந்த துக்கத்துடன் இதனைச் சொல்ல வேண்டும்:

சிறு வயதில் – இளம் வயதில், என் 20களின் ஆரம்பங்கள் வரை   –  நானும் காந்தி அவர்களை காந்தியார் என்று சொல்லும் கும்பலின் சகவாசத்தில் இருந்தவன் தான். கண்மூடித்தனமாக கம்யூனிசத்தையும், திராவிட இயக்கத்தையும் ஆதரித்தவன் தான். ஈவே ராமசாமி அவர்களைப் பெரியார் என்று, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவும் பூஜித்தவன் தான்.

வாய்ப் பேச்சு வெட்டிவீரர்களை, புரட்டாளர்களை, புரட்டு வாதிகளை – புரட்சியாளர்கள் என்று கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தவன் தான்…

ஜாதி பற்றிய புரிதலோ, இந்து மதம் (அல்லது எந்த மதம் பற்றியும்) பற்றிய அடிப்படை அல்லது அனுபவ அறிவோ இல்லாமல், கடன் வாங்கப் பட்ட கோட்பாடுகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டிருந்தவன் தான். ஒரே புரட்சி தான். ஒரே புல்லரிப்பு. வினவு வினவு என்று ஒரே வினவு, என்ன சொல்ல அந்த வெட்கக் கேட்டைப் பற்றி!

தாமஸ் பபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay), வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), மாக்ஸ்ம்யுல்லர் (Max Müller), வில்லியம் ஜோன்ஸ் (William Jones – ஆசியாடிக் ஸோசைடி, கல்கத்தா – இவர் செய்த குழப்படியும் அறிவுஜீவிய துரோகமும் தான், மிகப் பல பார்வைகளில், புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகமான-பார்வையான, பரவலாக அறியப் படாததான, மனு நீதி – மனு ஸ்ம்ரிதி – இந்து மதத்தின் ஆணிவேறாகக் கருதப் படக் காரணம்) – ஜியார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope), ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ‘வீரமாமுனிவர்’ கான்ஸ்டன்ஸோ பெஷி (Constanzo Beschi), ழான் அந்த்வான் துப்வா (Jean-Antoine Dubois – இவர் – ‘அப்பே துபொய்’ என்று அறியப் பட்டு 1800-1823 வருடங்களில் மைசூர் சுற்றுப் புறங்களில் கிறித்துவ மதமாற்றம் செய்தவர் – மகத்தான கருத்தியல், இறையியல் மோசடிகள் பல செய்தவர்) போன்ற போலிப் பாதிரிகள் – போன்ற இத்தியாதிகள் மூலம் மட்டுமே இந்தியாவை, என்னுடைய சிறு வயதில், இளமையில் அறிந்திருந்தேன்… (பராசக்தி போன்ற ஒரு மலினமான பிரச்சாரப் படத்தை, ஒரு முறை கூடப்  பார்க்காமல் அதன் வசனங்கள் அத்துப் படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அடுக்கு மொழி பொறுக்கி நடைக்குத் தான் இதெல்லாம் சாத்தியம்.)

இவை தவிர மார்சிய லெனினிய வெள்ளீய காரீய புத்தகங்கள் வேறு. – ஹெகேலில், மார்க்சிலிருந்து மாவோ வழியாக மார்குசே வரை ஏட்டுச் சுரைக்காயத்தனமாக கரைத்துக் குடித்து தள்ளாடிக் கொண்டிருந்தேன்… பின் சில பல வருடங்களுக்கு ‘இயங்கிக்’ கொண்டிருந்தவனும் கூட… (நல்ல வேளை – அப்போது ஜார்கண்டிலும், சத்தீஸ்கட்டிலும் சமீபத்தில் கொல்லப்பட்ட கிஷேன்ஜி  போன்றவர்கள் இல்லை – அவ்வளவு வாயோர நுரை தள்ளியவர்கள், அயோக்கியத் தனம் நிரம்பியவர்கள், எனக்குத் தெரிந்த வரை அப்போது ‘இயக்கங்களில்’ இல்லை)

=-=-=-=

ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரும்)

காந்தியாயணம்…

3 Responses to “காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்…”

 1. sathi62 Says:

  தங்களின் பார்வை வண்ணங்களைக் கடந்து நேர்கொண்ட பார்வையாக மாறுவது யாரையும் வதைப்படுத்தாது. அஹிம்சை அல்லது நோய் செய்யாமை என்கிறவழியில் செல்ல நிறைய படிப்புத் தேவைபடுகிறது. பகுத்தறிவு, நம் பண்டைய கலாச்சார நூலறிவுகளால் கெட்டுப்போவதில்லை. மாறாக பகுத்தறிவை வளர்க்கிறது. நல்ல குணநலன்கள் பெற ஒத்திசைவு ஒருவகை ஒத்திசைக்கிறது.

 2. விக்கி Says:

  உங்களின் நேர்மை(திராவிட குப்பைகளிடம் மாட்டிகொண்டது பற்றி உங்களின் சுயபரிசொதனையாகவே இதை பார்க்கலாம்!காந்தி அவர்கள் சொன்னதும் அதான்!ஆனால் சில அரைவேக்காட்டு அக்கபோர்கள் காந்தியை இகழ்வதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தன வாழ்ந்து கொண்டிருக்கின்றன!அவற்றுக்கு செம பதிலாக இருக்கிறது உங்கள் தளம்!காந்தி அவர்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படிக்கலாம்!
  http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

 3. விக்கி Says:

  மகாத்மா பற்றி இன்னொரு தளம்!படிக்க தவறாதீர்கள்
  http://www.gandhitoday.in/


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s