காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1)

26/12/2011

ஏன் இப்படியானது என யோசிக்கிறேன்…  (திடுக்கிடும் தொடர்வதை தொடரகிறது…)

சிறிது அசை போட்டுப் பார்த்தால் – அக்காலத்திலும் இக்காலத்திலும் – மிகப் பல இளைஞர்கள் – பல தரப் பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளாகவே  (குறிப்பிட்ட தத்துவங்களுக்கும், நிலைப்பாடுகளுக்கும், அரசியல்-சமூகக் குறியீடுகளுக்கும்) நிலைத்து விடுவது ஒரு சாதாரணமான, வாடிக்கையான விஷயமே… இதில் விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் இம்முதிரா இளமை உணர்ச்சிக் குவியல்களுக்குள் இருந்து மீண்டு வெளிவர, விடுபட முடிவதே இல்லை…

ஏனெனில், படிப்பறிவு மட்டும் போதாது – நிறைந்த, பலவகைப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் வேண்டும் நம் இளைஞர்களுக்கு.

பளிச்சிடும் நேர்மையுள்ள பண்பட்டவர்களின், புடம் போடப் பட்டவர்களின், அதாவது குருக்களின் சகவாசம் வேண்டும், அவர்களை மேன்மேலும் மெருகேற்ற, அந்த குருக்கள் ஞானிகளாக இருக்க வேண்டும்,

அவ்விளைஞர்களுக்கு நுண்மான் நுழைபுலம் அறியும் – பண்பட்ட அறிவும், சாதனையும் வேண்டும். ஆத்மார்த்தமான, நேர்மையான, அனுபவபூர்வமான சிந்தனைகளை மெய் வருத்தக் கூலியாக மட்டுமே  பெற்றுக் கொள்ளும் மனோ திடம் வேண்டும். தோல்வி கண்டு துவளாத திரும்பி எழும் (சுந்தர ராமசாமியின் சவால்  கவிதை போல) மனப்பான்மையும் கற்றுக் கொள்ளப் பட வேண்டும். சுய பச்சாத்தாபம் அற்ற சுய பரிசோதனை மூலம் தங்கள் ஆன்மாவை மீட்டெடுக்க முடியவேண்டும்…

இப்படிப்பட்ட சூழல் ஒரு தமிழ் இளைஞனுக்கு அரிதாகவே கிடைப்பது நம் பழ வினைப் பயன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…

=-=-=-=

வெட்கக் கேடான இத்தேக்கத்துக்கு, இம்மனப்பான்மைக்கு, இப்போக்குக்கு  – என்னைப் பொறுத்தவரை – ஒரு முக்கிய காரணம்: எங்களுடைய வட்டார தமிழ் நூல் நிலையங்களிலும், மெத்தப் ‘படித்த’ பெரியவர்களிடமும் ஒரு தலைப் பட்சமான, நம் பண்பாட்டை நினைத்தாலே வெட்கித் தலை குனிய வேண்டிய, குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய புத்தகங்களும், கருத்துகளும், எண்ணக் குவியல்களும் தான் இருந்தன.

அவர்களுக்கு இந்தியா ‘தேசிய இனங்களின் சிறைக் கூடம்’ – காந்தி ஒரு காந்தியார் – புரட்சி இதோ வந்து கொண்டிருக்கிறது – அட, இதோ வந்தே விட்டது –  நம் பாரம்பரியம் ஒரு கவைக்குதவாத ஒன்று – இந்து மதம் குப்பை – ‘மதச்சார்பின்மை’ தான் கடவுள் – வெள்ளைக்காரன் (அவன் மார்க்ஸ் ஆக இருக்கலாம், க்ராம்ஷியாக இருக்கலாம், ஏன்,  அவர்கள்  நம்முடைய – எம் என்  ராய்-ஆகவோ தர்மா தத் கோசம்பியாகவோ கூட இருக்கலாம். ரோமிளா தாபராகக் கூட இருக்கலாம். அவர்கள் தான் ‘வசிஷ்டர்கள்’ அவர்கள் வாயால் புகழப் பட்டால் சொர்க்கம் கிடைத்தது போல் – அவர்கள் இகழ்ந்தால், அப்படி இகழப்பட்டதற்கு அது நிச்சயம் வேண்டியதே) என்ன உளறினாலும் அவர்கள்  சொல்வது எல்லாம் சரி, அவர்கள் தான் ‘அறிவியல்’ பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கக் கூடியவர்கள்.

ஆக, அவர்களோ பரிணாம வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பிலிருந்து நமக்கு வெவ்வெவ்வே என்று அனைத்துப் பரிமாணங்களிலும் ‘அழகு’ காட்டிக் கொண்டிருக்கின்றனர். நாமோ – அறியாமையிலும், பல கோடி கடவுட்களைப் பிடித்துக் கொண்டும், மோட்சத்தை விரும்பிக் கொண்டும், ஜாதிகளை மாட்டிக் கொண்டும்,  கீழ்மை நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக  உழல்பவர்கள். நாம் ‘கஞ்சி குடிப்பதற்கிலர், அதன் காரணமும் அறிகிலர்.’   நாம் அடிப்படையில் முட்டாள்கள். ஆகவே நமக்கு வெள்ளைக்கார, மேலை நாட்டு ஞானமும் அவர்களின், அவர்கள் சார்ந்த  உள்நாட்டு மேட்டிமைவாதிகளின் உதவியும் மிக முக்கியம். இவை மட்டுமே முக்கியம்…

… இன்ன பிற இப்படிப்பட்ட மனப் பிரமைகள், பிறழ்வுகள் நமக்கு…

வெள்ளைக்காரன் நமக்குச் சொல்வதை, சொல்ல நினைப்பதை, சொல்லக் கூடுவதை, நம்மூர் அசல் அக்மார்க் தேங்காய்க் கொட்டைகள் (இவர்கள் வெளியே தோல் நிறம் நம்மைப் போல பழுப்பாக, கருப்பாக அழகாக இருந்தாலும், உள்ளே அழுக்கான வெள்ளை எண்ணங்கள் தான்) அவற்றை வழிமொழிந்து நமக்கு மேலும் கோனார் உரை எழுதுவது – நம்முடைய ‘தி இந்து’ தினசரியிலிருந்து கலைஞர் டிவி வரை, இன்று வரை, தொடர்கிறது… இந்த போக்கு, பல தளங்களில் நிலவுகிறது – இலக்கியமானாலும் சரி அறிவியலானாலும் சரி. (இந்நிலையில் சில குறிப்பிடத்தக்க விதிவிலககுகள் இருந்தன அன்று – இருக்கின்றன இன்று என்பது சந்தோஷம் தரக் கூடிய விஷயம்.)

=-=-=-=

… இந்த வெள்ளைக்கார இளக்கார மனம்  சார்ந்து இயங்கும் அட்டை மனிதர்களூடே, தேங்காய்க் கொட்டைகளினூடே     ஒரு இளம் மனம் இயங்கினால் அதற்கு வினவு  போன்ற இத்தியாதிகள் தவிர விடிமோட்சமே இல்லை.

புரட்சிகரமான கரமைதுனம் தான் அவன் வாழ்நாளில் அடையக் கூடிய உச்ச கட்ட விஉந்து சக்தி.  (ஆனால்,  சிறிது யோசித்தால், கரமைதுனம் நம் வாழ்வில், இயல்பில், இனக்கவர்ச்சி-உளவியலில், நமது உந்துதல்களில்  ஒரு அங்கம் தான், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது தான்… ஆனால், புரட்சி அப்படியல்ல)

மிஞ்சி மிஞ்சிப் போனால் அவன் திரிபுவாதி / எதிர்ப்புரட்சியாளன் / வர்க்கஎதிரி / போலீஸ் நாய் / இன எதிரி / காடை / குள்ளநரி / சதிகாரன் / இயக்கத் துரோகி  என்று ஏதாவது சொல்லி, பொய்மை பரப்பி –  தன் சுயநல வாயில் நுரை தள்ள  மற்றவர்களைக்  கொல்லலாம் (கிஷேன்ஜி, ‘புலி’ பிரபாகரன் போல). மற்றவர்களால் கொல்லப் படலாம் (கிஷேன்ஜி,  ‘புலி’ பிரபாகரன் போல).

பின்னதில் நாம் அவர்கள் ‘வீர மரணம்’ அடைந்தனர் என்று சந்தோஷப் படலாம். நம் புல்லரிப்புகளுக்கும், புரட்சிகர முதுகு சொரிதல்களுக்கும், அதன் லாகிரிக்கும் கேட்பானேன்?

=-=-=-=-=

நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்…

எது எப்படியோ…  பிற்காலத்தில் தான் தெரிய வந்தது – மேற்கண்டவர்கள் தான் (மக்காலே முதல் துப்வா ஈறாக –  முந்தைய இடுகையைப் பார்க்கவும்) இந்த ‘திராவிட மாயையை’ உருவாக்கம் செய்தவர்கள் என்பது. இவர்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை – பிரித்தாளும் சூழ்ச்சியும், மத மாற்றமும், பொருளாதாரச் சுருட்டலும்  –  மிகமிக முக்கியமாக – கலாச்சார, ஆன்மிகச் சுரண்டலும் தான் — என்பதும் கூட!

மார்க்ஸ், மார்க்சீயம் – அதன் நவீனச் சிந்தனைகள் பற்றி மேலும் படித்து, சிலபல தோழர்களுடன் உழன்ற பின் தான், சிலபல போராட்டங்கள், எழுச்சிகள்-வீழ்ச்சிகள், வலிகள், பொய்மைகள் கண்ட பின் தான் – மார்க்சீயத்தில் மெய்ஞானத்துக்கு, சமரசத்துக்கு, அன்புக்கு –  முக்கியமாக, சுத்த சோஷலிச சன்மார்க்க சத்திய  முன்னேற்றத்துக்கு –  இடமில்லை என்பதும் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்… (ஆனால் என் பெருமதிப்புக்குரிய சிலர் இன்னமும் ‘இயக்கங்களில்,’  இயக்கங்களுக்கு வெளியில் இருக்கின்றனர்; அவர்கள் என் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் என்பதையும், நான் புரிந்து கொள்ள முடிகிறது)

=-=-=-=

அக்காலத்தில் மற்றும் சிலர் இருந்தார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள்  – ஆனால் அவர்கள் மற்றோர் எல்லையில் –  பொறுக்க முடியாத மௌடீகத்தில் – ஆழ்ந்து இருந்தனர் / இருக்கிறார்கள். இவர்களுடையது உப்பு சப்பில்லாத வைதீகம் என சொல்லலாமா? அல்லது வறட்டு வேதாந்தம் என்று சொல்லலாமா? (வைதீகமும் வேதாந்தமும் மிக முக்கியமானவை ஆனால் சரியாகப் புரிந்துகொள்ளப் படாதவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் – நான் இங்கு சொல்லவந்தது பொதுவான, சப்பிய மாங்கொட்டை போன்ற சொல்லாடல்கள் பற்றி)

‘அகில புவனத்துக்கும் தாய் மொழி சம்ஸ்கிருதம் ‘  அல்லது ‘ஜெர்மன் காரன் ராக்கெட் ரகசியத்தை இந்தியாவிலிருந்து தான் திருடினான்’ அல்லது ‘லெமுரியாதான் முதல் கண்டம். உலகின் முதல் மொழி தமிழ் தான்’  அல்லது ‘நடிகர் திலகம்  /  புர்ச்சித் தலைவர் / ரஜினி  / கமல் / …. / …. போல நடிப்பவர் உலகத்தில் யார் உளர்’  அல்லது ‘முதல் குரங்கு திராவிடக் குரங்கு’  அல்லது ‘வால்ட் விட்மனும் பாரதிதாசனும்,’ அல்லது ‘சங்க இலக்கியத்தில் கணினிசார் குழுஊக்குறி’ – போன்ற கவைக்குதவாத தவறான,  நகைச்சுவைச் செய்திகள் தான் இவர்கள் வாழ்க்கையில் உச்சகட்டப் புல்லரிப்பு.

இவர்களில் – இந்த இரண்டாம் வகையின் பெரும்பாலோருக்கு –  ‘வெள்ளைக்காரப் படிப்பறிவு’ குறைவு; உலக ஞானமும் பெற வாய்ப்புகள் குறைவு..  அரவிந்தனின் எலிப்பத்தாயம் (எலிப்பொறி) கதாநாயகன் போல – இவர்களுக்கும் விடிவே இல்லை.

(தொடரும்… )

காந்தியாயணம்…

One Response to “காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1)”

  1. ராஜன் Says:

    இந்த புத்தகத்தை படிக்க தவறாதீர்கள்!திராவிடத்தால் வீழ்ந்தோம்!
    http://www.viruba.com/final.aspx?id=VB0002868


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s