காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2)
30/12/2011
இது இவ்வரிசையில் கடைசி பதிவு. (அப்பாடா!)
நீங்கள் இதற்கு முந்தைய இரு பதிவுகளைப் படித்தால் இப்பதிவு புரியக் கூடும்…
… இந்த இரு பிரிவுகள் 1 ) சிந்திக்கும் திறனற்ற வெள்ளைக்கார மனம் கொண்ட படித்த மௌடீகர்கள் 2 ) சிந்திக்கும் திறனற்ற படிக்காத கிணற்றுத் தவளைகள்…
இவை தவிர பெரும்பாலோர் மூன்றாம் பிரிவினர் – இந்த, மிகுந்த, மிக்க பெரும் பெரும்பான்மையான மற்றவர்களுக்கு – எந்த விஷயத்தில் அசிரத்தையும், சோம்பேறித் தனமும்… இவர்களைப் பெருமளவும் மந்தை மனப்பான்மை கொண்டவர் எனச் சொல்லலாமோ?
சில சமயங்கள் யோசிக்கிறேன் – இம்மூன்று பிரிவுகள் தானா உள்ளன, இருந்தன நம் நாட்டில்? இந்த, அடுத்த தலைமுறைகளில் தமிழகத்து / இந்திய அதிகார மையங்களில், காவல்-நீதித் தளங்களில், கல்வியறிவூட்டுதலில், நெறிப் படுத்தல்களில், அரசியல் தளங்களில், தொழில்முனைவோர்களில், விவசாயிகளில், கலை-இலக்கியம்-தத்துவம் சார்ந்து பணியாற்றியவர்களில், பணியாற்றுவோர்களில் நேர்மையாளர்களுக்கு, தகுதி வாய்ந்தவர்களுக்கு இடமே இருந்ததில்லையா? கிடையாதா?
நல்லவேளை – ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் – நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய மனிதர்கள் இன்னமும் இருக்கின்றனர். மிகுந்த முனைப்போடு அவர்கள், ஆரவாரமில்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த நம்பிக்கை தரும் விஷயமல்லவா இது!
உண்மையிலேயே நாம் மிகவும் பாக்கியசாலிகள்.
ஆம். மேற்கண்ட, பெரும்பாலும் பொருட்படுத்தவேண்டாத இம்மூன்று பிரிவுகளைத் தவிர ஒரு நான்காம் பிரிவினர் ஆனால், மிக மிகக் குறைந்த அளவில் உள்ளனர், இருந்தனர் – இவர்கள் உண்மையான அறிவு ஜீவிகள். கர்மயோகிகள். ஞான யோகிகள்.நேர்மையாளர்கள். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்கள். சிரத்தை மிக்கவர்கள். தளரா முனைப்பு கொண்டவரகள். நுண்மான் நுழைபுலம் கண்டறிந்தவர்கள். இவர்களில் பலர் நமக்கு அறிமுகம் அற்றவர்களாக இருக்கலாம். நிறைய எழுதாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள், ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் ஒத்திசைவு உடையவர்கள்.
திரு தரம்பால் (வரலாற்றியலாளர்), திரு டி ஆர் நாகராஜ் (சமூக, அரசியல், இலக்கிய சார்பில் – ஆழ்ந்த அற்புதமான கருத்துகள் கொண்டவர், காந்தி-அம்பேத்கர் உரையாடலாளர், கர்நாடகத்தைச் சார்ந்தவர்), முனைவர் சி வி சேஷாத்ரி (விஞ்ஞானி, சமூகவியலாளர்), திரு சங்கர் குஹா நியோகி (சத்தீஸ்கட் மக்கள் தலைவர்), முனைவர் லக்ஷ்மி தாத்தாச்சார் (சம்ஸ்க்ரித, அறிவியல், விவசாய ஆராய்ச்சியாளர்), திரு நரேந்திரநாத் நாயுடு (மக்கள் தலைவர், காந்தியவாதி, சித்தூர், ஆந்திரம் – இவர் நம் ‘மோகமுள்’ தி ஜானகிராமனின் மருமகனும் கூட) – மற்றும் பலர் இம்மாதிரியினர்.
இவர்களை நான் பலகாலம் படித்து, பின் அறிந்து சிறிதளவு பழக நேர்ந்தது – யாம் பெற்ற பேறு தான்! (இவர்களில் தாத்தாச்சார் தவிர யாரும் உயிருடன் இல்லை, இப்பொழுது)
இத்தலைமுறையினர்களில் – மாதிரிக்கு ‘முன்றில்’ மகாதேவன் அவர்களை (குறைந்த பட்சம் ஒரு ‘உலகத் தரம்’ வாய்ந்த அற்புதமான சிறுகதையை எழுதிய, நம்முடைய மா அரங்கநாதன் அவர்களின் மகன் இவர் – அரங்கநாதன் அவர்களும் கொண்டாடப் பட வேண்டியவர் தான்! முன்றில் – ஆம். அதே ‘அணிலாடு முன்றில்’ வழியாகப் பெயர் வைக்கப் பட்டது தான் – சற்றொப்ப 20 ஆண்டுகட்கு முன் உலா வந்த ஓர் அழகான இலக்கியச் சிறு பத்திரிக்கையும் கூட, இப்பெயரில் மாம்பலம் ரங்கநாதன் தெருவில், மகாதேவனின் ஒரு புத்தக விற்பனை நிலையம் கூட இயங்கி வந்தது) எடுத்துக் கொள்ளுங்கள். 80களில் 90களில் இவர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த முனைப்புடன் செயல் பட்டார். இப்போது விற்பனை வரி தொடர்பான வழக்குரைஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக உள்ளார் சென்னையில்; இவரால் நம் தமிழக அரசுக் கருவூலத்துக்கு வந்துள்ள வரவு குறிப்பிடத் தக்கது – இவர் போன்றோர், சான்றோர், நீதிபதிகளாக முடிந்தால் சென்னை உயர் நீதி மன்றம் நிச்சயம் இன்னமும் உயர்வும் பெருமையும் பெறும்.
இன்னொருவர் இரா சாயிநாத் அவர்கள். இவர் சிறு வயதில் மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்து தன் தளரா முயற்சியாலும், விடாவுழைப்பினாலும், அறிவு கூர்மையினாலும் மிகவும் முன்னேறியவர், பண்பாளர். இப்போது லண்டனில் வாழ்ந்தது கொண்டிருக்கிறார் – பல சிறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பல விதங்களில் உதவி செய்து வருகிறார்; கணையாழி பத்திரிகை நடத்திய ‘தி ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’யில் 80களில் – இவருடைய குறுநாவலும் வந்தது – தலைப்பு ஞாபகம் இல்லை.
இன்னும் பலர் இந்த நான்காம் வர்ணத்தில், பிரிவில் உள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிப் பின்னொரு காலத்தில் பார்க்கலாம்…
<… உங்களுக்கு ஆதர்சமானவர்களை, ஆத்மார்த்தமானவர்களை, நண்பர்களை – பெயர், குணாதிசியங்களோடு இங்கே நிரப்பிக் கொள்ளலாம்...>
=-=-=-=
மறுபடியும், மேற்கண்ட எளிமைப் படுத்தப் பட்ட நான்கு ‘வர்ண’ங்களுக்கு, புள்ளியியல்ரீதியாக(!) வருவோம்.
நான்காம் வர்ணத்தைச் சார்ந்தவர்கள், மகத்தானவர்கள் மிகக் குறைவு.
மூன்றாம் வர்ணத்தவர் மந்தை சார்பினர் – நம் மக்களின் மிகப் பெரும்பான்மையினர்.
இரண்டாம், முதலாம் வர்ணத்தினர் பளிச்சென்று முத்திரைகளுடன் தெரிபவர்கள், பவனி வருபவர்கள். ஒதுக்கித் தள்ளப் படவேண்டியவர்கள் என்றாலும், இவர்கள் சார்பினர் தாம் மிக அதிக அளவில் நம் சூழலில், போலி அறிவுத் தளத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு சிறுவனுக்கு, முதிரா இளைஞனுக்கு, வாழ்க்கை அனுபவங்கள் குறைந்தவனுக்கு — ஏதோ ஒரு விதத்தில், இடதுசாரி – வலதுசாரி – பூசாரி / பிற்போக்கு – முற்போக்கு – வயிற்றுப் போக்கு / பாட்டாளி – முதலாளி – சீக்காளி / மேல் – கீழ் – நடு / இலக்கியம் – அலக்கியம் / கவிதை – கிவிதை / … போன்ற இலகுவில் வசப் படும் படிமானங்கள், சுலபமான முத்திரை குத்தல்கள் – அவை சார்ந்த எண்ணங்கள், பல பரிமாணங்களற்ற, கவைக்குதவாத தட்டையான போக்குகள் போன்றவை தான் சாஸ்வதம்.
இதில் சிறிது விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால்- நம் இளைஞர்களில் பெரும்பாலோருக்கு இந்த நான்காம் வர்ணத்தவர் கிடைப்பது மிக மிக அதிசயம்…
ஆனால் இந்தப் போக்கையும் மீறி நான்காம் வர்ணத்தவரை நான் அப்போது அடைந்தது என் பாக்கியம் தான் எனச் சொல்லவேண்டும்.
=-=-=-=
இப்போது நாம் முதலாம் வர்ணத்திற்கு – எப்படி நான் போய்ச் சேர்ந்தேன் என்பதை நோக்கி மறுபடியும் வருவோம்:
… சோவியத் யூனியன், சீனா பதிப்பித்த பல்வேறு புத்தகங்களும் – பொதுவாக, இவை பொது உடைமை பற்றியவை – என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. மாக்சிம் கார்கி-யின் தாய், ஜூலிஸ் புசிக்-கின் ‘தூக்கு மேடைக் குறிப்புக்கள்’ போன்ற புத்தகங்கள், மேலும் – ராகுல் சாங்க்ருத்யாயன், ஷிப்தாஸ் கோஷ், சாரு மசூம்தார், கோசம்பி, கோவிந்தன் (கடைசி இருவரை இன்னமும் நான் மதிக்கிறேன்) போன்றவர்களின் பெரும்பாலும் எளிமைப் படுத்தப் பட்ட, வசீகரக் கருத்தாக்கங்கள், இந்தியப் பாரம்பரியத்தை மிகவும் சாராத போக்குகள் – என் மனதை, கற்பனையைக் கவர்ந்திருந்தன..
ஆனால், நல்ல வேளையாக 19 வயது வாக்கில், திராவிட மாயையிலிருந்து, பிரிவினைக் கோட்பாடுகளில் இருந்து – ஏற்கெனவே விடுபட்டிருந்தேன். பின்னோக்கி யோசித்துப் பார்த்தால், எனக்கு இது கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கிறது. எந்த சுய சிந்தனையுள்ள மனிதனும் – அவனிடம் (அல்லது அவளிடம்) அடிப்படை நேர்மையிருந்தால், இதில் இருந்து மீள்வது எளிது.
ஏனெனில், இம்மாயை, திராவிட மாயை – பொய்களினால், காலி அட்டைப் பெட்டிகளினால் அடிப்படைக் கட்டுமானம் செய்யப் பட்டது.
=-=-=-=
ஆனால், சுமார் 25 வயது வாக்கில்தான் ‘பொதுவுடைமை’ (கம்யூனிசம், மார்க்சியம்) மாயையிலிருந்தும் என்னால் விடுபட முடிந்தது. ஏனெனில் ‘பொதுவுடைமை’ என்பது ஒரு மாயக் கண்ணாடி – இப்படித்தான் வாழ்க்கை, இதுதான் புரட்சி, இப்படித் தான் அதனை வென்றெடுக்க வேண்டும் என்று ஒரு சுலபமான வாழ்க்கைப் பாதையைக் காண்பிக்கிறது, இது.
மனிதர்களை விட்டு, மனித நேயத்தை விட்டு – என்னவோ means of production, relations of production என்று அறிவியல் பூர்வமாகச் சிந்திப்பதாக பாவனை செய்வது – ஆனால் நடைமுறையில் தாங்கொண்ணா வன்முறை தான் இதற்குத் தெரியும். கருத்தியல் சார்ந்த வன்முறைகளைக் கூட (‘பேச்சில் பலாத்காரம், கருத்துலகக் கோழைகளின் கடைசி ஆயுதம்’) நாம் ஓரளவாவது நாம் ஒப்புக் கொள்ளலாம் – ஆனால் நம் மக்களை – நம் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை – அழித்தொழிப்பது, புரட்சிக்கு ஒரு வழி அல்ல என்பது சில காலமாவது இயக்கங்களுடன் பரிச்சயம் இருந்தால் தான் தெளிவு படும்.
ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்த வேண்டும்: கோழைத்தனமான வன்முறை தவிர்த்த – மனிதாபிமானமிக்க் மார்க்சியத்துக்கு (‘இந்தியம்’ படுத்தப் பட்ட மார்க்சியம் என்று இதனைச் சொல்லலாமோ என்னவோ!) தங்களை அர்ப்பணிப்பு செய்த நேர்மையாளர்களும் தமிழ் சூழலில் இருந்தனர், இருக்கின்றனர் – என் மதிப்புக்குரிய ‘நிகழ்’ ஞானி போல, எஸ் என் நாகராஜன் போல. ஆனால் அவர்களைப் பற்றி நான் பேசவில்லை.
இங்கும் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும்: நான் தமிழகத்துப் புரட்சிக் கனல்களுடன் அபரிமிதமாகப் பழகியவன் அல்லன். ஆனால் கேடயம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், மனஓசை போன்ற பத்திரிகைகள் மூலமும், இவர்களுடைய ‘கட்சித் திட்டங்கள்’ மூலமும் இவர்களை அறிய முயன்றேன்; சில காரணங்களால், சிலரை நேரடியாக அறிந்திருந்தேன் – அவ்வளவே!
அதில் ஒருவர் 1980-களில் ‘ராஜீவ் காந்தியைக் கொல்லுவோம்’ என்று பாண்டிச்சேரியில் வீராவேச சுவரொட்டி ஒட்டி, பின்னர் காவல் துறையினரால் பிடிக்கப் பட்ட பிறகு குய்யோ முறையோ என்று அழுது, பின் ‘நான் பிள்ளைக் குட்டிக்காரன்’ என்று பிலாக்கணம் வைத்து, நான் ஒரு ‘பொதுவுடைமை செய்யப்பட்ட வங்கியில் பணி புரிபவன்’ என்று தனது ‘மரியாதைக்குரிய’ தகுதிகளை முன் வைத்து – பின், சில INTUC தோழர்களால் மனிதாபிமானம் கருதி விடுவிக்கப் பட்டது ஒரு நகைச்சுவை. ஆனால் இம்மாதிரி ஆட்களின் பின்னாலும் தோழர் தோழர் என்று சில வெள்ளந்தி இளைஞர்களும் அலைந்து கொண்டிருந்தனர். தீவிர இடதுசாரி இளைஞர்கள் படிப்பறிவு, யோசிக்கும் முனைப்பு, செயல் திறம் உடையவர்கள் என்று நான் அதுகாறும் நம்பி வந்தது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை நான் அப்போது தான் அறிந்தேன்.
இந்த இயக்கங்கள் சார்ந்த சிலர் நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம். தைரியமானவர்களாக இருந்திருக்கவும் கூடும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் மிகப் பலர் மிக சொகுசான அரசுப் பணிகளில் இருந்துகொண்டு – அரசு வன்முறை, தரகு முதலாளித்துவம், பூர்ஷ்வா என்று வெட்டிப் பேச்சு, புரட்சிகரக் கோழைத்தனம் பேசுபவர்கள் தான்.
=-=-=-=-=
அப்போது, நடு 1980-களில் என்பதாக ஞாபகம் – மத்திய இந்தியாவின் மா-லே கண்ணர்களுடன் தான் என்னுடைய தொடர்புகள் இருந்தன – அக்காலத்தை நினைக்கும்போது – அப்போது தமிழகத்தில் இருந்த சுமார் சில நூறுகளில் இருந்த புரட்சிப் புயல் மா-லே க்களில் – மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி, மக்கள் யுத்தம் என ஆயிரமாயிரம் பிரிவுகள், ஒருவருக்கொருவர் வசவுகள், புலம்பல்கள், புரட்சிகர புழுதி வாரி இரைத்தல்கள் !
சுமார் பத்து வருடங்கட்குள் – பல விதமான, நிறமான அனுபவங்கள் – சேவைகள், அர்ப்பணிப்புகள், துரோகங்கள், அடி-உதைகள், பொச்சரிப்புக்கள், குடுமிப் பிடிச் சண்டைகள், அபாண்டங்கள், கொலைகள் – சம்பந்தப் பட்ட பல விஷயங்கள்… நிற்க, கொலைகளை நான் செய்யவில்லை – ஆனால் இவை இயக்கக் கோழைத்தோழர்கள், மற்றத் தோழர்களுக்குச் செய்தவை அல்லது ‘வர்க்க எதிரி’களுக்குச் செய்தவை.
எனக்கு நினைவு இருக்கும்படி – அக்காலத்தில் தண்டகாரண்ய பிரிவுகள் இப்படி வெட்டி வீரம் சார்ந்தவையாக இருந்திருக்க வில்லை. ஆனால் சொல்லொண்ணா வன்முறையில் திளைத்திருந்தவை தான் அவை என்பதில் சந்தேகமே இல்லை.
கனவுகள் பகற்கனவுகளானது, அவர்களை சரியான பின்னணியில் புரிந்து கொள்ள முனைந்தது என்னுடைய பரிணாம வளர்ச்சி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல….
=-=-=-=-=
எது எப்படியோ – சுமார் 25 வயது வாக்கில், 1988-90ல் முழித்துக் கொண்டு, மலங்க மலங்க நான் விழித்துக் கொண்டதற்கு – மிகப் பல காரணங்கள் – திராவிடத் தலைவர்கள் பால் மிகுந்த சோர்வு கலந்த அருவருப்பு ஏற்பட்டதும், மார்க்சிய-லெனினிய இயக்கங்களை பெரும்பாலும் வெறும் பொறுக்கித்தனம் / வன்முறை சார் குழுக்களாக நான் பார்க்க ஆரம்பித்ததும் – மிக முக்கியமாக, படிப்பு (பொருளாதார, சமூகமானுடவியல், வரலாறு, அரசியல் சார்ந்தவை), வாழ்க்கை அனுபவ தளங்கள் விரிந்ததும் காரணங்கள். போற்றத்தக்க தரம்பால் அவர்களிடம் சிறிது கூடப் பழக முடிந்ததும் என் பாக்கியம். ஜோசப் கொர்நீலியஸ் குமரப்பாவும், வென்டெல் பெர்ரியும். ஜோசப் கேம்ப்பெல்லும் கூட மிகுந்த உதவி செய்தனர்… எண்ணிறந்த எழுத்தாளர்களுக்கு, நபர்களுக்கு, நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்..
காந்தி தொடர்பான பயணங்கள், க்ஷேத்திராடனங்கள், படிப்பு, தொழில், தோட்டம் என்று சில சுற்றுக்கள் சுற்றியிருக்கிறேன். பல விஷயங்கள் செய்ய முயன்றிருக்கிறேன்… சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்றாலும்…
பின் காந்தியின் கோட்பாடுகளின் ஒன்றான தர்மகர்த்தா முறையில் (trusteeship) – சில காலத்திற்கேற்ற மாற்றங்கள்(!) செய்து சில சிறு தொழிற்சாலைகளை நிறுவினேன் – சில நண்பர்களுடன் (பாவம், அவர்கள்!) சேர்ந்து கொண்டு. இதில் மிகச்சில சிறு வெற்றிகள் – பல பெரும் தோல்விகள். அவமானங்கள். ஆனால் மிகப் பல படிப்பினைகள்.
எப்படியோ, நல்லபடியாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இப்போதும் என் பார்வைகள், நோக்கங்கள் மிகவும் விரிந்து விட்டவை என நான் சொல்லவில்லை – பொய்களின் கட்டுமானங்களில் இருந்து உண்மையை நோக்கிச் செல்ல முயல்கிறேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமோ என்னவோ…
=-=-=-=
எது எப்படியோ – கருணாநிதி போன்ற உதிரி நகைச்சுவைகளைப் பற்றி மட்டும் எவ்வளவு நாள் எழுதிக் கொண்டே இருப்பது?
எவ்வளவோ அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன அன்றோ…
ஆக, நேரம் கிடைக்கும் போது நான், என் அறிவுக்கு எட்டிய வகையில், நம் காந்தி பற்றி மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழி பெயர்ப்புகளாகவே இருக்கும் என நினைக்கிறேன்…
30/12/2011 at 17:15
நம்மண்ணின் வாழ்ந்த, வளர்ந்த பண்புடையோர் இட்டுச்சென்ற பாதைக்கு வந்தமைக்கு நன்றி. ஒவ்வொருவரும் சாத்வீகம், இராசதம், தாமத ஆகிய மூன்று நிலைகளுக்கு ஆட்படவேண்டியுள்ளது. இதில் வண்ணமாச்சர்யங்களின் கட்டிலிருந்து விடுபட்டு “தினையனைத்தும் தீமை” இல்லாததாகிய “இன்றமை வருத்தங்களிலிருந்து” அறியாமையிலிருந்து, மாற ஒத்திசைவு ஒத்துழைக்கும். என நம்புகிறேன்.