“பஹுரூபி காந்தி”

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் அறிமுகம் (1964ல் வெளியிடப் பட்டது);

அனு பந்தியொபாத்யாய் அவர்களின் முன்னுரையின் தமிழாக்கம்

இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1949-ல் இருந்து என்னிடம் இருக்கிறது. நான் 1948-ல் வங்காளத்தில் இருந்த கஸ்தூரிபா பயிற்சி முகாமை விட்டுவிட்டு இருக்கும்போது  டி ஜி டெண்டுல்கரின்  புத்தகமான ‘மகாத்மா’வின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டு இருந்தபோது, அங்கே கிராமத்து மக்களும், மாணவிகளும், காந்திஜி அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்து கொண்டு இருப்பதை அறிந்தேன்.அவர்கள் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர், நூல் நூற்றனர், பிரார்த்தனை செய்தனர். அவர்களில் சிலர் தேசீய இயக்கத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றவர்கள் கூட – ஆனால் அவர்களுக்கு எது காந்திஜியின் உண்மையான பங்களிப்பு என்பது தெரிந்திருக்கவில்லை என நினைத்தேன்  -. ஒரு வேளை நான் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, ஆனால் எனக்கு அப்போது அப்படித்தான் தோன்றியது.

நான் இப்போதும் கூட அப்படியே உணர்கிறேன் – நான் தினமும் பார்க்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும், இவர்களில் சிலர் கல்வியறிவு பெற்றவர்கள் கூட –  உடலுழைப்பை வெறுத்து ஒதுக்குகின்றனர். நானும் உடலுழைப்பின் மேன்மையை போற்றுபவன் அல்லன் – இருந்தாலும் நான் உடலுழைப்பின் கஷ்டத்தை உணர்ந்தவன்.  அதனால் தான் நான் பிரதி தினமும் சிறிதளவு உடலுழைப்பில், பணி செய்பவர்களுடன் ஈடு படுகிறேன் – மேலும், கொஞ்சம் பணத்தைக் கொடுத்தால் மற்றவர்களை எனக்கு வேலை செய்ய வைக்க முடியும் என்கிற அதிகார மனப்பான்மையை நான் வளர்த்துக் கொள்ளாமலிருக்கவும் தான்.

தங்கள் வாழ்வாதாரங்களுக்காக பலவேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களின் உழைப்பில் தன்னார்வத்துடன், சுய அர்பணிப்புடன் பங்கு கொண்டவரான காந்திஜியை, நான் காண்பிக்க விரும்பினேன். ஆக, இப்புத்தகத்தில் சில விவரிப்புகள் ஒரு முறைக்கு மேல் திருப்பிச் சொல்லப் பட்டுள்ளன.  நான் நிச்சயமாக, காந்திஜியைக் கண் மூடித்தனமாக வழிபாடு வழிபாடு செய்பவர்களின் கும்பலுக்கு ஆள் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் நான் நம் நாட்டு இக்கால இளைஞர்களை – காந்திஜியை ‘தேசப் பிதா’வாகவோ அல்லது நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராகவோ மட்டும் பார்த்து – விமர்சனம் செய்வதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தப் புத்தகத்துக்கான கரு என்னுடையது தான். நான் இதனை முதிரா இளைஞர்களுக்காக (teenagers) எழுதினேன். இந்தப் புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் டி ஜி டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தைச் சார்ந்து எடுக்கப் பட்டுள்ளன – இதற்காக, என்னுடைய இச்சிறிய புத்தகத்திற்காக நான் எவ்வளவு டெண்டுல்கர் அவர்களிடம் கடன் பட்டிருக்கிறேன் என்பதை நான் விவரிக்க இயலாது.

என் கூச்சத்தினால் இந்தப் புத்தகத்தின் பதிப்பித்தல் தாமதமாகியது. திரு என் ஜி ஜோக் (N. G. Jog), முனைவர் பி ஆர் ஷென் ( Prof PR Sen) அவர்கள் தயை கூர்ந்து இதன் கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்தனர். திரு எம் சலபதி ராவ் (M. Chalapathi Rau) அவர்கள் எனக்கு, இப்புத்தகத்தின் இருபது அத்தியாயங்களை/அறிமுகங்களை ஒரு தொடராக நேஷனல் ஹெரால்டில் பதிப்பிக்க உதவி செய்தார்.

திரு ஆர் கே லக்ஷ்மன் அவர்களுக்கு அவர் வரைந்து தந்த படங்களுக்காக நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

ஜவஹர்லால்ஜி அவர்களுக்கு, முன்னுரை எழுதித் தந்தமைக்காக மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

இப்புத்தகத்தைப் படிப்பவர்களில், ஆயிரம் இளைஞர்களில் ஒரு இளைஞராவது காந்திஜியின் பணிகளை. வேலைகளைச் செய்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

அனு பந்தியொபாத்யாய் (ஏப்ரல், 1964)

காந்தியாயணம்…

அரம்…

06/01/2012

… அல்லது இப்படியாகத் தானே!

இக்கதையின் நாயகி, பேயவள் காண் எங்கள் அன்னை ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே!

=-=-=-=

முன் தினமே புயல் வரப் போவது தெரியும். அதனால் என்ன என்கிற அசட்டை, நம் பள்ளி என்ன கடலில் இருந்து பல கிமீ தூரத்தில் இருக்கிறதே; ஆக ஒரு பிரச்சினையுமில்லை என்கிற எண்ணம்.

பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டுப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்த வேண்டும் வேறு.

நான் அரசுப் பாடபுத்தகங்களை (இவை நம் தமிழக அரசின் ‘சமச்சீரழிவுக் கல்வி’ சார் புத்தக ஆபாசங்கள்; கருணாநிதியின் கைங்கர்யம்) அறவே  உபயோகிக்காமல் வேறு பல விதங்களில் ‘பாடம்’ நடத்தியதால் – குழந்தைகள், நிச்சயம் அரையாண்டுத் தேர்வு நடத்த வேண்டும், அப்போது தான் அதில் தாங்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியும் என்று அடம் பிடித்ததால் வந்த வினை.

விளைவு: ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தங்களுக்கு இஷ்டப்பட்டவைகளை, தாங்கள் பின்புலம் தேடிப் படித்தவை, கலந்து-பேசி ஆலோசித்தவை, கனவு காண்பவை – பற்றி அரசியல் / சமூகவியல் / அறிவியல் / வரலாறு / புவியியல் / கணிதம் சார்ந்து விலாவாரியாக எழுத – எனக்கு  90 விதமான கையெழுத்துகளில் சுமார் 800 பக்கங்கள் படிக்க வேண்டும், மதிப்பிட வேண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ஒரு பக்கமாவது நேர்மையாக பதில் குறிப்புக் கொடுக்க வேண்டும்! ஐயோ!

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலும் கூட சுமார் நூறு மணிநேரமாவது ஆகும், இந்த விடைத் தாள்களைத் ‘திருத்தி’ முடிக்க. ஒரு நாளுக்குப் பனிரெண்டு மணிநேரம் ‘திருத்தினாலும்’ 8 நாட்களாகும். கடவுளே!

ஒரு பிரமையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அன்று டிசம்பர் 29, 2011.

=-=-=-=

பின் மாலை வாக்கில், எங்கள் பள்ளியில் வசித்துக் கொண்டிருந்த பறவைகள் அனைத்தும் (சுமார் 30 வகையின) மாலைக்குள்ளாகவே எங்கோ பறந்து போய் விட்டிருந்தன. இதனைப் பற்றியும் நான் யோசித்திருக்க வேண்டும்.

புயல் வரவைக் கருதி, மரங்கள் அடர்ந்த பகுதியானதால், கிராமப் புறமானதால், எங்கள் குடியிருப்பில் மின்சாரமும் இல்லை. ஒரே கும்மிருட்டு தான், சிள்வண்டுகளின் ரீங்காரம் கூட இல்லை. ஆஹா, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று விண் தொலைநோக்கியை எடுத்து வந்தால் ஒரு இருபது நிமிடங்களில் வானம் மேகங்களால் மூடப் பட்டு விட்டது.

அது ஒரு நிசப்தமான முன் இரவு – ஆனால் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

பின் இரவெல்லாம் காதைப் பிளக்கும் புயற்காற்றின் பேரோசை. நூற்றுக் கணக்கான நாயனங்கள் உச்ச ஸ்தாயியில் அபஸ்வர ஒலமிடுவதைப் போல. வேறொன்றுமே கேட்க வில்லை.

ஏதேதோ குழப்பமான எண்ணங்கள், அந்த சப்தத்துக்கு இடையில் நான் தூங்கியும் இருக்கிறேன், அதிகாலை பட்சி ஜாலமற்ற திகைப்புக்குரிய திருப் பள்ளி எழுச்சி.

வெளியில் வந்தால், ஆஹா என்று விழுந்து கிடந்தன பலவிதமான வானளாவிய மரங்கள்;

நன்கு வளர்ந்திருந்த நாகலிங்க, குந்துமணி  மரங்களும், புங்கனும்.கருங்காலியும், ஆல மரங்களும் வேரோடு பிடுங்கப் பட்டு தூக்கி எறியப் பட்டிருந்தன.  வாழைகளும், முந்திரிகளும், முருங்கையும், தைலமும், சவுககும் எம்மாத்திரம்!

பல மரங்கள் மொட்டையாக, அவைகள் வாழைப் பழத் தோலி உரிக்கப் பட்டது போல் – கிளைகளையும் இழந்து, மரப் பட்டைகளையும் இழந்து காட்சி அளித்தன.

மரங்கள் பலவற்றிலிருந்து பால் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டாக உடைந்த ஒரு மாபெரும் வேப்ப மரத்திலிருந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் வேர்களுக்குத் அதுவரை தெரிந்திருக்கவில்லை அம்மரத்தின் சகாப்தம்  முடிந்து விட்டது என்று. துக்கம் நெஞ்சை அடைத்தது.

=-=-=

எங்கள் பள்ளி வளாகத்திலேயே சுமார் 80 மாபெரும் மரங்கள் வீழ்ந்தன. சில சுவர்கள் உடைந்தன. பல கூரைகள் இல்லாமல் ஆகின. மின்சாரம் வருவற்கு குறைந்த பட்சம் இன்னும் இரு வாரங்களாகும்…

அழகான, அமைதியான நிழல் தரும் மரங்கள் இருந்த பள்ளியில்,  திடீரென்று இளம் காலையிலேயே ஒரே வெளிச்சம். சூரிய ஓளி கண்ணை உறுத்தியது. வெப்பம் தகித்தது.

பள்ளி யை அவசியம் சீக்கிரம் திறக்க வேண்டும். அரசுப் பரீட்சைக்கு செல்லப் போகும் பனிரெண்டாம், பத்தாம் வகுப்பினருக்கு மிக முக்கியமான சமயம் இது. அவர்கள் வீடுகளில் பெரும்பாலும் படிப்பதற்கான, முனைவதற்கான சூழல் இல்லை.

எப்படி இச்சேதங்களை எதிர் கொள்ளப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.

=-=-=

எதிர் கொள்ளலா? நின்று யோசிக்க நேரம் இல்லை. உழைப்பு ஒன்று தான் வழி.

இரண்டாம் ‘உலகப்’ போர் சமய ஜெர்மனிய படுகொலைத் தளங்களில் எழுதியிருந்தது போல, ஒரே வழி: ‘arbeit macht frei’ – ‘உழைப்பு விடுதலை செய்யும்’ தான்.

கடந்த ஆறு நாட்களாக வீழ்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே வேலை. நன்றாக முதுகு ஒடிக்கும், அதற்கும் மேலாக மனதை மிக வேதனை படுத்தும் செயல்.

சுற்று வட்டாரத்தில் சங்கிலி அரங்களின் ஓயாத ஓலங்கள்; தப் தப் என்று மரத் துண்டுகள் விழும் சப்தங்கள். அறுக்கப் பட்ட, கழிக்கப் பட்ட கிளைகள் மற்ற கிளைகளின் மீது விழும் நாராச உரசல்கள். மாமரங்களின் வெட்டப் பட்ட சவங்கள் இழுத்துச் சென்று அடுக்கப் படும் காட்சிகள்.

புழுதியினூடே, பறக்கும் மரத்தூள்களின் படலத்தினூடே, இவைகளைப் பார்த்து, வெட்டப் பட்ட மரங்களில் இருந்து பொங்கி வழியும் மரச்சாறுகளை முகர்ந்து, சப்தங்களைக் கேட்டு –  சிறிது நேரம் கழித்து மனம் வெறுமையாகி விடுகிறது.

ஓரளவு அபரிமிதமான உடலுழைப்புக்குப் பின்பு, உடல் அயர்ந்து விடுகிறது. ஆனால் மனமும் மூளையும் விடாமல் உந்தி, காரியங்களை நிறைவேற்ற வைக்கின்றன – யோசிப்புக்கும் அசை போடுதலுக்கும், இடமே கொடுக்காமல். கசாப்புக் கடையில் பணி புரிபவர்களின் மனோ நிலையும்  இப்படித் தானோ என்னவோ… தொடர்ந்த வேலை.

சுமார் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இப்படி வேலை செய்த பின் – கால்கள் தள்ளாடி, பஞ்சின் மேல் நடப்பதைப்  போல இருக்கும். காக்கைக் குளியல் முடிந்து பெயருக்கு உண்டு விட்டு 6 மணிக்கு படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் நிர்மலமான, கனவுகளற்ற சமாதி நிலை.

ஆக சுமார் இரண்டு வருடங்களுக்கு எங்கள் பள்ளிக்கு மதிய உணவு, காலை மாலை சிற்றுண்டிகள் செய்வதற்கும் விறகு தயார்.

பள்ளி விடுமுறையானாலும் வந்திருந்த சக ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகள் – அனைவரும் அசாத்தியமாக  உழைத்தனர்.  சில சமயம் தோன்றுகிறது  அனைவரின் கூட்டுறவை, அன்பை, தங்கள் இடத்திற்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்க சில சமயங்களில் அவல நிலைகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றனவோ என்று.

எது எப்படியோ, .சுவர்கள் மதில்கள், வீடுகள் –  உயிரினங்கள் (மக்கள் உட்பட) பெருத்த சேதமின்றித் தப்பின, எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்

ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்

எங்கள் பள்ளியின் நேரத்தை வீணடிக்காத, குட்டி தெய்வமாகிய, ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே, உனக்கு அம்மானை புனைந்து பாட வயதோ நேரமோ இல்லை. ஆகவே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். (மன்னிக்கவும்: இச் சுவரொட்டி கலாச்சாரத்திற்கு)

நீயில்லாவிட்டால் எங்களுக்கு குறைந்தது இரு மாதங்களாகியிருக்கும், பள்ளி வளாகத்தைச் சரி செய்வதற்கு.

கடைசியாக, இரு விஷயங்கள்:

ஒன்று: மீண்டும், பறவைகள் வந்துவிட்டன கடந்த இரு நாட்களில்; சொற்ப மரங்களே இருந்தாலும் அவைகளின் ஜாலத்திற்குக் குறைவே இல்லை.

இரண்டு: நான் இனிமேல் தான் விடைத் தாள்களைத் திருத்த வேண்டும். (ஐயகோ, எம் கை அர நிலையைப் பாரீர்!)

பின் குறிப்பு:அறம்‘ என்ற தலைப்பின் கீழ், அழகான சிறுகதைகளை(யும்) எழுதியிருக்கும் ஜெயமோகன் அவர்கள் என்னை மன்னிக்கவும்.

காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள் என்று இப்புத்தகத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்தலாம்.

அட்டைப் படம்: "பஹுரூபி காந்தி" Bahuroope Gandhi - Written by : Anu Bandopadhyaya First Published : April 1964

பஹுரூபி காந்தி”  என்கிற இச்சிறிய புத்தகம் அனு பந்தியொபாத்யாய் என்பவரால் எழுதப் பட்டது – இதனை நான் முதலில் படித்தது சுமார் நாற்பதாண்டுகட்கு முன்பு. ஆனால் இப்போது படிக்கும் போதும், அதே பிரமிப்பு தான் எனக்கு.

அடிப்படையில் இது சிறார்களை, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப் பட்டது.அவர்களது கலைக்கப் படாத உள்ளுணர்வுகளுக்கு. கலங்காத நேர்மைக்கு, மகத்தானக் குறிக்கோட்கள் நோக்கிய மனிதநேயம் சார்ந்த முனைப்புகளுக்கு – உரமிடும் வகையில் அமைந்த, எளிய வாக்கியங்கள் நிறைந்தது இப்புத்தகம். ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் எளிமையான கோட்டோவியங்கள் கொண்டது. கூட  ஜவஹர்லால் நேருவின் முன்னுரையும்.

ஏப்ரல் 1964-ல் பாபுலர் ப்ரகாஷன் பதிப்பகத்தினரால் வெளியிடப் பட்டு பின் ஒரு சில பதிப்புகளே வந்து கடைசியில் தேசீயக்கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுமத்தால் ( NCERT) மறுபடியும் 1981 -ல் பதிப்பிக்கப் பட்டது இது.

எனக்குத் தெரிந்து கன்னட மொழியில் கூட வந்துவிட்டது  இப்புத்தகம் – சில வருடங்கள் முன்; ஆனால் நம் தமிழில் இதுவரை வரவில்லை.

ஆனால், என்னைப் பொறுத்தவரை – மிக எளிமையாக எழுதப் பட்டதாக இருந்தாலும், இது காந்தியைப் பற்றி எழுதப் பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானது. அனைத்து இந்திய மொழிகளிலும் கொணரப் பட வேண்டியது இது.

ஆகவே, இப்புத்தகத்திற்கு நான் நம் தமிழில் ஒரு பெயர்ப்பைப் பண்ணலாம் என இருக்கிறேன்; நேரம் கிடைக்கும்போது 2-3 நாட்களுக்கு ஒரு முறை, இப்புத்தகத்தின் ஒரு அத்தியாயம் இங்கு பதிக்கப் படும்.

(கவனிக்கவும், இது ஒரு சுத்த மொழி பெயர்ப்பு அல்ல; என் முக்கிய உந்துதல், “பஹுரூபி காந்தி” யின் இலக்கண இலக்கிய சன்மார்க்க சத்திய சுத்தமான உருவாக்கம் அல்ல.  மாறாக – ‘தேசப் பிதா,’ ‘அண்ணல்,’ ‘அஹிம்சாவாதி,’ சத்யாக்ரஹி,’ ‘இந்தியப் பண்பாட்டை மீட்டெடுத்தவர்’  போன்ற  பரிமாணங்களுக்கப்பால், மிக மிக அப்பால், அவர் தம் ஆளுமைகளை, கர்ம-ஞான யோகதரிசனத்தை, முழு மனிதராக உலாவியதை,  சிறிய கோடிட்டுக் காட்டுவது தான்)

காந்தியாயணம்…