அரம்…

06/01/2012

… அல்லது இப்படியாகத் தானே!

இக்கதையின் நாயகி, பேயவள் காண் எங்கள் அன்னை ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே!

=-=-=-=

முன் தினமே புயல் வரப் போவது தெரியும். அதனால் என்ன என்கிற அசட்டை, நம் பள்ளி என்ன கடலில் இருந்து பல கிமீ தூரத்தில் இருக்கிறதே; ஆக ஒரு பிரச்சினையுமில்லை என்கிற எண்ணம்.

பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டுப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்த வேண்டும் வேறு.

நான் அரசுப் பாடபுத்தகங்களை (இவை நம் தமிழக அரசின் ‘சமச்சீரழிவுக் கல்வி’ சார் புத்தக ஆபாசங்கள்; கருணாநிதியின் கைங்கர்யம்) அறவே  உபயோகிக்காமல் வேறு பல விதங்களில் ‘பாடம்’ நடத்தியதால் – குழந்தைகள், நிச்சயம் அரையாண்டுத் தேர்வு நடத்த வேண்டும், அப்போது தான் அதில் தாங்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியும் என்று அடம் பிடித்ததால் வந்த வினை.

விளைவு: ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தங்களுக்கு இஷ்டப்பட்டவைகளை, தாங்கள் பின்புலம் தேடிப் படித்தவை, கலந்து-பேசி ஆலோசித்தவை, கனவு காண்பவை – பற்றி அரசியல் / சமூகவியல் / அறிவியல் / வரலாறு / புவியியல் / கணிதம் சார்ந்து விலாவாரியாக எழுத – எனக்கு  90 விதமான கையெழுத்துகளில் சுமார் 800 பக்கங்கள் படிக்க வேண்டும், மதிப்பிட வேண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ஒரு பக்கமாவது நேர்மையாக பதில் குறிப்புக் கொடுக்க வேண்டும்! ஐயோ!

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலும் கூட சுமார் நூறு மணிநேரமாவது ஆகும், இந்த விடைத் தாள்களைத் ‘திருத்தி’ முடிக்க. ஒரு நாளுக்குப் பனிரெண்டு மணிநேரம் ‘திருத்தினாலும்’ 8 நாட்களாகும். கடவுளே!

ஒரு பிரமையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அன்று டிசம்பர் 29, 2011.

=-=-=-=

பின் மாலை வாக்கில், எங்கள் பள்ளியில் வசித்துக் கொண்டிருந்த பறவைகள் அனைத்தும் (சுமார் 30 வகையின) மாலைக்குள்ளாகவே எங்கோ பறந்து போய் விட்டிருந்தன. இதனைப் பற்றியும் நான் யோசித்திருக்க வேண்டும்.

புயல் வரவைக் கருதி, மரங்கள் அடர்ந்த பகுதியானதால், கிராமப் புறமானதால், எங்கள் குடியிருப்பில் மின்சாரமும் இல்லை. ஒரே கும்மிருட்டு தான், சிள்வண்டுகளின் ரீங்காரம் கூட இல்லை. ஆஹா, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று விண் தொலைநோக்கியை எடுத்து வந்தால் ஒரு இருபது நிமிடங்களில் வானம் மேகங்களால் மூடப் பட்டு விட்டது.

அது ஒரு நிசப்தமான முன் இரவு – ஆனால் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

பின் இரவெல்லாம் காதைப் பிளக்கும் புயற்காற்றின் பேரோசை. நூற்றுக் கணக்கான நாயனங்கள் உச்ச ஸ்தாயியில் அபஸ்வர ஒலமிடுவதைப் போல. வேறொன்றுமே கேட்க வில்லை.

ஏதேதோ குழப்பமான எண்ணங்கள், அந்த சப்தத்துக்கு இடையில் நான் தூங்கியும் இருக்கிறேன், அதிகாலை பட்சி ஜாலமற்ற திகைப்புக்குரிய திருப் பள்ளி எழுச்சி.

வெளியில் வந்தால், ஆஹா என்று விழுந்து கிடந்தன பலவிதமான வானளாவிய மரங்கள்;

நன்கு வளர்ந்திருந்த நாகலிங்க, குந்துமணி  மரங்களும், புங்கனும்.கருங்காலியும், ஆல மரங்களும் வேரோடு பிடுங்கப் பட்டு தூக்கி எறியப் பட்டிருந்தன.  வாழைகளும், முந்திரிகளும், முருங்கையும், தைலமும், சவுககும் எம்மாத்திரம்!

பல மரங்கள் மொட்டையாக, அவைகள் வாழைப் பழத் தோலி உரிக்கப் பட்டது போல் – கிளைகளையும் இழந்து, மரப் பட்டைகளையும் இழந்து காட்சி அளித்தன.

மரங்கள் பலவற்றிலிருந்து பால் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டாக உடைந்த ஒரு மாபெரும் வேப்ப மரத்திலிருந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் வேர்களுக்குத் அதுவரை தெரிந்திருக்கவில்லை அம்மரத்தின் சகாப்தம்  முடிந்து விட்டது என்று. துக்கம் நெஞ்சை அடைத்தது.

=-=-=

எங்கள் பள்ளி வளாகத்திலேயே சுமார் 80 மாபெரும் மரங்கள் வீழ்ந்தன. சில சுவர்கள் உடைந்தன. பல கூரைகள் இல்லாமல் ஆகின. மின்சாரம் வருவற்கு குறைந்த பட்சம் இன்னும் இரு வாரங்களாகும்…

அழகான, அமைதியான நிழல் தரும் மரங்கள் இருந்த பள்ளியில்,  திடீரென்று இளம் காலையிலேயே ஒரே வெளிச்சம். சூரிய ஓளி கண்ணை உறுத்தியது. வெப்பம் தகித்தது.

பள்ளி யை அவசியம் சீக்கிரம் திறக்க வேண்டும். அரசுப் பரீட்சைக்கு செல்லப் போகும் பனிரெண்டாம், பத்தாம் வகுப்பினருக்கு மிக முக்கியமான சமயம் இது. அவர்கள் வீடுகளில் பெரும்பாலும் படிப்பதற்கான, முனைவதற்கான சூழல் இல்லை.

எப்படி இச்சேதங்களை எதிர் கொள்ளப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.

=-=-=

எதிர் கொள்ளலா? நின்று யோசிக்க நேரம் இல்லை. உழைப்பு ஒன்று தான் வழி.

இரண்டாம் ‘உலகப்’ போர் சமய ஜெர்மனிய படுகொலைத் தளங்களில் எழுதியிருந்தது போல, ஒரே வழி: ‘arbeit macht frei’ – ‘உழைப்பு விடுதலை செய்யும்’ தான்.

கடந்த ஆறு நாட்களாக வீழ்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே வேலை. நன்றாக முதுகு ஒடிக்கும், அதற்கும் மேலாக மனதை மிக வேதனை படுத்தும் செயல்.

சுற்று வட்டாரத்தில் சங்கிலி அரங்களின் ஓயாத ஓலங்கள்; தப் தப் என்று மரத் துண்டுகள் விழும் சப்தங்கள். அறுக்கப் பட்ட, கழிக்கப் பட்ட கிளைகள் மற்ற கிளைகளின் மீது விழும் நாராச உரசல்கள். மாமரங்களின் வெட்டப் பட்ட சவங்கள் இழுத்துச் சென்று அடுக்கப் படும் காட்சிகள்.

புழுதியினூடே, பறக்கும் மரத்தூள்களின் படலத்தினூடே, இவைகளைப் பார்த்து, வெட்டப் பட்ட மரங்களில் இருந்து பொங்கி வழியும் மரச்சாறுகளை முகர்ந்து, சப்தங்களைக் கேட்டு –  சிறிது நேரம் கழித்து மனம் வெறுமையாகி விடுகிறது.

ஓரளவு அபரிமிதமான உடலுழைப்புக்குப் பின்பு, உடல் அயர்ந்து விடுகிறது. ஆனால் மனமும் மூளையும் விடாமல் உந்தி, காரியங்களை நிறைவேற்ற வைக்கின்றன – யோசிப்புக்கும் அசை போடுதலுக்கும், இடமே கொடுக்காமல். கசாப்புக் கடையில் பணி புரிபவர்களின் மனோ நிலையும்  இப்படித் தானோ என்னவோ… தொடர்ந்த வேலை.

சுமார் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இப்படி வேலை செய்த பின் – கால்கள் தள்ளாடி, பஞ்சின் மேல் நடப்பதைப்  போல இருக்கும். காக்கைக் குளியல் முடிந்து பெயருக்கு உண்டு விட்டு 6 மணிக்கு படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் நிர்மலமான, கனவுகளற்ற சமாதி நிலை.

ஆக சுமார் இரண்டு வருடங்களுக்கு எங்கள் பள்ளிக்கு மதிய உணவு, காலை மாலை சிற்றுண்டிகள் செய்வதற்கும் விறகு தயார்.

பள்ளி விடுமுறையானாலும் வந்திருந்த சக ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகள் – அனைவரும் அசாத்தியமாக  உழைத்தனர்.  சில சமயம் தோன்றுகிறது  அனைவரின் கூட்டுறவை, அன்பை, தங்கள் இடத்திற்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்க சில சமயங்களில் அவல நிலைகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றனவோ என்று.

எது எப்படியோ, .சுவர்கள் மதில்கள், வீடுகள் –  உயிரினங்கள் (மக்கள் உட்பட) பெருத்த சேதமின்றித் தப்பின, எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்

ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மன்

எங்கள் பள்ளியின் நேரத்தை வீணடிக்காத, குட்டி தெய்வமாகிய, ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே, உனக்கு அம்மானை புனைந்து பாட வயதோ நேரமோ இல்லை. ஆகவே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். (மன்னிக்கவும்: இச் சுவரொட்டி கலாச்சாரத்திற்கு)

நீயில்லாவிட்டால் எங்களுக்கு குறைந்தது இரு மாதங்களாகியிருக்கும், பள்ளி வளாகத்தைச் சரி செய்வதற்கு.

கடைசியாக, இரு விஷயங்கள்:

ஒன்று: மீண்டும், பறவைகள் வந்துவிட்டன கடந்த இரு நாட்களில்; சொற்ப மரங்களே இருந்தாலும் அவைகளின் ஜாலத்திற்குக் குறைவே இல்லை.

இரண்டு: நான் இனிமேல் தான் விடைத் தாள்களைத் திருத்த வேண்டும். (ஐயகோ, எம் கை அர நிலையைப் பாரீர்!)

பின் குறிப்பு:அறம்‘ என்ற தலைப்பின் கீழ், அழகான சிறுகதைகளை(யும்) எழுதியிருக்கும் ஜெயமோகன் அவர்கள் என்னை மன்னிக்கவும்.

Advertisements

One Response to “அரம்…”

  1. sathi62 Says:

    நினைவுக்கு வரும் பாடல்: நல்லோர் வரவு – அல்லோர் வரவு. நல்லோர் – தென்றல் வரவு தேமா துளிர்த்தல். அல்லோர் வரவால் தாங்கள் காட்டும் எழுத்து வடிவு காட்சி.
    நாம் நம் சமுதாயத்திற்கு, நம்முடைய சூழ்ந்திருப்போர்க்கு, நம்மிடம் கல்விபயிலும் மாணவர்களுக்கு – தென்றலா? புயாலா? …..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: