காந்தி எனும் உழைப்பாளி

02/02/2012

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம்

காந்தி எனும் உழைப்பாளி

இந்த சுறுசுறுப்பான, மிகுந்த வேலையுள்ள (படு ‘பிசி’யான) வழக்குரைஞர், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு புகட்டிய அறிவுரை:

நீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாமல், நீதி மன்றங்களுக்கு வெளியே உங்கள் வழக்குகளை, சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அவருடைய ஓய்வு நேரத்தில்அவர் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் , பவுத்தர்கள் போன்ற மதத்தினரின் நூல்களைப் படித்தார். மற்ற ஞானிகளின், அறிஞர்களின் புத்தகங்களையும் கற்றறிந்தார்.

இம்மாதிரிப் புத்தகங்களைப் படித்ததினாலும்,  தன்னுள் அமிழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததாலும அவருக்குத் உறுதி ஏற்பட்டது / தோன்றியது:

ஒவ்வொருவரும், ஒவ்வொருநாளும் மூளை சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபடாமல், சிறிது   உடலுழைப்பில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் படித்தவர்களும், படிக்காதவர்களும், மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், நாவிதரும், கழிவுகள் அகற்றுபவரும் – இவர்கள் அனைவரும் சமமான சம்பளம் பெறவேண்டும் என்பதும்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக, தன் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், ஒரு ஆசிரமத்தில்,  தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டார். அவருடைய சில ஐரோப்பிய நண்பர்களும் அவருடன் ஆசிரம வாழ்க்கையில் ஈடுபட விழைந்தனர். அவர்கள் அனைவரும் கடினமாக உழைக்கும், தற்சார்புடைய விவசாயிகளைப் போல – பண்ணை நிலத்தை உழுதனர், பழத் தோட்டங்களை  உருவாக்கினர், பராமரித்தனர். அவர்கள் தங்கள் பண்ணையில், கூலிக்காகத் தொழிலாளிகளை நியமிக்க வில்லை.

ஹிந்துக்களும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பார்சீக்களும், பிராமணகளும் சூத்திரர்களும், தொழிலாளிகளும் வழக்குரைஞர்களும், வெள்ளையர்களும் கறுப்பர்களும் – அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கத்தினர் போல வாழ்ந்தனர் – ஒரு பொது உண்ணுமிடத்தில, ஒரு பொது சமையலறையில் சமைத்த உணவைச் சாப்பிட்டனர். அவர்களுடைய உணவு எளிமையானதாக இருந்தது; அவர்கள எளிய  உடை கரடு முரடாக இருந்தது.

அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர செலவினங்களுக்காக நாற்பது ரூபாய் கொடுக்கப் பட்டது. அந்த வழக்குரைஞரும், அவர் மாதாமாதம் (அக்காலத்திலேயே)  நாலாயிரம் ரூபாய் சம்பாதித்தும், அதே நாற்பது ரூபாயைத்தான் பெற்றுக் கொண்டார் பிரதி மாதமும். அவர் அனுதினமும் ஒரு கடினமான வேலை முறையை, நேரம் தவறாமல், துல்லியமாகக் கடைப் பிடித்தார் – ஒரு நாளுக்கு ஆறு மணிநேரங்களே தூங்கினார்.

ஆசிரமத்தில் ஒரு குடிசை கட்டப் பட்டால், அவர் தான் முதலில் கூரைச் சட்டங்களின் மேல் ஏறிப் பணி புரிபவராக இருப்பார். அவர் அப்போது பலவித ஆணிகள் நிறைய பையுறைகள (‘பாக்கெட்டுகள்’) கொண்ட உழைப்பாளிகளின் கரடுமுரடான நீல வண்ண மேலாடை போட்டுக் கொண்டிருப்பார. ஒரு பையுறையிலிருந்து சுத்தி ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய அரமும, ஒரு துளையிடும் எந்திரமும் அவர் அரைக்கச்சை வார்ப்பட்டையிலிருந்துத் (‘பெல்ட்’) தொங்கிக் கொண்டிருக்கும்.., தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு அவர் பொரிக்கும் வெயிலில், தன் சுத்தியுடனும், அரத்துடனும் பணி புரிந்தார்..

ஒரு நாள் உணவிற்குப் பின் அவர் ஒரு புத்தக அலமாரி உருவாக்க ஆரம்பித்தார். ஏழு மணிநேரக் கடின உழைப்புக்குப் பின் அவர் மேற் கூரை வரை எட்டிய அந்த அலமாரியைச் செய்து முடித்தார்.

ஒரு சமயம், ஆசிரமத்துக்கு வழியாக இருந்த பாதை கருங்கல் ஜல்லி போட்டுச் செப்பனிட வேண்டியருந்தது. ஆனால் அப்போது அவரிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை. ஆகவே அவர் ஒவ்வொரு நாளும் ஆசிரமத்துக்கு வெளியே நடை பழகச் சென்று, திரும்பி வரும்போது எல்லாம, சிறிய சிறிய கற்களை பொறுக்கிக் கொணர்ந்துச் சேமித்தார். அவருடைய சக தோழர்களும் அவ்வாறே செய்தனர். ஆக, அவரால் மற்றவர்களை இக்காரியத்தில் ஈடுபடுத்த முடிந்ததால்,  விரைவில் சாலை போடுவதற்கான கருங்கல் குவிக்கப் பட்டது.

ஆசிரமத்தில் வசித்த குழந்தைகள் கூட, சமையல செய்தல், தோட்டவேலை, துப்புரவு செய்தல, அச்சுக் கோர்த்தல், மரவேலை, தோல் வேலை போன்றவற்றில் பங்கு கொண்டனர்.

இவ்வழக்குரைஞர், அதிகாலையில், ஒரு கை இயந்திரத்தில் கோதுமையை அரைத்த பின், உடை மாற்றி கொண்டு, ஐந்து மைல் நடந்து தன் அலுவலகத்தை அடைவார். தன்னுடைய தலை முடியைத் தானே திருத்திக் கொள்வார், தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார், தானே இஸ்திரி போட்டுக் கொள்வார். இரவு முழுவதும் கண் துஞ்சாமல் கொள்ளைநோயால் (பிளேக் வியாதி) பீடிக்கப் பட்டச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு செவிலி வேலை செய்வார். ஒரு தொழு  நோயாளியின் ரணங்களைச் சுத்தம் செய்வார். கழிப்பிடங்களைச் சுத்தம் செய்வதற்குத் தயங்கவே மாட்டார்.

அவர் சோம்பேறித் தனத்தையோ, பயத்தையோ, வெறுப்பையோ, காழ்ப்பையோ, வன்மத்தையோ, துவேஷத்தையோ அறிந்ததே இல்லை…

அவர் தன்னுடைய பத்திரிக்கைக்குக் கட்டுரைகள் எழுதினர்; தானே அவற்றைத் தட்டச்சு செய்தார். பின், தானே தன்னுடைய அச்சகத்தில் அச்சுக் கோர்த்தார். அவசியம் ஏற்பட்டால் அச்சகத்தின் கை விசையால் ஓட்டப் பட்ட யந்திரத்தை இயக்கவும் உதவி புரிந்தார். அவர் புத்தகங்களைச் சேர்த்துப் பிணைத்துக் கட்டுவதில் (பைண்டு) செய்வதில் வல்லவர்.

க்ரியா சக்தி மிகுந்த நுண்ணுணர்வு பாதிக்க வைக்கும் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் எழுதிய அந்தக் கை – இராட்டையில் நூல் நூற்றது, தறியில் பின்னியது, நெசவு செய்தது, புதிய சமையல் வகைகளைச் செய்தது, ஊசியை நுணுக்கமாக உபயோகித்தது, பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் பராமரித்தது, நிலத்தைச் சீராக உழுதது, கிணற்றில் இருந்து நீரைச் சேந்தியது, மரங்களை இழைத்தது, வண்டியில் இருந்து மிகுந்த கனமான பொருட்களை இறக்கியது…

சிறையில் இருந்த போது, அவர் இருநாக்கோடரியால் (‘பிக்-அக்ஸ்’) கடினமான, கட்டாந்தரையைத் தோண்ட வேண்டிஇருந்தது, கிழிந்த துப்பட்டித் துண்டுகளை ஒன்பது மணி நேரங்களுக்குத் தைக்க வேண்டியிருந்தது; அவருக்கு அயர்வாக இருந்தபோதெல்லாம் அவர் கடவுளிடம் தனக்கு பலம் கொடுக்கும் படி பிரார்த்தனை செய்தார். தனக்கு அளிக்கப் பட்ட, ஒப்படைக்கப் பட்ட எந்த வேலையையும் முடிக்காமல் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டதே இல்லை.

அவர் பல  சமயங்கள், அருகிலுள்ள ஒரு நகரத்திலிருந்த கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்க,   நாற்பது மைல்கள் நடந்திருக்கிறார். ஒரு சமயம், ஒரே நாளில் ஐம்பத்தைந்து மைல்கள் நடந்திருக்கிறார். அவர் ஒரு தன்னார்வ தூக்குக் கட்டில் (ஸ்ட்ரெச்சர்)  ஊழியராகப் போர் முனையில் பணி புரிந்த போது, அடிபட்ட போர் வீரர்களை முப்பது-நாற்பது மைல்களுக்குத் தொடர்ந்து தூக்கிச் சென்றிருக்கிறார். அவர் 78 வயதினராக இருந்த போதும் கூட, வாரக் கணக்கில் நாளுக்கு 18 மணி நேரம் உழைத்திருக்கிறார். சில சமயங்களில் அவர் வேலை நேரம் 21 மணி நேரங்களுக்குக் கூட நீடித்திருக்கிறது.
அவ்வயதில், அவரால் நூல் நூற்றல் தவிர, மிகுந்த உடலுழைப்பு செய்ய முடியாமல் இருந்தது – ஆனால், அப்படியும் வெறும் காலுடன் (காலணி அணியாமல்) அவரால் மூன்றிலிருந்து ஐந்து மைல்கள் தினம்  நடக்க முடிந்தது – குளிர் மிகுந்த விடிகாலைகளில், பனி  தோய்ந்த கிராமப் பாதைகளினூடே…
அவருடைய பணி முனைவுக்கான ஆற்றலையும, பணி மீதான அர்பணிப்பையும் கொண்டுதான் – அவர் ‘கர்மவீரர்’ என்கிற பட்டத்தை அவருடைய தென்னாப்பிரிக்கத் தோழர்களிடமிருந்து பெற்றார்.
கர்மவீரர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பிறந்தது 1869ல் அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் அன்று.
காந்தியாயணம்…

5 Responses to “காந்தி எனும் உழைப்பாளி”

 1. krishna Says:

  அய்யா கட்டுரையை படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது… உண்மையில் ஒரு யோகியாகவே தன் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்…. ஒரு சிறு பிழை ஒன்று இந்த கட்டுரையில் உள்ளது…. மகாத்மா காந்தியின் பிறந்த வருடம் 1969 என்று உள்ளது…
  என்றும் அன்புடன்…

  • ramasami Says:

   நன்றி கிருஷ்ணா அவர்களே, என் தவறைத் திருத்தி விட்டேன்.

   அன்புடன்

   ராமசாமி

 2. Anonymous Says:

  மொழிபெயர்ப்பு என்று தெரியாமல் தாய்மொழியிலெழுதப்பட்டது போல் படிக்கும் போது உணர்வு தோன்றுகிறது. இக்காலத்தில் கெட்டது செய்வது எளிதாக இருக்கிறது. நல்லது செய்ய மிகவும் கஷ்டமாகவும், வீணான அலைச்சல், பொருள் விரையம், காலவிரையம் போன்றவை ஏற்படுகின்றன. தன்னம்பிக்கை தருவதாக “காந்தி என்னும் உழைப்பாளி” தொடர் உள்ளது.

 3. ஆதி செல்வம் Says:

  தொடருக்கு நன்றி, தொடரவும்….


 4. காந்தியை பற்றிய பல நுண்ணிய செய்திகளை சிறப்பாக கொடுத்ததற்கு மிக்க நன்றி.ஒருமுறை திருடு போன சமயம் காந்தி துப்பாக்கி வைத்துக்கொள்ள சொன்னதாக படித்த நினைவு.உண்மையா? பலரிடம் கேட்டேன் அப்படி ஒரு சம்பவம் கிடையவே கிடையாது என்கின்றனர் ஆனால் எனக்கோ நன்கு படித்த நியாபகம். உதவமுடியுமா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s