காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 1/3)

29/02/2012

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்: பாரிஸ்டர் — ‘பாரிஸ்டர்’ எனப் படுபவர், இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர் –  அதாவது, ஒரு சீமை வழக்காடிப் பட்டம் பெற்ற வக்கீல் எனப் புரிந்து கொள்ளலாம்.

கீழே இவ்வத்தியாயத்தின் முதல் பகுதி…

=-=-=-=

காந்தி தன் பதினெட்டு வயதில் தனது மெட்ரிக்குலேஷனை முடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து சட்ட மேற்படிப்பு படிக்க (பாரிஸ்டர் ஆக) லண்டன் சென்றார். அவர் தாம் வெளி நாடு சென்ற முதல் மோத் பனியா [இது அவர் ஜாதியின் பெயர்]

லண்டனில் ‘இன்னர் டெம்ப்ல்’ [எனப்படும் சட்டக் கல்லூரி இது – Inner Temple] சேர்ந்த பின் அவர், சட்டத் தேர்வுகளில் தேர்வு பெறுவது என்பது மிகவும் சுளுவான ஒரு விஷயம் என்பதைக் கண்டு கொண்டார் – அதாவது, பாடநூற்கள் மீதான குறிப்புகளை மட்டும், அதுவும் மேலோட்டமாக ஒன்றிரண்டு மாதங்களே படித்து, பலர் தேர்வு பெற்றனர். இம்மாதிரி சுலபமாகப் ’படிக்கும்’ முறையை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொய்மையை வெறுத்தார். ஆக, அவர் மிகுந்த செலவு செய்து அடிப்படைப் பாடநூற்களை வாங்கிப் படித்தார். ஒன்பது மாதங்கள் அபரிமிதமாக உழைத்து, அவர் குண்டு குண்டான ‘பொதுச் சட்டம்’ பற்றிய புத்தகங்களைப் படித்துக் கரைத்துக் குடித்தார்.

அவர் அதற்காக லத்தீன் மொழி கற்றுக் கொண்டு, ரோமானிய சட்டப் புத்தகங்களை, அவற்றின் மூலமொழியிலேயே படித்தார்.

அக்காலத்தில் சீமை வழக்காடிகளுக்குப் ’பட்டப் பெயர்’ – விருந்து  பாரிஸ்டர்கள் (Dinner Barristers)! ஏனெனில் அவர்கள் சட்டம் படிக்கும் மூன்று வருடங்களில், முறையாக நடத்தப்பட்ட 72 விருந்துகளில் பங்கு பெற வேண்டியிருந்தது. இந்த ஆடம்பரமான விருந்துகளுக்கு ஆகும் செலவையும் மாணவர்களே ஏற்க வேண்டியிருந்தது.

காந்திக்கு இம்மாதிரி விருந்துகளில்,சமூகக் கூட்டங்களில் கலந்து கொண்டு பழக்கமில்லை; விருந்துகளும், மது அருந்துவதும் எப்படித்தான் ஒரு நல்ல, தேர்ந்த பாரிஸ்டரை உருவாக்க முடியும் என்பதும் அவருக்குப் புரியவே இல்லை.

இருந்தாலும் அவர் அவ்விருந்துகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவர் ஒரு சைவ உணவு சாப்பிடுபவராகவும், மது அருந்தாதவராகவும் இருந்ததினால் அவரால் அவ்விருந்துகளில் முழுமையாகப் பங்கேற்க முடியாத காரணத்தால், பல சட்ட மாணவர்கள் அவரோடு அவ்விருந்துகளில் கூட்டாளியாக இருக்க விழைந்தனர்.

இந்த விருந்துகளும் கூட்டுப் புத்தகப் படிப்புகளும் – வெட்கம் மிகுந்தவராகவும் தயக்க சுபாவமுடையவராகவும் இருந்த காந்திக்கு உதவவில்லை. ஆக, அவர் புத்தக அறிவு மட்டும் எப்படி ஒருவர் வழக்காட ஏதுவாக முடியும் என்று யோசனை செய்தபடி இருந்தார்.

அக்காலகட்டத்தில்,, ஒரு ஆங்கிலேய வழக்குரைஞர் அவரை ஊக்குவித்து, அவருக்கு யோசனை சொன்னார்:  நேர்மையும், கடின உழைப்பும் போதும் ஒரு வழக்குரைஞனுக்கு – அவன் வேண்டுமளவு சம்பாதிப்பதற்கு.  சட்டங்களின், முக்கால் பங்கு நிதர்சனங்கள் / உண்மைகள் அல்லது மெய்மைகள்தான்; எந்தவொரு வழக்கிலும் அதிலுள்ள உண்மைகளைச் சரியாகப் பார்த்துக் கொண்டால், சட்டம் தானாகவே தன்னைப் பார்த்துக் கொள்ளும்.

மேலும் அவ்வழக்குரைஞர், காந்தியைப் பொது அறிவுப் புத்தகங்களையும், வரலாற்று நூற்களையும் படிக்கும் படி அறிவுறுத்தினார். காந்தியும் அவ்வாறே செய்தார்.

நடுவில் கொஞ்ச நாட்களுக்கு, காந்தி, ஒரு சூட்டிகையான வெள்ளைக் கார கனவான் போலாக முயற்சி செய்தார். அவர், முறையாக ஆங்கிலத்தில் உச்சரிக்க, பேச, நடனமாட, வயலின் வாசிக்க, சமகால நாகரீக உடை அணிய – முயன்றார். ஒரு நவ நாகரீகமான கடையிலிருந்து மிகுந்த செலவு செய்து, ஒரு சூட் வாங்கினார் – இரட்டை வடம் கொண்ட தங்கச் சாவிச் சங்கிலி வாங்கிக் கொண்டார். தொப்பிகளையும் ‘டை’களையும் அணிந்தார்.  இளம் பெண்களுடன் சினேகிதம் வைத்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் சௌகரியமான, சுலபமான வாழ்க்கையுனுள் தன்னை அமிழ்த்திக் கொண்டார்.

ஆனால் சில மாதங்கள் சென்ற பின் அவர் தான் முட்டாள் தனமாக ஊதாரித்தனத்தில் ஈடுபடுவதை அறிந்து கொண்டார்; அவர் இங்கிலாந்துக்கு படிக்க வந்திருக்கிறார் – வெள்ளைக் காரர்களை ‘காப்பி’ அடிப்பதற்காக வரவில்லை – என்பதைப் புரிந்து கொண்டார். ஆக, உடனடியாக தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார்.

குறைந்த வாடகை அறை ஒன்றுக்குத் தன் வீட்டை மாற்றிக் கொண்டார். அடுப்பு ஒன்று வாங்கிக் கொண்டு தன்னுடைய காலைச் சிற்றுண்டியையும், இரவு உணவையும் சமைத்துக் கொண்டார். மதிய உணவை, விலை குறைவான, மலிதான உணவகங்களில் சாப்பிட்டார், போக்குவரத்துக்கு பணம் செலவு செய்வதை நிறுத்தினார். தினமும் 8 முதல் 10 மைல்கள் நடந்தார்.

இவ்வாறு 32 மாதஙகள் இங்கிலாந்தில்  தங்கியபின், காந்தி ஒரு பாரிஸ்டர் ஆக, பதிவு செய்யப் பட்டார். அதன்பின் இரண்டு நாட்களில் அவர் இந்தியாவுக்கு செல்லக் கப்பல் ஏறினார்.

இந்தியாவைச் சென்றடைந்ததும் அவர் மும்பையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஒரு சமையல் காரரைப் பணியில் அமர்த்திக் கொண்டார். அவர் தினமும் உயர் நீதிமன்றம் சென்று எப்படி வழக்குகள் நடை பெறுகின்றன என்று அறிந்து கொண்டார்;  நீதிமன்ற நூலகத்தில் நிறைய நேரம் செலவிட்டார். இந்தியச் சட்டங்கள் பற்றிய புத்தகங்கள் படித்தார்.

அவருடைய முதல் வழக்கு சுலபமானதான ஒன்று. அவருக்கு அதற்கு 30 ரூபாய் கிடைப்பதாக இருந்தது. ஆனால், அந்த 22 வயது பாரிஸ்டர், தன் தரப்பு வாதத்தை விவரிக்க எழுந்து நின்ற போது அவருக்குத் தலை சுற்றி, நாக்கு வறண்டு தொண்டையிலிருந்து சப்தமே எழும்பவில்லை.

வெட்கித்துப் போன அவர், அந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். மறுபடியும் அவர் அந்தக் குறிப்பிட்ட நீதிமன்றத்துக்குச் செல்லவே இல்லை.

அவருடைய செலவுகள் அதிகரித்தபடி இருந்தன – ஆனால் அவர் வருமானமோ சொற்பமாக இருந்தது. அவர் குறிப்புகள் எடுப்பதில், ஆவணங்கள் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் – ஆனால் இம்மாதிரி வேலைகள் ஒரு பாரிஸ்டருடையதாகவும் இல்லை, அவருக்கு வேண்டிய பணம் கிடைக்கவுமில்லை; இப்படி ஆறுமாதங்கள் கழிந்தபின் காந்தி, ராஜ்கோட் இடம் பெயர்ந்து, அங்கிருந்த தன் அண்ணன் குடும்பத்துடன் வாழ ஆரம்பித்தார்.

ஆனால் அண்ணனோ, இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய தன் தம்பிமீது, நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்று  மிக நம்பிக்கை வைத்திருந்தார் – ஆகவே அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். காந்தியும் மிகவும் வருத்தப்பட்டார்.

ராஜ்கோட்டில் இன்னொரு பிரச்சினையும் முளைத்தது. அங்கிருந்த முறைப்படி, காந்தி, அவருக்கு வழக்குகளைக் கொணரும் வக்கீல்களுக்கு இடைத்தரகுப் பணம் (’கமிஷன்’) கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், காந்திக்கு அது நாணயமற்ற, நேர்மையற்ற செயலாகத் தோன்றியதால், அவர் தரகுப்பணம் கொடுக்க மறுத்தார். ஆனால், அவர் அண்ணன் அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி அவரை ஒரு சமரசத்துக்குட்படுத்தினார்.

அச்சமயம் காந்தி மாதம் முன்னூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அவ்வேலையும் பிடிக்கவில்லை, அதனைச் சுற்றியிருந்த பொய்மையும் பிடிக்கவில்லை.

நல்ல வேளையாக அச்சமயம், அவருக்கு, தென்ஆஃப்ரிகாவிலிருந்த தனவந்தரான முஸ்லிம் வணிகர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது – ஒரு குறிப்பிட்ட பணிக்காக ரூ 1575/- பணமும் தென்ஆஃப்ரிகா முதல் வகுப்பில் சென்று திரும்ப முதல் வகுப்புக் கட்டணமும் கிடைப்பதாக. காந்தியும் அப்பணிக்கு ஒப்புக்கொண்டு, தென்ஆஃப்ரிகா செல்ல கப்பலேறினார். காந்திக்கு அப்போது தென்ஆஃப்ரிகாவில் வாழ்க்கை நடத்துவதைப் பற்றி அங்குள்ள சூழல் பற்றி ஒரு விதமான எண்ணமோ அபிப்ராயமோ இருக்கவில்லை.

அவர் பயணம் செய்த கப்பல் ஜான்ஸிபாரில் நங்கூரமிட்டபோது அவர் அந்நகரத்து நீதிமன்றம் சென்று அது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்துகொள்ள முயன்றார். ஆனால் அவருக்கு நிறுவனங்களின் கணக்கு-வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் புரியவில்லை. அவருக்கு ஒப்படைக்கப்படவிருந்த தென்ஆஃப்ரிக வழக்கு கணக்கு-வழக்கு தொடர்பான விஷயமாதலால், காந்தி அதற்காக ஒரு புத்தகம் வாங்கி அதனைக் கவனமாகவும் மும்முரமாகவும் படித்தார்.

(தொடரும்… 2/3)

காந்தியாயணம்…

One Response to “காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 1/3)”

  1. Anonymous Says:

    இந்தியாவின் ஆன்மாவைக் காண தங்கள் சரளமான மொழிபெயர்ப்பு உதவுகிறது. காந்தியைமட்டும் காட்டவில்லை இந்திய கலாச்சார பண்புகளையும் சேர்த்து அறியமுடிந்தது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s