இசுடாலின் என வினோதமாக, ஆனால் தமிழ் இலக்கணசுத்தமாக அறியப் படவேண்டிய, கருணாநிதியின் மகனான ஸ்டாலின் அவர்கள், யாராவது தமக்கு எதிரில் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வந்தாலே, அந்த நிகழ்வை தமக்கு அவமானமாகக் கருதுகிறார்,

[அதிமுக-வினர்] … கருப்பு சட்டை அணிந்து வந்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

ஐயகோ! இம்மனப்பான்மையினால் இவருக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படப் போகின்றன என்பதை இவர் அறிவாரா? கைப்புள்ள இசுடாலினை நினைத்தாலே பாவமாக இருக்கிறது…

எது எப்படியோ, அவருக்குக் தக்க அறிவுரை வழங்குவது நம் கடமையாதலால்… (அதாவது, எனக்கு, தற்போதைக்கு, வேறு உபயோககரமான வேலைவெட்டியில்லை எனப் பொருள் காண்க)

=-=-=-=

அய்யோ! இந்த ஒரிஜினல் அக்மார்க் ஸ்டாலினுமா, நம்முடைய காப்பி இசுடாலினை அவமானப் படுத்துகிறார் – இந்தக் கருப்பு உடையும் கருப்பு மீசையையும் அணிந்துகொண்டு? அதுவும் அவர் நம்முடைய அண்ணாதுரை அவர்களைக் காப்பி செய்து ஆள்காட்டி விரலைத் தூக்குவது என்ன கீழ்த்தரமான கிண்டல்!


பெரியார் ஈவெரா அவர்களாவது அண்ணா குழுவினரின் ‘கண்ணீர்த்துளிகள்’ பற்றி மிகவும் கிண்டலாகப் பேசியவர் – ஆக அவராவது கருப்பு உடை அணிந்து இசுடாலினை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்.


ஆனால், இந்த அண்ணாதுரை அவர்களுமா இப்படி?


இந்த அம்பேட்கர் அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கருப்புடை அணிந்துகொண்டு, இசுடாலினை அவமானப் படுத்துகிறார்?

ஜெயலலிதா, இசுடாலினை அவமானப் படுத்துவதற்குத் தயங்கமாட்டார் – தூக்குத் தண்டனை கொடுப்பதற்கும் அவர் தயார் தான். இதெல்லாம் நமக்கும் தெரியும்தான்!


ஆனால், பெரும் நிதிச் சகோதரர்கள், அவருடைய சொந்தக்-கட்சிக்-கொள்ளைக்காரர்கள் இப்படி கருப்பு உடை அணிந்து அவமானம் செய்வதை எப்படி இசுடாலினால் பொறுக்க முடியும்? அதுவும் இந்த கட்அவுட் கலாநிதி அவர்களின் முகத்தில் பேஸ்தடித்த மலச்சிக்கலுணர்ச்சி வேறு அவரை உறுத்துமே!

பிலிம் ரஜினிகாந்த், பிலிம் கமல்ஹாசன் போன்றவர்கள் அவமானப் படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளலாம் இசுடாலின்; ஏனெனில் அவர்களின் விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆதரவு, அவருக்கு எப்பொழுதாவது தேவைப்படும் என்பதினால்.

மேலும், நான் ஒப்புக் கொள்கிறேன் – இவர்கள் இருவரும் ஹாலிவுட் வெட்டி ரவுடி-குண்டர்கள் போலத் தெரிகிறார்கள் – ஆகவே ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு’ என்று விலகினாலும் விலகலாம். அல்லது, தூய டமிளில்,  ‘துட்டர்களைக் கண்டால் மிரட்டித் துட்டு பிடுங்கு’ என்று அலையவும் செய்யலாம். இசுடாலின் அவர்கள் எப்படிச் செய்தாலும் சரியே!

ஆனால், அய்யோ இந்த ‘சிவகாசி சரவெடி விஜய்’ (அப்படித்தான் எங்கள் கிராம விஜய் நற்பிணி மன்ற வெட்டிஅட்டை சொல்கிறது!) வேறு இப்படி நடராஜக் கோமாளி நர்த்தனம் ஆடுவதை, அதுவும் இப்படி ஒரு கண்றாவிக் கருப்பு உடை அணிந்து கொண்டு அவமானப் படுத்துவதை எப்படிப் பொறுக்க முடிகிறது இசுடாலினால்?

அதையாவது விடுங்கள். இந்த நயன்தாரா,  முமைத்கான் அம்மையார்களுக்கு என்ன ஆயிற்று?  அவர்கள் டுப்பாக்கிக்கு பயந்து கொண்டு அம்மையார்கள் செய்யும் அவமானத்தைத் தாங்கிக் கொள்வாரா இசுடாலின்?

நம்மூர் ரஹ்மான் கருப்பு உடை அணிந்து டைட்டானிக் பிலிம் போலக் கையை விரித்துக் கொண்டு பறப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம், நம் இசுடாலின் அவர்கள் – டொங்குடொக்குப் பாடல்களை விட இந்த கருப்பு உடை அவமானப்படுத்தப் படல் மோசமில்லை என்கிற ரீதியில்…

ஆனால், அய்யய்யோ, இந்தக் கேடுகெட்ட மைக்கேல் ஜாக்ஸனுமா இப்படி? ஐயகோ, நம் இசுடாலின் அவர்களை நாம் எப்படிக் காப்பாற்றக் கூடும்!

தம் தந்தையார் கருணாநிதி அவர்களை, மல்லிகா ஷெராவத் அம்மையார் அவமானம் செய்வதாக இசுடாலின் எண்ணலாம். ஆனால், உற்றுப் பார்த்தால், தந்தையார் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பது போலத் தானே தோன்றுகிறது?

எது என்னவோ, இவற்றையெல்லாம் விடுங்கள். மேற்கண்டவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம். மறக்கலாம்.

ஆனால், நம் வீரமணி அவர்களே இப்படிச் செய்தால், நம்முடைய மேதகு இசுடாலின் அவர்கள் என்னதான் செய்யமுடியும்?

ஆக நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், இசுடாலினை விடாது கருப்பு!

QED.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

நம் அனைவரையும் போல, இவருக்கும் வயது ஆகிக் கொண்டே போகிறது.

அதே நம் அனைவரையும் போல, ஆனால் சிறிது மூப்பினர் ஆன காரணத்தால், கூடிய விரைவில் இவர் இயற்கை எய்தினால் – ஐயகோ,  நாம் என்னதான் செய்யக் கூடும்! நம்மிடம் உள்ள எந்த அரசியல்வாதியிடமும் இத்தகைய மகத்தான நகைச்சுவை உணர்ச்சி இல்லையே… நம் கையறு நிலையைப் பாரீர்!

இதற்காக மட்டுமாவது, அவர் நம்பும் இயற்கையே, நம் கழகக்கண்மணி கருணாநிதி அவர்களின் ஆயுளை, தயவுசெய்து நீட்டிப்பு செய்…

செய்தியாளர்:- உங்களுக்குப் பயந்துதான்,  தி.மு.க. கொடுத்த நெருக்கடியால் தான்  இந்திய அரசு  தீர் மானத்தை ஆதரித்து  அமெரிக்கத் தீர்மானத்திற்கு வாக்களித்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?

கலைஞர்:- நாங்கள் ஒன்றும்  நெருக்கடி கொடுக்க வில்லை.  நியாயத்தை எடுத்துச் சொன்னோம்.   நியா யத்தை ஏற்றுக் கொண்டு  இந்திய அரசு  செயல்பட்டது.

செய்தியாளர்:-  இறுதிப் போர் நடைபெற்றபோ தும் நீங்கள் இதே நியாயத்தை எடுத்துச் சொன்னீர்கள்.  அப்போது ஏன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை?

கலைஞர்:-  அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது.   காலையில்  சாப்பிடவில்லை என்றால்,  மத்தியானம் சாப்பிடும் போது,  காலையில் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்கக் கூடாது.

ஏப்ரல் 2009 – ஒரு நாள், காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு, சொகுசாக மெரீனா கடற்கரைக்குக் காற்றாட வந்து, காலை பதினோரு (11:00 hours) மணி  முதல் கடும் தொடர்  ‘உண்ணாவிரதம்’ இருந்து பின் சுமார் பிற்பகல் ஒரு (13:00 hours) மணிக்கு பசி வந்ததால் (மதிய உணவு புசிக்க வேண்டாமா அய்யா) , இப்படு பயங்கர மெய்சிலிர்க்க வைக்கும் உண்ணாவிரதத்தை நீண்டநெடு இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் முடித்துக் கொண்டாயே, என் தலைவா!

இதனை நீ மறந்திருக்கலாம் நடமாடும் தமிழே. ஆனால் நான் மறக்கவில்லை.

எனக்குத் தெரியும் தியாகப் பிழம்பே, தங்கள் தள்ளாத வயதில் நீவிர் நடாத்திக் காட்டும் அகிம்சை அறவழி உண்ணாவிரதப் போர்களில், நீங்கள் காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் நடுவில், ஒவ்வொரு நாளும் மகத்தான அறப் போராட்டம் நடத்துவீர்கள் என்று…

காலைச் சிற்றுண்டிக்கும் (மனைவி), மதிய உணவுக்கும் (துணைவி) நடுவில் மாபெரும் நடிகர், நம் கலைஞர்...

காலைச் சிற்றுண்டிக்கும் (மனைவி), மதிய உணவுக்கும் (துணைவி) நடுவில் மாபெரும் நடிகர், உண்ணாவிரதமிருக்கும் நம் கலைஞர்...

அய்யா, உங்களுக்கு சிறிது குழம்பி விட்டது என அடியேனின் எண்ணம்; நீங்கள் சொல்லியிருக்க / எழுதியிருக்க வேண்டியது,

காலையில்  சாப்பிட்டுப் பின் மத்தியானமும் சாப்பிட்டேன் என்றால், இவை நடுவில் என்ன  தலைமுடிக்கு உண்ணாவிரதம் இருந்தீர்கள் என்று கேட்கக் கூடாது

=-=-=-=

இயற்கையே, இந்த நகைச்சுவை வெள்ளம் தடங்கில்லாமல் தொடர, தயவு செய்து எம் தமிழகத்தை ஆசீர்வதிப்பாயா??

வாழ்க கலைஞர்! வாழிய அவர் நகைச்சுவை!!

வெற்றிச் சிற்றுண்டிவேல்! வீர மதியஉணவுவேல்!! வாகை இரவு உணவுவேல்!!!

இடையில் உண்ணாவிரதம், வேல் வேல் வேல்!!!!!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

4: காந்தி, லண்டன் சென்ற போது – முதலில் அவர் நடவடிக்கைகள் ’கேனத்தனமாக’ இருந்திருக்கின்றன அல்லவா? பெற்றோர் சொத்தை இப்படியா விரயம் செய்வது? வழிமுறைகளைப் பின்னர் மாற்றிக் கொண்டால், செய்தது சரியாகி விடுமா?

அய்யா,  நீங்கள் சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும். காந்தியின் நேர்மை, அவர் வாழ்க்கையை மறு பரிசீலனை செய்து கொண்டே இருக்கும் தன்மை, எதற்குப் பின்னாலும் ஒளிந்துகொள்ளாமல், சுயபரிசோதனை செய்து கொள்ளும் தைரியம், தன் சுய மதிப்பீடுகளைத் தொடர்ச்சியாக மெருகேற்றி, தன்னையும் பிறரையும் அன்போடு மதித்து, சமரசத்துடன், அறவுணர்ச்சியை விட்டுக் கொடுக்காமல், அரவணைத்துச் செல்லும் தன்மை, அசுர உழைப்பு – இவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அய்யா – காந்தி, இங்கிலாந்து சென்றது அவருடைய பத்தொன்பதாம் வயதில். அங்கு அவர் இருபத்தியோரு வயதினை எட்டுமுன்பே திரும்பி இந்தியாவும் வந்து சேர்ந்தாயிற்று!

யோசித்துப் பாருங்கள் – நம்முடைய இளம்பருவத்தில் இந்த இரண்டாண்டுகளில் (19 – 21),எவ்வளவு யோசித்துச் செயலாற்றுபவர்களாக இருந்தோம் என்று…

எனக்குத் தெரிந்து, மிகப் பெரும்பாலானவர்கள் அப்போதும் கூட, ஒரு சொட்டு விந்து = ஆறு சொட்டு இரத்தம் என்று உளறிக் கொட்டிக் கொண்டு அலைந்தவர்கள் தாம். எப்போதடா ஏதாவதொரு வங்கியில் குமாஸ்தா பதவி கிடைத்து வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆவோம் என அவசரப் பட்டவர்கள் தாம். எப்போதடா பெண் பல பார்த்து, அதில் அதிகப் பணம் கொடுக்கக் கூடிய ஒரு பெண்ணின் தகப்பனாருக்கு, தன் ஆண்குறியை ‘வரதட்சிணை’ என்கிற பெயரில் விற்கலாம் எனப் பேராசை பிடித்து அலைந்தவர்கள் தாம்….

எவ்வளவு மனிதர்களுக்கு (இளைஞர்களையே விடுங்கள்!) தைரியம் இருக்கிறது, நடத்ததை நடந்தபடிச் சொல்ல? நம்மில் எவ்வளவு பேர் – வாழ்க்கையில் கற்றுக் கொள்வதை விடுங்கள் – புதிதாக மொழிகளையும், தொழில்களையும், கருவிகளையும், சித்தாந்தங்களையும், எண்ணப்போக்குகளையும், கற்றுக் கொள்ள முயல்கிறோம்?

நம்மில் எவ்வளவு பேர்கள் தங்கள் வாழ்க்கையை  – தொடர்ந்து பரிசீலிப்பதையே விடுங்கள் – எப்பொழுதாகவாவதுப் பரிசீலிக்கிறோமா?  நம்மில் எவ்வளவு பேர், இருபது வயதில் வாழ்க்கையைப் பற்றித் தெளிவாகச் சிந்தித்து, திட்டவட்டமாக அறவுணர்ச்சி சார்ந்து பிரச்சினைகளை அணுகுகிறோம், அணுகியிருக்கிறோம்?

ஆனால் காந்தி இவ்வனைத்தையும் செய்து இவற்றுக்கு மேலும் சஞ்சாரம் செய்தார் – தன்னடக்கத்துடன், பணிவுடன், கடும் உழைப்புடன், பளிச்சிடும் நேர்மையுடன்….

இப்படிச் செய்வது தான் ‘கேனத்தனம்’ என்றால், காந்தி ஒரு கேனை தான்!

காந்தி ஆற்றோடு போகும் சத்தியவெள்ளம் – கையேந்தி, மனமாறக்  குடித்து மன நிறைவு பெறலாம். அல்லது, அவதூறுப் பேச்சுப் பேசி உங்கள் குண்டியையும் கழுவிக் கொள்ளலாம்.

உங்கள் விருப்பம் எப்படி?

=-=-=-=

காந்தி ஒரு செல்வந்தர் வீட்டில் பிறக்கவில்லை  -ஆனால் அவர் ஏழ்மையில் புழங்கியவரும் அல்லர்;

நேர்மையின் மதிப்பை அறிந்துதெளிந்து கொண்ட அவர், அதே நேரத்தில்,  பணத்தின், உழைப்பின் அருமைகளையும் உணர்ந்தவர். பண சம்பந்தப் பட்ட விஷயங்களில்,  நெருப்பாக இருந்தவர்.

அவர் இங்கிலாந்தில் இருந்த போதும், தன்னுடைய பணச் செலவுகள் பற்றி, தன்னுடைய குடும்பத்தினர் நிலைமை பற்றிக் கவலைப் படவே செய்தார்.

இங்கிலாந்தில், பலவாறான அவருடைய அனுபவங்கள் (காந்தி எனும் வழக்குரைஞர் அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டவை) – மேலோட்டமான பார்வைக்கு ஊதாரித்தனமாகத் தோன்றினாலும்,  அவை, அவர் குடும்பப் பணத்தில் / சொத்தில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

தொடர்புடைய பதிவுகள்:

=-=-=-=

காந்தியாயணம்…

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை –  சுமார் எட்டு சதவிகிதமே மொழிபெயர்த்திருக்கிறேன், இது வரை.

… ஆனால் – சில சமயம், நேரடியாகச் சில நண்பர்கள் வாயால், மின் அஞ்சல்கள் மூலமாகச் சில உரத்த சிந்தனைகள், மழுங்கிய கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அவற்றுக்கு, முடிந்த வரையில் பதிலளிக்க முயல்கிறேன் – இவற்றில் சிலவற்றுக்குப்  பதிலளிக்கத்தான் வேண்டுமா என்று சில சமயம் தோன்றினாலும்.

மிகச் சிலர் வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கின்றனர், ஊக்கம் அளிக்கவும் செய்துள்ளனர், நான் நகைக்கத்தக்க அளவு மட்டுமே  குறைந்தபட்ச வேலை செய்திருந்த போதிலும் – அவர்களுக்கு என் நன்றி.

குறிப்பு (சிலருக்கு மட்டும்): தேவையே இல்லாமல் ’காந்தி மீது கண்டபடி, வாய்க்கு வந்தபடி அவதூறு வைப்போம்’ என்று மட்டும் முனைந்து நீங்கள் எனக்கு எழுதினால், இனிமேலிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியும் பிரசுரிக்கப் படும் – அதாவது உங்கள் மின்னஞ்சலை நான் படித்துப் பதிவு செய்யும் பொறுமை எனக்கு இருந்தால்…  

சமயங்களில் மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஏன் இப்படி பலருக்கு கண்மூடித்தனமான ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது என்று.

கவனிக்கவும்: சில கேள்விகளில் இருந்த பெரும்பாலான கொச்சைத் தமிழ் வார்த்தைகளும், வசவுகளும் எடுக்கப் பட்டு, அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

1. ஏன் இப்புத்தக நடை, தமிழில் மிக எளிமையாக இருக்கிறது?

நான் முன்னுரையில் எழுதியது போல, அனு அவர்கள் – இப்புத்தகத்தைச் சிறுவர்களுக்காகவும், முதிரா இளைஞர்களுக்காகவும் தான் எழுதினார். ஆகவே தான் இதன் நடை இப்படி இருக்கிறது. தவிர, இப்புத்தகம் ஆங்கிலத்தில், பெரும்பாலும் பேசும் நடையில் எழுதப் பட்டது – என்னுடைய அனுமானத்தில், இப்புத்தகம் சரியாக ’எடிட்’ செய்யப்பட்டுச் செப்பனிடப் பட்டிருந்தால் அது இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

2. மொழி பெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டலாமே!

ஆஹா, காட்டலாம் தான் –  நீங்கள் உதவி செய்கிறீர்களா?

ஆனால், ஆங்கிலத்தில் repurposing என்று சொல்வது போல – நான் தமிழாக்கம் செய்தது – ஒரு சுத்தமான வரிக்கு-வரி சரியான மொழி பெயர்ப்பு அல்ல. இதனை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். என் எண்ணமெல்லாம், பாபுஜியின் பன் முகங்களை வெளிக்கொணர என்ன செய்யப் பட வேண்டும் என்று தான்.

மொழி ‘பெயர்ப்பு’ கரடு முரடாக இருப்பதாக நீங்கள் எண்ணினால் – என்ன, எப்படிச் செய்தால் அது சரியாகும் என நீங்கள் சிறிதளவு விளக்கினால் நன்றாக இருக்குமன்றோ?

3. தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் மீதும் கனிமொழி எம்பி மீதும் காழ்புணர்ச்சி கொண்டு விமர்சனம் வைக்கும் நீ யார்? ஆர்எஸ்எஸ் ஜெயமோகனின், கவிஞர் கனிமொழியின் தமிழின உணர்வைக் கொச்சைப் படுத்தியவனின் அல்லக்கை தானே நீ? அதனால் தானே இப்படி காந்தி ஜால்ரா போடுகிறாய்? பச்சைத் திராவிடனாக இருந்து கொண்டு இப்படி பச்சைத் துரோகம் செய்கிறாயே! நீ ஒரு தாய்க்குப் பிறந்தவனா?

நான் யார்? நான் ராமசாமியார்.

அ) அய்யா – ’காழ்புணர்ச்சி’ காத்தவராயன் அவர்களே! நீங்கள் தான் எனக்கு முன்பே அறிமுகமான அந்த ’தங்கவேந்தன்’ என நினைக்கிறேன் அல்லது நீங்கள் அந்த ‘ஒரிஜினல் திராவிடன்’ ஆகவோ அல்லது ‘சம்பூகன்’ ஆகவோ கூட இருக்கலாம். எது எப்படியோ, எனக்கு  நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் இருவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. வெறும் வெறுப்பும், ஆழமான அவநம்பிக்கையும் தான். நான் ஏன் அவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட வேண்டும்?

ஆ) அய்யா, ஜெயமோகன் அவர்களை நான் மிகவும் மதிப்பவன். அவர் மாய்ந்து மாய்ந்து, மறுபடியும் மறுபடியும், மெய்வருத்தம் பாராமல் எழுதும், காந்தி மீதான அவதூறுகளை மீண்டும், மீண்டும் எதிர் கொள்ளும் பக்குவத்தை, அவர் எழுத்துக்களின் ஆழத்தை மெச்சி, தொலைதூரத்திலிருந்து பார்ப்பவன். அவர் தம் எழுத்துக்களில் பெரும்பாலானவையை, 1980களிலிருந்து படித்திருக்கிறேன் – அவ்வளவே. மற்றபடி அவருடன் எனக்குப் பரிச்சயம் கிடையாது. என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதற்குப் பாவம் அவர் என்ன செய்வார்? அவரை ஏன் இழுக்கிறீர்கள் நம்முடைய(!) பிரச்சினையில்? நான் யார் என்று கூட அவருக்குத் தெரியாது!

இ) நான் பொதுவாக, கடந்தகாலம் பற்றிய முன்முடிவுகளில்லாமல், பாரம்பரியஙளை, சமூகப் போக்குகளை அவதானித்து, தற்காலத்தில் தன்னூக்கத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, பேய் போன்றுழைத்து, நம் சிந்தனைகளை எதிர்காலங்களுக்கு இட்டுச் சென்று புதிய தளங்களுக்கு விரிக்கும் மனிதர்களை, பெரும்பாலும் இப்படிச் செயல்படுபவர்களை, மதிப்பவன் – அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புள்ளவனாக இல்லாவிட்டாலும் கூட.  ஆக, இப்படிப்பட்டவர்களின் அல்லக்கையாகக் கருதப் பட்டால், ஆஹா, சந்தோஷமாக, அப்படியே கருதப்பட்டுவிட்டுப் போகிறேன்.

ஈ) அவர் கனிமொழி பற்றி என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது – அதைப் பற்றி அறிந்துகொள்ளும் நேரமும் இப்போது இல்லை – ஆனால், நான் முன்பு எழுதியது போல, கவிதைக்கும் கனிமொழிக்கும் ஒரு விதமான சம்பந்தமும் இல்லை – என் அனுமானத்தில், ஜெயமோகனும் இப்படியேதான் எண்ணக் கூடியவர் என்று எனது மேன்மையான அபிப்ராயம்; ஆனால், அவர் மெய்யாலுமே என்ன எழுதியிருப்பார் என நான் தற்போதைக்கு யூகம் தான் செய்ய முடியும்.

உ) அவர் ஆர்எஸ்எஸ் சார்ந்தவராக ஒரு காலம் இருந்திருக்கிறார் என அவர் எழுதிப் படித்ததாக நினைவு – என்னுடைய இந்தத் தகவல் தவறாகக் கூட இருக்கலாம்,  எப்படியானாலும், நான், ஆர்எஸ்எஸ் என்றால், மத அடிப்படைவாத, மதவெறி இயக்கம் தான், அதன் தொண்டர்களெல்லாம் குண்டர்கள், என எண்ணுபவனல்ல – ‘ஆர்எஸ்எஸ்’ என்கிற பதத்தைக் கெட்ட வார்த்தையாகக் கருதுபவனல்ல. (அதேபோல, நக்ஸல்பாரி என்கிற பதத்தையும்)

ஊ) எப்படி .ஆர்எஸ்எஸ் – திராவிடம் – கருணாநிதி-கனிமொழி –  ஜெயமோகன் – அல்லக்கை என்ற சங்கிலித் தொடர் (?) ஒன்றை உங்களால் எண்ணமுடிந்தது என எனக்குப் புரியவில்லை. உங்கள் குழப்பவாதத்தை, நான் புரிந்து கொண்டே தான் ஆக வேண்டும் என்பதும் இல்லை.

ஐ) நான் திராவிடனா (?) ஆரியனா (??) என்பது குறித்து உங்களுடைய ‘ஆணித்தரமான’ எண்ணங்களை மெச்சுகிறேன். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி:: ஏன் நான் ஒரு ’வெள்ளைத்’ திராவிடனாகவோ, ஊதாதிராவிடனாகவோ இருக்கக் கூடாது? உண்மையில் நான் கொஞ்சம் ஒல்லியான தேகம் படைத்தவன் – ஆகவே நான் ஒரு ’ஊதா’திராவிடனாக இருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகமன்றோ? இப்படியான பட்சத்தில் நான் ஊதாத் துரோகங்கள் தான் செய்யக் கூடுமன்றோ?

ஒ) ஆம், நான் ஒரு தாய்க்குப் பிறந்தவன் தான். (நீங்கள் எப்படி? பல தாய்களுக்கு ஒரே சமயத்தில் பிறந்தவரா?) தயவு செய்து இதனைத் தெளிவு படுத்தவும்.

=-=-=-

எச்சரிக்கை! இன்னமும் சில கேள்வி-பதில்கள் நகைச்சுவை (நேரம் கிடைக்கும் போது) – தொடரும்…

பின் குறிப்பு: காந்திக்கும் அக்கப்போர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும், இப்பதிவு காந்தியாயணம்… தலைப்பின் கீழ் சேர்க்கப் படுகிறது!

கேள்வி: காந்தி, பகத்சிங் தூக்கில் தொங்கக் காரணமானவர், நேதாஜீ  இறப்புக்கும் இவர் தான் மறைமுகக் காரணம். வவுசி கூட இவர் செய்த துரோகத்தால் தான் செக்கிழுத்தார். அது மட்டுமல்ல, அவர் தலித்துகளை நம்பிக்கைத் துரோகம் செய்தவர்.. அம்பேட்கரை ஏமாற்றியவர். பணத்திமிர் பிர்லாக்களின் அடிவருடி. பார்ப்பன-பனியா ஜாதி வெறியர். ஜின்னாவைப் பிடிக்காததால், முஸ்லீம்களை இந்தியாவை விட்டு விரட்டியவர். நம் பெரியாரை மரியாதைக் குறைவாக நடத்தினவர். பிரம்மசரியம் என்று பம்மாத்து செய்தவர். கிழவனானாலும் இளம் பெண்களைப் புணர்ந்தவர்.அவர் தன் பையன்களைக் குட்டிச்சுவர் ஆக்கியவர்.பெண்ணடிமைத்தனத்தை ஆதரித்தவர் – மனைவியைக் கேவலமாக நடத்தியவர். பிச்சைக்காரர் போல நடித்த கபடவேடதாரி…

(இப்படியே அலுப்பாகப் போகிறது, நைந்துபோன புரளிகளும், தப்பும் தவறுமான தமிழில் எழுதப் பட்டதுமான ஒரு மின்னஞ்சல் – எழுதியவர் ஒரு புதுச்சேரி வாழ் திராவிடர் கழகத்தவர் – ஓரளவு எனக்கு அறிமுகமானவர் கூட! அடிப்படையில் இவர் நல்ல மனிதர் தாம் – இந்தக் குருட்டாம்போக்கு ஆரியம், திராவிடம், காந்தி, காமராஜ், வீரமணி, தங்கராசு, பிரபாகரன், வீரப்பன் சம்பந்தப் பட்ட +, – வெறிகளைத்தான் இவர் தவிர்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது – எது எப்படியோ, இவர், நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது திண்ணம்!)

பதில்: அய்யோடி சொக்கீ! ஆமாம். என்ன புத்திசாலி அய்யா நீங்கள், எப்படி ஆணித்தரமாக உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கிறீர்கள்! எவ்வளவு அரிய செய்திகளைத் தருகிறீர்கள்! நன்றி அய்யா, நன்றி.

உங்கள் வீரத்தை மெச்சி,  இதோ உங்களுக்குப் புதிதான – மேலும் பலருக்கும் பெரிதாகத் தெரியவராத திடுக்கிடும் தகவல்களைக் கீழே கொடுக்கிறேன்.

 1. காந்தி 1857ல், முதல் இந்தியச் சுதந்திரப்போரில் பங்கு கொள்ளாமலிருந்ததிலிருந்தே தெரியவில்லையா, அவர் ஒரு தேசத்துரோகி என்று?
 2. காந்தி தான் ஜப்பான் மீது அணுகுண்டு வீசினார்.
 3. காந்தி தென் ஆப்பிரிக்கா செல்லவே இல்லை! அவர் எழுத்துக்களை வைத்தே இதனை நிரூபிக்க முடியும்.
 4. காந்திக்கு உடல் முழுவதும் துணி போட்டுக் கொண்டால் அவருக்கு ஒவ்வாமை, அலர்ஜி ஏற்படும் – அதனால் தான் அவர் இப்படி அரைகுறை உடை அணிந்தார்.
 5. காந்தி தான் பாரதியார் பார்க்காதபோது அவர் மீது பார்த்தசாரதி கோயில் யானையை ஏவி விட்டார்.
 6. காந்தி தண்டி செல்லவே இல்லை. அவர் எழுத்துக்களை வைத்தே இதனை நிரூபிக்க முடியும்.
 7. காந்திக்கு தினமும் ’குவாட்டர்’ அடிக்காமல் தூக்கமே வராது.
 8. காந்தி இவ்வளவு காதி கீதி கைத்தறி என்று பேசினாரே – உங்களுக்குத் தெரியுமா, அவர் இடுப்புத் துணிக்குள் போட்டிருந்தது  நம்ம திருப்பூர் டான்டெக்ஸ் ஜட்டிதான்!
 9. காந்தியுடன் பேசப் போனால், வேட்டியுடன் கோமணத்தையும் உருவி விடுவார் என்று  அம்பேட்கர் நன்றாக அறிந்ததனால்தான், அவர் பேண்ட்-சட்டை-கோட்-சூட் என அவர் உடையை மாற்றிக் கொண்டார்,  தெரியுமா?.
 10. காந்தி, சரோஜினி நாய்டுவைக் காதலித்ததால், அதனைக் கஸ்தூர்பா எதிர்த்ததால், அவரைக் கொலை செய்தார்.
 11. ரஜினிகாந்தைக் கண்டால் காந்திக்குப் பயம். அதனால் தான், ரஜினி பிறப்பதற்கு முன்னாலேயே, அவர் தன்னை, ஆர்எஸ்எஸ் காரர்களை விட்டுக் கொலை செய்யச் சொன்னார்.
 12. காந்தி இறக்கவே இல்லை! அவர் எழுத்துக்களை வைத்தே இதனை நிரூபிக்க முடியும்.
 13. காந்தியே ஒரு ஆர்எஸ்எஸ் காரர் தான்
 14. காந்தி தான் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்தவர் – அதனால் தான் இணையம் முழுக்க இது பரவி விட்டது!
 15. காந்தி காங்கிரஸ் பணத்தில் ஊழல் செய்த போது, அதனைத் தட்டிக் கேட்ட சுபாஷ் சந்திர போஸை, கட்சியை விட்டே வெளியே தள்ளினார் இந்தக் காந்தி. அப்போது, போஸ் ஆரம்பித்த கட்சி தான் அகில இந்திய தம்பி ஆரிய பின்னேற்றக் கழகம்.
 16. காந்தி = கான் தி = தி கான் = The Khan — ஆக இவர் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி!
 17. காந்தி, சீதக்காதி வள்ளலிடமிருந்துதான் காதி பற்றி அறிந்து கொண்டார் தெரியுமா?
 18. காந்தியின் தொகுக்கப் பட்ட எழுத்துக்கள் குண்டுகுண்டாக நூற்றிச் சொச்சம் புத்தகங்கள்! (ஆனால் அவற்றில் 95, மற்ற பத்து புத்தகங்களின்ஸெராக்ஸ் நகல்கள்தான்! இன்னமும் யாருக்கும் இது தெரியாதது வெட்கக் கேடு!!)
 19. ஹஹ்ஹா! காந்தி இறக்கவில்லை – அவர் தான் பென் கிங்ஸ்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 20. காந்தி, கருணாநிதியின் உறவினர் (பாருங்கள்: இரண்டு பெயர்களும் ’க’வில் ஆரம்பித்து ‘தி’யில் முடிகின்றன அல்லவா?)
 21. “நானே காந்தி தான்” : ’கலைஞர்’ கருணாநிதி.
 22. உங்களுக்குத் தெரியுமா – ’அஞ்சா நெஞ்சன்’ மதுரை அழகிரி – சபாலங்கடி கிரிகிரி அவர்களின் மனைவியாகவும் கூட இந்தக் காந்தி  நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது?
 23. ”காந்தியார் தான் திமுக-வின் தோல்விக்குக் காரணம்”: ’கலைஞர்’ கருணாநிதி.
 24. காந்தியின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் கோடிகோடியாகப் பணம் இருக்கிறது தெரியுமா? டாடா பிர்லாவின் பினாமி தான் இந்த காந்தி.
 25. “நான் மட்டும் கருணாநிதியாகா விட்டால், காந்தியாகியிருப்பேன்!” : ’கலைஞர்’ கருணாநிதி.
 26. காந்தி பேசிப்பேசி, நூற்று நூற்றுத்தான் – உலகில் தட்பவெப்ப நிலை மாறி விட்டது.
 27. கூடங்குளத்தை, இந்திய அணுஆராய்ச்சிக் கழகத்துக்குக் காட்டிக் கொடுத்ததே காந்தி தான்.
 28. “தமிழகத்து மின்சார நிலைமை கழக ஆட்சியில் கவலைக்கிடமானதற்கு, காந்தி தான் காரணம்.” : ’கலைஞர்’ கருணாநிதி.
 29. “நடிகர் வடிவேலு அவர்களுக்கு சினிமா வாய்ப்புக்கள் மறுக்கப் படுவதற்குக் காரணம், காந்தி தான்”: ஹரன் ப்ரசன்னா
 30. “ஹரன் ப்ரசன்னா சொன்னதைத் தான் நான் முன்பே என்னுடைய ’ஒள’ பக்கங்களில் சொல்லியிருக்கிறேன்!” : ’பரீக்‌ஷா’ ஞாநி
 31. ”காந்தி என் கனவில் வந்து கண்ணீர் விட்டு காங்கிரசை பார்த்துக் கொண்டிடுவென்றார்; அதனால் தான் சொக்கத்தங்கம் காந்தி அம்மையாருடன் கூட்டணி வைத்திட்டேன்!” : ’கலைஞர்’ கருணாநிதி.
 32. “முன் சநாதனத்வ காந்தியின் பின் நவீனத்துவம்” என்கிற என்னுடைய ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட ஃஃப்ரென்ச் மூல auto-fiction கார்-ஃபிக்‌ஷன் நாவல், மலையாளத்தில் பெயர்க்கப் பட்டு, ஆப்பிரிக்காவில் சிலாகித்துப் பேசப் படுகிறது!  ஆனால், நான் இன்னும் ஆப்பிரிக்கா செல்ல முடியவில்லை என்கிற கேவலத்துக்கு காந்தி தான் காரணம்.” : சாரு நிவேதிதா
 33. சோவியத் யூனியன் உடைந்ததற்கு, சீனாவில் திரிபுவாதத்திற்கு, நக்ஸல்பாரிகள் தோற்றதற்கு காந்தி தான் காரணம்.
 34. காந்திக்கும் நேருவுக்கும் பிறந்தவர் தான் இந்திரா காந்தி.
 35. (உஷ்ஷ்ஷ்ஷ்… இன்னமும் கிட்டே வாருங்கள்)  வெட்கக் கேடு – உண்மையில், காந்தி தான் இந்திராவின் தாயார்!

எச்சரிக்கை! இன்னமும் சில கேள்வி-பதில்கள் – தொடரும்…

காந்தியாயணம்…

… அல்லது காந்தி எனும் சலவைக்காரர்.

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  நான்காம் அத்தியாயம்: வாஷர்மேன்.

=-=-=-=

தென்ஆஃப்ரிகாவில், பாரிஸ்டர் காந்தி, நீதிமன்றத்துக்குப், பாங்கான ஐரோப்பிய உடை அணிந்துச் செல்வார்.

வழக்குரைஞராகப் பணி புரிந்து வந்த அவருக்கு, ஒவ்வொரு நாளும், அவருடைய மேல்சட்டையின் நிறத்துடன் ஒத்திசையும் கழுத்துப் பட்டையை (’காலர்’), சுத்தமானதாகவும், புதிதாகவும் அணிய வேண்டியிருந்தது. அவர் அவர் மேல்சட்டையை இரு நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய சலவைக்கான செலவும் மிக அதிகமாக இருந்தது.

அவருடைய வண்ணார் (சலவைக்காரர்), சலவை செய்து தருவதற்கு, அடிக்கடி தாமதப் படுத்தினார் வேறு. ஆக, காந்திக்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது, தேவையான அளவுக்கு, அவருக்கு சலவை செய்த துணிகள் இருப்பு வைத்துக் கொள்ள.

அவர் மூன்று டஜன் சட்டைகள்+காலர்கள் வைத்துக் கொண்டாலும் கூட, அவருடைய வண்ணார் போல ஒருவரைக் கட்டிக் கொண்டு, அவரால் மாரடிக்க முடியவில்லை.

ஆக, காந்தி அவர் செலவீனங்களைக் கட்டுப் படுத்த வேண்டுமென்று விரும்பினார். ஒரு நாள் அவர், வீட்டிற்குத் திரும்பி வரும்போது, துணி துவைக்க, இஸ்திரி பண்ண என்ன தேவையோ, அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தார். துணி துவைப்பது பற்றி ஒரு புத்தகத்தையும் வாங்கி, அதனைக் கவனமாகப் படித்தார். அவருக்கு நன்றாகத் துவைப்பது எப்படி என்று புரிந்தவுடன், அவர் அனுதினமும் துவைக்க ஆரம்பித்தார்.

பாவம் கஸ்தூர்பா – அவரால் இதனை ஆனந்தமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்க கொடுத்துவைக்கவில்லை – ஏனெனில் காந்தி, அவருக்கும் சரியாகத் துவைப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கலானார்.

அனுதினம் துவைப்பதான, இந்தப் புதுப் பழக்கம் காரணமாக, காந்தியின் தினசரி வேலைப்பளு கூடியது – ஆனால், காந்தி விடாக்கண்டராதலால் அவர், தொடர்ந்து துவைப்பதையும் மற்ற வேலைகளையும் செய்து வந்தார். ஏனெனில், அவருக்கு அந்த வண்ணாரின் ஆகாத்தியத்திலிருந்து விடுதலை பெறுவதும், தன்னுழைப்பின்பாற் சார்ந்திருத்தலும் முக்கியமாகப் பட்டது.

=-=-=-=

ஒரு நாள் அவர், தன்னுடைய கழுத்துப் பட்டையைத் துவைத்து அதற்குக் கஞ்சி போட்டார். அதனைப் பின் இஸ்திரி போடும்போது, அவருக்கு முன்னனுபவம் இல்லாத காரணத்தால், சரியாகச் சூடு செய்யாமலும், அழுத்தம் கொடுக்காமலும் இருந்தார் – அவருக்கு, இஸ்திரிப் பெட்டியின் சூடு மிகுந்தால் எங்கே தன் கழுத்துப்பட்டை எரிந்து போய் விடுமோ என்கிற பயம் வேறு…

ஆக, அவர் அந்த, கஞ்சி அதிகமான, தகடு போல் நின்ற கழுத்துப் பட்டையை அணிந்து கொண்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் அவருடைய உடையைக் கேலி செய்தனர். ஆனால் காந்தி அவர்களுடைய எள்ளி நகையாடலைப் பொருட்படுத்தினாரில்லை, அதனால் வெட்கப் பட்டாரில்லை..

அவர் சொன்னார்: “இது நான் துணிகளுக்குக் கஞ்சி போடுவது முதல் முறையாதலால், தவறு ஏற்பட்டு, அதிகக் கஞ்சி போட்டிருக்கிறேன்.. அதனால் என்ன, பரவாயில்லை. எது எப்படியோ, உங்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது!”

அவர்கள் கேட்டனர்: “ஆனால், இங்கு என்ன சலவைக்கூடங்களுக்கு, வண்ணார்களுக்குப் பஞ்சமா என்ன?”

காந்தி சொன்னார்: “இல்லை, ஆனால் சலவைக்கான செலவீனம் மிக அதிகமாக ஆகிறது என நினைக்கிறேன். ஒரு கழுத்துப் பட்டையைச் சலவை செய்வதற்கான செலவு ஏறக்குறைய, அதன் விலைக்குச் சமமாக ஆகி விடுகிறது. மேலும், வண்ணார்களின் மீது என் சார்பு,, அளவுக்கு மீறியதான ஒன்றாக ஆகி விடுகிறது; ஆக எனக்கு, என் துணிமணிகளை நானே துவைப்பதே உசிதம்”

… பின்னாட்களில், காந்தி, ஒரு சிறந்த வண்ணாராகவும் ஆனார்.

=-=-=-=

ஒரு சமயம், காந்தி தன் குருவாக வரித்திருந்த கோபாலகிருஷ்ண கோகலே அவர்கள், காந்தியுடன் தங்கினார். அச்சமயம், கோகலே அவர்களுக்கு, ஒரு முக்கியமான விருந்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவருடைய மேற்துண்டு கசங்கிப் போயிருந்தது – போதுமான சமயமுமில்லை, ஒரு வண்ணாரிடம் கொடுத்து அதனைச் சலவை செய்து கொள்ள.

காந்தி கேட்டார்: “ நான் உங்களுக்கு, அதனை நன்றாக இஸ்திரி செய்து கொடுக்கட்டுமா?”

“ நான் உங்கள் வழக்குரைக்கும் திறனை நம்ப முடியும், ஆனால் உங்கள் வண்ணார்வேலைத் திறமையை? ஒருக்கால், நீங்கள் என் துண்டினைக நாசப்படுத்தி விட்டால்?” என்றார் கோகலே.

ஆனால் காந்தி தன்னால் சரியாக அக்காரியத்தைச் செய்யமுடியுமென்று கோகலே அவர்களுக்கு உறுதியளித்து – அத்துண்டினை இஸ்திரி செய்தார். கோகலே அவர்களுக்கும்,  திருப்தியாயிற்று – காந்தியை அவர்தம் திறமைக்காக, அவர் மெச்சினார் கூட..

“என்னை இனிமேல் யார் மெச்சாவிட்டாலும் பரவாயில்லை – கோகலே அவர்களின் சான்றிதழே போதும் எனக்கு” என்று காந்தியும் மிக மகிழ்ந்தார்.

=-=-=-=

அவருடைய தென் ஆஃப்ரிக ஆசிரமங்களில், தண்ணீர்ப் பஞ்ச நிலைமை நிலவியது. ஒர் ஊற்றில் இருந்து சுரந்த நீரை எடுத்து, துணிகள் துவைப்பதற்காகப் பெண்கள், நீண்ட தூரம் நடந்து சென்று, மிகச் சிரமப் படவேண்டியிருந்தது. ஆகவே, காந்தியும் இவ்வேலைகளில் பங்கு கொண்டார்.

காதியை, உருவாக்கி உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்த அக்காலகட்டங்களில், கைத்தறிப் புடவைகள் மிகவும் தடிமனாகவும், கனமாகவும் இருந்தன. ஆசிரமத்துப் பெண்கள் இக்கைத்தறிப் புடவைகளை அணிவதற்கு ஒப்புக் கொண்டாலும், அவற்றைத் துவைக்கும் சமயத்தில் கொஞ்சம் முணுமுணுத்தனர். அவர்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்ட காந்தி, அவர்கள் எல்லாருக்கும் தான் ஒரு வண்ணாராக முடிவு செய்து, வேலை செய்தும் காட்டினார்.

அவர், மற்றவர் துணிகளைத் தோய்ப்பதைப் பற்றி, வெட்கமே படவில்லை, பட்டதில்லை.

=-=-=-=

ஒரு சமயம், அவர் ஒரு செல்வந்தரின் வீட்டில், விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அங்கு குளியலறைக்குச் செல்லவேண்டி வந்தபோது அங்கே தரையில் ஒரு சுத்தமான வேஷ்டி வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தார்.

தன் குளியலை முடித்த அவர், தன் வேஷ்டியுடன் கீழே கிடந்த அவ்வேஷ்டியையும் துவைத்து, வெளியே வெய்யிலில் காயப் போடுவதற்குச் சென்றார். காந்தி தன் துவைக்கப் பட்ட வெள்ளைத் துணிகளை எப்பொழுதும், அவற்றிலுள்ள கிருமிகளை அகற்றுவதற்காகவும், அவற்றுக்கு ஏற்படும் பளீரிடும் வெண்மைக்காகவும், பிரித்து, உதறி,  சூரிய வெளிச்சத்தில் காயப் போடுவார்.

… விதிர்விதிர்த்துப் போன அந்த செல்வந்தர் கேட்டார்: ”என்ன செய்துவிட்டீர்கள், பாபுஜீ!”

காந்தி பதில் சொன்னார்: ”ஏன்? இதில் என்ன தவறு இருக்கிறது? அந்த வேஷ்டி, நான் குளிக்கும்போது அழுக்காகியிருக்கக் கூடும் – ஆகவே நான் அதனையும் துவைத்தேன். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க என்னுடைய சிறு பங்கை ஆற்ற, நான் வெட்கப் படவில்லை.”

காந்தி வெட்கப் படவில்லை ஆனால், அந்த செல்வந்தர், இச்சம்பவத்திற்காக வெட்கப் பட்டார்.

=-=-=-=

சிறையில் கூட,, அவருடைய முதிய வயதினை மீறி, காந்தி அவருடைய இடைத்துணி, கைத்துண்டு, கைக்குட்டை போன்றவற்றை, தம் கூட வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை வைக்காமல், சில சமயம் தானே துவைத்துக் கொண்டார்.

ஆகாகான் மாளிகையில், கஸ்தூர்பாவின் கடைசி நாட்களில், அவர் உபயோகித்த கைக்குட்டைகளை, கைத்துண்டுகளை எடுத்துத், தன் கையால் துவைத்தார்.

=-=-=-=

காந்தி, தன் வாழ்நாள் முழுவதும் தான் அணியும் உடை பற்றித் திட்டவட்டமான எண்ணங்கள் கொண்டிருந்தார். அவர் சிறுவனாக இருந்த போதும் கூட, ஆலைகளில்  நெய்யப்பட்ட / உருவாக்கப்பட்ட தன்னுடைய மிருதுவான உடைகளை, மற்ற சிறுவர்களினுடையதைவிட வெண்மையாகத் துவைக்கவே முயன்றார் – அதற்கு அவர் ஒரு ஆழ்கிணறிலிருந்து தண்ணீர் சேந்தி, பாடு பட வேண்டியிருந்தாலும்…

காந்திக்கு எளிமையான பழக்கவழக்கங்கள் மிகவும் பிடித்தமானவை – ஆனால் அதற்காக கசங்கிய, அழுக்கான உடைகளை அவர் விரும்பினாரில்லை. அவர் எப்பொழுதுமே, தன்னுடைய, இடைத்துணி, மேற்போர்வை, கைத்துண்டு போன்றவற்றைத் துளிக்கூட அழுக்கில்லாமலும், கசங்காமலும் வைத்துக் கொண்டார்.

அவர் சுத்தத்தின் உருவமாகவே இருந்தார், எப்பொழுதும்…

=-=-=-=

அடுத்து: காந்தி எனும் நாவிதர்…

காந்தியாயணம்…

”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!) –  படித்தீர்களா?

’திராவிட இயக்கம்’ எனப்படுபவைகள், பெரும்பாலும், திரைப்படப் பணத்தினாலும், திரைப்படக்காரர்களின் / நடிகர்களின் வெகுமதிகளாலும் (பணம் + புகழ் + பிரச்சாரம் + கூட்டம்)  வளர்ந்தன என்பது உண்மைதான் என்றாலும் – பல சமயங்களில், இந்தத் திரைப்படவுலகத்தினர், முழு நேர அரசியல்வாதிகளைக் குப்பை போல நடத்தினர் என்பதும் உண்மை. இந்த திராவிட அரசியல் இயக்கங்களைத் தங்கள் சுய நலத்துக்கு உபயோகப் படுத்தினர்  என்பதும் உண்மை. எப்போது அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கவில்லையோ, இயக்கங்களை விட்டு விலகி, தாறுமாறாக விமர்சனம் வைத்தனர் என்பதும் உண்மை.

முதன் முதலில், ஈவேரா-அண்ணா காலங்களில் கே ஆர் ராமசாமி என்பவர் தான், திராவிட இயக்கத்தின் முழுமுதல் நடிகர்-அரசியல்வாதி என்றுச் சொல்லலாம். இவர் இயக்கத்துக்கு அளித்த பணத்துக்கு, உழைப்புக்கு, ஆடிய ’ஆட்டம்’ அதிகமில்லை எனத்தான் சொல்ல வேண்டும்.

கீழே முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களில், இடது புறத்திலிருந்து மூன்றாவது: அண்ணா. நான்காவது ‘கலைவாணர்.’ ஏழாவது கே ஆர் ராமசாமி...

கீழே முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களில், இடது புறத்திலிருந்து மூன்றாவது: அண்ணா. நான்காவது ‘கலைவாணர்.’ ஏழாவது கே ஆர் ராமசாமி...

அச்சமயம் கொஞ்சம் பிரபலமாக இருந்த ’கலைவாணர்’ என் எஸ் கிருஷ்ணன் சில பிரச்சார வேலைகளைச் செய்ய முடிந்ததே தவிர ரொம்பவும் ‘ஆட’ முடியவில்லை, ஆனால் அதற்காக அவர் முயற்சி செய்யாமலில்லை; கண்ணீர் விட்டழுது, ஆகாத்தியம் செய்து, புலம்பி, கருணாநிதி வழியாக, அண்ணாதுரையிடம் சில பல காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்பதெல்லாம் உண்மைதான்.

இப்பொழுது கொஞ்சம் திமுக வரலாறு…

… ஈவெரா – ஈவெகி சம்பத் பிளவு ஏற்படுத்தப் பட்டு, பின்னர் சம்பத்துடன்,  அண்ணா + மற்றவர்கள் சேர்ந்து திக-வில் பிளவு ஏற்பட்டது 1949-ல்.

பின் அண்ணா+ஐம்பெரும் தலைவர்கள் இயக்கத்துக்குத் தலைமை வகித்த சமயத்தில் (இத்தலைவர்களில் கலைங்கர் கருணாநிதி அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது) எம்ஜியார் காங்கிரஸ் சார்பு நிலையிலிருந்து திமுக சார்புக்கு வந்தார் – இது கலைங்கர் போட்ட, சினிமா+அரசியல் வியாபாரக் கணக்கு

இச்சமயம் சிவாஜி கணேசன் அவர்களும் திமுக அரசியலில் இருந்தார் – 1953 வரை வீரமாக “ஆணையிடு தலைவா ஆணையிடு, அண்ணா, நீங்கள் ஒரு வார்த்தைச் சொன்னால் சினிமா ஒப்பந்தங்களைக் கிழித்துப் போட்டுவிட்டு, முழு நேரக் கட்சிப் பணியாளனாகிவிடுகிறேன்” என்றெல்லாம் பேசிக், கடைசியில் கட்சியை விட்டே விலகினார்,

அவருக்கு.அவர் சொந்தக் கணக்குகள் – நடிப்பு வியாபாரம், போட்டிகள் இன்ன பிற – இவை ஒப்புக் கொள்ளப் பட வேண்டியவையே!

… எம்ஜியார் அவர்களின் திரைசார், மக்கள்சார் வசீகரம் வளர வளர, அவருக்கும் அரசியல் ஆசைகள் வளர்ந்தன. பொதுக் கூட்டங்களில் பேசுவதிலிருந்து – எந்த அரசியல் சார்பான நடவடிக்கைகளிலும், சக
இயக்கம் (மட்டும்) சார்பான பிற தலைவர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுக்கத் தவறினார்; சமயங்களில் எம்ஜியார், அவர்களிடம் அகங்காரத்துடனும் நடந்து கொண்டார் – இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கியமான காரணம், அப்போது அவருடைய உற்ற நண்பரும், அரசியல் அறிவுரை சொல்பவரும், நம்முடைய, பிறர் இரத்தம் உறிஞ்சியே பழக்கப் பட்ட கலைங்கர் அவர்கள், என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

… 1950களின் இறுதியில் ஈவெகி சம்பத் – அண்ணாதுரை வேறுபாடுகள் உச்சகட்டத்தை அடைந்தன. முறைப்படி பார்த்தால், சம்பத் அணியினருக்கே கூடுதல் பலம் இருந்தது. அண்ணா ஒரு வசீகரமான தலைவராக இருந்தாலும், (பெரும்பாலும்) அப்பழுக்கற்றவராக, கருணையுள்ளம் கொண்டவராக இருந்தாலும், அவருடைய ’தன் பலம்’ என்பது கருணாநிதி, எம்ஜீயார்களால் சுற்றி வளைக்கப் பட்டு விட்டது, இதற்குக் காரணம், அவர் ஒரு விதத்தில் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ இருந்ததும்….

இளம் வயதில் அண்ணாதுரையும், சம்பத்தும் விளையாட்டாகக் கைவண்டி இழுக்கின்றனர். இது நாற்பதுகளின் (1940கள்) இறுதியில் எடுக்கப் பட்ட புகைப் படம்... (இவர்கள் இப்படிச் சேர்ந்தே வண்டி இழுத்திருந்தால், தமிழகம் இன்று எங்கோ இருக்கும்!)

சம்பத் அணியினர் – அதன் தலைவர்கள், பெரும்பாலும் திரைப்படத் தொழில் சார்ந்தவர்கள் அல்லர், அம்மாதிரி விசிலடிச்சான் குஞ்சுக்குளுவான்களைச் சேர்க்கக் கூடியவர்கள் அல்ல அவர்கள்.

சம்பத் அணியினர் பெரும்பாலும் அடிமட்ட ஊழியர்களாக இருந்து மேலே வந்தவர்கள் –  ஆகவே அவர்கள், திரைப்படக் காரர்களை, அவர்கள் தர்க்கம் சாரா வசீகரத்தை, அவர்களின் அரசியல் கோட்பாட்டு வறட்சியை  வெறுத்தனர். (சம்பத் அணியிலிருந்த கண்ணதாசன் திரைப்படக் காரர் ஆனாலும், அவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால், அர்ப்பணிப்பால், விடாமுயற்சியால் உயர்ந்தவர் தாம். – கட்சியின் வளர்ச்சிக்காக தான் ஈட்டிய பணத்தைப் பெறுமளவு தொலைத்தவர் கூட)

அண்ணாதுரை தரப்பில் பெரும்பாலும் அப்படி இல்லை; பெரும்பாலான தலைவர்களுக்கு திரை / நாடகத் துறைகள் சார்ந்த பின்னணி இருந்தது.  . ஆக, நமது மாக்கியாவெல்லி கலைங்கர், அண்ணாதுரை-சம்பத் வேறுபாடுகளினால், தன் உள்ளடி வேலைகளினால், திமுகவில் தன் நிலையை மேலும் ஸ்திரம் செய்து கொண்டார்.

இச்சமயம் (கொமாரபாளையத்தில், ஜூன் 1960 என என் நினைவு) நடந்த திமுக-வின் உயர்மட்டக் குழுவில் ஏகப்பட்ட பிரச்சினைகள். முக்கியமாகக் கலைங்கரின் உள்ளடி வேலைகள் – விளைவு: சம்பத் அண்ணாதுரை பிளவு பெரிதானது. ஜனநாயக முறையில் விவாதங்கள், வாக்கெடுப்புக்கள் நடைபெற இருந்ததால், அண்ணாதுரையின் (அதாவது, கருணாநிதியின்)  ஆட்கள், சம்பத்தின் அணியினரால் ஓரங்கட்டப்பட இருந்தனர்); ஆனால், அண்ணாதுரை, பிளவினை, உட்கட்சிப்பூசலை விரும்பாமல், கண்ணீர் விட்டழுது சம்பத்திடம் கோரிக்கை வைத்து, அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்து, அவரது ஆதரவைக் கோரி தானே கட்சிப் பொறுப்பை மீண்டும் வகித்தார்.

இருப்பினும் கசப்புகள் தொடர்ந்தன, வாக்குறுதிகள் பறக்கவிடப்பட்டன. கருணாநிதி வகையறாக்களால் சூழப்பட்டிருந்த அண்ணாதுரையும் இந்த கசப்புகளைத் தொடர அனுமதித்தார்.

பின்னர் வேலூரில் நடந்த (ஜனவரி, 1961 என நினைவு) பொதுக் குழுக்கூட்டத்தில், சம்பத் அணியினர் திட்டவட்டமான முடிவுகளை எடுக்கலாம், கட்சியைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம் எனத் திட்டமிட்டனர்.

இதனைக் கேள்விப் பட்டு அஞ்சிய கருணாநிதினாதிகள் கயமைத் திட்டமிட்டு, தங்களை எதிர்ப்பவர்களை அடித்து உதைத்து அச்சுறுத்தி தங்கள் இடத்தை ஸ்திரம் செய்து கொள்ள சதித் திட்டமிட்டனர்.

மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் குண்டர்களையும் சண்டை (ஸ்டண்ட்) நடிகர்களையும் வரவழைத்து,  அவர்களைத் தயார் நிலையில் வைத்தனர்.

சம்பத் முதல் நாள் கூட்டத்திற்காக வளாகத்தினுள் நுழைந்ததும், கூச்சல்கள் குழப்பங்கள் ஆரம்பித்தன. கருணாநிதியும் அவர் பங்கிற்கு சம்பத்தை, மிகவும் கேவலமாகத் திட்டினார்.  பின் ஒரு மதுரை ரவுடி (இவர் பொதுக்குழு உறுப்பினர் அல்ல, இருந்தாலும் கூட்டத்திற்கு கருணாநிதியால் கொணரப் பட்டிருந்தார்) ஒருவர்,  சம்பத்தை மிரட்டி அவர் சட்டையின் காலரைப் பிடித்தார்.

பின் எம்ஜியாரும் (அப்போது அவர் வெறும் ஒரு ’புரட்சி நடிகர்’ தான்), எஸ்எஸ்ஆரும், அக்காலச் சினிமா ரவுடிகள் போல, தங்கள் சட்டைக்கைகளை அவர்களின் புடைத்த நரம்புகள் தெரிய மடக்கி விட்டுக் கொண்டு,  சம்பத்தைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்தனர். பின்னர் மிக, மிகக் கேவலமான முறையில், ‘இலட்சிய நடிகர்’  எஸ்எஸ்ஆர் ஓங்கி, சம்பத்தை ஒரு குத்து குத்தினார்…

’கலைவாணர்’ என் எஸ் கிருஷ்ணன் - படத் திறப்பு. வலதுபக்கம் உள்ளவர் தான் எஸ்எஸ்ஆர் என அழைக்கப் பட்ட எஸ் எஸ் ராஜேந்திரன். இவர் தான் சம்பத்தைக் கேவலமாகத் திட்டி ஓங்கி ஒரு குத்து குத்தினார். (ஆக, தமிழ் நாட்டின் முதல் குத்தாட்டக் காரன், இவர் தான்!)

இவ்வனைத்து விஷயங்கள் நடந்த போதும், அண்ணாதுரை, கண்ணீர் விட்டபடி இருந்தார், தடுக்க முயற்சி செய்தாரில்லை..

பின், அண்ணாதுரை மன்னிப்புக் கேட்டல், சம்பத்தால் பெருந்தன்மையாக மன்னிக்கப் படல், அண்ணாதுரையின் வாக்குறுதிகள் அனைத்தும் நடந்தாலும் – சம்பத் கூட்டத்தில் பங்கேற்காமல் போனதால், மீண்டும் அண்ணாதுரையின் (அதாவது கருணாநிதியின்) கட்சித் தலைமை தொடர்ந்தது.

சில மாதங்கள் பின் சம்பத் உண்ணாவிரதம் இருந்ததும், அண்ணாதுரை அழுது, மீண்டும் வாக்குறுதிகள் கொடுத்து அவரைச் சரி செய்ததும், பின், வழக்கம் போல அவற்றைக் காற்றில் பறக்க விட்டதும், நொந்துபோன சம்பத், கட்சியை விட்டு வெளியே வந்ததும் நமக்கெல்லாம் தெரியும்

இதோடு முடிக்கிறேன் – ஆனால் நடிகர்கள் மட்டும்தான் அரசியல்வாதிகளால் கேவலமாக நடத்தப் பட்டு வந்தனர், வருகின்றனர் என்பது அறியாமை எனக் காட்டத்தான் இவ்வளவு எழுதினேன்.

மன்னிக்கவும்.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

அல்லது

’ஹரன் ப்ரசன்னா கட்டுரை: தமிழ்பேப்பர்.நெட் தளத்தின் உரைகல்’

மன்னிக்கவும் – எல்லாம் என்னுடைய கூறு கெட்ட ‘நண்பரால்’ வந்த வினை,

சில நாட்கள் முன்புதான் நான்  ஆர். முத்துக்குமார் என்பவர் – மு.க.ஸ்டாலின் : அது ஒரு மிசா காலம்! என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துத் துயறுற்றேன்/ மனக் கிலேசமடைந்த நான், வேறு ஏதாவது நகைச்சுவையாக ஏதாவது படிக்கலாமே என்று அதே தமிழ்பேப்பர்.நெட் தளத்தில் பார்த்தால்…அடக் கடவுளே…

ஆர். முத்துக்குமார் அவர்களை விடச் சோகமாக ஹரன் ப்ரசன்னா என்பவரின் சம்பந்தமே இல்லாத தலைப்பின் (’வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்”) கீழே மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ள வடிவேலு மஹாத்மியம்!

ஹரன் ப்ரசன்னா என்பவரையும் எனக்கு யாரென்று தெரியாது – அது முக்கியமில்லை என்றாலும். என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவர் ஏன் இப்படி எழுதுகிறார்?  இணையத்தில் கட்டுரைகள் எழுதுவற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை (என் போல) என்பதாலா? அல்லது, மானுடசமூகவியல் சார்ந்த, தேய்ந்துபோன கவைக்குதவாத கலைச் சொற்களை உபயோகித்து விரக்தி மனோபாவத்துடன் எழுதினால், எவரும் பொருட்படுத்த மாட்டார்களென்றா?  அல்லது பயந்து ஓடிப்போய்விடுவரென்றா?

அதில் உள்ள பொன்மொழிகள், சிந்தனைகள், நம் சிந்தனைக்கும் விருந்தாகி நம்மை மூச்சுமுட்டச் செய்கின்றன.

 • வடிவேலு ஒரு உன்னதக் கலைஞன்,
 • ஒப்பற்ற கலைஞன்,
 • [வடிவேலு] தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில்ஒருவராகப் பரிமளித்தவர்
 • 2011ல் காமெடியின் உச்ச நடிகர்,
 • நல்ல நடிகன்

இப்படியும் மொண்ணையாக ஒருவர் எழுதி அதனை ஒரு இணைய தளம் பிரசுரிக்கவும் செய்யும் என்பதே ஒரு ஆயாசம் தரும் விஷயம்…

எது எப்படியோ – இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி விட்டு ஞாநி அவர்களின் பின்னூட்டமிட்ட ‘வடிவேலு தமிழகத்தின் பொதுச்சொத்து’ போன்ற மாரடைப்புத்தரும் நகைச்சுவை வேறு நம்மை மிகவும் இம்சிக்கிறது!…

இவர்தானா அந்தக் கால பரீக்‌ஷா ஞாநி? அவரா சொன்னார்? இருக்காது! இருக்கவும் கூடாது… நம்ப முடியவில்லை…  வில்லை… இல்லை…

=-=-=-=

ஹரன் ப்ரசன்னா அவர்களுக்குச் சில கேள்விகள்:

 • தமிழக வரலாறு, சமூகவியல், அரசியல்  – இவற்றையே விடுங்கள் – சமகால வரலாறு என்றால் என்ன என்று அறிந்து கொள்வதையும் விடுங்கள் – தெரிந்தாவது கொண்டிருக்கிறீர்களா?
 • உரைகல் என்றால் என்ன, நரகல் எனப் படுவது யாது – வித்தியாசம் என்னவென்று அறிவீர்களா?
 • பொத்தாம்பொதுவாக எழுதி – அதனுடன், உணர்ச்சிக் குவியல்களை மட்டும் கோர்த்தெடுத்து அவற்றைக் கஷ்டப் பட்டு எழுதிய கட்டுரைகளாக பவனி வரச் செய்தால், அது உங்களது எழுத்தாள வளர்ச்சிக்குப் போதுமானது என்று யார் சொன்னது?
 • திராவிட இயக்கம் (அப்படி ஒரு கட்டுக் கோப்பான ஒரே ஒரு இயக்கமாக அது இருந்திருக்கக் கூடும் என எண்ண முடியுமானால் கூட) – யார் உங்களுக்குச் சொன்னது – இந்த இயக்கத் தலைவர்கள் மட்டும் தான் நடிகர்களைக் கேவலமாக நடத்தினார்கள் என்பது போல?
 • நடிகர்களும் தான், பல இயக்கத் தலைவர்களைக் கேவலமாக நடத்தினார்கள் – நீங்கள் பாவம், இவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்; இருப்பினும் நீங்களும், பிற விசிலடிச்சான் குஞ்சுகுளுவான்களும் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன்: பல நடிகர்கள் பல்வேறு திராவிட இயக்கங்களின் பலவித போஷகர்களாக இருந்திருக்கிறார்கள் – அதன் காரணமாகவும் அவர்கள் அரசியல் வாதிகளை அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள் –  இதனைப் பற்றி, ஒரு தனி  (அடுத்த) இடுகையில் காணலாம்:  திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…
 • அய்யா, உண்மையிலேயே நீங்கள், படிக்க வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், செல்ல வேண்டிய தூரமும் மிக அதிகம், அதனால் என்ன – நீங்கள் ஒரு இளைஞராக இருக்கக் கூடிய பட்சத்தில், நிறைய நேரம் இருக்கிறது உங்களுக்கு. ஆனால், அதனை விரயம் செய்து, நீங்கள் தொடர்ந்து இப்படியே எழுத வேண்டுமானால், இதோ உங்களுக்குச் சில தலைப்புகள்:

விவேக்: ராமகிருஷ்ணரின் காமெடிக்கு ஒரு உரைகல்

செந்தில்: கவுண்டமணியின் காமெடி உரைகல்

பேருரைகல்: உரைகல்களுக்கான ஒரு உரைகல்

திராவிடாத இயக்கம்: முக்கிமுக்கி முன்னேற முயற்சிக்கும் முன்னேற்றக் கழகங்களின் உரைகல்

சுந்தர ராமசாமி: இவை என் உரைகல்

வெள்ளைக்கோட்டுக் கறுப்புக்கல்: ஒரு நரைகல்

… ஆனால் – நாமும்,  ஹரன் ப்ரசன்னா அவர்கள் – வர்ஜாவர்ஜமில்லாமல், பெரிய ஆராய்ச்சி செய்து எழுதியது போன்று அவர்தம் கட்டுரைக்குத் தலைப்பு வைத்தது போல் – இவர் ஒருவர் கட்டுரையை (!) வைத்து மட்டும், தமிழ்பேப்பர்.நெட் தளமே (என் பள்ளிச் சிறார்கள் சொல்வது போல) ஒரு ‘காமெடி பீஸ்’ – அதாவது ’ஹரன் ப்ரசன்னா கட்டுரை: தமிழ்பேப்பர்.நெட் தளத்தின் உரைகல்’ என்று எண்ணமுடியாது எனத்தான் நினைக்கிறேன்.

அத்தளத்தை ஒழுங்காகப் படித்து விட்டுத்தான் எந்த முடிவுக்கும் வர முடியுமல்லவா?

கொஞ்சம் யோசித்தால் இந்த ஹரன் ப்ரசன்னா, நா முத்துக்குமார் போன்றவர்களின் ஒரேயொரு கட்டுரையைப் படித்துவிட்டு அவர்களைக் கரித்துக் கொட்டுவதும் நியாயமில்லை என்றுதான் நினைக்கிறேன், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்றாலும்… (ஆனால், இவர்களை இன்னொரு முறை படிப்பதற்கு முன் நான் மிகவும் ஆலோசனை செய்ய வேண்டியிருக்கும்)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் மூன்றாம் அத்தியாயம்: டெய்லர்.

=-=-=-=

தென்ஆஃப்ரிகாவில் , காந்தி பலமுறை சிறை சென்றார், கடுங்காவலில் இருந்தார்; அதில், இரண்டுமுறை சிறையில், கடும்வேலை செய்யவும் பணிக்கப் பட்டார்,

இந்த கடும்வேலைத் தண்டனையின் கீழ், சில வாரங்களுக்கு, நாளுக்கு ஒன்பது மணிநேரம் – கனத்த போர்வைத் துண்டுகளை இணைத்துத் தைக்கவும், கிழிந்த போர்வைகளைத் தைக்கவும், மேற்சட்டை ஜேபிகளுக்கான துணியை வெட்டவும் ஆணையிடப் பட்டார்.

காந்தி இயல்பிலேயே சுறுசுறுப்பும் செய்நேர்த்தியும் மிக்கவராதலால், அவர், ஒவ்வொரு நாளும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சீக்கிரமே முடித்து விட்டு, இன்னமும் அதிகமான துண்டுகளைக் கேட்பார் – ஏனெனில், நேர்மையான அவர் பார்வையில் ஒன்பது மணிநேரம் வேலை என்றால் அவ்வளவு மணி நேரம் பணி செய்யப் பட்டே ஆக வேண்டும்.

காந்தி ஒரு சமயம் ஒரு இந்தியச் சிறையில் இருந்த போது, அவர் ஒரு ஸிங்கர் தையல் இயந்திரத்தில், சில நாட்கள் ‘இழுத்துப் போட்டுக்கொண்டு’ பணி செய்தார் – அதாவது, இந்தப் பணியை அவர் தன்னிச்சையாகத் தான் செய்தார் –  ஏனென்றால்,  அவர், தையல்வேலையில் கை நேர்த்தி மிக்கவராக ஆக வேண்டும் என்று விரும்பினார் கூட.

=-=-=-+

அவருக்கு, மனிதர்களின் கையால் செய்யக் கூடிய வேலைகளை மாபெரும் இயந்திரங்களை வைத்துச் செயல்பட வைப்பது, பெரும் முதலாளிகளின் சொத்துக்களான அவ்வியந்திரங்களுக்கு, அம்மனிதர்களை அடிமையாக்கும் என்று தோன்றியது. மேலும் அவர், இயந்திரங்கள், அடிப்படையில் மனிதன் செய்ய வேண்டிய உடல் உழைப்பை, தேவையில்லாமல் செய்துவிடுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் எண்ணினார். அவர் கருதினார்: ”இந்தியாவின் பிரச்சினை என்பது, எப்படி லட்சக் கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் பெற்றுக் கொடுப்பது என்பதல்ல, ஆனால் எப்படி, அவர்களின் சோம்பேறித்தனத்தால் வீணாகும் நேரத்தை, உபயோககரமாக மாற்றுவது என்பது தான்!

ஆனால் அவர் தையல் இயந்திரத்துக்கு, இக்கருத்தோட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்தார்.  ஏனென்றால்: ”இவ்வியந்திரம் உண்மையாலுமே மனிதன் மிகக் குறைந்த அளவில் கண்டு பிடித்துள்ள, ஆனால் மிக உபயோகமான உபகரணங்களில் ஒன்றாகும். இதனைக் கண்டுபிடித்த ஸிங்கர் – தன் மனைவி அவர் கையால் தைப்பதற்கு மேற்கொள்ளும் சிரமங்களைக் கண்டே, அதற்கு மிகுந்த நேரம் செலவழிப்பதைக் கருதியே – அவர் மனைவி மீதான அன்பின் காரணமாக மட்டுமே, அவரது தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்தின் மூலாதாரமாக, அன்பு தான் இருந்தது.

=-=-=-=

காந்தி, ஒரு சமயம் ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண்மணிக்குக் கடிதம் எழுதினார்: நீங்கள் உங்களுடைய ஸல்வார்-கமீஸ் உடையை எப்படித் தைக்க முடியும் என்று யோசிக்க வேண்டாம். அதை உங்களுக்கு எப்படித் தைக்க வேண்டுமோ சொல்லுங்கள், அப்படியே நான் தைத்துத் தருகிறேன். நாம் வெகு சுலபமாக ஒரு ஸிங்கர் தையல் இயந்திரத்தைக் கடன் வாங்கி, ஒரு சில மணி நேரங்களில் அதனைத் தைத்து விட முடியும்.

அவர் தன்னால் இப்படித் தையல் வேலை செய்யக் கூடுவது பற்றி, உயர்வாக நினைத்துக் கொள்ள, எல்லா உரிமைகளும் இருந்தன. அவருடைய மனைவியின் ரவிக்கைக்காக (’ஜாக்கெட்’) அவரால் அளவுத் துணி கத்தரித்துத் தைக்க முடிந்தது. அவரால் இராட்டையில் நூல் நூற்க முடிந்தது. நூற்ற நூலை அவரால் கைத்தறி விசையில் ஏற்றி நெசவு வேலை செய்ய முடிந்தது. நெசவு செய்த துணியைக் அளவாகக் கத்தரித்து அழகான குர்த்தாவாகத் [வடக்கத்திய மேல்சட்டை] தைத்துக் கொள்ளவும் முடிந்தது.

=-=-=-=

தையல் வேலையை, செருப்புத் தைப்பதை ஆசிரமத்தில் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய  காந்தி, பலமுறை,  திறமை வாய்ந்த தையல்வேலை செய்பவர்களையும், செருப்புத்  தைப்பவர்களையும் வரவழைத்து அவர்களைக் கொண்டு ஆசிரமத்தில் இலவசமாக வகுப்புகள் நடத்தினார் கூட!

=-=-=-=

இச்சம்பவம், சம்பாரண் விவசாயிகளுடன் சேர்ந்து அவர், அவுரித் தோட்டப்பண்ணைகள் (’இண்டிகோ ப்ளாண்டேஷன்ஸ்’) நடத்தி வந்த துரைமார்களின் கொடுங்கோனமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது நடந்தது.

அச்சமயம் துரைமார்களுக்கு ஆதரவாக எழுதி வந்த ஒரு ஆங்கிலேய நிருபர், ‘காந்தி, தொழிலாளிகளை, விவசாயிகளை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகத் தான், அவர்களில் ஒருவராகத் தான் திகழ்வதாகக் காட்டிக் கொள்ளத்தான்,, தான் அணியும் உடைகளைத். தேசிய உடை முறைக்கு மாற்றிக் கொண்டார்’ என அபாண்டமாக எழுதினார்.

காந்தி அதற்கு பதிலாக “ நான் சுதேசி விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்; அதனால் தான் நான் சமீப காலமாக, என்னாலேயே நூற்று, நெசவு செய்து, கையால் தைக்கப பட்ட உடைகளை அணிகிறேன். என்னுடன் பணி செய்யும் அனைவரும் அப்படியே.” என்று எழுதினார்.

=-=-=-=

காந்தி பின்னாளில் குர்த்தா அணியும் பழக்கத்தைக் கைவிட்டார் – பதிலாக, அவர் இடுப்பைச் சுற்றி ஒரு துணியும், உடல் மேலே போர்த்திக் கொள்ள மற்றொரு துணியும் உபயோகிக்க ஆரம்பித்தார். அப்பொழுதும் கூட அவர் தன்னுடைய கைக்குட்டைகளின், கைத்துண்டுகளின், இடுப்புத் துணியின ஒரத்தை மடித்துத் தைத்தல், போன்ற வேலைகளைச் சிலசமயம் செய்து வந்தார். அவர் மும்முரமாகத் தைத்துக் கொண்டிருந்த சமயங்களில் கூட, அவர் தன்னுடைய உதவியாளரிடம், தான் எழுத வேண்டிய கடிதங்களைச் சொல்லி, அவரை எழுதிக் கொள்ளச் சொல்வார்.

-=-=-=

ஒரு சமயம் அவர் ஆகாகான் மாளிகையில் கைது செய்யப் பட்டு வைக்கப்பட்டிருந்தபோது, அவர், அந்த சிறைச் சாலையின் தலைமை அதிகாரிக்கு பிறந்த நாள் பரிசாக, காதி கைக்குட்டைகளைக் கொடுத்தார்.

அந்தக் கைக்குட்டைகள் ஒவ்வொன்றிலும் நேர்த்தியாக, திறம்பட அந்த அதிகாரியின் பெயரின் முன்னெழுத்துக்களை [’இனிஷியல்ஸ்’] , ஊசி நூலால் கைவேலைப்பாடு ’எம்ப்ராய்டரி’ செய்திருந்தார்.

அப்போது, காந்திக்கு வயது எழுபத்தி நான்கு!

=-=-=

இன்னொரு சமயம் காந்தி பணித்ததுபோல் ஒரு பெண்மணி, காந்திக்குப் பிடித்தமான, ஆனால் பல இடங்களில் கிழிந்திருந்த அவருடைய மேற்போர்வையில் [’ஷால்’] சிறு ’காதி’ துண்டுகளை வைத்து அழகாக,துண்டுப்பட்டி [பேட்ச்வொர்க்’] வேலை செய்து கொடுத்தார். அந்த மேற்போர்வையை அணிந்துகொண்டுதான் அவர், நம் நாட்டு ஏழை மனிதர்களின் பிரதிநிதியாக, வட்டமேஜை மாநாட்டுக்கும், ப்ரிட்டிஷ் பிரதமரை ச்ந்திப்பதற்கும், பக்கிங்ஹாம் அரண்மனையில் தேனீர் விருந்துக்கும் சென்றார்.

அவர் ஒரு பொழுதும் பகட்டுக்காகவோ அல்லது மற்றவர்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ உடை அணிந்ததில்லை. ஆனால் அதற்காக, அவர் அழுக்கான, சரியில்லாத, கிழிந்த உடைகள் அணிவதையும் விரும்பினாரில்லை.

=-=-=-=

இன்னொரு சமயம், பணி சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில், அவர், சக ஊழியர் ஒருவரின் மேற்போர்வையில் ஒரு கிழிசல் இருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு, காந்தி ஒரு குறிப்பெழுதி அனுப்பினார்: கிழிந்த துணிகளை அணிவதென்பது சோம்பேறித்தனத்தின் விளைவு – ஆகவே அது வெட்கக்கேடானது. ஆனால், துணிகளிலுள்ள கிழிசல்களைத் துண்டு வைத்துத் தைத்து, அவற்றை அணிவதென்பது, ஏழ்மையையோ, உழைப்பினையோ அல்லது விட்டு விடுதலையாகி இருப்பதையோ குறிக்கும். உங்கள் உடையில் உள்ள கிழிசலை என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இந்தக் கிழிசலானது உங்கள் ஏழ்மையையோ அல்லது எளிமையையோ சித்தரிக்கவில்லை. அது சித்தரிப்பது, உங்களுக்கு மனைவி இல்லாமையயோ, மனைவி வேலை செய்யாமையையோ அல்லது உங்கள் சோம்பேறித்தனத்தையோ தான்!

அடுத்து: காந்தி எனும் வண்ணார்…

காந்தியாயணம்…

ஆர். முத்துக்குமார் என்பவர் – மு.க.ஸ்டாலின் : அது ஒரு மிசா காலம்!  என்கிற தலைப்பில், தமிழ்பேப்பர்.நெட் தளத்தில், ஒரு கட்டுரை(!) எழுதியிருக்கிறார்.

நானும் அதனைப் படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஐயகோ, படித்தேன்.

எங்கேயிருந்து ஆரம்பிப்பது, அந்தச் சோகத்தை….

=-=-=-=

ஆர். முத்துக்குமார் என்பவர் யார், ஏன் இப்படி எழுதுகிறார் என்று தெரியவில்லை!

ஒருவேளை வயதில் மிக்க இளைஞரானபடியால்(!), கட்டுரை சார்ந்த அனைத்துத் தகவல்களுக்கும் அவர்தம் முன்முடிபான எண்ணங்கள் சார்ந்த சில புத்தகங்கள் மட்டுமே படித்து  – அக்கால தினசரிகளையோ, சமகால ஆவணங்களையோ, அவர் படிக்க முயற்சி கூடச் செய்திருக்க மாட்டார் என நினைக்கிறேன் – சிரத்தையில்லாமல் எழுதி நாமெல்லாம் உய்ய வழி செய்திருக்கிறார்.

இவர் யாரைப் பின்பற்றி எழுதியிருக்கிறார்(!)  – அது ஜாவர் சீதாராமன் முறையா, சங்கர்லால்-வஹாப் நடையா, சாண்டில்யன் வழியா, ராஜேந்த்ரகுமார் பாதையா, சுஜாதாவின் முட்டுச்சந்தா, வைரமுத்துவின் சுள்ளிக்காட்டுப் பள்ளியா, வாலியின் வாலா அல்லது இவர் (அய்யோ!)  கலைங்கர் வழித் தோன்றலா என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை – ஆனால் ஒன்றுதான் இவர் எழுத்தைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது – சினிமா கதை வசனம் தோற்றது போங்கள்.

இவருடைய சில சொற்றொடர்களைப் படியுங்கள்:

 • காவல்துறை வாகனங்கள் ஆக்கிரமித்தன. (தெருவை அடைத்த படி சில வாகனங்கள் நின்றன. இதுதான் உண்மை – இதில் என்ன புண்ணாக்கு ஆக்கிரமிப்பு இருக்க முடியும் என்று புரியவே இல்லை)
 • ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது (ஹஹ்ஹா, உள்ளுணர்வு சொல்லியதா?)
 • நேற்றுவரை தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக இருந்தவர்.(ஏனப்பா? இந்தியாவுக்கேவா அவர் முதலைஅமைச்சராக இருந்திருக்க முடியும்?)
 • திமுதிமுவென வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள்! (ஏன், திமுக வினரைப் பிடிக்கத்தானே வந்தார்கள் – திமுக வை அமுக வந்தார்கள் என எழுதியிருக்கலாமே அய்யா!)
 • கருணாநிதி உத்தரவாதம் கொடுத்தார். (தட்சிணசயனம் கூடச் செய்திருக்கலாமே – பத்து நிமிடம் இட்லிவடை சாப்பிட்டு காப்பிக்கு காத்திருக்கும் நேரத்தில் மெரீனா சென்று! என்ன உத்தரவாதம்? அவர் ட,மிளர் அய்யா – அவர் உறுதி மட்டும் தான் அளித்திருப்பார்)
 • அதை ஏற்பதைத்தவிர அப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை (திருப்தியா அய்யா? ஏன் நீங்கள் ‘அதிகாரிகள் புறமுதுகிட்டோடினர்’ என்று எழுதியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமே!)
 • அதிகாரிகள் மெல்ல நகர்ந்தனர்.(இதன் கவித்துவத்தை நாம் மெச்சவேண்டும்)

இதே போன்ற நடையில் – இது ஒரு பத்தியாம்! (ஐயகோ!)

மறுநாள் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

உடனடியாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது.

மின்னல் வேகத்தில் கோபாலபுரம் வந்தனர் அதிகாரிகள்.

அங்கே பெட்டி சகிதம் தயாராக இருந்தார் ஸ்டாலின்.

கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

மிசா சட்டம் ஸ்டாலின் மீது பாய்ந்திருந்தது.

என்னவோ அடுக்குமொழியும், இரட்டைக்கிளவியும் (அய்யோ நான் மனைவி-துணைவி பற்றிப் பேசவில்லை இங்கு, ஆளை விடுங்கள்!) அடாத உணர்ச்சிக் குவியல்களும், மயிர்க்கூச்செறிதல்களும் அடர்ந்து படர்ந்து உள்ள நடைதான் – ஆனால் உண்மைகளும், பின்புலங்களும் இவற்றில், இக்கட்டுரையில் அறவே இல்லை!  நுனிப்புல் மேய்வதாலும், சகட்டுமேனிக்குத் தகவல்களை தெளிப்பதனாலும், இவர் நடையில் எஞ்சுவது நகைச்சுவைதான்!

ஆர். முத்துக்குமார் போன்றவர்களுக்கு சில கேள்விகள்:

 • இந்தக் கட்டுரையில், ஸ்டாலின், கருணாநிதி போன்றவர்களை ஏதோ மகாமகோ தியாகிகள் போலச் சித்தரிக்க முயல்கிறீர்கள் – ஏன் அய்யா உங்களுக்குஇந்த வேலை?
 • ஏதோ நீங்களே நேரே அனைத்து விஷயங்களையும் நேரில் பார்த்தது போன்ற தோரணை வேறு. உங்கள் அற்புதமான கற்பனை வளம் பற்றி எனக்குப் பொறாமை வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை!
 • சிறைச்சாலையில், யார் தான் பட்டுச்சிவப்பு ரத்தினக்கம்பள வரவேற்பினை எதிர் பார்க்க முடியும்? ( நீங்கள் எப்பொழுதாவது சிறைச்சாலைக்குப் போயிருக்கிறீர்களா – ஒரு சுற்றுலா மாதிரியாவது? ஒரு பொலீஸ் லாக்கப்புக்குள்ளாவது போயிருக்கிறீர்களா?  நான் அனுபவித்திருக்கிறேன். இந்த ஸ்டாலின் வகையறாக்கள் அங்கு அனுபவித்தது எல்லாம், பெரிதாகச் சொல்லப் படவேண்டிய கொடுமைகளே அல்ல; ஒரு ஜேப்படி ஆசாமி கூட இதனை விட நிறையவே அனுபவிப்பார்.  ஆக அவர்கள் இன்னமும் அனுபவிக்க வேண்டியவர்கள் தான்)
 • இந்த உத்தமர் (உன்மத்தர் என்று எழுதவில்லை நான்) ஸ்டாலின் சிறைக்குப் போகவிருந்த சில நாட்கள் முன்புதான் ஒரு கோவை திமுக மாநாட்டில் கீழ்கண்டவாறு பேசினார் என ஞாபகம் – ‘இந்திரா காந்தி! உனக்கு வேண்டுமானால் விதவைகளுக்குக் கொடுக்கும் நிதியை நீ என் தகப்பனிடம் விண்ணப்பித்தால் அவர் கொடுப்பார்’ (இது இவரின் பண்பிற்கு ஒரு அடையாளம்; அவர் சொன்ன சில (நான் கூட!) எழுத முடியாத வார்த்தைகளை நான் இங்கே மேற்கோள் காட்டவில்லை).

… சொல்லிக் கொண்டே போகலாம் – ஆனால் வேறு வேலைகள் காத்திருக்கின்றன…

இந்த மனிதர் (ஆர். முத்துக்குமார்) – ஒரு அசுவாரசியமான ஆனால் நம் மூளையை பாதிக்கவே பாதிக்காத, தினசரிப்பத்தி ஆவேசப் புல்லரிப்பு  நடைஎழுத்தாளர் – ஆகவே இவரைப் படித்த அடுத்த நிமிடம் அவரை நாமெல்லாம் சந்தோஷமாக மறக்கக் கூடியவர் – மேலும் மறக்கப்பட வேண்டியவர் – இதனை மீறி – அவருக்கு (அதாவது, அவருடைய இம்மாதிரி கட்டுரைகளுக்கு) மரியாதை தரத் தேவையில்லை என நினைக்கிறேன்.

(கூட, தமிழ்பேப்பர்.நெட் நல்ல தளம், அதில் வரும் ஆர். முத்துக்குமார் அவர்களின் அரசியல் கட்டுரைகளுக்காக மட்டுமே அதனைப் படிக்கலாம் என்று சொல்லி, என் பொன்னான(!) நேரத்தை வீணாக்கிய அந்த ’நண்பருக்கு’ என் கோபமான, பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைத் திட்டுகளும், அவர் மண்டையில் ஒரு ராட்சதக் குட்டும்…)

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற, அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்: பாரிஸ்டர்.

முதல் பகுதி – 1/3; இரண்டாம் பகுதி – 2/3.. கீழே இவ்வத்தியாயத்தின் மூன்றாம் பகுதி…

=-=-=-=

அவருடைய கட்சிக்காரர்கள், வாடிக்கையாளர்கள் அவருடைய நண்பர்களாகவும், கூட வேலை செய்பவர்களாகவும், ஏன், சகபணியாளர்களாகவும்கூட ஆனார்கள்.

காந்தியும் தொடரும் அப்பழுக்கற்ற நேர்மைக்கு, ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

இவருடைய நேர்மையால், பிறழாமல் நேர்ப்பாதையில் தொடர்ந்து செல்லும் தன்மையால், ஒரு சமயம் ஒருவரைச் சிறைச்சாலையில் அடைக்கப் படுவதிலிருந்து காப்பாற்றினார் கூட.

ஒரு சமயம் அவருக்கு முன்னறிமுகம் இருந்த ஒருவர், சில பொருட்களைச் சுங்கவரி கொடுக்காமல் ஏமாற்றிக் கடத்தினார் – ஆனால், காவல்துறையிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.அந்த மனிதருடைய மானம் கப்பலேறும் தருணத்தில், மனம் கலங்கி, அவர் நடந்ததைக் காந்தியிடம் அப்படியே கூறி, தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு மன்றாடினார்.

ஆனால் காந்தி அவரை தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி, அதற்கான தண்டனையும் பெற்றுக் கொள்ளச் சொன்னார். அதேசமயம், காந்தி, சுங்க இலாக்கா அதிகாரியிடமும், அரசின் தலைமைச் சட்ட அறிவுரையாளரிடமும் (அட்டார்னி ஜெனரல்) சென்று, நடந்ததை முழுவதும் உள்ளதை உள்ளபடி சொன்னார். அவர்களுக்கும் காந்தியைப் பற்றித் தெரியுமாதலால், அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு, குற்றம் புரிந்த அம்மனிதருக்கு வெறும் அபராதம் மட்டும் விதித்தனர்.

இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்த்தால் மிகுந்த நிம்மதி அடைந்த அந்த மனிதர், அந்த முழு விவரத்தையும் அச்சிட்டுத் தன் அலுவலக அறையில், நன்றியுடன் மாட்டி வைத்துக் கொண்டார்.

இன்னொரு சமயம், காந்தியின் கட்சிக்காரருடைய வரவு-செலவுக் கணக்கு விவரங்களில் ஒரு தவறு இருந்தபோது, காந்தி அந்த விவரத்தைத் தானே முன்வந்து மூடிமறைக்காமல் சொல்லி, பின்பும் கூடத் திறமையாக, தன் கட்சிக்குச் சார்பாக வாதாடினார்.

அந்நீதிமன்ற நீதிபதி கூட, முதலில் காந்தி உண்மையைக் கூறியபோது, ஏனடா இவர் தன் கட்சிக்காரருக்கு எதிராக விவரம் கொடுக்கிறாரே என்று, அதனை விரும்பவில்லை – ஆனால் பிற்பாடு தொடர்ந்த, காந்தியின் வாதத்திறமையை மெச்சி, காந்தியின் தரப்பு சார்பாகவே நீதி வழங்கினார். மேலும் பிரதிவாதிக் கட்சியினரைக் கேட்டார்: “காந்தி மட்டும் உண்மையைச் சொல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?”

காந்தி குறுக்கு விசாரணை செய்வதிலும் மிகுந்த திறமை படைத்தவராக இருந்தார்.மேலும் அவர், நீதிபதிகளாலும், சக வழக்குரைஞர்களாலும் மிகவும் மதிக்கப் பட்டார். அவருக்கு நிறைய வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள், கட்சிக் காரர்கள் இருந்தனர்.

=-=-=-=

தென் ஆஃப்ரிகாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வழக்குகளில், அவை இந்தியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே நடத்தால் – நீதி இந்தியர்களுக்குக் கிடைக்காத நிலைமையை அவர் கண்டறிந்து கொண்டார். இது அவரை இவ்வாறு சொல்ல வைத்தது: “இந்தியாவில், எந்த ஒரு வெள்ளைக்காரருக்காவது படுபாதகக் கொலைகள் செய்ததற்காக, சட்டத்தின் படி கடுமையான தண்டனை கிடைத்திருக்கிறதா? பாருங்கள், அந்த வெள்ளைக்கார அதிகாரி ஒரு அப்பாவி நீக்ரோவை வன்மையாகத் துன்புறுத்தி அவரைக் குற்றுயிறும் கொலையுயிறுமாக ஆக்கியதற்கு அந்த அதிகாரிக்குக் கிடைத்த மிகச் சிறிய தண்டனை – இது எள்ளி நகையாடத் தக்கதல்லவோ?

=-=-=-=

காந்தி தனக்குத் தானே அறம் சார்ந்த மிகக் கடுமையான விதிமுறைகள் விதித்துக் கொண்டாலும், என்னதான் அந்நாட்டின் சட்டத்தை எதிர்த்து, விமர்சித்துப் பேசினாலும், அவருடைய வக்கீல் தொழில் மிக நன்றாகத் தழைத்தோங்கி வளர்ந்தது.

இந்தியாவில் சில காலம் தான் அவர் தன்னுடைய தொழிலை நடத்தினார்; ஆனால் தென் ஆஃப்ரிகாவில் அவர் இருபது வருடங்கள் தன் தொழிலைத் திறம்பட, மெச்சத்தக்க வகையில் நடத்தினார்.

=-=-=-=

தென் ஆஃப்ரிகாவில், முதலில் சில காலத்துக்கு அவர் – ஊரில் ஒரு நல்ல இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் ஒரு வளரும் பாரிஸ்டருக்கு ஏதுவான வகையில், அலுவலகத்தைத் தொடங்கினார். அந்த அலுவலகத்தை அவர் ஐரோப்பிய முறையில் உள்ளே அலங்கரித்து, மேஜை நாற்காலி, இன்னபிற தளவாடங்களைக் கொண்டு நிரப்பினார். விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், அவர் கேளிக்கை விருந்துகள் (’பார்ட்டி’) நடத்தினார்.

அவர் வசித்த வீடு ஒரு ‘திறந்த’ இருப்பிடமாக இருந்தது. அவர் தன்னுடைய நெருக்கமான நண்பர்களையும், அவர், கூட வேலை செய்தவர்களையும், பணியாளர்களையும் தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தார்.

அவருடைய அலுவலகம் அவர் வீட்டில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் இருந்தது. முதலில் சில மாதங்களுக்கு அவர் தன் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் சென்று வந்தார். அதன் பின்னர், அவர், முழுவதும் கால்நடையாக மட்டுமே சென்றுவந்தார்.

இந்தியர்கள் ட்ராம் வண்டிகளில் முன்பக்கம் உட்கார அனுமதி இல்லாத காரணத்தால் [வெள்ளையர்கள் மட்டும் தான் அவ்விடங்களில் அமரலாம்] அவர் ட்ராம் வண்டிகளில் போவதையே நிறுத்தினார். அவர் நினைத்திருந்தால், அவருடைய புகழை வைத்து, தனக்கு மட்டும் ஒரு விசேஷ அனுமதி வாங்கிக் கொண்டிருக்க முடியும்.

காலஞ்செல்லச்செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஏழை இந்திய உழைப்பாளிகளுடன் உறவு கொண்டு, அவர்களில் ஒருவராகவே மாறினார். அவர்களுடைய் வாழ்க்கைத் தரத்தில், எளிமையான வாழ்க்கையும் வாழ ஆரம்பித்தார்.

அவருடைய நாற்பது வயதில் அவர் மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் [இது 1908-9 வாக்கில்] அவர் தன்னுடைய தொழிலை முற்றிலும் துறந்து, மக்கள் / பொதுப் பணிக்குத் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டார்.

தன்னுடைய அனைத்துச் சொத்துக்களையும் தன் நண்பர்-சமூகக் குழுமத்திற்குக் [’கம்யூனிட்டி’ – இவற்றைச் சமூகவியலாளர்கள் ‘இண்டென்ஷனல் கம்யூனிட்டி’ என்று இக்காலங்களில் அழைக்கின்றனர்] கொடுத்து விட்டு, தன் உடலுழைப்பு மட்டும் சார்ந்து, பண்ணைகளில் வாழ்ந்தார்.

பல வருடங்கள் பின்னர், காந்தி – இந்தியாவின் வறுமை மிகுந்த பின்புலத்தில் – வக்கீல்களும், பாரிஸ்டர்களும் தங்கள் கூலியாகக் கேட்ட மிக அதிக அளவு பணத்தை,, இந்திய நீதிமன்றங்களின் ஊதாரித்தனமான வழிமுறைகளை, வன்மையாகக் கண்டித்தார். (அப்போது, இந்தியா ஏழ்மையில் மூழ்கி இருந்தாலும், வக்கீல்கள் சராசரியாக மாதம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை பிரதி மாதம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.)

காந்தி சொன்னார்: “சட்டத் தொழில் என்பது ஒரு பங்குச் சந்தை போன்ற விஷயம் அல்ல. நாம் மட்டும் வக்கீல்கள், நீதிமன்றங்கள் பின்னால் வால் பிடித்துக் கொண்டு அலையாமல் இருந்தோமானால், நம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வக்கீல் தொழில் நேர்மையின்மையைப் படிப்பிக்கின்றது. ’சொல்லிக் கொடுக்கப்பட்ட’ பொய்ச் சாட்சிகள் இரு பக்கமும் இருந்து, தங்களின் ஆன்மாக்களை பணத்துக்காக விற்றுக் கொண்டிருக்கின்றனர்.”

அவர். நீதித்துறைக்கும், சட்டங்களுக்கும் ஒரு பெரிய, புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என விரும்பினார் – அவர் நினைத்தார் – இவ்வகையான மாற்றத்தால்தான், நீதி என்பது தூயதாகவும், குறைந்த பணச்செலவிலும் கிடைக்கும்.

அவர், ஏழைமக்களின் வழக்குகளை இலவசமாக நடத்தித் தந்தார். பொதுநலம் / நன்மை சார்ந்த வழக்குகளை, தன்னுடைய அவ்வழக்குச் சார்ந்த சில்லரைச் செலவுகள் மட்டும் பெற்றுக் கொண்டு நடத்திக் கொடுத்தார்.

ஒரு சமயம் ஏழை இந்தியத் தொழிலாளர்கள் அவர்கள் வசித்து வந்த ‘கூலி’ இருப்பிடங்களிலிருந்து, நகராட்சியால் கட்டாயப் படுத்தப்பட்டு அகற்றப் பட்ட போது, காந்தி இத்தொழிலாளர்களுக்கு சார்பாக வக்காலத்து வாங்கினார். ஒவ்வொரு வழக்குக்காகவும் 150 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு அபரிமிதமாக உழைத்தார். இச்சம்பவத்தில் 70 விதம் விதமான வழக்குகள், பின்புலங்கள்; ஆனால், இவற்றில் ஒன்றில் மட்டுமே தான் இவர் தோற்றார். இந்த வழக்குகளினால் அவருக்குக் கிடைத்த பணத்தில், பாதியைக் கொண்டு அவர் ஒரு பரோபகார நிறுவனம் நிறுவினார் கூட.

=-=-=-=

தன் மக்களுக்கு, அடிப்படை மனித உரிமைகள் பெற வேண்டி, அவர் அரசுக்கெதிராக – மக்களைப் போராடவைக்கப் பிரயத்தனப் பட்டார். ஆகவே அவர் பலமுறை கைது செய்யப் பட்டு, இந்திய, தென் ஆஃப்ரிக நீதிமன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொண்டார். பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். தென் ஆஃப்ரிகாவில் அவர் முன்னர், பத்து வருடங்கள் வழக்காடிய அதே நீதிமன்றத்தில் அவர்,பிற்காலத்தில் கைவிலங்குடன் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிக் கூட வந்தது.

பின்னாளில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்திய நீதி மன்றம் ஒன்றில் ருசுவாக்கப் பட்ட பின்னர் அவர் சிறை செல்ல் நேர்ந்தபோது, அவருடைய பெயர், பாரிஸ்டர்களுடைய பட்டியல்/ஜாபிதாவிலிருந்து நீக்கப் பட்டது.

காந்தி, ப்ரிட்டிஷ் அரசின் நீதிமன்றங்களோடு ஒத்துழைக்காமல், நாம், நமது பாரம்பரியமான பஞ்சாயத்து முறையை மீட்பித்து, புனருத்தாருணம் செய்ய வேண்டும் என முனைந்தார்.

காந்தியெனும் இந்தச் சட்ட உடைப்பாளரின் அறைகூவலுக்குச் செவி மடுத்து, எண்ணிறந்த பெயர்பெற்ற வழக்குரைஞர்கள் தங்கள் வக்கீல் தொழிலுக்குத் தலை முழுகி, நம் தேசவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஒரு வக்கீல்கள் குழுமம் ஒரு சமயம் அவரைப் பேச்சாளராக அழைத்தபோது அவர் சொன்னார்: என்னை என் வக்கீல்கள் குழுமமே தடை செய்துள்ளது, நானும் தொழிலை விட்டு நெடுநாள் ஆகிய படியால், சட்டங்களை மறந்து விட்டேன். எப்படியுமே நான் இப்போதெல்லாம் சட்டத்தை எப்படி புரிந்துகொள்வது, அதன் அர்த்தம் என்பது என்ன என்று யோசிப்பதை விட்டுவிட்டு – சட்டத்தை உடைப்பதில் தான் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

(காந்தி ஒரு வழக்குரைஞர் – மூன்றாவதும் முடிவானதுமான பகுதி முற்றிற்று)

அடுத்தது… காந்தி எனும் தையல்காரர்

காந்தியாயணம்…

“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்: பாரிஸ்டர் — ‘பாரிஸ்டர்’ எனப் படுபவர், இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர் – அதாவது, ஒரு சீமை வழக்காடிப் பட்டம் பெற்ற வக்கீல் எனப் புரிந்து கொள்ளலாம்.

முதல் பகுதி – 1/3 – இங்கே…

கீழே இவ்வத்தியாயத்தின் இரண்டாம் பகுதி…

=-=-=-=

டர்பன் (Durban) நகரம் வந்து சேர்ந்த மூன்றாம் நாள், காந்தி நீதிமன்றத்திற்குச் சென்றார்; அங்கிருந்த நீதிபதி அவரை,  அவர் அணிந்திருந்த தலைப்பாகையைக் கழற்றச் சொல்லிப் பணித்தார். ஆனால் காந்தி அவருக்குப் பணிய மறுத்து, அந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார். அவர் தென்ஆஃப்ரிக மண்ணில் கால் வைத்தது முதல் இந்தியர்களை எப்படியெல்லாம் வெள்ளைக்காரர்கள் அவமானம் செய்தனர் என்பதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஆக, சிறிது காலத்துக்குள்ளேயே அவர் ஒரு அழையா, தேவையில்லா விருந்தாளியாக, ஒரு ‘கூலி பாரிஸ்டராகக்’ கருதப் பட்டார், நடத்தப் பட்டார். அவர் பொறுமையாக இருந்தாலும்,வெள்ளையர்களின் பாரபட்சத்தால் நெஞ்சில் கனன்று கொண்டிருந்தார்.

=-=-=

அவருடைய கட்சிக் காரரான தாதா அப்துல்லா அவர்களிடமிருந்து, காந்தி, வழக்குக்குத் தேவையான விஷயங்களை வாங்கிக் கொண்டு, அந்த வழக்கைப் பற்றி நுணுக்கமாக அறிந்து கொண்டார்.  அதன் பின் அறிந்துகொண்டார் – அந்த வழக்கை இரு தரப்பினரும் தொடர்ந்து நடத்திக் கொண்டு  வழக்குரைஞர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தால், இரு தரப்பினருமே நாசமாகிவிடுவார்கள் என்பதை.

அவருக்கு, தன்னுடைய கட்சிக்காரரை ஓட்டாண்டியாக்கித் தான் புகழடையவோ பணம் சம்பாதிக்கவோ இஷ்டமே இல்லை. வழக்காடும் இரண்டு எதிரெதிர் தரப்பினரையும் சுமுகமாக இணைப்பது தான், ஒரு வழக்குரைஞரின் வேலை என்பதை அவர் திடமாக நம்பினார்.

ஆக, அவர் எதிர்க்கட்சியினரையும் சந்தித்துப் பேசி, நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கினைத் தீர்க்க முடியுமா என்று ஆராய முயன்றார். ஆனால் தாதா அப்துல்லா, இப்படிச் செயல்பட சற்றுத் தயங்கினார்.

அப்போது அவரிடம் காந்தி உத்திரவாதம் கொடுத்தார்: “எந்த ஒரு மூன்றாம் மனிதருக்கும், உங்களுக்கும் எனக்கும் வழக்கு தொடர்பாகத் தெரிந்தவைகள்  / விஷயங்கள் தெரிவிக்கப் பட மாட்டா. நான் எதிர்க் கட்சிக் காரரை ஒரு புரிந்துணர்வுக்குக் கொண்டுவரத்தான் முயலப் போகிறேன்”

ஆனால் காந்தி இணக்கத்துக்குத் தொடர்ந்து முயற்சி செய்தாலும், வழக்கு என்னவோ ஒரு வருடம் போல நீண்டு கொண்டே இருந்தது. அந்த வழக்கிற்கு காந்தியின் பங்கு – அதற்கான ஆதாரங்களைத் (’எவிடென்ஸ்’) தயாரித்தது.

அந்த வழக்கு நடத்தப்பட்ட விதம், காந்திக்கு, எப்படி ஒரு சிக்கலான வழக்கினை, திறமை வாய்ந்த வழக்குரைஞர்களும்,  நீதி அறிவுரையாளர்களும்  நடைமுறையில் அணுகுகின்றார்கள் என்பதைக் காட்டியது. கடைசியில், அந்த வழக்கின் தீர்ப்பு இரு கட்சிக்காரர்களுக்கும் இணக்கமாக இருந்தாலும் அந்த வழக்கில், இரு தரப்பு வழக்குரைஞர்களும் நுணுக்கமான சட்ட விவாதங்களைக் கையாண்டு, ஆதாரங்களைக் காட்டி, அதிக காலம் எடுத்துக் கொண்டு, பணச் செலவீனங்களை மிகவும் அதிகப்படுத்தியதை காந்தி வெறுத்தார்.

=-=-=-=

காந்தி டர்பன் நீதிமன்றத்தில் பணி செய்ய / வழக்காட ஆரம்பித்த சில நாட்களில். கந்தலுடை அணிந்த, முன்பற்கள் இரண்டு உடைந்த பாலசுந்தரம் [ஆம். இவர் தமிழர்தான்] என்கிற கொத்தடிமை, காந்தியின் அலுவலகத்திற்கு வந்தார்.

பாலசுந்தரம் அவருடைய வெள்ளைக்கார முதலாளியால் மிக மோசமாக அடிக்கப் பட்டிருந்தார்.

காந்தி அவரை ஆசுவாசப் படுத்தி, ஒரு வெள்ளைக்கார மருத்துவரால் அவருக்குச் சிகிச்சை செய்வித்து – அம்மருத்துவரிடமிருந்து பாலசுந்தரத்தின் பலத்த காயங்கள்/அடிகள் பற்றி ஒரு மருத்துவச் சான்றிதழ் பெற்றார். பின் அவர் பாலசுந்தரத்துக்காக போராடி, வழக்காடி, அதில் வென்று, நஷ்டஈடு வாங்கிக் கொடுத்து, அவருக்கு இன்னொரு முதலாளியிடம் வேலையும் வாங்கித் தந்தார்.

இந்த நிகழ்வும், இம்மாதிரி நிகழ்வுகளும், தென்ஆஃப்ரிகாவில் வேலை செய்து கொண்டிருந்த ஏழை இந்தியத் தொழிலாளர்களிடம், காந்தி பரவலாக அறிமுகமாக உதவின. காந்தி ஒரு ஏழைப் பங்காளர், அவர்கள்தம் துன்பத்தைத் தீர்க்கக் கூடியவர் என்கிற உண்மை பரவி, அவர் புகழ் இந்தியாவிலும் பரவியது. இதற்குப் பிறகு அவர், ‘ நண்பர்களற்றவர்களின்  நண்பர்’ என அறியப் பட்டு மதிக்கப் பட்டார்.

இவ்வாறாக, ஒரு வருடத்தில் காந்தி பெற்ற பலதரப் பட்ட அனுபவங்கள், அவர்தம் தன்னம்பிக்கையை வளர்த்து அவரை உறுதி மிக்கவர் ஆக்கின.

பின், நீதித்துறையுடன் ஒருசில வாக்குவாதங்களுக்குப் பின் இந்தக் ‘கூலி பாரிஸ்டர்’  நடால் உச்ச நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்கப் பட்டார். ஆனால் வெள்ளைக்கார அரசு வக்கீல்கள், நீதித் துறையினர் அவருக்கு வழக்குகளை அளிக்க, ஒதுக்க மறுத்தனர். காந்தியும் தன் பங்குக்கு, தன்னுடைய வழக்குரைஞர் தொழிலை மிகவும் சிரமம் மிக்கதாக ஆக்கிக் கொண்டார் –

எப்படியென்றால், அவர் வழக்குரைஞர் தொழில் என்பது பொய்மை / கபடம் மிக்கது என்கிற வாதத்தைத் தகர்க்க முயன்றார். அவர், தம் வழக்கில் வெற்றி பெறுவதற்காக – ஒரு பொழுதும் பொய் பேசாமல் மட்டும் இருக்காமல், தம் பக்க சாட்சிகளுக்கு ’சொல்லிக் கொடுத்து’ சாட்சி சொல்லவும் முயலாதவராகவும் இருந்தார்.

தன் கட்சிக்காரர்கள் வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி – அவர் தனக்குச் சேரவேண்டிய பணத்தை விட இம்மியளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வாங்கிக் கொள்ளவில்லை – அவர் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் காரணமாகவோ அல்லது தன் கட்சிக் காரர்கள் தனக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்காத போதோகூட, ஒருவரின் மீதும் வழக்குத் தொடர்ந்தது இல்லை.

தென்ஆஃப்ரிகாவில் பணி புரிந்து வந்த காலகட்டத்தில், அவர் மீது நான்கு முறை உடல்ரீதியான வன்முறைக்கு ஆட்படுத்தப் பட்டார் – இருப்பினும் அவர் தன்னைத் தாக்கியவர்களைத் தண்டனைக்குட்படுத்தவோ அல்லது அவர்கள் மீது வழக்குப் போடவோ முயலவில்லை.

அவரது இருபது வருட வழக்குரைஞர் தொழிலில் அவர் நூற்றுக் கணக்கான வழக்குகளை, நீதிமன்றங்களுக்கு வெளியே இணக்கமாகத் தீர்த்தார்.

==-=-=

ஒரு சமயம், அவர்  நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கும்போது, தன் கட்சிக்காரர் நேர்மையாக இல்லை என்று அறிந்துகொண்டார். உடனே அவர் வழக்காடுவதை நிறுத்தி விட்டு, நீதிபதியிடம், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரினார் – மேலும் அவர் தன் கட்சிக்காரரை, பொய் வழக்கைக் கொணர்ந்ததற்காகக் கடிந்து கொண்டார்.

ஒரு சமயம் காந்தி சொன்னார்: “ நான் ஒரு இரண்டாம்தர வழக்குரைஞராக என்னுடைய தொழிலைத் தொடங்கினேன். என்னுடைய கட்சிக்காரர்கள் என்னுடைய வழக்குரைக்கும் திறனைப் பற்றி ஒன்றும் பெரிதாக எண்ணவில்லை. ஆனால், எப்போது அவர்கள், நான் உண்மையிலிருந்து, எக்காலத்திலும், எள்ளளவும் பிறழ மாட்டேன் என்று தெரிந்து கொண்டார்களோ அன்றிலிருந்து அவர்கள் என்னை விட்டு விலகவே இல்லை”

(தொடரும்… 3/3)

காந்தியாயணம்…