காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 3/3)

05/03/2012

“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற, அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்: பாரிஸ்டர்.

முதல் பகுதி – 1/3; இரண்டாம் பகுதி – 2/3.. கீழே இவ்வத்தியாயத்தின் மூன்றாம் பகுதி…

=-=-=-=

அவருடைய கட்சிக்காரர்கள், வாடிக்கையாளர்கள் அவருடைய நண்பர்களாகவும், கூட வேலை செய்பவர்களாகவும், ஏன், சகபணியாளர்களாகவும்கூட ஆனார்கள்.

காந்தியும் தொடரும் அப்பழுக்கற்ற நேர்மைக்கு, ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

இவருடைய நேர்மையால், பிறழாமல் நேர்ப்பாதையில் தொடர்ந்து செல்லும் தன்மையால், ஒரு சமயம் ஒருவரைச் சிறைச்சாலையில் அடைக்கப் படுவதிலிருந்து காப்பாற்றினார் கூட.

ஒரு சமயம் அவருக்கு முன்னறிமுகம் இருந்த ஒருவர், சில பொருட்களைச் சுங்கவரி கொடுக்காமல் ஏமாற்றிக் கடத்தினார் – ஆனால், காவல்துறையிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.அந்த மனிதருடைய மானம் கப்பலேறும் தருணத்தில், மனம் கலங்கி, அவர் நடந்ததைக் காந்தியிடம் அப்படியே கூறி, தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு மன்றாடினார்.

ஆனால் காந்தி அவரை தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி, அதற்கான தண்டனையும் பெற்றுக் கொள்ளச் சொன்னார். அதேசமயம், காந்தி, சுங்க இலாக்கா அதிகாரியிடமும், அரசின் தலைமைச் சட்ட அறிவுரையாளரிடமும் (அட்டார்னி ஜெனரல்) சென்று, நடந்ததை முழுவதும் உள்ளதை உள்ளபடி சொன்னார். அவர்களுக்கும் காந்தியைப் பற்றித் தெரியுமாதலால், அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு, குற்றம் புரிந்த அம்மனிதருக்கு வெறும் அபராதம் மட்டும் விதித்தனர்.

இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்த்தால் மிகுந்த நிம்மதி அடைந்த அந்த மனிதர், அந்த முழு விவரத்தையும் அச்சிட்டுத் தன் அலுவலக அறையில், நன்றியுடன் மாட்டி வைத்துக் கொண்டார்.

இன்னொரு சமயம், காந்தியின் கட்சிக்காரருடைய வரவு-செலவுக் கணக்கு விவரங்களில் ஒரு தவறு இருந்தபோது, காந்தி அந்த விவரத்தைத் தானே முன்வந்து மூடிமறைக்காமல் சொல்லி, பின்பும் கூடத் திறமையாக, தன் கட்சிக்குச் சார்பாக வாதாடினார்.

அந்நீதிமன்ற நீதிபதி கூட, முதலில் காந்தி உண்மையைக் கூறியபோது, ஏனடா இவர் தன் கட்சிக்காரருக்கு எதிராக விவரம் கொடுக்கிறாரே என்று, அதனை விரும்பவில்லை – ஆனால் பிற்பாடு தொடர்ந்த, காந்தியின் வாதத்திறமையை மெச்சி, காந்தியின் தரப்பு சார்பாகவே நீதி வழங்கினார். மேலும் பிரதிவாதிக் கட்சியினரைக் கேட்டார்: “காந்தி மட்டும் உண்மையைச் சொல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?”

காந்தி குறுக்கு விசாரணை செய்வதிலும் மிகுந்த திறமை படைத்தவராக இருந்தார்.மேலும் அவர், நீதிபதிகளாலும், சக வழக்குரைஞர்களாலும் மிகவும் மதிக்கப் பட்டார். அவருக்கு நிறைய வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள், கட்சிக் காரர்கள் இருந்தனர்.

=-=-=-=

தென் ஆஃப்ரிகாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வழக்குகளில், அவை இந்தியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே நடத்தால் – நீதி இந்தியர்களுக்குக் கிடைக்காத நிலைமையை அவர் கண்டறிந்து கொண்டார். இது அவரை இவ்வாறு சொல்ல வைத்தது: “இந்தியாவில், எந்த ஒரு வெள்ளைக்காரருக்காவது படுபாதகக் கொலைகள் செய்ததற்காக, சட்டத்தின் படி கடுமையான தண்டனை கிடைத்திருக்கிறதா? பாருங்கள், அந்த வெள்ளைக்கார அதிகாரி ஒரு அப்பாவி நீக்ரோவை வன்மையாகத் துன்புறுத்தி அவரைக் குற்றுயிறும் கொலையுயிறுமாக ஆக்கியதற்கு அந்த அதிகாரிக்குக் கிடைத்த மிகச் சிறிய தண்டனை – இது எள்ளி நகையாடத் தக்கதல்லவோ?

=-=-=-=

காந்தி தனக்குத் தானே அறம் சார்ந்த மிகக் கடுமையான விதிமுறைகள் விதித்துக் கொண்டாலும், என்னதான் அந்நாட்டின் சட்டத்தை எதிர்த்து, விமர்சித்துப் பேசினாலும், அவருடைய வக்கீல் தொழில் மிக நன்றாகத் தழைத்தோங்கி வளர்ந்தது.

இந்தியாவில் சில காலம் தான் அவர் தன்னுடைய தொழிலை நடத்தினார்; ஆனால் தென் ஆஃப்ரிகாவில் அவர் இருபது வருடங்கள் தன் தொழிலைத் திறம்பட, மெச்சத்தக்க வகையில் நடத்தினார்.

=-=-=-=

தென் ஆஃப்ரிகாவில், முதலில் சில காலத்துக்கு அவர் – ஊரில் ஒரு நல்ல இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் ஒரு வளரும் பாரிஸ்டருக்கு ஏதுவான வகையில், அலுவலகத்தைத் தொடங்கினார். அந்த அலுவலகத்தை அவர் ஐரோப்பிய முறையில் உள்ளே அலங்கரித்து, மேஜை நாற்காலி, இன்னபிற தளவாடங்களைக் கொண்டு நிரப்பினார். விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், அவர் கேளிக்கை விருந்துகள் (’பார்ட்டி’) நடத்தினார்.

அவர் வசித்த வீடு ஒரு ‘திறந்த’ இருப்பிடமாக இருந்தது. அவர் தன்னுடைய நெருக்கமான நண்பர்களையும், அவர், கூட வேலை செய்தவர்களையும், பணியாளர்களையும் தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தார்.

அவருடைய அலுவலகம் அவர் வீட்டில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் இருந்தது. முதலில் சில மாதங்களுக்கு அவர் தன் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் சென்று வந்தார். அதன் பின்னர், அவர், முழுவதும் கால்நடையாக மட்டுமே சென்றுவந்தார்.

இந்தியர்கள் ட்ராம் வண்டிகளில் முன்பக்கம் உட்கார அனுமதி இல்லாத காரணத்தால் [வெள்ளையர்கள் மட்டும் தான் அவ்விடங்களில் அமரலாம்] அவர் ட்ராம் வண்டிகளில் போவதையே நிறுத்தினார். அவர் நினைத்திருந்தால், அவருடைய புகழை வைத்து, தனக்கு மட்டும் ஒரு விசேஷ அனுமதி வாங்கிக் கொண்டிருக்க முடியும்.

காலஞ்செல்லச்செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஏழை இந்திய உழைப்பாளிகளுடன் உறவு கொண்டு, அவர்களில் ஒருவராகவே மாறினார். அவர்களுடைய் வாழ்க்கைத் தரத்தில், எளிமையான வாழ்க்கையும் வாழ ஆரம்பித்தார்.

அவருடைய நாற்பது வயதில் அவர் மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் [இது 1908-9 வாக்கில்] அவர் தன்னுடைய தொழிலை முற்றிலும் துறந்து, மக்கள் / பொதுப் பணிக்குத் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டார்.

தன்னுடைய அனைத்துச் சொத்துக்களையும் தன் நண்பர்-சமூகக் குழுமத்திற்குக் [’கம்யூனிட்டி’ – இவற்றைச் சமூகவியலாளர்கள் ‘இண்டென்ஷனல் கம்யூனிட்டி’ என்று இக்காலங்களில் அழைக்கின்றனர்] கொடுத்து விட்டு, தன் உடலுழைப்பு மட்டும் சார்ந்து, பண்ணைகளில் வாழ்ந்தார்.

பல வருடங்கள் பின்னர், காந்தி – இந்தியாவின் வறுமை மிகுந்த பின்புலத்தில் – வக்கீல்களும், பாரிஸ்டர்களும் தங்கள் கூலியாகக் கேட்ட மிக அதிக அளவு பணத்தை,, இந்திய நீதிமன்றங்களின் ஊதாரித்தனமான வழிமுறைகளை, வன்மையாகக் கண்டித்தார். (அப்போது, இந்தியா ஏழ்மையில் மூழ்கி இருந்தாலும், வக்கீல்கள் சராசரியாக மாதம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை பிரதி மாதம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.)

காந்தி சொன்னார்: “சட்டத் தொழில் என்பது ஒரு பங்குச் சந்தை போன்ற விஷயம் அல்ல. நாம் மட்டும் வக்கீல்கள், நீதிமன்றங்கள் பின்னால் வால் பிடித்துக் கொண்டு அலையாமல் இருந்தோமானால், நம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வக்கீல் தொழில் நேர்மையின்மையைப் படிப்பிக்கின்றது. ’சொல்லிக் கொடுக்கப்பட்ட’ பொய்ச் சாட்சிகள் இரு பக்கமும் இருந்து, தங்களின் ஆன்மாக்களை பணத்துக்காக விற்றுக் கொண்டிருக்கின்றனர்.”

அவர். நீதித்துறைக்கும், சட்டங்களுக்கும் ஒரு பெரிய, புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என விரும்பினார் – அவர் நினைத்தார் – இவ்வகையான மாற்றத்தால்தான், நீதி என்பது தூயதாகவும், குறைந்த பணச்செலவிலும் கிடைக்கும்.

அவர், ஏழைமக்களின் வழக்குகளை இலவசமாக நடத்தித் தந்தார். பொதுநலம் / நன்மை சார்ந்த வழக்குகளை, தன்னுடைய அவ்வழக்குச் சார்ந்த சில்லரைச் செலவுகள் மட்டும் பெற்றுக் கொண்டு நடத்திக் கொடுத்தார்.

ஒரு சமயம் ஏழை இந்தியத் தொழிலாளர்கள் அவர்கள் வசித்து வந்த ‘கூலி’ இருப்பிடங்களிலிருந்து, நகராட்சியால் கட்டாயப் படுத்தப்பட்டு அகற்றப் பட்ட போது, காந்தி இத்தொழிலாளர்களுக்கு சார்பாக வக்காலத்து வாங்கினார். ஒவ்வொரு வழக்குக்காகவும் 150 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு அபரிமிதமாக உழைத்தார். இச்சம்பவத்தில் 70 விதம் விதமான வழக்குகள், பின்புலங்கள்; ஆனால், இவற்றில் ஒன்றில் மட்டுமே தான் இவர் தோற்றார். இந்த வழக்குகளினால் அவருக்குக் கிடைத்த பணத்தில், பாதியைக் கொண்டு அவர் ஒரு பரோபகார நிறுவனம் நிறுவினார் கூட.

=-=-=-=

தன் மக்களுக்கு, அடிப்படை மனித உரிமைகள் பெற வேண்டி, அவர் அரசுக்கெதிராக – மக்களைப் போராடவைக்கப் பிரயத்தனப் பட்டார். ஆகவே அவர் பலமுறை கைது செய்யப் பட்டு, இந்திய, தென் ஆஃப்ரிக நீதிமன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொண்டார். பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். தென் ஆஃப்ரிகாவில் அவர் முன்னர், பத்து வருடங்கள் வழக்காடிய அதே நீதிமன்றத்தில் அவர்,பிற்காலத்தில் கைவிலங்குடன் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிக் கூட வந்தது.

பின்னாளில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்திய நீதி மன்றம் ஒன்றில் ருசுவாக்கப் பட்ட பின்னர் அவர் சிறை செல்ல் நேர்ந்தபோது, அவருடைய பெயர், பாரிஸ்டர்களுடைய பட்டியல்/ஜாபிதாவிலிருந்து நீக்கப் பட்டது.

காந்தி, ப்ரிட்டிஷ் அரசின் நீதிமன்றங்களோடு ஒத்துழைக்காமல், நாம், நமது பாரம்பரியமான பஞ்சாயத்து முறையை மீட்பித்து, புனருத்தாருணம் செய்ய வேண்டும் என முனைந்தார்.

காந்தியெனும் இந்தச் சட்ட உடைப்பாளரின் அறைகூவலுக்குச் செவி மடுத்து, எண்ணிறந்த பெயர்பெற்ற வழக்குரைஞர்கள் தங்கள் வக்கீல் தொழிலுக்குத் தலை முழுகி, நம் தேசவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஒரு வக்கீல்கள் குழுமம் ஒரு சமயம் அவரைப் பேச்சாளராக அழைத்தபோது அவர் சொன்னார்: என்னை என் வக்கீல்கள் குழுமமே தடை செய்துள்ளது, நானும் தொழிலை விட்டு நெடுநாள் ஆகிய படியால், சட்டங்களை மறந்து விட்டேன். எப்படியுமே நான் இப்போதெல்லாம் சட்டத்தை எப்படி புரிந்துகொள்வது, அதன் அர்த்தம் என்பது என்ன என்று யோசிப்பதை விட்டுவிட்டு – சட்டத்தை உடைப்பதில் தான் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

(காந்தி ஒரு வழக்குரைஞர் – மூன்றாவதும் முடிவானதுமான பகுதி முற்றிற்று)

அடுத்தது… காந்தி எனும் தையல்காரர்

காந்தியாயணம்…

Advertisements

4 Responses to “காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 3/3)”

 1. SureshKumar Says:

  Thanks a lot for translating and publishing this..
  For the new generation such simple crispy contents would make them easily realise the great man..

  Your efforts would always be remembered by Tamil community – i hope.

 2. dr suneel Says:

  செறிவான மொழியாக்கம்..நன்றி ராமசாமி சார்..

 3. Anonymous Says:

  அஹிம்சை வழியில் செல்ல வேண்டிய அவரின் கட்சியினர் இன்று……

  • ramasami Says:

   அன்புள்ள ‘பெயரிலி,’

   உங்களுக்குக்குத் தெரிந்திருக்கலாம் – காந்தி அவர்கள் 1933-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸின் உறுப்பினராக இல்லை.

   மேலும் ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் செயல்படும் ஒரு கட்சி (உலகில் பல கட்சிகள் இப்படித்தான்) அஹிம்சை வழி செயல் பட முடியுமா என்பது சந்தேகமே; காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஒரு விரிந்து பரந்து, சமூகமளாவிய மாற்றங்களை நோக்கிச் சென்றது – ஆனால் பிற்காலத்தில் அது ஒரு அரசியல் கட்சி மட்டுமாகச் சுருங்கி விட்டது… தேய்ந்து விட்டது…

   ஆக, அரசியல் மட்டும் செய்யும் கட்சிகள் தன்னளவில் உறுதியாகவே இருக்கின்றன. அவைகளுக்குத் தெரியும், தங்கள் முனைப்புகள் பற்றி.

   காங்கிரசும் வெகு காலமாக, அப்படியேதான்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: