காந்தி எனும் தையல்காரர்…

08/03/2012

“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் மூன்றாம் அத்தியாயம்: டெய்லர்.

=-=-=-=

தென்ஆஃப்ரிகாவில் , காந்தி பலமுறை சிறை சென்றார், கடுங்காவலில் இருந்தார்; அதில், இரண்டுமுறை சிறையில், கடும்வேலை செய்யவும் பணிக்கப் பட்டார்,

இந்த கடும்வேலைத் தண்டனையின் கீழ், சில வாரங்களுக்கு, நாளுக்கு ஒன்பது மணிநேரம் – கனத்த போர்வைத் துண்டுகளை இணைத்துத் தைக்கவும், கிழிந்த போர்வைகளைத் தைக்கவும், மேற்சட்டை ஜேபிகளுக்கான துணியை வெட்டவும் ஆணையிடப் பட்டார்.

காந்தி இயல்பிலேயே சுறுசுறுப்பும் செய்நேர்த்தியும் மிக்கவராதலால், அவர், ஒவ்வொரு நாளும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சீக்கிரமே முடித்து விட்டு, இன்னமும் அதிகமான துண்டுகளைக் கேட்பார் – ஏனெனில், நேர்மையான அவர் பார்வையில் ஒன்பது மணிநேரம் வேலை என்றால் அவ்வளவு மணி நேரம் பணி செய்யப் பட்டே ஆக வேண்டும்.

காந்தி ஒரு சமயம் ஒரு இந்தியச் சிறையில் இருந்த போது, அவர் ஒரு ஸிங்கர் தையல் இயந்திரத்தில், சில நாட்கள் ‘இழுத்துப் போட்டுக்கொண்டு’ பணி செய்தார் – அதாவது, இந்தப் பணியை அவர் தன்னிச்சையாகத் தான் செய்தார் –  ஏனென்றால்,  அவர், தையல்வேலையில் கை நேர்த்தி மிக்கவராக ஆக வேண்டும் என்று விரும்பினார் கூட.

=-=-=-+

அவருக்கு, மனிதர்களின் கையால் செய்யக் கூடிய வேலைகளை மாபெரும் இயந்திரங்களை வைத்துச் செயல்பட வைப்பது, பெரும் முதலாளிகளின் சொத்துக்களான அவ்வியந்திரங்களுக்கு, அம்மனிதர்களை அடிமையாக்கும் என்று தோன்றியது. மேலும் அவர், இயந்திரங்கள், அடிப்படையில் மனிதன் செய்ய வேண்டிய உடல் உழைப்பை, தேவையில்லாமல் செய்துவிடுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் எண்ணினார். அவர் கருதினார்: ”இந்தியாவின் பிரச்சினை என்பது, எப்படி லட்சக் கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் பெற்றுக் கொடுப்பது என்பதல்ல, ஆனால் எப்படி, அவர்களின் சோம்பேறித்தனத்தால் வீணாகும் நேரத்தை, உபயோககரமாக மாற்றுவது என்பது தான்!

ஆனால் அவர் தையல் இயந்திரத்துக்கு, இக்கருத்தோட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்தார்.  ஏனென்றால்: ”இவ்வியந்திரம் உண்மையாலுமே மனிதன் மிகக் குறைந்த அளவில் கண்டு பிடித்துள்ள, ஆனால் மிக உபயோகமான உபகரணங்களில் ஒன்றாகும். இதனைக் கண்டுபிடித்த ஸிங்கர் – தன் மனைவி அவர் கையால் தைப்பதற்கு மேற்கொள்ளும் சிரமங்களைக் கண்டே, அதற்கு மிகுந்த நேரம் செலவழிப்பதைக் கருதியே – அவர் மனைவி மீதான அன்பின் காரணமாக மட்டுமே, அவரது தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்தின் மூலாதாரமாக, அன்பு தான் இருந்தது.

=-=-=-=

காந்தி, ஒரு சமயம் ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண்மணிக்குக் கடிதம் எழுதினார்: நீங்கள் உங்களுடைய ஸல்வார்-கமீஸ் உடையை எப்படித் தைக்க முடியும் என்று யோசிக்க வேண்டாம். அதை உங்களுக்கு எப்படித் தைக்க வேண்டுமோ சொல்லுங்கள், அப்படியே நான் தைத்துத் தருகிறேன். நாம் வெகு சுலபமாக ஒரு ஸிங்கர் தையல் இயந்திரத்தைக் கடன் வாங்கி, ஒரு சில மணி நேரங்களில் அதனைத் தைத்து விட முடியும்.

அவர் தன்னால் இப்படித் தையல் வேலை செய்யக் கூடுவது பற்றி, உயர்வாக நினைத்துக் கொள்ள, எல்லா உரிமைகளும் இருந்தன. அவருடைய மனைவியின் ரவிக்கைக்காக (’ஜாக்கெட்’) அவரால் அளவுத் துணி கத்தரித்துத் தைக்க முடிந்தது. அவரால் இராட்டையில் நூல் நூற்க முடிந்தது. நூற்ற நூலை அவரால் கைத்தறி விசையில் ஏற்றி நெசவு வேலை செய்ய முடிந்தது. நெசவு செய்த துணியைக் அளவாகக் கத்தரித்து அழகான குர்த்தாவாகத் [வடக்கத்திய மேல்சட்டை] தைத்துக் கொள்ளவும் முடிந்தது.

=-=-=-=

தையல் வேலையை, செருப்புத் தைப்பதை ஆசிரமத்தில் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய  காந்தி, பலமுறை,  திறமை வாய்ந்த தையல்வேலை செய்பவர்களையும், செருப்புத்  தைப்பவர்களையும் வரவழைத்து அவர்களைக் கொண்டு ஆசிரமத்தில் இலவசமாக வகுப்புகள் நடத்தினார் கூட!

=-=-=-=

இச்சம்பவம், சம்பாரண் விவசாயிகளுடன் சேர்ந்து அவர், அவுரித் தோட்டப்பண்ணைகள் (’இண்டிகோ ப்ளாண்டேஷன்ஸ்’) நடத்தி வந்த துரைமார்களின் கொடுங்கோனமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது நடந்தது.

அச்சமயம் துரைமார்களுக்கு ஆதரவாக எழுதி வந்த ஒரு ஆங்கிலேய நிருபர், ‘காந்தி, தொழிலாளிகளை, விவசாயிகளை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகத் தான், அவர்களில் ஒருவராகத் தான் திகழ்வதாகக் காட்டிக் கொள்ளத்தான்,, தான் அணியும் உடைகளைத். தேசிய உடை முறைக்கு மாற்றிக் கொண்டார்’ என அபாண்டமாக எழுதினார்.

காந்தி அதற்கு பதிலாக “ நான் சுதேசி விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்; அதனால் தான் நான் சமீப காலமாக, என்னாலேயே நூற்று, நெசவு செய்து, கையால் தைக்கப பட்ட உடைகளை அணிகிறேன். என்னுடன் பணி செய்யும் அனைவரும் அப்படியே.” என்று எழுதினார்.

=-=-=-=

காந்தி பின்னாளில் குர்த்தா அணியும் பழக்கத்தைக் கைவிட்டார் – பதிலாக, அவர் இடுப்பைச் சுற்றி ஒரு துணியும், உடல் மேலே போர்த்திக் கொள்ள மற்றொரு துணியும் உபயோகிக்க ஆரம்பித்தார். அப்பொழுதும் கூட அவர் தன்னுடைய கைக்குட்டைகளின், கைத்துண்டுகளின், இடுப்புத் துணியின ஒரத்தை மடித்துத் தைத்தல், போன்ற வேலைகளைச் சிலசமயம் செய்து வந்தார். அவர் மும்முரமாகத் தைத்துக் கொண்டிருந்த சமயங்களில் கூட, அவர் தன்னுடைய உதவியாளரிடம், தான் எழுத வேண்டிய கடிதங்களைச் சொல்லி, அவரை எழுதிக் கொள்ளச் சொல்வார்.

-=-=-=

ஒரு சமயம் அவர் ஆகாகான் மாளிகையில் கைது செய்யப் பட்டு வைக்கப்பட்டிருந்தபோது, அவர், அந்த சிறைச் சாலையின் தலைமை அதிகாரிக்கு பிறந்த நாள் பரிசாக, காதி கைக்குட்டைகளைக் கொடுத்தார்.

அந்தக் கைக்குட்டைகள் ஒவ்வொன்றிலும் நேர்த்தியாக, திறம்பட அந்த அதிகாரியின் பெயரின் முன்னெழுத்துக்களை [’இனிஷியல்ஸ்’] , ஊசி நூலால் கைவேலைப்பாடு ’எம்ப்ராய்டரி’ செய்திருந்தார்.

அப்போது, காந்திக்கு வயது எழுபத்தி நான்கு!

=-=-=

இன்னொரு சமயம் காந்தி பணித்ததுபோல் ஒரு பெண்மணி, காந்திக்குப் பிடித்தமான, ஆனால் பல இடங்களில் கிழிந்திருந்த அவருடைய மேற்போர்வையில் [’ஷால்’] சிறு ’காதி’ துண்டுகளை வைத்து அழகாக,துண்டுப்பட்டி [பேட்ச்வொர்க்’] வேலை செய்து கொடுத்தார். அந்த மேற்போர்வையை அணிந்துகொண்டுதான் அவர், நம் நாட்டு ஏழை மனிதர்களின் பிரதிநிதியாக, வட்டமேஜை மாநாட்டுக்கும், ப்ரிட்டிஷ் பிரதமரை ச்ந்திப்பதற்கும், பக்கிங்ஹாம் அரண்மனையில் தேனீர் விருந்துக்கும் சென்றார்.

அவர் ஒரு பொழுதும் பகட்டுக்காகவோ அல்லது மற்றவர்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ உடை அணிந்ததில்லை. ஆனால் அதற்காக, அவர் அழுக்கான, சரியில்லாத, கிழிந்த உடைகள் அணிவதையும் விரும்பினாரில்லை.

=-=-=-=

இன்னொரு சமயம், பணி சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில், அவர், சக ஊழியர் ஒருவரின் மேற்போர்வையில் ஒரு கிழிசல் இருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு, காந்தி ஒரு குறிப்பெழுதி அனுப்பினார்: கிழிந்த துணிகளை அணிவதென்பது சோம்பேறித்தனத்தின் விளைவு – ஆகவே அது வெட்கக்கேடானது. ஆனால், துணிகளிலுள்ள கிழிசல்களைத் துண்டு வைத்துத் தைத்து, அவற்றை அணிவதென்பது, ஏழ்மையையோ, உழைப்பினையோ அல்லது விட்டு விடுதலையாகி இருப்பதையோ குறிக்கும். உங்கள் உடையில் உள்ள கிழிசலை என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இந்தக் கிழிசலானது உங்கள் ஏழ்மையையோ அல்லது எளிமையையோ சித்தரிக்கவில்லை. அது சித்தரிப்பது, உங்களுக்கு மனைவி இல்லாமையயோ, மனைவி வேலை செய்யாமையையோ அல்லது உங்கள் சோம்பேறித்தனத்தையோ தான்!

அடுத்து: காந்தி எனும் வண்ணார்…

காந்தியாயணம்…

One Response to “காந்தி எனும் தையல்காரர்…”

  1. Anonymous Says:

    இன்றைய நாளில் உழவு ஏர்மாடுகள் போய் இயந்திரக் கலப்பைகள் வந்துவிட்டன. இவைகள் சாணம் போடாது, இயற்கை தொழு உரமிடுவது குறைந்து விட்டது. இயந்திரங்களினால் இயற்கை வளங்களை சுரண்டுவது எளிதாகிவிட்டது. பல்லாண்டு வயதான ஆற்றுமணல், நீர் ஆதாரம் நொடியில் இல்லாமல் செய்துவருகிறோம். காந்தியத்தத்துவங்களை கைகழுவிட்டோம். இவையில்லாம் பெருகிவரும் மக்கள் தொகையின் விளைவுகளா அறியேன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s