திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…

10/03/2012

”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!) –  படித்தீர்களா?

’திராவிட இயக்கம்’ எனப்படுபவைகள், பெரும்பாலும், திரைப்படப் பணத்தினாலும், திரைப்படக்காரர்களின் / நடிகர்களின் வெகுமதிகளாலும் (பணம் + புகழ் + பிரச்சாரம் + கூட்டம்)  வளர்ந்தன என்பது உண்மைதான் என்றாலும் – பல சமயங்களில், இந்தத் திரைப்படவுலகத்தினர், முழு நேர அரசியல்வாதிகளைக் குப்பை போல நடத்தினர் என்பதும் உண்மை. இந்த திராவிட அரசியல் இயக்கங்களைத் தங்கள் சுய நலத்துக்கு உபயோகப் படுத்தினர்  என்பதும் உண்மை. எப்போது அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கவில்லையோ, இயக்கங்களை விட்டு விலகி, தாறுமாறாக விமர்சனம் வைத்தனர் என்பதும் உண்மை.

முதன் முதலில், ஈவேரா-அண்ணா காலங்களில் கே ஆர் ராமசாமி என்பவர் தான், திராவிட இயக்கத்தின் முழுமுதல் நடிகர்-அரசியல்வாதி என்றுச் சொல்லலாம். இவர் இயக்கத்துக்கு அளித்த பணத்துக்கு, உழைப்புக்கு, ஆடிய ’ஆட்டம்’ அதிகமில்லை எனத்தான் சொல்ல வேண்டும்.

கீழே முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களில், இடது புறத்திலிருந்து மூன்றாவது: அண்ணா. நான்காவது ‘கலைவாணர்.’ ஏழாவது கே ஆர் ராமசாமி...

கீழே முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களில், இடது புறத்திலிருந்து மூன்றாவது: அண்ணா. நான்காவது ‘கலைவாணர்.’ ஏழாவது கே ஆர் ராமசாமி...

அச்சமயம் கொஞ்சம் பிரபலமாக இருந்த ’கலைவாணர்’ என் எஸ் கிருஷ்ணன் சில பிரச்சார வேலைகளைச் செய்ய முடிந்ததே தவிர ரொம்பவும் ‘ஆட’ முடியவில்லை, ஆனால் அதற்காக அவர் முயற்சி செய்யாமலில்லை; கண்ணீர் விட்டழுது, ஆகாத்தியம் செய்து, புலம்பி, கருணாநிதி வழியாக, அண்ணாதுரையிடம் சில பல காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்பதெல்லாம் உண்மைதான்.

இப்பொழுது கொஞ்சம் திமுக வரலாறு…

… ஈவெரா – ஈவெகி சம்பத் பிளவு ஏற்படுத்தப் பட்டு, பின்னர் சம்பத்துடன்,  அண்ணா + மற்றவர்கள் சேர்ந்து திக-வில் பிளவு ஏற்பட்டது 1949-ல்.

பின் அண்ணா+ஐம்பெரும் தலைவர்கள் இயக்கத்துக்குத் தலைமை வகித்த சமயத்தில் (இத்தலைவர்களில் கலைங்கர் கருணாநிதி அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது) எம்ஜியார் காங்கிரஸ் சார்பு நிலையிலிருந்து திமுக சார்புக்கு வந்தார் – இது கலைங்கர் போட்ட, சினிமா+அரசியல் வியாபாரக் கணக்கு

இச்சமயம் சிவாஜி கணேசன் அவர்களும் திமுக அரசியலில் இருந்தார் – 1953 வரை வீரமாக “ஆணையிடு தலைவா ஆணையிடு, அண்ணா, நீங்கள் ஒரு வார்த்தைச் சொன்னால் சினிமா ஒப்பந்தங்களைக் கிழித்துப் போட்டுவிட்டு, முழு நேரக் கட்சிப் பணியாளனாகிவிடுகிறேன்” என்றெல்லாம் பேசிக், கடைசியில் கட்சியை விட்டே விலகினார்,

அவருக்கு.அவர் சொந்தக் கணக்குகள் – நடிப்பு வியாபாரம், போட்டிகள் இன்ன பிற – இவை ஒப்புக் கொள்ளப் பட வேண்டியவையே!

… எம்ஜியார் அவர்களின் திரைசார், மக்கள்சார் வசீகரம் வளர வளர, அவருக்கும் அரசியல் ஆசைகள் வளர்ந்தன. பொதுக் கூட்டங்களில் பேசுவதிலிருந்து – எந்த அரசியல் சார்பான நடவடிக்கைகளிலும், சக
இயக்கம் (மட்டும்) சார்பான பிற தலைவர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுக்கத் தவறினார்; சமயங்களில் எம்ஜியார், அவர்களிடம் அகங்காரத்துடனும் நடந்து கொண்டார் – இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கியமான காரணம், அப்போது அவருடைய உற்ற நண்பரும், அரசியல் அறிவுரை சொல்பவரும், நம்முடைய, பிறர் இரத்தம் உறிஞ்சியே பழக்கப் பட்ட கலைங்கர் அவர்கள், என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

… 1950களின் இறுதியில் ஈவெகி சம்பத் – அண்ணாதுரை வேறுபாடுகள் உச்சகட்டத்தை அடைந்தன. முறைப்படி பார்த்தால், சம்பத் அணியினருக்கே கூடுதல் பலம் இருந்தது. அண்ணா ஒரு வசீகரமான தலைவராக இருந்தாலும், (பெரும்பாலும்) அப்பழுக்கற்றவராக, கருணையுள்ளம் கொண்டவராக இருந்தாலும், அவருடைய ’தன் பலம்’ என்பது கருணாநிதி, எம்ஜீயார்களால் சுற்றி வளைக்கப் பட்டு விட்டது, இதற்குக் காரணம், அவர் ஒரு விதத்தில் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ இருந்ததும்….

இளம் வயதில் அண்ணாதுரையும், சம்பத்தும் விளையாட்டாகக் கைவண்டி இழுக்கின்றனர். இது நாற்பதுகளின் (1940கள்) இறுதியில் எடுக்கப் பட்ட புகைப் படம்... (இவர்கள் இப்படிச் சேர்ந்தே வண்டி இழுத்திருந்தால், தமிழகம் இன்று எங்கோ இருக்கும்!)

சம்பத் அணியினர் – அதன் தலைவர்கள், பெரும்பாலும் திரைப்படத் தொழில் சார்ந்தவர்கள் அல்லர், அம்மாதிரி விசிலடிச்சான் குஞ்சுக்குளுவான்களைச் சேர்க்கக் கூடியவர்கள் அல்ல அவர்கள்.

சம்பத் அணியினர் பெரும்பாலும் அடிமட்ட ஊழியர்களாக இருந்து மேலே வந்தவர்கள் –  ஆகவே அவர்கள், திரைப்படக் காரர்களை, அவர்கள் தர்க்கம் சாரா வசீகரத்தை, அவர்களின் அரசியல் கோட்பாட்டு வறட்சியை  வெறுத்தனர். (சம்பத் அணியிலிருந்த கண்ணதாசன் திரைப்படக் காரர் ஆனாலும், அவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால், அர்ப்பணிப்பால், விடாமுயற்சியால் உயர்ந்தவர் தாம். – கட்சியின் வளர்ச்சிக்காக தான் ஈட்டிய பணத்தைப் பெறுமளவு தொலைத்தவர் கூட)

அண்ணாதுரை தரப்பில் பெரும்பாலும் அப்படி இல்லை; பெரும்பாலான தலைவர்களுக்கு திரை / நாடகத் துறைகள் சார்ந்த பின்னணி இருந்தது.  . ஆக, நமது மாக்கியாவெல்லி கலைங்கர், அண்ணாதுரை-சம்பத் வேறுபாடுகளினால், தன் உள்ளடி வேலைகளினால், திமுகவில் தன் நிலையை மேலும் ஸ்திரம் செய்து கொண்டார்.

இச்சமயம் (கொமாரபாளையத்தில், ஜூன் 1960 என என் நினைவு) நடந்த திமுக-வின் உயர்மட்டக் குழுவில் ஏகப்பட்ட பிரச்சினைகள். முக்கியமாகக் கலைங்கரின் உள்ளடி வேலைகள் – விளைவு: சம்பத் அண்ணாதுரை பிளவு பெரிதானது. ஜனநாயக முறையில் விவாதங்கள், வாக்கெடுப்புக்கள் நடைபெற இருந்ததால், அண்ணாதுரையின் (அதாவது, கருணாநிதியின்)  ஆட்கள், சம்பத்தின் அணியினரால் ஓரங்கட்டப்பட இருந்தனர்); ஆனால், அண்ணாதுரை, பிளவினை, உட்கட்சிப்பூசலை விரும்பாமல், கண்ணீர் விட்டழுது சம்பத்திடம் கோரிக்கை வைத்து, அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்து, அவரது ஆதரவைக் கோரி தானே கட்சிப் பொறுப்பை மீண்டும் வகித்தார்.

இருப்பினும் கசப்புகள் தொடர்ந்தன, வாக்குறுதிகள் பறக்கவிடப்பட்டன. கருணாநிதி வகையறாக்களால் சூழப்பட்டிருந்த அண்ணாதுரையும் இந்த கசப்புகளைத் தொடர அனுமதித்தார்.

பின்னர் வேலூரில் நடந்த (ஜனவரி, 1961 என நினைவு) பொதுக் குழுக்கூட்டத்தில், சம்பத் அணியினர் திட்டவட்டமான முடிவுகளை எடுக்கலாம், கட்சியைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம் எனத் திட்டமிட்டனர்.

இதனைக் கேள்விப் பட்டு அஞ்சிய கருணாநிதினாதிகள் கயமைத் திட்டமிட்டு, தங்களை எதிர்ப்பவர்களை அடித்து உதைத்து அச்சுறுத்தி தங்கள் இடத்தை ஸ்திரம் செய்து கொள்ள சதித் திட்டமிட்டனர்.

மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் குண்டர்களையும் சண்டை (ஸ்டண்ட்) நடிகர்களையும் வரவழைத்து,  அவர்களைத் தயார் நிலையில் வைத்தனர்.

சம்பத் முதல் நாள் கூட்டத்திற்காக வளாகத்தினுள் நுழைந்ததும், கூச்சல்கள் குழப்பங்கள் ஆரம்பித்தன. கருணாநிதியும் அவர் பங்கிற்கு சம்பத்தை, மிகவும் கேவலமாகத் திட்டினார்.  பின் ஒரு மதுரை ரவுடி (இவர் பொதுக்குழு உறுப்பினர் அல்ல, இருந்தாலும் கூட்டத்திற்கு கருணாநிதியால் கொணரப் பட்டிருந்தார்) ஒருவர்,  சம்பத்தை மிரட்டி அவர் சட்டையின் காலரைப் பிடித்தார்.

பின் எம்ஜியாரும் (அப்போது அவர் வெறும் ஒரு ’புரட்சி நடிகர்’ தான்), எஸ்எஸ்ஆரும், அக்காலச் சினிமா ரவுடிகள் போல, தங்கள் சட்டைக்கைகளை அவர்களின் புடைத்த நரம்புகள் தெரிய மடக்கி விட்டுக் கொண்டு,  சம்பத்தைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்தனர். பின்னர் மிக, மிகக் கேவலமான முறையில், ‘இலட்சிய நடிகர்’  எஸ்எஸ்ஆர் ஓங்கி, சம்பத்தை ஒரு குத்து குத்தினார்…

’கலைவாணர்’ என் எஸ் கிருஷ்ணன் - படத் திறப்பு. வலதுபக்கம் உள்ளவர் தான் எஸ்எஸ்ஆர் என அழைக்கப் பட்ட எஸ் எஸ் ராஜேந்திரன். இவர் தான் சம்பத்தைக் கேவலமாகத் திட்டி ஓங்கி ஒரு குத்து குத்தினார். (ஆக, தமிழ் நாட்டின் முதல் குத்தாட்டக் காரன், இவர் தான்!)

இவ்வனைத்து விஷயங்கள் நடந்த போதும், அண்ணாதுரை, கண்ணீர் விட்டபடி இருந்தார், தடுக்க முயற்சி செய்தாரில்லை..

பின், அண்ணாதுரை மன்னிப்புக் கேட்டல், சம்பத்தால் பெருந்தன்மையாக மன்னிக்கப் படல், அண்ணாதுரையின் வாக்குறுதிகள் அனைத்தும் நடந்தாலும் – சம்பத் கூட்டத்தில் பங்கேற்காமல் போனதால், மீண்டும் அண்ணாதுரையின் (அதாவது கருணாநிதியின்) கட்சித் தலைமை தொடர்ந்தது.

சில மாதங்கள் பின் சம்பத் உண்ணாவிரதம் இருந்ததும், அண்ணாதுரை அழுது, மீண்டும் வாக்குறுதிகள் கொடுத்து அவரைச் சரி செய்ததும், பின், வழக்கம் போல அவற்றைக் காற்றில் பறக்க விட்டதும், நொந்துபோன சம்பத், கட்சியை விட்டு வெளியே வந்ததும் நமக்கெல்லாம் தெரியும்

இதோடு முடிக்கிறேன் – ஆனால் நடிகர்கள் மட்டும்தான் அரசியல்வாதிகளால் கேவலமாக நடத்தப் பட்டு வந்தனர், வருகின்றனர் என்பது அறியாமை எனக் காட்டத்தான் இவ்வளவு எழுதினேன்.

மன்னிக்கவும்.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

4 Responses to “திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…”

 1. Sakthivelu K Says:

  திரைமறைவில் நடந்துள்ள விவகாரங்கள் வியப்பளிக்கின்றன. மக்கள் நலம் இரண்டாம் பட்சம் இல்லை இல்லை மூன்றாம் பட்சம். முதலில் குடும்பத்திற்கு, இரண்டாவது தம் கட்சியினருக்கு மீந்தால் மக்களுக்கு – மக்கள் வரிப்பணம் போகும் முறை.


 2. ராமசாமி சார், சோவோட துக்ளக் படிச்ச மாதிரி இருந்தது. திருட்டு முன்னேன்ற கழக சொம்புகள் இங்கு வந்து வாந்தி எடுக்காதது ஆச்சர்யம்தான்.

  • ramasami Says:

   அட! வேல்முருகன் குபேரன் அவர்களே!

   காந்தி, ப்ராம்ஸ், ஷூபர்ட், பாக்ஹ், டஸ் பூட், தஸ்தயேவ்ஸ்கி, நீஷே, புத்தர், அழகான மென்பொருள் கட்டுமானங்கள்…

   பொலிக, பொலிக… ( நம்பிக்கை நட்சத்திரங்களே! எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்?)


   • நன்றி ஐயா, உங்களுடைய blogகை பத்ரி அவர்களின் வலைப்பக்கத்தில் இருந்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் IITல் படித்து இருந்தாலும் கல்வி பணியாற்றி வருவது மிகவும் ஆச்சர்யம் அளித்தது, உங்கள் மீது பெரும் மதிப்பையும் ஏற்படுத்தியது. ஜெமோ சொன்னது போல் உண்மையான சமூக பணியாளர்கள் உங்களை போன்றவர்கள்தான்.

    உங்களுடைய “இரங்கல்: ஜான் மக்கார்த்தி” பதிவு மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த கணினி மொழி c மற்றும் python. இந்த மொழிகளின் simple’லான கட்டமைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    என்னுடைய சிறிய வேண்டுகோள் உங்களுக்கு நேரம் இருந்தால் “Design Pattern’s” பற்றி தமிழில் எழுதினால் என்னை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சொற்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s