காந்தி எனும் வண்ணார்…

12/03/2012

… அல்லது காந்தி எனும் சலவைக்காரர்.

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  நான்காம் அத்தியாயம்: வாஷர்மேன்.

=-=-=-=

தென்ஆஃப்ரிகாவில், பாரிஸ்டர் காந்தி, நீதிமன்றத்துக்குப், பாங்கான ஐரோப்பிய உடை அணிந்துச் செல்வார்.

வழக்குரைஞராகப் பணி புரிந்து வந்த அவருக்கு, ஒவ்வொரு நாளும், அவருடைய மேல்சட்டையின் நிறத்துடன் ஒத்திசையும் கழுத்துப் பட்டையை (’காலர்’), சுத்தமானதாகவும், புதிதாகவும் அணிய வேண்டியிருந்தது. அவர் அவர் மேல்சட்டையை இரு நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய சலவைக்கான செலவும் மிக அதிகமாக இருந்தது.

அவருடைய வண்ணார் (சலவைக்காரர்), சலவை செய்து தருவதற்கு, அடிக்கடி தாமதப் படுத்தினார் வேறு. ஆக, காந்திக்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது, தேவையான அளவுக்கு, அவருக்கு சலவை செய்த துணிகள் இருப்பு வைத்துக் கொள்ள.

அவர் மூன்று டஜன் சட்டைகள்+காலர்கள் வைத்துக் கொண்டாலும் கூட, அவருடைய வண்ணார் போல ஒருவரைக் கட்டிக் கொண்டு, அவரால் மாரடிக்க முடியவில்லை.

ஆக, காந்தி அவர் செலவீனங்களைக் கட்டுப் படுத்த வேண்டுமென்று விரும்பினார். ஒரு நாள் அவர், வீட்டிற்குத் திரும்பி வரும்போது, துணி துவைக்க, இஸ்திரி பண்ண என்ன தேவையோ, அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தார். துணி துவைப்பது பற்றி ஒரு புத்தகத்தையும் வாங்கி, அதனைக் கவனமாகப் படித்தார். அவருக்கு நன்றாகத் துவைப்பது எப்படி என்று புரிந்தவுடன், அவர் அனுதினமும் துவைக்க ஆரம்பித்தார்.

பாவம் கஸ்தூர்பா – அவரால் இதனை ஆனந்தமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்க கொடுத்துவைக்கவில்லை – ஏனெனில் காந்தி, அவருக்கும் சரியாகத் துவைப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கலானார்.

அனுதினம் துவைப்பதான, இந்தப் புதுப் பழக்கம் காரணமாக, காந்தியின் தினசரி வேலைப்பளு கூடியது – ஆனால், காந்தி விடாக்கண்டராதலால் அவர், தொடர்ந்து துவைப்பதையும் மற்ற வேலைகளையும் செய்து வந்தார். ஏனெனில், அவருக்கு அந்த வண்ணாரின் ஆகாத்தியத்திலிருந்து விடுதலை பெறுவதும், தன்னுழைப்பின்பாற் சார்ந்திருத்தலும் முக்கியமாகப் பட்டது.

=-=-=-=

ஒரு நாள் அவர், தன்னுடைய கழுத்துப் பட்டையைத் துவைத்து அதற்குக் கஞ்சி போட்டார். அதனைப் பின் இஸ்திரி போடும்போது, அவருக்கு முன்னனுபவம் இல்லாத காரணத்தால், சரியாகச் சூடு செய்யாமலும், அழுத்தம் கொடுக்காமலும் இருந்தார் – அவருக்கு, இஸ்திரிப் பெட்டியின் சூடு மிகுந்தால் எங்கே தன் கழுத்துப்பட்டை எரிந்து போய் விடுமோ என்கிற பயம் வேறு…

ஆக, அவர் அந்த, கஞ்சி அதிகமான, தகடு போல் நின்ற கழுத்துப் பட்டையை அணிந்து கொண்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் அவருடைய உடையைக் கேலி செய்தனர். ஆனால் காந்தி அவர்களுடைய எள்ளி நகையாடலைப் பொருட்படுத்தினாரில்லை, அதனால் வெட்கப் பட்டாரில்லை..

அவர் சொன்னார்: “இது நான் துணிகளுக்குக் கஞ்சி போடுவது முதல் முறையாதலால், தவறு ஏற்பட்டு, அதிகக் கஞ்சி போட்டிருக்கிறேன்.. அதனால் என்ன, பரவாயில்லை. எது எப்படியோ, உங்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது!”

அவர்கள் கேட்டனர்: “ஆனால், இங்கு என்ன சலவைக்கூடங்களுக்கு, வண்ணார்களுக்குப் பஞ்சமா என்ன?”

காந்தி சொன்னார்: “இல்லை, ஆனால் சலவைக்கான செலவீனம் மிக அதிகமாக ஆகிறது என நினைக்கிறேன். ஒரு கழுத்துப் பட்டையைச் சலவை செய்வதற்கான செலவு ஏறக்குறைய, அதன் விலைக்குச் சமமாக ஆகி விடுகிறது. மேலும், வண்ணார்களின் மீது என் சார்பு,, அளவுக்கு மீறியதான ஒன்றாக ஆகி விடுகிறது; ஆக எனக்கு, என் துணிமணிகளை நானே துவைப்பதே உசிதம்”

… பின்னாட்களில், காந்தி, ஒரு சிறந்த வண்ணாராகவும் ஆனார்.

=-=-=-=

ஒரு சமயம், காந்தி தன் குருவாக வரித்திருந்த கோபாலகிருஷ்ண கோகலே அவர்கள், காந்தியுடன் தங்கினார். அச்சமயம், கோகலே அவர்களுக்கு, ஒரு முக்கியமான விருந்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவருடைய மேற்துண்டு கசங்கிப் போயிருந்தது – போதுமான சமயமுமில்லை, ஒரு வண்ணாரிடம் கொடுத்து அதனைச் சலவை செய்து கொள்ள.

காந்தி கேட்டார்: “ நான் உங்களுக்கு, அதனை நன்றாக இஸ்திரி செய்து கொடுக்கட்டுமா?”

“ நான் உங்கள் வழக்குரைக்கும் திறனை நம்ப முடியும், ஆனால் உங்கள் வண்ணார்வேலைத் திறமையை? ஒருக்கால், நீங்கள் என் துண்டினைக நாசப்படுத்தி விட்டால்?” என்றார் கோகலே.

ஆனால் காந்தி தன்னால் சரியாக அக்காரியத்தைச் செய்யமுடியுமென்று கோகலே அவர்களுக்கு உறுதியளித்து – அத்துண்டினை இஸ்திரி செய்தார். கோகலே அவர்களுக்கும்,  திருப்தியாயிற்று – காந்தியை அவர்தம் திறமைக்காக, அவர் மெச்சினார் கூட..

“என்னை இனிமேல் யார் மெச்சாவிட்டாலும் பரவாயில்லை – கோகலே அவர்களின் சான்றிதழே போதும் எனக்கு” என்று காந்தியும் மிக மகிழ்ந்தார்.

=-=-=-=

அவருடைய தென் ஆஃப்ரிக ஆசிரமங்களில், தண்ணீர்ப் பஞ்ச நிலைமை நிலவியது. ஒர் ஊற்றில் இருந்து சுரந்த நீரை எடுத்து, துணிகள் துவைப்பதற்காகப் பெண்கள், நீண்ட தூரம் நடந்து சென்று, மிகச் சிரமப் படவேண்டியிருந்தது. ஆகவே, காந்தியும் இவ்வேலைகளில் பங்கு கொண்டார்.

காதியை, உருவாக்கி உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்த அக்காலகட்டங்களில், கைத்தறிப் புடவைகள் மிகவும் தடிமனாகவும், கனமாகவும் இருந்தன. ஆசிரமத்துப் பெண்கள் இக்கைத்தறிப் புடவைகளை அணிவதற்கு ஒப்புக் கொண்டாலும், அவற்றைத் துவைக்கும் சமயத்தில் கொஞ்சம் முணுமுணுத்தனர். அவர்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்ட காந்தி, அவர்கள் எல்லாருக்கும் தான் ஒரு வண்ணாராக முடிவு செய்து, வேலை செய்தும் காட்டினார்.

அவர், மற்றவர் துணிகளைத் தோய்ப்பதைப் பற்றி, வெட்கமே படவில்லை, பட்டதில்லை.

=-=-=-=

ஒரு சமயம், அவர் ஒரு செல்வந்தரின் வீட்டில், விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அங்கு குளியலறைக்குச் செல்லவேண்டி வந்தபோது அங்கே தரையில் ஒரு சுத்தமான வேஷ்டி வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தார்.

தன் குளியலை முடித்த அவர், தன் வேஷ்டியுடன் கீழே கிடந்த அவ்வேஷ்டியையும் துவைத்து, வெளியே வெய்யிலில் காயப் போடுவதற்குச் சென்றார். காந்தி தன் துவைக்கப் பட்ட வெள்ளைத் துணிகளை எப்பொழுதும், அவற்றிலுள்ள கிருமிகளை அகற்றுவதற்காகவும், அவற்றுக்கு ஏற்படும் பளீரிடும் வெண்மைக்காகவும், பிரித்து, உதறி,  சூரிய வெளிச்சத்தில் காயப் போடுவார்.

… விதிர்விதிர்த்துப் போன அந்த செல்வந்தர் கேட்டார்: ”என்ன செய்துவிட்டீர்கள், பாபுஜீ!”

காந்தி பதில் சொன்னார்: ”ஏன்? இதில் என்ன தவறு இருக்கிறது? அந்த வேஷ்டி, நான் குளிக்கும்போது அழுக்காகியிருக்கக் கூடும் – ஆகவே நான் அதனையும் துவைத்தேன். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க என்னுடைய சிறு பங்கை ஆற்ற, நான் வெட்கப் படவில்லை.”

காந்தி வெட்கப் படவில்லை ஆனால், அந்த செல்வந்தர், இச்சம்பவத்திற்காக வெட்கப் பட்டார்.

=-=-=-=

சிறையில் கூட,, அவருடைய முதிய வயதினை மீறி, காந்தி அவருடைய இடைத்துணி, கைத்துண்டு, கைக்குட்டை போன்றவற்றை, தம் கூட வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை வைக்காமல், சில சமயம் தானே துவைத்துக் கொண்டார்.

ஆகாகான் மாளிகையில், கஸ்தூர்பாவின் கடைசி நாட்களில், அவர் உபயோகித்த கைக்குட்டைகளை, கைத்துண்டுகளை எடுத்துத், தன் கையால் துவைத்தார்.

=-=-=-=

காந்தி, தன் வாழ்நாள் முழுவதும் தான் அணியும் உடை பற்றித் திட்டவட்டமான எண்ணங்கள் கொண்டிருந்தார். அவர் சிறுவனாக இருந்த போதும் கூட, ஆலைகளில்  நெய்யப்பட்ட / உருவாக்கப்பட்ட தன்னுடைய மிருதுவான உடைகளை, மற்ற சிறுவர்களினுடையதைவிட வெண்மையாகத் துவைக்கவே முயன்றார் – அதற்கு அவர் ஒரு ஆழ்கிணறிலிருந்து தண்ணீர் சேந்தி, பாடு பட வேண்டியிருந்தாலும்…

காந்திக்கு எளிமையான பழக்கவழக்கங்கள் மிகவும் பிடித்தமானவை – ஆனால் அதற்காக கசங்கிய, அழுக்கான உடைகளை அவர் விரும்பினாரில்லை. அவர் எப்பொழுதுமே, தன்னுடைய, இடைத்துணி, மேற்போர்வை, கைத்துண்டு போன்றவற்றைத் துளிக்கூட அழுக்கில்லாமலும், கசங்காமலும் வைத்துக் கொண்டார்.

அவர் சுத்தத்தின் உருவமாகவே இருந்தார், எப்பொழுதும்…

=-=-=-=

அடுத்து: காந்தி எனும் நாவிதர்…

காந்தியாயணம்…

One Response to “காந்தி எனும் வண்ணார்…”

  1. Sakthivelu K Says:

    மனம், சொல், செயல் மூன்றின் ஒத்திசைவு. அறவாழ்க்கை வாழ்ந்து காட்டியவர். அன்பை சார்வாக கொண்டவர். எண்ணுந்தோறும் அவரைப் போல திண்ணியராக வேண்டுமென்கிற உறுதி ஏற்படுகிறது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s