காந்தி: சில கேள்விகள், ஜெயமோகன், கனிமொழி… (தொடரும் நகைச்சுவை)

19/03/2012

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை –  சுமார் எட்டு சதவிகிதமே மொழிபெயர்த்திருக்கிறேன், இது வரை.

… ஆனால் – சில சமயம், நேரடியாகச் சில நண்பர்கள் வாயால், மின் அஞ்சல்கள் மூலமாகச் சில உரத்த சிந்தனைகள், மழுங்கிய கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அவற்றுக்கு, முடிந்த வரையில் பதிலளிக்க முயல்கிறேன் – இவற்றில் சிலவற்றுக்குப்  பதிலளிக்கத்தான் வேண்டுமா என்று சில சமயம் தோன்றினாலும்.

மிகச் சிலர் வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கின்றனர், ஊக்கம் அளிக்கவும் செய்துள்ளனர், நான் நகைக்கத்தக்க அளவு மட்டுமே  குறைந்தபட்ச வேலை செய்திருந்த போதிலும் – அவர்களுக்கு என் நன்றி.

குறிப்பு (சிலருக்கு மட்டும்): தேவையே இல்லாமல் ’காந்தி மீது கண்டபடி, வாய்க்கு வந்தபடி அவதூறு வைப்போம்’ என்று மட்டும் முனைந்து நீங்கள் எனக்கு எழுதினால், இனிமேலிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியும் பிரசுரிக்கப் படும் – அதாவது உங்கள் மின்னஞ்சலை நான் படித்துப் பதிவு செய்யும் பொறுமை எனக்கு இருந்தால்…  

சமயங்களில் மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஏன் இப்படி பலருக்கு கண்மூடித்தனமான ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது என்று.

கவனிக்கவும்: சில கேள்விகளில் இருந்த பெரும்பாலான கொச்சைத் தமிழ் வார்த்தைகளும், வசவுகளும் எடுக்கப் பட்டு, அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

1. ஏன் இப்புத்தக நடை, தமிழில் மிக எளிமையாக இருக்கிறது?

நான் முன்னுரையில் எழுதியது போல, அனு அவர்கள் – இப்புத்தகத்தைச் சிறுவர்களுக்காகவும், முதிரா இளைஞர்களுக்காகவும் தான் எழுதினார். ஆகவே தான் இதன் நடை இப்படி இருக்கிறது. தவிர, இப்புத்தகம் ஆங்கிலத்தில், பெரும்பாலும் பேசும் நடையில் எழுதப் பட்டது – என்னுடைய அனுமானத்தில், இப்புத்தகம் சரியாக ’எடிட்’ செய்யப்பட்டுச் செப்பனிடப் பட்டிருந்தால் அது இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

2. மொழி பெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டலாமே!

ஆஹா, காட்டலாம் தான் –  நீங்கள் உதவி செய்கிறீர்களா?

ஆனால், ஆங்கிலத்தில் repurposing என்று சொல்வது போல – நான் தமிழாக்கம் செய்தது – ஒரு சுத்தமான வரிக்கு-வரி சரியான மொழி பெயர்ப்பு அல்ல. இதனை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். என் எண்ணமெல்லாம், பாபுஜியின் பன் முகங்களை வெளிக்கொணர என்ன செய்யப் பட வேண்டும் என்று தான்.

மொழி ‘பெயர்ப்பு’ கரடு முரடாக இருப்பதாக நீங்கள் எண்ணினால் – என்ன, எப்படிச் செய்தால் அது சரியாகும் என நீங்கள் சிறிதளவு விளக்கினால் நன்றாக இருக்குமன்றோ?

3. தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் மீதும் கனிமொழி எம்பி மீதும் காழ்புணர்ச்சி கொண்டு விமர்சனம் வைக்கும் நீ யார்? ஆர்எஸ்எஸ் ஜெயமோகனின், கவிஞர் கனிமொழியின் தமிழின உணர்வைக் கொச்சைப் படுத்தியவனின் அல்லக்கை தானே நீ? அதனால் தானே இப்படி காந்தி ஜால்ரா போடுகிறாய்? பச்சைத் திராவிடனாக இருந்து கொண்டு இப்படி பச்சைத் துரோகம் செய்கிறாயே! நீ ஒரு தாய்க்குப் பிறந்தவனா?

நான் யார்? நான் ராமசாமியார்.

அ) அய்யா – ’காழ்புணர்ச்சி’ காத்தவராயன் அவர்களே! நீங்கள் தான் எனக்கு முன்பே அறிமுகமான அந்த ’தங்கவேந்தன்’ என நினைக்கிறேன் அல்லது நீங்கள் அந்த ‘ஒரிஜினல் திராவிடன்’ ஆகவோ அல்லது ‘சம்பூகன்’ ஆகவோ கூட இருக்கலாம். எது எப்படியோ, எனக்கு  நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் இருவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. வெறும் வெறுப்பும், ஆழமான அவநம்பிக்கையும் தான். நான் ஏன் அவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட வேண்டும்?

ஆ) அய்யா, ஜெயமோகன் அவர்களை நான் மிகவும் மதிப்பவன். அவர் மாய்ந்து மாய்ந்து, மறுபடியும் மறுபடியும், மெய்வருத்தம் பாராமல் எழுதும், காந்தி மீதான அவதூறுகளை மீண்டும், மீண்டும் எதிர் கொள்ளும் பக்குவத்தை, அவர் எழுத்துக்களின் ஆழத்தை மெச்சி, தொலைதூரத்திலிருந்து பார்ப்பவன். அவர் தம் எழுத்துக்களில் பெரும்பாலானவையை, 1980களிலிருந்து படித்திருக்கிறேன் – அவ்வளவே. மற்றபடி அவருடன் எனக்குப் பரிச்சயம் கிடையாது. என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதற்குப் பாவம் அவர் என்ன செய்வார்? அவரை ஏன் இழுக்கிறீர்கள் நம்முடைய(!) பிரச்சினையில்? நான் யார் என்று கூட அவருக்குத் தெரியாது!

இ) நான் பொதுவாக, கடந்தகாலம் பற்றிய முன்முடிவுகளில்லாமல், பாரம்பரியஙளை, சமூகப் போக்குகளை அவதானித்து, தற்காலத்தில் தன்னூக்கத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, பேய் போன்றுழைத்து, நம் சிந்தனைகளை எதிர்காலங்களுக்கு இட்டுச் சென்று புதிய தளங்களுக்கு விரிக்கும் மனிதர்களை, பெரும்பாலும் இப்படிச் செயல்படுபவர்களை, மதிப்பவன் – அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புள்ளவனாக இல்லாவிட்டாலும் கூட.  ஆக, இப்படிப்பட்டவர்களின் அல்லக்கையாகக் கருதப் பட்டால், ஆஹா, சந்தோஷமாக, அப்படியே கருதப்பட்டுவிட்டுப் போகிறேன்.

ஈ) அவர் கனிமொழி பற்றி என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது – அதைப் பற்றி அறிந்துகொள்ளும் நேரமும் இப்போது இல்லை – ஆனால், நான் முன்பு எழுதியது போல, கவிதைக்கும் கனிமொழிக்கும் ஒரு விதமான சம்பந்தமும் இல்லை – என் அனுமானத்தில், ஜெயமோகனும் இப்படியேதான் எண்ணக் கூடியவர் என்று எனது மேன்மையான அபிப்ராயம்; ஆனால், அவர் மெய்யாலுமே என்ன எழுதியிருப்பார் என நான் தற்போதைக்கு யூகம் தான் செய்ய முடியும்.

உ) அவர் ஆர்எஸ்எஸ் சார்ந்தவராக ஒரு காலம் இருந்திருக்கிறார் என அவர் எழுதிப் படித்ததாக நினைவு – என்னுடைய இந்தத் தகவல் தவறாகக் கூட இருக்கலாம்,  எப்படியானாலும், நான், ஆர்எஸ்எஸ் என்றால், மத அடிப்படைவாத, மதவெறி இயக்கம் தான், அதன் தொண்டர்களெல்லாம் குண்டர்கள், என எண்ணுபவனல்ல – ‘ஆர்எஸ்எஸ்’ என்கிற பதத்தைக் கெட்ட வார்த்தையாகக் கருதுபவனல்ல. (அதேபோல, நக்ஸல்பாரி என்கிற பதத்தையும்)

ஊ) எப்படி .ஆர்எஸ்எஸ் – திராவிடம் – கருணாநிதி-கனிமொழி –  ஜெயமோகன் – அல்லக்கை என்ற சங்கிலித் தொடர் (?) ஒன்றை உங்களால் எண்ணமுடிந்தது என எனக்குப் புரியவில்லை. உங்கள் குழப்பவாதத்தை, நான் புரிந்து கொண்டே தான் ஆக வேண்டும் என்பதும் இல்லை.

ஐ) நான் திராவிடனா (?) ஆரியனா (??) என்பது குறித்து உங்களுடைய ‘ஆணித்தரமான’ எண்ணங்களை மெச்சுகிறேன். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி:: ஏன் நான் ஒரு ’வெள்ளைத்’ திராவிடனாகவோ, ஊதாதிராவிடனாகவோ இருக்கக் கூடாது? உண்மையில் நான் கொஞ்சம் ஒல்லியான தேகம் படைத்தவன் – ஆகவே நான் ஒரு ’ஊதா’திராவிடனாக இருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகமன்றோ? இப்படியான பட்சத்தில் நான் ஊதாத் துரோகங்கள் தான் செய்யக் கூடுமன்றோ?

ஒ) ஆம், நான் ஒரு தாய்க்குப் பிறந்தவன் தான். (நீங்கள் எப்படி? பல தாய்களுக்கு ஒரே சமயத்தில் பிறந்தவரா?) தயவு செய்து இதனைத் தெளிவு படுத்தவும்.

=-=-=-

எச்சரிக்கை! இன்னமும் சில கேள்வி-பதில்கள் நகைச்சுவை (நேரம் கிடைக்கும் போது) – தொடரும்…

பின் குறிப்பு: காந்திக்கும் அக்கப்போர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும், இப்பதிவு காந்தியாயணம்… தலைப்பின் கீழ் சேர்க்கப் படுகிறது!

3 Responses to “காந்தி: சில கேள்விகள், ஜெயமோகன், கனிமொழி… (தொடரும் நகைச்சுவை)”

 1. krishna Says:

  ஐயா வணக்கம்…
  தங்களது கட்டுரைகளும் சரி, கேள்விக்கான பதில்களும் சரி ஒரு விஷயத்தின் தன்மையை முழுதாகவும் அதே சமயம் நகைச்சுவையோடும் சொல்கிறீர்கள்… கடினமான கேள்விகளைகூட உங்களது பதில் சிரிக்க வைத்துவிடுகிறது ( அதற்க்கான உண்மையான பதிலோடு)…. வாழ்த்துக்கள்… பொதுவெளியில் (பத்திரிக்கைகளில்) இதுபோன்ற எழுத்துக்களை நான் படித்ததில்லை… எதிலாவது எழுதுகின்றீர்களா?

 2. Sakthivelu K Says:

  இன்று நம்மை வருத்திக் கொண்டிருக்கும் பொய் மாயைகளிடமிருந்து (வறுமை, நோய், ஆற்றல் பற்றாக்குறை, மக்கள் பணத்தை எப்படியாவது அபகரிக்க வழிதேடும் கூட்டம்…) எப்படி விடுபடுவது அல்லது எதிர்த்து எப்படி போராடுவது என்பதற்கு காந்தியார் எடுத்துத்தந்த ஆயுதம் அஹிம்சை. அவரைப்பற்றிய நூல்கள் இருந்தாலும் படிக்க ஆர்வமில்லாத எங்களை போன்றோர்க்கு படிக்க ஆர்வமூட்டியது தங்களுழைப்பால் விளந்த மொழிபெயர்ப்பு. இதற்கு ஏன் பல சாயங்கள் பூசவேண்டும் என்று புரியவில்லை. அணுகுமுறையை அமைத்துத்தந்தவர் மஹாத்மா.

 3. jeyakumar72 Says:

  ///நான் கொஞ்சம் ஒல்லியான தேகம் படைத்தவன் – ஆகவே நான் ஒரு ’ஊதா’திராவிடனாக இருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகமன்றோ? இப்படியான பட்சத்தில் நான் ஊதாத் துரோகங்கள் தான் செய்யக் கூடுமன்றோ?// :-)))


Leave a Reply to krishna Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s