காந்தி ஒரு துரோகியே தான்!

04/04/2012

… இதில் ஒரு சந்தேகத்துக்கும் இடமே இல்லை.

அய்யாமார்களே, அவரை விட்டு விடுங்கள். நான் தான் அவர் சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேனே. மேலும் உபரித் தகவல்கள் பல கொடுத்திருக்கின்றேனே!

காந்தியை விட்டு விடுங்கள்.

=-=-=-=

ச. முகம்மது அலி என்பவர், (வே. மதிமாறன் அவர்கள் எழுதியிருக்கும் ‘காந்தி – நண்பரா? துரோகியா?’ என்கிற அறுபத்துனான்கு பக்க புத்தகத்தைப் பற்றி) எழுதியுள்ள நூல் அறிமுகம் படித்தேன். இறும்பூதடைந்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பொதுவாக, இணையத்தில் பேச்சுக்களுக்கும், ‘டமிள் எள்த்துக்களுக்கும்’ சுத்தமாக மட்டறுப்பு கிடையாது, அவற்றுக்கு வரி விதிப்பு இல்லவே இல்லை என்பதால் ஏற்படும் பின் விளைவுகளில் இம்மாதிரி நகைச்சுவைகளும் ஒன்று.

வரிக்கு வரி திமிறிக்கொண்டு மேலெழும் குபீர் சிரிப்பை வரவழைத்து விலா நோகவைக்கும் இந்தக்  ‘கறார் விமர்சனத்தை’ தாங்கள் முதலில் படிக்கவும்.

படித்தீர்களா?

ஐயா….

ஐய்ய்ய்ய்யா…. ….

ஐயோ! சிரித்துச் சிரித்து இபபடி மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களே…

நான் என் செய்வேன்!!! ….

=-=-=

மாதிரிக்குச் சில பகுதிகள்:

முன்பு பாரதியாரின் ஒளிவட்ட மர்மத்தை உடைத்த மதிமாறன் அவர்களின் அண்மை வெளியீடு தான் ‘காந்தி; நண்பரா துரோகியா?’ என்ற நூல். இது காந்தியைக் கட்டுடைக்கிறது.

பாரதியாருக்கு ஒளி வட்டமிருந்ததா? அதன் மர்மம் என்ன? கட்டுடைப்பு என்றால் என்ன? கட்டிப் புடைப்பு என்றால் என்ன? ஏன் இந்த போலி deconstruction  நம் இலக்கியவாந்திகளை இப்படித் தொந்திரவு செய்கிறது?

எனக்கு இம்மாதிரிக் கட்டுடைக்கும் மனிதர்களை அவர்தம் மண்டைகளில் குட்டிக் கட்டியுதைக்க வேண்டுமெனத்தான் தோன்றுகிறது…

எது எப்படியோ – ஒரு மனிதரின் வெளியீடு என்பது – அது யாராக இருந்தாலும் சரி – அது சாதாரணமாக அனுதினமும் நடப்பது, நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கி  யமானதும் கூட – இதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையா?

மர்மங்கள், மர்மங்கள்…

தயவு செய்து, வஹாப் அவர்களிடம் சொல்லி SS66-இலிருந்து பேயாழ்வாருடன் சங்கர்லால் அவர்களை அழைத்து வரச் சொல்லி, தமிழ்வாணனிடம் சொல்லவா? அல்லது இரும்புக்கை மாயாவியிடம் சொல்லவா?

ஆம் வலிமை வாய்ந்த தமது ஆராய்ச்சியின் மூலம் அந்த இராஜ விக்ரகத்தின் உள்ளீடை மட்டுமல்ல, அதன் பக்தர்களின் பித்தங்களையும் அம்பலப்படுத்திய வகையில் இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.

என்ன அய்யா இப்படி திடுதிப்பென்று இப்படி இராஜ விக்ரகம் என்றெல்லாம் எழுதுகிறீர்? வான்கவிப் பேரரசர் வைரமுத்து அவர்கள், தன் சொக்கும் விழிகளுடன் உங்கள் கனவில் வந்து பயமுறுத்தினாரா? அல்லது எம்ஜீயார் சிவாஜியெல்லாம் அந்தக் காலத்தில், சுருட்டைமுடியுடன்கூடிய அதனைத் தன் தலையில் போட்டுக் கொண்டு வருவார்களே – அந்த இராஜ விக் ரகம் பற்றிச் சொல்கிறீர்களா? எனக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் தெரிந்து, காந்தி விக் அணிந்ததில்லை. ஆனால் மதிமாறன் அவர்களின் மண்வெட்டி அகழ்வாராய்ச்சியின் தரம் எனக்குத் தெரியாது – ஆகவே அவரைத் தயவு செய்து, கேட்டுச் சொல்லவும்.

நேர்மை என்றால் நேராக வரையப் பட்ட கருப்புநிறக் கோடு என நினைக்கிறீர்கள் என என் எண்ணம். எனக்கு இதில் கொஞ்சம் சந்தேகமிருக்கிறது. மதிமாறன் அவர்கள் கருப்புமசிப் பேனாவை உபயோகித்திருந்தாலும் கூட – அவர் நம் தமிழில் எழுதியிருந்தால் அது கருப்பான ஆனால் வளைந்த கோடுகளைக் கொண்டதாகத் தானே இருந்திருக்கும். ஆக இவர் வளைந்தமையான எழுத்தாளராகத் தானே இருக்கக் கூடும்?

… இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.

ஆனால் அய்யா, இந்த மகத்தான விஷயம் எனக்குப் புல்லரிக்கிறது. இந்தியா என்றறியப் பட்ட என் நாடு இப்போது ”ச. முகம்மது அலி” என பெயர் மாற்றம் பெற்றது என் தவப் பயன்.

இப்படித்தான் இந்தியாவின் ’நேர்மையான’ எழுத்தாளர்களில் ஒருவராக  மதிமாறன் அவர்கள் அறியப்பட்டிருக்க வேண்டும்.

என்னே அவர் புகழ்! என்னே உங்கள் பராக்கிரமம்!!

அறிவியலாளரோ, அரசியல்வாதியோ யாராயினும் அவர்களை நுண்மான் நுழைபுலத்தோடு ஆராய்ந்து விமர்சனப்படுத்துவது தேவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும், சுவாரசியமானதும் கூட. இதுவே ஒரு சரிநிகர் சமுதாயத்தைக் கட்டமைப்பதும் மாற்றியமைப்பதற்குமான அடித்தளம்.

மகத்தான புல்லரிப்பு. மறுபடியும் மறுபடியும்…

சரி நிகர் சமுதாயத்தின் அடித்தளத்தை இவ்வளவு சுலபமாக ஏற்படுத்தமுடியும் என்பது எனக்கு மயிர்க்கூச்சமளிக்கிறது.

முகம்மது அவர்களே, லுதுலி, ட்ராட்ஸ்கி, அம்பேட்கர் போன்றவர் எல்லோரும் உங்களிடத்தில் பிச்சை வாங்கவேண்டும்…

என்னே தங்கள் நுண்மான் நுழைபுலம்….

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு முதல் தர பிற்போக்கு நாடான நமது நாட்டில் தான் எதைத் தொட்டாலும் அதை சாதியோடு, சமயத்தோடு, கடவுளோடு முடிச்சுப் போட்டு வைக்கப்பட்டுள்ளது

அய்யா முகம்மது அவர்களே,, உங்களுக்கு நம் நாட்டைப் பற்றியே பல அடிப்படைச் செய்திகள் தெரியவில்லை – இந்த லட்சணத்தில் மற்ற நாடுகளுடன் வேறு நம் நாட்டைத் தொடர்புபடுத்தி பளிச்சிடும் அறியாமைசார் தன்னம்பிக்கையுடன் உலா வந்து பேசுகிறீர்கள் – உங்கள் தைரியத்தை வாழ்த்த எனக்கு நிச்சயம் வயதிருக்கும் – இருந்தாலும் உங்களை வணங்கி மகிழ்கிறேன்!

=-=-=-=
… …
=-=-=-=

ஆம் முதலில் இந்நூல் இந்தியிலும், குசராத்தியிலும். மத்திய, உத்தரப் பிரதேசங்களிலும் தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.

அய்யா, குஜராத்தியில் எழுதி உத்தர, மத்தியப் பிரதேசத்தில் வெளியிட்டால் என்னவாகும்? மதிமாறன் அவர்களின் தமிழ் புத்தகத்தை நீங்கள் இம்மாதிரியே கொடுக்கக் கூடிய அறிவுரையின்படி, அவர் அஸ்ஸாமிலோ அல்லது நாகாலாந்திலோ வெளியிட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

முகம்மது அவர்களே, உண்மையைச் சொல்லுங்கள்  – நீங்கள் மதிமாறன் அவர்களின் நண்பரா? துரோகியா??

ஒரு சின்ன விஷயம் அய்யா – நீங்கள் காட்டைப் பற்றிப் படிப்பதற்கு முன் நாட்டைப் பற்றி, அதாவது நம் நாட்டைப் பற்றிச் சிறிதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

64 பக்கங்களில் உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலின் பின்அட்டையில் அம்பேத்கர், பெரியார், காந்தியின் படங்களைத் தந்து சிறு விளக்கங்கள் கொடுத்திருப்பது சரியான வடிவமைப்பு.

எனக்கு இந்த அட்டையைக் காணச் சகிக்கவில்லை. (புத்தகத்தை இன்னமும் நான் படிக்கவில்லை) அழகுணர்ச்சியில்லாமல் அமைக்கப் பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.அந்தக் கழுதை கிடக்கட்டும், நாம் விஷயத்துக்கு வருவோம்.


அய்யா, அவர்கள் எல்லோரும் தடியுடன் நடந்து வந்து ஏதோ சிலம்பச் சண்டையை நடத்த ஆரம்பிக்க இருப்பது போல் இருக்கிறது. மேலும் அம்பேட்கரும் காந்தியும் இப்படிக் கோணலாக நடந்தால், பாவம் ஈவெராவை அவர்கள் முட்டித் தள்ளிவிடுவது என்பது நடக்கும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – அவர்கள் இருவரும் சேர்ந்து சதி செய்து ஈவெராவை முட்டித் தள்ளிவிட்டார்கள் என மதிமாறன் ஒரு கோடிட்டுக் காண்பிக்கிறார் என்கிறீர்களா?

அதில் காந்தி பற்றிய குறிப்பில் இதையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்; தினசரி மார்பு, கை, கால், முகச்சவரம் செய்வதும் முடிவெட்டிக் கொள்வதும் உடையமைப்புக்கேற்ற திட்டமிட்ட ஒப்பனையே.

காந்திக்குத் தெரியும் அவர் அழகு பற்றி. எனக்கும் கஸ்தூர்பாவுக்கும் தெரிந்து, அவர் நிச்சயம் ஒரு உலக அழகிப் போட்டிக்கு ஒரு அபேட்சகராக இருந்ததில்லை – ஆக அவருக்கு மார், கை கால் போன்ற பகுதிகளில் சவரம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை.

ஆனால் அய்யா, காந்தி நீங்கள் சொல்வது போல் (ஒரு பேச்சுக்குத் தான்) இந்த உடலங்கங்களிலிருந்து, தினசரி முடி நீக்கம் செய்து கொண்டார் என வைத்துக் கொள்வோம். உங்கள் மகாமகோ ஆத்ம திருப்திக்காக, நீங்கள் குறிப்பிடாத அங்கத்திலும் செய்து கொண்டார் எனவும் கூடக் கொள்வோம்.

அப்படியும் கூட, அதில் என்னய்யா தவறு இருக்கிறது? ஒப்பனை தானே செய்து கொண்டார், ஒங்கொப்பனையா செய்தார்?

இப்போது உங்களுடைய காதலுணர்ச்சியும், வீரவுணர்ச்சியும் ஒருங்கே ததும்பும் அழகான பக்கவாட்டுப் புகைப்படத்தையே எடுத்துக் கொள்வோம்.

இதில் நீங்கள் ஏன் சட்டை போடாமல் இருக்காமல், சட்டை போடுவது, அதிபுத்திசாலித்தனமான, குறுகிய தீட்சண்யமிகுந்த தங்கள் கண்களை அனாயாசமாக பக்கவாட்டில் வீசுவது – போன்ற விஷயங்கள் செய்கிறீர்கள், பார்க்கச் சகிக்கவில்லை என்று சொன்னால் – அது சரியாக இருக்குமா?

ஆக, உங்கள் ஒப்பனை உங்களுடைய சொந்த விஷயம். ஆனால் ஓன்று சொல்லவேண்டும் – உங்கள் கண்ணாடிச் சட்டத்தை மாற்றிக் கொண்டீர்களானால், நீங்கள் இன்னமும் அழகாக ஜொலிப்பீர்கள். கொஞ்சம் ஷவரம் செய்து கொண்டீர்களானால் அது ஊக்க போனஸ் – இவையும் ஒப்பனை தான் – இருந்தாலும்…

[ச. முகம்மது அலி] காடுகள் பற்றிய ஆய்வில் இந்தியாவில் உள்ள முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர்.காடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி ஆய்வு செய்வது இவரது சிறப்பு.

ஆஹா, நன்றி. காந்தி ஒரு காடு என்பதை நீங்கள் அறிந்து கொண்ட புத்திசாலித்தனத்தை நான் மெச்சுகிறேன்.

மாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றால், மாட்டின் அருகே செல்லத்தான்வேண்டும். எந்த ஆராய்ச்சியானாலும், அது நேர்மையாக நடத்தப் படுகிற பட்சத்தில், இப்படித் தான் இருக்க வேண்டியது அதன் அடிப்படை, இலக்கணம். ஆக அய்யா, நீங்கள் காட்டைப்பற்றி ஆராயும் முன்னணியாளாராக இருக்கும்போது (அல்லது நீங்களே அப்படிச் சரியாகவோ / தவறாகவோ நம்பும்பொழுது), காட்டிற்குச் செல்லுதல் என்பது பெரிய விஷயமல்ல அல்லவா? இதற்குப் போய் இவ்வளவு பெரிதாக பலூன் காட்சியமைக்கிறீர்களே!

நீங்கள் ஆனால், தயவு செய்து கைலாயத்தைப் பற்றியோ அல்லது சுடு/இடுகாட்டைப் பற்றியோ நரகத்தைப் பற்றியோ – இம்மாதிரி முன்னணி ஆராய்ச்சி செய்யவே வேண்டாமென தேவரீர் தங்களிடம் தெண்டனிட்டு விஞ்ஞாபனம் செய்து கொள்கிறேன்! ஏனெனில் உங்களுக்கு குடும்பம், பந்தங்கள் இருக்கக் கூடும். அவர்களுக்குத் தேவையற்ற துயரம் நீவிர் தர வேண்டா.

கறாரான விமர்சனம் இவரின் [ச. முகம்மது அலி] இன்னொரு சிறப்பு,

:-) ஆங்கிலத்தில் (முகம்மது அலி அவர்களுக்குக் கோபம் வரும், இருந்தாலும்…) சொல்வார்கள் – ROTFL என்று… அது போல – எனக்குத் தரையில் உருண்டுருண்டுச் சிரிக்கத்தான் தோன்றுகிறது!

அதனாலேயே சிறு பத்திரிகை இலக்கியவாதிகளிலிருந்து ‘பெரிய‘ பத்திரிகை வரை உள்ள பழைமைவாதிகள் இவரை [ச. முகம்மது அலி] திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.

பழமைவாதிகள் வாழ்க!!

முகம்மது அய்யா, எங்கே, எப்படி அவர்கள் திட்டம் போடுகிறார்கள் என்று நீங்கள் தெரிவிக்கக் கூடுமானால், அவர்களது அடுத்த வருடச் செலவீனங்களை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

=-=-=-=

அய்யா முகம்மது அலி அவர்களே, உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் நான் –காந்தியைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள்! — எழுதியுள்ளேன்; நான் உங்கள் எழுத்தைப் படித்து இறும்பூதடைவது போல், நீங்களும்… அவசியம் படிக்கவும்.

=-=-=

எனக்கு நாளை முதல் சில நாட்கள் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்புச் சிறார்களுடன் ‘அறிவியல் திருவிழா’ கொண்டாட வேண்டியதிருப்பதனால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமாதலால், மிகுந்த சோகத்துடன், இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்(!) மிகவும் கிண்டல்ஆராய்ச்சி செய்வதை முடித்துக் கொள்கிறேன்….

வேலைப்பளு குவிந்து விட்டது! :-(

கடைசியாக, ச. முகம்மது அலி அவர்களிடம் நான் மேலும் நிறைய எழுதும்படி விண்ணப்பம் செய்து கொள்கிறேனும் கூட….

கடைசியோகடைசியாக மதிமாறன் அவர்களிடமும் அப்படியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (இவர் ஒரு புத்தகம் எழுதியதால்தானே, அதற்கு முகம்மது விமர்சனமென்றொன்று எழுதியதால்தானே, எனக்கு இன்று பொறுக்க முடியாத நகைச்சுவையால் ஆட்கொள்ளப் பட முடிந்தது?)

(இந்தச் சுட்டியை எனக்குச் சுட்டிய நண்பரைச் சுட வேண்டும்; இதுகாறும் அவரைச் சுட்டிப் பயல் என நினைத்திருந்தேன் – ஆனால் அவர் சுடாத அரைக்கிழம் (என்னைப் போல) என்று அண்மையில் தெரிய வந்ததால் அவரை மன்னித்து, மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்கிறேன்)

காந்தியாயணம்…

One Response to “காந்தி ஒரு துரோகியே தான்!”

  1. Sakthivelu K Says:

    வரலாறு அறியாதவர். நூல் அறிமுகம் என்கிற பெயரில், ” தம் மேதாவிலாசத்தை” எப்படியெல்லாம் வெளிபடுத்துகிறார்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s