“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர்.

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், மூன்றாம், கடைசிப் பகுதி கீழே. (முதல் பகுதி, இரண்டாம் பகுதி)

=-=-=-=

1946 – டெல்லியில் இருந்த ஒரு தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று அவர்களிடம் அளவளாவிய காந்தி…

உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்:

“உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா?

… நம் நகராட்சிகள் அவசியமாக தீர்க்க வேண்டிய ஒரு பெரிய, முக்கியமான பிரச்சினை சுகாதாரமின்மைதான்..

… நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, எப்படி, எந்த விதமான சூழ்நிலைகளில் நமது பெருக்குனர்களும், தோட்டிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று?”

குடிமக்களுக்கு அவர் சொன்னது:

“நீங்கள் உங்கள் கைகளில் வாளிகளையும், துடைப்பங்களையும் எடுத்துக் கொண்டு உழைக்காதவரை, உங்கள் வீடுகளையும், நகரங்களையும் சுத்தமாக்க – சுத்தமாக வைத்துக் கொள்ள, முடியவே முடியாது.”

ஒரு, மாதிரிப்-பள்ளிக்கு (model school) அவர் சென்றிருந்த போது, அங்குள்ள ஆசிரியர்களுக்கு அவர் சொன்னார்:

“உங்கள் பள்ளியை ஒரு தரம் வாய்ந்த முன்மாதிரியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், நீங்கள், உங்கள் மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு அப்பாற்பட்டு – அவர்களை, தரம் வாய்ந்த சமையல்காரர்களாகவும்,செய்நேர்த்தி மிக்க தோட்டிகளாகவும் கூட ஆக்கவேண்டும்.”

பள்ளி மாணவர்களுக்கு, அவருடைய அறிவுரை:

“உங்களுக்கு நீங்களே தோட்டிகளாக முடிந்தால், நீங்கள் உங்கள் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வீர்கள்.

… விக்டோரியா சிலுவைப் பதக்கம் [victoria cross] வாங்குவதற்கு வேண்டிய தைரியத்தை விடச் சற்றும் குறைந்ததல்ல – செய்நேர்த்தி மிக்க தோட்டியாவதற்குள்ள தைரியம்…”

=-=-=-=

அவரது ஆசிரமத்துக்குப் பக்கத்தில் வசித்த கிராமவாசிகள் அவர்களுடைய மலத்தை, மண் போட்டு மூடிவிட மறுத்தனர். அவர்கள் சொன்னார்கள், “இது தோட்டிகளின் வேலை. மலத்தை கண்ணால் பார்ப்பது ஒரு பாவமான (sin) செயல், அதைவிடவும் கொடிய பாவம் – அதன் மேல் மண் போட்டு மூடுவது”

காந்தி நேரடியாக, சுற்றுப்புறக் கிராமங்களில் நடக்கும் துப்புரவுப் பணிகளை மேற்பார்வை பார்த்தார். அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ, அவரே சில மாதங்களுக்கு பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு, ஒரு வாளியுடனும், துடைப்பத்துடனும் அனுதினமும் சென்றார், வேலை செய்தார். கூடவே அவருடைய நண்பர்களும், விருந்தாளிகளும் அவருடன் சென்றனர்.

அவர்கள் திருப்பிக் கொண்டு வந்த, குப்பையும் மலமும் நிறைந்த வாளிகளை, அதற்கென வெட்டப்பட்ட குழிகளில் கொட்டினர்.

காந்திக்கு, சரியான முறையில் கழிவுகளை அகற்றுவதும் அறிவியல் தான்; அவரைப் பொறுத்தவரை – அதுவும், எதுவும் அறிவியல் சார்ந்திருக்க வேண்டும்…

=-=-=-=

அவருடைய ஆசிரமங்களில், கழிவுகளை அப்புறப் படுத்தும் வேலையை ஆசிரமவாசிகள் அனைவரும் செய்ய வேண்டும். காந்தி அவர்களுக்கு, அதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்.

பல இன, மத, நிற  – பின்னணி சார்ந்த பலவித பழக்கங்களுடைய மக்கள் அவர் ஆசிரங்களில் வாழ்ந்தாலும், ஒரு விதமான குப்பையோ, துளிக் கழிவையோ அங்கு பார்க்கவே முடியாது. அனைத்துக் கழிவுகளும் குழிகளில் புதைக்கப் பட்டன. காய்கறிக் கழிவுகள், தோல்கள், சாப்பாட்டு மிச்சங்கள் போன்றவை, அதற்கென தோண்டப் பட்ட எருக் குழிகளில் போட்டு மூடப்பட்டன.

மனித மலமும் புதைக்கப் பட்டுப் பின் உயர்ந்தரக எருவாக மாற்றப் பட்டு, உபயோகிக்கப் பட்டது.

உபயோகித்த நீர், கழிவு நீர் – தோட்டங்களில் பாய்ச்சப் பட்டது.

அவருடைய பண்ணைகள் / ஆசிரமங்களில் நவநாகரீக பாதாள சாக்கடை போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும் மிக சுத்தமாக இருந்த காரணத்தால், துர் நாற்றமோ, ஈத்தொல்லையோ இருக்கவே இல்லை.

காந்தியும் அவருடைய சகோதரப் பணியாளர்களும், முறை வைத்துக் கொண்டு, ஆசிரமத்துக்குத் தேவையான தோட்டி வேலைகளைச் செய்தனர்.

காந்தி அந்த ஆசிரமங்களில், வாளிக் கழிப்பறைகளையும், மலமும் நீரும் தனித்தனியே சேகரம் செய்யக் கூடிய இரட்டைக்குழி முறையையும் – அறிமுகப் படுத்தினார். அவர் ஆசிரமங்களுக்கு வருகை தந்த எல்லா விருந்தாளிகளிடமும், அங்கிருந்த நூதனக் கழிவு மேலாண்மை முறைகளை, பெருமிதத்துடன் காட்டி மகிழ்ந்தார்.

பணக்காரர்களோ ஏழைகளோ, தலைவர்களோ தொண்டர்களோ, இந்தியர்களோ வெளி நாட்டார்களோ – எவர் அவர் ஆசிரமங்களுக்கு / பண்ணைகளுக்கு வந்தாலும், அவர்கள் இம்மாதிரிக் கழிப்பறைகளைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால், முறைகளால் – ஆசாரவாதிகளிடமும், பெண்களிடமும் இருந்த, கழிவுகள் மீதான அருவருப்பை – அவரால் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற முடிந்தது.

=-=-=-=

எப்போது அவருக்குச் சிறிது சுத்தப் படுத்தும் வேலை கிடைத்தாலும், காந்தி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைப் பொருத்தவரை, ஒருவருடைய சுத்தம் பற்றிய உணர்வு என்பது, அவருடைய கழிப்பறையை அவர் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதிலேயே தெரிந்துவிடும்.

அவருக்கு 76 வயது ஆகும்போது அவர் பெருமையுடன் சொன்னார்,

“ஒரு சிறிய அழுக்கோ, அல்லது நாற்றமோ, சிறு வாடையோகூட  நான் உபயோகிக்கும் கழிப்பானில் இருக்காது; ஏனெனில் நானே அதனைச் சுத்தம் செய்கிறேன்.”

பல சமயங்களில் அவர் தன்னை ஒரு தோட்டியாகவே விவரித்துக் கொண்டார் – அவர் ஒரு தோட்டியாகவே இறக்க முடியுமானால் அதுவே அவருக்குப் போதுமானது எனச் சொன்னார். மேலும் அவர், இந்துக்களில், மெளடீக-ஆசாரசீலர்களான இருந்தவர்களிடம் – தீண்டத்தகாதவர்களுடன் சேர்த்து தன்னையும் பகிஷ்கரிக்கும்படிச் சொன்னார்.

அவர், தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று [பெரும்பாலும் எங்கு அவர் சென்றாலும், தோட்டிகளுடனேதான் தங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்] அவர்களுடன் அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்களுடைய துயரக் கதையைச் சொல்வர். அவரும், அவர்களுக்குச் சொல்வார் – அவர்களுடைய தொழில் இழிவானதொன்றல்ல; மேலும், அவர்கள் குடிப்பழக்கத்தையும், இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்பதையும் விட்டுவிடவேண்டுமென்றும்.

அவர் என்றுமே தோட்டிகள் வேலை நிறுத்தம் செய்வதை ஆதரிக்க முயன்றதில்லை; அது மட்டுமல்ல, அவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யலாமென்றும் கூடச் சொன்னதில்லை. [அவர் பணிகளை, நமது கர்மங்களைப் பார்த்தவிதம் அப்படி. தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்று நினைத்தவரல்லர் அவர்]

அவருடைய ’ஹரிஜன்’ பத்திரிக்கையில், ஒரு தோட்டி என்பவர் எப்படி இருக்கவேண்டுமென விவரித்தார்:

“அவருக்கு சுற்றுச்சூழலுக்கு, தேவைக்கு ஏற்றவாறு எப்படி, ஒரு கழிப்பறையைக் கட்டவேண்டுமெனத் தெரிய வேண்டும்; அதனைச் சரியான வழியில் சுத்தம் செய்வது எப்படி எனவும் தெரிய வேண்டும். அவருக்கு, மலத்தினுடைய வாடை இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அதனை மீறி, எப்படி அதன் துர்நாற்றத்தைப் போக்குவது என்பது தெரிய வேண்டும். மேலும் அவர் எம்மாதிரிக் கிருமிநாசினிகளை உபயோகித்து மலத்தை ஆபத்தற்றதாக மாற்ற வேண்டும் என்பதை அறியவும் வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் அப்பால், எப்படி மலத்தையும் சிறுநீரையும், எருவாக மாற்றுவது என்பதன் முறைகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.”

காந்தி என்ன செய்ய முயன்றாரென்றால்: தோட்டி வேலை, ஒரு திணிக்கப் பட்ட,  ஒரு சாராரால் மட்டுமே தொடர்ந்து செய்யப் பட்ட வேலையாக இருந்ததிலிருந்து மாற்றப் பட்டு – அதனை ஒரு இன்றியமையாத சமூகப்பணியாகக் கருதப்படும் தளத்திற்கு உயர்த்துவது தான்.

=-=-=-=

காந்தியுடைய ‘காதி’ சுற்றுப் பயணங்களின்போது ஒரு சமயம் – அவர் பேச இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க, தோட்டிகள் அனுமதிக்கப் படவில்லை.

அவருக்கு இந்த விஷயம் தெரியவந்த போது, அவர் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னார்,

“நீங்கள் உங்களுடைய பணவெகுமதிகளையும், உங்கள் மேடைப்பேச்சுக்களையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே பேசப் போகிறேன். உங்களில் எவருக்கு அக்கூட்டத்திற்கு வரத் தோன்றுகிறதோ அவர்கள் அங்கு வரலாம்.”

=-=-=-=

அவருக்கு 77 வயதாக இருக்கும்போது (இறப்பிற்கு இரு வருடங்கள் முன்னால்)  காந்தி மும்பயிலும், டெல்லியிலும் இருந்த தோட்டிகளின் குடியிருப்பில்,  வழக்கம் போல, சில நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் அச்சமயம், அவர் விரும்பினாலும், அவருடைய வயது காரணமாக அவரால் அக்குடியிருப்பிலேயே தங்கி அங்கு சமைக்கப் பட்ட உணவையே சாப்பிட முடியவில்லை. அக்குடியிருப்பிலேயே தங்க முடிந்தாலும், அவர் மேல் உள்ள அபிமானத்தால் அவருக்கு பலச் சலுகைகள் அளிக்கப் படுவதையும் அவர் விரும்பவில்லை.

=-=-=-=

காந்தி, ஒருசமயம் வைஸ்ராயைப் பார்ப்பதற்காக ஷிம்லா சென்றிருந்தபோது, தன்னுடன் பணிபுரிபவர் ஒருவரை அங்கிருந்த தோட்டிகளின் குடியிருப்புக்கு அனுப்பி அதனைப் பார்வையிடப் பணித்தார். அவர் திரும்பி வந்து, அந்தத் தோட்டிகளின் குடியிருப்பு, படு மோசமான நிலைமையில், விலங்குகள் கூட வாழமுடியாத நிலையில் இருப்பதைச் சொன்னவுடன் காந்தி மிகுந்த மனவருத்தமுற்றுச் சொன்னார்,

“இப்படி நாம் நம் தோட்டிகளை மிருகங்களை விடக் கேவலமான நிலைமைக்குத் தள்ளியிருக்கிறோம்…

… ஏதோ அவர்கள் இப்படிக் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும், அது அவர்களின் மனிதத்தையும் கண்ணியத்தையும் சிதைத்துத் தானே வருகிறது? அந்தத் தோட்டி, மலத்துக்கு நடுவில், கழிப்பறை சுவற்றின் நிழலில் பயந்து பதுங்கியபடி,  தன் உணவை உண்பதைப் பாருங்கள். நம் இதயத்தைப் பிளக்கும் சோகமில்லையா இது?”

தோட்டிகள், மலம் நிரம்பிய வாளிகளைத் தங்கள் தலையில் சுமந்து செல்லும் காட்சி அவரை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது.

=-=-=-=

அவர் சொன்னார்,  தகுந்த உபகரணங்களின் உதவியுடன் வேலை செய்தால், நிச்சயம் வெகு லகுவாகவும், சுத்தமாகவும் தோட்டிப் பணியை முடிக்கமுடியுமென்று; தோட்டி வேலை ஒரு உயர்ந்த கலை என்று அவர் கருதினார்.

மேலும் அவர், அந்தக் கலையை, தன்னை அசுத்தப் படுத்திக் கொள்ளாமல் பலமுறை செய் நேர்த்தியுடன் செய்து காட்டினார் – அவர் வெறும் பேச்சுக்களோடு நிற்கவில்லை.

1942 என நினைக்கிறேன்; மலம், குப்பை கூளங்களைத் துப்புரவு செய்ய, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் காந்தி…

=-=-=-=

ஒரு சமயம், ஒரு அயல்நாட்டுக்காரர் காந்தியைக் கேட்டார், “உங்களை ஒரு நாளுக்கு மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?”

காந்தி சொன்னார், “ நான், வைஸ்ராயில் இல்லத்தருகே வசிக்கும் தோட்டிகளின் குப்பைக் கூடங்களாக இருக்கும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்.”

“ஒருக்கால், உங்களுக்கு இன்னொரு நாளும் அப்படியே வைஸ்ராயாக இருக்க நீடிப்புச் செய்தால்?”

காந்தி பதிலளித்தார், “அதே வேலையை, நான் அந்த நாளும் செய்வேன்!”

=-=-=-=

அடுத்து… காந்தி எனும் சக்கிலியர்

காந்தியாயணம்…

நண்பர் ‘அட்வொகேட்’ கே தங்கவேலு அவர்கள் மூலம் வந்த அழைப்பிதழ்:

ஜுன் 2ஆம் தேதி காலை 9:00 மணி, சென்னை – இம்பீரியல் ஹோட்டல், எழும்பூர் இரயில் நிலையம் எதிரில்…

 

முடிந்தால், அவசியம் செல்லவும்.

 

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர்.

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாம் பகுதி கீழே. (இங்கே முதல் பகுதி)

=-=-=-=

[… காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு – தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை…]

… தென் ஆஃப்ரிகாவிலிருந்த வெள்ளையர்கள், இந்தியர்களின் சுகாதாரமின்மை காரணமாகவும் அவர்களை வெறுத்தனர்.
இதனை உணர்ந்த, மக்களின்  நிகரற்ற தலைவராக வளர்ந்து கொண்டிருந்த காந்தி, அங்கு வாழ்ந்த இந்தியர்களின் வசிக்குமிடங்களையும் அவற்றின் சுற்றுச் சூழல்களையும் ஆய்வு செய்து, அவர்களை தங்களையும், சுற்றுப்புரங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி பொதுக் கூட்டங்களில் பேசினார், தினசரிகளிலும் பத்திரிக்கைகளிலும் எழுதினார்.

=-=-=-=

டர்பன் நகரத்தில் இருந்த காந்தியின் வீடு, மேற்கத்திய பாணியில் கட்டப் பட்டிருந்தது – அவ்வீட்டிலேயே, அவருக்காகப் பணி புரிந்து கொண்டிருந்த குமாஸ்தாக்களும் தங்கி இருந்தனர்.

காந்தி 1904-1916 வாக்கில், ஒரு முக்கியமான முன்னோடி வழக்குரைஞராக இருந்தபோது, ஜோஹான்னஸ்பர்க்-ல் வசித்த இல்லம் – புதுப்பிக்கப் பட்டு, தென் ஆஃப்ரிக அரசால் நினைவகமாக்கப் பட்டுள்ளது.
நன்றீ: ஃபோர்ப்ஸ் இதழ், 2011; http://forbesindia.com/printcontent/27662

அவ்வீட்டில், அக்கால நவநாகரீக முறைப்படி;  கழிவறையிலிருந்து அசுத்தங்களும், நீரும் வெளியே போவதற்கு வழி வைக்காமல் கழிவுச் சட்டிகளும் (chamber pots), கழிவறை ஆசனமும் (commode) தான் இருந்தன அங்கு.

காந்தி சில சமயம், அவரது குமாஸ்தாக்களால் உபயோகிக்கப் பட்ட, நிரம்பிய கழிவுச் சட்டிகளை சுத்தம் செய்தார். தன்னுடைய மனைவியையும் அவைகளைச் சுத்தம் செய்யப் பணித்தார். அவரது இளம் குழந்தைகளுக்கும், அவ்வேலையைச் செய்வதற்கு பயிற்சி கொடுத்தார்.

1908 – காந்தி அவருடைய தென் ஆஃப்ரிக நண்பர் ரெவெரெண்ட் டோக் அவர்களின் இல்லத்தில், பதான்களால் மிக மோசமாக அடிக்கப் பட்ட பின்பு… ( நம்ப முடிகிறதா? இந்த புத்திசாலியும், சூட்டிகை மிக்கவருமான பாரிஸ்டர் தான், தம் மக்களுக்காக அடி உதை பட்ட போராட்டக் காரர்தான், முகம் சுளிக்காமல் பிறர் மலமும் அள்ளினார் என்று?)

ஒரு சமயம், கஸ்தூர்பா, ஒரு கீழ் ஜாதி குமாஸ்தா உபயோகித்த கழிவுச் சட்டியை, தான் தூக்கிச் செல்லும் போது, முகத்தை வலித்தார்.

காந்தி உடனே அவரைக் கடிந்து கொண்டது மட்டுமல்லாமல், அவரிடம் கறாராகச் சொன்னார், “ஜாதி பேதம் பார்ப்பதானால், இவ்வீட்டை வீட்டு வெளியேறலாம்.”

அவர் ஒருமுறை, சபர்மதி ஆசிரமத்தில் ஒரு கீழ் ஜாதி தம்பதிகளை அனுமதித்தமைக்காக, அவருடைய நெருக்கமான நண்பர்களால் திட்டப் பட்டார் கூட.

=-=-=-=

ஒரு சமயம் அவர் ஒரு தென் ஆஃப்ரிக சிறையில் இருந்த போது, தன்னிச்சையாக, அழுக்காக இருந்த அனைத்து மலத் தொட்டிகளையும் பளிச்சென்று சுத்தம் செய்தார். ஆகவே, சிறை சார்ந்த பணிகளை அடுத்த சுற்றுக்கு சுழற்றி ஒதுக்கி, கைதிகளிடம் பங்கிடும் முறை வந்த சமயம், காந்திக்கே மறுபடியும் அதே வேலையைக் கொடுத்தனர், சிறை அதிகாரிகள்.

=-=-=-=

காந்திக்கு நாற்பது வயது ஆகும்போது தன் நண்பர்கள் குழாமுடன், இருபது வருடங்கள் தென் ஆஃப்ரிகாவில் கழித்து விட்ட பின்னர், அவர் இந்தியாவுக்கு 1915-ல் திரும்பி வந்தார்,

அவ்வருடம் ஹர்த்வாரில் நடந்த கும்பமேளாவுக்கு, தன் ஃபீனிக்ஸ் பண்ணை-ஆசிரம (தென் ஆஃப்ரிக) நண்பர்களுடன் சென்றார். அங்கே அந்தக் குழாம், ஒரு தோட்டிகள் குழுவாக (bhangi squad) செயல் பட்டு கத்தான பணி செய்தது.

அதே வருடம், புனே-யில் இருந்த ’இந்தியாவின் பணியாட்கள் சங்க’த்திற்கும் (servants of india society) சென்றார். அங்கு அவர் குழாம், அச்சங்கத்தின் ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தது.

ஒரு நாள் அதிகாலையில், அச்சங்கத்தினர் – தங்களுடைய அசுத்தமான கழிப்பறைகளை. காந்தி சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து வேதனையும், வருத்தமும், வெட்கமும் பட்டனர். ஆனால், காந்தியின்  நம்பிக்கையிலோ, ஒருவர் இம்மாதிரி வேலைகளைச் செய்தால் தான் ‘ஸ்வராஜ்’ பெறுவதற்குத் தகுதி உடையவர் ஆவார்..

=-=-=-=

அவர் அகில இந்தியாவிலும் பலமுறை சுற்றுப் பயணம் செய்தார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், ஏதோ ஒரு விதத்திலாவது அசுத்தமும், சுகாதாரமின்மையும் பார்க்க / அனுபவிக்க வேண்டி வந்தது, அவருக்கு.

புகைவண்டி நிலையங்களிலும், தர்மசாலைகளிலும் உள்ள சிறுநீர் கழிக்குமிடங்களிலும், கழிப்பறைகளிலும் இருந்த அசுத்த நிலைமையும், குமட்டி எடுக்கும் நாற்றமும், அவரால் பொறுக்கமுடியாத அளவில் இருந்தன. கிராமத்து ஏழைகளும் அவர்கள் மாட்டுவண்டிகளும் உபயோகித்த பாதைகள் மிக மோசமாக இருந்தன.  மக்கள் புனித நீர் என்று குளிக்கும் இடங்களைச் சுற்றி இருந்த சுகாதாரமின்மையையும், நீரின் தூய்மையின்மையையும் பற்றி, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. அது மட்டுமல்ல, அவர்களே, நதிகளின் கரைகளை அசுத்தப் படுத்தினார்கள் கூட.

=-=-=-=

அவர் காசி விஸ்வனாதர் ஆலயத்திற்கு சென்றபோது கூட, அங்கிருந்த பளிங்குத் தரைமீது தேவையில்லாமல் பதிக்கப் பட்டிருந்த வெள்ளிக்காசுகள் – குப்பைகளையும் கூளத்தையும் சேர்த்து, தரையை, ஆலயத்தை அசிங்கப் படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு வருத்தமுற்றார். அவருக்குப் புரியவேயில்லை, ஏன் கடவுளர்கள் வசிக்கும் இடமாக நாம் கருதும் நம் ஆலயங்களுக்குச் செல்ல / அவற்றுள் நுழையத் தேவையான வீதிகள், இப்படி குறுகலாகவும், அசுத்தமாகவும், வழுக்கிவிடுவதாகவும் இருக்கின்றன என்று.

காந்திக்கு, நமது மக்கள், புகைவண்டிப் பெட்டிகளை ஒரு விதமான பிரக்ஞையுமில்லாமல், வழமையாக – அசிங்கப் படுத்துவதும் ஒப்பவில்லை.

அவர் சொன்னார், “நமது நாட்டில் மிகப் பல பேர் தங்களுக்கு ஒரு காலணி வாங்கிக் கொள்ள முடியாதுதான். இருப்பினும், இந்தியாவில் ஒருவர் காலணியில்லாமல் நடப்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, அவ்வளவு அசுத்தமிங்கே.”

அவருக்குத் தெரியும், மும்பை போன்ற நகரங்களில் மக்கள் தெருக்களில் நடக்கும்போது அவர்கள் பயந்துகொண்டேதான் இருக்க வேண்டும், ஏனெனில் எப்போது மேல்மாடியிலிருந்து சாலையில் ஒருவர் வெற்றிலை எச்சில் துப்புவாரென்று ஒருவரால் சொல்லவே முடியாது…

=-=-=-=

 

ஆர் கே லக்‌ஷ்மண் அவர்கள் அனு-வின் புத்தகத்துக்காக வரைந்த கோட்டோவியம்… காந்தி கழிவுகளைச் சுத்தம் செய்கிறார்…

அடுத்து… ’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில்,மூன்றாம் பகுதி

காந்தியாயணம்…

… அல்லது காந்தி எனும் துப்புரவுப் பணியாளர், மாசு அகற்றுபவர், தெரு பெருக்குநர், தோட்டி என எவ்வளவோ – ’நாகரீகமாக,’ நாசூக்காக,  இவ்வத்தியாயத்துக்குத் தலைப்பு வைக்கலாம்; மேட்டிமைத் தனத்துடன் நுனி நாக்குப் பேச்சுப் பேசலாம்.

ஆனால், கக்கூஸ் என்கிற தமிழ்த் திசைச்சொல் அதிகபட்சம் கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே பெருவாரியாகப் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்றாலும், எனக்கு தலைப்பிலுள்ள, ’கக்கூஸ்காரர்’ என்கிற மொழியாக்கம் தான் நம்மில் மிகப் பலரின் – மலஜலங்களை  நோக்கும் வெறுப்பு /அருவருப்புப் பார்வையையும், முகம் சுளித்தலையும், அதன்மீதான அதீத அசிங்க உணர்ச்சியையும், அத்தொழில் சார்ந்த அவலத்தையும் வெளிக்கொணர்கிறது, நம்மை திடுக்கிடச் செய்து சிந்திக்க வைக்கிறது என எண்ணம்.

ஆக…

=-=-=-=

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர்.

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், முதலாவது பகுதி.

=-=-=-=

ராஜ்கோட்டில் இருந்த காந்தியின் தந்தையார் வீட்டில்., உகா என்றவர்  தோட்டி வேலை செய்தார். காந்தி எப்போது உகா-வைத் தொட்டாலும், புத்லிபாய், காந்தியைக் குளிக்கச் சொல்லுவார். காந்தி ஒரு பணிவான, சொன்னசொல் கேட்கும் மகனாக இருந்தாலும், அவருக்கு அது பிடிக்கவில்லை.

அந்தப் 12 வயதுச் சிறுவன், தன் தாயுடன் வாக்குவாதம் செய்வான், “உகா, நம்முடைய அழுக்கையும் குப்பையையும் சுத்தம் செய்து நமக்காக சேவை செய்கிறார், இப்படி இருக்கையில் அவரை நாம் தொட்டால் எப்படி அது தூய்மைக்கேடாகும்? நான் உங்களை அவமதிக்கும், உங்கள் சொல்லை மறுக்கும் காரியம் செய்ய மாட்டேன் – ஆனால் ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது அல்லவா, ராமன், சண்டாளரான குஹகாவை ஆரத்தழுவிக் கொண்டாரென்பது? ராமாயணம் நம்மை தவறான வழி நடத்துமா என்ன?”

புத்லிபாய், இம்மாதிரி வாக்குவாதங்களால், வாயடைத்துப் போவார்.

=-=-=-=

காந்தி தோட்டி வேலையை செவ்வெனே செய்ய, தென் ஆஃப்ரிகாவில் தான் கற்றுக் கொண்டார். அங்கே அவருடைய நண்பர்கள் அவரை அன்புடன், மஹா தோட்டி (’great scavenger’) எனத்தான் அழைத்தார்கள்.

=-=-=-=

மூன்று வருடங்கள், தென் ஆஃப்ரிகாவில் இருந்த பின், காந்தி, ராஜ்கோட்டில் வசித்து வந்த தம் மனைவியையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டுப் போக இந்தியாவுக்கு வந்தார். அச்சமயம் மும்பய் ராஜதானியில் கொள்ளை நோய் (plague) பரவிக் கொண்டிருந்தது. அங்கிருந்து அது ராஜ்கோட் வரை பரவ கூட வாய்ப்பிருந்தது.

உடனடியாக காந்தி, ராஜ்கோட்டின் சுகாதாரத்தைச் சரி செய்து நகரைத் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவர் ஓவ்வொரு வீட்டிற்கும் சென்று சுத்தம், சுகாதாரம் பற்றிப் பேசினார்; ஒவ்வொரு கழிவறையையும் விஜயம் செய்து,, எப்படி அவர்களெல்லோரும் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவுரை சொன்னார்.

அவர் ஆய்வு செய்த கழிவறைகள் அவருக்கு மிகுந்த ஆயாசமளித்தன; கழிவுக் குழிகளில் இருந்த துர்நாற்றமடிக்கும் கரும் கழிவுகள், வியாதிக் கிருமிகள் மிகுந்த சாக்கடை நீர் அவரை மிகவும் அருவருப்படையச் செய்தன.

உயர் குடிகள் வாழ்ந்து கொண்டிருந்த சில வீடுகளில், வீட்டு புறக்கடை, முன்வாயிலிலிருந்த கால்வாய்கள், கழிப்பிடங்களாக உபயோகப் படுத்தப்பட்டன – காந்திக்கு அந்த முடைநாற்றம் பொறுக்க முடியாத அளவில் இருந்தது. ஆனால் அவ்வீடுகளில் வசித்த மனிதர்கள் இந்தச் சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றிக் கவலையே படவில்லை, அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

ஆனால்,  பரம ஏழைகளான தீண்டத்தகாதவர்கள், ஓரளவுக்குச் சுத்தமான வீடுகளில் வசித்தனர் – காந்தியின் அறைகூவல்களுக்கும் செவி சாய்த்தனர். அவ்வீடுகளில் காந்தி, இரணடு வாளி முறையைக் கடைப் பிடிக்கச் சொன்னார்; அதாவது ஒரு வாளி சிறு நீருக்கு, இன்னொரு வாளி, மலத்துக்கு. ஆக, சுகாதாரச் சூழல் இவ்வீடுகளில் ஒரளவுக்கு நல்லபடியாக முன்னேற்றமடைந்தது…

=-=-=-=

காந்தியின் குடும்பம், ராஜ்கோட்டில் பிரபலமானது.காந்தியின் தகப்பனாரும் பாட்டனாரும், ராஜ்கோட்டிற்கும், அதன் பக்கத்து சமஸ்தானங்களிலும் திவானாக (இதனை, ஒரு சமஸ்தானத்தின், சிற்றரசின் பிரதம மந்திரி போன்ற பதவி எனக் கருதலாம்)  நெடுங்காலமாக இருந்து வந்தனர். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர், ஒரு திவானின், ‘பாரிஸ்டர்’ மகன்
தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து, ஒவ்வொரு வீட்டுக் கழிப்பறையையும் ஆய்வு செய்வது என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயமும், காந்தியின் ‘குண்டு’ தைரியத்துக்கு ஒரு சான்றான விஷயமும் ஆகும்.

காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு – தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை.

காந்தி, பல மேற்கத்திய பழக்க வழக்கங்களை விமர்சனம் செய்தார் தாம். ஆனாலும் அவர், தாம் அடிப்படைச் சுகாதாரம் பற்றி அறிந்து கொண்டது மேற்கத்தியர்களிடமிருந்தே என மறுபடியும் மறுபடியும் சொல்லி வந்திருக்கிறார்.

காந்தி, மேலை நாடுகளில் காணப்பட்ட சுத்தத்தையும் சுகாதாரத்தையும் – நமது நாட்டிலும் கொணர முயன்றார்.

=-=-=-=

தென் ஆஃப்ரிகாவிலிருந்து இரண்டாம் முறை இந்தியா வந்தபோது, காந்தி, கொல்கொத்தா காங்கிரஸ் [1901 என நினைவு] மாநாட்டிற்குச் சென்றார். அங்கே அவர் சென்றது, தென் ஆஃப்ரிகாவில், இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் அங்கு படும் பாட்டைச் சொல்லி ஆதரவு தேடுவதற்காக.

ஆனால், அந்த மாநாட்டில், சுகாதாரச் சூழல் என்பது பரிதாபமாகவும், துணுக்குறும் வகையிலும் இருந்தது. வந்திருந்த சில உறுப்பினர்கள், தாங்கள் தங்கியிருந்த கூடத்தின் முன் வராண்டாவையே கழிப்பறையாக்கியிருந்தனர் கூட!

ஒருவர் கூட, இம்மாதிரிச் செய்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவே இல்லை – ஆனால், காந்தி மட்டுமே, உடனடியாக இந்த நடத்தைக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக, துப்புரவுப் பணியிலிருந்த தன்னார்வக் குழுவினருடனும் பேசினார். ஆனால், அவர்கள் சொன்னார்கள், “அந்த வேலை, தோட்டிகளுடையது, எங்களுடையது அல்ல.”

காந்தி, பதில் பேசாமல், ஒரு விளக்குமாறைக் கேட்டுப் பெற்று, மலக்கழிவுகளைச் சுத்தம் செய்தார்.

அவ்வமயம் காந்தி மேலை நாட்டு பாணியில் தான் உடையணிந்திருந்தார்.  இப்படி உடையணிந்த ஒருவர் மலத்தை அள்ளுவதைப் பார்த்த அந்த தன்னார்வக் குழுவினர் ஆச்சரியப் பட்டார்களே ஒழிய உதவிக்கு வரவில்லை…

=-=-=-=-=

பல வருடங்களுக்குப் பின், காந்தி காங்கிரஸ் இயக்கத்தின் அச்சாணியாக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த போது, பல தன்னார்வமிக்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தோட்டிக் குழு (bhangi squad)  அமைத்து, மாநாடுகளில் சுத்தம் செய்வதைச், சுகாதாரத்தைப் பேணுவதைச் செவ்வனே செய்தனர்.

ஒரு சமயம் பிராமணர்கள் மட்டுமே தோட்டிகளாக வேலை செய்தனர்.

ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் காந்தி…

ஹரிபுரா காங்கிரஸ் (1938) மாநாட்டின் போது, 2000 ஆசிரியர்களையும் மாணவர்களையும் விசேஷமாக தோட்டித் தொழிலில் பயிற்சி பெற வைத்து, அவர்கள் சுகாதாரத் தூய்மைப் பேணலில் ஈடுபடுத்தப் பட்டனர்.

காந்தியால், தீண்டத் தகாதவரிகள் எனக் கருதப் பட்ட ஒரு சாரார் மட்டும் தான் தோட்டி வேலை செய்ய வேண்டும், என்பதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

அவர் நமது நாட்டிலிருந்து தீண்டாமையை விரட்ட வேண்டுமென்றுதான் விரும்பினார்…

=-=-=-=

அடுத்து… ’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில்,இரண்டாவது பகுதி…

காந்தியாயணம்…

… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்…

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஐந்தாம் அத்தியாயம்: பார்பர்.

இவ்வத்தியாயத்தின் முதல் பாகம்.

கீழே இரண்டாம் பகுதி….

=-=-=-=

… அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் சவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை… ஆசிரமவாசிகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவர்களின் நாவித வேலைகளைச் செய்து கொண்டனர்.

காந்தி, ஆசிரம மாணவர்களை, எளிய சுயசார்புடைய வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப் படுத்தப் படவேண்டுமென விரும்பினார். புதுப்பாணி உடைகளுக்கோ, காலவண்ணங்களுக்கேற்றபடியான நவநாகரீகங்களுக்கோ, அறுசுவை சொட்டும் உணவுகளுக்கோ, அவர் ஆசிரமத்தில் இடமில்லை.

=-=-=-=

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, ஆசிரம மாணவர்கள், குளிக்கச் செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். காந்தி அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கூப்பிட்டு, அவர்களுக்கு முடி வெட்டி விட்டார். அம்மாணவர்களுக்கு வருத்தமாக இருந்தது, தங்கள் தலைமுடி ஓட்ட வெட்டப்பட்டதனால்!

ஒரு சமயம், காந்தி இரு ஆசிரமப் பெண்களின் நீண்ட தலைமுடியை குட்டையாக வெட்டினார் கூட!

1921 – சபர்மதி ஆசிரமத்தில், முகம் பார்க்கும் கண்ணாடியில்லாமல் தனக்கு சவரம் செய்து கொள்ளும் காந்தி…

=-=-=-=

தென் ஆஃப்ரிக சிறைகளில் கைதிகளுக்குத் தலை வாரிக் கொள்ளும் சீப்பு கொடுக்கப் படவில்லை; மேலும், பொதுவாக இரு மாதங்களுக்கும் மேல் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் கைதிகளின் தலைமுடிகளும் ஒட்ட வெட்டப்பட்டு, அவர்களின் மீசைகளும் ஒட்ட மழிக்கப் பட்டன.

இருப்பினும், காந்தியும் அவருடன் கைதான தோழர்களும் இம்மாதிரி செய்யப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர். ஆனால் இதற்கு காந்தி ஒப்புக் கொள்ளவில்லை – அவரைப் பொறுத்தவரை சிறைவாசம் என்றால் அதற்குரிய வழிமுறைகளின் படி தண்டனைகள் பெற்றுக் கொண்டே தீர வேண்டும். அவர் அகராதியில், விதிவிலக்குகளுக்கோ, குறுக்குவழிகளுக்கோ இடமே இல்லை.

ஆக, காந்தி எழுத்துபூர்வமாக சிறை உயரதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அளித்து, தன் தலைமுடியைத் தான் திருத்திக் கொள்ளவேண்டுமெனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவ்வதிகாரியும் காந்திக்கு ஒரு கத்தரிக்கோலையும், ஒரு நறுக்கி-மட்டாக்கியையும் கொடுத்தார். பின்னர், காந்தியும் ஒன்றிரண்டு கைதிகளும் – ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரங்களுக்கு நாவிதம் செய்தனர்.

=-=-=-=

அவர், புனேவிலுள்ள ஆகாகான் மாளிகையில் கைது செய்யப் பட்டு வைத்திருக்கப் பட்டிருக்கும்போது, அவருடன் ஒரு ஆசிரமவாசிப்பெண்ணும் இருந்தார். அப்பெண், பொடுகுத் (dandruff) தொல்லையினால், மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததனால், ஒரு தளர்ச்சியான / அயர்வான சமயத்தில் காந்தியைக் கேட்டார், “பாபு, நான் என்னுடைய தலைமுடியை சிறிதாக வெட்டிக்கொண்டு, பொடுகுக்கு மருந்து தடவிக் கொள்ளவா?”

காந்தியின் பதில் உடனடியாக வந்தது, “சரியாகச் சொன்னாய், இப்போதே செய்துவிடலாம். கத்தரிக்கோல் கொண்டு வா.” கத்தரிக்கோல் கொணரப் பட்டு, அப்பெண்மணியின் தலைமுடிக் கற்றைகள் வெட்டப் பட்டு வீழ்ந்தன.

நாவிதர் காந்திக்கு அப்போது வயது 75.

=-=-=-=

சுதேசி இயக்கத்தின்போது காந்தி, வெளிநாட்டுச் சவரஅலகை (razor) உபயோகப் படுத்துவதை விடுத்து, நமது நாட்டில் தயாரிக்கப் பட்ட சவரக் கத்திகளை உபயோகிக்கலானார். தொடர்ந்த பயிற்சியினால், அவர் அக்கத்திகளை முறையாக உபயோகிக்கக் கற்றுக் கொண்டு – பிற்காலங்களில், கண்ணாடி, சவர துருசு (shaving brush), சவுக்காரம் (soap) இன்னபிற ஏதுமில்லாமல் சவரம் செய்து கொள்ளக் கூடிய அளவில் தேர்ச்சி பெற்றார்.

அவர் இம்மாதிரி சவரம் செய்து கொள்வதை. சவரக் கலையின் பரிமாண வளர்ச்சியின் ஒரு உச்சம் எனக் கருதியிருக்க வேண்டும்.

அதனால் தான் ஒரு ச்மயம், அவருக்கு உதவின நாவிதருக்கு ஒரு சான்றிதழை இப்படிக் கொடுத்தார் – “முன்னிலால் எனக்கு மிக நேர்த்தியான சவரத்தை, சுய அர்ப்பணிப்புடன் செய்தார்; அவருடைய சவரக் கத்தி சுதேசி – மேலும் அவர் சவரம் செய்வது சவுக்காரமில்லாமல்!”

காந்தியுடைய சில ஆசிரமத் தொண்டர்களும் இந்த மாதிரி முதிரா உணர்ச்சிப்பற்றால் (fad) பீடிக்கப் பட்டனர். எது எப்படியோ,  அவர்களுக்கும் இம்மாதிரி சவரம் செய்து கொள்வது கொஞ்சம் குறைவான ஒவ்வாமை தரும் விஷயமாக ஆகியது.

=-=-=-=

காந்திக்குத் தெரிந்திருந்தது – எப்படி நம் கிராம நாவிதர்கள் சஸ்திர சிகிழ்ச்சையாளர்களாகவும் (surgeons) நடைமுறையில் பணி புரிந்தவர்கள், எப்படி அவர்கள் கட்டிகளையும் ரணங்களையும் சரி செய்யக் கூடியவர்களென்றும் தைத்த முட்களை அகற்றக் கூடியவர்களென்றும்; ஆனால் அவரால், அந்நாவிதர்களின் அழுக்குத் துணிகளையும், தூய்மையற்ற உபகரணங்களை உபயோகிக்கும் தன்மையையும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை.

=-=-=-=

ஒரு சமயம், சேவாகிராமத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தலித், காந்தியிடம் சொன்னார், “எனக்கு வார்தா போகவேண்டும்.”

காந்தி, ஏனென்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார், “எனக்கு சவரம் செய்து கொள்ள வேண்டும்.”

“ஏன், உங்களால், இந்தக் கிராமத்திலேயே சவரம் செய்து கொள்ள முடியாதா?”

“சவர்ண நாவிதர்கள் எனக்கு சவரம் செய்து விட மாட்டார்கள், இங்கு ஒரு தலித் நாவிதரும் இல்லை வேறு.”

காந்தி சொன்னார், “அப்படியானால், நான் எப்படித்தான் இந்தக் கிராம நாவிதரிடம்  சவரம் செய்து கொள்ளக் கூடும்?”

காந்தி அன்றிலிருந்து அந்த நாவிதரிடம் சவரம் செய்து கொள்வதை நிறுத்தினார்.

=-=-=-=

ஒவ்வொரு நாளும் கிராமம் கிராமமாக அவர் பயணம் செய்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் அவருக்கு தினமும் தனக்குத்தானே சவரம் செய்து கொள்ள அவகாசமில்லாமல் இருந்தது. அதனால் சில சமயம் அவர் வெளி நாவிதர்களின் உதவி பெற வேண்டியிருந்தது.

=-=-=-=

காதிக்காக அவர் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் தன்னை சவரம் செய்பவர், காதி அணிந்திருக்க வேண்டுமென்று விரும்பினார். எனவே, காந்தியுடன் பணிபுரிந்து கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்களுக்கு அங்குமிங்கும் ஓடி, அப்படிப் பட்ட நாவிதரைத் தேடி அலைய வேண்டியிருந்தது.

காந்தி அத்தொண்டர்களுக்குச் சொன்னார், “நாம் நம்முடைய சலவைக் காரர்களையும், நாவிதர்களையும் நம் சுதேசிப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் செய்திப் பரிமாற்றத்தில் வல்லவர்கள். அவர்களால் சுதேசி உணர்ச்சியை, எண்ணங்களை சுலபமாகப் பரப்ப முடியும்.”

=-=-=-=

இன்னொரு சமயம், காந்தி ஒரிஸ்ஸாவில் ஒடிஷாவில் ஒரு நாவிதரின் வருகைக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி,  நாவிதத்திற்கான சாம்பி (tackle)  உட்பட அத்தனை உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் அவர், ஆடம்பரமான பெரிய காதணிகளையும், மூக்குத்தியும், மணிமாலையும், சலங்கையும், அரக்கு வளையல்களும் அணிந்து வேறு வந்திருந்தார்.

காந்தி அவரைக் கேட்டார், “ஆக அம்மணி, நீங்கள் எனக்கு சவரம் செய்து  விடப் போகிறீர்களா?”

அப்பெண்மணியும் புன்னகை பூத்து ஆமெனச் சொல்லி, தன்னுடைய சவரக் கத்தியை சாணை பிடிக்கலானார்.

காந்தி அவரிடம் மறுபடியும் பேசினார், “அம்மா, நீங்கள் ஏன் இவ்வளவு திண்மையான, கனமான அணிகலன்கள் அணிந்து இருக்கிறீர்கள்? அவை உங்களை அழகாகக் காண்பிக்கவே இல்லை. அவை அழகின்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் அழுக்காகவும் இருக்கின்றனவே?”

அந்தப் பெண்மணி முட்டிய கண்ணீருடன் சொன்னார், “அய்யா, உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்துக்காக, நான் இந்த அணிகலன்களைக் கடன் வாங்கித்தான் அணிந்திருக்கிறேன் என்று? இம்மாதிரி நகைகளை அணிந்து கொள்ளாமல் எப்படி நான் ஒரு மாபெரும் மனிதரிடம் வர முடியும்?”

காந்தி நெகிழ்ந்து போனார்.

… காந்தியின் தலையையும், முகத்தையும் மழித்தபின் அப்பெண்மணி அவர் காலடியில், தனக்குக் கிடைத்த வருமானத்தை வைத்து விட்டு, அவரை வணங்கிச் சென்றார்…

அடுத்து, காந்தி எனும் துப்புரவுப் பணியாளர்

காந்தியாயணம்…

… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்…

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஐந்தாம் அத்தியாயம்: பார்பர்.

=-=-=-=

http://www.mkgandhi.org/bahurupi/imgs/barber.gif

அவர் தென் ஆஃப்ரிகாவிற்கு வந்திறங்கிய ஒரு வாரத்தில், தன்னுடைய ஒரு சட்டத் தொடர்பான வேலையின் நிமித்தம், காந்திக்கு, ஒரு பெரிய நகரத்துக்குச் சென்று ஒரு இரவை அங்குக் கழிக்க வேண்டியிருந்தது.

அந்நகரத்திற்குச் சென்ற அவர், ஒரு வாடகைக்கார் அமர்த்திக் கொண்டு, ஒட்டுனரை, அந்நகரத்தின் முன்னணி விடுதிக்கு அழைத்துச் செல்லச்சொன்னார். அங்கு சென்றவுடன், காந்தி அவ்விடுதியின் மேலாளரைப் பார்த்து தனக்கு ஒரு அறையைக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அந்த வெள்ளைக்கார மேலாளர், காந்தியை மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சொன்னார, “மன்னிக்கவும். அறைகள் காலி இல்லை.”

ஆக ,காந்திக்கு அந்த இரவைத் தன் ஒரு இந்திய நண்பரின் கடையில் கழிக்க வேண்டியதாயிற்று.

பின்னர் அவர் அந்த நண்பருக்கு, நடந்ததை விவரிக்கும்போது, நண்பர் கேட்டார், “எப்படித்தான் உங்களுக்குத் தோன்றியது, விடுதிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று?” காந்தி ஆச்சரியப்பட்டுப் பதிலுக்குக் கேட்டார், “அதில் என்ன தவறு?” நண்பர் அதற்கு “நல்லது, கொஞ்ச நாள் போகட்டும், பின் உங்களுக்கே தெரிந்து விடும்.” என்றார்.

காந்தியும் பின்னாட்களில், தென் ஆஃப்ரிகாவில் இந்தியர்கள் பலவாறும் அவமானப் படுத்தப் படுவதைப் பற்றி அறிந்தார்.

அவர்தம் தோல் நிறம் காரணமாக, அவரது இந்தியத் தன்மை காரணமாக, அவரே – கன்னத்தில் அறையப்பட்டார், குத்தப்பட்டார், உதைக்கப்பட்டார், புகைவண்டியிலிருந்துத் தள்ளிவிடப்பட்டார். நடைபாதையிலிருந்து ஒதுக்கிவிடப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு, ஏன் வெள்ளையர்கள் ‘கருப்பர்களை’ வெறுக்கவும், கேவலமாக நடத்தவும் செய்தனர் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை; அவர் நினைத்தார், மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்தாமே, கிறித்துவம் அன்பைப் போதிப்பதுதாமே?

=-=-=-=

ஒரு நாள் காந்தி, தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக, ஒரு முடிதிருத்தகத்துக்குச் சென்றார். அங்கிருந்த வெள்ளைய நாவிதர் கேட்டார், “உங்களுக்கு என்ன வேண்டும்?”

காந்தி பதிலிருத்தார், “எனக்கு முடி திருத்திக் கொள்ள வேண்டும்.”

அந்த நாவிதர் சொன்னார், ”மன்னிக்கவும், நான் உங்கள் தலைமுடியைத் திருத்தம் செய்ய முடியாது. கரு நிறத்தவர்களுக்கு நான் முடி திருத்தினால், நான் என்னுடைய மற்ற வாடிக்கையாளர்களை இழந்து விடுவேன்,”

==-=-=

இந்த அவமானம், காந்தியின் உள்ளத்தை ஆழமாகத் தைத்தது. ஆனால் அவருக்கு, அவமானத்திலும், வலியிலும் உழல்வதிலோ அல்லது நாளிதழ்களுக்கு ’ஆசிரியருக்குக் கடிதங்கள்’ எழுதுவதிலேயோ சம்மதமில்லை.

காந்தி, அடிப்படையில், ’தன் கையே தனக்குதவி’ என்கிற மனப்பாட்டினராதலால், சுயசார்புடன் இருக்கவும், தன் வேலைகளை, விஷயங்களைத் தானே பார்த்துக் கொள்ளவும் முனைந்தார்.

ஆகவே மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பின் நேராக அவர் கடைக்குச் சென்று ஒரு நறுக்கி-மட்டாக்கியை (a pair of clippers) வாங்கியபின் தான், தன் வீட்டிற்குச் சென்றார். பின், அவர் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு, தன் முடியை மட்டாக்கலானார். அவருக்கு தன் முகத்தைச் சவரம் செய்து கொள்ள முடிந்தது – ஆனால், தன் தலைமுடி விஷயத்தில் கொஞ்சம் சிரமப் பட்டார், அது சுளுவான வேலை அல்லவே.

தவிரவும், அது ஒரு பாரிஸ்டருடைய வேலையும் அல்ல.

எப்படியோ அவர் ஒப்பேற்றிக் கொண்டாலும், அவர் தன்னுடைய தலையின் பின்புறத்தை, அவர் கொஞ்சம் சொதப்பி விட்டார். இருந்தாலும் தனக்கே உரித்தான பற்றற்ற, ஒன்றை நன்றாக யோசித்துக் செய்தால் பின் அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாத தன்மையினால் – மறுநாள், அப்படியே அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார்.

அவருடைய கோமாளித்தனமான தலைமுடி வெட்டிய பாங்கு, அவருடைய நண்பர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தது. ஒரு நண்பர் கேட்டார், “என்ன காந்தி, உங்கள் தலைமுடிக்கு என்ன ஆயிற்று? நேற்றிரவு ஏதாவது எலிகள் உங்கள் தலையைப் பதம் பார்த்து விட்டனவா?”

காந்தி  நிறைமுனைப்பாகச் சொன்னார், “அப்படி இல்லை. அந்த வெள்ளைக்கார நாவிதர், ஒரு கருப்பனுடைய கருப்பான முடியை தொடுவதற்கு மறுத்தார். அதனால்தான் என்னவானாலும் சரி என்று நானே என் தலைமுடியைத் திருத்திக் கொண்டேன்.”

இப்படித்தான், அவருடைய இருபத்தி எட்டாம் வயதில் (1907), காந்தி தனக்குத்தானே முதல் முறையாக முடிவெட்டிக் கொண்டது.  அதற்குப் பின் அவர் வாடிக்கையாக கத்தரிக்கோலையும், நறுக்கி-மட்டாக்கியையும் உபயோகிக்க ஆரம்பித்தார்.

1910 – தென் ஆஃப்ரிக தல்ஸ்தோய் பண்ணை – முன் வரிசையில் இடதுபுறம் காந்தியின் ஆப்த நண்பர் ஹெர்மன் காலென்பாக்ஹ். காந்தி அவ்வமயம் நான்கு வருடங்களாக தனக்குத் தானே தலைமுடி திருத்திக் கொண்டும், தன் துணிமணிகளைத் தானே துவைத்து, இஸ்திரி செய்து கொண்டும் – மேலும் மிகப்பல சமூக/பண்ணைசார் வேலைகள் செய்துகொண்டும், பத்திரிக்கையாசிரியராகவும், மிகவும் நேர்மையாக வக்கீல் தொழிலை நடத்தி ஒரு முன்னணி பாரிஸ்டராகவும் இருந்தார்…

அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் ஷவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை…

தொடர்ச்சி —>> காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 / 2)

காந்தியாயணம்…

நம் தமிழ்நாட்டில் ஏன் நாம் வன்முறையுணர்ச்சி அதிகமுடையவர்களாக இருக்கிறோம்? பேச்சில், எழுத்தில். செயல்களில், எண்ணங்களில் – அனைத்திலும் வன்முறையேதான். உதாரணத்திற்கு, இந்த இடுகையையே எடுத்துக் கொல்லுங்கள், மன்னிக்கவும் கொள்ளுங்கள்.

தமிழ வன்முறையின் ஊற்றுக்கண் என்ன? ஏன் இது இப்படியாகியது என நெடுநாள் (மானுட-சமூக-பண்டைஇலக்கிய அகழ்வியல்) ஆராய்ச்சிக்குப் பின், நான் கண்டு பிடித்தது என்னவென்றால் அது திருக்குறள்.

ஆச்சரியம், ஆச்சரியம்… அது சாட்சாத் திருக்குறளே தான். என்ன இது புது திடுக்குறள் கிளம்புகிறது என யோசிக்கிறீர்களா?

எனக்கும் இதனை நம்பவே முடியவில்லை – இதுகாறும் நாம் திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களையே கொண்டிருந்திருக்கிறோம் என்று தெரியவந்தவுடன், எப்படி வள்ளுவர் பாசிச வன்முறையையும் காமத்தையும் கட்டவிழ்த்துவிட்டு நம் தமிழச் சமூகத்தையே குட்டிச் சுவர் ஆக்கியிருக்கிறார் என்று எனக்கு உதித்தபோது, கோபம் கோபமாக வந்தது…

உங்களுக்கும் அப்படித்தானே? மேலே படியுங்கள் அந்த வெட்கக் கேட்டைப் பற்றி.

திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்??

(ஒரு γ ரே ரிப்போர்ட்)

நமக்கெல்லாம் தெரியும், கீழ்கண்ட குறளைப் பற்றி – நாமெல்லாம் நம் தமிழ்ப் பாட நூல், மனப்பாடப் பகுதிகளின் காரணமாக – இவை போன்றவை பற்றியெல்லாம் அனாவசியமாகப் படிக்க நேர்ந்திருக்கும்…

(ஆனால், நான் உங்களுக்கு இப்போது கொடுக்கப் போவது, இக்குறளின் பின்புலம் – அது சார்ந்த ஒரு கொலை பற்றி)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை

இதன் ’மறை’பொருள்: மழை போலக் குண்டுகளைத் தூவும் துப்பாக்கி [இது ஒரு தானியங்கி இயந்திரத் துப்பாக்கியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் (ஆ-ர்)] மூலம் மட்டுமே தான், கண்ட இடங்களில் எச்சில் துப்பும் நம் தமிழர்களை, மற்றத் துப்பார்கள் [துப்பாதவர்கள் எனப் பொருள் அறிக (ஆ-ர்)] துப்பறிந்து, பாக்கி வைக்காமல், துப் துப் என்று சுட்டு, துப்புறவு செய்து, இந்த அவனியிலிருந்து அகற்ற முடியும்

இதிலிருந்து நமக்குத் தெரிய வருபவை பல விஷயங்கள் – அவற்றில் முக்கியமான நான்கை இங்கே தருவதில் பெருமையடைகிறேன்:

ஒன்று: இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் முன்னரே துப்பாக்கி போன்ற தொழில் நுட்பங்களை, அவ்வியந்திரங்களை உபயோகித்து, அஹிம்சாபூர்வமாகச் சகமனிதர்களுடன் உரையாடும் முறைகளைத் தமிழர்கள் அறிந்தமைக்கு, வள்ளுவமே சான்று.

இரண்டு: ’வள்ளுவமும் வன்முறையும் – ஒரு பின் நவீனத்துவக் கட்டுடைப்பு’ என குண்டுத் தலையணைகள் வெட்கப்படுமளவு ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் வரக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

மூன்று: இப்படி வன்முறையைப் போதித்ததால்தான், வள்ளுவரே துப்பாக்கிகளின் இலக்காகிச், சுடப்பட்டு,  நாக்குதொங்கி இரத்தம் கக்கிச் செத்துப் போய்ச்சேர்ந்தார். இப்படியாகத் தானே வள்ளுவர் செந்நாப்போதார் எனப் பிற்காலத்தில் அழைக்கப் பட்டார்.

இது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

அக்காலத்தில் வந்த சி பா ஆதித்த கரிகாலன் நடத்திய தினத்தந்தியிலேயே இது பற்றிக் கீழ்கண்டவாறு செய்திகள் வந்திருந்தன, அவை உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்; நான் என் நினைவிலிருந்து இதனை எழுதுகிறேன்.

மர்ம தாடிக்காரர் ரத்தக் கக்கிச் செத்தார்! கொலைகாரன் மாயம்!
— நமது மயிலை நிருபர்

மயிலை, ஏப்ரல் 1: நேற்று மாலை மயிலை கச்சேரி ரோடில் சுமார் 600 வயது மதிக்கத் தக்க தாடிக்கார ஆண் ஒருவர் இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளப் பட்டார்.

கச்சேரி ரோடில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பிணத்தின் கையில் ஓலைச் சுவடிகள் காணப் பட்டன.

ஆதி… பகவன்,,, என்று அந்தத் தாடிக்கார ஆசாமி தன் கடைசி வினாடிகளில் முனகியதால் – அரேபிய bahwan automobiles கடையில் வாங்கிய Audi கார் வைத்திருக்கும் மயிலைவாசிகளைப் பழுவேட்டரையர்கள் விசாரித்தும் வருகின்றனர்.

குற்றவாளியை எப்படியும் நிச்சயம் பிடித்து விடுவோம் என எஸ்ஐ வந்தியத் தேவன், வானதி தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்ததை அடுத்து, அனைத்து மயிலைவாசிகளும் தங்கள் வாளிகளைப் பத்திரம் செய்துள்ளனர்.

தீவிரப் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

=-=-=-=

இன்னோரு பத்திச் செய்தி கீழே…

மர்ம தாடிக்காரர் திருவள்ளுவராம்! கொலையாளி அகப்பட்டான்!!
— நமது சிறப்பு நிருபர்

மயிலை, ஏப்ரல் 2: சந்தேகத் தாமஸ் (எ) தோமையர் என்பவர் (ஆண், வயது 45) சந்தேகாஸ்பதமான முறையில் துப்பாக்கியுடனும், பளபள கண்களுடனும் மயிலாப்பூர் பக்க சாந்தோமில் அலைந்து கொண்டிருக்கும் போது சின்ன பழுவேட்டரையர்  IPS, பொன்னியின் செல்வனிலிருந்து குதித்தெழுந்து அவரைக் கைது  செய்தார்.

நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் இரத்த ஆற்றில் மிதந்தது நமக்குத் தெரிந்ததே.

இதன் குற்றவாளி இந்தத் தாமஸ் என்று விசாரணையில் தெரிய வர, அவர்விசேஷ போலீஸ் குழுவினரால் கைது செய்யப் பட்டு அவர் விசாரணை செய்யப் பட்டு வருகிறார்..

கொலை செய்யப் பட்டவர் வள்ளுவர் என்கிற பெயருடைய ஏழைக்கவிஞராம். கத்தை கத்தையாக ஆனந்தவிகடன் துணுக்கு போன்ற சின்னச்சின்ன கவிதைகளை எழுதும் பழக்கம் உள்ளவராம். தன் கவிதைக் கட்டுகளை, சில கோடம்பாக்கம் திரை இயக்குனர்களுக்குக் காண்பித்து சினிமா சான்ஸ் கேட்பதற்காக கச்சேரி ரோடு வழியாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோதுதான் கொலை நடந்திருக்கிறது.

வள்ளுவருக்கும் தாமஸுக்கும், தொழில் ரீதியாகப் போட்டி இருக்கலாமோ என்கிற கோணம் ஆராயப் படுகிறது.  . தாமஸ் திரைகதை வசனகர்த்தா – அவர் ஜீஸஸ் என்கிற படத்திற்காக ஒரு கதைப் பகுதி எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது,

=-=-=-=

இப்போது தினத்தந்தியில் வெளிவராத செய்திகளைக் கொடுக்கிறேன்.

சிபி-சிஐடி சிபிச்சக்கரவர்த்தியின் புலன்விசாரணையின் போது தெரிய வந்த விவரங்கள் இவை; காவல்துறை ஆவணங்களிலிருந்து,  நான் எடுத்த பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுத்த விவரங்களையும் கொடுத்திருக்கிறேன்.

… தாமஸ், தான் திருக்குறளை நேரடியாகப் படிக்காமல் அதன் உரை ஒன்றைப் படித்ததனால் [அது கலைஞரின் குறளோவியம்: கலைஞர் என்கிற இவர் கருணாநிதி; ஆண், வயது 2200 – திமுக தலைவர், இவர் மகன் இசுடாலின், ஆண், வயது 2150, திமுக இளைஞரணியின் நிரந்தரத் தலைவர் (ஆ-ர்)] வாழ்க்கையில் விரக்தியும் சலிப்பும், மூளை வறட்சியும் ஏற்பட்டு, மீண்டும் வாலிப வீரிய சக்தி பெற குருராஜ் டாக்டர் சிவராஜைத் (ஆண், வயது 16) தேடி அலைந்ததாகவும், ஆனால், கே பி சுந்தராம்பாள் (பெண், வயது 80) போன்று  நடித்துக் கொண்டிருந்த அவ்வைப்பாட்டி (பெண், வயது 2300) எதிரில் வந்து சுட்ட பழம் வேண்டுமா என்கிற ரீதியில் அவரைத் துளைத்தெடுக்கும் போதுதான் சுடுதல், அதுவும் ஹாலிவுட்டிலிருந்து சுடுதல் ஒன்றேதான் உய்வதற்கு ஒரே வழி என, அவர் தமிழ் சினிமா இயக்குனர்கள் போல எண்ணமிகுந்து – இப்படிப்பட்ட நிலையில் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்னெக்கர் (ஆண், 60 வயது) என்ன செய்வார் என யோசி யோசியென்றோசித்துக் கடைசியில் துப்பாக்கி தான் வழி என முடிவு செய்ததாகச் சொன்னார்.

முன்னதாக, கிமு 500-லேயே அவர் எதிர்காலத்துக்குச் சென்று எபிரேய ஏசுவை (ஆண், 39 வயது) சுட்டுவிட்டுப் பின் கடந்தகாலத்துக்குத் தப்பியோடி மயிலாப்பூருக்கு வந்து, தோமையர் என்கிற பெயரில் கதைவசனகெழுதி வசித்துக் கொண்டிருந்தபோது – ஒரு நாள், மாலைக் கருக்கில் வெள்ளை நரைத்த முடி காற்றில் பறக்க எதிரில் வந்த க நா சு (ஆண், வயது 64) அவர்களைப் பார்த்து – அவர் தான், தான் கொலை செய்த ஏசுவின் பரிசுத்த ஆவி, அய்யோ அது என்னைப் பீடிக்க வருகிறது, என விதிர்விதிர்த்து பொய்த்தேவு ஏற்பட்டு, வேலு வேலு என்று அரற்றிக் கொண்டிருந்த சமயத்தில், உலகநாயகன் மகாமகோ பேரண்டநாயகன், ex-காதல் இளவரசன் கமல்ஹாசன் (ஆண், வயது 90) பக்கத்து எல்டாம்ஸ் ரோடிலிருந்து திடுமென்று பிரசன்னமாகிச் சொன்னார்: ”நாலு பேருக்கு ஒதவி செய். ஆமா தாத்தா – அப்பதான் நீ நல்லவனா கெட்டவனான்னு ஒம் பேரன் கேக்க முடியும்; அப்படித் தான் வேலு நாயக்கன் சொல்வான்”

அப்போது தாமஸ், வேலு முதலியாருக்கும் வேலு நாயக்கனுக்கும் நடந்த ஆளுமைக் குழப்பங்களில் குழம்பி, புறமுதுகிட்டோடி 5-பி பஸ் எங்கு நிற்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, மால்களிடமிருந்தும், கற்பகாம்பாள் கோவிலிலிருந்தும் வெளியில் தப்பி வந்து கொண்டிருந்த கூட்டத்தில் இடிபட்டு நசுங்கி கிழக்கு மாடவீதி கற்பகாம்பாள் மெஸ் பக்கம் அடித்துக் செல்லப் பட்டார்.

அங்கு நாலு பேர் ஒரு பிணத்தைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து, அவர் ஆஹா, ஒருவர் இறந்தாலும் நாலு பேருக்கு வேலை கிடைக்கிறது – ஆக கொலை செய்வதும் ஒரு கலையும், வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதும் ஆகும் என வொலகனாயகனை  நன்றியுடன் நினைத்துக் கொண்டார்.

அப்போது சம்பந்தமே இல்லாமல், வீரமணி (ஆண், வயது 10), தாடி ஈவெரா படம் போட்ட டீஷர்ட் போட்டுக் கொண்டு எதிரில் வந்து, உங்கள் பெயர் என்னவென்று கேட்டவர் – தாமஸ் தன் பெயர் தோமையர் எனச் சொன்னவுடன் – டாய், நீ பார்ப்பானா எனக் கேட்டு, உடனே, கையில் கொண்டு வந்திருந்த பாம்புக்கூடையிலிருந்து ஒரு கெட்டபாம்பை எடுத்து – அதனையும் தோமையரையும் ஒரு சேரப் பார்த்து, அடித்தொண்டையில் உறுமினார்: “பெரியார் சொன்னார்: பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால், பார்ப்பானை முதலில் அடி.”

… ஆக, அவரைப் பின் தொடரும் புழுதிப் படலத்துக்கு முன்னால் வெகுவேகமாக, முன்னங்கால் மூக்கில்பட, நம் தாமஸ் ஒடிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்தார் திருவள்ளுவர் (ஆண், வயது 601) தேம்பிக் கொண்டே.

ஏனென்று கேட்கிறீர்களா?

நம் வள்ளுவர், பரிமேலழகருடன் (ஆண், வயது 650) அப்போது தான் கிண்டி ரேஸ் போய் தன் பணம் அத்தனையும் பரிவால்களில் கட்டித் தொலைத்துவிட்டு, பர்ஸே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என மனம் வெதும்பி, திருநீர்மலை போய் நாமம் போட்டுக்கொள்ளாமல், உடம்பு முழுவதும் திருமூலர் அருளிக் கொடுத்த திருமந்திரத் திருநீறைப் பூசிக் கொண்டு, படைபடைக்கும் வெயிலில், மழை வரவேண்டுமே என மிக உரத்து வேண்டிக் கொண்டு [இப்படித்தான் ஒரு மே மாதத்தில் இக்குறள் இயற்றப் பட்டது; தமிழறிஞர் கமில் ஸ்வெலபில் கூட இதனைப் பற்றி ‘it மே have happened’ எனச் சொன்னது குறிப்பிடத் தக்கது (ஆ-ர்)] மனம் பேதலித்துப் புலம்பிக் கொண்டிருந்தார், வள்ளுவர் – துப்பாக்கி துப்பாக்கி துப்பாக்கியென்று…

பக்கத்தில் வந்த அவ்வையார், சுட்ட கிழம் வேண்டுமா, சுடாத கிழம் வேண்டுமா எனவேறு தாமஸை உசுப்பிக் கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே மாநகரப் பேருந்துகளிலெல்லாம் சிதறிக் கிடக்கும் அறப்பொன்மொழிகளும், மனிதநேயத் தத்துவங்களும் (’ நாம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்’), குறள்களும் படிக்க நேர்ந்து தன் குறள்வளை பரிசுத்த ஆவியினால் நெறிக்கப் படுவதாக, குற்றவுணர்ச்சி கொண்டு பயங்கரக் கனாக்கள் கண்டு பயம் பீடித்திருந்த தாமஸுக்கு அசப்பில் வள்ளுவர், (கண்ணாடியைக் கழற்றிய) ஈவெராவைப் போல, வெள்ளைத் தாடியும் இன்னபிறவும் – தோன்றியது ஒரு பெரிய விஷயமில்லை.மேலும் வள்ளுவரே துப்பாக்கிப் பாராயணம் வேறு பண்ணிக் கொண்டிருக்கிறார்…

சிறிது பின்னோக்கி நகர்ந்தால் (உங்கள் இருக்கையில் அல்ல – இந்த இடுகையைச் சொல்கிறேன்) உங்களுக்கு, ஈவெரா சொன்னார் என்று தோமையரை விரட்டின வீரமணியும், அதனால் உசுப்பப்பட்ட தாமஸும் பற்றி நினைவு வரலாம்.

ஆக தாமஸ் வள்ளுவரை, பெரியாரென்று நினைத்துச் சுட்டது என்பது ஒரு தர்க்க ரீதியான, புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சியே.

பாவம். வள்ளுவர் இப்படியாகத்தான் கதறக் கதறச், சுடப்பட்டு தன் இன்னுயிரை இழந்தார்.

துப்பாக்கி பற்றி, அதனைப் புகழ்ந்து குறள் ஒன்றையே எழுதிய வள்ளுவர், கடைசியில் ஒரு துப்பாக்கிக்கே பலியானது, சொல்வது என்னவென்றால், ஊழிற் பெருவலி யாவுள, கெடுவான் கேடு நினைப்பான்.

ஆமென்.

(ஆக, தமிழகத்தை, வள்ளுவர் காலத்திலிருந்து வன்முறை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது)

=-=-=-=

… ஆனால் தன்னுடைய முத்தமிழ் வித்தகக் குறளோவியத்தை குறளுக்கும் மேலே வைத்து மதிக்கத் தெரியாத திருவள்ளுவரை, நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறேன் என, கலைஞர் கருவிக் கொண்டார்…

மேலும் – கவிஞர் வாலி அவர்களும், வான்கவிப் பேரரசர் வைரமுத்து அவர்களும், கவிஞர் பாவி ஜய் அவர்களும் சேர்ந்து நடத்திய ’செம்மொழிமுத்தமிழ் வித்தகனுக்கு முப்பெரும் கால்கோள் கைவிண்மீன் விழா’விற்கு, வள்ளுவர், ”என்னால் எல்லாம் இந்த எழவிற்கெல்லாம் 2500 ஆண்டுகள் தாண்டி வரமுடியாது, எனக்கு மூட்டில் ஆர்த்ரிடிஸ், கழுத்தில் ஸ்பாண்டிலைடிஸ்” என நொண்டிச்சாக்குச் சொல்லி வராமல் இருந்ததும் – கலைஞருக்குப் பிடிக்கவில்லை… (இம்மாதிரி விஷயங்கள் நிறைய பேருக்குத் தெரியாதும் கூட)

பிற்காலத்தில் தன்னையறியாமல் தானே திருவள்ளுவரின் இறப்பிற்குக் காரணமானதை நினைத்து இறும்பூதெய்திய கலைஞர், முதலில் வள்ளுவர் கொட்டம் அமைத்து, வள்ளுவர்தம் அடிவருடிகளின் கொட்டத்தை அடக்கினார்.

அதனால் மட்டும் திருப்தி அடையாத கலைஞர், பின்னர் ஒரு பெரிய பாறாங்கல்லில் வள்ளுவரை அறைந்து கால் கடுக்க உப்புத் தண்ணீரில், தமிழகத்தின் தென் கோடியில் ‘stand up on the bench, you brat’ என்பது போல தண்டனை கொடுத்து, நிற்க வைத்தார்; கடல்வாழ் பறவைகளுக்கு, அந்தப் பாறாங்கல், ஒரு மகத்தான் எச்சமிடும் இடமாகவும் தற்போதைக்குச் செயல் படுவதை எண்ணி இப்போதும் இறும்பூதடைந்து கொண்டிருக்கிறார். (இது தொடர்பான – கோபமான, ரசக்குறைவான இடுகை: திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்!)

=-=-=-=

பின்குறிப்பு: தாமஸ் சிறையிலிருந்து  நாகநந்தி- நந்தினி போன்ற ஆபத்துதவிகளின் உதவியுடன், அவர்கள் பிரச்சாரத்தால், ’அண்ணா பிறந்த நாள்’ நிமித்தம் சோழக அரசால் விடுவிக்கப் பட்டார். பின்னர் அவர் மயிலைக்கு அருகே செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்கிற மின்வண்டி நிலையத்தை அமைத்தார். பெரும்பான்மையாகப் பல சிறுபான்மைப் பள்ளிகளையும் நிறுவினார்.

பின், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன சமச்சீர் புத்தகங்களைப் படித்ததனாலும், சகோதரர் டிஜிஎஸ் தினகரனின் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டப் பேச்சுக்களினாலும், மனம் பேதலித்து, பக்கத்திலிருந்த பரங்கிமலையேறி, சமண மதத்துக்கு மாறி வடக்கிருந்து உயிர் துறந்தார்..

=-=-=-=

நான்கு: எனக்கு வேறு வேலைவெட்டி இல்லை.

அட என்னடா இது, டர்புர்ரென்று oddஐக் கடித்து modஐக் கடித்து இப்போது தொகையீட்டு நுண்கணிதம் (நம்ம integral calculus தான் அய்யா, இது! ) பக்கமும் வந்து விட்டான் என்று ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள். எல்லாம் உங்கள் பழவினைப் பயன் தான், வேறென்ன சொல்ல!

… சமயத்தில் எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் (நல்ல வேளை, எனக்கு இம்மாதிரி நிறைய வருவதில்லை) என்னை இப்படிப் பாடாகப் படுத்தி விடுகின்றன; மன்னிக்கவும்.

முன்னர் இப்படிப் பதிவான கேள்வி(!) – பதில்கள்(!!) – தொடர்புடைய பதிவுகள்:

=-=-=-=-=

9. காந்தி ஒரு மூன்றாந்தர வக்கீல் – சர்ச்சில் அப்படித்தான் சொன்னதாக படித்திருக்கிறேன். அம்பேட்கரும் அப்படித்தான் சொன்னார். அவரா மாதாந்திரம் ஆயிரக் கணக்கில், அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னம் பெரும்பணம்  சம்பாதித்திருக்க முடியும்? தற்காலத்தில் இது சில கோடிகளுக்குச் சமம்! மன்னிக்கவும், கொஞ்சம் மிகையாகத்தான் இருக்கிறது உங்கள் பஜனை. ஏதோ திமுகவை எதிர்த்து எழுதினீர்கள் என உங்கள் இணைய தளத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வருந்தத்தக்க விதத்தில், திமுக எதிர்ப்பைத் தளர்த்தி, இப்போது பார்ப்பன-பனியா, தரகு முதலாளிய ஜால்ராவைத் தொடங்கியிருக்கிறீர்கள்! திராவிட விடுத்லை இயக்கங்களுக்கு மாற்றாக இருப்பது காந்தியம் தான் என்று நீங்கள்  கருதினால் அதனைத் தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டியது மிக்க அவசியம். தொடர்ந்து காந்தியப் பிரச்சாரம் எழுதினால், இடதுசாரி இயக்கங்களை கிண்டல் செய்து எழுதினால், நான் உங்கள் தளத்தை இனி படிக்கப் போவதில்லை.

அய்யா, நன்றி.

எனக்குக் கூட நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அப்படியானால், நீங்கள், மின்னஞ்சல் அனுப்பத் தெரிந்த ஒரு யானையாகக் கூட இருக்கக் கூடுமன்றோ? ஆக நீங்கள் இறந்தாலும் ஆயிரம் பொன் அல்லவா? ஆக உங்களை நான் கொன்று, ஆலுக்காஸ் நகைக்கடைக் காளான்களிடம் கொடுத்து – செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் – கூட அழகுணர்ச்சியும் சுத்தமாக அற்ற நகைகள் பெற்று மினுக்கிக் கொண்டு பவனி வரலாமன்றோ? ஆக, நான் ஒரு அருவருக்கத்தக்க பூர்ஷ்வா அன்றோ? ஆக, நீங்கள் யானை என்றால், நான் ஒரு பூர்ஷ்வா.

ஆமென்!

இப்படித்தான் போகிறது அய்யா, உங்கள் குதர்க்கவாதமும், போலிஅறிவியல்வாத நிரூபணமும் – ஒன்றுக்கொன்று சுத்தமாகத் தொடர்பே இல்லாமல், அதர்க்கப் பாய்ச்சல்களும், மேலோட்டமான நுனிப்புல் மேய்தல்களும், சிரத்தை என்கிற ஊர்ப்பக்கம் நீங்கள் மழை, வெய்யிலுக்குக் கூட ஒதுங்கமாட்டீர்கள் போல…

தரவுகள் என்பவை முக்கியமானவை. ஆனால் பொத்தாம்பொதுவாக உளறிக்கொட்டுவது தான், நம்முடைய உரையாடல்களுக்கு, உங்கள் உச்சகட்டப் பங்களிப்பு என்பது மிகுந்த ஆயாசம் தருகிறது.

சரி பரவாயில்லை – உங்கள் எதிர்வினை – ’காந்தி எனும் வழக்குரைஞர்’  தொடர்பாக இரண்டு மாதங்கள் முன்வந்தது. பதில்(!) இவ்வளவு தாமதமாக எழுதுவற்கு மன்னிக்கவும்.

இப்போது உங்கள் கேள்விகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

காந்தி ஒரு மூன்றாந்தர வக்கீல் – சர்ச்சில் அப்படித்தான் சொன்னதாக படித்திருக்கிறேன். அம்பேட்கரும் அப்படித்தான் சொன்னார்.

சர்ச்சில் இளக்காரமாக, காந்தி படித்த ‘இன்னர் டெம்ப்ல்’ கல்லூரியைச் சம்பந்தப்படுத்தி –  இம்மாதிரி, இப்படிச் சொன்னார்தான். ஆனால், எனக்குத் தெரிந்தவரை அம்பேட்கர் அப்படிச் சொன்னதாக நினைவில்லை. நீங்கள் எங்கு அப்படிப் படித்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எந்தச் சூழலில் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும் என்பது தான் தெரியுமா?

தேவையில்லாமல் பொய் நெல்லிக்காய் மூட்டைகளைத் திறந்து, அவிழ்த்துக் கொட்டி,  நெல்லிகள் உருண்டோடும்போது அவற்றில் பின் அலைந்து அல்லாட வேண்டாம்.

அவரா மாதாந்திரம் ஆயிரக் கணக்கில், அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னம் பெரும்பணம்  சம்பாதித்திருக்க முடியும்? தற்காலத்தில் இது சில கோடிகளுக்குச் சமம்! மன்னிக்கவும், கொஞ்சம் மிகையாகத்தான் இருக்கிறது உங்கள் பஜனை. 

காந்தி  தென் ஆஃப்ரிகாவில் பணி செய்துகொண்டிருந்தவரை, மிக அபரிமிதமாகப் பணம் ஈட்டினார் – ஆனால், அதற்காக அவர் எந்தத் தகிடு தத்தமும் செய்யவில்லை. மேலும் அவர் சொந்த-சொற்ப உபயோகத்துக்கு மேல்  தன் சம்பாத்தியத்தை அவர் தன் நண்பர்களுக்காகவும், பண்ணைகளுக்காகவும், ஏழை இந்தியர்களுக்காகவும், கருப்பர்களுக்காகவும், பண்ணை சார் தொழில்களுக்காகவும் செலவழித்தார்.  மெய்யாலுமே ‘ நெஞ்சில் நேர்மை, பணிவு, சுய அர்ப்பணிப்பு, பொது வாழ்வில் தூய்மை, மகாமகோன்னதக் கருத்துகளாலும் கரங்களினாலும் மிகக் கடின உழைப்பு’ போன்றவற்றைத் தொடர்ந்து  செய்தார், கடைப்பிடித்தார்.

மேலும் அவர் எடுத்துக் கொண்ட எந்த விஷயத்திலும, உன்னதத்தை நோக்கிப் பயணம் செய்பவராகவே இருந்தார்.

ஏதோ திமுகவை எதிர்த்து எழுதினீர்கள் என உங்கள் இணைய தளத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

அய்யா, நான் ஒரு வருடமுன்னால் இவ்வலைப்பூ தொடங்கியது திமுக எதிர்ப்புக்காக மட்டுமே. உண்மைதான். அச்சமயம் என்னளவில் அது முக்கியமானது என நினைத்தேன். எழுதமட்டும் செய்யவில்லை நான் – என்னால் முடிந்தவரை, சிறிது களப்பணியும்(!) செய்தேன். தமிழக வாக்காளர் எண்ணிக்கையில் இது ஒரு பொருட்படுத்தத் தக்க விஷயமே இல்லை என்றாலும்… என் சொந்த முயற்சியால் சுமார் 12200 – 12500 வாக்குகள், திமுகவிற்கு எதிராகப் பதிவாகி இருக்கும் (கடந்த 2011 ஏப்ரல் தேர்தல்களில்) என நினைக்கிறேன்; ஹ்ம்ம்ம், ஒரு வருடம் பின் இது பற்றி யோசிக்கும் போது இப்புள்ளியியல் (!) விவரத்தில் 99% பிறழ்ச்சி/தவறு இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமென்று தான் நினைக்கிறேன். :-)

ஆனால் நான் அந்தப் புத்த பிக்கு சொன்னதைப் போல, அந்தப் பெண்ணை அந்த ஆற்றங்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். மன்னிக்கவும். (சில சமயம் அந்தப் பெண்ணை நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை என்றாலும்… அய்யா,  எப்படி நான் என் தானைத் தலைவரை மறக்க முடியும்?)

ஆனால் வருந்தத்தக்க விதத்தில், திமுக எதிர்ப்பைத் தளர்த்தி, இப்போது பார்ப்பன-பனியா, தரகு முதலாளிய ஜால்ராவைத் தொடங்கியிருக்கிறீர்கள்!

மிகவும் அயர்வாக இருக்கிறது, இம்மாதிரிப் படு பயங்கர, நடுநடுக்கும், கிடுகிடுக்கும் சதித்திட்டங்களைப் பற்றி, மறுபடியும், மறுபடியும் கேள்விப்படுவதற்கு…  ஆனால் சிறிது யோசிக்கிறேன்.

பார்ப்பன Bania – என்பது ஒரு அரதப்பழசான அ–சுமுகவியல்சார் (ஏனெனில், இந்த வகைப் பதங்களில், சுமுக சமரச உணர்ச்சியற்று மக்களைப் பிரித்தாளும் நோக்கமே பிரதானம்) வன்கலைச்சொல் என்பதை நாம் அறிவோம், ஆக நாம் இன்னமும் மேல் நோக்கிப் பயணம் செய்து, சமூக-மானுடவியலையும் அதன் லக்கணங்களையும் பின் நவீனத்துவக் கட்டுடைப்புச் செய்து பரிணாமரீதியில் பல்பரிமாணங்களை அடைய, எட்ட வேண்டியிருக்கிறது அல்லவா? (லொக், லொக் ஹ்ம்ம்…)

அய்யா, நீஙகள் இன்னமும் பார்ப்பன பனியா பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? ஏன் banianகளுக்கு மட்டும் இவ்வளவு காலமாக திராவிடாத இயக்கச் சோடைமேடைப்பேச்சாடல்களில் முன்னுரிமை தந்து கொண்டிருக்கிறோம்? இவ்வயிற்றுப் போக்குக்கு மாற்றாக ஏன் நீங்களாவது மற்ற ‘ஜாதிய ஜட்டி’ இத்தியாதிகள் பக்கமும் அருள் பாலிக்கக் கூடாது?

நாமணியும் துணிமணிகளும், நாமறியும் ஜாதிக்களும் நமதென்பதறிவதற்கு நமக்கு இன்னும் எவ்வளவு காலம்தான் அவகாசம் வேண்டும்?

அவைகளும் நம் சதித் திட்டங்களில் பங்கு பெற வேண்டாமா? அவற்றுக்கும் நாம் சமூகநீதிசார் இடஒதுக்கீடு செய்வதல்லவா  நியாயம்?

எடுத்துக் காட்டாக, உங்களைப் போன்றவர்கள் கையாள்வதற்குப் பற்பல பாடு(படுத்தும்) பொருட்கள் உள்ளனவே!  (ஒரு)மாதிரிக்கு, தற்போதைக்கு உங்களுக்கு உதவட்டுமே என்று… (சில ஆங்கில முழிபெயர்ப்புகளுடன்)

 • தேவர தாங்கா (thong)
 • நாயர நிக்கரா (அ) நூட்ல்ஸ் டாப்பா (knicker, noodles top)
 • அருந்ததிய அரைஞாணா
 • கோனார கோட்டா (அ) கோனார கோமணா (coat)
 • வன்னிய வெஸ்டா (vest)
 • துளுக்க துண்டா (அ) துளுக்க துப்பட்டா (duppatta)
 • வேளாள வேட்டியா
 • சோழிய சுடிதாரா (chudithar)
 • கவுண்ட கவுனா (gown)
 • கைக்கோளக் கைக்குட்டையா (அ) கால்சராயா
 • முதலியார முண்டாசா
 • வைசிய வேட்டியா
 • தலித  தோதியா (dhoti)
 • படுக பன்டானா (bandana)
 • ரெட்டிய ரெடிமேடா
 • ஜாதிய ஜாக்கெட்டா

அய்யா, நீங்கள் ஏன் மேற்போன்றவற்றையும் எடுத்தாளக் கூடாது? எவ்வளவு இருக்கின்றன இம்மாதிரி? என்ன பாவம் செய்தன இவை? ஏ நிந்தப் பாராமுகம் அய்யா, உங்களுக்கு…

பந்திக்கு முந்தும் தமிழ் மந்திகளல்லவா நாம்? வேகமைய்யா, வேகம் – மற்றவர்களுக்கு முன்னால், நாம் ஓஓஓஓடிப்போய் வெற்றுவாகை சூடவேண்டுமைய்யா….

(கிட்டே வாருங்கள் – உங்களது எண்ணப் போக்கு, சில சமயம், நீங்கள் திருப்பூர் பனியன்கடைக்காரரோ என்கிற சந்தேகத்தை என்னுள் எழுப்புகிறது – நீங்கள் பனியா பனியா எனப் புலம்புவது ஏன்?? என்ன,  நான் நினைப்பது சரியா?)

=-=-=-=

தரகு முதலாளி என்பவன் யார்? நன்றாக யோசியுங்கள். நாம் எல்லோரும்தான், பல விதங்களில், பல வேளைகளில். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், எதற்குமே தரகுகள் முக்கியம், ( நீங்கள் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருப்பது போல) தரவுகள் நிச்சயம் அல்ல.

ஒருக்கால், விறகு முதலாளி ‘தொட்டி’ வைத்திருப்பதால், நீங்கள் ஏடாகூடமாக – தரகு முதலாளி ‘வட்டி’ கேட்பார் – என்கிற ரீதியில் இவ்விஷயத்தைப் புரிந்து (!) கொண்டிருக்கிறீர்களா? அநியாய வட்டி கறாராகக் கறக்கப் படுவதினால் அது கறந்தவட்டியாகி, பின் அது மருவி கந்து வட்டியாகி  விட்ட கந்தரகோளக் கதையினால் குழம்பி விட்டீர்களா?

ஏன் இப்படி வெறும் தகர டப்பி வார்த்தைகளை மந்திர உச்சாடனம் செய்கிறீர்கள்?

என்னைக் கேட்டால்,  நீங்கள் ஒரு ’முன்னோடி’ வரகு-முதலாளியாகி – நமது பாரம்பரியப் பொக்கிஷங்களான  சிறு தானியங்களை – வளமை,செழுமை முன்னோங்க – பரப்பித் தொண்டு செய்தால்தான் உங்களுக்கு விமோசனம்.

அய்யா – உண்மையில் எனக்கு, அந்தக் கால ’விக்டோரிய’ உபாத்தியாயர்கள் போல, உங்கள் காதை நன்றாகத் திருகி, உங்களுக்கு வாழ்க்கை பற்றிய அரிச்சுவடிப் பாடம் நடத்தவேண்டுமெனத் தோன்றுகிறது. Lend me your ear, please!

திராவிட விடுதலை இயக்கங்களுக்கு மாற்றாக இருப்பது காந்தியம் தான் என்று நீங்கள் கருதினால் அதனைத் தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டியது மிக்க அவசியம். .

அய்யா, நான் அப்படிச் சொல்லவில்லை. மேலும் திராவிட ’இயக்கம்’ என்று ஒன்று இருப்பதாகவே (அல்லது இருந்ததாகவே) நான் கருதுவதில்லை.

ஏனெனில் திராவிடம் (’தமிழ்’) என்பது ஒரு இயக்கமாகக் கருதப் பட முடியாது. ஆனால், அது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளலாம்.

வெறும் உணர்ச்சிக் குவியல்களால், பேச்சுப் பந்தல்களால், புனைவுசார் அடித்தளங்களின்மீது எழுப்பப்பட்ட பொய்க்கட்டுமானங்களால், மக்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி – அரசியல் சந்தர்ப்பவாதிகளால் சுற்றி வளைக்கப்பட்ட மக்கள் திரள், நிச்சயம் ஒரு மக்கள் இயக்கமாகாது.; சமூக/மானுடவியல் சார்ந்து இந்த அவலநிலைப் புரிதல் பற்றி, ஒரு புத்தகமே எழுதலாம்.

தவிர, ‘விடுதலை’க்கும் (அது எம்மாதிரி விடுதலையாக இருந்தாலும் சரி) திராவிடம் சம்பந்தப் பட்ட கூட்டங்களுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் தெளிவு செய்ய வேண்டும். எனது (சில சமயம்) மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம்.

நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் திராவிட ‘இயக்கங்களை’ ஒரு காலத்தில் மதித்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பரவாயில்லை. நான் உங்களை எப்படியும் மன்னித்து விடுகிறேன்.

ஆனால், இடதுசாரித் தீவிரவாதப் பேயோட்டுதல்களிடமிருந்தும் நீங்கள் வெளிவர என் பிரார்த்தனைகள்.

தொடர்ந்து காந்தியப் பிரச்சாரம் எழுதினால், இடதுசாரி இயக்கங்களை கிண்டல் செய்து எழுதினால், நான் உங்கள் தளத்தை இனி படிக்கப் போவதில்லை

தேவரீர் தயை செய்து அப்படிச் சொல்லக் கூடாது. எனது வலைப்பூவைப் படிக்கும் ஒரே இரண்டாம் மனிதர் நீங்கள் தாம் என்பதால் நான் மிகவும் துக்கித்துப் போயிருக்கிறேன். என்னை நானே திருத்தி கொள்வதற்கு, எனக்கு, தயாள குணம் படைத்த நீங்கள் இன்னொரு வாய்ப்பைத் தயவு செய்து அளிப்பீர்களா??

ஆனால் அய்யா, உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் படிப்பதற்காக நான் எழுதவில்லை. மாறாக, நானே படித்து, நானே புளகாங்கிதம் அடைவதற்காகத்தான் எழுதுகிறேன்.  நான் உலகெங்கும் (=விழுப்புரம் மாவட்டம்) பயணம் செய்யக் கூடியவன். ஆக போகும் இடத்திலெல்லாம், என்னுடைய எழுத்தை நானே படித்து, காதலுற்றுக் கசிந்துருகி, பக்திப் பரவசமடைவதற்காகத்தான் இணையத்தில் பதிவு செய்கிறேன். இதனை நீங்கள் வலைப்பூச்சுயமைதுனம் என்று கூடக் கருதலாம். ஆக, நீங்கள் பேஷாக இனி என் எழுத்துக்களைப் படிக்க வேண்டாம்.

அய்யா, நான் பிரச்சாரம் செய்வதற்காக எழுதவில்லை. என்னுடைய சொந்த அனுபவங்களை, புரிதல்களை(!), ஆஹாக்களை, ஆசைகளை, வருத்தங்களைத்தான் எழுதுகிறேன். இன்னொன்று, இந்தக் கட்டுரைகள் என் எண்ணங்களை என் மட்டில் கோர்வைப்(!) படுத்துகின்றன – நான் இன்னமும்(!) தெளிவாகச்(!!) சிந்தனை செய்வதற்கு, என்னுடைய அண்டவெளியைக் கட்டமைப்பதற்கு உதவுகின்றன. அவ்வளவே.

ஆக எனக்கு இடது, வலது, மேல், கீழ், சாரி சுடிதார் பற்றியெல்லாம் அபார ஈடுபாடோ, அல்லது திராவிட ‘இயக்க’ங்களுக்கு மாற்றாக இன்னொரு எறும்பு சாரியை முற்படுத்துவதோ, தற்போதைக்கு முடியாது.

நீங்கள் கூடிய சீக்கிரம் வளர, பொலிய, என் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.

காந்தியாயணம்…

(அல்லது)

எப்படி நம் தமிழர்கள், மரங்கள் வெட்டப் படுவதைத் தடுத்து நம் சுற்றுப்புறச் சூழலைப் பேணிப் பொலிகிறார்கள்!

=-=-=-=

பள்ளி, மாணவர்கள், தேர்வுகள், விழாக்கள், தமிழகஅரசுக் கல்வித்துறைக்கு பலமுழ நீள அறிக்கைகள் அனுப்புதல்  – போன்ற வைபவங்கள் எல்லாம் முடிந்து, அடுத்த வருடத்துக்கான பள்ளி/பாடத் திட்டமிடல் செய்து – பின்னர் பள்ளி வளாகச் சரி செய்தல்கள், திட்டங்கள், செப்பனிடல்கள் எல்லாமும் முடிந்து, அயர்ந்தெழுவதற்குள் – மூன்று-நான்கு வாரங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன… (ஆக, பஹுரூபி காந்தி மொழிபெயர்ப்பு அப்படியே நிற்கிறது, மன்னிக்கவும்)

ஆனால், மேற்கண்ட விஷயங்களை மீறி, என்னால் ஏப்ரல் 9ஆம் தேதி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறையில் ஜெயமோகன் ஆற்றிய உரையைக் (’காந்தியின் திமிர்’) கேட்க முடிந்தது, சமீப காலத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த விஷயம்… என் பாக்கியம்.

=-=-=-=

எனது சிறு வயதில், இளமையில், பல காலங்களுக்கு, தமிழிலக்கியத்தின், தமிழ் பண்பாட்டின் ஆழ்ந்த மாணவனாக இருந்திருக்கிறேன் – இப்போதும் அப்படியேயிருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் கூட.

… 1991ல் (என நினைக்கிறேன்), என் அன்பு நண்பன் ‘முன்றில்’ மகாதேவனுடன் சேர்ந்து ’80களில் தமிழ் கலை இலக்கியம்’ எனத் திருவிழா போல மூன்று நாட்கள் ஒரு கருத்துகளரங்கு நடத்தினோம், சென்னை லாயிட்ஸ் சாலை காதி க்ராமோத்யோக் பவனில்.  அச்சமயமும் தமிழ் இலக்கிய ’வானில்’ குறுங்குழுக்களும், கும்பல்களும், புரட்டுப் புரட்சியாளர்களும், வெறுப்புமிழ்வர்களும், வாயோர நுரைதள்ளல்களும், வெற்று உச்சாடனங்களும் இருந்தனதான். ஆனால் இவ்வனைத்தையும் மீறி,  பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து பல வித இலக்கிய இயக்கங்கள் வரை, மாபெரும் இலக்கியப் பிதாமகர்களிலிருந்து இளம் படைப்பாளிகள் வரை, திரை, நாடக நண்பர்கள் ஈறாக, மிகக் கோலாகலமாக நடைபெற்றது, இந்த விழா!

மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் செயலாற்றிய காலங்கள் அவை – எங்களுக்கு வயது அப்போது நடு இருபதுகளில் –  இளமைக்குரிய உற்சாகம், பணி செய்யத் தயங்காமை…  பணம் கடன் வாங்கியாவது, நம் தமிழுக்காக ஒரு நேர்மையான நல்ல நிகழ்ச்சியை, அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளும்படி  நடத்தவேண்டும் என்கிற (யோசித்துப் பார்த்தால், ஒரு குழந்தைத்தனமான) ஆவல்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர்,  நம் கலாச்சாரத்துக்கே உரிய பொச்சரிப்புகள், பொறாமைகள், வதந்தி பரப்புதல்கள் (உதாரணம்: ”ராமசாமியும் மகாதேவனும் இந்தக் கருத்தரங்கு நடத்தி பெரிய அளவில் பணம் சுருட்டி விட்டார்கள்.இவர்கள் பெற்ற நன்கொடைகளுக்கும் செலவுகளுக்கும் சம்பந்தமே இல்லை; எங்களிடம் இந்த மோசடிக்கான ஆதாரங்கள் இருக்கின்றன!”), நேர்மையற்ற செயல்கள், வெளியே சொல்ல முடியாத, கேவலமான அவதூறுகள் அனைத்தும் நடந்தன’ இம்மாதிரி செய்தவர்கள், இந்த நிமிஷம் வரை அப்படியேதான் இருக்கிறார்கள். மினுக்கிக் கொண்டிருக்கிறார்கள் –  இதழாசிரியர்களாகவும், கலை விமர்சகர்களாகவும், இலக்கியவாதிகளாகவும், சினிமாத் துறையிலும்…

… பின் அலுவலகத்திலும் எங்களுக்குச் சிறிதளவு பணம் கொடுத்தவர்களுக்கும்‘இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்.’  ஒரே  அரசல்புரசலாக செய்திகள் வந்து வீட்டிலும் கேள்விக் கணைகள் (’ஒனக்கேண்டா இந்த இலக்கியமும் கண்றாவியும்’)!
ஹ்ம்ம் – ஆக எனக்கு மிகுந்த சிறுபிள்ளைத்தனமான சலிப்பு ஏற்பட்டு, நீங்களும் வேண்டாம், உங்கள் குமாஸ்தாத்தன குசும்புகளும் வேண்டாமென விட்டு விட்டேன். பின்னோக்கி இவை பற்றி யோசித்தால், சிரிப்புத்தான் வருகுதையா – வேறென்ன சொல்ல!

எது எப்படியோ, அச்சமயம் இலக்கியம் பற்றிப் பேசுவதையும் நிறுத்தினேன். ஆனால், நல்ல வேளை – படிப்பதை முற்றும் நிறுத்தவில்லை. அதனை எப்படி நிறுத்த முடியும், சொல்லுங்கள்…

=-=-=-=

… ஏறத்தாழ ஜெயமோகன் எழுத வந்த காலத்திலிருந்து (1980களின் நடுவிலிருந்து என நினைவு), அவருடைய எழுத்துக்களைப் படித்து வந்திருக்கிறேன். புதிய நம்பிக்கை என்ற சிறு பத்திரிகையை நடத்திய பொன் விஜயன் என்பவர் எனது நண்பர் – அவர் ட்ரெடில் அச்சகத்தில் ‘மாடன் மோட்சம்’ அச்சுக் கோர்க்கப் படும் போது, நானும் தட்டுத் தடுமாறி, அதில் பாதிக் கோர்ப்பு (1990?) செய்தேன் – கால்லீ ப்ரூஃப் எடுத்துக் கொண்டு நானும் விஜயனும் வடபழனி சரவணபவனில் இந்தக் கதையைப் பற்றிச் சில மணி நேரம் (’ஏ அப்பி’) பேசிக் கொண்டிருந்தது இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது…

=-=-=-=

’காந்தியின் திமிர்’ என்கிற தலைப்பில்  ஜெயமோகன் அவர்கள், புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் ஆற்றிய – ஆரவாரமில்லாத, மிகவும் அழகான, தெள்ளிய நீரோடை போன்ற  உரையைக் கேட்டேன், (அவசியம் நீங்கள் இந்த உரையையும் படிக்க வேண்டும்)

எதன் மேலாவது வெறுப்பைக் கக்கித் தன் இருப்பை நிலை நாட்ட முயற்சிக்காமல், தன் வாதங்களை உயர்ந்த குரலில் பேசிக், கையைக் காலை ஆட்டி, இரண்டொரு பகடிச் செய்திகள் சொல்லி, நேரத்தை நிரப்பாமல், தர்க்க ரீதியாக வாதங்களை அடுக்கி, மென்மையான குரலில் இளைஞர்களை சிந்திக்கவைக்க முயன்ற பேச்சு அது, காந்தி எப்படி ஒரு கொந்தர் (’hacker’) ஆகக் கருதப்பட வேண்டும் என ஆரம்பித்து (பேச்சைக் கேட்க வந்திருந்தவர்கள் பெரும்பாலும் மின்னியல் மாணவர்கள் என்பதால் என நினைக்கிறேன்) அதன் பின் விரிந்த பேச்சு அது.

=-=-=-=

பேச்சு முடிந்தபின் அவரைப் பார்த்து, சும்மா வளவளவென்று பேசிக் கொண்டிராமல், ஒரு முறை ஆரத்தழுவி அரவணைத்துப் பின் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன்; ஆனால், அவர் ஏற்கனவே மிகுந்த ஆயாசத்துடன் இருந்தார். அடுத்தநாள் துபாய் செல்லவேண்டும் அவருக்கு; மொய்த்தபடியிருந்த வாசக அன்பர்கள் வேறு – ஆக அவரைத் திடுக்கிட வைக்கவேண்டாம் என்று – ’காந்தி இன்று’ சுனீல் க்ருஷ்ணன் அவர்கள் என்னை ஜெயமோகனுக்கு அறிமுகப் படுத்தியவுடன் சிறிது ஏதோ ’மரியாதை நிமித்தமாக’ முணுமுணுத்துவிட்டு, விடை பெற்றுக் கொண்டேன்.

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் சந்தோஷமான விஷயம் – மற்ற சில கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கூட இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

=-=-=-=

ஒரு விஷயம் பற்றிச் சொல்ல வேண்டும். நிகழ்ச்சியில், அங்குள்ள சில ஆசிரியர்கள், முனைவர்கள் – தங்களைப் பெருமையாக ‘ஜெயமோகனின் வாசகர்கள்’ என்று சொல்லிக் கொண்டது ஆச்சரியகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

அட, (உண்மையான) தமிழ் இலக்கியம் பட்டொளி வீசிப் பறக்கக் கூட ஆரம்பித்து விட்டதா என்ன? தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டு முதல் பத்து நாட்களிலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்கின்றனவா என்ன?? யாஹூஊஊஉ, இதோ நம் இளைஞர்கள் ஒடிப்போய் , நம் தமிழை, தொல்காப்பியத்திலிருந்து படிக்க ஆரம்பித்து – ’தொல்காப்பியம்: உலகின் முதல் திராவிட நகலகம்’  – என ஆராய்ச்சி செய்து முனைவர்களாகப் போகிறார்களோ??? இது நம் கன்னித் தமிழகம் தானா????

… நான் இம்மாதிரி பகல்கனவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும்போது – அங்கு பேசியவர்களில் பலர் – அவர்கள், ஜெயமோகனின் புத்தகங்களைப் படிப்பதற்கு, தங்கள் முறைக்காக வரிசையில் காத்திருப்பதைப் பற்றி வருத்தத்துடனும், ஆவலுடனும் பேசினர்! ஏனெனில் அவர்கள், புத்தகங்களைக் கடன் வாங்கிப் படிப்பதற்குத்தான் முடியும் போல இருக்கிறது! என்ன துர்லபம்!  என்னே அனாவசியமாக புத்தகம்-கித்தகம் வாங்காமல் நாட்டின் சேமிப்பை உயர்த்தும் அவர்களின் பாங்கு!

எனக்கு கடந்த 35 வருடங்களாக இந்த இழவு விஷயம் புரியவே மாட்டேன் என்கிறது –  அது என்னவென்றால் –  கை நிறையச் சம்பாதிப்பவர்கள், இலக்கியங்களை, தரமானவற்றை நோக்கிச் செல்ல விரும்புபவர்கள் – புத்தங்களைக் கடன் வாங்கி மட்டுமே படிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பது!  நாம் ஏதோ புத்தக அறிமுகம் செய்கிறோமா? ஒரு புத்தக ஆர்வமுடைய ஆனால் வசதி இல்லாத இளைஞருக்கு உதவி புரிய நினைக்கிறோமா? அல்லது புத்தகம் கிடைப்பதில்லையா? அல்லது அருகிப் போனதா அது? தடை செய்யப்பட்ட புத்தகமா –  அப்படியானால் கடன் வாங்குவதும், கொடுப்பதும் – மேலும் நகல் எடுத்துக் கொள்வதும் கூடப் புரிந்து கொள்ள முடியும், ஆனால்…

நாம் நம் இளைஞர்களுக்கு என்ன முன்மாதிரியாக இருக்கிறோம்? என்ன சொல்ல வருகிறோம்?

 • புத்தகம் வாங்காதீர்கள். எதையுமே வாங்காதீர்கள் – அதனை இலவசமாகப்பெறமுடியுமென்றால்.
 • ’டீல்’ இல்லாமல் கிடைக்கும், இலவசமாக சோப்பு, கீப்பு போன்றவற்றைக் கொடுக்காத புத்தகங்களை வாங்கவே வாங்காதீர்கள். இது வாங்கினால் அது இலவசம் -அது வாங்கினால் இது இலவசம் என்று இருந்தால்தான் அது நன்று
 • அல்லது, வேறு வழி இல்லையென்றால் (அதாவது பாடத்திட்டம் அப்புத்தகத்தைப் படித்தேயாக வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றால்) அப்புத்தகத்தை நகல் எடுத்துக்கொள்ளுங்கள் (அது ‘சீப்’பா – சல்லீஸா வொர்க் அவுட் ஆவும்).
 • முடிந்தால் இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.  ஆனால், அதற்கு எதாவது ‘கோனார்’ துணைவன் போன்ற ‘கைடு’ கிடைத்தால், அப்புத்தகத்திற்குப் பதிலாக, அந்தத் துணைவனே போதுமானது.
 • படைப்பாளி எக்கேடோ கெட்டுப் போகட்டும் – இந்த அகங்காரம் பிடித்த சிடுக்கல் மொழியில் எழுதும் அந்தப் படைப்பாளப் ப்ரக்ருதிகள் போக்கத்தவர்கள்.

.. ஹ்ம்ம்ம்… என்னவோ போங்க,,,

எனக்கு இப்போது இன்னொரு விஷயமும் தோன்றுகிறது.

… நமக்கென்று ஒரு் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.

 • நம் தமிழர்கள் மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்திலிருந்தே நம் சுற்றுப்புறச் சூழலைப் பேணி வளர்த்தவரிகள்.
 • குளம் தொட்டு வளம் பெருக்கியவர்கள்,
 • வாடிய பயிரைக் கண்டதும் வாடியவர்கள்.
 • தல (அஜித் அல்ல) விருட்சங்களைப் போற்றியவர்கள்.
 • சாலையோரங்களில் மரம் நட்டவர்கள்.
 • கோயில் காடுகளைக் கட்டமைத்தவர்கள்.

இப்போது பாருங்கள், இந்த அநியாயத்தை: மரங்களை வெட்டிக் கூழ் செய்து உருவாக்கப் படுபவை தான் காகிதங்கள். அக்காகிதங்களை உபயோகித்து உருவாக்கப் படுபவைதான் புத்தகங்கள்.

ஆக, புத்தகங்கள் = இறந்த ( = கொலை செய்யப் பட்ட) மரங்கள்.

நாம் நிறையப் புத்தகம் வாங்க வாங்க, மேலும், மேன்மேலும் மரங்கள் அழிக்கப் படுகின்றன,

ஆகவே தான், நாம் மரஜீவகாருண்யம் கருதி புத்தகங்கள் வாங்குவது என்கிற பாவச் செயலைச் செய்வதே இல்லை. அதனால் தான் நாம், தப்பித்தவறி ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கினால் கூட, அதனை ஒரு லட்சம் பேர் உபயோகிக்கிறோம்! உபயோகிப்போம்!!

ஆக, உலகின் முதலோமுதல் சுற்றுப்புறச் சூழல் வாதிகளும், தமிழர்களே1

=-=-=-=

ஜெயமோகன் பேச்சு முடிந்தவுடன் – சில மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறை இளைஞர்களொடு அளவளாவினேன் – அவர்கள் தாம் முதலில் என்னிடம் வந்து,  நான் வைத்திருந்த பையைப் (அது ஒரு கால்சராயை வெட்டி, நானே  நூதனமாகத்(!) தைத்துக் கொண்டது) பற்றிக் கேட்டார்கள், பாவம் – பயல்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள்!. ஒரு ஐந்து நிமிட அளவளாவலில் அவர்களுக்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதியது தான் முக்கியமாகப் பட்டது போல, எனக்குத் தோன்றியது. (ஒரு மாணவி சொன்னார்: எவ்ளோ நல்லா வசனம் எழுதியிருக்கிறார்). நான் சொன்னேன் – இருக்கலாம், நான் அவர் வசனமெழுதிய படங்களை நான் பார்க்கவில்லை. இருப்பினும் சொல்வேன், அவருடைய மற்ற எழுத்துக்களையும் படித்தால்தான் அவருடைய ஆழமும் வீச்சும் தெரியும். என்ன படிப்பீர்களா? சிறிது வெட்கம். கொஞ்சம்  மௌனம். சரி, அவர் சொன்னதில் என்ன பிடித்தது? ”காந்திக்குத் திமிர் தாஸ்தி.”

=-=-=-=

சில தளர்வடைந்த, சலிப்பான கணங்களில், எவ்வளவு இக்கால இளைஞர்களைப் போய்ச்சேரும் இம்மாதிரி காந்தி, அறம், இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற விஷயங்கள் என்று எனக்கு அசிரத்தை ஏற்பட்டாலும் – நம் பாரம்பரியம், நமது வரலாறு பற்றிய ஆக்கபூர்வமான அறிதல்களும், சிந்தனைகளும் நம் இளைஞர்களுக்குப் போய்ச் சேரத்தான் வேண்டும்.

அவற்றுக்கான விதைகளை  இம்மாதிரி நிச்சயம், களைப்படையாமல், விரக்தியடையாமல், மிகுந்த நம்பிக்கையுடன் விதைத்தாகத்தான் வேண்டும் என்றுதான் தோன்றுகிறது – அவை எப்பொழுது துளிர்க்க வேண்டுமோ அப்போது துளிர்த்துக் கொள்ளும். கொழு கொம்புகள் இருக்க வேண்டும், அருகில் – கொடிக்குத் தெரியும் எப்போது, எப்படிப் படர்ந்து வளர வேண்டுமென்பது.

நம்பிக்கை, எதிர்காலத்தைப் பற்றிய திடமான நம்பிக்கை… இது இல்லாமல், ஆசிரியர் (படிப்பித்தலானாலும் சரி, எழுத்தானாலும் சரி) வேலையில் ஈடுபடவே முடியாது, என்று தான் தோன்றுகிறது.

அனைத்து மாணவர்களை, இளைஞர்களை பாதிக்க, உசுப்ப முடியாவிட்டாலும் – ஓரிரு மாணவர்களை, எப்பாடுபட்டேனும் உந்த முடிந்தால், அச்சிறு துளிகளே ஒருகாலத்தில் வெள்ளமாக மாறக் கூடுமோ என்னவோ.

ஆக, நிச்சயம் நம் தலைமுறையை விட அடுத்த தலைமுறை ஆழத்திலும் வீச்சிலும் நம் புரிதல்களை பல்வேறு உயர்ந்த தளங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. (இது என்னுடைய நம்பிக்கை)

=-=-=-=

… ஆர்வமிகுந்த, முனைப்புடன் செயல்படும் சுனீல் க்ருஷ்ணன், கடலூர் சீனு போன்ற இளைஞர்களைச் சந்தித்ததும் மிகவும் சந்தோஷம் -ஆனால் நிறையப் பேச முடியவில்லை, அதனால் என்ன = மறுபடியும் சந்திக்காமலா போய் விடுவோம்?

=-=-=-=

இப்படிப்பட்ட நிகழ்ச்சியை யோசித்து, திட்டமிட்டு, நடத்திய புதுச்சேரி பொறியியல் கல்லூரி சார் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என் நன்றி பல.

காந்தியாயணம்…