காந்தி எனும் நாவிதர்… (பாகம் 1 / 2)
18/05/2012
… அல்லது காந்தி எனும் முடிதிருத்துபவர்…
“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஐந்தாம் அத்தியாயம்: பார்பர்.
=-=-=-=
அவர் தென் ஆஃப்ரிகாவிற்கு வந்திறங்கிய ஒரு வாரத்தில், தன்னுடைய ஒரு சட்டத் தொடர்பான வேலையின் நிமித்தம், காந்திக்கு, ஒரு பெரிய நகரத்துக்குச் சென்று ஒரு இரவை அங்குக் கழிக்க வேண்டியிருந்தது.
அந்நகரத்திற்குச் சென்ற அவர், ஒரு வாடகைக்கார் அமர்த்திக் கொண்டு, ஒட்டுனரை, அந்நகரத்தின் முன்னணி விடுதிக்கு அழைத்துச் செல்லச்சொன்னார். அங்கு சென்றவுடன், காந்தி அவ்விடுதியின் மேலாளரைப் பார்த்து தனக்கு ஒரு அறையைக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அந்த வெள்ளைக்கார மேலாளர், காந்தியை மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சொன்னார, “மன்னிக்கவும். அறைகள் காலி இல்லை.”
ஆக ,காந்திக்கு அந்த இரவைத் தன் ஒரு இந்திய நண்பரின் கடையில் கழிக்க வேண்டியதாயிற்று.
பின்னர் அவர் அந்த நண்பருக்கு, நடந்ததை விவரிக்கும்போது, நண்பர் கேட்டார், “எப்படித்தான் உங்களுக்குத் தோன்றியது, விடுதிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று?” காந்தி ஆச்சரியப்பட்டுப் பதிலுக்குக் கேட்டார், “அதில் என்ன தவறு?” நண்பர் அதற்கு “நல்லது, கொஞ்ச நாள் போகட்டும், பின் உங்களுக்கே தெரிந்து விடும்.” என்றார்.
காந்தியும் பின்னாட்களில், தென் ஆஃப்ரிகாவில் இந்தியர்கள் பலவாறும் அவமானப் படுத்தப் படுவதைப் பற்றி அறிந்தார்.
அவர்தம் தோல் நிறம் காரணமாக, அவரது இந்தியத் தன்மை காரணமாக, அவரே – கன்னத்தில் அறையப்பட்டார், குத்தப்பட்டார், உதைக்கப்பட்டார், புகைவண்டியிலிருந்துத் தள்ளிவிடப்பட்டார். நடைபாதையிலிருந்து ஒதுக்கிவிடப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு, ஏன் வெள்ளையர்கள் ‘கருப்பர்களை’ வெறுக்கவும், கேவலமாக நடத்தவும் செய்தனர் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை; அவர் நினைத்தார், மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்தாமே, கிறித்துவம் அன்பைப் போதிப்பதுதாமே?
=-=-=-=
ஒரு நாள் காந்தி, தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக, ஒரு முடிதிருத்தகத்துக்குச் சென்றார். அங்கிருந்த வெள்ளைய நாவிதர் கேட்டார், “உங்களுக்கு என்ன வேண்டும்?”
காந்தி பதிலிருத்தார், “எனக்கு முடி திருத்திக் கொள்ள வேண்டும்.”
அந்த நாவிதர் சொன்னார், ”மன்னிக்கவும், நான் உங்கள் தலைமுடியைத் திருத்தம் செய்ய முடியாது. கரு நிறத்தவர்களுக்கு நான் முடி திருத்தினால், நான் என்னுடைய மற்ற வாடிக்கையாளர்களை இழந்து விடுவேன்,”
==-=-=
இந்த அவமானம், காந்தியின் உள்ளத்தை ஆழமாகத் தைத்தது. ஆனால் அவருக்கு, அவமானத்திலும், வலியிலும் உழல்வதிலோ அல்லது நாளிதழ்களுக்கு ’ஆசிரியருக்குக் கடிதங்கள்’ எழுதுவதிலேயோ சம்மதமில்லை.
காந்தி, அடிப்படையில், ’தன் கையே தனக்குதவி’ என்கிற மனப்பாட்டினராதலால், சுயசார்புடன் இருக்கவும், தன் வேலைகளை, விஷயங்களைத் தானே பார்த்துக் கொள்ளவும் முனைந்தார்.
ஆகவே மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பின் நேராக அவர் கடைக்குச் சென்று ஒரு நறுக்கி-மட்டாக்கியை (a pair of clippers) வாங்கியபின் தான், தன் வீட்டிற்குச் சென்றார். பின், அவர் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு, தன் முடியை மட்டாக்கலானார். அவருக்கு தன் முகத்தைச் சவரம் செய்து கொள்ள முடிந்தது – ஆனால், தன் தலைமுடி விஷயத்தில் கொஞ்சம் சிரமப் பட்டார், அது சுளுவான வேலை அல்லவே.
தவிரவும், அது ஒரு பாரிஸ்டருடைய வேலையும் அல்ல.
எப்படியோ அவர் ஒப்பேற்றிக் கொண்டாலும், அவர் தன்னுடைய தலையின் பின்புறத்தை, அவர் கொஞ்சம் சொதப்பி விட்டார். இருந்தாலும் தனக்கே உரித்தான பற்றற்ற, ஒன்றை நன்றாக யோசித்துக் செய்தால் பின் அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாத தன்மையினால் – மறுநாள், அப்படியே அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார்.
அவருடைய கோமாளித்தனமான தலைமுடி வெட்டிய பாங்கு, அவருடைய நண்பர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தது. ஒரு நண்பர் கேட்டார், “என்ன காந்தி, உங்கள் தலைமுடிக்கு என்ன ஆயிற்று? நேற்றிரவு ஏதாவது எலிகள் உங்கள் தலையைப் பதம் பார்த்து விட்டனவா?”
காந்தி நிறைமுனைப்பாகச் சொன்னார், “அப்படி இல்லை. அந்த வெள்ளைக்கார நாவிதர், ஒரு கருப்பனுடைய கருப்பான முடியை தொடுவதற்கு மறுத்தார். அதனால்தான் என்னவானாலும் சரி என்று நானே என் தலைமுடியைத் திருத்திக் கொண்டேன்.”
இப்படித்தான், அவருடைய இருபத்தி எட்டாம் வயதில் (1907), காந்தி தனக்குத்தானே முதல் முறையாக முடிவெட்டிக் கொண்டது. அதற்குப் பின் அவர் வாடிக்கையாக கத்தரிக்கோலையும், நறுக்கி-மட்டாக்கியையும் உபயோகிக்க ஆரம்பித்தார்.

1910 – தென் ஆஃப்ரிக தல்ஸ்தோய் பண்ணை – முன் வரிசையில் இடதுபுறம் காந்தியின் ஆப்த நண்பர் ஹெர்மன் காலென்பாக்ஹ். காந்தி அவ்வமயம் நான்கு வருடங்களாக தனக்குத் தானே தலைமுடி திருத்திக் கொண்டும், தன் துணிமணிகளைத் தானே துவைத்து, இஸ்திரி செய்து கொண்டும் – மேலும் மிகப்பல சமூக/பண்ணைசார் வேலைகள் செய்துகொண்டும், பத்திரிக்கையாசிரியராகவும், மிகவும் நேர்மையாக வக்கீல் தொழிலை நடத்தி ஒரு முன்னணி பாரிஸ்டராகவும் இருந்தார்…
அவருடைய ஆசிரமங்களில், வெளியிலிருந்து வந்து, நாவிதர்கள் ஷவரம் செய்தல், முடிவெட்டுதல் என்கிற பேச்சே இல்லை…
தொடர்ச்சி —>> காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 / 2)
21/05/2012 at 15:19
என்னத்தான் ஆங்கிலத்தில் நூல்கள் அழகாக அச்சிட்டு கிடைத்தாலும் நம் தாய்மொழியில் படிக்கும் சுகமே தனி. காந்தியடிகள் தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இஸ்ரேலில் மடியும் தருவாயிலிருந்த தங்கள் மொழியை இன்று எங்கும் எதிலும் தம் தாய் மொழியை பயன்படுத்துவது என்று தொடங்கி வளம் பெறச்செய்துவிட்டனர். ஆனால் நாம் வானொலி, தொலைக்காட்சிகளில் கட்டுகோப்புகளை குலைத்து முன்பு கடைபிடித்துவந்த நெறிமுறைகளை உடைத்து விட்டதில் பெருமிதம் கொள்ளுகிறோம். ஆங்கில கலப்பில்லாமல் ஒரு வாக்கியம் கூட பேசுவதில்லை. இந்த புண்ணியத்தை சில முற்போக்கு எழுத்தாளர்களும்? சம்பாதித்துக் கொண்டனர்……..