காந்தி சம்மட்டி துப்பாக்கி

04/06/2012

என்னடா இது ‘ஜாவர்’ சீதாராமன் நாவல்களைப் போல் (மின்னல் மழை மோகினி, பணம் பெண் பாசம், உடல் பொருள் ஆனந்தி…) சம்பந்தா சம்பந்தமில்லாமல் துணுக்குறவைக்கும் ஒரு தலைப்பு என்று எண்ணி அஞ்ச வேண்டாம்.

தைரியமாக, மேலே (அதாவது, கீழே) படியுங்கள்.

இவை, எனக்கு வந்திருந்த சில கேள்விகள் பற்றிய என் எதிர்வினைகளும், தன்னிலை விளக்கங்களும் தான்…

=-=-=-=

    10. காந்தியை பற்றி நிறைய படித்தேன்.என் அளவு படித்தவர்களை நான் இதுவரை சந்திக்கவே இல்லை என்றே ஆணவத்துடன் இருந்தேன்.ஆனால் உங்கள் கட்டுரை என் ஆணவத்துக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டது.அதுசரி காந்தியின் கொள்கைகளின் மீது உங்கள் நம்பிக்கை என்ன? இக்கால நடைமுறைக்கு சரிவருமா? …..சும்மா ஒரு இதுக்கு

அய்யா, நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், அனேகமாக உங்களைப் போலப் படித்திருக்க மாட்டேன் எனத்தான் நினைக்கிறேன்.

எனக்குத் தோன்றுகிறது – சிலர் – காந்தியைப் பற்றி ஒன்றுமே விஷய ஞானம் இல்லாதவர்கள் கூட அவ்வழியில் ஒழுகுபவர்கள் இருகிறார்கள் தானே? ஆனால், இதற்கு மாறாக, அவரைப் பற்றி நிறைய மெத்தப் ’படித்த’வர்கள் சிலர் – காந்திய சிந்தனைகளுடன், வாழ்க்கை முறைகளுடன் தொடர்பற்று வாழ்பவர்களும் இருக்கிறார்கள் தானே?

ஆக, படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் பெரும்பாலும் (நம் மக்களில் பெரும்பாலோரிடம்) இல்லை என்பது என் எண்ணம்; மேலும், கடின, எளிதில் மாற்றம் கொள்ளாத, தொடர்ந்து பரிசீலிக்கப் படாத நிலைப்பாடுகளின் பின்புலத்தில், வாழ்வை அதன் விரிவுகளை, மொண்ணையாக கருப்பு-வெளுப்பு எனப் பிரித்துப் பார்ப்பது உபயோகமானது அல்ல என்பதும் என் அபிப்ராயம்.

எப்படி யோசித்தாலும், என்னைவிட நிறைய, மெத்தப் படித்தவர்களும் பலபேர் இருக்கிறார்கள், அவர்களைச் சந்தித்துமிருக்கிறேன் – எனக்கு வாய்ப்பும், வசதிகளும், அனுபவங்களும் அப்படி அமைந்தன.

ஆகவே சம்மட்டி, அடி என்றெல்லாம் சிந்திக்க வேண்டா. நாமெல்லாம் நம்மளவில் காரியங்களைச் செவ்வனே செய்து கொண்டிருந்தால் அதுவே போதுமானதன்றோ?

=-=-=-=

நிற்க, ஒருகாலத்தில் வன்முறைதான், அழித்தொழிப்புதான் தீர்வு எனத் திடமாக நம்பியவன், மேலும் சில (நல்லவேளை, மிகக் குறைந்த) காலம் இயங்கியவன் நான்.

சிறிது யோசித்தால், இன்னமும் சில சமயங்களில் வன்முறை உணர்ச்சிகள், அவை சார்ந்த அலைபாயும் கொந்தளிப்புகள் இருக்கின்றன என்னிடம்.

… இரு மாதங்களுக்கு முன் என் பள்ளிச் சிறுமிகளைச் பாலியல் ரீதியாகச் சீண்ட வந்த, குடிகாரக் கேவல இளம்பொறுக்கிகளை நையப் புடைக்கத்தான் விரும்பினேன் – இதற்கு நடுவில் கூட இருந்தவர்கள், ஐயோ வம்பே வேணாம், சண்டை போடாதீங்க – ஒங்ளுக்கு கொழந்தகுட்டி இருக்குல்ல, இந்தக் குடிகார கும்பல் அருவா கொண்டாந்து வெட்டும், நாம் பேசாமல் கண்டுக்டாம போய்டலாம் – என்று கோழைத்தனத்தை விவேகமாகக் கருதும் நபும்சகர்கள் வேறு; சிறுமிகளும், ஸார் நீங்க அவ்னுங்கள அட்சீங்கன்னா வம்பாய்டும், எங்ளை அவ்னுங்க இன்னும் தொந்த்ரவ் பண்வாங்க, அசிங்கமாய்டும் – என, ஒரே குழப்பம். யோசிக்கவும் நேரமே இல்லை.

ஆக, என்னவானாலும் சரி, இந்தப் பொறுக்கித்தனத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது என நான் கையை ஓங்கினேன் கூட, ஒரு காலத்தில் வெகுசிறிது தற்காப்புப் பயிற்சிகள் செய்த ஞாபகம் கொடுத்த தன்னம்பிக்கையும் என் உடல்மீதான அசாத்திய நம்பிக்கையும் வேறு! அஹிம்சை – காந்தி – ஜீவகாருண்யம் – சுத்தசன்மார்க்கம் எல்லாம் அச்சமயம் என் நினவுப் பரப்பிலேயே இல்லை…

ஒரு ஐந்து வினாடிகள் கண்களை மூடி யோசித்த பின்னரும், மிகவும் வருந்தத்தக்க வகையில், மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின் தான் அந்த ஆவேசத்தை, ரௌத்திரத்தை, ரத்தக் கொதிப்பை அடக்கிக் கொள்ள முடிந்தது,

திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டேன் – இவர்கள் இளைஞர்கள் தானே, இவர்கள் அரசியல், சமூக, கிராமச் சூழல் இப்படித்தானே, எய்தவர்கள் இருக்க அம்பை நோவானேன் என்றெல்லாம் பல எண்ணங்கள். பின் அவர்களுடைய ‘தலைவ’னைப் பிடித்துத் தோளில் கை போட்டு, ’இங்கேர்ந்து இப்ப நகர்லன்னா, தம்பீங்களா, நடக்கறதே வேற” என்பது போல அடித்தொண்டையில் பல்லைக் கடித்துச் சொல்லி வெளியே அனுப்பி, பயந்துபோன சிறுமிகளையும் பாதுகாப்புடன் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி… ”ஸார், எதுக்கும் போலீஸ் கிட்ட ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்ருங்க”ங்களை, எல்லாம் நான் பாத்துக்றேன் என்று சொல்லி அவர்களையும் வீட்டிற்கு அனுப்பி…. உஸ், அப்பாடா

அடுத்த நாள் காலை, அவதிப் பட்ட அந்த இரு சிறுமிகளின் தந்தையர்கள், போதையோடு என்னிடம் வந்து முறையீடு, கோபப்பாய்ச்சல்:

“அவ்னுங்க ஆர்னு சொல்ங்க, ஒளிச்சுட்றோம்!”

“அய்யா, எதற்கு, அவங்க தான் போய்ட்டாங்களே, சின்னப் பசங்க, அவங்களை விட்ருங்க…”

“யோவ், இப்ப அவ்னுங்க ஆர்னு சொல்லப் போறியா, இல்ல…”

“எல்லாம் நம் கிராமப் பசங்க தான். ஏன் நீங்க ஒங்க பொண்ணுங்க கிட்டயே கேக்கலாமே?”

“அதுங்க சின்னப் பொண்க, பயந்த்ருச்சுங்க, நீ சொல்லு”

எனக்கோ நேரமாகிக் கொண்டிருந்தது, அந்தக் குடிகேடர்கள் விடுவதாக இல்லை; ஆக, நான் சொன்னேன், “சரி,  நேரமாகுது எனக்கு, அந்தப் பசங்க <பெயர்கள்>”

”ஓவ்வோ, பெர்ய்ய இட்த்துப் பசங்க, ஆனா நம்ம மச்சான் மாமேன் முறைதான். நம்ம வகையறா தான்! பர்வால்ல சார், அவனுங்ளை விட்றோம் – ங்கோத்தா அவ்னுங்க மட்டும் வேற ஆராவ்தா இர்ந்தா நடக்றதே வேற… ங்கொம்மாள…”

சென்றார்கள்.

சில நொடிகளில், திரும்பி வந்து, “வேற ஏதாவ்து தக்றார்னா சொல்லுங்க, நாங்க பாத்துக்றோம்!”

“ஆஹா, அதுக்கென்ன, சொல்லியனுப்றேன்.”

வீரர்கள் இருவரும் தள்ளாடிக் கொண்டு, புறமுதுகிட்டுச் சென்றனர்.

உண்மையைச் சொன்னால், எனக்கு அந்தக் கணமே அவர்கள் கழுத்தைச் சீவ வேண்டும் என்கிற எண்ணம் தான் மிகுந்தது.

… ஆனாலும், என்ன இருந்தாலும் அவர்கள் தான் என் 10ஆம் வகுப்புச் சிறுமிகளின் தந்தையர்கள், நான் வேலை செய்வது இக்கிராமக் குழந்தைகளுக்காக – ஆக ஏன் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக இப்படிக் கோபப்படுகிறேன் என நினைத்துக் கொண்டேன்… இப்படித்தான் நம் மக்கள், நமது பண்பாடு என்பது எனக்குத் தெரியாததா என்ன? வேறு எதனை  நான் எதிர்பார்த்திருக்க  முடியும்…

=-=-=-=

இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை, நம் மக்களில் பெரும்பாலோருக்கு முதுகெலும்பில்லை என்பது தான். மற்ற பிரச்சினைகளான ஏழ்மை, குடி, பற்றாக்குறைகள், திரைப்படம், ரசிகர் மன்றங்கள், இலக்கியம், வைரமுத்து, கருணாநிதிகள், மா-லேக்கள் போன்ற எண்ணிறந்த கொடுமையான விஷயங்கள் கூட ஒரு பொருட்டே இல்லை எனத் தோன்றுகிறது…

… எது எப்படியோ, மூன்று இரவுகள் போலத் தூக்கமும் கெட்டது, என்னைப் பற்றி, என் வன்முறை எண்ணங்கள், செயல்கள் பற்றி வெட்கித்து… ஹ்ம்ம்…

நான் செல்ல வேண்டிய தூரம் மிக, மிக அதிகம், நண்பரே!

ஆனால் திடமாக என்னால் சொல்ல முடியும் – இந்த மனிதர் காந்தி காட்டும் வழிதான் மனித நேயம் மிக்கது. அறவுணர்ச்சியும், தைரியமும் மிக்கது என்பதில் எனக்கு ஐயமே இல்லை. மேலும், அது எக்காலத்துக்கும் ஏற்றது என்பதிலும் எனக்குச் சந்தேகமே இல்லை – ஏனெனில் அது பேசுவதன் அடிப்படை – தோழமை, அன்பு, அறம் பற்றி.

நண்பரே, ‘சும்மா ஒரு இதுக்கு’ நான் இதனைச் சொல்லவில்லை.

பின் குறிப்பு: நீங்கள் ஜெயமோகன் அவர்களின் இணையத்தளத்தைப் தொடர்ந்து படிக்க வேண்டும். (இவர் இணைய தளத்தில் வந்துள்ள பல காந்தி சம்பந்தப் பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பட்டு இன்றைய காந்தி என்கிற புத்தகமாக வந்திருக்கிறது கூட).

காந்தி இன்று தளமும் படித்தால் நலம் – இது சில ஆர்வமிக்க இளைஞர்களால் நடத்தப் படும், ஒரு தொகுப்புத் தளம்; பலர் இதில் மொழி பெயர்ப்புகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து பதித்து வருகிறார்கள்.

ஆனால், நீங்கள்  ஏற்கனவே இவைகளைப் படித்திருப்பீர்கள், படித்துக் கொண்டிருப்பீர்கள் எனத்தான் நினைக்கிறேன்.

=-=-=-=

    11. காந்தி பற்றிய பல நுண்ணிய செய்திகளை சிறப்பாக கொடுத்ததற்கு மிக்க நன்றி.ஒருமுறை திருடு போன சமயம் காந்தி துப்பாக்கி வைத்துக்கொள்ள சொன்னதாக படித்த நினைவு.உண்மையா? பலரிடம் கேட்டேன் அப்படி ஒரு சம்பவம் கிடையவே கிடையாது என்கின்றனர் ஆனால் எனக்கோ நன்கு படித்த நியாபகம். உதவமுடியுமா?

நான் மொழி’பெயர்ப்பு’ தான் செய்திருக்கிறேன் என்றாலும், உங்கள் கருத்துக்கு நன்றி.

ஆனால் உங்களுக்கு நான் உதவ முடியாது எனத்தான் எண்ணம்.

ஏனெனில், நான் படித்தவரை, அவருடன் பழகியவர்கள் எனக்குச் சொன்னது வரை, நான் அறிந்து தெரிந்துகொண்டது வரை அவர் இப்படிச் செய்திருக்க முகாந்திரமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தென் ஆஃப்ரிகாவில் ஒரு சமயம், இந்திய வம்சாவழியினர் வெள்ளைக் காரர்களின் படையில், அவர்களுக்கு இணையாகச் சேர்வது, பணியாற்றுவது தொடர்பாகச் சில துப்பாக்கி சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் பேசியிருக்கிறார் தான்; ஆனால், அதிலும் கூட அவர் மக்களிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ளச் சொல்லவில்லை. (இதனைப் பற்றி, முடிந்தால், பின்னர் எழுதுகிறேன்)

திருடுகள் உட்பட்ட சிறு குற்றங்களின் மீதான காந்தியின் அணுகுமுறையே வேறு என்பதை, அவரைச் சிறிதளவு அறிந்து கொள்ள முடிந்தால் தெரியவருமென என் எண்ணம்.

அவரது பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி, எண்ணத்திலும் சரி – வன்முறை என்கிற ஊரிலேயே அவர் பிறக்கவில்லை என்பது என் அபிப்ராயம்.

=-=-=-=

(அப்பாடா, இந்தக் கடிதப்-பதில்கள் பதிவுகள், தற்போதைக்கு முடிந்தன. மின்னஞ்சல்கள் அனுப்பி, பின்னூட்டங்களித்து –  நன்றி தெரிவித்து, அறிவுரையளித்து, (பெரும்பாலும்) திட்டியவர்களுக்கு நன்றி)

காந்தியாயணம்…

2 Responses to “காந்தி சம்மட்டி துப்பாக்கி”


 1. Sir

  After Ooty workshop, came to your site through GandhiToday.in – Was greatly surprised by your writing and your Gandhian way of life. (But still its puzzling as why you are so angry against Kalaignar – But I will not blame it as meaningless – have seen the same feelings in my father)

  I have got almost all articles in Indraiya Gandhi in my wiki (https://venkatramanan.wiki.zoho.com/_attach/1.0/Gandhi_JeMo.zip), FYI – Not as a piracy act – just for online reference.

  And eager to meet you soon…

  Regards
  Venkatramanan (Chennai)

 2. ramasami Says:

  அன்புள்ள வெங்கட்ரமணன், உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  எனக்குப் பல பிரமைகள் உண்டு. ஆனால் நல்லவேளை, ’நான் ஒரு காந்தியவாதி’ என்பது அவற்றில் ஒன்றில்லை.

  நான் ஒரு காந்தியவாதி அல்லன். அப்படி இருப்பதற்கு வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும்.

  நான் ஏன் கருணாநிதிக்கு எதிராக உள்ளேன் என்பதை இந்த இடுகையில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்: https://othisaivu.wordpress.com/2011/05/10/post-28/ – ஏன் எழுதுகிறேன்…

  ராமசாமி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s