சுழன்றும் கதைப் பின்னது அண்டம்…

11/06/2012

…சுழன்றும் கதைப் பின்னது அண்டம் அதனால்
புனையும் கலையே தலை

=-=-=-=-=

நான் கடந்த காலங்களில் இப்படி இருக்கவில்லை.  ஆனால், என்னுடைய இப்போதுள்ள இந்த வெட்கக் கேடான நிலைமையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.

நான், திரையரங்கு சென்று திரைப்படம் என்று ஒன்று பார்த்து சுமார் 18 ஆண்டுகளாகி விட்டன. இருப்பினும், அவ்வப்போது முடிந்தால் ஓரிருமாதத்துக்கு ஒருமுறை என்பது போல, மடிக்கணினியில்  நல்ல திரைப்படம் என்று பார்ப்பது உண்டு என ஒப்புக் கொள்கிறேன்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

வீட்டிலும் கடந்த சுமார் 20 வருடங்களாகத் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை. எப்பொழுதாவது சொந்தக்காரர்கள் வீட்டிற்குப் போனால் (வருடத்துக்கு ஒரிரு மணி நேரம் என்கிற விகிதத்தில்) வேறு வழியில்லாமல் அந்த ஆபாசக் கிடங்காக மாறியிருப்பதைப் பார்ப்பதுண்டு. ஆக, தொலைக்காட்சி தொடர்பான விஷயங்கள், மிகவும் தொலைவுக் காட்சிகளே எனக்கு.

மாதத்தில் ஒருமுறை தினசரிகளைக் கும்பலாக, குவியலாகச், சும்மா பார்ப்பதற்கே மூச்சு முட்டும் எனக்கு. அவற்றின் அபத்தமும், எதிர்மறை விஷயங்களை மட்டும் ஊதிப் பெரிதாக்கும் தன்மையும், மலினமும் என்னைப் பாடுபடுத்தும்.

ஒரு காலத்தில் நாளுக்கு குறைந்தபட்சம் இரண்டு என்றிருந்த விகிதத்திலிருந்து மெதுவாகச் சரிந்து, தற்போது வாரத்துக்கு இரண்டு மூன்று புது/பழைய புத்தகங்கள் படித்தால் அதுவே அதிகம். இதற்கு மேல், அவற்றில் சிலவற்றைப் பற்றிச் சுற்றியிருக்கும், நான் மதிக்கும் சில இளைஞர்களுடன், நண்பர்களுடன் அளவளாவ முடிந்தால் அது என் பாக்கியம். ஆனால் பின்புலத்தில் இசை தொடர்ந்து கொண்டே இருப்பது என் பழவினைப் பயன்.

வாரத்திற்கு – இணையத்தில் 2-3 மணி நேரங்கள் – கணினியுடன் 5-6 மணி நேரங்களே தற்போது என்னால் முடிந்த விஷயங்கள்.

… ஆனால், நான் எடுத்துக் கொண்டிருக்கும், செய்து முடிக்கப் பட வேண்டிய வேலைகள் அப்படி. யோசித்தால், ராஜாஜி அவர்கள் எழுதியது போல ’குறையொன்று மில்லை‘தான்!

=-=-=-=

ஆக, ஆங்கிலத்தில் ‘ignorance is bliss’  எனச் சொல்வதைப் போல, என் அறியாமையே, தற்காலத்தில் எனக்குக் கழிபேருவகையைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது எனக் கூடச் சொல்லலாம்.

இப்படி நானுண்டு என் வேலையற்றவேலையுண்டு, என் அறியாமையுண்டு என இருந்த ஆளை உசுப்பி விட்டவர் இந்த மகாமகோ ’கலைஞர்’ கருணாநிதி அவர்கள். அவரால் வந்த வினை தான் இந்த ஒத்திசைவு.

இதன் மூலமாகச் சில தொடர்புகள் ஏற்பட்டு, பின் ’விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்’ சார்பில் ஊட்டியில் நடத்தப் பட்ட ஒரு இலக்கிய அமர்வுக்கு விண்ணப்பித்துச் சென்றிருந்தேன், அண்மையில். (அமர்வுக்குச் செல்வதற்கு முன், கம்பராமாயணத்திலிருந்து சில பகுதிகள் படிக்கப் பட்டு உரையாடப்படப் போவதாக மட்டுமே அறிந்தேன் – ஆனால் கு அழகிரிசாமி, தி.ஜா, லாசரா பற்றிய குறிப்புகளும் அவர்கள் எழுத்து பற்றிய விமர்சனங்களும் கூட அங்கு இடம் பெற்றன)

=-=-=-=

நான் கம்பராமாயணத்தை முழுவதும் படித்தவனல்ல. விட்டு விட்டு, பல வருடங்களாக முயன்று இதுவரை அதனை 70% படித்திருந்தால் அது அதிகம். அதில் கூட, அதன் செறிவை, கருத்தாக்கங்களை 10% புரிந்து கொண்டிருந்தாலே அது மிகை.

… கம்பனைத் தனியாக, விட்டில் பூச்சிகளுடன் விளக்கொளிக்காகப் போட்டியிட்டு இரவு வேளைகளில், மிக மெதுவாக, இரண்டு-மூன்று உரைகளுடன் படிப்பது என்பது ஒரு விதமான அனுபவம்; ஆனால், அதனைப் படித்துச் சொக்கிய பலருடன் அதன் அழகினைப் பருகுவது, அவர்களது கோணங்களை – எண்ணங்களைத் தொகுத்துக் கொண்டு இன்பமுறுவது என்பது இன்னொரு அனுபவம். இந்த இரண்டாம் அனுபவத்துக்காகத்தான் நான் அங்கு செல்ல விழைந்தேன்.

குழந்தைகள், வேலைகள், திட்டங்கள், பழுதுபார்த்தல்கள் (யாருக்குத்தான் இவை இல்லை!) மிகப்பல இருந்தாலும், என் துணைவி கொடுத்த ‘கவலைப் படாம, சந்தோஷமா போய்ட்டு வா. உனக்கு இது நல்லது பண்ணும்’ அறிவுரையால் ‘எனக்கு ஆணாதிக்க மனப்பான்மையில்லை’ என தனக்குத்தானே பொய்யும் சொல்லிக் கொண்டு நான் நியாயமாகச் சுமக்க வேண்டிய 50% குடும்ப ‘பாரத்தைத்’ கைகழுவிவிட்டு,  ஆக, எந்தவொரு சராசரி இலக்கிய விரும்பி ஆணையும் போல, நானும் என் இலக்கியவேட்கையைத் தணித்துக் கொள்ள ஊட்டிக்குப் புறப்பட்டேன்!

இந்த அழகில், ஒரு வாரம் முன்னர்தான் சமையல் செய்யும்போது, நானும் அவளும் Alphabet vs the Goddess  புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதன் மிக எளிமைப் படுத்தப் பட்ட சாராம்சம் / கருத்து என்று நான் ஒன்றைச் சொல்லக் கூடுமானால் அது – எழுத்து, பேச்சு, மொழி வளர வளர எப்படி, முதலில் பெரிதும் மதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக கீழாக்கப்பட்டாள் என்பது.

=-=-=-=

ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன்.

அங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது.

… எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ பின்னணியில்) – உரையாடல்களை மறுபடியும், மறுபடியும் குறிக்கோள்களை நோக்கிக் குவியச் செய்வதன் முக்கியம், எப்படி கருத்துத் தெரிவிக்க விழைபவர்களை அனுமதிப்பது, கருத்துக்களை வெளிப்படுத்த கூச்சப் படுபவர்களை ஊக்கப் படுத்துவது, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது, எப்படி அனைத்து அமர்வுகளிலும் அனைவரையும் பங்கேற்க வைப்பது, எப்படித தேவையில்லாத கவைக்குதவாத விஷயங்களைத் தவிர்ப்பது, முடிந்தவரை நேரம் தவறாமை – எனப் பல விதங்களில், தளங்களில் பார்த்தாலும், இந்த அமர்வுகள் மிகவும் மெச்சத்தக்க விதத்திலேயே அமைந்தன.  (நல்ல வேளை, நான் என் திருவாயைக் கடைசி நாளன்றுதான் கொஞ்சம் திறந்தேன்; பாக்கியவான்கள் மன்னிக்கப்பட்டார்கள்)

குடும்பத்தைச் சுத்தமாக மறந்துவிட்டு – கேட்கக் கதைகளும், உண்ண  (தரமான, விதம்விதமான) உணவும், இருக்க இருப்பிடமும்,  நல்ல மனிதர்களும், போர்த்திக் கொள்ளக் கம்பளிகளும்(ஊட்டி!), சொக்க கம்பனும், மெத்தப்படித்த சபையும் இருந்தால் வேறென்ன வேண்டும்! ஊக்க போனஸ்: ஜெயமோகன் அவர்களின் உரையாடல்கள், இரவு வேளைகளில் ராமச்சந்திர ஷர்மா என்கிற உணர்ச்சிப்பிழம்பான இளைஞரின் அழகான குட்டிக்கச்சேரிகள், சுரேஷ் அவர்களின் அபூர்வமான விகடம். ஸ்ரீனிவாசன் அவர்களின் மெல்லிசைப் பாட்டு…

ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளரின் முயற்சியால், குவிமையத்தால், இப்படிப்பட்ட கூட்டங்கள் சாத்தியப் பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது, நம்பிக்கையையும் ஊட்டுகிறது. ஒரு சில விஷயங்களின் தொகுப்பினால் இது சாத்தியமாகியிருக்கிறது என்பதென் எண்ணம்: அவர் தொடர்ச்சியாக, அயர்வில்லாமல் தன் வாசகர்களுடன் (ஏன், தன்னுடனும் கூட) உரையாடலில் ஈடுபடுவது; சலிக்காமல், நுழைநிலை வாசகர்களையும் மதித்து வழி நடத்திச் செல்வது, ‘எனக்குத் தொழில் இலக்கியம் மட்டுமே என்றிராமல், பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளைக் கோர்த்து, அதனதன் கலாச்சாரப் பின்புலங்களில் அவற்றைப் புரிந்து கொண்டு, பகுத்து, தொகுத்து, விரிவுடனும் ஆழத்துடனும் தன் புரிதல்களைத் தொடர்ச்சியாக முன்னேற்றிக் கொண்டு – தன்னுடைய வாசகர்களின் தரத்தையும் தொடர்ந்து முன்னேற்றுவது. அவற்றைப் பற்றி மிக விரிவாகவும் கோர்வையாகவும் எழுதுவது. எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தன்னைக் கூர்மைப் படுத்திக் கொள்வது.

… ஒவ்வொரு நாளும், காலை மாலை வேளைகளில், ஜெயமோகன் அவர்களுடன் ஒரு பெரிய கும்பல், மலையிலிருந்து வழியும் மேகம்போல நடை பழகச் சென்றது.  அப்போது, தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல்களில், அவருடைய கொப்பளிக்கும் நகைச்சுவை உணர்ச்சியும், நையாண்டியும், கதை சொல்லும் திறனும், ஆணித்தரமாக வாதங்களை முன் வைக்கும் தன்மையும், பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக்கூடிய நேர்மையான/நடுநிலைமையான கருத்துகளும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகவே இருந்தன – மாதிரிக்கு, பேசப்பட்ட சில ‘தலைப்புகள்’ – மலையாள மாந்திரீகம், பெருமுதலாளியம், தொலைபேசி இணைப்பகம், காந்தியப் பொருளாதாரம், ஒருகாலத்தில் சீனக் கப்பற்தொழில் மேன்மை (1400களில் ‘சுங் ஹா’ (zheng he) வின்  மகத்தான முந்நூற்றுச்  சொச்சக் கப்பல்களில் பாதிக்கு மேல் எரிக்கப் பட்டமை), வீராணம், சோழர்கள், பெரும்பாலான வெள்ளைக்கார கீழைநாட்டு ஆராய்ச்சிகளின் அழகு, தொடரும் மிஷனரித் தொல்லைகள், சக எழுத்தாளர்கள், வினவு, குமாஸ்தாப் புரட்சியாளர்கள், அரசுப்பணியில் தோழர்கள், திரைப்படத் தொழிலில் சுதேசித் தொழில்நுட்பாளர்கள இல்லாமை, தகவல் தொழில் நுட்பம், முனைப்புள்ள இளைஞர்கள் ஏன் மற்ற தொழில்களுக்குச் செல்லக் கூடாது … கருத்துக்கள்,  கோட்பாடுகள், தரவுகள், ஹேஷ்யங்கள், புனைவுகள், உண்மைகள், கிண்டல்கள் இவற்றின் பலவிதமான கலவைகள்.

நான் நினைக்கிறேன் – கதைகளைத் தொய்வில்லாமல் சொல்வது, அவற்றை எழுதுவதைவிட மிக மிகக் கடினமானது. யோசித்தால், இம்மாதிரிக் கதை சொல்லிகள்தான் நம் அண்டவெளியை, ப்ரபஞ்சத்தைக் கட்டமைக்கிறார்கள் எனக்கூடத் தோன்றுகிறது. (இச்சமயம் எனக்கு, அந்த மகத்தான அறிவியல் கதைசொல்லியும், பன்முகம் கொண்டவரும்,  பெருமதிப்புக்குரிய ஆராய்ச்சியாளருமான ரிச்சர்ட் ஃபெய்ன்மன் அவர்கள் நினைவுக்கு வருகிறார்)

டாக்டர் தம்பான் அவர்களைப் பற்றி: இவர், ஸ்வாமி தன்மய் – அமர்வுகள் நடந்த ஊட்டி நாராயணகுருகுலத்தில் முழு நேரப் பணி செய்யும் துறவி இவர். வேலை, வேலை, வேலை என்று புன்முறுவலுடன் அலைந்து திரிந்து ஏதாவது செய்து கொண்டே இருந்தார். எனக்குக் கொஞ்சம் குற்றவுணர்ச்சியே வந்து விட்டது – நான் தி, ஜானகிராமனின் ’மோகமுள்’ பற்றிய எண்ணங்களிலும அவர்தம் மருமகனும் என் தோழனுமாகிய நரேந்த்ரனாத் நினைவுகளிலும் ஆழ்ந்து கொண்டிருந்த போது, ஸ்வாமி, புன்முறுவலுடன் எங்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்! (இம்மாதிரி மனிதர்களால்தான் உலகம், உலகம் என்ன, அண்டப் பெருவெளியேநடக்கிறது, தொடர்கிறது என நினைக்கிறேன்…)

போதாதற்கு, இவர் என்னிடம் Alphabet vs the Goddess புத்தகத்தைக் காண்பித்து இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்டு என்னுடைய குற்றவுணர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்தார், என்பது வேறு விஷயம்…

=-=-=-=

… புதிய அறிமுகங்கள், சில சமயங்களில் குழம்பியும், சில சமயங்களில் வெள்ளந்தியாகவும் பின்புல உழைப்பில்லாமல் கேள்விகள் பல கேட்டு, எண்ணமுடிவுகளை-கருத்துக்களை மட்டும் (சில சமயம்) கற்பித்துக் கொள்ளும்-விழையும் சிலர், நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஜொலிக்கப்போகும்  இளைஞர்கள் குழாம், பல்வேறு தொழில்களில் இருந்தாலும் இலக்கிய ஆர்வத்தால் ஒன்று சேர்ந்த தேர்ந்த அமைதியான வாசகர்கள், ஆழமான சிந்தனைக் கீற்றுகள் – எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்காலம், நம் இளைஞர்கள் பற்றிய புதிய நம்பிக்கைகள்…

எனக்கு மிகவும் உவப்பான, பிடிக்கும் சில கவிதைகளை எழுதியுள்ள இந்த ம்யூரியல் ருகெய்ஸர் (1913-1980) என்கிற கவிதாயினி ஒரு கவிதையில் எழுதினார். “இந்த அண்டவெளி அணுக்களால் ஆக்கப்பட்டதல்ல – அது கதைகளால் கட்டப் பட்டது.”

ஏதேதோ யோசனைகளுடன், குவிந்து கிடக்கும் வேலைகளை நினைத்து மிரண்டு கொண்டு, மூன்று நாட்களுக்குப் பின், என் வீட்டிற்குச் சென்றால், அங்கு என்னை ஹோஹோவென சிரித்துக் கொண்டு வரவேற்றது அமரேஷ் தேஷ்பாண்டே – எங்கள் நண்பன். அதி புத்திசாலி. ப்ரிட்ஜ் என்கிற அழகான சீட்டுக்கட்டு விளையாட்டில் நிபுணன். கணித ஆசிரியன், கொஞ்சம் கிறுக்கனும் கூட..

அவன் கேட்டான், “யோ, ஊட்டிக்குப் போயிருந்தியாமே? வாட் ஈஸ் த ஸ்டோரி?”

ஆம். The Universe is made of stories, not of atoms.

ம்யூரியல் ருகெய்ஸர்

தொடர்பில்லாத சில பதிவுகள்:

 

6 Responses to “சுழன்றும் கதைப் பின்னது அண்டம்…”

 1. Sakthivelu K Says:

  தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத இல்லம். 20 ஆண்டுகளாக தொலைக்காட்சியை அதிகம் நேசிக்காதவர். தொலைக்காட்சியை பார்ப்பதற்காக தன்பணிகளை புறக்கணிக்காதவர். எல்லாவற்றிற்கும் மேலாக டி. வியை (தன் கணவருக்காக?) அல்லது அதன் தொடர்களை பார்க்காத இல்லத்தரசி. இவையெல்லாம் ஆச்சர்யம்தருபவை. ஆணாதிக்கம் இந்த ச் சொற்களின் தாத்பர்யம் என் சிற்றறிவிற்குவிளங்காதிருக்கிறது. தங்கள்கட்டுரையில் சில நெருடல்கள், புரிந்துகொள்ள எத்தணிக்கிறேன்.


 2. மிகவும் சிறப்பாக, எளிமையாக எழுதியுள்ளீர்கள், பொருத்தமான கார்ட்டூனையும் பொருத்தியுள்ளீர்கள்.
  வாழ்த்துகள்!,


 3. அன்புள்ள ராமசாமி அவர்களுக்கு, ஊட்டியில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதிகம் இணைந்து உரையாட முடியாததில் வருத்தம்.. அடுத்த முறை சந்திக்கும் போது கட்டாயம் நிறையப் பேசுவோம்.

  அந்த மூன்று நாள் அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.

  BTW, போன வருடம் என்னையும் Albhabet vs the Goddess புத்தகத்தைப் படிக்குமாறு சுவாமி தன்மயா பரிந்துரைத்தார். நீங்களும் சொல்கிறீர்கள். வாசித்து, சிந்திக்க வேண்டிய ஒரு புத்தகம் இது என்று தெரிகிறது. கட்டாயம் படிக்கிறேன்.


 4. […] அதனைப் பற்றி எழுதிய நீளமான பதிவு: சுழன்றும் கதைப் பின்னது அண்டம்… […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s