தாய்மொளி செம்மொளி தமில் வால்க, வாள்க! இந்தி ஒளிக!!

17/06/2012

கேலிச்சித்திரத்திற்கு எதிர்ப்பு = மயிர்க்கூச்செறிதல் + தாய்மொளி தமில் வாள்க + சும்மனாச்சிக்கும் கோவம் + …

=-=-=-=

தமிழர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் அறைகூவுகிறார்கள்: “தமிழர்களின் மனதினைப் புண்படுத்தும் வகையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்!”

எனக்கு இந்த கேலிச் சித்திரத்தில் என்ன அவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியவே இல்லை.

திரா விட ‘இயக்கங்களில்’ ஐக்கியமாகி இருக்கும் பெரும்பாலான உணர்ச்சி (மட்டும்) ததும்பும் இளைஞர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளகத்தானே இருந்திருக்கிறார்கள்? இருக்கிறார்கள்? இந்த, எதற்கெடுத்தாலும் கல்லை வீசும் ’கல்வி,’ நாம் நம் திரா விட இயக்கங்கள், நம் வெள்ளந்தித் தமிழ் இளைஞர்களுக்கு கற்பித்தது தானே?
மேலும் முக்கியமாக “To top it all, he does not even know his TAMIL!” என ஒரு வாக்கியம் கூடச் சேர்த்திருக்கலாமே! அது இப்போதும் உண்மைதானே!!

இதனைப் பற்றிக் குய்யொ முறையோ என்று ஒப்பாரியிடும் விசித்திரப் பிராணிகளைப் (இவர்கள் பலர் முழுநேர அரசியல் வாதிகள் – வீர்மணி, வைகோ போல; மிகப் பலர், பல வகையான உதிரிகள், கருணாநிதி போல) பற்றி, அவர்களுடைய ‘இன, மொழி’ பிரமைகளுக்கு மருந்து வைத்துக் கொள்ள இந்த மொழிப் ’பற்று’ உபயோகமாக இருக்கிறது என நினைக்கிறேன். இப்படிப் பாவனை காட்ட வேண்டிய அரசியல் அவசியம் அவர்களுக்கு இருக்கும் நிலையை நினைத்து பரிதாபப் படுகிறேன்.

ஆனால், இவர்களை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதே இல்லை – இவர்களில் பெரும்பாலோர் (வைகோ தவிர) நம் தமிழுக்கு, தமிழ் மக்களுக்கு என்ன ‘முடி’ செய்துள்ளனர் என சிறிது யோசித்தாலே இவர்களது வேஷங்கள் வெளுத்து விடும்.

இருப்பினும் நான், வைகோ, ஜெயலலிதா போன்றவர்களை, அவர்களின் உளவியல் ரீதியான ஊற்றுக்கண்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

ஆர் கே லக்‌ஷ்மண் அவர்களின் ஏறத்தாழ 50 வருடத்துக்கு முந்தைய கேலிச்சித்திரத்தை, சிறிதளவு (!) மாற்றியிருக்கிறேன்… நாம் நம் இளைஞர்களுக்கு, தமிழையாவது உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா?

ஆனால் மற்றவர்களை,  நமது தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான பொது மக்களை அப்படிப் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாகவே, சொந்தச் சிந்தனையோ, செயல் பாடோ இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதென் எண்ணம். இது தவறாகக் கூட இருக்கலாம்…

 =-=-=-=

சென்னைக்கு உறவினர் ஒருவரின்  ‘அறுபதாண்டு நிறைவு’ விழாவுக்கு வந்திருக்கிறேன்.  பல வருடங்கள் இம்மாதிரி, வெட்டிவம்புக் கூட்டமாக மாறியிருக்கும் இந்த கவைக்குதவாத விழாக்களுக்கே போகாமலிருந்த நான், வேண்டாவெறுப்பாகத்தான் இதற்கு வந்தேன்.

ஆனால் சலிப்பாக இருக்கும் என நினைத்ததற்கு மாறாக, அது நன்றாகவே இருக்கிறது… கூடியிருக்கும் இளைஞர்களுடன் பேச்சு, சிரிப்பு;  வேலைவாய்ப்புகள், அறிவியல், எதிர்காலம், தொழில் முனைவுகள், சாத்தியங்கள் பற்றிய ’வாய் வலிக்கும் வரை’ அளவளாவல்கள், இன்னபிற…

… இப்படியாகத்தானே சீர்காழியிலிருந்து வந்திருந்த ஒரு பெரியவர் எங்கள் கும்பல் அருகில் வந்தார்!  நான் அவருடனும் சிறிது பேசிக் கொண்டிருந்தேன் – தானும் ஒரு ‘மொழிப்போர் தியாகி’ என்று சிறிது வெட்கத்துடன் அவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். மதிமுக-வின் வைகோ, போரூரில் ‘கார்ட்டூன்’ எதிர்ப்பு மாநாடு நடத்துகிறார் – என்ன தைர்யம் இந்த வடக்கத்தியர்களுக்கு, இப்பவும் அவனுங்களுக்கு, தமிழனக் கண்டா எளக்காரந்தான் – சதி இல்ல பண்றாங்க என்றார்… அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை,,,

அய்யா என்ன சொல்ல வருகிறீர்கள்?

மத்தியரசின் பன்னண்டாம் வகுப்பு அரசியல் பத்திய புக்கில் ஒரு கார்ட்டூன் வந்திருக்கே!

அய்யா,  நீங்கள் அந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? சரியாத் தெரியுமா?

இல்ல, ஆனா நம் தலைவர்கள் சொல்வதெல்லாம் பொய்யாவா இருக்கும்ற்ங்க?

அப்படிச் சொல்லலே, நீங்கள் வடநாட்டான் சதின்னு சொல்றீங்க இல்லையா, அப்போ அந்த புத்தகத்தைப் படிச்சீங்களா?

நான் ஏன் அந்தப் புத்தகத்தைப் படிக்கணும்? அந்த கார்ட்டூனைத்தான் பாத்துருக்கேன்.

அப்போ எப்படி அதெ மட்டும் பார்த்துட்டு, ஓண்ணுமே புரிஞ்சுக்காம சதின்னெல்லாம் பேச முடியும்? நான் உங்களோட குண்டிப் பக்கம் மட்டும் பாத்துட்டு, உங்களுக்கு முன் பக்கம் ஒண்ணுமே இல்லேன்னு சொல்ல முடியுமா?

நீங்க விதண்டாவாதம் பண்றிங்க.

அய்யா, நான் அந்தப் புத்தகத்தை உபயோகித்து என் மாணவர்களோடு உருப்படியான உரையாடல்களெல்லாம் நடத்தியிருக்கேன். ஒரேஒரு படத்தை வச்சு, குப்பைத்தனமான அரசியலா இதனை மாத்தறது தப்பில்லையா? நம்ம தமிழ் நாட்டு பாடப் புத்தக பவிஷெல்லாம் பாத்திருக்கீங்களா?

என்னவோ டீச்சர்னு நெனச்சு பேசவந்தேம் பாருங்க. என்ன ஜோட்டால அடிச்சுக்கணும். நீங்க ஒங்களோட ஆரியசார்பு புத்தியை காமிச்சுட்டீங்க.

அய்யா, நான் ஆரியனுமல்ல திராவிடனுமல்ல ஏன், எனக்கு புத்தி கூட இல்ல. ஏன் அய்யா ஆவேசப் பட்றீங்க??

(அவர் கோபத்துடன் எழுந்து போயே விட்டார்)

=-=-=-=

இப்போது அதே புத்தகத்திலிருந்து ஒருசில (ஒருசில தான்!) பகுதிகளைப் பார்க்கலாம்…

இந்தப் புத்தகத்தின் ‘இப்புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு கடிதம்’ என்கிற பகுதியில் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர் – அதன் குறிக்கோள்கள், எழுதியவையைப் பலமுறை திருத்தியமை, பண்டிதர்களின் மட்டுறுத்தல்கள், இன்ன பிற – ஆனால் நமக்கெல்லாம் ஏது நேரம், இவற்றைப் படிப்பதற்கு!

ஒரு அடிப்படை நடுநிலைமையுடன் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருப்பதால், அது ஜின்னாவுடைய, அவர் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியையும கொடுத்திருக்கிறது அல்லவா?

எதாவது ஒரு பாகிஸ்தானிய அரசு பதிப்பித்த புத்தகமாவது,இப்படி ஒரு நடு நிலைமையுடன் இருக்கிறதா?

இது, அதே புத்தகத்தில், அதே அத்தியாயத்தில், ஈவெரா பெரியாரைப் பற்றிய ஒரு குறிப்பு – இதனையும் எடுத்துவிட வேண்டுமா? இதனைத் தவிர அழகான ஒரு, தமிழக அரசியல் கட்சிகளின் அறிமுக வரலாறு (மதிமுக, தேமுதிக, பாமக வரை) கொடுக்கப் பட்டுள்ளது, அதனையும் தூக்கிப் போட்டு விடலாமா?

ஜம்மு-காஷ்மீர் பற்றிய இந்தக் கிண்டல், நம்மை யோசிக்க வைக்கும் சிந்தனை – இது எப்படி??

காஷ்மீரத்து ஷேக் அப்துல்லா அவர்களை நேருவின் அரசாங்கம், சிறையில் பல வருடங்களுக்கு வைத்திருந்தது – இவர்களிருவரும் அடிப்படையில் நண்பர்களாக இருந்த போதிலும்! இச்செய்தியின் பின்புலத்தில் இந்தப் படச் செய்தி, அதே புத்தகத்தில், அதே அத்தியாயத்தில்,. இது எப்படி?

காஷ்மீரத்துப் பிரச்சினை பற்றி இன்னொரு படம் – இது நடு நிலைமை இல்லையென்றால், வேறெது நடு நிலைமை? (இதுவும் அதே புத்தகத்தில், அதே அத்தியாயத்தில்!,)

… இவையெல்லாம் ஒரு மாதிரிக்கு, ஒருசில எடுத்துக் காட்டுக்கள் மட்டுமே!

=-=-=-=

ஆக,  நமக்காக, சில கேள்விகள், எண்ணங்கள்:

 1. இப்படிக் உணர்ச்சி வசப்பட்டுக் கூக்குரலிடும் நபர்களில் எவ்வளவு பேர் இந்தப் புத்தத்தை  (அல்லது எந்தப் புத்தகத்தையுமே) படித்திருப்பர்?
 2. ‘திரா விட’ இயக்கம் பற்றிய விவரங்களையும் (வரலாற்றில் அதன் இடம் பற்றி) இந்தப் புத்தகம் கொடுப்பதை, இந்தியாவின் பிரச்னைகளை, அதன் அலசல்களை, பல்வேறு போக்குகளைக் கோடிட்டுக் காண்பித்து, மேற்கொண்டு கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களை சரியான பாதைகளில் செல்ல வைக்கும் அறிமுகப் புத்தகம் இது என்பதை நம்மில் எவ்வளவு பேர் அறிவோம்?
 3. இந்தப் புத்தத்தில் உள்ள அடிப்படை நேர்மையையும், எதனையும் எவரையும் ஆராதிக்காத, கேள்வி கேட்கும் மனப்பான்மையையும் நம்மில் எவ்வளவு பேர் அறிய முயற்சியாவது செய்வோம்?.
 4. நம் கருணாநிதியின் கேவல வேலையால் உருவாக்கப் பட்ட, நம் தமிழகத்தின் சொந்த ஆபாசங்களான ‘சமச் சீரழிவுக் கல்வி’ புத்தங்களைப் படித்து, புத்தி பேதலித்தால் தான் இந்த  NCERT (தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) பதிப்பித்த புத்தகங்களின் அருமை தெரியவருமோ?
 5. கேலிப் படம் என்றால் என்ன? அதனை எப்படிப் புரிந்து கொள்வது? அதன் கால கட்டமென்ன? எங்கு, எதற்கு, யாரால், எந்தச் சூழலில் பதிப்பிக்கப் பட்டது என்பது பற்றியெல்லாம் எந்த அடிப்படைப் புரிதலாவது இருக்கிறதா நம்மிடம்?
 6. பாடப் புத்தகமென்றால் அது எப்படி எழுதப் படவேண்டும், எப்படி அது மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கு புரிதல்-அறிதல்களின் எல்லையற்ற வெளிகளைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், உந்த வேண்டும் என்பவைகளை நாம் அறிவோமா?

அனைத்துக்கும் மேலாக…

 1. நம் நகைச்சுவை உணர்ச்சி எங்கே போயிற்று? எதற்கெடுத்தாலும் குப்பைத் தனமாக உணர்ச்சி வசப் படல் என்றால், நாம் எல்லோருமே முக்காடு போட்டுக்கொண்டு தொட்டாற்சிணுங்கிகளைப் போல அலைய வேண்டியது தானா??

=-=-=-=

தொடர்புள்ள பதிவுகள்:

4 Responses to “தாய்மொளி செம்மொளி தமில் வால்க, வாள்க! இந்தி ஒளிக!!”

 1. Sakthivelu K Says:

  பாராதி சுட்டிக்காட்டிய தவறினை நாம் மிகத் தீவிரமாக செய்ய ஆரம்பித்திருக்கிறோம். மொழி விஷயத்தில். புத்தகத்தை படிக்க வலைத்தளத்தை குறிக்கலாமே. தங்கள் தைரியம் பாராட்டுக்குறியது. ஏனென்றால் சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒரு மாநில முதல்வரின் கார்டூனை விமரிசனம் செய்ய பெரிய வம்பில் மாட்டிக் கொண்டார்.


 2. க.சீ. சிவகுமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்களிலுருந்து தொடர்புடைய ஒரு சித்திரம்:

  தமிழைத் தழைத்தோங்கச் செய்வதற்காக இந்தியை தார்பூசி அழிக்கப் போனவர்களில் ஒருவர்தான் வீராசாமி. போஸ்ட் ஆபீஸின் மும்மொழிப் பலகையில் இந்தியை அழிக்க, முனை சவட்டப்பட்ட பனைப் பட்டையை எடுத்துக் கொண்டு கொள்கைவாதிகளுடன் கிளம்பினார். நின்ற இடத்திலிருந்து அழித்துவிடும் தோதில்தான் அஞ்சலக போர்டு இருந்தது.

  அவர் தாரைத் தோய்த்துக் கொண்டு பனம் பட்டையை ஆங்கில எழுத்தின்மேல் வைத்தார். அருகிலிருந்தவர்குரல்சொன்னது –

  “ஐயய்யோ! அது இங்லீசு. அத அழிச்சுடாதே. இன்னொண்ணு இருக்குது, பாரு… அதான் இந்தி!”

  அப்போதுதான் பிரக்ஞையுடன் எழுத்துக்களைக் கவனித்து ஒரு முடிவுக்கு வந்தார். ‘ஓ இங்லீசுக்காரனும் நம்மளயாட்டத்தே! அவன் எழுத்தை தனித்தனியா எழுதறான். இந்த இந்திக்காரன் தான் எல்லா எழுத்துக மேலயும் ஒரு கம்பியக் கட்டிவிட்டு ஜாயிண்ட் அடிச்சிருக்கான். எமகாதகனுக’ என்று முடிவு செய்து, ‘ஆதிமங்கலம் டாக்கர்’ என்றெழுதப்பட்ட இந்தியை அழுத்தமாக அழித்தார்.


 3. கேலிச் சித்திரத்தில் ராஜாஜி இடம்பெற்றது தவறான புரிதலுக்கு வழிவகுக்காதா?

  1965 ஜனவரி 19ந்தேதி திருச்சியில் நடைபெற்ற “இந்தி எதிர்ப்பு மாநாட்டில்” ராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் “கிழித்து அரபிக்கடலில் போட வேண்டும்” என்று முழங்கினார்….

  அவர் கூறியதாவது:
  “இந்தி ஆட்சி மொழி ஆகிற ஜனவரி 26ந்தேதி தி.மு.கழகத்துக்கு எப்படி துக்க நாளோ, அதுபோல் எனக்கும் துக்க நாள். சொல்லப்போனால், தி.மு.கழகத்தினரை விட எனக்கு 2 மடங்கு துக்கம் இருக்கிறது. இந்தி திணிக்கப்படுகிற 26ந்தேதியை மட்டும் தி.மு.கழகம் துக்க நாளாகக் கொண்டாடுகிறது.
  என்னைக் கேட்டால், இந்த ஆண்டு முழுவதும் துக்க நாள்தான். கறுப்புக்கொடி தேவையே இல்லை. ஜனவரி 26ந்தேதி காங்கிரஸ்காரர்கள் ஏற்றி வைக்கும் மூவர்ணக் கொடியே துக்கக் கொடி தான்.இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவு, இந்தியை ஆட்சி மொழி ஆக்கும்படி கூறுகிறது.
  அந்தச் சட்டத்தை தீயிட்டு கொளுத்துவதால், வெறும் காகிதம்தான் எரியும். எனவே அதை கடலில் எறியவேண்டும்.இந்த நல்ல காரியத்தை செய்ய அரசாங்கம் முன் வராது. எனவே, அந்த சட்டத்தை அமல் நடத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும்.
  விருப்பப்படி எல்லாம் சட்டத்தைத் திருத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்தித் திணிப்பு சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? காங்கிரஸ்காரர்களுக்கு, நாட்டை ஆளத்தகுதி இல்லை. எனவே, அவர்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும்.
  ஆங்கிலத்தை விரட்டி விட்டு இந்தியைத் திணிக்க நினைக்கிறார்கள். எல்லா மொழிக்காரர்களுக்கும் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை நீக்கினால் ஒருமைப் பாட்டுக்கு ஆபத்து.”
  http://goo.gl/0Wxyc

  With DMK declaring January 26, 1965, as a day of mourning, the stage was set for unprecedented turmoil in independent India. A moderate Rajagopalachari suggested Part XVII of the Constitution containing the section on the official language of the Union, “be heaved and thrown into the Arabian Sea”, while DMK announced its burning
  http://indiatoday.intoday.in/story/Tongue+tied/1/2692.html

 4. Aadhi Says:

  Buy Tamil Books Online: http://www.myangadi.com/


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s