தமிழகக் குடி மஹாத்மியம்

20/09/2012

நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள்.

ஒரு விஷயம் – நாங்கள் என்று யாரைச் சொல்கிறோம் என்றால் – எங்கள் மாவட்டமான விழுப்புரம் வாழ் மக்களைச் சொல்கிறோம். இருப்பினும் நாங்கள் சொல்ல வருவது, தமிழ் மொடாக்குடியினர் அனைவருக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்!

ஆம். நாங்கள் பாக்கியசாலிகள் மட்டுமல்ல – நாங்கள் பெருங்குடிகள் கூட.

இதற்காக மட்டுமே நாங்கள், 1971லேயே மதுவிலக்கைப் பூண்டோடு ஒழித்த, ‘அவன் நாடகமாடும் கலைஞனடா’ என்று கண்ணதாசன் அவர்களால் அன்றே புகழப்பட்ட, இன்னமும் நாடகத் துறைக்கு [உதாரணம்: அண்மையில் டெஸோ அமைப்பு புனரீமக்கிரியை], கண் துஞ்சாது அரும்பணியாற்றிவரும் கருணாநிதியார் அவர்களை, எவ்வளவு போற்றினாலும் தகும். அவர் போடாத வீதி, வீடு (அடிக்கறாங்க, அடிக்கறாய்ங்க, அய்யய்யோ!), கடற்கரை (காலைச்சிற்றுண்டிக்கும், மதியவுணவுக்கும் நடுவே மகத்தான உண்ணாவிரதம்), தண்டவாளம் (டால்மியாபுரம்), குண்டு (குடமுருட்டி) டெல்லி (அலையோஅலை என அலைந்தாவது சோனியாகாந்தியைப் பார்த்தே தீருவேன் என்கிற வைராக்கியம்) நாடகங்களும் உண்டா என்ன? அவர் நடிக்காத அரங்கமும் ஒன்று உண்டா?

அல்லது அவர் காட்டாத வீரம் (”மவுன அழுகை அழத்தானே முடியும்”), நகைச்சுவை (நெஞ்சுக்கு நீதி), சோகம் (தமிள் செம்மொளி மானாடு), ரௌத்திரம் (”டேய், தீக்குளிக்கலாம் வர்றியா?”), காமம் (மனைவி, துணைவி, தோழி இன்னபிற  நக்குவதற்கான புறங்கைகள்), ஈனமானம் (ஈழம் சார் இனமானம் என்பதம் மரூவு ஈதென்பதறிக),  நெகிழ்ச்சி (”கண்கள் பனித்தன, இதயம் இனித்தது”) என எண்ணிலாத உணர்ச்சிக் குவியல்களின் குணசித்திரதிலகமில்லையோ அவர்?

அவர் போடாத இரட்டை வேடங்களா? உதாரணத்திற்கு மத நல்லிணக்க அருள் பாலிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அண்மையில் நடந்த ஹாலிவுட்பட எதிர்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள் – அவர் சொல்கிறார்: ”மத உணர்வுகளை புண் படுத்தும் நிகழ்வுகளை அனைத்து தரப்பினரும் நிச்சயமாக தவிர்த்திடுவதே இணக்கமான சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.”அதே சமயம்  “இந்து என்றால் திருடன்,” ”ராமன் குடிகாரன்’ என்ற படியெல்லாமும் பேசுவார்.

எம்ஜிஆர், சிவாஜிகள் வரவில்லையென்றால் அவரே தமிழ்த் திரையுலகின் முடிசூடா நெடுமுடிக்கிள்ளியாகத்தானே இருந்திருப்பார்?

ஆக, முதற்கண், எம் காவல் தெய்வமும், எம் குடிமக்களின் தவிர்க்கவேமுடியாத நிரந்தரத் தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம். (வழக்கம் போல எங்களுக்கு, இம்முறையும் வாழ்த்த வயதில்லை)

சரி, எங்கள் விஷயத்திற்கு வருவோம்.

-=-=-=-=-

எங்களுக்குப் பல விதமான மெச்சத்தகுந்த கல்யாண குணங்கள் உண்டென்றாலும் – தமிழர்களுக்கே உரித்தான நற்குடிப் பழக்கத்தை, நாங்கள் எங்கள் கலாச்சாரத்தின் ஆணிவேராகவே கொண்டிருக்கிறோம், என்கிற வகையில். நாங்கள், தமிழினத்தின் மூத்த பெருங்குடி வழிவந்தவர்கள்.

எங்கள் மேற்படி பெருமைகளை நாங்கள் விலாவாரியாக விளக்குவதற்கு முன், முதற்கண், உங்களுக்கு சில புள்ளி விவரங்களைத் தெரிவிக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

 • எம் தங்கத் தமிழ் நாட்டின் வரவு-செலவுக் கணக்கு, எம் தமிழர்கள் குடிக்காவிட்டால் தள்ளாடிவிடும் என்பது கள்கூடு. நாங்கள் சும்மா குடிக்கவில்லை – சுமார் 18,000 கோடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் குடிக்கிறோம். (ஈ வெ ரா நடத்திய குடி அரசு, குடியுரிமையைப் பற்றிப் பேசியது அனைவரும் அறிந்ததே. குடி உரிமையின்றேல் குடி அரசு இல்லை)
 • எங்களால் அரசுக்கு வருமானம் (= தன்னிகரற்ற நிகர லாபம்) குறைந்த பட்சம் ரூ. 15000 கோடி – ஒவ்வொரு வருடமும்!
 • இது மட்டுமல்ல, நாங்கள் கொடுக்கும் லாபத்தில் தான் – சுமார் ஒரு கோடி ரூபாய் வருடந்தோறும் ‘குடி அரக்கனைப் பற்றிய விழிப்புணர்ச்சி’ ஏற்படுத்துவதற்காக, நம் தமிழக அரசால் செலவிடப் படுகிறது என்பதைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். இந்த வருடம், இந்த ஒரு கோடியின் கீழ், ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு லட்சம் ரூபாயும், ஆயத்தீர்வை/மதுவிலக்கு கமிஷனர் முப்பத்தியாறு லட்சம் ரூபாயும் பெறுகின்றனர். (அதை வைத்துக் கொண்டு, அவர்கள் எங்களை திருத்தி விடமுடியும் என்கிற மனப் பிராந்தி அவர்களுக்கு! நகைச்சுவைதான் போங்கள்!! போகட்டும் விடுங்கள், மறப்போம்,மன்னிப்போம்)
 • எங்கள் மாவட்டம் தான் தமிழகத்திலேயே அதிகம் குடிக்கிற மாஆஆவட்டம். எப்படியும் ஒரு நாளுக்கு இரண்டு–இரண்டரை கோடி ரூபாய்க்கு நாங்கள்குடிக்கிறோம். இந்த எண்ணிக்கையில், நாங்கள் எங்கள் பக்கத்துப் புதுச்சேரியில் குடிப்பதையும், தோப்புகளில் குடிக்கும் சுதேசி சாராயத்தையும் கணக்கில் சேர்க்கவில்லை. இவற்றையும் சேர்த்தால், இது சுமார் இரண்டேமுக்கால் கோடியை எட்டும், அனுதினமும்.
 • இது மட்டுமல்ல – எங்கள் மாவட்ட மக்கள் தொகையில் நான்கிலொரு மனிதர்கள் தினமும் சந்தோஷமாகக் குடிக்கிறோம். ஆக இரண்டிலொரு ஆண் இங்கு ஒரு கர்வம் நிறைந்த குடிமகன் – என்பது கள்ளிடை மலை!

ஔவையார் அன்றே சொன்னார்:

‘தண்ணீ’யுயற குவாட்டர் உயரும்
குவாட்டர் உயர ஆஃப் உயரும்
ஆஃப் உயர ஃபுல் உயரும்
ஃபுல் உயர மப்பு உயரும்
மப்பு உயர குடியுயரும்
குடியுயரக் கோன் உயர்வான்

-=-=-=-=-

இனி எங்கள் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ள குடி சார்ந்த அருமை பெருமைகளை விலாவாரியாகப் பார்க்கலாம்.

கொண்டாட்டம்: எங்களுக்கு கொண்டாட்டமென்றாலே குடியில்லாமல் இருக்க முடியாது. ‘தண்ணீ போட்டுட்டு, ஸும்மா ஜாலியா இருக்லாண்டா மச்சீய்’ என்று எங்கள் நண்பர்கள் அன்போடு அழைக்கையில் நாங்கள் எப்படி இந்த ஆனந்த வைபவத்தை மறுதலிக்க முடியும்.

ஆண் குழந்தை பிறப்பு: இப்போதுதான் சில வருடங்களாக, பிறந்த ஆண் குழந்தை வாயில் ஒரிரு சொட்டு ‘தண்ணி’ விட்டு அதற்கு அஞ்ஞானஸ்னானம் கொடுக்க பழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சீமைச்சரக்கு ஒரு சொட்டு விட்டதும், குழந்தையின் முகம் அஷ்டகோணலாக மாறினாலும், இந்தச் சடங்கு முக்கியமல்லவா? சிறு குழந்தைகளாக இருக்கும்போதே நல்ல பழக்கங்கள் பயிற்றுவிக்கவேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்.

பெண் குழந்தை பிறப்பு: இது எங்களுக்கு பெரும்பாலும் பிடிக்காத காரணத்தால், எங்கள் துக்கத்தையும், வேதனையையும் மறக்க, டாஸ்மாக் கடை பக்கம் செல்லுவது எங்கள் பண்பாட்டின் ஒரு அங்கம்.

கல்வி: எங்கள் குழந்தைகள் தேவையில்லாமல் பள்ளிகளுக்குச் சென்று கவைக்குதவாத கல்வி கற்பது எங்களுக்குப் பிடித்தமில்லை. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளில், எங்களுக்கு எண்கள் வரிசையில்கூட மூன்று இருந்தால் போதும் என்கிற ஆன்மீக நிலைக்கு வந்து விடுவோம். அவை: குவாட்டர், ஆஃப், ஃபுல்.  (ஏதோ அமேஸான் காடுகளில் உள்ள ஒரு மக்கள் கூட்டத்திற்கு இரண்டுக்கு மேலே எண்ண வேண்டிய அவசியம் இல்லையாமே?) மேலும் திருகள்ளுவர் கிருகள்ளுவர் என்று படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் நம் பிள்ளைகள்??

பெண் குழந்தையின் மஞ்சள் நீராட்டு விழா: இதற்கு நாங்கள் குடித்தேயாக வேண்டும். (என்னாக்க நாங்கள் இத்துக்கப்பறம் வவுத்துல நெர்ப்பைக் கட்டிக்கினு இருக்ணும் பார்ங்க; பொட்டப் புள்ள அத்துக்கு, கண்ணாலம்னு கவுரதையா பண்ணிக் கொடுக்ணுமே!)

ஆண்மகன் பத்தாவது வகுப்பு பரீட்சை முடிவு: பொதுவாக, எங்கள் பிள்ளைகள் அவர்கள் எட்டாவது படிக்கும்போதே தோப்புகளுக்குள் ஓளிந்துகோண்டு குடிக்கத் தொடங்குவார்கள். ஆனால் குடும்பத்தலைவர்களுக்கு முன் அவர்களுக்குக் குடிக்கத் தைரியமிருக்காது. என்னவென்றாலும் இவர்கள் குழந்தைகள் அல்லவா? ஆகவே அவர்கள் ‘பெரிய மனிதர்களாக’ ஆனதைக் கொண்டாடுவதற்கு, கடந்த சில வருடங்களாக, பத்தாம் வகுப்பு முடித்த எங்கள் மக்களுடன், வீட்டிற்குள் வட்டமாக அமர்ந்து, ஒரு சடங்கு போலக் குடிப்பதை வழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறோம். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்த கடைசிநாளிரவு தான் இந்தக் கேளிக்கை நடக்கும்.

கோவில் திருவிழா: ’சாராயம் தொழுவது சாலவும் நன்று’ என்று பெரியோர் சொன்னதன் படி ஒழுகி, நாங்கள் எந்த கிராமக் கோவில்விழாவாக இருந்தாலும் சரி, அதில் ஒரு நாளாவது எங்கள் ’முறை’ வரும்போது, அதனை பதவிசாகச் செய்து முடித்து, பின் அதனைக் கொண்டாடக் குடிப்பது வழக்கம்.

திருமணம்: எங்களைப் பொறுத்தவரை கள்மணம் கமழாத ஒரு மணச்சடங்கு, ஒரு திருமணமே அல்ல. திருமண தினம் முன்பும் திருமண இரவன்றும், ஜமா சேர்த்துக் கொண்டு குடிக்காமல் இருந்தால் அது திருமணம் என்கிற பாரம்பரியத்துக்கே இழுக்கு என நினைப்பவர்கள் நாங்கள். தாலியை – சதிகார ஆரியர் சொல்வது கேட்டு மங்கல சூத்திரமாகப் பார்க்காமல், மங்’கள்’ சூத்திரமாக எம் தமிழர்கள் பார்ப்பது எதனால் என்பது இப்போது புரிகிறதா?

மகிழ்ச்சி: இது எம்மாதிரிப்பட்டதாக இருந்தாலும், குடிகள் குடிக்கப் படவே வேண்டும். சுப்பிரமண்ய பாரதி எழுதியது போல, ”புட்டிதனை முகர்ந்தால், நெஞ்சம்தான் கள்வெறி கொள்ளுதடி…”

பயம்: மனப் பிராந்தியிருந்தாலும் கூட நாங்கள் விஸ்கி விஸ்கித்தான் அழுவோம்.

வருத்தம்: சோக நேரங்களில் எங்களை ஆசுவாசப் படுத்த குடியைத்தவிர வேறு எதனையும் நாங்கள் நம்புவதில்லை. எங்கள் பிலிம் ஹீரோக்கள் அனைவரும், சோகக் காட்சிகளில் குடித்தபடி, தள்ளாடித் தள்ளாடிப் பாடும் தத்துவப் பாடல்களைக் கேட்டே வளர்ந்தவர்கள் அல்லவா நாங்கள்?

வீரம்: நாங்கள், மற்ற தமிழர்களைப் போல, பெரும்பாலும் கோழைகள் தாம். ஆனால், குவாட்டர் உள்ளே இறங்கினால் போதும், எங்களுடைய வாய்ப் பேச்சு வீரத்திற்குக் குறையேது? சில சமயங்களில் தள்ளுமுள்ளெல்லாம் கூட நடக்கும் – ஆனாலும் நாங்கள் புற நானூறுக் காலத்திலிருந்து வீரம் மிக்கவர்கள் அல்லவா? அக்காலப் பெண்கள் முறத்தால் அடித்துப் புலியை விரட்டினால், இக்காலத்தில் நாங்கள் சாராய ஏப்பம் விட்டே சீனாக்காரனைக் கூடத் துரத்தி விடுவோம்.

வீரதீரம்: ஒரு சமயம் எங்கள் பாட்டா கோவிந்தசாமி, அளவுக்கு மீறி தாகசாந்தி செய்த பின், வீரமிகுந்து, தினவெடுத்து தனியொருவராக என்ஹெச்-45ல் போக்குவரத்தை 15 நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தார். அது இன்றுவரை எங்கள் வீரத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது. திண்டிவனம்-விழுப்புரம் சாலையில் இந்த இடத்திற்கு வந்தாலே, அவன் எப்படிப்பட்ட ட்ரைவராக இருந்தாலும் சரி – அவன் மிக ஜாக்கிரதையாகத் தான் ஒட்ட வேண்டும். அப்பகுதியின் காவல் தெய்வம் அவர்! எங்கள் பாட்டா பாடல் பெற்றவர் கூட. போதை தலைக்கேறினால் அவரே பாடிக் கொள்வார்.

வீரப்பிரதாபம்: சில சமயம், எங்கள் வீரம் தலைக்கேறி, பள்ளிகள் கோவில்கள் கடைகள் எனப் பார்க்காமல் போகிறவர்கள்-வருகிறவர்களை சண்டைக்கு ‘வலிப்போம்..’ கல்லெடுத்து அடிப்போம். பாத்திரங்களை உடைப்போம். ஓக்காள வாந்தியாறு ஓடச் செய்வோம்.

பெண்ணுரிமை: நாங்கள் மப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அடுத்தவன் வீட்டுப் பெண்களை கேலி செய்வது, வக்கிரமாகப் பேசுவது என்பது எங்களது பெண்கள் சம்பந்தப்பட்ட உரிமை. அதே சமயம், மற்ற குடிமகன்கள் எங்க வூட்டுப் பொண்டுகளுக்கு அப்படிச் செய்தால் நடப்பதே வேறு!

காமம்: இதற்கும் எங்களுக்கு புட்டிக் கள் தேவை. கொஞ்சம் தண்ணீ அட்ச்சால் தாம் எங்களுக்கு தம் வரும். சமயத்தில், முட்ட முட்டக் குடித்து விட்டு உயர் ஆன்மீக நிலையில் இருக்கும் எங்களுக்கு, எங்கள் மனைவிகளுக்கும் பிறத்தியார் மனைவிகளுக்கும் வித்தியாசம் தெரியாது – ஆக சிலபல இடைஞ்சல்கள்.  பக்கத்து வீட்டுக் காரர்களுடன் சண்டை, என பல எண்டர்டெய்ன்மெண்ட்கள். பல சமயம் எங்களுக்கு எங்கள் மனைவிகளுக்கும், எங்கள் பெண்குழந்தைகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் போய் விடும் – பெரும்பாலும் அச்சமயம் எங்கள் மனைவிகள் எங்கள் மண்டையில் பொளேர் என்று ஒன்று போடுவர் – அல்லது நடு இரவில் ஒடிப்போய் எங்கள் மகளுடன் இன்னொருவர் வீட்டில் தஞ்சமடைவர்.

சில சமயம் எங்களுக்குக் காரியம் கைகூடுவதும் உண்டு. இச்சமயம் நாங்கள் அடுத்த நாள் மதியம் எழும் போது நாங்கள் செய்த கேவலத்தை நினைத்து மிக்க வருத்தமுற்று, அதனை மறக்க மீண்டும் குடிக்கப் போவோம், என்ன இருந்தாலும் எங்கள் மகள் இன்னொருத்தனைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழவேண்டியவள்தானே!.

தூக்கம்: குடித்து விட்டு சாலையோரங்களிலும், சாலை மத்தியிலும், சாக்கடைகளிலும் அஷ்டாவக்கிரமாக வளைந்து நாங்கள் விழுந்து கிடக்கும் (=படுத்திருக்கும்) பாணியே தனி – அதனைக் காண உங்களுக்குக் கண்கோடி வேண்டும்!

விழிப்பு: டாஸ்மாக் எங்கே? இன்னிக்கு நாங்க தண்ணிக்கு பைசா எப்படி தேத்தறது?

சுதந்திரம்:  குடித்துத் தள்ளாடி விழுந்தெழுந்து நாங்கள் நடக்கும் / தவழும்போது நாங்கள் சுதந்திரமாக உணர்வோம். ஏனெனில் பல சமயம் எங்களுக்கு வேட்டி-ஜட்டி அணிந்திருக்கிறோமா எனக்கூடத் தெரியாது. இம்மாதிரிச் சுதந்திரத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை சில சமயம் மிக அதிகம்.

ஒரு சமயம், எங்களுடைய,  அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த ஒரு குடிமகனின் விடைத்திருந்த ஆண்குறி தெரு நாய்களால் பதம் பார்க்கப் பட்டு விட்டது.

இன்னொரு சமயம், எங்கள் பெருங்குடி நண்பரொருவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மூன்று மாடிக் கட்டடத்தில் படு முயற்சி செய்து தட்டுத்தடுமாறி ஏறி, பின்,  மேல் மாடியிலிருந்து சிறு நீர் கழிக்க முயன்றபோது – கீழே உயரழுத்த மின்சாரக் கம்பி இருந்தது; அதனால் பாவம் அவருடையது கொஞ்சம் ரொம்பவே வெந்து விட்டது. ஆனால் நல்லவேளை – அவருக்கு இந்த அவமானம் தெரியவரவில்லை – மூத்திரம் கம்பியில் பட்டவுடனேயே மகத்தான ஷாக் அடித்து, அவர் இறந்துவிட்டிருந்தார்.காவல்துறைக்குத் தெரியாமல், ரகசியமாக நண்பர் பிணத்தை எரிப்பதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது. படபடப்பு போக எங்களுக்கு ரெண்டு ஃபுல் அடிக்க வேண்டியிருந்தது.

எதற்கு இதனைச் சொல்கிறோம் என்றால், நாங்கள் சுதந்திரத்துக்குக் கொடுக்கும் விலை மிகவும் அதிகம்.

எங்களுக்கு ஒரே வருத்தம் என்னவென்றால், எங்கள் செந்தமிழ்ப்பெண்டிர் அனைவரும் எங்களுடன் சம பங்கெடுத்துக் குடிப்பதில்லை. ஆகவே நாங்கள் சூளுரைக்கிறோம் – அடுத்த பத்தாண்டுகளில் நாங்கள் எங்கள் குலப் பெண்டிர்களுக்கும் சமக்குடியுரிமையை அமல் படுத்துவோம். ஆமென்.

-=-=-=-=-

இங்ஙனம்:

 

பெருங்குடியாளர் பிரிவு.

அனைத்துத்தமிழக தம்பி திராவிடப் பின்னேற்றக் கலகம்.

2 Responses to “தமிழகக் குடி மஹாத்மியம்”

 1. Anonymous Says:

  சுதந்திரத்திற்கு நாம் கொள்ளும் விளக்கம். குடிக்க காசுதேட கண்டுபிடிக்க வழிமுறைகள்- குடித்தபின் ஏற்படும் மனநிலை, குற்றங்கள் குடித்தவர்களை மட்டும் பாதிப்பதில்லை கூடியிருப்பவர்களையும் அனைத்து தரப்பினரையும் ஆபத்துக்குள்ளாவது. ஆக, போதைக்கு பாதை போடலாமா அரசே! இழிவை உயர்வு என்று எண்ணலாமா? சுதந்திர சிந்தனை அதுவன்று. தெய்வ ஆவேசம் ராமசாமிக்கு நன்று.

 2. Shiva Says:

  Ippadi ellam kalai’njar pathi elludhureengala, udan porakadhavungala edhavadhu aabathu erpada pogudhu Saar.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s