கல்வித்தந்தைகள் – ஜேப்பியார், எ வ வேலு, கே பிச்சாண்டி…

26/09/2012

நமக்கெல்லாம் இவர்களைப் பற்றி மிகப் பெருமையான எண்ணங்கள் இருக்கவேண்டும் – ஆனால், நமக்கு நமது கலாச்சார, ஆன்மீக, தத்துவ, தொழில் நுட்ப, இன்னபிற இன்னபிற தளங்களில் உச்சங்களைத் தொட்டுள்ள ஆளுமைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலே அது அதிசயம். மறதியும் மிக அதிகம்.

ஆகவே.

இந்தக் கால இளைஞர்களுக்கோ (எ.கா: ஸ்ரீமான் ஹரன் ப்ரசன்னா அவர்கள் போல) இவர்களைப் பற்றி ’விளாசி, சமூக அவலங்களை அம்பலப்படுத்தி, அரசியலை அலசி, நிகழ்வுகளைக் கரைத்துக் குடித்து, ஆழ்ந்த புரிதல் கூடிய புரட்சிகர நேர்மையுடன்’ எழுதவேண்டும் என ஆசை – அற்புதமான, சீண்டும் தலைப்புகளில் (எ.கா:  ”எ வ வடிவேலு – திராவிட கல்வியியலின் உரைகல்” அல்லது “கல்வித்தந்தைகள் இங்கே! கல்வித்தாய்கள் எங்கே?”)! ஆனால் இவர்களுக்குப் பாவம், ஆராய்வதற்கு நேரமோ, முனைப்போ அல்லது நேரடி அனுபவமோ அல்லது ஐயந்திரிபற ஒரு விஷயத்தை அலசுவதற்கோ நேரமில்லை.

இந்தக் குறைபாட்டை நீக்கும் விதமாக ஏதோ என்னால் முடிந்த தகவல்களை இங்கு கொடுக்க முயன்றிருக்கிறேன். இவற்றை வைத்து புற்றீசல் போல பலவண்ணங்களில் புறப்பட்டிருக்கும் இந்தக் கல்வித் தந்தைகள். பற்றி யாராவது (என் சாய்ஸ்: ஈடு இணையற்ற நகைச்சுவை இணையத்தளம் – வினவு) மண்வெட்டி ஆராய்ச்சிகீராய்ச்சி செய்து நம் தமிழகத்தை உய்வித்தால் தேவலை.

மாவீரன் ஜேப்பியார் அல்லது “தெருவிளக்கை உடைத்து மேதையானோர் பலர்”

ஜே பி ஆர் என்கிற ஜேஸுஅடிமை பண்டயராஜ் – பிற்காலத்தில் ஜேப்பியார் என உருமாற்றம் பெற்று மகத்தான ’சிறுபான்மை’ கல்வித்தந்தையானது ஒரு சுவையான(!) கதை.

இந்த பண்டயராஜ் அவர்கள் 1960களின் இறுதியில், தமிழகக் காவல்துறையில் ஒரு கடைநிலைக் காவலராக இருந்தார், உழைத்தால் மெய்வருத்தக் கூலியாவது கிடைக்கும் என நன்கறிந்த அவர், காவலராக இருக்கும்போதே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் ’பக்கத்’ தொழிலையும் செவ்வனே செய்து வந்தார். (எனக்கு இங்கே சிறிது மண்டை குழம்புகிறது – இவர் தனக்குத் தானே மாமூல் கொடுத்துக் கொண்டிருந்திருப்பாரோ?)

இவருடைய வளப்பமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டவர்களால் போட்டுக்கொடுக்கப்பட்டு மாட்டிக்கொண்டு பின்னர், காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். என்ன கொடுமை அய்யா இது!

எது எப்படியோ…

இவர் 1960களிலேயே பல வருடங்களாக எம்ஜிஆரின் பல வருட முரட்டுப் பக்தர். பக்தகோகேடி.

… தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து, பின்னர் ’யாரொன் ஏ மில்லத்(2007),’’டாக்டர் (அண்ணாமலை, 1971),’ ’டாக்டர் (மதுரை, 2006),’ ’கலைஞர்’  – எனப் பட்டப்பெயர்/அடைமொழி விரிவுகள் செய்துகொண்ட கருணாநிதி அவர்களால், 1971ல் எம்ஜிஆர் அவர்கள் துரத்தப் பட்டபின், பண்டயராஜ் அவர்களும் பின்னவருடன் சென்றார்.

இவர், பலகாலம் பயிற்சி பெற்று சுயமுனைப்புள்ளவராக இருந்ததால் – கல் வீசும், சோடாபுட்டி அடிக்கும், சைக்கிள் சங்கிலியைச் சுற்றும், தெருவிளக்குகளை உடைத்து கும்மிருட்டில் களேபரம் செய்யும் நானாவித புறநானூற்று வீர விளையாட்டுகளில் கை தேர்ந்தவராக இருந்தார். மேலும், அவர் மகத்தான மெட்ராஸ்பாஷையிலும் வாய் தேர்ந்தவராக இருந்தார். தமிள்தாய் அவர்தம் நாவில், மனம் பேதலித்து, மண்டை குழம்பி, பயங்கர பீதியுடன் குத்தாட்டமே நடனமே ஆடுவார் — பொதுக்கூட்டம் கிதுக்கூட்டம் என்றெல்லாம் பார்க்காமல் ஒரே டாய்டூய் அடீங்…கோத்தா தான்.. வெற்றிகொண்டான், வளர்மதி எல்லாம் இவர் பேச்சைக் கேட்டால் புறமுதுகிட்டு, பின்னங்கால் பிடறியில் பட ஓடவேண்டும்! எனக்கு, அக்காலத்தில் ஒருசமயம் இவர் இன்சுவைப் பேச்சைக் கேட்டபோது (1980, வண்ணாரப்பேட்டை) என் நா தழுதழுத்து என் கண்கள் பனித்தது, பின் அடக்கமுடியாமல் மூத்திரம் வந்தது, இப்போதும் நினவிலிருக்கிறது..

நிற்க, 1972ல் எம்ஜிஆரைச் சந்தித்து அதிமுகவில் இணைந்த பண்டயராஜ் அவர்கள், அதிமுகவின் தென்சென்னைச் செயலாளராக இருந்து எம்ஜிஆரின் கட்டமைப்புச் சிதறாமல், அது கருணாநிதியால் ஒழிக்கப் படாமல் பார்த்துக் கொண்டார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுகவின் முதல் வெற்றிக்காக அரும்பாடு பட்டார். ஒரு சமயம் திமுக அரசினால் கைது செய்யப் பட்டு ஒரு வருடம் போலச் சிறையில் இருந்தார் கூட. எம்ஜிஆரும் கட்சிக்காக, பண்டயராஜ் செய்த தியாகங்களைப் பரிவோடு பார்த்தார்.

ஆக, ஜே பண்டயராஜ் அவர்கள் இச்சமயம், தன் தலைவருக்கு மிக அருகே இருந்தார். தன்னுடைய பெயரையும், தம் தலைவர்போல – ஜேபீஆர் என மாற்றிக்கொண்டார். பின்னர் இவருடைய அடியாட்கள் இவரை, மரியாதை நிமித்தம்(!) ஜேப்பியார் எனக் கூப்பிட ஆரம்பித்தனர். அவருக்கும் இது பிடித்துப்போகவே, அவரது பரிணாம வளர்ச்சியின் பரிமாணமாக, தன்னைத்தானே ஜேப்பியார் என அழைத்துக் கொண்டு, தான் சொந்தச்செலவு செய்து அச்சடித்துக் கொண்ட ‘நன்றி! நன்றி!! நன்றி!!!” சுவரொட்டிகளில் அட்டகாசமாகச் சிரித்து வலம் வரலானார். ‘பக்கத்’ தொழிலையும் விட்டுவிடாமல் நன்றியுணர்வோடு அதனைப் போஷகம் செய்தார்.

மறுபடியும் நிற்க, இவரது தடாலடி முறையில் திருப்தியுற்ற எம்ஜிஆர் அவர்கள் (தன் முதல் அரசின் போது) எம் எல் சியாக அச்சமயம் இருந்த ஜேப்பியாரை, கட்சிக் கொறடாவாகவும், பின்னர் சென்னைக் குடி நீர், கழிவு நீரகற்று வாரியத்துக்குத் தலைவராகவும் நியமித்தார். ஜேப்பியாரின் சந்தோஷத்துக்குக் கேட்பானேன்!

இச்சமயம் நடந்த ஒரு நிகழ்ச்சி: 1980களின் ஆரம்பத்தில் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் ‘கணையாழி’ பத்திரிக்கை, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (இரண்டாம் சனிக்கிழமை?) திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருந்த ‘தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்க’த்தில், ஒரு இலக்கியக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தது – நானும் முடிந்தபோது நங்கநல்லூரிலிருந்து இக்கூட்டத்திற்குச் செல்வேன் – ஓருமுறை மாங்குமாங்கென்று சைக்கிளில் கூடச் சென்றிருக்கிறேன்! – சிலசமயம் நண்பன் சாய்நாத்தும் கூட வருவான் (இவன் புகைப்படம், இவன் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக  ப்ரீமன்  ஸ்போக்லி பள்ளியில் ஆற்றிய ஒரு உரை, கோயமுத்தூர் பாரதியார் மேலாண்மைக் கழகத்தில் பேசியதன் ‘தி ஹிந்து’ செய்தி, இப்போது ஸிடிபேங்கில் ஒரு உச்சாணிப் பதவியில் இருக்கிறான்; நல்ல இலக்கிய ரசனையும், படிப்பும், ஆழமான சிந்தனைகளையும் கொண்டவன் – இவன் போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும் – தமிழிலும், ஹ்ம்ம்); சந்தோஷமாக சுப்ரமண்யராஜூ, தி ஜானகிராமன், புதுமைப்பித்தன் என –  பேசிக்கொண்டுச் செல்வோம்.

… என்ன சொல்ல வந்தேனென்றால் – ஒரு தடவை சாந்தோமிலிருந்து திருவல்லிக்கேணிக்கு இக்கூட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது டொம்மிங்குப்பத்தின் (டாமியன் குப்பம் என்பதன் காலத்தின் கோலம்) கடற்கரை சாலையில் ஒரே கும்பல். கும்பலின் நடுவில் மாவீரன்!

குப்பத்து மக்கள் அவரிடம் குடிதண்ணீருக்காக முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் அப்போது சென்னைக் குடி நீர், கழிவு நீரகற்று வாரியத்துக்குத் தலைவராக இருந்தாஅரென நினைக்கிறேன். அப்போது அந்தப் பக்கம் ஒரு வாரிய தொட்டிச்சரக்குந்து (’டேங்கர் லாரி’) குடி நீரை மயிலாப்பூருக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தது. மாவீரன் உடனே பாய்ந்து அந்த வண்டியை மறித்து நிறுத்தினார். அதன் ஓட்டுனரை, ந்கொம்மாள டொம்மிங்குப்பத்துக்கு ங்கோத்தா வண்டிய ஓட்றா என்றார்.

ஓட்டுனர் அதைச் செய்யமுடியாது என்றார். அப்படிச் செய்தால் தன் வேலை போய்விடுமென்றும், தான் தற்காலிகமாகத்தான் அப்பணியில் இருப்பதாகவும் சொன்னார். கோபமுற்ற மாவீரன் வாய் பேசவில்லை. அவர் கையும் காலும் தான் பேசின. அவர் செயல் வீரன் அல்லவா?? பரிதாபத்துக்குரிய அந்த ஓட்டுனர் ஜீவனுக்கு வக்காலத்து வாங்கப் போன எனக்கும் அர்ச்சனை, பூஜை! அந்த வண்டியின் முழுச்சுமையும் பெரும்பாலும் விரயமாயிற்று; ஒரே கும்பல் தள்ளுமுள்ளு. அந்த ஓட்டுனர் விந்திக் கொண்டே கச்சேரி சாலை பக்கம் ஒடி விட்டார். நான் ‘ஒரு வாரியத் தலைவனா இப்படி அசிங்கமாக நடந்துகொள்வான்’ எனத் திகைப்புற்று, ஞானக்கூத்தன் (என நினைக்கிறேன்) பேச்சு கேட்கப் போனேன்!

-0-0-0-0-

1987ல் எம்ஜிஆர் இறந்தவுடன் அவர் மனைவி ஜானகியின் அணியில் கொஞ்ச நாள் இருந்தார், ஜேப்பியார். எதிர் அணி ஜெயலலிதா அவர்களைப் படு மோசமாகத் திட்டி, கேவலப் படுத்திப் பொதுக் கூட்டங்களில் பேசினார். பருப்பு வேகவில்லை. பின்னர் ஜானகியை அம்போவென்று விட்டு, ‘பக்கத்’ தொழில்களுக்கு (கல்வி உட்பட) சென்றுவிட்டார்.. ஒரு சில ‘மனித நேய’ விஷயங்களையும் செய்திருக்கிறார் (அது அவர் தவறில்லை என்றாலும்) என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட பல கல்யாணகுணங்களையும் பேர்போன வரலாறும் உடைய இப்பெருந்தகை தற்போது பல பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி. முயற்சி திருவினை ஆக்கும்!

’ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை’ சார்பாக பல கல்வி நிலையங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

 • சத்தியபாமா பல்கலைக்கழகம்
 • பனிமலர் பொறியியல் கல்லூரி
 • செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
 • ஜேப்பியார் பொறியியல் கல்லூரி
 • பனிமலர் தொழில் நுட்பக் கழகம்
 • செயிண்ட் மேரி மேலாண்மையியல் கல்லூரி
 • மாமல்லன் தொழில் நுட்பக் கழகம்

பல தொழில்களை நட்த்தி வருகிறார்.

 • Jeppiaar Mineral Water Pvt. Limited
 • Jeppiaar Concrete Division
 • Jeppiaar Milk Products Pvt. Ltd
 • JET Associates
 • Jeppiaar Steels
 • Jeppiaar Furnace Division
 • Jeppiaar Cements Pvt. Ltd
 • Jeppiaar Fishing Harbour Muttom Pvt. Ltd

இவற்றைத் தவிர மாட்டுப்பண்ணைகள், இனிப்புப் பதார்த்தங்கள் செய்யும் ஆலைகள், கல்யாணமண்டபங்கள், போக்குவரத்துக் குழுமங்கள் என்று பல விதமான அமைப்புகள், அவதாரங்கள்!

ரோட்டரி போன்ற பல அமைப்புகளிடமிருந்து சான்றிதழ்கள், பல ‘கல்வி’ பற்றிய கட்டுரைகள், பல அமைப்புகளில் பங்கு என நீளும் பட்டியல்.

இவர்தம் படிப்புத் தகுதிகள்:

 • எம் ஏ (அரசியல்) – மைஸூர் பல்கலைக் கழகம்,
 • பி எல் – சென்னைப் பல்கலைக் கழகம்.
 • பிஹெச்டி – அண்ணா பல்கலைக் கழகம் – நீராதாரங்கள் மேலாண்மை(!)

-0-0-0-0-

சில வருடங்கட்கு முன் இவருடைய கல்லூரிகளிலிருந்து படித்து (!) வெளியே வந்த ஒரு சில மாணவர்களை (ஏழெட்டு பேர்) நான் நேர்காணல் செய்திருக்கிறேன். இவர்களை ‘முன்னோடிகள்’ – டாப்பர்ஸ் என்று சொன்னார்கள்.

அநியாயத்துக்கு வீங்கிய சுயமதிப்புடன், முனைப்பில்லாத, மழுங்கிய பரிதாபத்துக்குரிய ஜடங்கள். எவ்வளவு முயன்றும் ஒருவரிடம் கூட ஒரு துளி ‘அக்கினிக்குஞ்சு’ பெயரளவுக்குக் கூட இல்லை. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு இழவு அரை மில்லிமீட்டர் ஆழம் கூட இல்லை. என் நேரமும் விரயம். என்ன சோகமிது!

ஜேப்பியார் – சாராயம், கீழ்மையான அரசியல், முட்டாள் தனமாகக் கட்டும் கட்டிடங்கள், பணவெறி, ரௌடித்தனங்கள் மூலம் மக்களுக்கு, நம் சமுதாயத்துக்குச் செய்யும் தீமைகளை விட இந்தக் குப்பைக் கல்வி நிறுவனங்கள் மூலம் நமக்கு, நம் வருங்காலச் சந்ததிகளுக்கு இழைப்பது – துரோகம்.

-0-0-0-0-

சில மாதங்களுக்கு முன்னால், ஒரு நண்பர் குடும்பம் எங்களைப் பார்க்க வந்திருந்தது. பேச்சு வாக்கில் நண்பரின் இரு மக்களும் (மகன் + ,மகள்) ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் படிப்பதாகவும், பெற்றொர்களுக்கு இது பற்றியுள்ள புளகாங்கிதம் பற்றியும் தெரிய வந்தது:

 • ஜேப்பியார் காலேஜ் வாசல்ல நின்னுட்ருப்பார், கைல ஒரு பிரம்போட – லேட்டா போனா அவ்ளோதான்!
 • ஜேப்பியார் கேம்பஸ்ல நடந்தார்னா ஒரு பய அவர் கிட்ட சுத்துவட்டாரத்ல இருக்கமாட்டான். ஒரே வெறிச்சோடி இருக்கும்.
 • பையன் சொன்னான் – டீச்சருங்களையும் அடிப்பாராம் அவ்ரு!
 • டிஸிப்ளின் முக்கியம்னுட்டு ஜேப்பியார் நல்லாவே புரிஞ்சுகிட்ருக்கார்!
 • அவ்ரு ஆண்-பெண் பேசிக்றத பாத்தா பிரம்பு தான் பேசும்.
 • பொண்ணப் பெத்தவங்களுக்குத் தான் தெரியும், இந்த டிஸிப்ளினோட அரும!
 • ரூபா 20 லகரம் வாங்கினார் – ரசீது கொடுக்கல, ஆனா பரவால்ல, எஜுகேஷன் முக்கியமில்லையா?

நண்பனையும் அவர் மனைவியையும் பார்த்து, போங்கடா போக்கத்த முட்டாப் பரதேசிங்களா எனச் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. அந்தக் குழந்தைகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

-0-0-0-0-

வாழ்க ஜேப்பியார் தொண்டு. நம் இளைஞர்கள், இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய… என்ன சொல்கிறீர்கள்?

பின்குறிப்பு: ஆனாலும் சொல்வேன், நாம் பாக்கியசாலிகள் – இன்னும் கல்வித்தாய்கள் புகுந்து புறப்பட்டு, வீழ்ந்து கிடக்கும் நம் கல்வியின் நிலையை உயர்த்த முயற்சிக்கவில்லை.

(அடுத்து சுருக்கமாக எ வ வேலு, கே பிச்சாண்டி போன்ற பெருந்தகைகளைப் பற்றிக் கொஞ்சம்…)

5 Responses to “கல்வித்தந்தைகள் – ஜேப்பியார், எ வ வேலு, கே பிச்சாண்டி…”

 1. devadass Says:

  இந்த நபர்களைப் பற்றி தங்களது மேலான பதிவு பக்கங்களில் பதிந்து பொன்னான நேரத்தை வீண் செய்து விட்டீர்கள்.
  இருந்தாலும் இந்த பதர்களை சமூகமும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
  கொச்சின் தேவதாஸ்

 2. Anonymous Says:

  ஆட்சியாளரின் ஆதரவிருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்க்கு ஒருசிறுதுளி உதாரணம். அறக்கோட்பாட்டை மதச்சார்பென தள்ளியதும் ஒரு காரணாமாயிருக்கலாம். ஜனநாயம் – பலியாவது கண்ணுக்குத்தெரியாத நியாயங்கள்.

 3. ramasami Says:

  இவ்விடுகையில் என் நண்பன் சாய்நாத் பற்றிய விவரங்களை மேம்படுத்தியிருக்கிறேன் – இணையத்தின் தேடும், நோண்டும், தொகுக்கும், வகை சேர்க்கும் மென் பொருட்களுக்கு நன்றியுடன்…

 4. Deeban Says:

  I studied in St.Joseph’s College of Engineering. I will keep it short .St.Joseph’s and real life are light years apart. You learn nothing about life or about engineering in any of their engineering colleges. Only good thing is the food. And somehow many software companies conduct their campus interviews. The toughest question they asked me was the meaning of my name . I got selected. Thankfully , I decided not to take up that job and ended in Germany for my Masters. I literally had to learn everything from scratch .I scored a near centum in electromagnetism while I failed in my First semester in Germany. My mind was never trained for application of mathematics,physics . I was not able to solve simple differntial equations.I was trained to replicate rather think. Your articles are very informative. I am learning a lot here more than any institution I have been.

  Another beloved student ,
  Deeban

 5. bmniac Says:

  Unfortunately this is all too prevalent in India. For many years in the last two decades I have heard the lament of scholars/teachers like Prof Indiresan, Dr C Gopalan and a host of others. we have to live on hope.


Leave a Reply to bmniac Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s