கல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி

01/10/2012

’டாக்டர்’ ஜேப்பியார் பற்றிய முதல் பகுதி / முந்தைய இடுகையைப் படித்தீர்களா?

எ வ வேலு, கு பிச்சாண்டி போன்ற கழகக் கல்விக் காவல் தெய்வங்கள் பற்றி இந்த இடுகையில்…

பல வருடங்களுக்கு முன் ஒரு கேலிச்சித்திரம் பார்த்த ஞாபகம் –  இது ’ஆனந்தவிகடன்’ மதன் அவர்களுடையதுதான் என நினைக்கிறேன் – வார்த்தைகள் எனக்கு சரியாக ஞாபகமில்லை…

ஒரு அரசியல்வாதி கல்லூரி / பள்ளி மாணவர்களிடம் ஒரு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கிறார்: ”மாணவர்களே, நீங்கள் படிப்பில் ஈடுபடவேண்டும்; அரசியலில் ஈடுபடக் கூடாது. நாங்கள் அரசியல்வாதிகள் – நாங்கள் எப்பொழுதாவது படிப்பில் ஈடுபட்டிருக்கிறோமா?

-0-0-0-0-

அரசியல்வாதி என்றால் கல்வியில் ஈடுபடக் கூடாது என்றில்லை – மதன்மோஹன் மாளவியா இருந்தார். அவருடைய அரசியல் பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருக்கலாம் – ஆனால் அவர் கல்வித் தொண்டு பற்றி இகழ்வாகச் சொல்லவே முடியாது. அதே போல தற்கால முரளி மனோஹர் ஜோஷி பற்றியும். இவர்கள் போன்றவர்கள் கல்வித் தந்தைகளாக வலம் வரவுமில்லை.

கல்வி Vs வணிக நோக்கம் என்று பார்ப்பவனல்ல நான் – தமிழ் எழுத்துக்களிலும் வணிக vs ‘இலக்கிய’ எழுத்து என்று பார்ப்பவனல்ல. வணிகம் என்றாலே முகம் சுளிப்பது வளராமையும், முதிராத்தன்மையையும் குறிக்கிறது என்று எண்ணுபவன். பொதுவாக, இடம் தேச கால வர்த்தமானங்களின் பின்புலத்தில், விஷயங்களை, ஒப்புக்கொள்ளத் தக்கவை – ஒதுக்கித் தள்ளத் தக்கவை என்று பார்ப்பது போதுமானதாகும் என்ற எண்ணப் போக்கு உள்ளவன்.

கல்வி கற்பிப்பது என்பதை முறையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்து, சமூகத்திற்கு – அதன் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்களித்து – அதற்காக பணம் வசூலித்து, லாப நோக்குடன் ஒரு நிறுவனம் நடத்தப் பெற்றால் நாம் அதனை வரவேற்கலாம் – நான் அதனை நிச்சயம் வரவேற்பேன்.

ஆனால், மிக வருந்தத்தக்க வகையில், நம் தமிழ் நாட்டில் – மருந்துக்குக் கூட எந்த ஒரு அரசியல்வாதி நடத்தும், கல்வியகமும் சரியாகப் பணி புரிவதில்லை – ஏனெனில் மதன் அவர்கள் கேலிச்சித்திரம் போல – இந்த அரசியல்வாதிகள் ஒருபோதும் படிப்பில் ஈடுபட்டதில்லை, படுவதில்லை – அதைப் பற்றிய ஒரு இழவு கருத்தும் அவர்களிடம் இல்லை,

நமது தமிழர்களின் ‘பற்றாக்குறை’ மனப்பான்மையையும், அவர்களின் ‘பையன் படித்தவுடன் ஒரு நல்ல பெஞ்சு தேய்க்கும் வேலை, நல்ல சம்பளத்திற்கு கிடைக்க வேண்டும்; வெளி நாடு போய் நல்லா சம்பாதித்து, அவன் நல்ல வரதட்சிணை வாங்கவேண்டும், ‘லைஃப்ல செட்டில்’ ஆகிவிட வேண்டும்‘ என்கிற வெறித்தனமான விஷயங்களை மட்டும் மூலதனமாகக் கொண்டு பணம் காய்க்கும் தொழிலாகக் கல்லூரிகளையும்(!), பல்கலைக்கழகங்களையும்(!!) நடத்தி வருகிறார்கள் இந்தக் கல்வித்தந்தைகள்.
.
இந்தக் கல்வி(!!!) நிறுவனங்கள் அனைத்தும் மலினமான சீனக் குப்பைத் தொழிற்சாலைகளைப் போல, குப்பைத்தனமான ‘பொறியாளர்களையும்’ ‘மருத்துவர்களையும்’ ’செவிலியர்களையும்’ இன்னபிற விசித்திர ஜந்துக்களையும் லட்சக் கணக்கில் துப்பித் தள்ளுகின்றன. இவைகள் வசூலிக்கும் பணமோ மிக அதிகம்.

அரசியல்வாதிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில், மிகமிகமிகவும் கவனமாகத் தேடிப் பார்த்தால், இப்போது சென்னை மேயராக இருக்கும் சா. துரைசாமி அவர்கள் பல ஆண்டுகளாக நடத்தும் ஐஏஎஸ் பரீட்சைக்கான பயிற்சிமையம் மட்டும் தான் உருப்படியானதாக அகப்படும் – இது ஒரு ‘கல்வி’ நிறுவனமாகக் கருதப்பட முடியாது என்றாலும். அது ஒரு பைசா கூட பயிற்சி பெருபவர்களிடமிருந்து வசூலிப்பதில்லை என்றாலும்…

மற்றபடி அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டங்கள் தான்.

-0-0-0-0-

சில சமயங்களில் நமது கழகக் கண்மணிகளின் கல்விசார் வணிக வளர்ச்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தித் திடுக்கிடவைக்கும் கூட!

ஆகவே.

எ வ வேலு

எத்திராஜுலு வ வேலு அவர்களை நமக்கு ஞாபகம் இருக்கலாம். இப்போதும் இவர் ஒரு திமுக எம்எல்ஏ.

எ வ வேலு ஆரம்பத்தில் எம்ஜிஆர் ரசிகராகத் தான் இருந்தார். அதிமுகவில் தான் இருந்தார். எம்ஜிஆர் இறந்தபின் கொஞ்ச நாள் ஜானகி அம்மாளுடன், அவர் பிரிவில் இருந்தார். ஜெயலலிதாவை எம்ஜிஆரின் பிணஊர்தியிலிருந்து கீழே தள்ளிவிட்டது போன்ற அரும்பணிகள் செய்தார். பின்னர் அதிமுகவில் அவர் பருப்பு வேகாது என்று தெரிந்து கொண்டார். ஜெயலலிதா பெரிய அளவில் வருவார் என்று, பாவம், அவர் எதிர்பார்க்கவில்லை. பின்னர் பாக்கியராஜ்   கட்சி (பெயர் நினைவில் இல்லை) கொள்கை(!) பரப்புச் (!!) செயலாளராகக் கூட இருந்தார். பின்னர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரோ என்று அவர் பின்னர் அலைந்தார்.  முடியவில்லை. பிறகு ஜெயலலிதா தம்மைத் திருப்பிச் சேர்த்துக் கொள்ளவேண்டுமென அலையாய் அலைந்தார். சீந்தப் படவில்லை. பின்னர், முண்டியத்துக் கொண்டு ஸ்டாலினையும், துரைமுருகனையும், ஆர்க்காடு வீராசாமியையும் ‘சரிக் கட்டி’ திமுகவில் போய்ச் சேர்ந்தார்.

பின் ஒரே மகாமகோ வளர்ச்சிதான். கடந்த திமுக ஆட்சியில் உணவு அமைச்சராகவும் இருந்து மகத்தான ஊழல்கள் பல செய்து, கடந்த சில வருடங்களிலேயே அவர் பலபல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார். இப்போது ஒரு மாபெரும் கல்வித்தந்தை இவர்!

 • அருணை பொறியியல் கல்லூரி
 • ஜீவா வேலு பன்னாட்டு உறைவிடப் பள்ளி
 • ஜீவா பாலிடெக்னிக்
 • சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை
 • கம்பன் கல்வி நிறுவனங்கள் (ஐடிஐ, பொறியியல், அறிவியல் கலை, நர்ஸிங் இன்னபிற – அண்மையில், திருவண்ணாமலை திமுக நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், இந்தக் கம்பன் கும்பல் நிறுவனங்கள் பற்றி அவர் – சார், அது 20 சதுரகிலோமீட்டர் பரப்புடையது, அது கடல் என்றார்; நிற்க, மன்னிக்கவும், கம்பன் என்பது எ.வ.வேலுவின் ஒரு மகனின் பெயர்; ராமாயணத்துக்கும் இந்த வேலுவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை!)

இவை தவிர, அவருக்கு திருப்பூரிலும் திருவண்ணாமலையிலும் கிரானைட், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானத் தொழில்கள், பினாமி நிலங்கள், வீடுகள், திரைப்பட, தொலைக்காட்சி முதலீடுகள்… நீளும் பேராசைக் கைகள். (திருவண்ணாமலை நண்பர், வேலு இரண்டு மூன்று தமிழ்ப் படங்களைத் தயாரித்ததாகக் கூடச் சொல்கிறார் – எனக்கு இது பற்றி விவரங்கள் தெரியாது); இதைத் தவிர, இந்தியன் வங்கியிலிருந்து பெறப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான, திருப்பித் தரப்படாத கடன்கள்…

-0-0-0-0-

எ வ வேலு, ஆரம்பத்தில் விவசாய டீசல் எஞ்சின்களை சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். பின்னர்‘தாமோதரம்’ பஸ் சர்வீஸில் ஒரு பேருந்து நடத்துனராக வேலை செய்து வந்தார் – கஷ்டஜீவனம் – விருத்தாசலத்திலிருந்து திருவண்ணாமலை வரை அவருடைய ‘ரூட்.’ இந்தத் தொழிலில் அவர்தம் மேதமையை அவரால் வெளிக் கொணர முடியவில்லை.

எனக்குத் தெரிந்து பேருந்து நடத்துனராக இருந்து பின்னர் பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர் இருவர் – ஒருவர் எ வ வேலு – இன்னொருவர் நடிகர் ரஜினிகாந்த். பின்னவர் நிஜமாகவே உழைத்திருக்கிறார். எ வ வேலு அவர்களும் உழைத்திருக்க வேண்டும்தான் – எங்கே அப்படி அசுர உழைப்பு உழைத்துத் தள்ளினார், எப்படி யாரால் இவ்வளவு பணம் என்றெல்லாம் ஏடாகூடமாகக் கேள்வி கேட்டால் அவர் என்னதான் செய்வார், பாவம்…

ஏதோ இவர் நமக்குக் கல்வி தருகிறாரோ, நாம் பிழைத்தோமோ!

கு. பிச்சாண்டி

இவர் பல வருடங்களாக இவர் ஒரு திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். திமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். எ வ வேலு அவர்களால் திமுகவில், தற்போதைக்கு ஒரங்கட்டப்பட்டுள்ளார். எனினும், இப்போது இவரும் ஒரு கல்வித்தந்தை!

எஸ்கேபி கல்வி நிறுவனங்கள் இவருடையவை. முக்கியமானது எஸ்கேபி பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலையில் உள்ளது. இதன் கட்டிடங்களையும், பரப்பளவையும் கண்டால் அசந்து போவீர்கள்! ஆனால் பாவம் அதன் மாணவர்கள் – திருவண்ணாமலையின் ஈசன் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

பிச்சாண்டி, ரியல் எஸ்டேட், வணிகம், நிலங்களை மடக்கிப் போடல் போன்ற பல பிற பணிகளிலும், அடிஉதைசண்டைகளிலும் ஆர்வத்துடன் ஈடு பட்டு (எ வ வேலு அளவு இல்லாவிட்டாலும்) திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர்தம் தந்தையார் ஒரு லாரி புரோக்கராக இருந்தார். ஏதோ கொஞ்சம் பணம் நேர்மையாகச் சம்பாதித்தார் – கொஞ்சம் விளை நிலம் வாங்கிப் போட்டார். ஆனால், பிச்சாண்டியின் அசுர உழைப்பு அவருக்கு இல்லை. அதனால் தான் அவர் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு சொத்து சேர்க்கமுடியவில்லை, பாவம்.

-0-0-0-0-

ஏன் இவர்களைப் பற்றி எழுதினேன்? எதற்கு இந்தக் கல்வித்தண்டங்ந்தைகள் மீது என் நேரத்தை வீணாக்க வேண்டும்?

எனக்கு, இந்தக் குப்பைக் கல்லூரிகளுக்கு தங்கள் மக்களை அனுப்பித்தான் தீருவோம் என்று கங்கணமிட்டுக் கொண்டு நிலபுலங்களை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும், கஷ்டப்பட்டுப் பணத்தைப் புரட்டி  இக்கல்வித்தந்தைகளுக்கு தண்டம் அழத்தான் செய்வேன் என்றலையும் பைத்தியக்கார மனிதர்களிடம் பேசி மாளவில்லை.

இதில் ஒருவர், பிதுரார்ஜித நிலங்களை விற்று ரூபாய் 40 லட்சம் செலவழித்து, சீன குவாங்டாங்கில் உள்ள ஒரு டப்பா மருத்துவக் கல்லூரிக்கு (இது ஒரு காமிஸார் நடத்தும் பம்மாத்து; அங்கும் கல்வித்தந்தைகள் உள்ளனர்!!), ஒரு மருத்துவனாகியே தீருவேனென்று அடம் பிடித்த தன் மகனை அனுப்பியிருக்கிறார். ஆனால் மிக  நன்றாக படித்த தன் மகளை பனிரெண்டாம் வகுப்புக்குப் பின் நிறுத்தி விட்டார்!

ஆகவே.

5 Responses to “கல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி”

 1. Anonymous Says:

  இந்த கல்வி “வள்ளல்கள்” கல்லூரிகளின் “தரம்” பற்றிய கேள்விக்கு தங்கள் கட்டுரை விளக்கமளித்தது. பொய் மாயை புலனாகிறது. அதே சமயம் அரசு உதவி பெற்று நீண்ட காலம் சரியான பாதையில் செல்லும் கல்வி கருத்தாளர்களையும் பாராட்டியிருப்பது, நல்லோர்களின் மனதை புண்படுத்தாது.

 2. Bala Says:

  What about VIT, run by G Viswanathan.

  • ramasami Says:

   நிறைய யோசனைக்குப் பிறகு – இது கொஞ்சம் வருடங்களுக்குப் பின் பரவாயில்லை என்கிற நிலைமையை அடையலாம் என்றுதான் தோன்றுகிறது. தற்போது என் அனுமானம் பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. :-(

   இதில் படித்த இளைஞர்கள் சிலரைப் பல வருடங்கள் முன் நேர்முகத் தேர்வு செய்தபோது அவ நம்பிக்கையாகத்தான் இருந்தது.

   இப்போது ஆராய்ச்சியெல்லாம் நடக்கிறது என்கிறார்கள் – ஆசிரியர்கள் தரம், அவர்களின் பிராபல்யம், சர்வதேசத்தரம் வாய்ந்த ஆய்வுப் பதிவேடுகள், ஆய்விதழ்கள் போன்றவற்றில் இப்பல்கலைக் கழகத்தின் பங்களிப்பு, ஒப்பந்த ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவை மீதுதான் அவைகள் அடிக்கட்டுமானமாக இருந்தால்தான் – இது மேன்மையடைய முடியும்.


 3. இன்று தான் ஒவ்வொரு கட்டுரையாக படித்துக் கொண்டு வருகின்றேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s