பிலுக்கர்கள்

27/10/2012

ஒரு காலத்தில் (1983 வாக்கில்?), நண்பர் ஒருவர் அமெச்சூர் ரேடியோ பேச்சுவாக்கில் உயர்வாகப் பரிந்துரைத்தாரே என்று – அம்மணி ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் (Gertrude Stein) அவர்களின் ஒன்றிரண்டு புத்தகங்களை மிகவும் கஷ்டப்பட்டு, பொங்கும் கோபத்தை அடக்கிக் கொண்டு, அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் இந்த அம்மணி என்று வாசித்திருக்கிறேன். The Autobiography of Alice B. Toklas என்பது அவற்றில் ஒன்று என்று மங்கலாக நினைவு.

நண்பர் இதனை தளுக்கி மினுக்கிப் பிலுக்கிக்கொண்டு போலிப் பகட்டுடன் அலைவதற்காக (”உம்பர்தோ ஈகொ / இலியட் / பெக்கெட் / சோம்ஸ்கி /… என்னமா எழுதறான்யா – ஆனாக்க இவங்கெல்லாம் மக்கள அடைய ரொம்ப நாளாவும்” வகை) சிபாரிசு செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள எனக்குப் சிலகாலம் ஆகியது.

ஒருவருமே படித்துப் புரிந்துகொள்ள முயற்சி கூடச் செய்யக்கூடாது என்கிற படுமுனைப்பில், (கொடும் தமிழை விட்டேனாபார் எனத் துரத்தும்) மஹாமஹோ கொடும் வெட்டி ஆங்கிலத்தில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விரக்திதரும் வரிகளில், நிகழ்வு அ-சேர்க்கைகளில் வர்ஜாவர்ஜமில்லாமல் எழுதியவர் ஜெர்ட்ரூட்.

இவருக்குப் பின்னாலும் ஒரு பெரிய பிலுக்கர் கூட்டம் அலைந்து கொண்டிருந்தது! ஒரு காலத்தில் இந்த அம்மணியின் ஏகாதிபத்தியம் இலக்கிய / கலை வட்டங்களில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது – இவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள விருப்பமில்லா படைப்பு ஆளுமைகளை நசுக்க முயன்றிருக்கிறார் கூட! (இச்சமயம், இவரிடம் பாப்லொ பிகாஸோ, ஹென்றி மாடிஸ் போன்றவர்கள் உதவி பெற்றார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்)

நிற்க, நம் தமிழிலும் snob valueவுக்காக (மட்டுமே)  எழுதும் பிலுக்கர்கள் எப்போதுமே இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர்.

புதுமைப்பித்தன் கூடஒரு சமயம்  ‘வார்த்தைகளை வெச்சு மக்களை பயமுறுத்துவது ரொம்பவும் லேசு’ என எழுதியதாக நினைவு.

ஆனால் நான் எழுத வந்தது, இந்த தளுக்கிமினுக்கிப் பிலுக்கர்களைப் பற்றி அல்ல, நான் அண்மையில் படித்த – அம்மணி ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் அவர்களுக்கு ஒரு பதிப்பாளர் 1912ல் எழுதிய – அழகான ’உங்கள் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியாது’ என்கிற அங்கதம் ததும்பும் கடிதம்.

நான் ஒரு… ஒரே ஒரு.ஆள்.. ஒரே ஒரு ஆயுள்… விட்டு விடுங்கள்… நன்றி: http://www.lettersofnote.com/2011/02/hardly-one-copy-would-sell-here-hardly.html

இதன்  ‘ஒரு மாதிரி’ தமிழாக்கம்:

ஏப்ரல் 19, 1912.

அன்புள்ள அம்மணி,

நான் ஒரே ஒரு, ஒரேயொரு, நான் தான். ஒரே ஒரு மனிதன் தான். ஒரே சமயத்தில் நான் பல இல்லை. இரண்டு இல்லை மூன்று இல்லை – ஒன்றே ஒன்றுதான். வாழ ஒரே ஒரு வாழ்க்கை தான். ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் தான். ஒரே ஒரு ஜோடிக் கண்கள் தான். ஒரே ஒரு மூளை தான். ஒரே ஒரு ஆத்மா தான்.

நான் ஒன்றாக மட்டுமே இருப்பதால், ஒரு ஜோடிக் கண்கள் மட்டுமே இருப்பதால், ஒரு வாழ்வுக்கான நேரம் மட்டுமே இருப்பதால், ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே இருப்பதால், உங்களுடைய கையெழுத்துப் பிரதியை மூன்று நான்கு முறை, வாசிக்க முடியாது. ஏன், ஒரு முறை கூட வாசிக்கமுடியாது. ஒரு பார்வை, ஒரேயொரு பார்வை போதும். ஒரு பிரதி கூட இங்கே விற்காது. ஒரு பிரதி கூட. ஒரு பிரதி கூட…

மிக்க நன்றி. நான் உங்களுடைய கையெழுத்துப் பிரதியை பதிவுத் தபால் மூலம் திருப்பியனுப்புகிறேன். ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி, ஒரேயொரு தபாலில்.

உண்மையுள்ள,

(ப்ச் – ஆங்கிலத்தில் உள்ள அங்கதம் இதில் சரியாக வரவில்லை!)

நம் பதிப்பாளர்களுக்கும், இப்பேர்ப்பட்ட தமிழ்ப் பிலுக்கு எழுத்தாளர்களுடன் போக்குவரத்து இருக்கலாம் – இந்தப் பாவப்பட்ட பதிப்பாளர்களுக்கு இன்னமும் நகைச்சுவை உணர்ச்சி இருக்குமானால் இப்படிப்பட்ட கடிதங்களைத்தான் எழுதுவார்களோ என்னவோ!

ஆனால் நான் நிச்சயம் சொல்ல முடியும், பல தமிழ் எழுத்தாளர்களுக்கு (ஒரு வாசகனாக) நான் இப்படி எழுதி, என் சொந்தப் பணத்தைப் போட்டு வாங்கிய அவர்கள் எழுதிக்கிழித்த் அ-புத்தகங்களையும் திருப்பி அனுப்ப ஆசை – என்னிடம் இதற்கு ஒரு நீண்ண்ண்ண்ட ஜாபிதா இருக்கிறது! (அண்மையில் ’காவல் கோட்டம்’, இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது’ அதற்கு முன்னால் ’சோழர் காலத்துச் செப்பேடுகள்’ இவற்றின் எழுத்தாளர்கள் பிலுக்கர்கள் போலத் தெரியவில்லை என்றாலும்!)

பின்குறிப்பு: ஆர்தர் ஃபிஃஃபீல்ட் அவர்களின் சமாதியின் திசையை நோக்கி ஒரு நமஸ்காரம் செய்கிறேன் – அவருடைய இந்த கிண்டல் பொங்கும் வீரமான செயலால், அம்மணியின் புத்தக வெளியீடு கொஞ்சம் தாமதமானதால்…

Advertisements

One Response to “பிலுக்கர்கள்”

  1. tamil underdog Says:

    இந்த எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா என்று அழைத்து மேடையேற்றி புத்தகங்களை அப்போதேதிரும்ப கொடுத்து விடுங்கள் :)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: