மெக்காலேயும் நானும்
07/11/2012
“நான் ஒரு பதினான்கு சிறுவனாக இருந்த போது, என் தந்தை எந்த அளவுக்கு முட்டாளாக, அறியாமையில் மூழ்கி இருந்தாரென்றால், அவர் என்னருகே வந்தாலே எனக்குப் பற்றிக் கொண்டு வரும்; சகிக்க முடியாது அவரை.
ஆனால் எனக்கு இருபத்தி ஒன்று வயதில் அவரைப் பார்க்கும்போது, ஏழே ஆண்டுகளில் மனிதர் எவ்வளவு கற்றுக் கொண்டு விட்டார் என ஆச்சரியமாகவே இருந்தது…”
— மார்க் ட்வெய்ன் (Mark Twain, “Old Times on the Mississippi” – Atlantic Monthly, 1874)
அது 1982 என நினைவு. அப்போது நான் ஒரு முதிரா இளைஞன் (இப்போது ஒரு முதிரா நடுத்தரவயதினன் அல்லது முதிரா 48 வயது அரைக் கிழவன் – இதுதான் வித்தியாசம்).
ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…
என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான தீர்வு இருந்தது.
கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது. இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.
இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம் என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.
ஆக, என் அதீத தன்னம்பிக்கைப் புல்லரிப்புக்குக் கேட்பானேன்!
இப்படியாகத்தானே ஒரு நாள், ’தேசபக்த, மக்கள் சார்ந்த அறிவியல் தொழில் நுட்பக் குழு’ (PPST – Patriotic and People Oriented Science and Technology) சார்பு நண்பர் ஒருவர் கூப்பிட்டார் என்று ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றேன்.
=-=-=-=
இது நடந்தது சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு.
அந்தக் கூட்டம் நடந்தது அடையாறு அருணாசலபுரத்தில் ஒரு பழைய பங்களாவில் மாலை நான்கு மணி அளவில் என நினைவு; ஒரு வழியாகக் கல்லூரி ஹாஸ்டலில் இருந்து கிளம்பி நானும் நண்பனும் ஒரே சைக்கிளில் மூச்சிரைக்கப் போய்ச் சேர்ந்தோம்.
போகும் வழியெல்லாம் நண்பருடன் வளவளா வள்வள் என்று ஒரே தர்க்கம்.
பாடுபொருள்: யான் மிர்டால் எழுதிய ஒரு கட்டுரை பற்றிய என் பரவசம். ஒரே சச்சிதானந்தம்தான் போங்கள்..
இந்த மிர்டால் தான் பிற்பாடு ‘இந்தியா காத்திருக்கிறது’ என்கிற நக்ஸல்பாரிக்கொடூரம் சார்புப் புத்தகத்தை, அவர்கள் செய்வதை, செய்யவிழைவதை நியாயப் படுத்தி எழுதினார். அண்மையில் கூட (மே 2012) இவர் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.
எது எப்படியோ…
ஒரு அலட்சியமான மனோபாவத்துடன் ‘இவங்கெல்லாம் என்ன பெரிய புடுங்கிகள். பழம்பெருமை பேசிக் கொண்டே காலத்தை ஒட்டுகிறான்கள். இவனுங்களை ஒரு கை பார்க்க வேண்டும்’ என நினைத்துக் கொண்டுதான் உள்ளே சென்றேன்.
சுமார் 40-50 பேர் அங்கு இருந்திருந்தால் அது அதிகம். பெரும்பாலும் கதர் உடை அணிந்து கொண்டிருந்தார்கள், ஜமக்காளத்தில் அமர்ந்துகொண்டு அமைதியாக, மிருதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார்கள் – இளக்காரமாக ‘சரிதான், இவன்கள் “அந்தக் காலத்திலேயே ஜெர்மன் காரன் இந்தியாலேர்ந்து ராக்கெட் விட்ற டெக்னாலஜிய திருடிண்டு போய்ட்டான்” எனப் பேசப் போகிறார்கள், கிழிச்சுடலாம் இவனுங்கள…’ என நினைத்துக் கொண்டு இறும்பூதடைந்தேன்.
… எளிமையான ஒருவர் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார். சரியாக, நேரம் தவறாமல் அமர்வு ஆரம்பித்தது. கடைசியாக வந்தவர் தான் தரம்பால் என்று சொன்னார்கள்.
நான் நமட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்தேன், நமது பீரங்கியை வைத்து PPSTயைப் பிளப்பதுவும் எந்நேரமோ என்று, ஒடும் மீன் ஓட. உறுமீன் வருமளவும் வாடியிருந்தேன்.
சிறிது நேரம் கழித்து, தரம்பால் பேச ஆரம்பித்தார். எனக்குத் தாளவில்லை.
சுமார் அரைமணி நேரத்திற்குப் பின் அவர் பேச்சில் ஒரு இடைவெளி வந்தபோது மறித்துப் பேசினேன்: “எனக்குத் தோன்றுகிறது – இந்தியாவின் மதமும் அதன் கலாச்சாரமும் அதன் 5000 ஆயிரம் ஆண்டு சனாதனமும் தாம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றன… … என்னதான் நம்மைப் படுமோசமாகச் சுரண்டியிருந்தாலும், ஆங்கிலேயர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்,.. … அவர்கள் நம்மை உய்விக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதினால்… பழம் பெருமை பேசி என்ன பயன்? அந்தக் காலத்தில் நாம் எப்படி இரும்பும் எஃகும் செய்தோம் என்பதை இப்போது அறிந்து கொள்வதில், புளகாங்கிதம் அடைவதில் என்ன லாபம்? … … காந்தியம் ஒரு காலாவதியான விஷயம், அது அறிவியல் பூர்வமானதல்ல… … மக்களை முன்னேற விடாமல் நீங்கள் வெட்டிப் பழம்பெருமை பேசுவது எவ்வகையில் நியாயம்”
கூட்டத்தில் ஒரே மௌனம். என் நண்பர் நெளிந்து கொண்டிருந்தார், பாவம்.
ஆனால் தரம்பால் – அப்படியா, நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா எனப் பொறுமையாகக் கேட்டார். இதைப் பற்றிப் பின்பு விவாதம் செய்யலாம் என்றார்.
எனக்கு இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த மௌடீகர்களை, நபும்ஸகர்களைப் பார்த்து…
“புராணமித்யேவ நஸாது ஸர்வம” என்றேன்.
பின் விருட்டென்று, எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கிளம்பி விட்டேன். ஐந்தாறு கிமீ வேகமாக நடந்து ஹாஸ்டல் போய்ச் சேர்ந்து குளிர்ந்த நீரில் குளித்தபின்னர் தான் அமைதியானேன்.
நண்பனில்லாமல் இரவு உணவு சாப்பிடும்பொழுது, தேவையே இல்லாமல் மதிக்கத்தக்க பெரியவர் ஒருவருடன் அகங்காரமாகப் பேசினோமோ என ஒரு நெருடல் தோன்றியபடி இருந்தது.
அப்படியெல்லாம் சுயபரிசோதனை செய்துகொள்வது தவறான விஷயம் அல்லவா? ஆகவே, உடனே, அந்த எண்ணத்தைத் தேய்த்து ஒழித்துவிட்டு ‘The age of Reason’ (ழான் பால் ஸாஹ்ர்த்ஹ்ர்) படிக்க ஆரம்பித்தேன்.
நண்பன், இரவு சுமார் 9 மணிக்குத் திரும்பி வந்தான். என் அறையைத் தாண்டிச் செல்லும் போது, ”டேய், இப்போ ஒனக்குத் திருப்திதானேடா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்?” எனக் கேட்டான்.
நான் ஒஹ்ஹோஹ்ஹோ எனச் சிரித்தேன்.
=-=-=-=
பதினைந்து வருடங்களுக்குப் பின், என் அக்கால கோவா நண்பர் க்லாத் ஆல்வாரெஸ் கூட ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது, ரஜ்னி பக்ஷி அவர்கள் பற்றிப் பேச்சு வந்தது. அவர் மூலம் ஸ்ரீ தரம்பால் அவர்களைத் தொடர்பு கொண்டேன். கடிதப் போக்குவரத்து ஆரம்பித்தது.
2001ல் நான் மனைவி மகள் அம்மாவுடன் ஒரு சிறு காந்தி ஷேத்ராடனம் செய்தேன் / சென்றேன். அற்புதமான அனுபவங்கள்.
ஸ்ரீ தரம்பால் அவர்களை வார்தாவில் உள்ள ஸேகான்வ் கிராமத்து காந்தி ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். மன்னிப்புக் கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே, முதுகில் ஒரு ஷொட்டு கொடுத்தார். நினைவு வைத்துக்கொண்டு “புராணமித்யேவ நஸாது ஸர்வம்’ என்றார். மறுபடியும் குழந்தை போலச் சிரித்தார்.
Oh what a relief!
என்ன செய்கிறாய் இப்போது என்று கேட்டார். நான் telecom stacks SS7 VoIP, தொழில்முனைவுகள் என்று என்னென்னமோ சொன்னேன். அவர், “நமக்கு நம்முடைய, பாரதத்துக்கே உரித்தான டெலிகாம் தொழில் நுட்பம் வேண்டும். அஷோக் ஜுன்ஜுன்வாலாவோட சேர்ந்து ஏதாவது செய்யலாமே” என்றார். (நான் செய்யவில்லை)
இல்லே, நீ ஏதாவது கிராமப் பள்ளியில் ஆசிரியனாகப் போகலாமே என்றார். (போனேன்)
=-=-=-=
கடிதத் தொடர்பு தொடர்ந்தது. ஸ்ரீ தரம்பால் அவர்கள், 2006ல் இயற்கை எய்தினார்.
=-=-=-=
தொடர்புடைய சுய அனுபவம் சார்ந்த பதிவுகள்:
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2) (டிசம்பர் 30, 2011)
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1) (டிசம்பர் 28, 2011)
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (டிசம்பர் 25, 2011)