சாம்பார் தேசம்

17/11/2012

சாம்பாரே! உன்னை நாங்கள் ஆராதிக்கிறோம்.

நீ ஜீவாத்மா
நீயுமே பரமாத்மா
நீ எங்கள் ஊழ்
நீ ப்ரபஞ்சம்
நீயே ப்ரம்மன்
நீ வாழி

சாம்பாரே! நாங்கள் உன்னை ஆராதித்து
உன்னையே படையல் செய்து
உனக்கே படைத்து
பின் உண்கிறோம் உன்னை எடுத்து

நீ   நீடூழி வாழி!

சாம்பாரே!
உன்னில் நான்
என்னில் நீ
அஹம் ப்ரம்மாஸ்மீ

=-=-=-=-=

இதற்கு முந்தைய பதிவான சர்வதேச ’சாம்பார்’ கோடு படித்தபின் இதனைப் படித்தால் நலம்.

ஆன்மிகத்திலிருந்து (திடீரென்று) லௌகீகம்

சர்வ வல்லமை மிக்க, சுத்த சன்மார்க்க சத்திய சாம்பாரினால் தீர்க்கமுடியாத பிரச்சினையே இல்லை!

ஏன், அதன் மூலம் திமுக கூட அதன் ஆதாரசுருதி இடியாப்பச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முடியும். (இதனைப் பின் காணலாம்)

=-=-=-=-=

முந்தைய கட்டுரையிலிருந்து தொடர்ச்சி…

… ஆக, கொஞ்சம் கொஞ்சமாக, நமது அண்டைய நாடுகளான இந்த கன்னடசாம்பார், மலையாளசாம்பார், தெலுங்குசாம்பார் நாடுகள் நமது தமிழகத்தை கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டன.

இதனை நாம் எப்படி எதிர்கொள்வது? எங்கு தொடங்குவது? நம் தமிழகத்தைச் சூழப் போகும் அ-சாம்பார் இருளில் இருந்து நம்மை எப்படி மீட்டுக் கொள்வது?

இவற்றைப் பற்றிச் சிந்திக்க முனைவதற்கு முன்னால், நாம் நம்மைப் பற்றி சரியான புரிதல்களுடன் இருக்கிறோமா?  நான், நாம் நம்மை சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை எனத்தான் நினைக்கிறேன்.

ஆகவே, முதலில் தமிழகத்தை செலுத்தும், வழி நடத்தும் அடிப்படைக் காரணிகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்:

 1. வாரிசுகள் இடையே, சகோதர-சகோதரிகளிடையே சொத்துரிமைப் போர்கள்;  நம் தமிழகம், வாரிசுகளின் சிறைக்கூடம். பலவிதசாம்பார்  இனங்களின் சிறைக்கூடமும் கூட.
 2. பொதுவாகத் தமிழர் பண்பாடு – குறிப்பாக, தமிழ் இலக்கியம்.
 3. தமிழுணவாம் சாம்பாரைப் பற்றிய பெருமை இல்லாமை.

எப்படி இவற்றை எதிர் கொள்வது?

 1. தமிழகத்தைப் பிரித்து வாரிசுகளுக்கு அளிப்பது.
 2. கலைஞர் அவர்கள் ’நடமாடும் இலக்கியம்’ என்பதால், மற்ற, தேவையற்ற தேங்காய் மூடி இலக்கியவாதிகள் அனைவரின் காலையும் கையையும் உடைத்தல் – ஊக்க போனஸாக, அவர்கள் உதவாக்கரை மண்டைகளையும்.
 3. குழந்தைகளுக்கு ‘கர்வத்துடன் சொல், நான் சாம்பார் சாப்பிடுபவன் என்று’ என, சிறு வயதிலிருந்து புகட்டல்.(இவ்வமயம்,  நம் நற்றமிழில், போற்றுதற்குரிய சாம்பாரை , சாம்பான் என மரியாதைக் குறைவாக நாம் அழைப்பதே இல்லை என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளுதல் நலம்.)

சாம்பாரே ப்ரும்மம் என்பது, என்னைப் போலத் தேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் துணிபு என்பதால், நாம் மூன்றாம் காரணியைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

என்னுடைய எண்ணம் என்னவென்றால் – சாம்பாரை முன்வைத்து நம் இன எதிரிகள் நம்மை மூழ்கடிக்க முயன்றால், நாம் அதே சாம்பாரில் எதிர் நீச்சலடித்து –  நீச்சல் தெரியாவிட்டால், அதில் மிதக்கும் முருங்கைக்காய், வெண்டைக்காய் துண்டுகளைப் பற்றிக் கொண்டு, நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும், சாம்பாரினூடாக, சாம்பாரினூடாக மட்டுமே தீர்வு  காணவேண்டும்…

திராவிடம் = தமிழ் = சாம்பார் என்கிற எண்ணம் தான் நமது சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்க வேண்டும்.

மனதினிலே உறுதி வேண்டும், வாயினிலே சாம்பார் வேண்டும்.

=-=-=-=

சரி.

முதலில் நமக்கு, சாம்பாரைப் பற்றிய சில அறைகூவல்கள், வீர் முழக்கங்கள் தேவை. சில உதாரணங்கள்:

 • அடைந்தால் சாம்பார் நாடு, இல்லையேல் சுடுதண்ணீர், ஓடு!
 • திக்கெட்டும் சாம்பார் முரசு கொட்டச் செய்வோம். (வழுக்கி விழட்டும், நம் இன எதிரிகள்)
 • சாம்பாரே வெல்லும்!
 • எங்கும் சாம்பார்! எதிலும் சாம்பார்!!
 • உலகின் முதல் சாம்பார், தமிழ்ச் சாம்பார்!
 • கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முந்தையது தமிழ்ச் சாம்பார்!
 • இருப்பதோ ஒரு சாம்பார், அது ஊசுவதோ ஒரு முறை…
 • புலியின் தலையில் சாம்பாரைக் கொட்டி விரட்டியவள் புறநானூற்றுத் தாய்!
 • சாம்பார் எங்கள் பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவோம்.
 • சாம்பார் குடி, அல்லது செத்து மடி!
 • இந்தி எழுத்தை, சாம்பார் பூசி அழிப்போம்!
 • சாம்பார் நாடு சாம்பாரர்களுக்கே! (ஆண்பால்)
 • சாம்பார் நாடு சாம்பராணிகளுக்கே!
 • இனி ஒரு சாம்பார் செய்வோம்! அதை எந்நாளும் ஃப்ரிட்ஜில் வைத்துக் காப்போம்!
 • ஒன்றே பாத்திரம், ஒருவனே சாம்பார்!

நமது அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பெயரில், ’திராவிட’ என்பதையோ அல்லது அதற்கு இணையான அரசியல் குறியீட்டையோ ’சாம்பார்’ என மாற்றினால் ஒரு முடிக்கும் வித்தியாசமும் இருக்கப் போவதில்லை என்பதால், இரண்டாவதாக, அதனைச் செய்வோம்:

 • சாம்பார் முன்னேற்றக் கழகம்
 • அகில இந்திய அண்ணா சாம்பார் முன்னேற்றக் கழகம்
 • மறுமலர்ச்சி சாம்பார் முன்னேற்றக் கழகம்
 • தேசிய முற்போக்குச் சாம்பார் கழகம்
 • சாம்பார் மக்கள் கட்சி
 • இந்திய தேசிய சாம்பார்ஸ்
 • நாம் சாம்பார் இயக்கம்
 • தனிச் சாம்பார் இயக்கங்கள்
 • விடுதலை சாம்பார் கட்சி
 • புதிய சாம்பார் கட்சி
 • புதிய சாம்பாரகம்
 • கொங்கு சாம்பார் முன்னேற்றக் கழகம்
 • சாம்பார் ப்ளாக்

கீழ்க்கண்டவை பெரும்பாலும் தனித்தன்மை வாய்ந்தவை, தன்னளவில் மதிக்கத்தக்கவை என்றாலும்… அவர்களும் ‘அய்யோ சாம்பார் போச்சே’ என எண்ணக்கூடாது என்பதால்…

 • பாரதீய சாம்பாரீய கட்சி
 • ராஷ்ட்ரீய சாம்பார்சேவக் சங் (+ சாம்பார் பரிமாற்)

சரி, அவர்களைச் சேர்த்துக் கொன்றால், இவர்களையும் சேர்த்துக் கொல்லலாம்:

 • இந்திய சாம்பாரிஸ்ட் கட்சிகள்
 • சாம்பாரிஸ்ட்-குழம்பிஸ்ட் கட்சிகள்  (சாம்பார் யுத்தம் உட்பட)
 • புரட்சிகர சாம்பார் இயக்கங்கள் (நீர்த்துப் போனவுடன், அவை ரசமாவது இயல்பு)

=-=-=-=

சாம்பார் அரசியல், இலக்கிய, தத்துவச் சொலவடை…

கூட, சாம்பார்-சார்பின்மை, அடிப்படை சாம்பார் உரிமை, சாம்பார்நாயகம், சாம்பார்த் தீவிரவாதம், தீவிரச் சாம்பார்வாதம், சாம்பார் அடிப்படைவாதம், சாம்பாரியம், முரணியக்கச் சாம்பாரியம், சாம்பார் முதல்வாதம், கீழைச் சாம்பாரியம், சாம்ஃபாஸிஸம், சாம்பார் மெய்யியல், பின்சாம்பாரத்துவம், சாம்பாரித்வா, போலி சாம்பார்-சார்பின்மை, சாம்பாரை ரசமாற்றம் செய்யும் நிறுவனங்கள், காந்தி கண்ட சுயசாம்பார், அகண்ட சாம்பார், சாம்பார் ஒதுக்கீடு, சாம்பார் வரி, சாம்பார் உலை எதிர்ப்பு, சாம்பார்புறச் சூழல் காத்தல், சாம்பாரியல், சாம்பார்ஜீவிகள், பன்னாட்டு சாம்பார் வருகை எதிர்ப்பு, சாம்பாருக்கு எதிராக இந்தியா, இந்தியாவுக்கு எதிராகச் சாம்பார், ஸ்ரீஸ்ரீ சாம்பாரானந்தா குட்டி நடிகை சாம்பராணிஸ்ரீயுடன் குத்தாட்டம், சாம்பாருக்கும் ஆசைப்படு, சாம்பார் ஈஷ யோகம், சாம்பார் ஈஷா யோகம், ஆன்மீகச் சாம்பார், சாம்பார் ஆன்மிகம், 108 திவ்யதேசசாம்பார் யாத்திரைகள், சாம்பார் பரிகாரங்கள், சாம்பார் ஜோசியர் சொல்லி சாம்பாரில் முக்கி நிறமேற்றிய மேல்துண்டணிதல், ரம்ஸான் சாம்பார் சாப்பிடுதல், யார் என் சாம்பாரை நகர்த்தியது, சாம்பாரின் ஏழு பழக்கங்கள், சாம்பார் – நம் உடலுக்கு நண்பனா துரோகியா, சாம்பார் என்னை விடுதலை செய்யும்  – போன்றவை பற்றிப் பேசிப் பேசியே நம் காலத்தை அமோகமாகக் கழிக்கலாம்.

நமக்குத் தேவையான இதிஹாஸ சாம்பார்களை, தொன்மங்களை, நாட்டார்கதைகளை, செவ்விலக்கியங்களை, தற்காலத் தமிழெழுத்துக்களை – தொல்சாம்பாரம், சாம்ப ராமாயணம், மஹாசாம்பாரதம், திருச்சாம்பார், சாம்பாரின் செல்வன், சிவகாமியின் சாம்பார், துப்பறியும் சாம்பார், சாம்பார்த்தேவு, சாம்பார் நதி, சாம்பார்புரத்தில், சாம்பார்கொண்டபுரம், சாம்பார்த் தொழிற்சாலை, மீண்டும் சாம்பார், சாம்பார் புராணம், பின்தொடரும் சாம்பாரின் மணம், உபசாம்பாரம், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி சாம்பாரும் – போன்றவைகளை, தேவைக்கேற்றவாறு சமைத்து உருவாக்கிக் கொள்ளலாம்.

=-=-=-=

இப்போது நமக்கு எழுச்சி தருவதற்காக…

சாம்பார் – செவ்விலக்கியத்தினூடே ஒரு பயணம் – சில குறிப்புகள்

 • ’சாம்பார் சாப்பிட்ட புறங்கையைத் தானே நக்கினோம்’ என நம்கருணாநிதி அவர்கள் கேட்கவில்லையா?
 • பின்னர் அவரே, “தமிழர்களே, தமிழர்களே, என்னை நீங்கள் சாம்பாரில் தூக்கிப் போட்டாலும், அதில்  நான் முருங்கைக்காயாக மிதப்பேன்!” என்று சொல்லவில்லையா?
 • ’நாம் சமைக்கும் சாம்பார் நமதென்பதென்பதறிந்தோம்’ என நம் மீசைக் கவிஞன் ஆக்ரோஷமாகப் பாடி, பின்னதில் ஒட்டியிருந்த சாம்பாரினை, வேறு யாரும் பார்க்காதபோது நக்க வில்லையா?
 • ஏன், ஆட்டு ஈரல் சாம்பாரை நக்கி மகிழ்ந்த அந்த திருவிளையாடல் கால நக்கீரனாரும் நம் மூதாதை தானே!

ஏன் நாமும் நம் சுயமரியாதையை, பழம்பெருமைகளை, பண்பாட்டுத் தொடர்ச்சியை,  சாம்பார் என்கிற குறியீட்டைக் கொண்டு மீட்டுக் கொள்ளக் கூடாது?

=-=-=-=

இப்போது நாம் வாரிசுகளுக்கு வருவோம்.

எனக்கென்னவோ, போகிற போக்கில், குறைந்த பட்சம் மூன்றாகப் பிரித்தால் தான், தமிழகம் உருப்படுமெனத் தோன்றுகிறது.

சகோதர-சகோதரிகளுக்கு ஆளுக்கு (மூன்று பேருக்கும் மட்டும்) 1/3 தமிழகத்தைத் தாரை வார்க்கவேண்டும். பின் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து தங்களுக்குள் சண்டை போடாமல், மிகுந்திருக்கும் சாம்பார் நாட்டை கன்னடசாம்பார், மலையாளசாம்பார், தெலுங்குசாம்பார் நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற முடியலாம்.


சாம்பார் நாடு 2021 – எல்லைகள் – உள் நாட்டுப் பிரிவுகள் – முக்கிய, முக்காத சுற்றுலா தளங்கள் – இன்ன பிற… சர்வதேச சாம்பார்க் கோட்டிற்கு அந்தப் பக்கம், கொலை செய்யப் பட்ட சாம்பார் பிரேதங்கள் தான் கிடைக்கும், ஜாக்கிரதை!
அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.

என்ன, இவர்கள் மன்னர்களானால், மன்னிகளானால், மலைகளெல்லாம் க்ரானைட்டுக்கும், ஜல்லிக்கும் சுரண்டப் பட்டு, பள்ளத்தாக்குகளாகி விடும். ஏரிகள், ஆறுகள் அனைத்தும் குப்பை மேடுகளாக்கப் படும். அப்பொழுது நாம் பள்ளத்தாக்குகளை நீர் சேகரிக்கவும், மேலதிகமாகக் குப்பைகூளங்கள் போடவும் பயன் படுத்தலாம். குப்பைமேடுகளில் மலைவாசஸ்தலங்கள் அமைக்கலாம். (சென்னைக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் இப்படி 10 ஊட்டிகள் அமைக்கலாம்… ஆஹா!)

இன்னொரு அனுகூலம் என்னவென்றால், இடைச்சாம்பார் நாட்டரசி கவிதாயினி கனிமொழி அம்மணி அவர்களுக்கு கவிதை எழுத நேரமிருக்காது. நாம் தப்பித்தோம்!

=-=-=-=

பின் குறிப்பு: இப்படி எதுவும் நடக்காத பட்சத்தில், என் விதியை நொந்துகொண்டு, மனதிற்குள் ஊமை அழுகை அழுது, எல்லாம் என் ஜாதகம் என்று வாடி – நான் 2021லிருந்து சாம்பாரே சாப்பிடப் போவதில்லை. இது சத்தியம்.

கன்னட அசட்டுத்தித்திப்புச் சாம்பாரே, போ, போ, போ!!!

கேரள செங்கல் சாம்பாரே, போ, போ, போ!!!

தெலுங்கு ஏவுகணை எரிபொருள் சாம்பாரே, போ, போ, போ!!!

இளைய தமிழ் சாம்பாரினாய், வா, வா, வா!

=-=-=-=

முடிந்தால், நோ ஐ ராஜதுரை அவர்கள் எழுதிய ‘சாம்பார்ப் புரட்சி – ஒரு இலக்கிய சாட்சியம்’ நூலில் இருந்து சில பகுதிகளை, பின்னொரு சமயம் கொடுக்கிறேன்.

=-=-=-=

 ஜெய் சாம்பார்!  நன்றி.  வாழ்க சாம்பாருடன்!!

Advertisements

2 Responses to “சாம்பார் தேசம்”

 1. Anonymous Says:

  All political matters are cooked into SAMBAR. (i.e. not able to type in Tamil) But not able to digest. Your are probing the matter deeply, so make it palatable.

 2. Anonymous Says:

  fantastic sambar
  -surya


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: