மரணதண்டனையின் அவசியம்

28/11/2012

சென்ற வாரம் சென்னையில் அலைந்துகொண்டிருந்தபோது  (புதிய) நண்பர் ஒருவருடன் கொஞ்சம் அளவளாவ வாய்ப்பு கிடைத்தது. குடிப் பிரச்சினை பற்றியும் (நிறைய ‘கல்வி’ பற்றி) பேசி, கேட்டுக் கொண்டிருந்தேன்.

படித்த, தொடர்ந்து படிக்கும், யோசிக்கும், பணி செய்து கிடக்கும், எண்ணங்களைக் கோர்வையாகவும், தர்க்கபூர்வமாகவும் தொடுத்து, தொகுத்தளிக்கும் மனிதர்களைப் பார்ப்பது எனக்கு இப்போதெல்லாம் அபூர்வமாக இருக்கிறது. ஆகவே இந்த நண்பருடன் பேசியது ஒரு சந்தோஷமான விஷயம் தான்.

… அதன் தொடர்பாக, கிண்டிவிடப்பட்ட எண்ணக்கோவைகளினால்  கடந்த மூன்று இரவுகளாக, உணவு சமயத்தில் என் 13 வயது மகளுடன் ஒரு நீண்ட உரையாடல் … குடி பற்றி,  சமூகம், கொலைகள் பற்றி,  நீதி-மரணதண்டனை பற்றி… (மனைவி: என்ன இந்தமாதிரி கோரத்தையெல்லாம் சின்னப்பொண்ணு கிட்ட பேசற… உனக்கு மூளையே இல்லை!) .

இந்த முடிவிலா உரையாடலின் ஒரு தொகுப்பைக் கீழே கொடுக்கிறேன்.

தொடர்வதற்கு முன் ஒரு விஷயம் – நீங்கள் என்னுடைய முந்தைய வயிற்றெரிச்சல் கட்டுரையைப் படித்தீர்களா?

=-=-=-=-=

அந்தக் கணவனும் பெரும்பாலான மற்ற கணவர்களைப் போல, ஒரு
குடிகாரனே…

பொதுவாக, எங்கள் பக்கக் குடிகாரர்கள், குடித்துவிட்டு கோவில் பக்கத்து மைதானத்தில் எந்நேரமும் உருண்டுகொண்டிருப்பார்கள். குஞ்சாமணிகளை பகிரங்கமாகக் காட்டிக் கொண்டு சாலையோரம் அலைவார்கள். சாக்கடைகளில் விழுந்து புரள்வார்கள்.

இக்குடிமகன்களில் ஒருவர், மப்பு கொஞ்சம் அதிகமாக ஏறி, ஒருசமயம் சாலையோரம் வீழ்ந்து பிளந்திருந்த மட்டைப் பனங்காயைக் கூட, புணர பிரம்மப்ப்ரயத்தனம் செய்து முயங்கியிருக்கிறார். ரத்தம் வந்தபோதும் விடவில்லையாம். அப்படி ஒரு விடா முயங்கி! (இந்த விஷயம், என் இளம் நண்பர் அய்யனார் சொன்னது)

சிலர் – பழுப்பாக, பச்சையாக, விதம் விதமான நிறங்களில் வாந்தி எடுத்து தெருக்களையும் வீடுகளையும் நாற அடிப்பார்கள்.

மிகமிகமிகச் சிலர், பேசாமல் வீட்டிற்கு வந்து குப்புறப் படுத்துத் தூங்கி விடுவார்கள்.

சிலர் சத்தமாக சிவாஜி எம்ஜிஆர் தத்துவப்(!) பாடல்களை பாடிக் கொண்டே, ஐம்பதே அடி தூரம் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு 50,000 அடி வைத்து ஆற அமரச் சென்று கொண்டிருப்பார்கள்.

சிலர் வீட்டிற்குப் போய் மனைவிகளை, தகப்பன்களை, தாயார்களை, குழந்தைகளை நைய்யப் புடைப்பார்கள். கேடு கெட்ட, (எனக்கே கூட) கூசும் வார்த்தைகளால் அர்ச்சிப்பார்கள். பணத்தைப் பிடுங்கிக் கொண்டு செல்வார்கள். 45 வயதில் ரத்தவாந்தி எடுத்துச் சாவார்கள்.

மற்றும் சிலர், வீட்டிற்குச் சென்று எந்தப் பெண்ணானாலும் (அது அவர்களுடைய மகளே ஆனாலும்) புணர்வது தான் குறிக்கோள் என்று அலைவார்கள். சில சமயம் உதை படுவார்கள்.

=-=-=-=-=

அந்தக் கணவனும் ஒரு மொடாக்குடிகாரன் தான்.

இவனுடைய முக்கியமான வேலை – வேலை செய்யும் பெண்டாட்டியை உலுக்கி, மிரட்டி, தன்னுடைய மூன்று வயதுக் குழந்தையை அடித்து உதைத்து, பெண்டாட்டியை பயமுறுத்தி பணம் திருடிக்கொண்டு போய், டாஸ்மாக் சென்று, பின்,மேற்படி வேலைகள் அனைத்தும் செய்வான்,

மேலும் ஒன்றையும் செய்வான். கையில் எது கிடைத்தாலும் அதை பெண்டாட்டி மீது வீசி எறிவான். அது பாத்திரமாக இருந்தாலும் சரி, சுத்தியலாக இருந்தாலும் சரி.

பெண்டாட்டி அழுவாள். எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டாள். என்ன வுட்ருங்க, மன்னிச்டுங்க, ஞ்சாமீ, கடவுளே போன்ற புலம்பல்கள் மட்டுமே.

கடந்த 5 வருடங்களாக இதே கதையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எனக்கு ஒரு வருடமாகத்தான் இதனைப் பற்றித் தெரியும் – எனக்கு இம்மாதிரி விஷயம், பத்தோடு பதினொன்றுதான், அவ்வளவே.

இப்படித்தான் ஒரு நாள் காலை வேளை (முந்தைய இரவு எங்கோ குடித்துவிட்டு விழுந்து கிடந்துவிட்டு) வீட்டிற்கு வருகிறான் அந்தக் கணவன். பெண்டாட்டி வேலைக்குப் போகவில்லை – ஜுரம், பாயில் படுத்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

பணம் கேட்டு உதைக்க ஆரம்பிக்கிறான் கணவன்.

பக்கத்வூட்டுக் காரனுக்கு முந்தானை விரிச்ச பணம் எங்கடீ?

தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து உலுக்குகிறான். அறைகிறான். மறுபடியும் என்ன வுட்ருங்க, மன்னிச்டுங்க, ஞ்சாமீ, கடவுளே…

பின் தலைமுடியைப் பிடித்து அவளை உதைத்து வீட்டிற்கு வெளியே உள்ள சாலையில் தரதரவென, புடவையெல்லாம் அவிழ, கிழிய – இழுத்துக் கொண்டு போகிறான். என்ன வுட்ருங்க, மன்னிச்டுங்க, ஞ்சாமீ, கடவுளே…

அண்டை அசலில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இங்கு இம்மாதிரி விஷயங்கள் சர்வசாதாரணம்.

வீட்டுக்கு வீடு ஊத்திக் குடி.

இன்றைக்கு இந்தப் பெண் உதை பட்டால், நாளைக்குப் பக்கத்து வீட்டின் முறை.

காலை மணி 10.30.

மூன்றாம் வீட்டு வாசலில், சமீபத்தில் கூராக்கப் பட்ட ஒரு நீளப் புல்லருவாள் இருக்கிறது. அதனை எடுத்த கணவன் அதனை எடுத்து அவள் மேல் வீசுகிறான். குறி தவறவில்லை. முதுகில் ஒரு வெட்டு.

இன்னாடி திமிரா, பச்ச தெவ்டியா! எங்கேடி, சம்பாரிச்ச பணம்?

பெண்டாட்டி திகைக்கிறாள். ஒழுகும் ரத்தத்தைத் தொட்டுப் பார்க்கிறாள்.

கணவன் திரும்ப அரிவாள் பக்கம் தள்ளாடியபடிச் செல்கிறான்.

பெண்டாட்டிஒரு விக்கலுடன் குதித்தெழுகிறாள்

அந்த அரிவாளை எடுத்து ஒரே வீச்சு.

ஆ என்னாடி பண்ணப் போ…

கணவன் தலை போச்சு.

=-=-=-=

அந்த மூன்றாம் வீட்டில் இருந்து இவை அனைத்தையும் பார்த்த. கேட்ட சூட்டிகையான 15 வயதுச் சிறுமி என் மாணவி. இவள் அப்பனும் ஒரு குடிகாரன் தான்.

தொடர்ந்த வாரங்களில், எனக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தில் இக்குழந்தையுடன் பேசிப்பேசி, அதன் துக்கத்தை, பயத்தைத் தணிப்பதற்கு பல நாட்களாயின.

=-=-=-=

காவல்துறை, கைது, போஸ்ட்மார்ட்டெம் பரிசோதனைகள், பிணப்புதைப்பு. குழந்தை, பெண்டாட்டியின் தாய்வீட்டில். ஜாமீனில் வெளியே 3 நாட்களில். கணவன் வீட்டார்கள் மிரட்டல். கணவனின் தம்பி  ‘அந்தத் தெவ்டியாள் களுத்த சீவலன்னாக்க என் பேர மாத்திக்கறேன்.’ தெருக்காரர்களின் பீதி, வெறுப்பு.  என்ன இருந்தாலும் பொட்டச்சி எப்டி புருஷனையே கொல பண்ணலாம்.  அம்மனுக்கு பரிகாரம் பண்ணோணும். அவள ஒதுக்கி வைக்கணும். அவளத் தெர்த்தணும்.

குடிகாரக் கணவர்கள் ஆடிப் போயிருந்தனர்.

=-=-=-=

நான் மனிதாபிமானமற்றவன் தான். ஏனெனில் அந்தப் பெண் கொடுத்த மரண தண்டனை சரிதான் என நான் நம்பினேன், நம்புகிறேன்.

… சம்பவம் நடந்த நான்காம் நாள் அவர் வீட்டிற்குச் சென்றேன். நான்கு நாட்களாக அவர் சாப்பிட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். 3 வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

அவருக்கு வணக்கம் சொன்னேன். வெற்றுப் பார்வையுடன் இருந்த அவர் முழித்துக் கொண்டார். முதுகில் ஒரு பெரிய கட்டு. (13 தையல்கள், 3 பாட்டில் ரத்தம்)

என் கையில் இருந்த அந்த மாத சம்பளத்தை அவர் கையில் கொடுத்து விட்டு, நீங்க செஞ்சது சரிதான் என்றேன். இது அதிகமில்ல, செலவுக்கு வெச்சுக்குங்க.

புன்முறுவலுக்காக முயற்சி செய்தவர் தேங்க்ஸ் என்றார்.

கூட இருந்த அவர் அம்மா, நாங்க எங்க வூருக்குப் போறோம் என்றார். இந்த சனியன் புட்ச்ச வூரே வோணாம்… போயிட்லாம் தாயி,,,

இரண்டு நாட்களில் அவர்கள் ஊரை விட்டுச் சென்றுவிட்டார்கள்.

பின்னர், காவல்துறை நண்பர்களுடன் விசாரித்த போது, அது ‘culpable homicide not amounting to murder’ அல்லது இன்னும் சுளுவாக ‘in self defence’ ன்னு காரணம் காட்டி அவருக்கு விடுதலை கொடுத்துவிடுவார்கள். ஒரு பிரச்சினையும் இருக்காது என்றார்கள். ஆனால் கேஸ், கோர்ட், அப்பீல்னு அலையணும் என்றார்கள்.

நான் எதற்கும் இருக்கட்டும் என்று எனக்குத் தெரிந்தவைகளை ஒரு sworn affidavitஆக, காவல் நிலையத்தில் கொடுத்தேன்.

பிற்பாடு, அந்தப் பெண் எங்கே, அவர் குழந்தை எங்கே என்று எதுவும் தெரிந்து கொள்ள நான் முற்படவில்லை.

விளையாட்டுப் போல சுமார் 1.5 வருடங்கள் ஓடிவிட்டன.

=-=-=-=

மேற்கண்ட நிகழ்வுகளை, ஒரு கதை என்று நினைத்துக் கொள்ள எனக்கு ஆசைதான். ஆனால்…

நான் சொகுசாகச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, புரட்சியை ஆதரிக்கும், மரணதண்டனையின் அர்த்தமற்ற தன்மையை விலாவாரியாக விளக்கும் தொழில்முறை மனிதவுரிமைக்காரனோ அல்லது சட்டத்தின் மாட்சிமை, நீதி தேவதை என்றெல்லாம் பேசும்/எழுதும் அறிவுஜீவியோ அல்ல. (ஆனால் இப்படியும் ஆட்கள் வேண்டும்தான்; பிரச்சினைகளின் தீவிரத்தை அவற்றின் சாதகபாதகங்களை, சிடுக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல், இடைவெளி கொடுக்கும் சமன நிலையில் ஆய்வதற்கும் மனிதர்கள் தேவைதான்)

நான் தொழில்முறை சமூகக் களப்பணியாளனுமல்ல. ஃபெல்லோஷிப், க்ராண்ட், EPW, கூட்டங்கள், பட்டறைகள் என்று எனக்கு அலைய முடியாது. அதற்கு, எனக்குப் பொறுமையும் நேரமும், ஏன், அறிவும் கூட இல்லை.

நான் வேலை செய்பவன். தினம் தினம் என் குழந்தைகளின் மீது விதைக்கப்படும் அயோக்கியத் தனங்களை, கேவலங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவன். இந்த எழவெடுத்த, குரல்வளையை நெறிக்கும், நிம்மதியற்ற வாழ்க்கையை விட்டு ஒடி நிம்மதியாக நகரத்துக்கு, அதன் அனாமதேயத்தனத்துக்குப் போய் விடலாம் என்று தினமும் தோன்றினாலும், ஏதாவது ஒரு குழந்தை வந்து நிற்கும் – சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என்றே காலட்சேபம் செய்து வருபவன்…

என்னைப் பொறுத்தவரை’கசாப்’புக் கடைகள், மரணதண்டனைகள்  வேண்டும், அவைகளும் சமூக, சமூகவியல் முன்மாதிரிகள் தான்,

தண்டனைகள் தேவை.

சாலையில் தனியாக நடக்கும் பெண்ணை, வழிமறிக்கும் வக்கிர கும்பல்களைப் பார்க்கும்போது, அப்பேடிகளை விரட்டும்போது, எனக்குத் தோன்றுவது என்னவென்றால், அவர்களை மாறுகால், மாறுகை மட்டும் வாங்காமல், அவர்களின் மாறாத குஞ்சாமணிகளையும் இழுத்து அறுத்து விட வேண்டுமென்பது தான்.

மரணதண்டனையும் தேவை தான். அதற்கும் சமூகக் கட்டமைப்பில், அதன் மட்டறுப்பில், களைகளைக் களைவதில், தேவையான பண்பாட்டுக் கூறுகளை மேன்மைப் படுத்தும் பரிணாம வளர்ச்சியில்,  ஒரு இடம் உள்ளது. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

ஒரு உயிரைக் கொல்லலாமா என்று கேட்பார்கள், அவர்களுக்கு, கேட்பதற்கு  நிச்சயம் உரிமை இருக்கிறது.

ஆனால், முதலில் இவர்கள் அசைவம் சாப்பிடாமல் சாத்வீகிகளாக இருக்கட்டும்.

பின்பு நடந்து, நசுக்கிக் கொல்லும் பல்வேறான நுண்ணுயிரிகளைப் பற்றிச் சிந்தித்து, அசையாமல் இருக்கட்டும்.

பிற்காலத்தில் உயிர்ப்பயிராகப் போகும் விதைகளைச் சாப்பிடாமல் இருக்கட்டும்.

பின் நம் உணவுப் பாதையில், குடலில் இருக்கும் எண்ணிறந்த, கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளைக் கொல்லாமல் சுத்த சன்மார்க்க சைவமாகப் பட்டினியில் ஆழட்டும்.

ஆன்டிபயாடிக்ஸ் சாப்பிடாமலும் கிடக்கட்டும்.

உடலிலுள்ள ரத்தத்தின் வெள்ளை அணுக்கள், உள்ளே வரும் பாதகமான நுண்ணுயிரிகளைக் கபளீகரம் செய்வதால், வெள்ளை அணுக்களின் வன்முறைக்கு எதிராக அணி திரண்டு, அவை தயாரிக்கப் படும் எலும்பு மஜ்ஜையை இல்லாமல் செய்து கொள்ளட்டும்…

சுவாசிக்காமலும் இருக்கட்டும் – ஏனெனில் எண்ணிறந்த பாவப்பட்ட வைரஸ்கள் உள்சென்று ம்யூகஸில் மாட்டிக் கொண்டு சாகின்றன அல்லவா? வைரஸ்ஸுரிமைக் கழகத்தினர் சத்தம் போடுவார்கள் வேறு!

கனவு தான், ஆனால் இப்படி நடந்தால், குறைந்த பட்சம், நாம் எல்லோரும் சந்தோஷமாக நெடுநாள், வெகுசீக்கிரம் இறந்து கொண்டிருக்கலாம்.

=-=-=-=

நிச்சயம்.யோசித்துப் பார்த்தால், ஏன் யோசிக்காமலேயே இருந்தால் கூட, நான் காந்தியவாதி அல்ல – காந்தியம் தாம், அஹிம்ஸைதான், நீண்டகால இணக்கங்களுக்கு, உரையாடல்களுக்கு அஸ்திவாரம் எழுப்பப் கூடியது என்பது மூளைக்குப் புரிகிறது. இருப்பினும்…

நான் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம் தான்.

2 Responses to “மரணதண்டனையின் அவசியம்”

  1. Anonymous Says:

    போதையின் பாதை, சிறுமை பற்றி தாங்கள் காட்டும் காட்சி அவலத்தின் சிகரம். தங்களின் தெய்வ ஆவேசம் மாத சம்பளத்தை ஈதல் போன்றவை வீரத்தின் வெளிப்பாடு. எது வீரம் காந்தியாரின் விளக்கம்…….. ஈரமுள்ள வீரர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s