கடவுளும் கருணாநிதிப் பிள்ளைகளும்

30/11/2012

புதுமைப்பித்தன் அவர்கள் என்னை மன்னிப்பாரா?

(அல்லது)

ஆஹா, இவர்கள்தாம் இளைஞர்கள்! இதுதாண்டா தமிழ் இளைஞர்கள் அல்ல!

சுமார் இரண்டு மூன்று வருடங்கட்கு முன்பு என எண்ணம். எங்கள் பள்ளியில் இரண்டுமணி நேரம்  சில இளம் ஐஏஎஸ் (கற்றுக் குட்டி) அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கர்னாடகா, தமிழ்நாடு கேடர் (ஆங்கிலக் கேடர். தமிழ் அல்ல) சார்ந்தவர்கள், இந்த முப்பது வயதுக்குள் இருந்திருக்கக் கூடிய இளைஞர்கள். இவர்கள் மைக்கேல் ஃபெர்னாண்டஸ் அவர்கள் கூட, சொந்த ஆர்வத்தினால் வந்திருந்தனர் என நினைவு.

மைக்கேல்,  மறைந்த நம் சோஷலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவர்களின் சகோதரர் – அவர், அப்போது ஒரு அறக்கட்டளை அமைத்து, இந்தியா முழுவதும் மலைவாசிக் குழந்தைகளுக்காக சுமார் 200 பள்ளிகள் ஆரம்பிக்க முனைந்திருந்தார். அது விஷயமாக, இந்தியா முழுவதிலிருந்தும் குறிப்பிட்ட சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு பாடத்திட்டங்களையும், வகுப்புச் சுற்றுச்சூழல்களையும், மேலாண்மைத் திட்டங்களையும், வகுத்துக் கொள்ள விரும்பியிருந்தார். அதற்காக எங்கள் பள்ளிக்கும் வந்திருந்தார் – அந்த இளம் ஐஏஎஸ் பட்டாளம் சூழ, இந்த இளைஞர்கள் என்னுடன் பள்ளியைச் சுற்றிப் பார்த்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

நிற்க, என்னுடைய பெரிய பலவீனம் – படிக்கும், சிந்திக்கும், முனைப்புள்ள, சதா பணிசெய்யும், நேர்மையான, புத்திசாலியான, நகைச்சுவை உணர்ச்சி கொண்ட மனிதர்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். (ஆம்,  நீங்கள் நினைப்பது சரிதான். நான் நிச்சயமாக என்னுடைய பலவீனம் இல்லை)

இவ்விளைஞர்களால் சரியான கேள்விகள் கேட்க முடிந்தது. அவற்றுக்கான பதில்களையும் ஐயந்திரிபறப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கல்வி, சமூகம், ஆட்சி, மேலாண்மை இன்னபிற பற்றிய இவர்கள் அறிந்த அடிப்படைகளும் பலமாகவே இருந்தன.

இவர்கள் மஹா புத்திசாலிகளாகவும், முனைப்பு மிக்கவர்களாகவும் மட்டுமில்லாமல், நம்பிக்கையூட்டுபவர்களாகவும், வெளிப்படைத்தனம் மிக்கவர்களாகவும்  இருந்தனர்.

இவர்கள் கையில் நம் நாடு பத்திரமாக இருக்கச் சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என நினைத்துச் சந்தோஷப் பட்டுக் கொண்டேன். மனதார அவர்களை வாழ்த்தினேன்.

… ஒருவாறாக, அரசியல், நாட்டு அரசியல் நடப்பு பற்றிப் பேச்சு திரும்பியது. அவர்களுடைய புரிதல் பற்றித் தெரிந்து கொள்ளும் பொருட்டு நான் அவர்களைச் சில கேள்விகள் கேட்டேன் –

அவர்களும் சளைக்காமல் ஆழமாகவும் விரிவாகவும் பதில் சொன்னார்கள், குமிழியிடும் நகைச்சுவையுடன் – அவர்கள். சில ’குஷ்வந்த் சிங்’ பாணி நகைச்சுவைகளையும் உதிர்த்தனர். இவைகளை நான் முன்னமே வேறு வடிவங்களில் கேட்டிருந்ததாக நினைவு, இருப்பினும், அவற்றில் இரண்டு கீழே – என்னுடைய வார்த்தைகளில்:

கடவுளும் கருணாநிதிகளும்

அச்சுதானந்தன் (கேரள முதலமைச்சர்), ராஜசேகர் ரெட்டி (ஆந்திர முதலமைச்சர்), கருணாநிதி (தமிழக முதலமைச்சர்) – ஒரு நாள் கடவுளிடம் (அல்லது இயற்கையிடம்) சென்று  தத்தம் மாநிலங்களின் எதிர்காலம் பற்றிக் கேட்டார்கள், முக்கியமாக, ஊழல் ஒழிப்புப் பற்றி.

அச்சுதானந்தன் கேட்டார்: எங்கள் கேரளாவிலிருந்து எப்போது ஊழலும் லஞ்சமும் ஒழியும்?

கடவுள் சொன்னார்: ஒரே வருடத்தில்! கவலையே படாதீர்கள்!

ராஜசேகர் ரெட்டியும் அதே கேள்வியைக் கேட்டார்.

ஹ்ம்ம்… நூறு வருடங்களில் – என்றார் கடவுள்.

பொறுக்கமுடியாமல் கேட்டார் கருணாநிதி – தமிழ் நாட்டில்?

மிகுந்த சோகத்துடன், தலை தொங்க, கைகள் நடுங்க, குரல் கம்ம, கண்ணீர் மல்க,  நா தழுதழுக்க, வாய் குழர, கடவுள் சொன்னார் – அய்யா, நான் உயிரோடு இருக்கமாட்டேன், அந்த நாளைப் பார்ப்பதற்கு…

பலேபாலுவும் பாலமும் (கதை: வாண்டுமாமா)

தமிழ் நாட்டைச் சார்ந்த பழமும் தின்று கொட்டையும் போட்ட திமுக மந்திரி ஒருவர், பிஹாரைச் சார்ந்த மந்திரி ஒருவரின் பட்னா வீட்டிற்குச் சென்றிருந்தார்.

நம்மாள் மலைத்துத் தான் போனார். கங்கை நதிக்கரையில் இருந்த பல ஏக்கர் கணக்கில் இருந்த ஒரு மாபெரும் மாளிகையாக, வீடெல்லாம் பளிங்காகவும், தேக்கால் இழைக்கப்பட்டும் அது இருந்தது.

நம்மாள் அவரைக் கேட்டார், ”நீங்கள் ஒரு வருடம் கூட மத்திய அமைச்சராக இல்லையே, எப்படி அதற்குள் இப்படி?”

அவர் நம்மாளை, பட்னாவுக்கு வெளியே கூட்டிக் கொண்டு போய், ஒரு இடத்தில் காரை நிறுத்தி, “தூரத்தில் என்ன தெரிகிறது பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.

இவர் சொன்னார், “என்ன, ஒரு பெரிய பாலம் தான் தெரிகிறது…”

”அந்தக் காண்ட்ராக்ட் என்னுடையது – அதில் பாதி பங்கில் தான், நான் என் மாளிகையைக் கட்டினேன்” என்றார் அவர், பெருமையாக.

நம்மாளும் ஊழலில் பிறந்து, ஊழலில் வளரும் பெருந்தகைதான் இருந்தாலும் அவருக்கு அது ஒரு சவாலாகப் பட்டது.

சில மாதங்கள் உருண்டோடின.

ஒரு நாள், அந்த பிஹார் அமைச்சர் தம் நண்பரைப் பார்ப்பதற்காக சென்னை வந்தார். அரண்டு போனார்.

நம்மாளுக்கு, சென்னையில் மாபெரும் மாளிகை. தஞ்சையில் மாபெரும் சின்னமாளிகை. திருச்சியில் சின்னச்சின்ன மாபெரும் மாளிகை. வெளி நாட்டுக் கார்கள், தங்கத்தால் இழைக்கப் பட்ட, சலவைக் கற்கள் பதிக்கப் பட்ட  தளங்கள். பல நூறு ஏக்கர் நிலங்கள். பல தொழிற்சாலைகள். விடுதிகள், கப்பல்கள், மனைவிகள், துணைவிகள், எந்தப்புறத்திலும் அந்தப்புரங்கள், கள், கள்…

மூச்சுமுட்டியது அந்த வடவ அமைச்சருக்கு.

”எப்படி அய்யா, சில மாதங்களுக்குளேயே இவற்றைச் சாதித்தீர்கள்?” என பொறுக்கமுடியாமலும், பொறாமையிலும், பிரமிப்பிலும் கேட்டார் அவர், நம்மாளை…

ஒரு வார்த்தைகூடப் பேசாமல், நம்மாள் அவரைக் கூட்டிக் கொண்டு 10 மணி நேரம் பிரயாணம் செய்து ராமேஸ்வரம் பக்கத்துக் கடற்கரையை அடைந்தார்.

கடலை நோக்கிக் கையைக் காண்பித்து, ”அதோ சேதுசமுத்திரத் திட்டம் தெரிகிறதா?” என்று, நம்மாள், அந்த பிஹார் மந்திரியைக் கேட்டார்.

பின்னவர் கேட்டார், “திட்டமா, எங்கே? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே!!”

நம்மாள் சொன்னார், “ஹ்ம்ம், அது எப்படி இருக்கமுடியும்? அதற்கான முழு செலவுதான், என்னிடம் வந்து விட்டதே!”

=-=-=-=

பதிலுக்கு பதில் லாவணி பாட, நான் உதிர்த்தது:

நீங்களெல்லாம் UPSC பரீட்சை எழுதி அதில் தேர்வு பெற்றுதானே அதிகாரிகளானீர்கள்? இப்போது, அரசியல்வாதிகளும் இம்மாதிரிதான்
நாடாளுமன்றத்துக்குள்ளும், சட்டசபைகளுக்குள்ளும் நுழையமுடியும் என்றால் அவர்கள் என்ன பரீட்சை எழுதுவார்கள்?

மொக்கை பதில்: நீங்கள் civil service பரீட்சை எழுதுவீர்கள்; அவர்கள் criminal service பரீட்சை எழுதுவார்கள்.

சொந்த ஜோக்கா என்று கேட்டார்கள்; ஆமென்றேன். அப்படியென்றால்
இன்னொரு சொந்த ஜோக் சொல்லுங்கள் என்றார்கள். எனக்கோ வகுப்புக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ஆகவே எழுந்து கொண்டே சொன்னேன்.

கம்யூனிஸம்!

இரண்டு மூன்று வினாடி திகைத்துப் போய் மூச்சினை இழுத்தபின், அவர்கள் அனைவரும்  அலை அலையாகச் சிரித்தார்கள்.

=-=-=-=

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

6 Responses to “கடவுளும் கருணாநிதிப் பிள்ளைகளும்”


 1. இன்னும் 100 ஆண்டுகளுக்கு கருணாநிதி தான் முதல்வர் :)))


 2. நீங்கள் சொல்லியிருக்கும் ஜோக்குகள் ஏற்கெனவே படித்தவைதான். ஸீஸனுக்குத் தகுந்த மாதிரி ஆளை மட்டும் மாற்றி அவ்வப்போது சொல்லப்படுபவைதான். ஆனால் உங்களுடைய ஒட்டுமொத்தக் கட்டுரையிலும் தெறிக்கும் நகைச்சுவை உணர்வு வியக்க வைக்கிறது.


 3. >> மறைந்த நம் சோஷலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்>

  எப்போழுது இறந்தார் ஜோர்ஜ்..?

  • ramasami Says:

   மிக்க நன்றி, திரு வாஸன் பிள்ளை.

   இது என் மோசமான தவறு. ஜார்ஜ் போன்றவர்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்தான். பதிவில் திருத்திவிட்டேன்.

   எப்படி இந்தத் தவறு ஏற்பட்டது என யோசிக்கிறேன்.

   நான் நாளிதழ்களை 15 நாட்களுக்கு ஒருமுறை படிக்கிறேன்(!) – op-ed, நடு பக்கங்களை மட்டும். தொல்லைக்காட்சியை வருடத்திற்கு ஓரிருமுறை. இணையம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணிநேரம் போல. இந்த அழகில் நண்பர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களும் (அவற்றை நான் படிக்க முடிந்தால்), அவர்கள் சொல்லும் செய்திகளும்தான் தற்சமயம் எனக்குச் சாத்தியம்.

   2012 வருட ஆரம்பத்தில் ஜார்ஜ் அவர்கள் மிகவும் உடல் நலமில்லாமலும், சொந்தபந்தங்களிடையே சர்ச்சைகளும் சூழ மனவருத்தப்பட்டுக் கொண்டும் இருந்தார் என நினைவு. அச்சமயம் ஒரு நண்பர்: ’The George they knew is dead…’ என்கிற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் / சுட்டியை அனுப்பியிருக்கிறார். சரிதான், போய்ச் சேர்ந்தார், பாவம் என நினைத்துக் கொண்டேன், அந்த மின்னஞ்சலைப் படிக்காமலேயே!.

   இன்று அவர் மே மாதம் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த சுட்டியைச் சொடுக்கினால், சரியாகப் படித்தால், அந்த சுட்டியில் – ”The George they knew is dead, friends disown Fernandes” என்று இருக்கிறது. (http://www.indianexpress.com/oldStory/2064/)

   தவறுக்கு மன்னிக்கவும். மீண்டும் இப்படியாகாமல் கவனமாக இருக்கிறேன். , ,

   நன்றி.

 4. Anonymous Says:

  ஐயா, தாங்கள் கூறியபடி ஆடிக்கொருதடனை அம்மாவாசைக்கு ஒரு தடவை நாளிதழ்களைப்படிக்கிறவரென்றால் இத்தனை அழகாக அரசியல் வாதிகளைப்பற்றி எவ்விதம் எழுத இயல்கிறது?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: