என்கௌன்டர்கள் – சில குறிப்புகள்

04/12/2012

எச்சரிக்கை: இது ஒரு நீண்ண்ண்ண்ட பதிவு.

=-=-=-=

“உலகமக்களில் பாதிப் பேருக்கு சொல்வதற்கு ஏதாவது இருக்கும் ஆனால் சொல்ல முடியாது – மற்ற பாதியினருக்கு ஒரு விஷயமும் சொல்ல இருக்காது, [ஆனால்] அதனைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!”

~~ Robert Frost

ராபர்ட் ஃப்ரோஸ்ட் ஒரு தீர்க்கதரிசிதான் நிச்சயம், என்ன, அவர் புள்ளியியல் விவரம் சிறிது முன்னே பின்னே இருக்கிறது, அவ்வளவு தான். என்னுடைய உயர்வான எண்ணத்தில் பின்னவர்கள் 99% இருப்பார்கள் இப்பூவலகில். நானும் இந்த ஜோதியில் கலந்தவன் தான், இதில்தான்  நான் அடக்கம், என்பதை அடக்கமாகவும் பெருமையாகவும் சொல்ல, இங்கே கடமைப் பட்டிருக்கிறேன்.

=-=-=-=

ஒரு குழுவினர், தங்கள் பணி / கொள்கை / பயிற்சிப்படிக் காப்பாற்ற வேண்டிய மக்கள் குழுக்களை அல்லது அவற்றின் உறுப்பினர்களை அல்லது அப்பாவி மக்களை, பொய்க் காரணங்கள் சொல்லி அல்லது காரணங்களே சொல்லாமல் — தாங்களே அழித்தொழித்தல் தான்  ’என்கௌன்டர்’ என நான் நினைக்கிறேன், வரையறை செய்கிறேன்.

நான் பல வருடங்களாக இந்த என்கௌன்டர்களைக் கவனித்து வருகிறேன், பஞ்சாபில் (காலிஸ்தானியர்கள், காவல்துறையினர் செய்தது), தண்டகாரண்யத்தில் (நக்ஸலைட் கொலைவாதிகள், காவல்துறையினர் செய்தது/செய்வது), வடமேற்கு மாகாணங்களில் (இனக்குழுக்கள், ராணுவம், காவல்துறையினர் செய்தது), கஷ்மீரில் (இஸ்லாமியக் கொலைவாதிகள், காவல்துறை, ராணுவம் செய்தது, செய்வது), ஈழத்தில் (விடுதலைப் புலிகள், இலங்கை ராணுவம் செய்தது) இன்னபிற.
கொஞ்சம் யோசித்தால், என்கௌன்டர்கள்  என்றாலே நமது மூளைவெளியில் விரியும் பிம்பங்கள், அனைத்தும் எதிர்மறையானவை, பொத்தாம்பொதுவானவை என்பது தெரியவரும். அவற்றில் பொதுவாக, கீழ்கண்ட எண்ணச்சிதறல்களில் ஒன்றோ, பலவோ இருக்கும்; நமது குமாஸ்தா அறிவுஜீவிகளால், குமாஸ்தாப் புரட்சித்திலகங்களால், குமாஸ்தா சாத்வீகிகளால், குமாஸ்தா வன்முறையாளர்களால் – சொந்த/வாழ்க்கை அனுபவம் என்கிற ஊரிலேயே பிறக்காமல்,  உட்கார்ந்த இடத்தின் குண்டிச்சூடு அகலாமல், இந்தச் சிதறல்கள் பரப்பப்படும், இந்த இணைய இழவு வேறு இப்போதெல்லாம்! தொல்லைதான்.(எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன, ஒப்புக் கொல்கிறேன்)

 • குற்றம் செய்தார்கள் என்று பட்டவர்த்தனமாகத் தெரிய வந்தால், அவனுங்கள போட்டுத் தள்ளுங்கடா. [என்னால் முடியாததை, ஒருத்தன் செய்கிறான்! வெற்றிவேல் வீரவேல்!!]
 • அடாத குற்றம் புரிந்தவர்களை அப்போதே ஒழித்துக் கட்டினால், தேவையில்லாமல் வீண்செலவு – வழக்கு, வியாஜ்ஜியம் இத்யாதி செலவுகளைக் குறைக்கலாம். [என்ன இருந்தாலும் நம் வரிப்பணம் தானே இக்கழிசடைகளைப் போஷகம் செய்ய உதவும்?]
 • பேசாம போட்டுத் தள்ளுவீங்களா, சும்மா ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு இருக்காம… [நாங்கள் 10 வினாடி விளம்பரம் பார்த்து வளர்ந்தவர்கள், எங்களுக்கு அதற்குள் நீங்கள் உங்கள் கதையைச் சொல்ல வேண்டும். எங்களுக்குச் சிந்திக்க நேரமில்லை]
 • இது போலி என்கௌன்டர், அது  உண்மையான என்கௌன்டர் என்றல்ல; அனைத்து என்கௌன்டர்களும் சோகமானவை, வருத்தம் தருபவை. [வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்]
 • வன்முறை என்பதே சோகமானது. நான் அனைத்து வன்முறைக்கும் எதிரானவன். [வாடிய பயிரைக் காண்பதாக நினைக்கும்போது கூட வாடுவேன்]
 • காவல்துறையினர், அடிப்படையில் அயோக்கியர்கள் – அவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் அதிகாரவர்க்கத்தின் கைக்கூலிகள் தாம்.
 • காவல்துறையினர் கொல்லப்படுவது, அவர்கள் உதைக்கப்படுவது,  என்பது அவர்களுடைய தொழில்முறை சார்ந்து ஏற்படும் இன்னல், இடர்பாடு; அதற்குத்தானே அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கூடக் கிடைக்குமே! இவர்களுக்கு தனியாக நீதி என்று ஒன்று தேவையில்லை.
 • காவல்துறையால் என்கௌன்டரில் கொல்லப் பட்டவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
 • கொல்லப் பட்டவர்கள் கீழ்த்தரமாக கொலையே செய்திருந்தாலும், அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு நீதி வேண்டுமன்றோ? சட்டம்சார் நீதி ஒரு ஜனநாயக அடிப்படை உரிமையன்றோ?
 • கொல்லப் பட்டவர்களின் குடும்பங்கள் என்ன ஆகும், அதற்காகவாவது…
 • இறந்த காவல்துறையினரின் குடும்பங்களைத்தான் அரசு பார்த்துக் கொள்ளுமே!
 • சட்டத்தின் மாட்சிமையை, மனித உரிமைகளை, தூக்கிப் பிடிக்கவேண்டிய காவல்துறையே, அதனைக் குலைப்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காவல்துறையினருக்குக் கொல்ல அதிகாரம் இல்லை.
 • அரசு (ஸ்டேட்) என்பதே ஒரு வன்முறை அமைப்புத் தான். அதன் அங்கமான காவல்துறை வேறு எப்படித்தான் இருக்க முடியும்?
 • அமைப்பு என்றாலே வன்முறைதான். எல்லா அமைப்புசார் மனிதர்களும் வன்முறையாளர்கள்.
 • அமைப்புக் கெதிராக, வன்முறை அமைப்புகளுக்கெதிராக அணி திரளும், கொல்லும் அமைப்பினர் புரட்சிகர சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள்.
 • என்கௌன்டர் செய்யப்பட்டவன் – என்ன அப்படி மோசமாகச் செய்தான், இப்படி என்கௌன்டர் செய்யப்பட்டதற்கு எனப் பார்த்து, அதன் சமூகவியல் காரணிகளை, பின்னணிகளைக் கொண்டு, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும். அவன் பாவம்.
 • என்கௌன்டர் செய்தவன் (அவன் காவல்துறையினனாக இருக்கும் பட்சத்தில்) – ஏன் அப்படிச் செய்தான், ஏன் தொடர்ந்து அப்படிச் செய்து கொண்டிருக்கிறான் என்பதனை அறிவது முக்கியமில்லை. அதன் உந்துதல்கள் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவன் கொலைவெறியன், அவ்வளவு தான்.
 • மார்ட்டின் நீமோல்லரின் கவிதை(!) – ‘முதலில் அவர்கள் சோஷலிஸ்டுகளுக்காக வந்தார்கள்…’ உபயோகித்து படிப்பவர்களின் அறச்சீற்றத்தைச் சீண்டுதல் [”இரண்டு வருடங்களில் இந்த நாட்டையே கபளீகரம் செய்து, நிச்சயம், நம்மை எல்லாம் என்கௌன்டர் பண்ணிவிடுவார்கள் இந்தப் போலீஸ்காரர்கள்! அறிவிலிகளே, யோசிக்கும் திறமையற்ற முட்டாள்களே! விழியுங்கள்! ” —  நான் இதே வரிகளை சுமார் 25-30 வருடங்கட்கு முன் படித்திருக்கிறேன் – பஞ்சாபில் அப்போது ஹிந்துக்கள் பஸ் பஸ்ஸாக என்கௌன்டரில் சுடப்பட்டுக் கொண்டிருந்தார்கள், உபயம்: தலை_காலிஸ்தான் கொலையாளர்கள்; பதிலுக்கு தலை_காலிஸ்தான் கொலையாளர்கள் என்கௌன்டரில் சுடப்பட்டுக் கொண்டிருந்தார்கள் – உபயம் பஞ்சாப் காவல்துறை. அச்சமயம் நாளிதழ்களில் எல்லாவித தொழில்முறை மனித உரிமையாளர்களும், பஞ்சாப் காவல்துறை மீது பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்தனர். ”மார்ட்டின் சொன்னார் அன்று – இதோ அடுத்த வருடம் நம்மையும் என்கௌன்டர் செய்யப் போகிறார்கள், அவ்ளொதான்  நாமெல்லாரும்” என்று. ஆனால் ஜன நாயகம் தழைக்கிறது அங்கே. ஊழல் இருக்கலாம் ஆனால் படுகொலைகள் இல்லை.  பின்னர் சுமார் 10 வருடங்கட்கு முன் குஜராத் மாநில  முஸ்லீம் – ஹிந்து  கலவரங்களை வைத்து நடந்த சில என்கௌன்டர்களின் போது, இதே மார்ட்டின் கவிதையை சாட்சிக்கு அழைத்து, “போவோம் போவோம் அய்யோ என்று அனைவரும் என்கௌன்டரில் போவோம்” என்றார்கள். போனோமா? எனக்குத் தெரிந்து கஷ்மீர் நிலவரங்கள் பற்றி அவ்வப்போது மார்ட்டின் தென்படுகிறார். தற்போது தமிழக நாளிதழ்களில், சில வலைப்பூக்களில் பலவித மாறு வேடங்களில், வரிகளில் உலா வந்து மார்ட்டினார் – பெயர் சொல்லப் படாமல் பயமுறுத்துகிறார். ஐயகோ, இதனைக் கேட்பாரே இல்லையா!]

=-=-=-=

 ஒரளவு கற்றல், கற்பித்தல் (=கத்துதல்) பயிற்சி இருக்கும் காரணத்தால், நான் பலகாலமாக, மிகப்பல விஷயங்களின், தத்துவங்களின் மாணவனாகவே இருக்கிறேன். ஆக, நான் சில விஷயங்களைப் பற்றி உரக்கச் சிந்திக்கலாம் என நினைக்கிறேன்.

எனக்கு விஷயங்களின் அறிவாய்வியல் (epistemolgy), உருவகங்கள் (metaphors), குறியியல் (semiotics), சமூகமானுடவியல் (anthropology) அடிப்படைகள் சார்ந்து சிந்திப்பது,  அவற்றை கலாச்சாரப் பின்னணியில் புரிந்து கொள்ள முயல்வது, பின் ஏகமாக மன உளைச்சல் அடைவது என்பது மிகவும் பிடித்தமானது.

இதன் நீட்சியாக – பின்னர் அர்த்தராத்திரியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு, என் இளம் நண்பர்களுடன் / மாணவர்களுடன் (என்னுடனும் கூட) இவ்விஷயங்களை, எப்படி, முடிந்த அளவு நேர்மையுடன், அவர்களை பயமுறுத்தாமல் உரையாடுவது (அவர்கள் நாளைய குடிமக்கள் அல்லவா?) என்பது பற்றி குறிப்புகள் எடுப்பதும் பிடித்தமானது; பின்னர் – குழந்தைகளுடன், இளைஞர்களுடன் அளவளாவி, உரையாடி –  இப்பிரச்சினைகளை எப்படி அணுகுவது, அவற்றின் சிடுக்கவிழ்த்தல்களைச் செயல் படுத்துவது எப்படி என அனுமானித்துக் கொண்டு செயலில் இறங்குவதும் கூட பிடித்தமானது தான்.  காலம் தான் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது…

ஜேஜே சொல்கிறான்:

… மன நிறைவைத் தரக் கூடியதாக, முற்றாக நம்பத் தகுந்த, பரவசமூட்டக் கூடிய, பூரணமான ஒன்று மனிதனுக்கு வேண்டும். அது அவனை வழி நடத்திச் செல்லவேண்டும். மனிதனின்  மிகப் பெரிய சங்கடம், முடிவுகள் எடுப்பது. வெவ்வேறு சாத்தியக் கூறுகளின் முன்னால் அவன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எது தவறு? எது சரி? அவனுக்குச் சரி, இவனுக்குத் தவறாகவும், இவனுக்குச் சரி அவனுக்குத் தவறாகவும் இருக்கின்றன. இப்போது மூன்றாவது ஒருவன் தோன்றி ஒரு புதிய தவறையோ, ஒரு புதிய சரியையோ முன்வைக்கிறான். குழப்பம் மேலும் வலுக்கிறது. ஆராய்ந்து அறியும் பொறுப்பு மிகவும் பயங்கரமானது. கடுமையானது, சிக்கலானது. பின்பற்றலோ மிகவும் எளிமையானது. சரணாகதி நிம்மதியைத் தரக்கூடியது…

நான் ஜேஜே அல்ல – உண்மையில், முல்லைக்கல் மாதவன் நாயருக்கு மிக அருகில் இருப்பவன் தான். ஆனால் எம் கே அய்யப்பனோ என்கிற புளகாங்கிதம் அளிக்கும் சந்தேகம் சிலசமயம் உண்டு.

நான் நினைக்கிறேன் – ஜேஜேயும் (anti hero)  முல்லைக்கல்லும் (anti villain) அதிஉருவகங்கள் (sociological ideal types) – உண்மை நடுவில் எங்கோ ஆனந்தமாகக் கூத்தாடிக்கொண்டு இருக்கிறது.

சரி, ஜே ஜே எக்கேடோ கெட்டுப் போகட்டும், ராஸ்கல்.

’என்கௌன்டர்’ குறிப்புகள் (விவாதத்திற்காக)

 1. யோசித்தல் என்றால் என்ன? ஆய்ந்து அறிதல் என்றால் என்ன?
 2. அறிந்ததின் பின், எப்படிச் செயல் படுவது, – வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிராமல் வெறும் இணையக் குண்டுசட்டியில் கீச் குதிரை ஓட்டிக் கொண்டிராமல்?
 3. எப்படி நாம் ( நம்முடனேயே கூட) உரையாடுவது? தொடர்ந்து உரையாடலில் இருப்பது?
 4. அடிப்படை விழுமியங்கள், கால, தேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டவை – அப்படியா என்ன?
 5. வன்முறை என்றால் என்ன? (மனிதர்களால் மனிதர்களுக்கு இழைக்கப் படுவது மட்டும் தானா? மற்றவைகளுக்கு இல்லையா?)
 6. வன்முறை என்பது எதுவுமே ஒதுக்கப் பட வேண்டியதுதான்- என்பது சரியா?
 7. அமைப்புகள் என்றால் என்ன பொருள்? அவைகள் தேவையா? அரசு தேவையா?
 8. அரசு என்றாலே வன்முறைதானா? (மறுபடியும், வன்முறை என்றால் என்ன?)
 9. கருப்பு-வெள்ளை சார் பார்வைகள் தாம் நமக்குச் சாஸ்வதம். (யோக்கியன் – அயோக்கியன் என்கிற பிரிவினைப் படிதான் நாம் இவ்விஷயத்தை அணுகுகிறோம். அதாவது என்கௌன்டர்கள் சரியானவை.என்கௌன்டர்கள் தவறானவை. நக்ஸலைட்கள் புரட்சிகர தேசபக்தர்கள். போலீஸ் என்றாலே தூரவிலகு)
 10. ’என்கௌன்டர்’ என்றால் அதனைக் காவல்துறை மட்டும்தான் செய்கிறதா? ( எனக்குத் தெரிந்து நிறைய என்கௌன்டர்களை, காவல்துறையினருக்கும் மேலாக, நக்ஸலைட்டுகள், ஈழத்தில் விடுதலைப்புலிகள் செய்திருக்கிறார்கள், அவர்கள் பயிற்சி காரணமாக, மேலும் செய்வார்கள்; நான் நினைக்கிறேன் – பெரும்பாலும் இவர்கள் மனிதாபிமானமற்ற கொலைகாரர்கள் தாம்.)
 11. மனித உரிமை என்றால் என்ன? கடமை என்றால் என்ன?
 12. காவல் துறையினர் மதிக்கப் பட வேண்டுமா? அல்லது அவர்களைப் பார்த்து பயப்பட அல்லது வெறுப்பு உமிழ  வேண்டுமா?. (அவர்கள் சமூக விரோதிகள் அல்ல; அவர்களும் ‘காமன் மேன்’ தான்)
 13. எனக்கு வன்முறையில் நம்பிக்கை இருக்கிறதா? (சில சமயம் நிச்சயம் இருக்கிறது. சில சமயம் இல்லை)
 14. நான் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறேனா? (ஆம். முக்கால்வாசி நேரங்களில், வேறுவழி இருந்திருக்கவில்லை எனக்கு, எனச் சொல்லிக் கொள்கிறேன். இரண்டு-மூன்று மாதங்கட்கு முன்பு கூட, தனியாக இருட்டில் போய்க் கொண்டிருந்த (என்ன முட்டாள்தனம் இது)  இளம் பெண்ணின் மார்பைக் கசக்கி விட்டு ஒடிய மூன்று இளம்பொறுக்கிகளில் இருவரை உதைத்தேன். அதற்குள், மூன்றாமவர் அதிவேகமாக ஒடிவிட்டார், புத்திசாலி, பிழைத்துக் கொள்வார். குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட மாக்களை எதிர்கொள்ள வேண்டிய, இம்மாதிரி நேரங்களில் கிடைத்த குஞ்சாமணிகளில் உடனடியாக உதைக்கவேண்டும். வயிற்றில் குத்த வேண்டும் – பேச, ’ஏனப்பா இப்படிச் செய்கிறீர்கள்,’  ‘ உங்களுக்கு அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா’ போன்ற அறிவுரை கொடுக்க, முகத்தில் அறைய, முதுகில் தட்டவெல்லாம் முயற்சியே செய்யக் கூடாது. வேறு ஒன்றும் ஒத்து வராது – இல்லையென்றால் நாம் தான் அடிபடுவோம். சொந்த அனுபவத்திலிருந்துதான் சொல்கிறேன்)
 15. நான் எதிர்காலத்தில் வன்முறையில் ஈடுபடுவேனா? (சொல்ல முடியாது! ஏனெனில்,‘ரௌத்திரம் பழகு.’ வன்முறைக்கான அவசியத்தை நான் எப்படி உருவகப் படுத்திக் கொள்கிறேன், காண்கிறேன் என்பதைப் பொறுத்துதான் சொல்லமுடியும்)
 16. நான் என்கௌன்டர் முறைகளை ஒப்புக் கொள்கிறேனா? (சில சமயம் ஆம். சில சமயம் இல்லை)
 17. காந்தியும் வன்முறை பற்றிய அவர் கருத்துகளும் பற்றி (அவர் நிச்சயம் ஒரு மஹான் தான், சந்தேகமே இல்லை – நான் அவரை மதிப்பதையும் கூட அவர் பொறுத்துக் கொள்வார், இதிலும் சந்தேகமே இல்லை)
 18. நம்மிடம் இந்த என்கௌன்டர் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு மகாமகோ முடிவுகட்ட ஒரு வெள்ளித்தோட்டா (’silver bullet’) இருக்கிறதா? (மிகுந்த யோசனைக்குப் பிறகு: ம்ஹூம், இல்லை)
 19. ஓ, ஆகவே குழப்பம்தான் சாஸ்வதமா? (இல்லை. இல்லை இல்லை, ஆமாம்)
 20. அப்போது, என்னதான் செய்ய முடியும்? (உரையாட வேண்டும். முக்கியமாக – சொல்லிலும், செயலிலும் சாத்வீகம் பழக வேண்டும், முக்கியமாக நான் பழக வேண்டும். தேவையான போது ரௌத்திரமும். இதுவும் அவசியமே. மற்றபடி திடீரெக்ஸ் வழிகள் ஒன்றும் இல்லை)

(மேற்கண்டவை பற்றி, என் மாணவர்களிடம்  பேசவேண்டும், பின்னர்தாம் எழுதவேண்டும், பார்க்கலாம்,)

உபரிக் குறிப்புகள்:

1. பொதுவாகவே நமக்கு, தொழில்முறைப் புரட்சியாளர்கள், தொழில்முறை மனித உரிமைக் காரர்கள், மீது அளவுக்கு அதிகமான காதல். அவர்களெல்லாரும் மோசம் என்று  நான் சொல்ல வரவில்லை, இருந்தாலும்… ஆனால் அவர்களுடைய திட்டங்கள், பின்புலங்கள், நமைச்சல்கள் பற்றி ஒரு இழவையும் புரிந்து கொள்ளாமல், அவர்கள் பெரிய, சக்திவாய்ந்த விஷயங்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக்கொள்வதால் மட்டுமே அவர்களை ஆராதிப்பவர்கள், நாம்.

2. நமக்கு நம் காவல் துறையின் மீது நம்பிக்கையோ மரியாதையோ அறவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இளமையில் அவர்களை ‘மாமா’ என்று அழைப்பதிலிருந்து முதிரா இளமையில் விடலைத் தனமாக, அதாவது வினவுத்தனமாக, அவர்களை ‘போலீஸ் நாய்’ என்று கேவலமாக அழைப்பது வரை, நம் தொழில்முறை மனித உரிமைக் குமாஸ்தாக்கள் உபயோகிக்கும் ‘uniformed criminals’ உட்பட, நமது ஒழுங்கறியா, பஞ்ச மனப்பான்மையில் இயங்கும், குடிமை உணர்ச்சியற்ற சமூகத்தை ஒழுங்கு படுத்தும் கஷ்டமான வேலைகளில் இருப்பவர்களுக்கு நாம் சுத்தமாக மரியாதையே தருவதில்லை. மரியாதை கொடுக்காமல்கூட இருக்கலாம், சரி – ஆனால் ஆவேசமாக அவமரியாதை செய்ய வேண்டுமா? இவர்களில் சிலர் அடிப்படையில் மோசமானவர்களாக இருக்கலாம் – இவர்களும் மனிதர்கள் தாமே! ஆனால் பொத்தாம்பொதுவாக நாம் அவர்கள் அனைவரையும் மோசமாகவே நினைக்கிறோம். இது நம் பார்வையில் ஒரு பெரிய கோணல். இதனைப் பற்றி ஒரு பெரிய பதிவே எழுத வேண்டும்.

3. நான் நமது காவல்துறையினருக்கு வால்பிடிக்க முனையவில்லை. எனக்கு அதனால் ஒரு விதமான நேரடியான / மறைமுகமான உபயோகமும் இல்லை.

4. சொல்லப் போனால், செய்யாத குற்றத்திற்காக (’மனித உரிமை மீறலுக்கு’ எதிரான என்னுடைய சில சிறுபிள்ளைத்தனமான,  அரைவேக்காட்டுச் செயல்பாடுகள்) இளம் வயதில் (21-22) நானும், ஒரே ஒரு இரவு மட்டும் லாக்கப்பில் ஜட்டியோடு, மூத்திரங்களுக்கும், காய்ந்த வாந்திகளுக்குமிடையே அசிங்கப்படுத்தப் பட்டு அடிஉதை பெற்று இருந்திருக்கிறேன்.  மொத்தம் ஏழெட்டு தான் கிடைத்தன என நினைவு, அதிகம் இல்லை. உயிர் போவது போல மிகவும் வலித்தாலும் ரத்தம் கித்தம் எல்லாம் வரவில்லை, நான் புரட்சி ஓங்குக என்று கத்தவில்லை. கருணாநிதி அவர்கள் போல மௌன அழுகையோ, ஊமை அழுகையோ அழாமல், அவமான உணர்ச்சியினால் கொஞ்சம் ‘கோப’ அழுகை அழுததாகக் கூட நினைவு.

ஆக நண்பரே, நான் ஜூலிஸ் பூசிக் இல்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்துப் பின்புலத்தில் வளர்ந்தவன். ’இயற்கை’ புண்ணியத்தில் தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு பொறியியல் படித்துவிட்டு, ஒரு பெரிய தொழிற்சாலையில் சேர்ந்து, ஐஏஎஸ் கனவுகள் கொண்ட இளைஞனாக, மனித உரிமைகளை நிலை நாட்டப் போகிறவனாக, உலகை உய்விக்கப் போகிறவனாக கற்பனை செய்துகொண்டு வளையவந்து கொண்டிருந்த காலம் அது.

இந்த பிம்பத்துக்கும், தெருப்பொறுக்கி போல அடிபட்டு, கூனிக் குறுகி  நாறடிக்கப்பட்ட நிதர்சனத்துக்கும் இருந்த விரிசலில், லாக்அப் பற்றி மிகவும் துக்கித்து, வெட்கப்பட்டு – காவல்துறை பற்றிக் கோபப்பட்டுக் கொண்டு, அந்த அயோக்கியர்களை ஒழிக்கவேண்டும் என, பல்லை நற நறத்துக் கொண்டு பல நாள் இருந்திருக்கிறேன். நாட்டு வெடிகுண்டு (இதனை வெகு சுலபமாகச் செய்யலாம்தான்) போடவேண்டும் என்றெல்லாம் கூட நினைத்தேன் – என் நல்லூழ், நான் அப்படிச் செய்யாமலிருந்தது… முட்டாள்தனத்தை, கோழைத்தனத்தை, நான் ஏகபோகக் குத்தகைக்கு எடுக்கவில்லை, நல்ல வேளை.

…ஆனால், காலம் அனைவரையும் (முக்கியமாக என்னை) முட்டாளடித்துச் சுழித்துக் கொண்டு ஓடுகிறது. இப்போது அப்படிப்பட்ட அதிவன்முறை எதிர்வினைகள் என்னிடம் இல்லை, அந்தக் காவல்துறையினரும் மனிதர்தாமே!

இதனை நான் தட்டச்சு செய்யும் போது கூட, எனக்கு வெட்கமோ அல்லது வெறுப்போ இல்லை. ஒரு விதமான நகைச்சுவையாகத்தான் இதெல்லாம் தோன்றுகிறது.

இளம் வயதின் தாங்கொண்ணா இறுமாப்பு (infinite hubris, மேஜர் சுந்தரராஜன் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளவும்) இருக்கிறதே! என்ன சொல்ல…

மீ-அறிதல்களுக்கு, ஜேஜே சொல்வது போல்  – தூரத்தின் இடைவெளியோ அல்லது காலத்தின் இடைவெளியோ  நிச்சயம் வேண்டும்தான்.

=-=-=-=

என்ன சொல்ல வருகிறேன் என்றால்,,, நாம் முக்கியமான கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க வேண்டும்.

கடைசியாக என்ன சொல்கிறேன் என்றால் – In the short run, we overestimate the effect of events, and in the long run, we underestimate the effect of them.

நாம், ’என்கௌன்டர்’  பற்றி இந்தப் பக்கமும் (சரியான கணக்கு தீர்த்தல்கள்) சரி, அந்தப் பக்கமும் (அநீதிக் கொலைகள்) சரி – உடனடியாக, தடாலடியாக – அதி தீவிரமாக மிகை மதிப்பீடு செய்கிறோம்.  நமக்கு, நம்முடைய கல்வி ஒரு சமனப் பார்வையைக் கொடுக்கவில்லை. இது ஒரு பெரிய சோகம் தான்.

… காலப் போக்கில், அதன் ஓட்டத்தில், எப்பொழுதோ நடக்கும் இந்த ’என்கௌன்டர்’ விஷயம், ஒரு சமூகவியல்-குற்றவியல் அடையாள நடவடிக்கையாக மாறி, நம்மில் பெரும்பாலோரை –  ஒழுங்கறியும், குடிமைப் பண்பாளர்களாக மாற்றக் கூடுமா?

நான் அறிந்தவரை,அப்படி ஆகலாம் என்றுதான் தோன்றுகிறது. (தினம் தினம் ’என்கௌன்டர்’ ஆகிக் கொண்டிருந்த கோரமான இடங்கள், இப்போது பெரும்பாலும் அமைதிப் பூங்காவாகி விட்டன, அங்கெல்லாம் சர்வாதிகாரர்களும் இல்லை. மார்ட்டின் போல  ”Then they came for me–and there was no one left to speak for me.‘ என்று யாரும் அனுபவித்து எழுதவுமில்லை – இந்திய நடைமுறை ஜனநாயகம்  புஷ்டிகரமானது தான்)

முக்கியமாக, எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது: அதாவது, எனக்கு மனிதாபிமானம்(!) இல்லை.

உங்களுக்கு?

தொடர்புள்ள பதிவு: மரணதண்டனையின் அவசியம்

3 Responses to “என்கௌன்டர்கள் – சில குறிப்புகள்”


 1. சரி ஷோ முடிஞ்சது கெளம்புங்க.

 2. usman Says:

  கட்டுரையை படித்து முடித்தவுடன் எங்களையும் என்கௌன்ட்டர் செய்யுங்கள் என கதற தோணுது

 3. ramasami Says:

  நண்பர் ’பெயரிலி’ அவர்களின் மின்னஞ்சல்:

  =-=-=-=-=

  அன்பு தொலை தூர நண்பரே,

  நலம் மல்குக.
  ‘மனம்தான் மேலும் கீழும்’ என படித்தது ஞாபகம். மாயைகள் பிடித்தாள்கின்றன. அவைகளை சுத்த மாயை, அசுத்த மாயை என பிரிப்பர் நம் முன்னோர்.
  அசுத்த மாயையால் பிடித்தாளப்பட்டு அடியேனும் பிறருக்கு கொடுந்தொழில் புரிந்தவன். வளங்களை வீணடித்தவன்.

  இதிலென்ன அதிசயமென்றால் நான் சுத்தர் என்று நம்பியவர்கள் என்னைவிட அதருமத்தில் நாட்டமிக்கவர்களாக இருந்ததுதான். அவர்களினாளுகையிலிருந்து விடுபடமுடியாமல் போனது தான்.
  “பொய்யை மெய்யென்றறிவர் போதமின்மையாலே”
  ஆகையால் பலவிதங்களில் “பாரம் சுமக்கும் கிழ மாடுகள்” போன்றவன், தீமைகளை எதிர்த்துப் போராட திராணியில்லாதவன்.
  இப்படிப்பட்ட என்னையும் தங்கள் வலைப்பூவை நுகர வழி செய்துள்ளது இணைய அறிவியல்.

  சரி, விஷயத்திற்கு வருவோம். அசுத்த மாயையால் ஆட்பட்டு தானும் கெட்டு அடுத்தவரையும் சமுதாயத்தையும் அல்லல் படுத்தும் காட்சியை தங்கள் எழுத்து வடிவில் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.
  இன்றைய அகலத்திரை, சின்னத்திரை முதலானவை குடியின் சிறுமையை விளக்காமல் அதை நாகரிகமாகக் காட்டுவது இளஞ் சிறார்களை பொய் மாயைகளில் உழன்று, மீள முடியாமல் செய்கிறது.

  தங்கள் ஈகைப் பண்பைப் பாரட்டத்தான் இம்மடலெழுதத் தோன்றியது.
  ஆக, “சுபமே முயல்க”
  தங்களுக்கு தொந்திரவு செய்தமைக்கு மன்னிக்க.
  தங்கள் எண்ணங்களில் ஒத்திசைவு கொண்ட,
  பெயரிலி.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s