கஞ்சா அடிக்காமலேயே சிவனைக் காண்பது எப்படி?

12/03/2013

(அதாவது) வாழ்க்கையில், ஒருகாலத்தில் (ஏன், ஒருரோவிலும் கூட) அக்மார்க் கஞ்சா அடித்து மட்டுமே சிவனை மெய்யாலுமே கண்டவன் என்கிற முறையில் – கஞ்சா அடிக்காமலேயே சிவனைக் காண்பது எப்படி?

கடும் எச்சரிக்கை: 80 மணிநேரங்களுக்கு மேலாகி விட்டன நான் தூங்கி (வெள்ளிக் கிழமை இரவுக்குப்பின்); இது பெரிய விஷயமில்லை, வருடத்துக்கு இரண்டுமூன்று முறையாவது இப்படி 3-4 நாட்கள் நகரும் – ஆனால் அவை, ஏதாவது இயந்திரத்தைப் பழுதுபார்ப்பது அல்லது, மென்பொருள் எழுதுவது-பழுதுபார்ப்பது, அல்லது அழகான ஏதாவதொரு குண்டோதிகுண்டுப் புத்தகம் படிப்பது அல்லது ஏதாவதொரு இசையைத் திருப்பித்திருப்பிக் கேட்டுக் கிறங்கிப்போய்ச் சொக்கி நிற்பது என்று பெரும்பாலும் சந்தோஷமாகக் கழியும்.

இந்த முறையும் ஏறக்குறைய அப்படித்தான் – ஹ்ம்ம், அப்படித்தான் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்தகத்தைப் படிபடி என்று படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும்… (குறித்துக் கொள்கிறேன்: இந்த எழுத்தாளரைப்  பற்றித் தனியாக எழுத வேண்டும்)

… ஹ்ம்ம்… இதற்கு, இந்தத் தூக்கமற்ற ஜுரத்திற்கு, முக்கியமான காரணம்: நான் மிகவும் மதிக்கும் இளம் நண்பர் ஒருவர் கூப்பிட்டார் என்பதற்காக லொங்குலொங்கென்று பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு ஒரு கல்லூரிக்குச் சனிக்கிழமையன்று சென்று (இது ஒரு புகழ்பெற்ற (வாங்கிய அல்ல), பழமையான பொறியியல் கல்லூரி, இதில் படித்த 50 வயதுக்கு மேற்பட்ட பல அழகான மனிதர்களை எனக்குத் தெரியும்) அங்குள்ள இளைஞர்களுடன் அளவளாவல்…

…ம்… இந்த நண்பருக்கு வேறு உருப்படியான வேலை வெட்டியில்லாத காரணத்தினால், இப்படி கல்வி, கலவி என்று காமாந்தகராக அலைந்து கொண்டிருக்கிறார் எனப் படுகிறது. இருப்பினும் எனக்கெங்கே போயிற்று புத்தி? ஆனால், இதுவல்ல நான் சொல்லவந்த விஷயம். என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆ…

… உரையாடலாவது, மண்ணாவது?

-0-0-0-0-0-

அதாவது நான்தான் லொடலொடவென்று – சுந்தர ராமசாமி முதல், ரிச்சர்ட் ஃபெய்ன்மென் ஊடாக வீராணத்தில் நீந்தி, எழவாவது அறிவு கொண்டு கருணாநிதியைக் கடித்து, நிரந்தர இளைஞரணித்தலைவரை உருட்டி, என் இளம்பிராய நகைச்சுவை நிகழ்ச்சிகள் வழியாக புஹாரி ஹோட்டல் அம்மா-65  உண்டு இயற்பியல் அழகுகளினூடாக கணிதப் புதிர்கள் வரையெல்லாம், வித்யாவேசத்தோடு பேசினேன் பேசினேன், அவர்கள் வாழ்க்கையின் விளிம்புக்கே செல்லும்வரை மூன்று மணி நேரத்திற்கு மேல் பேசிப் பேசித் தீர்த்தேன்… ஆனால், அவர்கள் பொதுவாக கப்சிப்.

என்ன நினைக்கிறார்கள், அல்லது ஏதாவது நினக்கிறார்களா என்றே சரியாகப் புரியவில்லை. அறிவியல், கணிதம் போன்றவைகளில், அடிப்படைகளே தெரியவில்லை பாவம். பேசுங்கடா பசங்களா, கேள்வி கேளுங்கடா குழந்தைகளா, எனக்கு 13 வயது மகள் இருக்கிறாள் – நீங்கள் அவளைவிட ஆறேழு வயதுதான் பெரியவர்களாக இருப்பீர்கள், ஆக நீங்களெல்லாம் என் குழந்தைகள் போலத்தான், சொல்லுமா கண்ணா, முதுகில் தட்டிக் கொடுத்து, தலைமுடியைக் கோதிவிட்டு, அரவணைத்து, என்ன பயம் ஒங்களுக்கு, தவறான பதில்னா ஒங்கள சாப்டவா போறேன், கவலையே படாதீங்க, என்னை எதிர்த்துக் கூட நீங்கள் பேசலாம், ஒரு பிரச்சினையுமில்லை, தவறுகள் செஞ்சாதான் எதையுமே கத்துக்க முடியும், தவறுகளைச் செய்தேயாக வேண்டும், முட்டாளாக உணர்வது என்பது கல்வியின், கற்றலின் முதற்படி, பாருங்க, நான் என்னை ஒரு முட்டாள் என்று சொல்லிக் கொள்வதில் தயக்கமே படுவதில்லை, ஹ்ம்ம் அது உண்மையும் கூட, ஹஹ்ஹா … … இன்னபிற, இன்னபிற…

இவர்கள் ஒரு சுக்கு விளையாட்டும் விளையாடுவதில்லை –  உடலுழைப்போ மனவுழைப்போ இல்லவே இல்லை – இந்த ‘கோபக்காரப் பறவைகள்’ போன்ற அதிஅற்புத விளையாட்டுகளைத் தவிர, பாவம் ‘படிக்கற பசங்க’ இல்லையா? வெள்ளாட்றத்துக்கு எங்க சார் டைம்!!  இந்தக் குட்டிக்கணினி வீரவிளையாட்டுக்கள் தவிர, இவர்கள் சினிமா பார்க்கிறார்கள். பாவி   ஜய் இத்யாதிகளின் பாட்டுக்களை ரசிக்கிறார்கள்,  குறுஞ்செய்திகள் அனுப்புகிறார்கள். ஃபேஸ்புக் சுவர்களில், எதிர்காலத்தில் வரலாற்றுப் புகழ் வாய்க்கக்கூடும் வாசகங்களைப் பொறிக்கிறார்கள். அவ்வளவே.

–0-0-0-0-0-

ஆனால்… அயோக்கியக் களப் பிணியாளர்கள், நிரக்ஷரகுக்ஷிகளைப் போல (இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! , களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?, அசடுகளும் மகாஅசடுகளும்) அரைகுறைப் போராளிகள் போல, நான்,  அந்தக் குழந்தைகளைக் கரித்துக் கொட்டவில்லை. அவர்களை அவமரியாதையுடனோ, வெற்றி எக்களிப்புடனோ, மேட்டிமைத்தனத்துடனோ, பொறுக்கித்தனத்துடனோ நடத்தவில்லை, அணுகவில்லை. எனது அறியாமைகளை என் குருக்கள், ஆசிரியர்கள் – எப்படி அணுகவேண்டுமென நான் விரும்புவேனோ அப்படித்தான் நானும் அவர்களிடம் நடந்து கொள்ள முயன்றேன்.

இருப்பினும் மிகச் சங்கடமாக இருந்தது. பரிதாபமாக இருந்தது.

அந்தக் குழந்தைகளைக் காயடித்து விட்டதால், கேள்விகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லையா, கேள்வி கேட்டால் திட்டுவார்கள் என்கிற பயமா? இல்லை எந்த விதமான உள்ளீடுமே இல்லையா? போட்டி போட்டியென்று மட்டித்தனமாக அலைந்து, பெற்றோர்களால் அலைக்கழிக்கப் பட்டு, பிழைப்புவாத ஆசிரியர்களால் பலியெடுக்கப்பட்ட இந்தக் குழந்தைகள், சதா தேவையற்ற, குறிக்கோள்களற்ற ஓட்டத்தில் மட்டுமே ஈடுபட்டு, படுமட்டமாக, மந்தமாக ஆக்கப் பட்டிருக்கின்றனரா? வெறும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்ததன் ஆனந்த நிலையிலிருந்து, பரிணாம வளர்ச்சியடைந்து  இப்போது அறியாமைச் சச்சிதானந்தங்களாகி விட்டனரா?

முகத்தில் புண்கொண்டு சொறியும் மூடர்காள்,

அகத்தில் புண்கொண்டு சொறிவதே சச்சிதானந்தம்

… என அன்றே பட்டினத்தார் பகர்ந்தாரல்லவா?

-0-0-0-0-0-

இவர்கள் சுமார் 50 மாணவர்கள் கொண்ட ஒரு குழு, விடுதியில் தங்கிப் படிப்பவர்கள்; ஆண்கள் 40% போல. ஸில்லி, மற்ற 60% பெண்கள். முதல் வருடம் முதல் நான்காம் வருடம் வரை இதில் பிரதி நிதித்துவம் இருந்தது. இவர்கள் எல்லோரும் மிகவும் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தாலொழிய இக்கல்லூரிக்குள் நுழைந்திருக்க முடியாது.

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எப்படி இவர்கள் வாழ்க்கையை, நம் நாட்டின் எதிர்காலத்தை வெகு துப்புரவாக வீணடித்துக் கொண்டிருக்கிறோம்!

இவர்கள் எல்லாம் வெளியே போய், நிச்சயம் நல்லச் சம்பளம் கிடைக்கும் வேலை பெறுவார்கள். (கிறுக்குத் தொழிலதிபர்கள் எப்படித்தான் இவர்களை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார்களோ!) தங்கள் பங்கிற்கு நாட்டை ஒழித்துக் கட்டுவார்கள்.

ஆனால், இந்தக் குழந்தைகள் திரியாவரம் செய்பவர்களாகக் கூடத் தெரியவில்லை. அஞ்ஞானிகளாக, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி, குறைந்தபட்சம், மானாடமயிராட என்று  2-3 மணி நேரம் அனுதினமும் பார்க்கிறார்கள், தொலைக்காட்சி பழுதானால் தான் பார்ப்பதில்லை.  அப்படியும் வெறும் திரையைப் பிடிவாதமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல! திரைப்படம் பற்றிப் பேசினால் கொஞ்சம் பேச்சு கிளம்பியது, அதுவும் கொஞ்சம்தான். ஆனால், நான் பொதுவாகத் தொலைக்காட்சித்துவேஷி. திரைப்படங்களும் பார்க்க நேரமேயில்லை –  நேரமிருந்தாலும் குப்பைகளை பார்க்க விருப்பமில்லை. ஆக இந்தக் குழந்தைகளுடன், அறிவார்ந்த உரையாடல் என்பது திரைப்படங்கள் மூலமாவது முடியுமா என்பதை ஆலோசிப்பது கூடச் சாத்தியப் படவேயில்லை. ( நண்பர் சொன்னார், ஒரு வேளை ஏதாவது ஒரு படத்தில், கதாநாயகி, கதாநாயகனுடன் காதல் பேச்சுப் பேசும்போது ரிச்சர்ட் ஃபெய்ன்மென் என்று ஒரு பீட்டர் விட்டால் – இவர்கள் உடனே இந்த மனிதரின் புத்தகங்களைப் படிப்பார்களோ?) *பெருமூச்சு*

எவ்வளவு பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறோம் இவர்களுக்கு! அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு உதவியாக, அவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய நியாயமான சமூகப் பங்களிப்புகளுக்கு ஏதுவாக – அவர்கள் அவசியம் கற்றுத்தேறவேண்டிய ஒரு விதமான திறமையையோ, அறிவுப்பின்புலங்களையோ கிட்டேயே நெருங்கவிடமாட்டெனென்கிறோம் நாம்! Their brains (if any) are out taking a walk, while their bodies are doing time. WTF is happening?? (not that I don’t know…)

(இதில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் – ஆனால், இந்தக் குழந்தைகள், வந்திருந்தவர்களில் 4% மட்டுமே! )

-0-0-0-0-0-

ஓவ்வொரு முறை இப்படி நடக்கும்போதும் வலிக்கிறது. இத்தனைக்கும் நான் மிகப்பல வருடங்கள் இந்தியாவில் குறுக்காகவும் நெடுக்காகவும் அலையோஅலையென்றலைந்து நமது மெக்காலேமுறைக் கல்வியின் லட்சணத்தை நேரடியாக அறிந்தவன்தான். சனிக்கிழமை நடந்தது ஒன்றும் எனக்கு ஆச்சரியமான விஷயமாக இல்லைதான்,  இருக்கக்கூடாதுதான்.

இருந்தாலும் மிகவும் வலிக்கிறது.

நகைச்சுவை என்கிற பெயரில் ஜோக் எல்லாம் கூட அடித்துப் பார்த்தேன் எனக்கு ஸ்டேன்ட்அப் கோமாளித்தனம் செய்ய முடியும், இயல்பாகவே! ஆக, தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி என்னென்னவோ செய்தேன். ம்ஹூம்ம்ம்..

ஏழாவது அறிவு படத்தை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டேன். (எல்லோரும் மகிழ்ச்சியுடன் கை தூக்கினார்கள், அட எழவே  என நினைத்துக் கொண்டேன்)

அது ஒங்களுக்குப் பிடிச்சுதா? (மறுபடியும்… கை… அவர்கள் முகத்தில் கிறக்கம், ஆஹா உணர்ச்சிகள்…)

அந்தப் படத்தில் பேதிதர்மன் ஒரு பெரிய மரபணுப் பொறியாளரும் கூட (அதாவது ’உலகின் முதல் ஜெனடிக் எஞ்சினீயர், ஒரு திராவிடர்’ என்கிற ரீதியில்)  என்பதை அந்தப் படத்தின் இயக்குனர் (ஏஆர் முருகதாஸ் என்று சொன்னார்கள், எனக்கு நினைவில்லை) கோடிட்டுக் காட்டியிருக்கிறார் அல்லவா, எப்படி என்றேன்.

இது ஒரு ஜோக் என்று கூடச் சொன்னேன்…

“Ya know, very many centuries ago, this bedhidharman, crossed Himalayas with a horse? Yeah?? Remember the flowing red robes that he wore even as he was galloping away??? Rich imagery of a scientist in a flow, no?” என்றேன்.

ஒருவருக்கும் ஈயாடவில்லை.

அழைத்த நண்பர் மட்டும் சட்டென்று இதனைப் புரிந்துகொண்டு ஹஹ்ஹ என்று சிரித்தார். அவர் ஒரு பார்ப்பனக் குசும்பராகத்தான் இருக்க வேண்டும்! இந்த ஆரிய வந்தேறிகளை எல்லாம் கைபர்-போலன் கணவாய் வழியாக வெளியே திருப்பி அனுப்பினால்தான் நம் திராவிடஸ்தான் உருப்படும். (எனக்கு ஒரு குறிப்பு: இந்த கைபர்-போலன் எழவு முதலில் எங்கேயிருக்கிறது எனப் பார்த்து வைத்துக் கொள்ளவேண்டும். திரியாவர ஆரியங்களும் அவர்களுக்குத் துணைபோகும் கூட்டிக்கொடுக்கும் குல்லுகபட்டக் குயுக்திக் குள்ளநரி துரோகிகளும் ஏடாகூடமாகக்  கேள்வி கேட்பார்கள். எத்தர்கள்!)

-0-0-0-0-0-

அயோக்கியர்கள், இந்தக் குழந்தைகளைக் காயடித்து விட்டார்கள். 1967க்குப் பின் இந்தத் திரா விடக் கட்சிகள், நம் இளைய தலைமுறைகளை சிந்திக்க விடாமல், கல்வி கற்றுக் கொடுக்காமல், அவர்களை வெறும் சுகங்களை போகிப்பவர்களாக, வெறும் உணர்ச்சிகரக் கரகரப்புகளின் நுகர்வோராக்கி விட்டார்கள். சினிமாக் கனவுக்கன்னிகளின் துடைகளுக்கும், பால்சுரப்பிகளுக்கும் நடுவில் தான் அவர்களுடைய அண்டமே இருக்கிறது. பெண்குழந்தைகளானால் இந்த அண்டமானது  ஃபேர் & லவ்லிகளுடன் மட்டுமே விரிவது நின்றுவிடுமோ என்ன எழவோ! உன்னதமாவது, மசுராவது….ங்கோத்தா, இன்னாடா பெனாத்தறீங்க?

ராஜீவ் காந்தி உபயத்தில் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், நம் குழந்தைகளுக்காக நடந்து கொண்டிருக்கும், மகத்தான, அமைதியான கல்விப் பணி செய்துகொண்டிருக்கும் நவோதயா வித்யாலயாக்களிடம், நம் திராவிடக் கொழுந்துகள் நடத்தும், வழிகாட்டும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் பிச்சை வாங்கவேண்டும். இந்த ஒரு பணிக்காகவே ராஜீவ்காந்திக்கு கோவில் கட்ட வேண்டும். இந்த இளைஞரை, அல்பாயுசில் கொன்று விட்டார்கள், பாலச்சந்திரன்களின் தகப்பன்கள், அயோக்கியர்கள்! போஃபர்ஸ் கொடுத்த அற்ப  கமிஷன் எல்லாம் ஊழல் என்றால், அந்த ஸ்கேலில் ராசா (கைய வெச்சாக்களும்), கனிமொழிகளும் எங்கேயோ ஸ்ட்ரேடோஸ்பியரில் இருப்பார்கள்!

-0-0-0-0-0-

என் சொந்த அனுபவங்களை, கல்வியைச் சுற்றி இயங்கும் நண்பர்களுடன் அளவளாவியதைக் கொண்டு எனக்குத் தெரிய வருவது என்னவென்றால் – கர்னாடகாவில், ஆந்திராவில்தான் நிலைமை கொஞ்சம் மோசம். இருந்தாலும் அந்தப் பகுதிகளில், இந்தச் சினிமா சம்பந்தப்பட்ட இழவுகளின் தாக்கத்து குறைவு. ஆரிய திராவிட எனும் பிரித்தாளும் குப்பை பம்மாத்துக்கள் இல்லை, அவ்விடங்களில்.

கொஞ்ச நாட்களில் இந்த இரு பிரச்சினைகளின்மையின் காரணமாகவே இவையும் நமக்கு வெகு முன்னே போய்விடக் கூடியவைதான். மேலும், அந்த மாநிலங்களின் அரசியல்வாதிகள், அவர்கள் ஊழல் மன்னர்களானாலும் – வெறுப்பையும் அரைகுறைத்தனத்தையும் அவர்களுடைய இளைஞர்களுக்கு ஊட்டுவதில்லை (மாவோயிஸ்ட்கள் தவிர). மேலதிகமாக, அவர்கள், தன்னலம் கருதிகளானாலும் தங்கள் மாநில உரிமைகளாக, பாத்தியதைகளாக அவர்கள் பார்ப்பதை, அவர்களுக்காகப் பேணி, அவற்றை அழிக்காமல் பாதுகாத்துக் கொள்வதில் முனைப்புக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் (மாவோயிஸ்ட்கள், சுரங்க ரெட்டிகள்  தவிர).

ஆனால், நம் தமிழ் நாட்டில் — கவிஞர் உமாமஹேஸ்வரி ஒரு கவிதையில் (இதன் பாடுபொருள் வேறு,  என் நினைவிலிருந்து எழுதுகிறேன்) எழுதியதைப் போல:

… தொடரத் தொடர வேதனை மிகும்…
… தூரத்தில் விசும்பும் நிலவும்,
கேள்வி கேட்காமல் சதா
புல் தின்னும் ஆடுகளும் மனம் உறுத்தும்.

… இவை தவிர கடல் துப்பிய சிப்பியாய்
கடற்கரை மணலில் நான் தனித்து…

… அழகான, சோகம் இழையோடும் கவிதைத் துகள்.

ஆனால்…

-0-0-0-0-0-

இந்தக் குழந்தைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை, இடங்கையால் அவர்களைச் சீந்தாதவர்களாக்கவில்லை. ஆனால் இவர்கள், தாங்கள் அறிந்த அரைகுறை விஷயங்களை விட்டொழித்து, சரியான விஷயங்களை, தர்மங்களை, தங்கள் மூளைகளில் செலுத்த பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் இந்த டன்னிங்-க்ரூகர் விளைவு வேறு புகுந்து விளையாடும்.

யோசித்துப் பாருங்கள் – இந்தக் குழந்தைகள் அனைவரும் பிரகாசிக்கக் கூடியவர்கள் – ஒரு விதி விலக்குகூட இல்லாமல்! இதுதான் சோகம் தருவது. ஆனால், இவர்களுக்கு மெடா-காக்னிஷன் (மீயறிவு) ஊட்டப்படாத காரணத்தால், இவர்களுடன் உரையாடலில் இருப்பது கூட மிகவும் சிரமம். (எப்படி வீணடிக்கிறோம், இந்த இளம் பயிர்களை, உயிர்களை! – இந்தப் பதட்டத்தினாலேயே தூக்கம் வரமாட்டேன் என்கிறது, என்ன செய்ய!)

இவற்றையெல்லாம் மீறி, இவர்களில் ஒரு சிறிய, மிகச்சிறிய பகுதியினர் (5%??) மேலெழும்பி வருவார்கள் என்பதை நான் தொடர்ந்து மாளா ஆச்சரியத்துடன் அவதானித்திருக்கிறேன். கடவுள் இருக்கிறாரோ என சில சமயம் நான் சந்தேகப் படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

ஆனால், நான் சொல்வேன்: ஒரு ஆசிரியருக்கு, சமூகத்திற்கு bang for the buck என்பது குழந்தைகளை, அவர்களுடைய மிகச் சிறிய வயதிலிருந்து அவர்கள் வயதிற்கும், தேவைகளுக்கும் ஏற்ப அழகாகக் கல்வி புகட்டுவதுதான்.

-0-0-0-0-0-

குழந்தைகள் = சொந்தமான எங்களுடையவை + சொந்தமில்லாத எங்களுடையவை – என அறிக.

எங்களுக்கு குழந்தைகளுடன் இருப்பதும், பழகுவதும், பேசுவதும் மிகவும் பிடிக்கும். இப்படி ஒருவர் இல்லாமலிருந்தால் அவர் ஆசிரியராக இருக்க அடிப்படைத் தகுதி அற்றவர் என்பதென் எண்ணமும் கூட.

எனக்கு மேலதிகமாக, என் பேச்சை நானே கேட்பது என்பது பிடித்தமானதும் கூட. (இது, என் பதிவுகளை நானே,  நான் மட்டுமே படித்து இறும்பூதடைவதின் மாமா பையன் தான்!)

-0-0-0-0-0-

சுமார் பத்து வருடங்களுக்கு முன் நானும் என் மனைவியும் (=துணைவி) நம் கல்வித் தரத்தின் கேவல நிலைமையை நினைத்து நினைத்து நெக்குருகி – இனிமேல் பெட்டைப் புலம்பலில்லாமல், அது சரியில்லை, இது குப்பை, அது அப்படி இருக்க வேண்டும், இது இப்படி இருக்கக் கூடாது, இது இம்மாதிரியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து குண்டிகளைத் தேய்த்துக் கொண்டு, தேநீர் அருந்திக் கொண்டு பேசிக் கொண்டிராமல் – எங்களாலான நேரடி, உடனடி வேலைகளில் ஈடுபடவேண்டும் என முடிவு செய்தோம் – இப்போது, டபக் என்று ஒரு மாலையில் இப்படி முடிவு செய்தோம் என்கிற சித்திரம் விரிந்தால் அது தவறு – இது பலவருட உரையாடல்களின் சாராம்சம்.

எங்கள் இருவருக்கும் ஏறத்தாழ ஒரே செவ்வியல் மான்டிஸோரி, வால்டார்ஃப், நயிதலீம் சார்ந்த பார்வைகள் இருந்ததும் உதவியாக இருந்தது. நாங்கள் உடனடி முடிவுகளை, பிரதிபலன்களை, சந்தோஷங்களை எதிர்பார்க்காமல், சிலபல ஆண்டு உழைப்புக்குப் பின்தான், எங்களைச் சுற்றியுள்ள சிறிய வட்டத்தில் எங்கள் பங்கை, சாதகபாதகங்களை உணர முடியும் என்பதிலும் ஒரு அடிப்படைப் புரிதலுடன் இருந்தோம்.

நாங்கள் எனோதானோவென்று அரைமனதுடன் முயற்சி செய்து வெகு சீக்கிரம் ஏமாற்றமடையும் ஜாதியில்லை. ஒரே விட்டேனா பார் என்று முட்டி மோதி சாதிக்கும் மனப்பான்மைதான். இருவருடைய பொதுவான பின்புலங்களும், அபிலாஷைகளும் பெரும்பாலும் மேற்குவிந்த உலகப் பார்வையும், தொடரும் உரையாடல்களும் பொதுவாக நிறைவும் சில சமயம் அயற்சியும் தருபவை. (ஏனெனில் டிப்ரெஷன் – உளச்சோர்வு என்றால் இருவருக்குமே ஒரே சமயத்தில் அது வந்து விடும். பிரச்சினை, பிரச்சினை)

ஒரு பஞ்சாப் (பாகிஸ்தான்) ஆசிரியர் - மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

ஒரு அற்புதமான, அனாமதேய பஞ்சாப் (பாகிஸ்தான்) ஆசிரியர் – மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

நாங்கள் ஏழைக் குழந்தைகளுடன் தான், கிராமத்தில்தான் பணிபுரிவோம் எனவெல்லாம் மேட்டிமைத்தனத்துடன் – இதோ பார் நாங்கள் சேவை செய்கிறோம், பிடுங்குகிறோம் என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. அமைப்புசாரா நிறுவனங்கள், தொண்டு, குண்டு, பணி, பிணி, சேவை, இடியாப்பம் என்றெல்லாம் கும்மியடித்துச் சுற்றிவரவில்லை. பெரும்பாலான தொழில்முறை NGOக்களை நான் ஆழமாக நெஞ்சார வெறுக்கிறேன் கூட

ஒரு உத்தரப் பிரதேச ஆசிரியர் - மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

ஒரு  அற்புதமான, அனாமதேய உத்தரப் பிரதேச ஆசிரியர் – மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்

… எங்களால் முடிந்த வரை குழந்தைகளுக்கு (அவர்களுக்கு பணக்காரப் பின்புலமோ, அல்லது உழலும் ஏழைக்குடும்பப் பின்புலமோ – எதுவாக இருந்தாலும்) இந்த எல்லையில்லாப்   ப்ரபஞ்ச வெளியில், அவர்களுடைய  சொந்தமான, அழகான, குறிப்பிடத்தக்க இடத்தை, அவர்கள்   மகிழ்ச்சிகரமான நினைவுகளுடனும், சுயசார்புடனும் அடைய நாங்கள் ( எங்களுடைய நிச்சயம் குறைபட்ட பார்வையுடன் தான்), என்ன செய்யக் கூடும் என்றுதான் ஆரம்பித்தோம். எங்கள் சொந்தக் குழந்தைகளையும் நாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறோம். செல்வோம். இவர்களுக்குச் செய்வதை மற்றக் குழந்தைகளுக்குச் செய்தோம். இவர்களுக்குச் செய்யாததை மற்றக் குழந்தைகளுக்குச் செய்யவில்லை. அவ்வளவே.

-0-0-0-0-

அவள் கடந்த 15 வருடங்களாக ஒரு முழுநேர மழலையர் + சிறுவர்-சிறுமியர்களின் ஆசிரியை. தகுதியும், பயிற்சியும், முனைப்பும், சமயோசிதமும், அசாத்தியமான பொறுமையும், நகைச்சுவை உணர்ச்சியும் உடையவள். அவளுடைய ஒரே பிரச்சினை நான் தான். சில சமயங்கள் யோசிப்பேன்: இவள் என்னுடைய ஆசிரியையாக இருந்திருந்தால் எப்படி எங்கேயோ போயிருப்பேன் என்று; ஆனால், இன்னமும் யோசித்தால் இது ஒருமாதிரி மலையாள – ‘மாணவனின் இன்பவெறி’ படம் போலப் போய்விடும் எனத் தோன்றுகிறது, மன்னிக்கவும்.

நான் சுமார் 17 வயதிலிருந்து விட்டு விட்டு ஆனால் விடாமல், இந்தக் கல்வி பஜனை செய்து வருபவன் என்றாலும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகத்தான் முழுநேரக் குழந்தைமுதல்வாதி. நான் 11 வயதிற்கு மேற்பட்ட கு்ழந்தைகளோடு மட்டுமே இதுவரை வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

dsc_0048_jpg

உண்மையாகச் சொன்னால், கொடுத்து வைத்திருக்க வேண்டும், ஒரு ஆசிரியனாக இருப்பதற்கு. இதிலுள்ள ஆஹா தருணங்கள், நெகிழ்வுகள் வேறெந்தத் துறையில் கிடைக்கும் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை…

பின்குறிப்புக்கள்:

 1. மிகுந்த ஆலோசனைகளுக்குப் பின்பு – இந்தக் கல்லூரியில் என் சொந்தக் குழந்தைகளைப் படிக்க அனுப்பவேமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கும் முடிந்தவரை இப்படிச் செய்ய, பரிந்துரைக்க முயற்சிப்பேன்.
 2. என் நண்பர், தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்ரமர் எனத் தோன்றுகிறது. சிலர் திருந்தவேமாட்டார்கள் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம்தான். இவர் தொடர்ந்து அந்த மாணவர்களுடன் பணிபுரிந்து அவர்களுக்கு விடாமுயற்சியுடன்  விழிப்புணர்வூட்ட முயற்சிப்பார்தான், எவ்வளவு அழகான எண்ணமுடையவர் இவர். எனக்கு இவரை வாழ்த்த வயதிருக்கிறது. வணங்கியும் மகிழ்வேன்! (இவர் எனக்கு இருமுறை விருந்தோம்பி விட்டார். இந்தத் தடவை ஐஸ்க்ரீமுடன் கூட! இவருடைய உப்பையும் இனிப்பையும் சாப்பிட்ட நான், என் நாக்கின்மீது பல்லைப் போட்டு இவரை ஒன்றும் கரித்துக் கொட்ட முடியாதுதான்; இருந்தாலும் இவரை அவ்வப்போது பார்ப்பனவெறியர் அதுஇதுவென்று திட்டி, அடக்கி வைக்கவேண்டும்தான். இல்லையேல் இவர்கள் ஏத்தம் அதிகமாகி வல்லாதிக்கம் செய்வார்கள்… ஆ, கைபர்-போலன் – ங்கொம்மாள, எங்கேடா மவனே என் அட்லஸ்ஸு மேப்பு எழவு??)
 3. என் சமூகக் களப்பணி வேலைகள், போராட்டங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் தலையாயது – அடுத்த திரைப்படம் எப்ப வருகிறது என்றலைந்து, முதல் காட்சியை முதலில் உட்கார்ந்து பார்த்து நடிகையின் பாற்சுரப்பிகள் உள்ளாடைகளிலிருந்து பிதுங்கித் தெரியும் படத்தைப் போட்டு விமர்சனம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் என்னைத் தொடர்பவர்கள் ஏமாற்றமடைவார்களல்லவா? அதனால்தான். ஏதோ தமிழ்ச் சமூகத்திற்கு என்னாலான உதவி.
 4. நன்றி NHM Writer 1.5.1.1 Beta காதலியே! என்ன உபத்திரவம் இல்லாத அழகான கணினிவஸ்து நீ! அமைதியாக ஸிஸ்டெம்ட்ரேயில் உட்கார்ந்து கொண்டு தமிழ்த் தட்டெழுத்து மாயவுலகத்தைச் சாத்தியமாக்குகிறாய்! நன்றி, மறுபடியும், மறுபடியும்
 5. இவை அனைத்துக்கும் முன்னால், நான் தூங்க வேண்டும். இதனை எழுதியவுடன், எழுதிக் கொண்டிருக்கும்போதேகூட, தூக்கம் கண்களை அழுத்துகிறது. என்னுடைய மன அழுத்தங்களுக்கு இந்தப் பதிவு ஒரு ரிலீஸ். இந்த எழவை நான் இரண்டுநாள் முன்பே செய்திருக்க வேண்டும். (இந்த, மனம் கலங்கிய / மூளை  பிறழ்ந்த நிலையில்  கடந்த சில நாட்களில் சில நண்பர்களுக்கு பீதியளிக்கும் திடுக்கிடும் மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறேன் வேறு! பாவம், அவர்கள். ஹ்ம்ம்ம்)

பின்னோதிபின்குறிப்பு: கஞ்சா அடிக்காமல் நிச்சயம் சிவனைக் காணலாம். என்ன,   3-4 நாட்களுக்குத் தூங்காமல் குழப்பச் சிந்தனைகளில் ஈடுபட்டு கடும்பீதியடைய வேண்டும், அவ்வளவு தான்! பிறகு, ங்கொம்மாள, எங்கெங்கு காணினும் சிவம் தான்!

Advertisements

7 Responses to “கஞ்சா அடிக்காமலேயே சிவனைக் காண்பது எப்படி?”


 1. ஒருவேளை தாங்கள் கேள்வி கேட்காமல் அவர்களையே ஒரு தலைப்பில் உங்களுக்கு என்ன தெரியும் கூறுங்கள் என்று சில மாணவர்களைக் குறிப்பிட்டு கேட்டு இருந்தீர்களானால் உங்களுக்கு இவ்வளவு ஏமாற்றம் ஏற்பட்டு இருக்காது. அவர்களுக்கும் தெரியும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

 2. Sridhar Says:

  1-1 பேசினால் மாணவர்களில் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர்களோ என்னவோ? சமீபத்தில், நான் ஒரு பலவீனமான தருணத்தில், பிரபல பல்கலைக்கழகம் நடத்தும் கணினி வழிக்கல்வி courseக்கு C++ நடத்த ஒப்புக்கொண்டேன். அந்த கோர்சின் அடிப்படை, இலவச மற்றும் ஒப்பன் சோர்ஸ் (கூகிள் மொழி பெயர்ப்பு ஏடா கூடமாக இருப்பதால், வேண்டாம்) மென்பொருட்கள் பற்றியது. நீங்கள் சொன்னது போல், மாணவர்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை – இருபதில், ஒன்றிரண்டு பேர் தவிர. ஆனால் நான் Windows பயன்படுத்துகிறேன் என்று தெரிந்ததும், மிக உணர்ச்சிவசப்பட்டனர். ஒப்பன் சோர்ஸ் மதம் போதிக்கும் ஒரு கோர்ஸில் Windows / Visual Studio பயன் படுத்துவது அவதூறு என்றும் தெய்வ குற்றம் என்றும் பேசினர். நேர்முக வகுப்பாக இருந்திருந்தால், எனக்கு அடி கூட விழுந்திருக்கும். இப்படி உ வ பட்ட மாணவர்கள் ஒருவரும் அதுவரை உருப்படியாக அசைன்மெண்ட் எதுவும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 3. ஆனந்தம் Says:

  //ராஜீவ் காந்தி உபயத்தில் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், நம் குழந்தைகளுக்காக நடந்து கொண்டிருக்கும், மகத்தான, அமைதியான கல்விப் பணி செய்துகொண்டிருக்கும் நவோதயா வித்யாலயாக்களிடம், நம் திராவிடக் கொழுந்துகள் நடத்தும், வழிகாட்டும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் பிச்சை வாங்கவேண்டும். இந்த ஒரு பணிக்காகவே ராஜீவ்காந்திக்கு கோவில் கட்ட வேண்டும். இந்த இளைஞரை, அல்பாயுசில் கொன்று விட்டார்கள், பாலச்சந்திரன்களின் தகப்பன்கள், அயோக்கியர்கள்! போஃபர்ஸ் கொடுத்த அற்ப கமிஷன் எல்லாம் ஊழல் என்றால், அந்த ஸ்கேலில் ராசா (கைய வெச்சாக்களும்), கனிமொழிகளும் எங்கேயோ ஸ்ட்ரேடோஸ்பியரில் இருப்பார்கள்!// Well said!!!!!!!!!!! அட்சர லட்சம்!!!!!!!!!
  ராஜீவ் தான் இடுப்பில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு தனுவைக் கொன்றார் என்று பொங்கியெழத் தினவெடுத்த தோள்களுடன் போராளிகள், களப்பிணியாளர்கள் திரியும் காலம் இது. அக்கம்பக்கம் பார்த்து ஜாக்கிரதையாகப் பேசுங்கள்.


 4. I’m unable to share this on my fb page…I have done this earlier but the option is not found today. Please guide.

 5. shankzz Says:

  நபநபன்னு பதில் போட்டுப் போயிடலாம். ஆனா, அது மட்டுமே செய்யவிடாம எதோ தடுக்குது. என் மனதுக்கு ரொம்ப முக்கியமான ஒரு ஏரியா இது. நீங்க என்னோட அல்மா கில்மா மேட்டர் பத்தித்தான் பேசறீங்களான்னு தெரியல (பெயர் வேண்டாமே). அதுவும் சிட்டிலயே மிகப்பழைய பேரும் புகளும் பெற்ற பெருங்கல்லூரிதான். ஆனா இப்போ அங்க பாத்தா ஆட்டு மந்தைகளுக்குக் குறைவே இல்ல. நாங்க (2003 எம்.சி.ஏ பாஸ் அவுட்) கொஞ்சம் பெட்டரா இருந்தோம்னு எப்பவுமே தோணும் (ஒரு திமிர்தான்). ‘டே காலேஜ்ல கேள்வி கேட்டு சாகடிக்கிறீங்க. ஈவினிங் காலேஜ்ல ஜோடி போட்டு சாகடிக்கிறாங்க’ன்னு பேரு வேற வாங்கியிருந்தோம். காலேஜ் முடிஞ்சு கேண்டீன்லயும், கிரவுண்ட் கேலரிலயும் போய் உக்காந்தா எந்திரிச்சு வீட்டுக்குப் போறதுக்கு எப்படியும் ராத்திரியாயிரும். டீவியெல்லாம் பாத்த ஞாபகமேயில்ல. விவாதிக்கறதுக்கு அவ்வளவு விஷயமிருந்தது. அய்ன் ராண்ட்ல இருந்து அண்டார்டிகா வரைக்கும். படிப்பப் பத்தியும் அப்பப்ப பேசுவோம். தினமும் ஹிண்டு கிராஸ்வேர்டு போடுவோம், முழுசா. கவிதை பேசுவோம். கண்ட கர்மாந்தரத்தையும் பேசுவோம். ஆனா எப்பவுமே உருப்படியா எதாவது செஞ்சிட்டிருந்தமாதிரிதான் நினைவு.

  எங்க பேட்ச்லதான் ஆரம்பிச்சது. ஒழுங்கா ஒண்ணும் செய்ய முடியாத சில வெத்துவேட்டுகள் எம்.ஈ. படிச்சு லெக்சரரா வந்ததுகள். ஒரு மசிரும் தெரியாட்டியும் மண்டைக்கு மேல மைல் நீளத்துக்குத் தலைக்கனம். கொஞ்ச கொஞ்சமா அவங்க ஆட்டம் தொடங்கிச்சு. அருமையான பேராசிரியர்கள், அன்போடும் நட்போடும் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தவங்களை பாத்துட்டு இந்தக் காட்டுக் கும்பலைப் பாக்கறதுக்குப் பத்திட்டு வந்தது. எப்பவும் சண்டை போட்டோம். ரிபெல் கும்பல்னு பேர் வாங்கினோம். ஆனா எங்களுக்கு அடுத்த பேட்ச்ல இருந்து காயடிப்பு ஜரூரா ஆரம்பிச்சது. கண்டிப்ப 3-4 பேட்ச் தாண்டி சுயசிந்தனைன்னு ஒண்ணுமே இல்லாத மௌட்டீகங்களை ரிலீஸ் செய்யும் ஃபாக்டரி ஆகிப்போயிருக்கும் என் அருமைக் கல்லூரி.

  இந்த ஒரு point-of-view பத்தியும் பேசணுமேன்னு தான் வந்தேன்.

 6. Anonymous Says:

  //இது, என் பதிவுகளை நானே, நான் மட்டுமே படித்து இறும்பூதடைவதின் மாமா பையன் தான்// பாஸ், ரொம்பத்தான் பெருமைப் பட்டுக்காதீங்க. நாங்களும்தான் படிக்கிறோம் (படித்துத் தொலைக்கிறோம்).

 7. சரவணன் Says:

  அட! ஒற்றுப்பிழை! **** நல்லச் சம்பளம் *****

  ஒருவேளை ரஜினி முள்ளும் மலரும் படத்தில் சொல்வாரே ‘கெட்டப்பய சார் அவன்!’ என்று… அந்த மாதிரி சொல்கிறீர்களோ?!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: