போங்கடா நீங்களும் ஒங்க பொறநானூறும்…

15/03/2013

யோவ் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ புகழ் கணியன் பூங்குன்றன்!

போனால் போகிறது பெருசு, என்னமோ மெரண்ட்ருச்சு என்று விட்டால்… டபக்கென்று அடுத்த வரி –  ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ – இது தேவையா?

… செரி, இதுவும் செரிதேன்… போனால் போகிறது,  இதுவும் கழியும் என்று மறப்போம், மன்னிப்போம் – பட்டிமன்றம் தோறும் இதனைச் சுழற்றிச் சுழற்றிக் கத்திச் சொல்லி, விவஸ்தை கெட்ட நம் கண்றாவித் தமிறிஞர்கல் கும்மியடிக்கிறார்கல்ண்றாளும்…

நீங்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலே,  கண்டமேனிக்கும் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்றெல்லாம் எழுதிவிட்டீர்? புறநானூற்றுக்காரர் என்றால் எங்களுக்கு ஒரு எழவும் புரியாது எனக் கொஞ்சம் மரியாதை கொடுத்தால், அளவுக்கு மீறித் துள்ளுகிறீர்!    நான்  உங்களை அறிவுரை கேட்டேனா?  வேறு யாராவது உங்களைக் கேட்டார்களா?

எதற்கு உங்களுக்கு இந்த அளவு அதிகப் பிரசங்கித்தனம்? அகில உலக தமிழ் அரைகுறைகள் சார்பாக உங்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்க, முதற்கண் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

மேலும், உங்களை மனதார வெறுக்கிறேன், என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நிற்க, (யோவ் கணியன்! நிற்க என்றால் நீ நிற்க வேண்டும். சும்மா உரைநடைக்காகவா சொன்னேன் என நினைத்தீர்? எந்திருச்சி நில்லு மேன்! சும்மா நெளியாத… என்ன, நீ கன்யாகுமரித் திருவள்ளுவனா குண்டியை நெளிச்சுக்கிட்டு நிக்கறத்துக்கு?? துடுக்குத்தனமா பதிலு பேசாம நாஞ் சொல்றத கேப்பியா…)

… அப்படி இகழ்தல் செய்வது இலமில்லைதான் என நான் கருதுகிறேன். பூங்குன்றரே, நீங்கள் வாழ்ந்த நாளில், இணையம் கிணையம் என்றெல்லாம் இல்லை. காலி டப்பாக்களும் டப்பிகளும் இல்லை. அதனால் தானோ என்ன எழவோ, பொதுவாக அறிவுரை கிறிவுரை எல்லாம் சொல்லி விட்டுப் ப்ரபஞ்ச தாத்பரியத்தை அழகாக உணர்த்திவிட்டு, பட்டாம்பூச்சிபோலப் பறந்து போய்விட்டீர்கள், குஷியாக.

நீங்கள் இப்போது இருந்தால் மவனே நாங்கள் உங்களுக்கு ஆப்பு வைத்திருப்போம்….  டுபுக் கவிதைகளால், பின் நவீனத்துவத்தால் ஆட்கொல்லப்பட்டு, கட்டுடைப்பு செய்யப் பட்டு, தளர்ந்திருக்கும் உங்களைத் தரதரவென்று ஆட்டோ வைத்து இழுத்துப்போய், அர்ச்சனை செய்து, நன்றாகக் கவனித்து, எங்களுடைய இணையத் தொழில்நுட்பச் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் மேல் ஆடை அகற்றிப் படுக்கவைத்து, உங்களை எறியூட்டிப் பொசுக்கி இருப்போம்.

சரி, இதுவும் பரவாயில்ல, பொளச்சுப்போ பெருசே, நாங்க ஒத்துக்கறோம் –  ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’  என்று விட்டால்…

இதற்கு மேலே, ங்கொம்மாள, ’பெரியாரை வியத்தலும் இலமே’  என்றெல்லாம் வேறு எழுதியிருக்கிறீர்!  பெரியாரை, ’பெரியோரை’ என்று கொஞ்சம் மாற்றி எழுதி பாவ்லா காட்டினால், எங்களுக்கு உங்களுடைய ஆரியக் குசும்பு  தெரியாமல் போய் விடுமா?  நாங்கள் ஏமாந்து விடுவோமா? அதாவது பெரியாரை வியந்து மதித்தலும் சரியில்லை என்பது போல எழுதியிருக்கிறீர்கள்! இன்னாடா டாய்!

ஆ! எவ்வளவு பெரிய குற்றம் இது? கருணாநிதி அவர்கள், நீங்கள் எழுதிய முதல்  வரியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை நைஸாகத் தன் கவிதை, கதை, வசனம் மாதிரி மாற்ற, செம்மொளி மாநாடு சமயம் முயன்று கொண்டிருந்ததால் தப்பித்தீர். இல்லையேல், அவர் மேலேகீழே உங்களுடைய பொட்லங்கா சங்க இலக்கியத்தைப் படித்திருந்தால், அதனைப் பற்றி முரசொலியில் எழுதியிருந்தால், அடலேறுகள் நாங்கள், புறநானூற்றுடன் சேர்ந்து உங்களையும் கிழி கிழி என்று கிழித்திருப்போம்.

கடும்கொடும் தமிழில் நீங்கள் எழுதியிருப்பதை எங்கள் தமிழில் நாங்கள் அடி மடி துடை எனத் தமிழ்த் திரையுலக நடிகைகள் உதவியுடன்  மொழி பெயர்ப்பு செய்து, பிரித்துப் படித்துப் புரிந்துகொண்டு இன்புற முடியாத, சோம்பேறித் தனத்தினால் மட்டுமே உங்களைப் போன்ற துரோகிகள் சங்கம்-கிங்கம்  இலக்கியம்-கிலக்கியம் என்று அயோக்கியத்தனமாக உலா வருகிறீர்கள். எனப் புரிந்து கொண்டு அடக்கி வாசியுங்கள், தெரிந்ததா?

… இப்போதாவது புரிந்ததா? ஏன் நாங்கள் புற நானூறு, குறுந்தொகை (இந்தக் குறுந்தொகை எழவு, ஏதாவது அந்தக் கால ட்வீட்  டைஜஸ்டோ? உலகின் முதல் ட்வீட்டன், திராவிடட்   ட்வீட்டன்  டானோ??)  போன்ற பழங்குப்பைகளை எல்லாம் ஏன் படிப்பதில்லை என்று? அதனால் தான் தப்பித்தீர்கள், உங்களைப் போன்ற அதிகப்பிரசங்கிப் பாவிகள்…

=-=-=-=-=

காலாவதியான கணியனை விட்டு விட்டுப் பார்த்தால் (பிழைத்துப் போகட்டும் துரோகி!) – அறிவியல் உள்ளிட்ட சில விஷயங்களில் எனக்கு ஆழ்ந்த பயிற்சியும் திறமையும் உள்ளதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால், ஏதாவது அபத்தமாக, உண்மையற்றதாக, ஒப்பேற்றப் பட்டதாக, தரவுகளே இல்லாததாகத் தெரியும் கட்டுரை கண்ணில் பட்டால், எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி விடுகிறது.

இப்படிப்பட்ட ஒரு கட்டுரையை நேற்றுப் படித்து (தேவையா?) – கோபத்தாலும் வருத்தத்தாலும் மிரண்டு சுருண்டு வறண்டு கிடக்கும் நான், அடுத்த பதிவில், அது பற்றி என் எண்ணங்களைப் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

ஆக, ‘சிறியோரை இகழ்தல் இலமல்ல, நலமே’ – ஏனெனில், தமிழில் இந்த அபாயகரமான, கீழ்மை நோக்கிய அலட்சியப் போக்கு, தவிர்க்கப் படவேண்டியது என்பதென் எண்ணம்.

சிறியோரை இகழ்தல் இலமல்ல, நலமே!

பின்குறிப்பு: கணியன் பூங்குன்றன் ஒழிக!!

-0-0-0-0-

கண்டதைப் படித்து, மனப் பிராந்தியுற்று, மூளை சிதைக்கப்பட்ட தருணங்களில் எழுதிய என் முந்தைய கோபவருத்தச் சிதறல்கள்:

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s