கணிதம்! பியெஹ் ரெனெ டெலிஞ்ய!!

22/03/2013

கணிதத்தின் அழகுகளில் ஒன்று – அதன் ஒரு கூறினைப் பற்றி நமக்குக் கொஞ்சம் தெரிந்த மற்றொரு கூறின் வழியாக விளங்கிக் கொள்வது. பின்பு விளங்கிக் கொண்ட முதலாவதன் வழியாக, நம்முடைய, பின்னதின் / இரண்டாவதின் தன்மையை மேலும் அறிந்து கொண்டு, திரும்பவும் அதனைப்  புதியதாகப்  பார்த்து, அதனை முன்னெடுத்துக் கொண்டு செல்லல். சுற்றிச் சுற்றி, ஒரு திருகாணியின் மறை சுழல்வது போல மேலெழும்பி, இப்படியே ஆனந்தமாகச் சென்று கொண்டிருக்கலாம்.

இந்த வழி, பொதுவாக, அனைத்து ஞானமுறைகளுக்கும், துறைகளுக்கும் கூட ஒத்துவரும் என்றாலும், குறிப்பாக, இது கணிதத்துக்கு மிகவும் துல்லியமாகவும், நம் கற்பனை மூலமாக மட்டுமே கூட அறிந்து கொள்ளத் தக்கதாகவும், உணரத்தக்கதாகவும் இருக்கும். எடுத்துக் காட்டாக, கியர்கள் / பற்சக்கரங்கள் –  சுற்றுவதை நாம் வெகு சுலபமாக ஒரு சமன்பாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும். 3அ + 4ஆ =24 எனும் சமன்பாட்டை நாம் ஒன்றுக்கோன்று பிணைந்து சுற்றிக் கொண்டிருக்கும் அ, ஆ கியர்களாக பொருத்திப் பார்க்க முடியும்.

இசைமேதை யோஹான்ஸ் ஸெபாஸ்டியன் பாக்ஹ் அவர்களின் ‘விடாமல், தொடர்ந்து மேலெழுந்து கொண்டிருக்கும் இசை’ (endlessly rising canon) போல இதுவும் ஒரு, நுப்பும் நுரையும் கலந்து சுழித்துக் கொண்டோடும் கணித வெள்ளம் தான். அழகுப் பெருக்கு தான். ’எத்தனைக் கோடி  இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா’-தான்,  வேறென்ன சொல்ல!

-0-0-0-0-0-

கடந்த ஏழு வருடங்களாக, கணிதத்தைப்  பொறுத்தவரை ஒவ்வொரு முறை ஃபீல்ட்ஸ், எபெல் பதக்கங்கள் / பரிசுகள் அறிவிக்கும் போதும் நானும் என் குழந்தைகளும் அதனைக் கொண்டாடி வருகிறோம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது 10 குறிப்பிடத்தக்க உலகளாவிய, தற்காலக் கணித மேதைகள், 10 அகில இந்தியா அளாவிய தற்காலக்/முற்காலக் கணிதவல்லுனர்கள் என ஒரு 2 மணி நேரப் பேச்சு நடக்கும். குழந்தைகளுக்குப் புரிகிற அளவில், நான் கிரகித்துக் கொண்ட அளவில் இம்மேதைகளின் ஆராய்ச்சிகளைப் பற்றி, முடிவுகளைப் பற்றி, அவர்களின் மகத்தான பங்களிப்புகள் பற்றி – பேசுவோம், எல்லாம் பவர்பாய்ன்ட்லெஸ்  கறும்பலகைப் சாக்குக் கட்டிப் பேச்சுக்கள் தாம்.

இவ்வுரையாடல்களில், சில சமயம் குழந்தைகளின்  தாவல்கள் அசர வைக்கும். சென்ற வருடம், சில குழந்தைகளின் NP-complete பற்றிய புரிதல்கள் மயிர்க்கூச்செறிப்புக் கொடுத்தன, என்பது நினைவுக்கு வருகிறது…

-0-0-0-0-0-

தினமும் காலையில், கூட்டுப் பிரார்த்தனைக்கு முன்னால் – 15 நிமிடங்கள் எங்கள் பள்ளி வளாகத்தை, ஆசிரியர்களும், மாணவர்களும், (இப்பள்ளியை நடத்தும் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலரும்  கூட). பெருக்கிச் சுத்தம் செய்வோம் (கேல்குலேட்டரை உபயோகிக்காமல்).

பள்ளி முழுவதும் தானேக்குப் பிறகும் கூட மரங்கள் நிரம்பி விளங்குவதால் இதனைத் தினமும் செய்ய வேண்டும். இல்லையென்றால் விழுந்த இலைகளைனூடே ஊடாடும் ஊர்வனவற்றின், குறிப்பாக, பாம்புகளின்  பாடு பரிதாபமாகிவிடும்,

இன்று காலை, நான் பெருக்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் பெருக்கிக் கொண்டிருந்த, 8ஆம் வகுப்புச் சிறுவனொருவன் ஒடி வந்து, ராம், உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டான். என்னப்பா என்றேன்.
நாம்ப பேசின மாரியே பியரி டிலிக்நேக்கு  எபெல் பரிசு கெடச்சுடுத்து!
ஓ அப்படியா? எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஒனக்கு எப்படித் தெரியும்?
நேத்து ஹிந்து பேப்பர்ல வந்திருக்கு.
ஓ – சரி அப்புறம் பேசலாம். முதல்ல பெருக்கி முடி பயலே.
இதக் கொண்டாடணும் ராம், தமிழரசியும் சொல்லிச்சு.
சரி, பண்ணிட்டா போச்சு. நாளை சனிக்கிழம தான. எல்லோருக்கும் மஃபின் வாங்கிட்டு வர்ரேன். எவ்ளோ பெரிய விஷயம் இது! நிச்சயம் கொண்டாடணும்தான் ஆனா, ஒன்னோட இடம், தூசிதுரும்பில்லாம சுத்தமாகணும், மொதல்ல. கெளம்பு.

சரியென்று துடைப்பத்தைத் துடைகளுக்கிடையில் இடுக்கிக் கொண்ட முருகன் மயில் வாகனமேறிப் பறந்து சென்றான்.

-0-0-0-0-0-

என் குழந்தைகளில், அவர்கள் வளர்ந்த பின்,  குறைந்த பட்சம் ஒருவராவது கணிதத்தில் ஆழமும் புலமையும் பெற்று (என்னுடைய தொடர்ந்த முயற்சியையும் மீறி) விளங்குவர் என்பதிற்குள்ள சாத்தியம் காரணமாக(வும்) எனக்கு கர்வமே!

-0-0-0-0-0-

பியெஹ் டெலிஞ்ய, கணிதத்தின் இரு முக்கியக் கூறுகளான ஜியாமெட்ரியையும், அல்ஜீப்ராவையும், ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி மேலெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவர். இன்னும் பல அழகான கணக்கு வழக்குகளையும் முடித்திருக்கிறார்.

‘முருகன்’  பரிந்துரைத்த செய்தி – ஆர் ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை: ஹிந்துவில் வந்தது  அனைவரும் படிக்கக் கூடிய, படிக்க வேண்டிய கட்டுரைதான். If I forget thee O’  Pierre Rene Deligne! 

-0-0-0-0-0-

‘த ஹிந்து’ வின் மதச்சார்பின்மைச்சார்பினை, அதீத இடதுசாரி சீனவழிபாட்டு அரசியலை நான் வெறுக்கிறேன். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினகரன், தினமலர், தினத்தந்தி போன்ற குப்பை ஆபாசங்கள் (Pornographers to the Nation, truly and verily) இருக்கும் நாட்டில், ஹிந்து போன்ற, அடிப்படையில் அழகுணர்ச்சியுடன், ஆபாசமற்று  நடத்தப் படும் நாளிதழ்கள் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்தான்.

எவ்வளவோ குறைகள் இருக்கலாம். ஆனாலும் ஹிந்துவிற்கு நன்றி பல. இதற்கும், மிகப் பல அறிவியல், கலை, தொழில் நுட்பம், விவசாயம், இலக்கியம் தொடர்பான விஷயங்களுக்கும்…

-0-0-0-0-0-

இந்த நொபெல் பரிசுக்கு ஈடான எபெல் பரிசினை 2007ல் வாங்கிய முன்னாள் இந்தியரான, தமிழரான’சதமங்கலம் ரங்க அய்யங்கார்’ ஸ்ரீனிவாச எஸ் ஆர் வரதன் அவர்களை நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? (இவர் பல்லாண்டுகளாக ஒரு அமெரிக்கர்)

இவர் படித்த சென்னை ப்ரெஸிடென்ஸி கல்லூரி – இப்போது பெரும்பாலும் நாறிக் கொண்டிருக்கிறது. பஸ் தினம், தினம்தினம் கொண்டாடுவோம், கல்லெறிவோம், பெண்களின் பின்புறங்களில் கிள்ளுவோம், பொறுக்கிகளாக மட்டுமே இருப்போம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள், இந்தக் கல்லூரியின் இக்காலப் பையன்கள். ஹ்ம்ம்ம்.

-0-0-0-0-0-0-

ஜி நாகராஜனுக்கு நன்றி: நாளை மற்றுமொறு நாளே!   8-)

3 Responses to “கணிதம்! பியெஹ் ரெனெ டெலிஞ்ய!!”


 1. உங்களைக்கண்டால் பொறாமையாக உள்ளது. இனிமேல் உங்களோடு தொடர்பை அறுத்து விடவேண்டும் என்று கூட ஒரு எண்ணம் வந்து மறைந்தது. எனக்குக் கணக்கு சுட்டுப்போட்டாலும் வராது. நான் படித்தபோது காம்போசிட் மேத்தமெட்டிக்ஸ் ஜெனரல் மேத்தமெட் டிக்ஸ் என்று இருந்தது. எனக்கு பொறியாளர் ஆகவேண்டுமென்று ஆசை. ஆனால் எனது தலைமை ஆசிரியர் என்னால் காம்போசிட் படிக்க இயலாது ஆகையால் நான் ஜெனரல் கணக்குதான் படிக்கவேண்டும் என்றார். நான் கெஞ்சினேன். அவர் ஒரு சமரசத்திற்கு வந்தார். எனக்கு காம்போசிட் கிடைக்கும். ஆனால் நான் காலாண்டுத்தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு இலக்கத்தில் மதிப்பெண் வாங்கினால் மேலே தொடரலாம். இல்லையென்றால் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். என்னால் பத்து மதிப்பெண்கள் கூட வாங்க இயலவில்லை. இப்போது சொல்லுங்கள் என் பொறாமை நியாயம்தானே?

  எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
  கண்ணென்ப வாழும் உயிர்க்கு

  என்றார் திருவள்ளுவர். நான் ஒரு ஒற்றைக்கண்ணன். அடுத்தகண்ணும் கொஞ்சம் மங்கல்தான் என்பது வேறு விசயம்.

  ஆனால் இந்தக் கணிதம் விசயத்தில் நிறையப்பேர் என்னளவுக்கு மோசம் இல்லாவிட்டாலும் அதை வைத்து ஒரு தொழிலில் வளர்வதற்குத்தேவையான திறமை இல்லாமலேயே ஆனல் நிறைய வேலைவாய்ப்பு கை நிறைய ஊதியம் ஆகிய காரணங்களால் கணிணித் துறையில் நுழைந்து ஒரு வேலையும் பிடித்தபிறகு தாங்கள் முன்னர் எழுதியதுபோல தாம் எங்கே துவங் கினரோ அங்கேயே உறைந்துவிடும் பரிதாபத்தைப் பார்க்கும்போது எனக்கு இரண்டு டிஜிட்டில் மதிபெண் வராமல் இருந்ததை நினைத்து 66 வயதிலும் அப்பாடா நல்ல வேளை தப்பித்தோம் எனத்தோன்றுகிறது.


 2. கணிதத்தையும், கணித உலக செய்திகளையும் சிறுகிராமத்துக்கும் கொண்டு செல்லும் உன்னதம். பொறாமையா இருக்கு!!

 3. அ.சேஷகிரி Says:

  உங்களுடைய உன்னதமான பணிகளுக்கு வாழ்த்துக்கள் .
  நீங்கள் சொல்லுவதுபோல் ‘ஹிந்து’ நாளிதழை விலக்க முடியவில்லை.மதசார்பின்மை என்ற பேரில் அப்பட்டமான ஒருதலைபட்சமான கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் ,சமயங்களில் நமது நாட்டின் இறையான்மைக்கே ,ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் மனிதர்களை வானளாவுக்கு தூக்கி பிடிப்பதும் ஹிந்துவின் மேல் வெறுப்பைத்தான் கொடுக்கிறது.இருந்தபோதிலும் நீங்கள் சொல்லியபடி அறிவியல், கலை, தொழில் நுட்பம், விவசாயம், இலக்கியம் தொடர்பான எல்லா விசயங்களுக்கும் ‘ஹிந்து’ வை விட்டால் வேறு புகல் இல்லை.முன்பாவது ‘தினமணியில்’ பெ.நா. அப்புசாமி யின் அறிவியல் கட்டுரைகள் வந்தன.இப்பொழுது எல்லா தமிழ் இதழ்களிலும் அக்கப்போர் அரசியல் ,கழிசடை சினிமா,வக்கிரமான இன்ன பிற செய்திகளை தவிர ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s