குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்

25/03/2013

(அல்லது) வெட்டி உணர்ச்சிவசப் போராட்டங்களினால் ஆன பயன் என் கொல்?
(அல்லது) இணை வரலாறுகளைக் கற்போம், படிப்பினைகள் பெறுவோம், நம்மை அறிவோம்,
(அல்லது) எல்டிடிஇ, பிரபாகரன் செய்யாத தமிழ்க் குழந்தைக் கொலைகளா?

… அதென்ன தமிழ்க் குழந்தை சிங்களக் குழந்தையென்று பிரித்துப் பார்க்கும் பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகளில் அவர்களின் விகசிப்புகளில், ஏதாவது வித்யாசம் இருக்கிறதா எனக் கேட்கலாம். கொலை செய்யப் பட்டாலும் குழந்தை, குழந்தைதானே என உருகலாம். ஏன் இந்த வெறுப்பு என மனக் கிலேசமுறலாம். நானும் கூடக் கேட்கலாம் – ஏன், வளர்ந்த மனிதர்களுக்குள் மட்டும் வித்தியாசம் பார்த்து, நமக்கு ஒரு சாராரைப் பிடிக்கவில்லையென்றால் அவர்களைக் கொலை செய்யலாமா? அழித்தொழிக்கலாமா?  ஹ்ம்ம்?

தமிழ் தமிழ் என அரற்றி ஆகாத்தியமிட்டு, அய்யோ தமிழ்க் குழந்தையைச் சாகடித்து விட்டார்களே, தமிழ் ‘இனத்தை’ ஒடுக்குகிறார்களே என்று புலம்பி, கீழ்கண்டவற்றில் சிலதையோ, பலதையோ, அல்லது அனைத்தையோ செய்வது, போராடுவது எனக்கு ஒவ்வாத விஷயம்:

 • இணைய தளங்களில் வீரமுழக்கமிட்டு வெற்றி அல்லது வீரமரணம் என்று உச்சஸ்தாயியில் உச்சாடனமிடுவதன் மூலம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்பது.
 • பொதுச் சொத்துக்களை நாசம் செய்து, கல்லெறிந்து உடைத்து – கை தசைகளுக்கு (பைஸெப்ஸ், ட்ரைஸெப்ஸ்) உடற் பயிற்சி கொடுப்பது.
 • சாதுக்களை ஓட ஓடத் துரத்தி, போலீஸ் துரத்தத் துரத்த ஓடி – கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியும், இருதயத்துக்கு  நல்ல கார்டியொ-வாஸ்க்யுலர் பயிற்சியும் கொடுப்பது.
 • தொண்டை கிழியக் கத்தி, திட்டி, கோஷமிட்டு, தொலைக் காட்சிகளில் தென்படக் கூடிய சாத்தியக் கூறுகளினால், இன்னமும் உரக்கக் கத்தி, வாய்க்கும், குரலுக்கும் நல்ல பயிற்சி கொடுப்பது.
 • தண்டவாளங்களின் மீது உட்கார்ந்து, கால்சராய்களின் குண்டிப் பட்டைகளில் அயர்ன் செய்து கொள்வது, சாவகாசமாக  தண்டவாளத்தில் கழுத்தை வைத்துப் படுத்துக் கொண்டு – கழுத்துத் தசைகளுக்கு பயிற்சி கொடுப்பது.
 • ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு, ‘அடையாள’ உண்ணாவிரதம் இருந்து – அந்த ஒரு நாளுக்காவது கண்டதைத் தின்று உப்புசமுற்று, தொப்பைவளர்க்கும் நியதியைத் தளர்த்தி – கொஞ்சத்திற்குக் கொஞ்சமேனும் ஆரோக்கியத்தை வளர்த்திக் கொள்வது.

என்னைப் பொறுத்தவரை – இந்தப் போராட்டங்கள் இது வரை சாதித்தது:

 • எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டுறவுடன், ஒற்றுமையுடன் – இனம் புரியாத வெறுப்பு  மட்டும் உமிழ்வது முடியும் என்பது. (’இனம்’ = திரா விடம்?)
 • உணர்ச்சி பூர்வமாக, ஏதாவது செய்தே ஆக வேண்டிய அரிப்பில் கந்தறகோளமாக எதையாவது செய்ய வேண்டிய கொதிப்பில், பொதுச் சொத்துக்களை நாசம் செய்வது.
 • இலங்கையில் – தமிழரல்லாதவர்களுக்கு, அங்குள்ள மீதமிருக்கும் பாவப்பட்ட தமிழர்கள் மேல் இன்னும் அதிகமான  வெறுப்பை ஊட்டியது.
 • தமிழ் நாட்டின் வளர்ச்சியை, சில வாரங்களுக்காவது பின் தள்ளியது.

என்னைப் பொறுத்தவரை – இந்தப் போராட்டங்கள் இது வரை சாதிக்காதது:

 • பாதிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு கடுகளவுக்காகவாவது உதவி.
 • நம் தமிழர்கள், மூளை என்கிற தொந்திரவு கொடுக்கும் உபகரணத்தை வாழ்வில் ஒருமுறையாகவாவது உபயோகிக்க வைப்பது.

முன்னெச்சரிக்கை: இவற்றை முதலில் படியுங்கள். அப்போதுதான் ‘நான் எங்கேயிருந்து வருகிறேன்’ என்று தெரியும். மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்குபிரபாகரனும், கருணாநிதியும்…

-0-0-0-0-0-

எனக்கு இவர்களை ‘விடுதலைப் புலிகள்’ என்று எழுதுவது கொஞ்சம் வெட்கமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. என்ன விடுதலை? என்ன புலிகள்?? ஆகவே இந்த ஆழமான அசிங்க உணர்ச்சியினால் எல்டிடிஇ என்று மட்டுமே எழுதுகிறேன்.

'Not Quite Paradise' எனும் புத்தகத்தை எழுதிய Adele Barker அவர்கள் எடுத்த புகைப்படம். 3வது படிக்கும் வயதில், கையில் துவக்கு. நல்ல துவக்கம் தான் பாவம் குழந்தைகளுக்கு, எல்டிடிஇ அரசு செய்யும் போது...

‘Not Quite Paradise’ எனும் புத்தகத்தை எழுதிய Adele Barker அவர்கள் எடுத்த புகைப்படம். 3வது படிக்க வேண்டிய வயதில், கையில் துவக்கு. நல்ல துவக்கம் தான் பாவம் குழந்தைகளுக்கு, எல்டிடிஇ அரசு செய்தால், பிணம் தின்னும் குழந்தைகள்…

பிரபாகரன் மீதோ, எல்டிடிஇ மீதோ எனக்குச் சுத்தமாக மரியாதை இல்லை. ஆழ்ந்த, இனம்புரிந்த வெறுப்புதான். இம்மாதிரி விஷ ஜந்துக்களால்தான் இலங்கைத் தமிழர்கள், பலப்பல வருடங்களாக, தொடர்ந்த படுமோசமான துயர்தரும் நெருக்கடிகளில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

நான் இந்த எல்டிடிஇ உதிரி கும்பலால், பிற்காலத்தில் அழித்தொழிக்கப்பட்ட (என்ன அயோக்கியத்தனம்!) ஒரு சகோதர இயக்கத்துக்கு, ஒரு காலத்தில் (நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 1982-86 – அப்போதெல்லாம் சே குவேரா தான் ஹீரோ; சர்வதேச உழைக்கும் மக்களின் இணைந்த புரட்சிப் புல்லரிப்புதான் மனித குலப் பரிணாமத்தின் உச்சம்!!), பங்களிப்பு (நன்கொடை அல்ல)  அதுஇது என்று – இப்போதைய மதிப்பில் பல லட்சங்கள்  பெற்றுக் கொடுத்திருக்கிறேன்; அச்சமயத்தில் நான் பகுதி நேர வேலையாளாகப் பணிபுரிந்து, என் மாணவர்விடுதிக்குப் பணம் கட்டமுடியாத நிலையில் கூட, என்னுடைய மூன்றுமாதச் சொற்பச் சம்பளத்தையும் கொடுத்திருக்கிறேன். அந்த இயக்க இளைஞர்களுடன் பழகியிருக்கிறேன்.

ஏனெனில் அந்த இயக்கத்தில் படித்த பண்பாளர்கள், எளிமையான இளைஞர்கள், செயலூக்கம் கொண்ட பலர் இருந்தனர். அவர்களிடம், நாளைய, உலகளாவிய, சமதர்மச் சமூகத்தை, ஜாதிகளற்ற – ஒருவரையொருவர் மனிதர் என்பதற்காகவே மதிக்கும், நவயுகத்தைச்  சமைக்கும் கனவுகள் இருந்தன; அவர்களுக்குத் தங்கள் கனவைக் கட்டமைக்கும் மனவலியுமிருந்தது – அவர்கள் தினம் ஒரு டீ+ ஒரேயொரு பொரை மட்டுமே உண்ண முடிந்திருந்தாலும், வெறும் கைலி, கட் பனியன்களோடு செருப்பிலாமல் அலைந்து கொண்டிருந்தாலும்…

அவர்களிடம் ஜெனரல் கியாப்   பற்றியும் பேச முடியும். தஸ்தயேவ்ஸ்கி பற்றியும் பேச முடியும். இவர்களுக்குச் சில பேம்ஃப்லெட்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்ததாக, சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்ததாகக் கூட நினைவு. ஒப்புக் கொள்கிறேன்: நான் ஒரு பெரிய மயிரையும் பிடுங்கி விடவில்லை. முக்கியமாக, எல்டிடிஇ மாக்கள் போல, முட்டாள்தனமாக வீடியோ கேஸட் ரேம்போ படம் பார்த்து விட்டு, உடலையும் மனதையும் முறுக்கிக் கொண்டு ஏகே 47 ஏந்தி நிராயுதபாணிகளையும், குழந்தைகளையும் வெறியெடுத்துக் கொல்லவில்லை.

…ஹ்ம்ம்.  இம்மாதிரி இயக்கங்களை, முனைப்பும் நேர்மையும் மிக்க தமிழ் இளைஞர்களை, தமிழ்ப் பெண்களை, தமிழ்க் குழந்தைகளை – இவை அனைத்துக்கும் மேலாக, இலங்கைத் தமிழர்கள் ஓரளவு அமைதியாக ஒரு சமஷ்டி அமைப்பில் ஜனநாயகத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய சாந்தியக்கூறுகளை – வேரோடு அழித்தொழித்தவர்கள் தான் இந்த எல்டிடிஇ கும்பலும் அதன் ஃபாஸ்ஷிஸ்ட் தலைவர் பிரபாகரனும். (இவர்கள் அநியாயமாகக் கொன்ற மற்ற மக்களைக் கூட (எ.கா: நம்முடைய ராஜீவ்காந்தியையும், அவர் கூடப் போய்ச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மனிதர்களையும்) நான் இங்கு கணக்கில் எடுக்கவில்லை – இது சரியில்லை என்றாலும்)

… …

மேற்கண்டதையெல்லாம் நான், எந்தப் பிடுங்கிக் கொள்வதற்காகவும் சொல்லவில்லை. வயிறெறிந்து தான், மகத்தான இளம் நண்பர்களை, இலங்கையின் பிற்கால அரசியல் தலைவர்களாக,  நேர்மையாக மக்களுக்கு உழைப்பவர்களாக இருந்திருக்கக் கூடியவர்களை,  இழந்து விட்டுத்தான் நான் இதனை எழுதுகிறேன். (இவர்களை அழித்தொழித்தவர்கள் எல்டிடிஇ கும்பலினர்)

இவற்றில் பெரும்பாலானவற்றை என் நினைவிலிருந்து எழுதுகிறேன். குறிப்புகளும் இருக்கின்றன, பல்வேறு நோட்டுப் புத்தகங்களில், ஸெராக்ஸ் பிரதிகளில்.தேவைப் பட்டால் அவைகளையும் உபயோகிப்பேன்.

இன்னொன்று: ராஜபக்ஷ பற்றி, சிங்கள இனவாதம் பற்றியெல்லாம் கற்றைகற்றையாக, கிகாபைட்டெரபைட்டாக எழுதுவதற்கு, வெறுப்பு மட்டும் ஊட்டுவதற்கு, பலபேர் இருக்கிறார்கள். அவற்றில் பலவும் உண்மையாகவே இருக்கக் கூடும். இவற்றைப் பற்றி மானாவாரியாக, உள்ளீடே இல்லாமல் உணர்ச்சிக் குவியலாக டுக்குமொழி பொறுக்கி நடையில் எழுதி ஒரு டோக்கன் எதிர்ப்பை, தமிழனின் அட்டைக் கத்திப் போர்க்குணத்தைக் காட்டி —  குண்டியைச் சொறிந்து கொண்டு,  டர்ரென்று விட்டுக் கொண்டே போவது எனக்கு ஒத்துவராது. மன்னிக்கவும்.

-0-0-0-0-0-

கடைசியாகத் தேடிப் பிடித்து – ’த ஹிந்து’வில் வந்த – பிரபாகரனின் பையன் படம் (பிஸ்கெட் இத்யாதி) + சுடப்பட்ட புகைப்படங்கள் பார்த்தேன், இது உண்மையான படமா என்று எனக்குச் சந்தேகமே – ஏனெனில், நம்மூர் விசிலடிச்சான்போராளிக்குஞ்சுகள் போலல்லாமல், இந்த எல்டிடியினர் துப்புரவாக ஃபோர்ஜரி வேலை செய்வதில் வல்லவர்கள். ஆனால் நீங்கள், அதனைத் தொழில்நுட்ப ரீதியில் சரி என்பதற்கு வெள்ளைக்காரர்களின் ஆமோதிப்பு இருக்கிறதே என்பீர்கள். என்ன இருந்தாலும் வெள்ளக்காரன்னா வெள்ளக்காரன் தான் என்பீர்கள். ஹ்ம்ம், நான் வெள்ளைக்காரர்களிலும் மிகப்பல முட்டாள்களையும், அயோக்கியர்களையும் பார்த்திருக்கிறேன். அது இருக்கட்டும்…

… ஆனாலும், எந்தக் குழந்தையுமே (அல்லது ஜீவனும்) அநியாயமாகக் கொல்லப் பட்டதைப் பார்த்தால் அது வருத்தமாகத்தான் இருக்கிறது. இது ஒரு ஃபோர்ஜரியாக, ஜோடிக்கப்பட்டதாக  இருந்தால் கூடப் பாவமாகத்தான் இருக்கிறது. வாடிய பயிரைக் கண்டதும் வாடுபவன் தான் நானும். பிள்ளைக் குட்டிக்காரன் தான் நானும்.

ஆனால், நான் பெருக்கெடுத்தோடும் ரத்தத்தைக் கண்டதும் பூஞ்சை மனதோடு மயங்கி விழும் ஆசாமியல்ல, சதையும் ரத்தமும் எலும்புகளும் வெறும் திசுக்களே, வேதிப்பொருட்களின் கூட்டமைப்புக்களே என்பதை அறிந்தவன் – என்னுடைய உப்பிப்போன சொந்தக்காரப் (!) பிணங்களிலிருந்து, அவைகள் அத்துவானச் சுடுகாட்டில் எரியூட்டப் படுவதற்கு முன்னால் -இரு வேறு சமயங்களில், தங்கக் காதணிகளையும், மூக்குத்திகளையும், வெள்ளி மெட்டிகளையும் கழற்றி/வெட்டி எடுத்துக் கொடுத்திருக்கிறேன்,என்னுடைய கைக்கத்தியினால் சிறிதாக அந்த நகை இருந்த பாகங்களை வெட்டி.

அல்-கபீர் இறைச்சித் தொழிற்சாலையில் கனத்த வாடை ரத்த ஓடைகள் (இது அடுக்குமொழி-பொறுக்கி நடை‘ரத்த ஆறு’ அல்ல, நிஜம்!) ப்லீச்சிங் பொடி மிதக்க ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். மாடுகள் உலக்கையால் நெற்றிப் பொட்டில் தொடர்ந்து அடிக்கப் பட்டு இறப்பதைப் பார்த்திருக்கிறேன். பாவம் தான்.

நான் ஒரு சைவ, சாத்வீக உணவுக்காரன் தான்; கொல்வது எனக்கு ஒவ்வாதுதான். ஆனால் அனாவசியமாக மனக்கிலேசமைடையும் ஒரு நோஞ்சான் ஆசாமியல்ல. I am definitely not squeamish. Yes.

போர், கொலைவெறி, இரத்தக் களறி என்றால் இப்படித்தான் இருக்கும். ஒருபக்கச் செய்திகளைப் படங்களைப் பார்த்து மட்டும் முடிவுகளுக்கு வர இயலாது…

-0-0-0-0-0-

என்ன பிரச்சினை என்றால் எல்டிடிஇ இயக்கம் பற்றி பல அதிசாகசக் கதைகளும், மயிர்க் கூச்செறிப்புகளும், துதிபாடல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. எல்லாம் சரி. நம் வெட்டி புறநானூற்று வீரத் தமிழர்களுக்கு ஏதாவது வீரம் கீரம் என்று யாராவது கற்பனையாகச் சொன்னாலே கூட புல்லரித்து விடும். மூளை மழுங்கி விடும். இதுவும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

மேலும், பொதுவாகவே, எல்டிடிஇ பற்றிய இரு விதமான விமர்சனம் வைக்கவே கூடாது, அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான எண்ணம் பரவலாக இருக்கிறது. அந்தப் பிரபாகரனின் புகைப்படத்திற்குக் கீழ் தங்கள் புகைப்படத்தைப் போட்டுக் கொண்டு வெற்றிவேல்-வீரவேல் என்று புளகாங்கிதம் அடைவதிலிருந்து இது ஆரம்பிக்கிறது… வெட்கக் கேடு.

வெள்ளைக்காரப் புகைப்பட ‘போஸ்’ கொடுக்கும் எல்டிடிஇ குழந்தை ‘வீரன்’

வெள்ளைக்காரப் புகைப்படக் காரருக்கு ‘போஸ்’ கொடுக்கும் எல்டிடிஇ குழந்தை ‘வீரன்’ (இந்தப் புகைப்படத்தை அனுப்பியவர்களுக்கு நன்றி)

இந்த சர்வாதிகாரிகளைத் துதிபாடும் எண்ணம், அதன் ஊற்றுக்கண்  – அயோக்கியத்தனமானது. அடிப்படை நேர்மையற்றது.

நான் இந்த எல்டிடிஇ கும்பல் செய்த அரசியல் படுகொலைகள் – சகோதர இயக்கங்களை அழித்தொழித்தல்கள் – கடும்பிரச்சினைகள் வந்தபோது உதவி செய்தவர்களுக்கு, உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூடத் தெரிவிக்காமல், அவர்களைப் போட்டியாளர்களாகப் பார்த்துக் கொலை செய்தல் – நிராயுதபாணியாக இருக்கும் பரந்துபட்ட மக்களைக் கொன்றொழித்தல் பற்றியெல்லாம் கூடச் சொல்ல வரவில்லை.

இந்த எல்டிடிஇ கும்பல் சார்ந்தவர்கள் குழந்தைகளை வெகு சாவதானத்துடன் கொன்றிருக்கிறார்கள். சிறு குழந்தைகளை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பாறையில் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இளம் பெண்களை, வெகு துல்லியமாக, வக்கிரமாக, அவர்களுடைய பிறப்புறுப்பில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் (பெண்ணுரிமை வாழ்க!). இவற்றைப் பற்றிச் சொல்ல வரவில்லை.

ராஜனி திராணகம போன்ற மனிதநேய வாதிகள், அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் – எல்டிடிஇ கும்பலால் கொல்லப் பட்டதைப் பற்றிச் சொல்லவில்லை.

இளைஞர்களை கழுத்தில் எரியும் டயரைப் போட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் பிறப்புறுப்பை வெட்டி, பின்னர் கொன்றிருக்கிறார்கள். இவற்றைப் பற்றியும் சொல்ல வரவில்லை.

எல்டிடிஇ குழந்தை ‘வீரன்’ அவனுடைய இளைஞ ச்காவுடன்...

எல்டிடிஇ குழந்தை ‘வீரன்’ அவனுடைய இளைஞ சகாவுடன்… ( இந்தப் புகைப்படத்தை அனுப்பியவர்களுக்கு நன்றி)

இதில் சொல்லவருவது எல்டிடிஇ செய்த, அயோக்கியத் தமிழ்க் குழந்தைக் கொலைகள் பற்றி…

இங்கும் நான் – அவர்கள் அட்டூழியமாகச் செய்த, பல வருடங்களாகத் தொடர்ந்து, பிற ’தமிழீழ’ இயக்கங்களைச் சார்ந்தபாவப்பட்ட பச்சிளம் ’தமிழ்’ பாலகர்களையும் வேட்டையாடிக் கொன்றதைச் சொல்லவில்லை.

பின்னர் கருணா-வின் பிரிந்துபோன எல்டிடிஇ அணியின் ’தமிழ்’ பாலகர்களைக் கொன்றதையும் சொல்லவில்லை.

எல்டிடிஇ: கருணா - அணியினரின் குழந்தை ‘வீரர்கள்’ - பாவம் இவர்களெல்லாம் பிரபாகரன் அணியினரால் ஒழிக்கப் பட்டிருப்பார்கள்.

எல்டிடிஇ: கருணா – அணியினரின் குழந்தை ‘வீரர்கள்’ – பாவம் இவர்களெல்லாம் பிரபாகரன் அணியினரால் ஒழிக்கப் பட்டிருப்பார்கள். (நன்றி: பிபிஸி)

கடைசியில், முள்ளிவாய்க்காலில் பல ’தமிழ்’ குழந்தைகளை நாறடித்துச் சகதியில் குண்டடி படவிட்டதை -தங்களுடையதும் + ஸ்ரீலங்கா சேனையுடையதுமான குண்டுகள் அவை – இதைப் பற்றியும் சொல்லவில்லை.

ஆனால், மிக முக்கியமாக, ஒரே ஒரு எடுத்துக் காட்டாக – இது அவர்கள். அவர்களுடைய சொந்த எல்டிடிஇ சிறுவர்களை, இளஞ்சிறார்களை – துரோகிகள் என்று வர்ணித்துச் செய்த படுபாதகக் கொலைகள் பற்றி மட்டுமே சொல்ல வருகிறேன்.

28 டிஸெம்பர், 1994.

கோபாலசாமி  ‘மாத்தையா’  மஹேந்த்ரராஜா – மிகக் குரூரமாக, தன் தலைவர் பிரபாகரன் ஆணைப்படி, மிகுந்த விசுவாசத்துடன் கொலைகள் பல செய்தவர் –  பின்னர், அமைப்புக்குள் இருந்த உட்பூசல்களாலும், தலைமையின், போட்டியை வெறுக்கும் சர்வாதிகாரத்தாலும் –  அந்த ’எல்லாம் கொல்ல’ பிரபாகரனையே கொலை செய்யச் சதி (அதாவது இந்திய ரா (RAW) அமைப்புடன் கூட்டு சேர்ந்து) செய்ததாகச் குற்றம் சாட்டப் பட்டுச் சுட்டுக் கொலை செய்யப் படுகிறார்.

1990 வாக்கில் எடுக்கப்பட்ட, அந்தச் சந்தோஷ காலப் புகைப்படம். பிரபாகரனின் தன்னிகறற்ற தலைமைக்குப் போட்டியே இல்லாத காலம்... (Scanned photo courtesy: MR Narayan Swamy - 'Tigers of Lanka: From Boys to Guerrillas,' Konark Publishers (1994)

1990 வாக்கில் எடுக்கப்பட்ட, அந்தச் சந்தோஷ காலப் புகைப்படம். பிரபாகரனின் தன்னிகரற்ற தலைமைக்குப் போட்டியே இல்லாத காலம்.. கிட்டு, பிரபாகரன், .மாத்தையா (Scanned photo courtesy: MR Narayan Swamy / ‘Tigers of Lanka: From Boys to Guerrillas /  Konark Publishers, Delhi / 1994)

இந்த ‘மாத்தையா’ மேல் சுமத்தப் பட்ட சதிக் குற்றம் பொய்யாகவே இருக்கக் கூடும் என்பது என் கருத்து – பின்னொரு சமயம், நேரமிருக்கும் போது அதனைப் பற்றி எழுதுவேனோ என்னவோ – மேலும் ‘கோபாலசாமி’ என்று பெயரில் இருந்தாலேயே அந்தக் ‘கோபாலசாமி’அவர் தலைவரால், தன்னைக் கொல்லச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப் படுவார் அல்லவா? Why go என்று கேட்கவெல்லாம் முடியாதல்லவா? இதுதான் தமிழ் அரசியலுலக நியதி அல்லவா? (இந்த வக்கிர நகைச்சுவைக்கு மன்னிக்கவும்)

ஹ்ம்ம்… இந்த ‘மாத்தையா சதி’ பற்றி அடெல் பாலசிங்கம் (இவர் ஒரு ஆஸ்திரேலியச் செவிலி; பிரபாகரன் கூடப் பணி(!) புரிந்த அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி, எல்டிடிஇ துதிபாடி) – The Will to Freedom – The Inside Story of the Tamil Freedom Movement எனும் புத்தகத்தில் (இது எல்டிடிஇ-யின் வரலாறை, அவர்களே சொல்வது போன்றது, எனலாம் – பக்கம் பக்கமாகப் பொய்ச் செய்திகளும், அரைகுறைச் செய்திகளும், திரிக்கப் பட்டவையும் கலந்தடித்த கந்தறகோளம் இது) எழுதுகிறார். (பக்கம் 298)

… … The investigation established without any doubt that Mahattaya was the chief conspirator. The plot was to assassinate Mr Pirabakaran and some senior commanders loyal to him and assume the leadership of the organization. On 28 December 1994, Mahattaya and few of his fellow conspirators were executed on charges of conspiracy to eliminate the leadership.”

என்ன அயோக்கியத் தனமான பொய் இது! மாத்தையாவுக்கும் அவருடன் சதி செய்த சிலருக்கும் மரணதண்டனை கொடுத்ததாம் எல்டிடிஇ! (மேற்கண்ட பத்தியில் அடிக்கோடு என்னுடையது)

உண்மையில் – மாத்தையாவுடன், மாத்தையாவின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட – சுமார் 260 பேர் (இருநூற்று அறுபதுபேர் போல, இவர்களும் எல்டிடிஇனர் தான் – ஆமாம் அம்மணி அடெல், இது சில பேர்தான்!) அன்று சாவகச்சேரிக்கு பக்கத்திலிருந்த ஒரு தென்னந்தோப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுத் தள்ளப் பட்டனர்.

மாத்தையாவுக்கு, அவர் சுட்டுத்தள்ளப் படும்போது வயது 38 தான்.

இதில் மாத்தையாவின் மெய்க்காப்பாளர் படையினர் (சுமார் 70) அடக்கம். இதைத் தவிர சுமார் 90 ’வீரர்கள்.’  இவர்களது சராசரி வயது சுமார் 20 இருந்திருந்தால் அதிகம். பெரும்பாலோர் முதிராஇளைஞர்கள், பாவம். இவர்கள் செய்த குற்றம் மாத்தையாவின் வசீகரத் தலைமயின் கீழ் அவர் சொல்படி நடந்தது மட்டுமே. (இவர்களும் அடிப்படையில் .எல்டிடிஇனர் உடைய குணாதிசியங்கள் கொண்டவர்கள் தான் – குழந்தை வயதிலிருந்தே பிரபாகரனின் கீழ் வ்ளர்ந்ததினால்)

ஆனால், இதற்கு மேற்பட்டு, சுமார் 8 – 12 வயதிற்குட்பட்ட தமிழ், எல்டிடிஇ பாலக ‘வீரர்’களும் – சுமார் 110 பேர் அடக்கம். ஒன்றிரண்டு குழந்தைகள்  மட்டுமே  ‘collateral damage’ ஆகச் செத்தனர் என்ற கதையெல்லாம் இல்லை! நூற்றுப் பத்து நிராயுதபாணிக் குழந்தைகள் குரூரமாகக் கொலை செய்யப் பட்டனர். (இவர்களுக்கு பிஸ்கெட் எல்லாம் உட்கார வைத்துக் கொடுத்ததாகக் கேள்விப் பட்டதாகக் கூட எனக்கு நினைவில்லை; இந்தக் குழந்தைகளில் ஒருவருக்குக் கூட மெய்க்காப்பாளர் இருந்திருக்கல்லையாமே!)

சுட்டுக் கொன்றபின் அத்தனை பிணங்களையும் கும்மாச்சியாகப் போட்டு எரித்திருக்கிறார்கள். சுபம்

ஹ்ம்ம்ம். ஆனால், இந்தச் சிறுகுழந்தைகளை அநியாயமாக இழந்த அந்தத் தாய்களின் சாபம்,  சும்மா விடுமா, சொல்லுங்கள்?? தெய்வம் நின்று  கொல்லும் தான்.

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்,
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

(புறநானூறு #296 / ஔவையார் / கரந்தைத் திணை / வேத்தியல் துறை)

தங்கள் குழந்தைகளை ,  படுகோரமாக இழந்த அந்தத் தாய்களின் கர்ப்பத்தீ, பொசுக்கி  விட்டது —  இந்த எல்டிடிஇ கும்பலை, வெள்ளை வெள்யாட்டுச் செச்சையை, அந்த ஆட்டுக் கூட்டத்தின் தலைமையை..

ஆக முள்ளிவாய்க்கால் ஏற்பட்டது.

Of course, those who live by the sword, die by the sword.

Amen.

-0-0-0-0-0-

நான் இந்த அநியாயக் கண்றாவிகளையெல்லாம் நேரில் பார்க்கவில்லைதான். இது ஒரு பழைய ’இயக்க’ ஆள். நண்பர் அல்ல, தற்செயலாகத் தெரிய வந்தவர் தான் -. சுமார் பதினைந்து வருடத்துக்கு முன்னால் சொன்னது, இவர் லண்டனில் இருக்கிறார் (என நினைக்கிறேன்).

தொழில் நிமித்தம் அங்கே சென்றிருந்த போது ஒரு ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் (என நினைவு) பப் ஒன்றில் நான் இவரைப் பார்த்தேன் – நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்த்து விட்டு (கர்ஸியொ மலபார்ட் எழுதிய கபுட்)   அவர் என்னிடம் பேச வந்தார் என நினைவு.

போர்களைப் பற்றி நான் படித்த நாவல்களில் அற்புதமான ஒன்று. மாய்ந்து மாய்ந்து படித்து மனம் கனத்த ஒன்று அது - இந்த மாதிரி ஒன்று தமிழ் தளத்தில் எழுதப் படவேண்டும்தான்)

போர்களைப் பற்றி  நான் படித்த நாவல்களில் அற்புதமான ஒன்று, இது. மாய்ந்து மாய்ந்து படித்து மனம் கனத்த  புத்தகம் – இந்த மாதிரி
ஒன்று தமிழ் தளத்தில் எழுதப் படவேண்டும்தான். மிக முக்கியமாக, மொழிபெயர்ப்பு  செய்யப் படவேண்டியதும் கூட

தொடர்ந்த நான்கைந்து நாட்களில் முன்னிரவு நேரத்தில் போய், அதிகாலைதான் திரும்பி விடுதிக்குப் போனேன். அவர் – பல, பல மணி நேரம் பேசினார். அழுதார்  நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘எரிமலை’ (என நினைவு) எனும் பெயரில் எல்டிடிஇ அந்தக் காலத்தில் பதிப்பித்துக் கொண்டிருந்த ’சாணிப் பேப்பர்’ பத்திரிகையின் பழைய இதழ் ஒன்றில் இருந்த அவருடைய படத்தைக் காட்டினார். சூள் கொட்டினார். உடம்பில இருந்த வடுக்களைக் காண்பித்தார். சிரித்தார்.கர்ஸியோ கதை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும், தன்னுடைய  அனுபவங்கள் என்றார். நான் ஒப்புக் கொண்டேன். எழுதுங்கள் என்றேன். என்ன பயன் என்றார்.

இவர் சொன்னது என்னவென்றால் – அச்சமயம் இந்த முழுக் கண்றாவிச் சம்பவத்தை திரைப்படம் பிடித்து பின்னர் பிரபாகரனுக்கு அப்படத்தைப் போட்டுக் காண்பித்தனர். அவரும் குழந்தைகள் சுட்டுக் கொல்லப் படுவதை உணர்ச்சியில்லாமல் பார்த்தார். லண்டன் நண்பர்தெரிந்தவர் உபயோகித்த பதம்  – ’without batting an eyelid!’ இந்த மாதிரிக் கோரச் சம்பவங்களை, கொலைகளை — திரைப்படம் எடுப்பது /புகைப்படம் பிடிப்பது, பின்னர் அதனை ‘அண்ண’னுக்குக் காண்பிப்பது போன்றவற்றை – எல்டிடிஇ இயக்கத்தில் நடக்கும் ஒரு வெகு சாதாரணமான, ரெகுலரான விஷயம் போலப் பேசினார் அவர். என்ன ஒரு குரூரவாதி  மனிதன் இந்த பிரபாகரன்!

… ஆக, இம்மாதிரி எல்டிடிஇ சந்தோஷமாகச் செய்த அட்டூழியக் குழந்தைக் கொலைகள் பற்றிய ‘பெருமித’ காணொளிகளும் சானல்-4 போன்ற பப்பரப்பா அயோக்கிய ஒருபக்கச் செய்திச் சொல்லிகளால், மண்வெட்டி தாசர்களால் – வெளிக் கொணரப் படும் என நம்பலாம்.

அதற்குப் பிறகு – நம் தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் தமிழ்க் குழந்தைகளைக் கயமையாகக் கொன்ற தமிழர் தலைவர்களுக்கு எதிராகப் போராடுவார்கள் எனவும் நம்பலாம். ஆனால் அவர்கள் தங்களுடைய ’சதுர அடிக்கு ரூ 10/-’ விகிதத்தில் அடோபி ஃபோட்டோஷாப் உதவியுடன் அச்சடித்த ஃப்லெக்ஸ் விளம்பரத் தட்டிகளில் – யாரைத் தூக்கில் போடுவது போல படம் போடுவார்கள்? பாவம், அவர்கள் பிரச்சினையும் புரிகிறது.

இனஅழிப்பு – ஜெனொஸைட் என்றெல்லாம் பேசுகிறார்களே இந்த விசிலடிச்சான்குஞ்சுகள்  – – இப்போது, பிரபாகரன் கொடும்பாவியை எரிப்பார்களா?  பிரபாகரன் உருவச் சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கில் போடுவார்களா?

எல்டிடிஇ இயக்கத்தை (!) உலக அளவில், மோசமான போர்க் குற்றங்களை, தொடர்ந்துப் பல வருடம் புரிந்த கும்பலாக அறிவித்திடமுயல்வார்களா?

-0-0-0-0-0-

பிரபாகரன் கோழையா? இல்லை எனத்தான் நினைக்கிறேன்.
,
பிரபாகரன் மாவீரனா? நிச்சயம் இல்லை. சாதாரண ஆசாமிதான், என்ன கொஞ்சம் மனப்பிறழ்ச்சி, அவ்வளவே! (எவனுக்குத்தான் மனப்பிறழ்வு இல்லை என்றாலும்) இலவச இணைப்பாக, இவருக்கு, ஒரு மகாமகோ குரூர குணம் வேறு.

பிரபாகரன் ஒரு ஃபாஸ்ஷிஸ்ட் ஆசாமியா? நிச்சயம். மஸ்ஸொலினிக்கே கூட குரு இவர்தான்.

பிரபாகரன் ஒரு மதிக்கத்தக்க தமிழர் தலைவரா? ஆம். (மாபாதகங்கள் செய்த போல்போட் ஒரு அற்புதக் கம்பூசியத் தலைவர் என – அயோக்கிய, பஞ்சமாபாதகங்களைத் தொடர்ந்து செய்து கோடிக்கணக்கான அநியாய, அசூயைக் கொலைகளுக்குக் காரணமான ஹிட்லர், ஸ்டாலின் (இசுடாலின் அல்ல) போன்றவர்களை மகத்தான உலகத் தலைவர்கள் எனக் கருத முடியுமானால்)

வரலாறு பிரபாகரனை விடுதலை செய்யுமா? நிச்சயம் செய்யாது. செய்யக் கூடாது.

-0-0-0-0-0-

பின் குறிப்பு #1: இந்தப் பதிவு ஒரு வாரம் / பத்து நாள் முன்னர் வந்திருக்க வேண்டியது. ஆனால், இதன் அடிப்படைவரைவை இரு ‘அக்கால பொடியன்’களிடம் கொடுத்து இதன் சாரத்தைச் சரி பார்க்கச் சொன்னேன், விவரங்களைப் பற்றி அவர்கள் எண்ணங்களைக் கேட்டேன். இதில் ஒருவர் பழைய எல்டிடிஇ காரர். தன் உயிரைத்தவிர  மற்ற அனைத்தையும் இழந்து விட்டு ஆழ்ந்த, மீளா துக்கத்தில், புத்தி பேதலிப்பில் இருப்பவர். அவர் பேசுவதெல்லாம் – இது இப்படியாகாமல், அப்படி ஆகியிருந்தால் என்கிற ரீதியில் தான், பாவம். இன்னொருவர் பழைய ஈரோஸ். இவர் அந்த சாவகச்சேரி படுகொலை எண்ணிக்கையை 257 என்று சொல்கிறார், பத்து வயது போல இருந்த குழந்தைகள் 150க்கும் மேலே இருந்திருப்பர் என்கிறார்.. எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் – இருவரும் இந்த குழந்தைக் கொலைகள் பற்றி – எல்டிடிஇ குழந்தைகளை, எல்டிடிஇயினரே நிராயுதபாணியாக்கிக் கொலை செய்ததை – நடந்ததுதான் (சரிதானென்றல்ல) என்று ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் இந்த சாவகச்சேரி சம்பவம், ஒரு சோறுப் பதம் கூடக் கிடையாது அரைக்கால் பதம் தான் என்கிறார்கள், இதைவிடப் பல பெரிய  அட்டூழியங்கள் நடந்ததாகச் சொல்கிறார்கள்.  இவர்கள், என் கட்டுரையின் சாரத்தைச் சரி என்கிறார்கள். இவர்கள் சொல்லும் இன்னும் மூன்று விஷயங்கள்:

1, இந்திய அமைதிப் படை பற்றிய கற்பழிப்பு / பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கள் – அவை வெகு சிறிதளவே நடந்திருந்தால் கூட, பிறழ்ச்சியாகவே தான் நடந்திருக்கும். ஆனால் எல்டிடிஇ-யின் விளம்பர கீபல்ஸ் சக்தி என்பது நடக்காதவைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கும் தன்மை படைத்தது – ஆகவே விரிந்தவை தான் இம்மாதிரி குற்றச்சாட்டுக் காட்சிகள்.

மன்னார் - இந்திய அமைதிப் படை - நினைவுச் சின்னம்: நாங்கள் அமைதிக்காக வந்தோம், அலைதியாக வந்தோம். அமைதிக்காக எங்கள் உயிரைக் கொடுத்தோம்”.

மன்னார் – இந்திய அமைதிப் படை – நினைவுச் சின்னம்: ’நாங்கள் அமைதிக்காக வந்தோம், அமைதியாக வந்தோம். அமைதிக்காக எங்கள் உயிரைக் கொடுத்தோம்’ நிற்க, கருணாநிதி போன்ற ஒரு மனிதர், திரும்பி வந்த இந்திய அமைதிப் படையினரை வரவேற்கப் போகவில்லை என்பதில், இந்தியாவுக்கும் அந்தப் படையினர்க்கும் பெருமையே! (Scanned image courtesy: William Clarence / Ethnic warfare in Srilanka and the UN Crisis / Pluto Press, London / 2007)

2. பிரபாகரன் பல முறை இந்திய அமைதிப் படையால் சூழப் பட்டு, பிடிக்கப் படும் நிலையில் இருந்தார். ஆனால், இந்தியாவின் ’ரா’ உளவு அமைப்பின் எதிர்ப்பால், அவரைப் பிடிக்கவில்லை. கைதும் செய்யவில்லை.

3. தமிழ் நாடும், தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு என்று உதவக் கூட வேண்டாம். அவர்களுக்கு மேலும் மேலும் உபத்திரவம் கொடுக்காமல், அவர்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போனால் போதும். தமிழ் நாட்டினர் ஏமாற்றியது போதும். ஈழத் தமிழர்களை விட்டு விடுங்கள்.

பின் குறிப்பு #2: வெட்டி ஆவேச வெறுப்புப் பின்னூட்டங்களை – அவை மிக மோசமாக இல்லாதவரை, பொதுவாக இதுவரை அனுமதித்தே வந்திருக்கிறேன். ஆகவே, சாரமிருந்தால் பின்னூட்டமிடலாம். நான் எழுதியது பிடிக்கவில்லை என்றால், தாராளமாக, திரும்பிப் படிக்க வேண்டாம். பரிந்துரையும் செய்ய வேண்டாம். உங்கள் நேரமும் பொன்னானது. அதை நீங்கள் குப்பைகளாகக் கருதுவதின் மீது செலவழிக்கத் தேவையே இல்லை.

பின் குறிப்பு #3: தர்க்க ரீதியாக யோசியுங்கள். தரவுகள் பெறுங்கள். வரலாற்றறிவை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். கவைக்குதவாத வாயோர நுரைதள்ளல்கள், இனமானம் அடமானம் என்றெல்லாம் வெட்டிப் பொழுதுபோக்குப் பேச்சுப் பேசி, தமிழர்களை இன்னமும் முட்டாட்களாக்கி அவர்களை இடிமானங்களில் தள்ளுதல் வேண்டா. இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று நாடகமாடும் கயமை அரைகுறைத்தனத்தால், அட்டைக் கத்தியை தமிழகத்தில் மட்டும் வீசுவதால், ஸ்ரீலங்காவின் சிங்களப் பெரும்பான்மையினருக்கு வெறுப்பூட்டி , இன்னமும் மீதியிருக்கும் வர்களை, அந்தப் பாவப்பட்ட தமிழர்களை – அங்கு இக்கட்டில் தள்ள வேண்டா.

பின் குறிப்பு #4. முடிந்தவரை நேர்மையாகச் சிந்திப்பீர். பின்  செயல் படுவீர்.  ஒரு நாள் ‘அடையாள’ உண்ணாவிரதம் இருந்து தாராளமாக உங்கள் ஆரோக்கியத்தை வளர்த்திக் கொள்ளலாம். அல்லது ‘தொடர்’ உண்ணாவிரதம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் போல ஜாலியாகவே இருக்கலாம். ஆனால் பந்தலில் இருந்து எழுந்து குண்டி மண்ணைத் தட்டிக் கொண்டு போவதற்கு முன், நீங்கள் போட்ட குப்பை, சத்தை, பேனர்கள், துண்டுப் பிரசூரங்கள் இன்னபிறவை உங்களுடனேயே எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டுக் குப்பைக்கூடையில் (= தொலைக்காட்சிப் பெட்டி) போட்டுக் கொள்ளவும். இந்த அளவிற்காவது, நமக்குக் குடிமையுணர்ச்சி இருக்கலாமே, என்ன சொல்கிறீர்கள்?

பின் குறிப்பு #5: ஏன் தோழமை ஆர்பாட்ட, போராட்ட, போராளிக் காரர்களே,  நாம் கல்லெறிந்து, கஷ்டப் பட்டு ஃப்லெக்ஸ் தட்டி வைத்து, மிகமிகச் சிரமப்பட்டு ஒரு நாஆஆஆஆள் மிகக் கடுமையாக உண்னாவிரதமிருந்தெல்லாம் பாவ்லா காட்டுவதற்குப் பதிலாக –  நம்முடைய ஒருமாத (அல்லது, குறைந்தபட்சமாக – ஒரு நாள்) சம்பளத்தை – நம் தமிழகத் தமிழர்களின் கொம்புசீவல்களால், அரைகுறைத்தனத்தால், அயோக்கியத்தனத்தால் அசிங்கப் படுத்தப்பட்டு அனைத்தையும் இழந்திருக்கும் – ‘புலம்’ பெயர்ந்த / பெயராத தமிழர்களுக்குத் தரலாமே??  நாம் ஒவ்வொருவரும் அங்கிருக்கும் ஒரு தமிழ்க் குழந்தைக்காவது கல்வியறிவு, ஒரு ஆண்டுக்காவது கொடுக்க முயலலாமே!

நாம், இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் ஏதாவது செய்ய வேண்டுமென்பது கூட இல்லை.

ஏதாவதாவது  உபயோககரமாக நம்மைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும், ஏன் நமக்குமே கூட செய்யலாமே, செய்து கொள்ளலாமே! ஹ்ம்ம்??

… எல்லாம் சரிதான், ஆனால்…. ….  நாம் என்ன செய்யப் போகிறோம்?

18 Responses to “குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்”

 1. prabhukrishna Says:

  A detailed analysis about the other side of a coin. Both the side are not angels. it’s sad to see those many children’s dream had been brutally murdered for the benefits of few ppl..

 2. Rajan Says:

  ராம்
  ”கால்கழிக் கட்டிலிற்” என்று இருக்க வேண்டுமோ?

  • ramasami Says:

   வணக்கம் ‘ராஜன்’- அபத்தத் தவற்றைத் திருத்திக் கொண்டேன். தூக்கமில்லை, நினைவிலிருந்து எழுதினேன் என ஆயிரம் சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால்…

   மிக்க நன்றி! தொடர்ந்து திருத்துங்கள். :-)


 3. சார்! மண்டையில் அடிப்பது போல எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. குரூர சிரிப்புடன் பிரபாகரன் போஸ்டர் பின்னணீயில் நிற்க பிஸ்கெட் தின்று சாகும் சிறூவன் படத்தைக் கையில் தாங்கி நிற்கும் அந்த அப்பாவி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ்க்கண்ட கட்டுரையை அச்சடித்துப் படிக்கக் கொடுக்க வேண்டும்.

 4. பூவண்ணன் Says:

  சார் நீங்கள் சொல்ல வருவது என்ன

  ஜெர்மானியர்களை ரஷ்யர்கள்/யூதர்கள் இப்போது ஆயிரக்கணக்கில் கொலை செய்தால் அதை எதிர்த்து ஜெர்மானியர்கள் போராடினால் ,அவர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் மக்கள் போராடினால் ,நாஜியாக அவர்கள் செய்த கொடுமைகளை பட்டியல் இட்டு இப்போது நடப்பதை நியாயபடுத்துவது போல தானே நீங்கள் செய்கிறீர்கள்
  போராடும் மாணவர்கள் எல் டி டி ஈ குழந்தை போராளிகளை மறுபடியும் சேர்த்து கொண்டு போராட வேண்டும் என்றா போராடுகிறார்கள்.எந்த நாட்டின்/குழுவின் விடுதலை போராட்டத்திற்கும் ஆராய்ந்து பார்த்தால் எந்த அர்த்தமும் கிடையாது (இந்தியா விடுதலை போராட்டம் உட்பட)அவை முழுக்க முழுக்க மத,இன வெறி,நான் யார் நீ யார் ,நாம் சேர்ந்து வாழ முடியாது/கூடாது போராட்டங்கள் தான்
  மாணவர்களை முட்டாள்கள் என்று என்னும் பார்வை,இந்தி எதிர்ப்பு போராட்டம் பலரின் வாழ்வை அழித்து விட்டது என்ற பார்வையில் துளியாவது உண்மை இருக்கிறதா
  தமிழகத்தின் முன்னேற்றத்தில் (மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது)மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பங்கு முக்கியமானது.அதை சாதியை தள்ளி விட்டு நடுநிலையோடு பார்த்தால் அரசியலில்,சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் புரியும்
  இதை போல மாணவர்கள் போராடும் நிலையே ஒன்ரிரன்று தவிர்த்து மற்ற மாநிலங்களில் கிடையாது.அசாமில் பல ஆயிரம் இஸ்லாமியர்களை கொலை செய்து ,அதன் தொடர்ச்சியாக வந்த மாணவர் போராட்டம் ,ஆட்சியை பிடித்த மாணவர்களால் அவர்கள் அடைந்த மாற்றத்தையும் ,தமிழகத்தின் மாற்றத்தையும் பார்த்தால் இங்கு நடந்த மாணவர் போராட்டத்தின் பலன்கள் தென்படும்

  • பொன்.முத்துக்குமார் Says:

   பூவண்ணன்,

   எனக்கென்னவோ இந்த மாணவர் போராட்டம் தன்னிச்சையானது அல்ல என்றுதான் தோன்றுகிறது. ஒன்றும் வேண்டாம், போராடும் மாணவர்களில் ஒரு பத்து பேரை, இந்த போராட்டத்தின் காரணம், பின்னணி, அவர்கள் பார்வையில் என்ன தீர்வு, அதற்கான சாதக பாதகங்கள் – இவை பற்றி ஒரு பத்து நிமிடம் – பத்தே பத்து நிமிடம் சுருக்கமாக தெளிவாக கூற முடியுமா என்று கேட்டு பாருங்கள்.

   • பூவண்ணன் Says:

    அன்பு முத்துகுமார்
    மாணவர் சங்க தலைவர்களில் ஒருவனாக இருந்தவன் ,பல போராட்டங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன்
    உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகும் வயது அது.முடியுமா,முடியாதா என்ஹ்பதை யோசித்து முடிவு எடுக்கும் வயது அல்ல மாணவர் பருவம்
    முடிந்தால் நல்லது,இல்லை ஒரு நல்ல படிப்பினை,அனுபவம் எனபது எந்த பொதுநல போராட்டத்திற்கும் பொருந்தும்

    எந்த போராட்டமும் தன்னிச்சையாக ,சுயம்பாக பலரிடம்,பல இடங்களில் எழும்பாது
    பொறியை தூண்ட சில சக்திகள் வேண்டும்.
    ஆதரவு தர தனி நபர்கள்,இயக்கங்கள் வேண்டும்,பாராட்ட பத்திர்க்கைகள் வேண்டும்
    இவ்வளவு இருந்தும் மாணவர்கள்/தொழிலாளர்கள் மனபூர்வமாக நம்பி குதிக்காவிட்டால் உடனே பிசுபிசுத்து விடும்
    தமிழ் மக்களை கொடுமைபடுத்துகிறார்கள்,எவ்வித உரிமையும் இன்றி அகதி போல வாழ்கிறார்கள்,நடைபெற்ற படுகொலைகளை புரிந்தவர்கள் அதிகார பலத்தோடு சுதந்திரமாக உலா வருகிறார்கள் ,அவர்களுக்கு தண்டனை வேண்டும் என்று போராடினால்,உன் அண்ணன்,நண்பன்,உறவினர்கள்,சார்ந்து இருந்த இயக்கம் கூட கொலைகளை செய்தது எனபது என்ன வாதம்
    அவனுக்கு ,அவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது.இவர்களுக்கு கிடைக்க போராடினால் அதை நக்கல் செய்வதா

    பல முறை காலையில் கைது செய்து மண்டபத்தில் அல்லது விளையாட்டு மைதானங்களில் வைத்திருந்து விட்டு இரவு விட்டு விடுவார்கள்
    மாணவனாக இருக்கும் போது கல்லூரி போராட்டத்தின் காரணமாக பதினெட்டு வயதில் சென்னை மத்திய சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டேன்
    என்னுடன் சிறையில் இருந்தவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர்.பலர் அரசு பணியில் உயர் அதிகாரிகள்.மற்றவர் பல வெளிநாடுகளில் உயர்பதவிகளில்.கல்லூரி மாணவரின் எதிர்காலம் பாழாகிறது எனபது எல்லாம் வேற்று வாதம்
    ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தனியாராக மாற்றப்பட்டதற்கு எதிராக இரு மாதங்கள் நடந்த போராட்டம் அது.சிறையில் இருந்தால் அரசு வேலை கிடைக்காது ,வெளிநாடு செல்ல முடியாது என்று பூச்சாண்டி காட்டியவர்கள் பலர்
    நான் அரசு,பொதுத்துறை,ராணுவம் என அனைத்திலும் பனி புரிந்தவன்.gazetted ஆபீசர்
    மாணவர் போராட்டத்தினால் பலர் வாழ்வு பாழ் என்பதெல்லாம் சுத்த பொய்கள்.
    எனக்கு இந்த நிகழ்வுகள் தந்த தைரியம் பத்து ஆண்டு படிப்புக்கு சமம்.பெற்றோரிடம் தைரியமாக என் திருமணம் ,வேலை என என் விருப்பதிர்க்கேர்ப்ப முடிவு செய்ய தேவையான தைரியம் தந்தது மாணவனாக நான் பங்கு பெற்ற போராட்டங்கள்.
    போராட்டத்திற்கு மறைமுகமாக பல உதவிகள் செய்தது கம்முனிச தொழில் சங்கங்கள்,முன்னாள் மாணவர்கள்,எதிர்க்கட்சி தொழில்சங்கங்கள்
    கல்லூரி விடுதிகள் மூடப்பட்ட பிறகு ஆலந்தூரில் உள்ள வி பி சிந்தன் நினைவு இல்லத்தில் மாதகணக்கில் மாணவர்கள் தங்கி இருந்தனர். இதை போல மற்றவர்களின் உதவி இல்லாமல் மாணவர் போராட்டம் நீடிக்க முடியாது.ஆனால் யார் ,எவ்வளவு உதவி செய்தாலும் மனபூர்வமான பங்களிப்பு இல்லாமல் போராட்டம் தொடராது
    மற்ற மாநிலங்களில் வசித்தால் தான் தெரியும் நம் ஊரின் பள்ளிகள்,கல்லூரிகள்,அரசியல் கட்சிகளின் அருமை.
    இந்தியாவிற்கே உதவியது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டம் .அதை வன்மம் கொண்டு பார்ப்பது ஏன் எனபது விளங்காத ஒன்று
    swaminomics.org/?p=548

    Annadurai saw this as Hindi imperialism, and struck back with the most violent agitation the state had ever seen. Several Tamil students immolated themselves in protest. The police opened fire on rampaging mobs, killing at least 66 (official figures) and maybe 500 (unofficial estimates). Fearful that the language issue would stoke secession, New Delhi retreated and assured all states that their adoption of Hindi would be optional, not mandatory. In 1967 the Official Languages Act was amended to specify that both English and Hindi could be used as official languages for all purposes.

    In the state election of 1967, the DMK won a landslide victory. The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.


 5. இலங்கை அரசுடன் செல் போன், தொலைக்காட்சி நெட்வொர்க் போன்ற பெரிய லாபகரமான தொயில்களை செய்த அதே அரசியல்வாதிகள், திடீர் என்று அவர்கள் அரசியல் கணக்குகளுக்காக இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வாங்க தடை செய்ய உலக நாடுகளை கேட்டு வருகிறார்கள்.

  போரில் நிராதரவாக நின்ற அபலை தமியர்கள் தனிப்பட்ட மலேசிய நாட்டு இந்துக்கள், இந்திய இந்து தொண்டு நிறுவங்கள் முலம் ஐ.டி கம்புயூட்டர்,. சிறு தொழில். கை வினை தயாரிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடை தயாரிப்பு, போன்றவற்றை பழின்று-

  இத்தகைய பொருட்களை கொழுப்பு விலிருந்து உலக சந்தையில் ஏற்றுமதி செய்ஹு கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் இருந்து வெளியே வரும் வேலையில்-

  அவர்கள் வயிற்றில் அடிப்பது போல இலங்கை நாடு ஏற்றுமதி, தொடர்பு மற்றும் வர்த்தகத்தை பகிஷ்கரிக்க கொஞ்சமும் அது இவர்களைத்தான் மிகவும் பாதிக்கும் என்ற உண்மையை மறைத்து மறக்கடித்து பிரச்சாரம் செய்து வருவது எதை காட்டுகிறது?

  இவர்களின் தமிழ். ஈழம் என்னும் உணர்ச்சி விஷமேட்டிரும் நோக்கம் உண்மையில்-

  அங்கே ஈழதிலும், தமிழகத்திலும், நெடிய துயர் மிகுந்த இன வெறி சண்டைகளையும், பிரிவினைவாத உள்நாட்டு குழபங்களையும் தூண்டி விடுவதே என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

  அவர்களையும் நமது சமுதாயத்தையும் அழிக்க அவர்கள் வீசும் வலையை அறுத்து அதில் இருந்து நமது மாணவ இளைன்ஞர் சமுதாயத்தை விடுவிப்போம்.

  இதுவரை 20 மாணவர்கள் இவர்களின் மன ஆயுத்தம் தரும் பிரசாரங்களால் தங்கள் உயிரை மிது விட்டார்கள்.

  அதை இவர்கள் ரசிப்பது காரணம்-

  இப்படி மன அழுத்தம் தேவை படுவது இது போல 20 தற்கொலை படையினரை தயார் செய்யவே !

  தமிழகத்தை நகால்ந்த்து போல விடுதலை கிறிஸ்துவ இயக்க போர்கலமக்கவே இவை ஏலோலம் நடக்கின்றன.

  ஈயம் என்ற போர்வையில் நமது நாட்டை பிளவுபடுத்தவும், மீண்டும் எல் த த எ என்ற பயங்கரவதத்தை கொண்டு வரவே இந்த சதி

  STUDENT MOVEMENT IS ORCHESTRATED BY LIBERATION THEOLOGISTS-FATHER IMMANUEL OF GLOBAL TAMIL FORUM ALONG WITH NEW POPE WHO IS A LIBERATION THEOLOGIST-

  SO CALLED STUDENT MOVEMENT BEGAN AT LOYOLA COLLEGE A JESUIT SETUP AND THE POPE IS A JESUIT

  THIS IS A RECRUITMENT DRIVE FOR REVIVAL OF LTTE

 6. surya Says:

  your blog was not accessible for the past two days. coz you wanted it so or someone had hacked. incase you want a restricted viewing, pls do include me.
  -Surya

 7. surya Says:

  Anybody, who is not associated with “dravida” and vote bank politics and age group of 40~50 can feel nostalgic about these student protests and can easily understand the logics behind (there is none other than political mileage).
  Eelam/LTTE problem is like “fill it and forget it” for every election time.
  Oh yes, and am surprised that you are taking these protests so serious.
  But the IIT-madras participation- aha what a shame! and proved that these IITians are not par above but far below averages.(atleast this is my stand) and their invisible “pegasus” was dropped like emperors clothes.. Does not know how many noticed this(including you).
  goodluck for emancipation attempts.
  -Surya

 8. Rajan Says:

  ராம் நேற்று வந்து படித்தவுடன் என்ன சொல்வதென்று தெரியவில்லை அப்படியே நான் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கே உரிய நடையில் ஆதாரங்களுடன் எழுதியிருந்தீர்கள்.. சரி, வந்ததிற்கு ஒரு அட்டண்டென்ஸ் கொடுத்து விட்டுப் போவோமே என்று இந்த கால்கழி கட்டிலைச் சொல்லி விட்டுப் போனேன். என் அதிகப் பிரசிங்கித்தனமான திருத்துதலை மன்னிக்கவும். நீங்கள் எழுதிய இதே விஷயத்தை புலிக் கொலை ஆதாரங்கள் எல்லாம் இல்லாமல் உணர்ச்சி வசப் பட்டுக் கொதி நிலையில் இருந்த என் உறவுப் பையன்கள் சிலரிடம் சொல்லப் போக “தமிலினத் துரோகியே நீ மட்டும் ஊர்ப்பக்கமா வாடி ஒன்னை வச்சிக்கிறோம்” என்கிறார்கள் :)) உங்களுக்கு என்ன ஆகப் போகிறதோ? இந்தப் பதிவை அவர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறேன். என் ஃபேஸ்புக்கிலும் போட்டிருந்தேன் இதற்கு லைக் போடக் கூடப் பீதியடைகிறார்கள் :) இப்பொழுது அவசரமாக ”ஏன் தமிழ் நாடு இந்தியாவுடன் இருக்க வேண்டும்” என்று இந்த மாணவப் போராளிகளுக்குப் புரிகிற மாதிரி விளக்கமாக அனைவரும் நிறைய மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நீங்கள் சொன்னது போல மீண்டும் அவர்கள் கவனம் அஜித், விஜய்,ரஜினி, கமல் பக்கம் திரும்பினால் நல்லதுதான் ஆனால் அவ்வளவு எளிதாகத் திருப்ப விட்டு விட மாட்டார்கள் என்று வருகிற தகவல்கள் சொல்லுகின்றன. எதிர்காலப் புரட்சிக்கு இப்பொழுது உரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பணி தொடரட்டும்.
  ராஜன்

 9. ஆனந்தம் Says:

  வழக்கம் போல உங்களுக்கே உரிய தெனாவட்டுடன் துணிச்சலாக உண்மைகளை உரைத்திருக்கிறீர்கள். சபாஷ்!
  ஆனாள் தமிலுக்காக வாலும் அரிவாலிகல் காதுகலிள் விளுமா, மண்டையில் உரைக்குமா எண்பது தான் தெறியவிள்ளை.

 10. பொன்.முத்துக்குமார் Says:

  அன்புள்ள பூவண்ணன்,

  மாணவர் பருவம் என்பது அறிவுபூர்வமாகவும் அல்லாமல் வெறும் உணர்வுபூர்வமாக மட்டும் ஒரு விஷயத்தை அணுகும் பருவம் என்பதே, மாணவர்கள் போராதடத்தில் முன்னிலை வகிக்க தகுதியற்றவர்கள் என்பதற்கு போதுமான காரணம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  / முடிந்தால் நல்லது,இல்லை ஒரு நல்ல படிப்பினை,அனுபவம் எனபது எந்த பொதுநல போராட்டத்திற்கும் பொருந்தும் /

  இது போராடியவனுக்கு பொருத்தமாக இருக்கக்கூடும். ஆனால் அதில் பாதிக்கப்பட்டவனுக்கு இதையே சொல்ல இயலுமா ?

  / தமிழ் மக்களை கொடுமைபடுத்துகிறார்கள்,எவ்வித உரிமையும் இன்றி அகதி போல வாழ்கிறார்கள்,நடைபெற்ற படுகொலைகளை புரிந்தவர்கள் அதிகார பலத்தோடு சுதந்திரமாக உலா வருகிறார்கள் ,அவர்களுக்கு தண்டனை வேண்டும் என்று போராடினால் …. /

  போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க இயலாது. ஆனால் அதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கும் முறைதான் சரியான வழியா ? இது நமது குறிக்கோளுக்கு சாதகமா பாதகமா என்று யோசிப்போம். தமிழகம் வரும் புத்த பிட்சுக்களை அடித்து விரட்டுவதா ராஜபக்சே தண்டனை அடையும் வழி ?

  சரி போராடுகிறார்கள், உண்மையான உணர்வொடு போராடுகிறார்கள் என்றே கொள்வோம். எத்தனை நாள் இவர்களால் போராட இயலும் ? தீர்வு கிடைக்கும்வரை ? இந்த வழிமுறையில் தீர்வு கிடைக்கும் என்று என்ன கேரண்டி ? அல்லது சும்மா தமது உணர்வுகளை வெளிப்படுத்தி கொஞ்ச நாள் கூச்சல் போட்டுவிட்டு தத்தம் தினசரிக்கு திரும்பிவிடுவதா ? இதனால் தீர்ந்துவிடுமா இலங்கை தமிழர்களின் பாடும் ?

  நிதானமான நீண்டநாள் போராட்டம்தான் பலன்தரும். ஆனால் அது வன்முறை கொண்டதாக இருக்க இயலாது. ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்லப்போனால், நமது வார்த்தைகள் சராசரி சிங்களரின் மனதை தொடவேண்டும். மட்டுமல்ல, இலங்கையை ஆதரிக்கும் எல்லா தேசங்களுக்கும் அவ்வரசு நிகழ்த்திய கொடூரங்கள் குறித்து தெரியப்படுத்தி தொடர்ச்சியாக அவர்களது மனங்களையும் உலுக்க முயல வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இந்திய அளவில் இதை பெரிய அளவில் கொண்டுபோக வேண்டும்.

  இதற்கு மிக நீண்டகால அளவில் பொறுமையான, உறுதியான தொடர்ச்சியான செயல்பாடுகள் மட்டுமே கொஞ்சமேனும் பலனளிக்க முடியும்.

  அதில்லாமல் இங்கே நாம் செய்துகொண்டிருக்கும் வன்முறைகூடிய போராட்டங்கள் இலங்கையில் தமிழர்கள் மீது மீண்டும் மீண்டும் வெறுப்பையே வளர்க்கும். அது தீர்வை இன்னும் இன்னும் சிக்கலாக்கும்.

 11. vickram Says:

  chanceless…


 12. இவளவு விரிவான கட்டுரை நல்லதே.ஆனால் இப்போது விடுதலை புலிகள் இல்லை.அவர்களுக்காக நாம் சிந்திக்க வேண்டியது கூட வேண்டியது இல்லை.வினை வித்தவன் வினை அறுப்பான்.ஆனால் அதற்காக மீதி இருக்கும் தமிழ் மனிதர்களை இலங்கை அழித்துக்கொண்டே இருக்க நாம் வேடிக்கை பார்பது சரியா?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s