ஜேக் ஃபிலிப் ஹோல்மன் (1934-2013)

11/06/2013

உண்மையாகவே நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தாம். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

நாம் அணுகவிரும்பும், தொடும் ஒவ்வொரு துறையிலும், முக்கியமான / உயர்தரமான சிந்தனையாளர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்;  அவர்களைக் இனம் கண்டு கொள்ளக் கூடிய அறிவும் கொடுப்பினையும் மட்டுமே நம்மிடம் இருந்தால் போதுமானது.

இவர்களில் பலர் மிக அழகான புத்தகங்களும் பலவிதமாக (அறிமுக அளவில் எளிமையாகவும், துறைசார் விற்பன்னர்களுக்கு மிக அடர்த்தியாகவும்) எழுதியிருக்கின்றனர்; தொடர்ந்த மனவெழுச்சியோடு அற்புதங்களைப் படைத்திருக்கின்றனர் – இந்தப் புத்தகங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் கூட, ஆழமும் வீச்சும், நுட்பமும் செய்நேர்த்தியும் உடையனவாகவுள்ளன. கடந்த முப்பதாண்டுகளில், இன்டர்நெட்டின் தயவால் இவை உலகெங்கும் கிடைக்கின்றன (காப்புரிமையாவது மண்ணாவது).

எப்படியானாலும், இவற்றின் தேவையை உணர்ந்து தேடிப்பிடித்து அவற்றைப் படிப்பவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும், இவற்றின் மூலமாக நம் சமூகம் முன்னேறிச் செல்வதும் நிதர்சன உண்மைகள்தான். ஏனெனில் இவ்வகைப் புத்தகங்கள் அவற்றின் துறைகளில் ‘பைபிள்’ போன்றவை!

அப்படிப்பட்ட கல்யாணகுணங்களுடைய ஒரு புத்தகம் – வெப்பப் பெயர்ச்சி (Heat Transfer) என்கிற தலைப்பில் பேராசிரியர் ஹோல்மன் (Jack Phillip Holman) 1963ல் எழுதிய புத்தகம். எனது அனுமானம் / நினைவு சரியாக இருக்குமானால், இதுதான் இந்தத் துறையில் வந்த ஒரு முதல், முக்கியமான புத்தகம்.

இவருடைய இன்னொரு மாணிக்கம் – பொறியாளர்களுக்கான பரிசோதனை முறைமைகள் (Experimental Methods for Engineers) – இம்மாதிரிப் புத்தகங்கள் அவசியம்,  அனைத்து முதலாண்டு பொறியியல் / தொழில் நுட்ப மாணவர்களால் படிக்கப் பட வேண்டும். மற்றபடி, பொதுவாகவும், நமக்கு ஏதாவது அளக்க (சுயப் ப்ரதாபம் பற்றிச் சொல்லவில்லை) வேண்டுமென்றால்கூட இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் அழகானவை, மிக உபயோகமானவை…

-0-0-0-0-0-

1984 வாக்கில் நான் பாஸ்கல், ஸி போன்ற கணினிமொழிகளில் ஆர்வமுள்ளவனாகவும் – அதே சமயம் வெப்பப் பெயர்ச்சி / இடமாற்றம் சார்ந்த சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன்;  சிறுவரம்புக்குட்பட்ட வேறுபாட்டு முறைமை (finite difference method) வழியாக – திரவவுலோகக் கலவைகளின் உருக்கிவார்ப்புக்கள் திடப்பொருட்களாவதில் உள்ள சில சூட்சுமங்களை (inverse heat conduction problem) புரிந்து கொள்ள, ஒரு பேராசிரியரின் உதவியுடன் அறிய முயன்று கொண்டிருந்தேன். ஒரு டப்பா ஏடி286 சார் கணினி, இன்னொரு டப்பா 32 சேனல் அனலாக்<-> டிஜிடல் மாற்றுவான, அனலடிக்கும் அலுமினியம்-ஸிலிகன் வார்ப்புகளிலிருந்து வெப்பநிலை தெர்மோகப்பிள்கள் வழியாகக் கம்பிகள் – மாற்றுவானிற்கு வந்து அவை இன்னொரு பக்கம் டிஜிட்டல் சமிக்ஞைகளாக கணினிக்குள் போகும்.  ஒலிப்பேழைகளில் (’ஆடியோ கேஸட்’) தான் பாஸ்கல், ஸி கட்டளைக் கட்டுக்களும், சேகரம் செய்யப்பட்ட வெப்ப அளவுகள் இன்னபிறவும் சேமிக்கப் பட்டிருந்தன; இந்தப் பேழைகளை ஒரு 2-இன்-1ல் போட்டால் கண்டமேனிக்கு அமானுஷ்யமாகச் சத்தங்கள் – க்றீஈஈஈஈச், ம்றூஊஊஊஊச் என்றெல்லாம் அந்தக்காலப் பேய்ப்படங்கள் போல வரும்; கதிகலங்கவைக்கும். அக்காலங்களில், இதுதான் என்னுடைய மதிய உணவு நேரப் பொழுதுபோக்கு – யாராவது வசமாக மாட்டினால், திடீரென்று இந்தப் ’பாடல்கள்’ பாட ஆரம்பித்து அவர்களுக்கு மலச்சிக்கலே வராதபடிக்கு ஆக்கிவிடும் என் கைங்கரியம். Ah, the halcyon days of my youth…

என்னுடைய ‘பட்டப்’ படிப்பின்போது வெப்பப்பெயர்ச்சி பற்றிப் புரிந்துகொள்ள நான் சில (ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட) ரஷ்யப் புத்தகங்களைத் தான் உபயோகித்தேன். ஆனால் எனக்கு, அப்போது பல விஷயங்கள் தெளிவுபடவில்லை. ஏனெனில் அந்தப் புத்தகங்கள், ஓரளவுக்கு நன்றாகவும், கம்யூனிஸத்துக்கு நன்றியுடன் விலை மிகமிகக் குறைவாக இருந்தாலும் – அவை  ‘பைபிள்கள்’ அல்ல – probably, the disciple was not ready too! ஆனால் அகஸ்மாத்தாக இந்த ஹோல்மன் புத்தகத்தின் மேல் இடறிவிழுந்தேன் – ஆஹா, அது ஒரு அற்புதம். பல விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன. என்னுடைய ‘ஆராய்ச்சியும்’ கொஞ்சமாவது உபயோககரமாக ஆனது.

இந்த மனிதர் பற்றி நிறையக் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் மிகவும் மதிக்கவேண்டிய ரிச்சர்ட் ஃபெய்ன்மன், நிகொலய் வேவிலோவ், ஸெல்மன் வக்ஸ்மன், ஜகதீஷ்சந்த்ர போஸ், ஸ்ரீனிவாஸ ராமானுஜம் போன்றவர்களின் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர்தான் இவர்…

… ஹ்ம்ம்ம். சென்ற மாதம் (மே முதல்தேதி) பேராசிரியர் ஹோல்மன் இறந்தார் என இன்றுதான் தெரிந்து கொண்டேன். அவரைப் பற்றிய நம்மூர் அருண் ‘அ(றி)வியல்’  நரசிம்மன் அவர்கள் எழுதியுள்ள நெகிழ்வூட்டும், அழகான  ஒரு இரங்கல் செய்தி (ஆங்கிலம்) – இவர் ஹோல்மன் அவர்கள் கீழ் படித்தார் என்பது எனக்கு உண்மையிலேயே பொறாமையூட்டும் செய்தி.

-0-0-0-0-0-

பேராசிரியர் ஹோல்மன் அவர்களின் ஆன்மா இப்பிரபஞ்ச வெளியில், ப்ரும்மத்தில், சக்திப்பெருவெளியில் கலந்து கரையக் கரைய, நம்முலகில் ஞானங்களை, அறிதல்கலை நோக்கிய பயணங்கள் பெருகும். பெருக வேண்டும்…

தொடர்புள்ளவை:

 

One Response to “ஜேக் ஃபிலிப் ஹோல்மன் (1934-2013)”

  1. சான்றோன் Says:

    கிட்டத்தட்ட இரண்டு மாதம்……..வெளியூர்ப்பயணம் ஏதும் சென்றிருந்தீர்களா என்ன? தளத்தையே மாற்றிவிட்டீர்களோ என்று சந்தேகம் வந்துவிட்டது……


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s