தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள், அரூபக் கருத்துநிலை வாத்துக்கள்

22/06/2013

நான் மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப நேர்காணல்களில் ஈடுபட்டு, கிட்டத்தட்ட 12 வருடங்களாகி விட்டன. வாழ்க்கை மிக மகிழ்ச்சியுடன் தான் போய்க் கொண்டிருந்தது சில நாள் முன்பு வரையிலும் கூட. ஆனால் துரதிருஷ்டவசமாக வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

ஏனென்று கேட்கிறீர்களா? ஹ்ம்ம்ம்.

… நான் ஒரளவு மதிக்கும் இளைஞர் ஒருவர் (ஒரு காலத்தில் என் குழுவில் இருந்தவர் – மன்னிக்கவும், இவர் ஜாதி எனக்குத் தெரியாது) மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப முனைவுகளில் ஈடுபடுவதில் ஆர்வமோடிருப்பவர். ரொபாடிக்ஸ் தொடர்பான ஒரு புது தொழில்முனைவுக்காக, அதற்கான மூல ஆராய்ச்சிக்காக, நிபுணத்துவம் நிறைந்த ஒரு சிறிய இளம் குழுவை (SWAT team) அமைக்கக் கடந்த சில மாதங்களாக முயன்று கொண்டிருக்கிறார். சில மாதங்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று கொண்டிருந்தார். பல மாணவர்களுடன் பேசியிருக்கிறார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக அயர்ச்சியுடன், தனக்குக் கிடைத்த ஆயிரக் கணக்கான (இவர் உண்மையாகவே சுமார் 2300 போல கிடைத்தது என்று சொன்னார்!)  விண்ணப்பங்களில், சுமார் நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகளுடன் (resumes!) எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, குழுவினரைத் தேர்வு செய்வதற்குக் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்டார். மேலும் அவருடைய ‘ஐடியா’வை எப்படி ‘பேக்கேஜ்’ செய்து ஒரு வருமானமாதிரியை உருவாக்கலாம் என்பதற்கும் என் கருத்துக்களைக் கேட்டார். பல நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் ஒரே அன்புத்தொல்லை வேறு.

நான் வழக்கமாக மழுப்பி விட்டு, இம்மாதிரிக் கெரில்லாத் தாக்குதல்களை திசை திருப்பி விடுவது வழக்கம். முயற்சியும் செய்தேன் — எனக்குப் பிடித்த விஷயங்கள் செய்வதற்கே நேரமில்லை. அப்படி நேரம் கிடைத்தால், என் சொந்தக் குழந்தைகளுடன் செலவழிக்கத்தான் விரும்புவேன். இந்த ஒத்திசைவு பூதம் வேறு. நீங்கள் தயவுசெய்து வேறு நபர்களிடம் போகக் கூடாதா? எனக்கும் தொழில் நுட்பத்துக்கும் வெகுதூரமாகி விட்டது – நான் ஒரு பழைய பஞ்சாங்கம், நீங்கள் சமைக்கப் போகும் புதியதோர் உலகத்திற்கு நான் எப்படி உதவ முடியும். எனக்கு, நாம் பார்க்கும் மிகப்பல இளைஞர்கள் பேரில் மரியாதையோ நம்பிக்கையோ இல்லை – ஆக, எனக்கு இதில் நேரம் செலவழிக்க அவ்வளவு விருப்பமில்லை – ஆனால் என் நல்வாழ்த்துக்கள். என்னை விட்டுவிடப்பா.

அவர் மறுபடியும் மறுபடியும் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தார். உங்கள் கை ராசியான கை (!) என்றெல்லாம் சொன்னார் – அவருக்கு மெய்யாலுமே மிகையான நகைச்சுவை உணர்ச்சிதான்.

அவரிடம் சொன்னேன் – நீங்கள் கொடுக்கப் போகும் சம்பளத்தில் அரைவாசியோ கால்வாசியோ கொடுத்தால் கூடப் போதும், அற்புதமான  ரஷ்யப் பொறியியலாளர்கள் கிடைப்பார்களே அவர்கள் நேரத்தை வீணடிக்காமல் காரியத்தைக் குறித்த நேரத்தில் தரமாகச் செய்து கொடுப்பார்கள். ஒரு காலத்தில் அவர்களால் ஆங்கில ஆவணங்களைச் சரியாக எழுத முடியாமலிருந்தது. தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் இதனைச் செய்யலாகாதா? பழைய நட்பை இப்படியா வெட்கமில்லாமல் உபயோகித்து அரைக் கிழவனான என்னை இப்படிப் படுத்தி எடுப்பீர்கள்?? எனக்கு வேறு வேலையே இல்லை என நினைத்த்தீர்களா?

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில், நூற்றுக் கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் நாட்டில்  ஒரு சிறு குழுவைக் கூடவா நம்மால் தயார் செய்யமுடியாது? இந்த நிலைமையை வெட்கமில்லாமல் நீங்களுமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வருடாவருடம் ஒரு லட்சத்துக்கு மேல் வெளி வந்து கொண்டிருக்கும் பொறியியலாளர்களில் இரண்டு பேர் கூடவா தேற மாட்டார்கள்?

நான் சொன்னேன்: தம்பி, நான் வெட்கமில்லாதவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழ் இளைஞர்கள் அனைவரும் உதவாக்கரைகள் எனச் சொல்லவில்லை. அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அப்படிப்பட்டவர்கள் தான் என மட்டுமே நினைக்கிறேன். மேலும் அந்தச் சிறுபான்மையினரைக் கண்டுபிடித்து அவர்களை வளர்த்தெடுப்பது என்பது வைக்கோல்போரில் ஒரு வைரஸ்ஸைத் தேடுவது போன்ற அயர்வான செயலாகும் என்றும்தான் நினைக்கிறேன். எனக்கு இந்தத் தேடலில் பிடித்தமில்லை. இந்தக் கேடுகெட்ட நிலைமைக்கு நாமெல்லாரும் காரணம்தான். ஒப்புக் கொள்கிறேன். நான் நிறைய பார்த்து விட்டுத்தான் சிறுவர்களோடு மட்டுமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்தே நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்னால் எனக்கு முன்னறிமுகம் இல்லாத உயிரில்லாத சப்பை இளைஞர்களோடு, ஊக்கம் கொடுத்து, கெஞ்சி, கூத்தாடியெல்லாம் வேலை செய்ய முடியாது – நேர்காணல்களெல்லாம் முடியவே முடியாது – அதற்குத் தேவையான தடிமன் தோலும் பொறுமையும் சக்தியும் எனக்கில்லை. மன்னிக்கவும். என்னால் முடிந்ததைத் தான் நான் செய்யமுடியும்.  நான் செய்யவேண்டும் என நீங்கள் விரும்புவதை நீங்களே ஏன் செய்யக் கூடாது? உங்கள் குழு கூட்டப்பட்டு உங்கள் ரொபாட் வெளிவர என் வாழ்த்துக்கள்.

அவர் விடவில்லை – நீங்கள் மாறி விட்டீர்கள். நீங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தில் நம்பிக்கையற்றவர் – ஒரு ஸினிக், அவநம்பிக்கைவாதி. ஒருவர் தமிழ் நாட்டுக்கு உதவி செய்ய வந்தாலும் அதற்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்களே.

– தம்பி, நான் சில விஷயங்களில் அவநம்பிக்கைவாதி ஆனால் பல விஷயங்களின் நம்பிக்கைவாதி. என்னால் முடிந்ததை, எனக்குப் பிடித்ததை நான் தமிழ் நாட்டில் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமா? நான் உங்களை என்  இடத்துக்கு வந்து வேலை செய் என்று அடம் பிடிக்கிறேனா? நான் மட்டுமா உங்களுக்கு அறிமுகம்? வேறு கிறுக்கனே கிடைக்கவில்லையா? உங்களோட டெல்லியிலேயே ரொபாடிக்ஸ், தொழில் முனைவுகள் பற்றித் தெரிந்தவர்கள் ஒருவர் கூடவா இல்லை? இப்படி வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், நான் என்னதான் செய்ய முடியும்? நீங்கள் தமிழகத்துக்கு பாடுபட்டு உதவியெல்லாம் செய்ய வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தேவையில்லாத பிம்பங்கள் வேண்டாமே! சுயநலம் என்பது கெட்டவார்த்தையில்லை. சரிதானா?

… சார், நான் தமிழிளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்று முயற்சி செய்கிறேன். நீங்கள் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறீர்களே!

… தம்பீ, நான் உங்களை வேலையோ முன்னுரிமையோ கொடுக்கவேண்டாமென்றா சொன்னேன்? என்னால் உதவ முடியாதென்றுதானே சொன்னேன் – அதுவும் நீங்கள் கேட்டதால்தானே சொன்னேன். முதலில் நீங்கள் – உங்களுடைய அறிவுரையை நான் கேட்டுக் கொள்ளவேண்டுமா அல்லது உங்களுக்கு என் உதவி வேண்டுமா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், மேலே அவசியமில்லாமல் பேசி உங்கள் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம். இரண்டாவதாக – உங்களுக்குக் குறிக்கோள்களை அடைவது முக்கியமா அல்லது உணர்ச்சிகரமாக தமிழ் கிமிழ் என்று வெட்டி உதவாக்கரைப் பேச்சுப் பேச வேண்டுமா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதா – வெட்டிப்பேச்சினால் தமிழுக்கும் உபயோகமில்லை, உங்கள் வேலைக்கும் உபயோகமில்லை என்பது?? நீங்கள் ஏதாவது திராவிடக் கட்சியில் ஐக்கியமாகி விட்டீர்களா என்ன?

… சார், நான் சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஒரு வேகத்துல ஏதோ  பேசிட்டேன்னு நினைக்கிறேன். இதெயெல்லாம் விடுங்க – நம் ஒருகால நட்பினை நினைத்தாவது எனக்கு நீங்க உதவ முடியுமா?

… முடியாது, மன்னிக்கவும்.

.. சரி உங்கள் இஷ்டம். ஆனால் என் வெஞ்சர் ஐடியா நன்றாக இருக்கிறது என்கிறீர்கள் – உங்களுக்கு விஸிகாரர்கள் கிட்ட பழக்கம் எல்லாம் இருக்கிறது. அந்த பார்வையிலே பார்த்தால் கூட, என் முனைவு ஆதரிக்கத் தக்கதுதானே? நான் என்னதான் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

… தம்பீ, நீங்கள் ஏன் எஞ்சினீயரிங் காலேஜ் கஞ்சினீயரிங் காலேஜ் என்று அலைகிறீர்கள்? எஞ்சினீயரிங் காலேஜில் படித்து காகிதப்பட்டம் வாங்கியவன் எல்லாம் எஞ்சினீயரா? ஏன் இந்த அரைகுறைக் குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என் அனுபவம் படி 4-5% நிஜமான எஞ்சினீயர்கள் எப்படியாவது முட்டி மோதிக்கொண்டு வந்தால்தான் உண்டு. இந்த மைனாரிட்டி பசங்களை நீங்கள் பிடிக்கவேண்டும் – ஆனால் அது கடினம்; அதற்காக, கண்ட கழுதைகளை எஞ்சினீயர்கள் என்று பாவித்து எப்படி அவர்களுடைய ரெஸ்யூமேக்களை வாங்கினீர்கள்? நீங்கள் படித்த வேலூர் காலேஜ் நிலைமையே எப்படி இருந்தது? அப்போதே பரிதாபகரமாக இருந்தது.  இப்போது எப்படி இருக்கிறது? நீங்களே விசனப் பட்டீர்கள். நீங்கள் ஏன் ஒரு டிப்ளமா மட்டும் படித்த அல்லது +2 படித்த – கற்றுக் கொண்டு வேலைகளைச் செவ்வனே செய்யும் முனைப்புள்ள இளைஞர்களைத் தேர்வு செய்யக் கூடாது? நான் உங்களுக்கு சில இளைஞர்களைப் பரிந்துரை செய்ய முடியும்.

…சார், அவங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது.

தம்பீ, உங்களோட எஞ்சினீயர்கள் எல்லாரும் ஷேக்ஸ்பியர் வம்சமா? என்னய்யா சொல்ல வருகிறீர்? ஜப்பான்காரன் ரஷ்யாக்காரனுக்கெல்லாம் ரொம்ப ஆங்கிலம் தெரிந்துதான் தொழில்முனைவுகளில் சிறந்து விளங்குகிறார்களோ? இவ்வளவு தமிழ் மேல் கரிசனம் இருந்தால் ஏன் நீங்கள் அந்த உண்மையான எஞ்சினீயர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரக்கூடாது? உங்களுக்கு உங்கள் காரியம் ஆக வேண்டும். அவ்வளவுதானே! காரியம் கைகூட வேப்பிலை வேண்டுமானால் வேப்பிலை அடிப்பீர்கள், மேப்பிள் இலை வேண்டுமானால் அதை… தம்பீ, உங்கள் கண்ணோட்டம், பார்வை எனக்கு பிடிக்கவேயில்லை. உண்மையில் அருவருப்பாகவே இருக்கிறது.

அய்யோ சார், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் குறைவாகத்தான் இருக்கும்.

சரி. நீங்கள் போய், சகிக்க முடியாத தன்னம்பிக்கையுடன் நுனி நாக்கில் அரைகுறைக் குப்பை ஆங்கிலம் பேத்தும் அந்தத் திறமையற்ற, முனைப்பற்ற இளைஞர்களைச் சேர்த்திக் கொண்டு என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்.


…சார், குழந்தைகளெல்லாம் எப்படி இருக்காங்க? பலவருடம் முன் பார்த்தது…

.. தம்பீ – சமரசத்துக்கு வருகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அனாவசியமாகப் பொய் சொல்லவேண்டாம்; அவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

— சார் மன்னிச்சிடுங்க. கோவமா இருக்கீங்க போல, பிறகு பேசுகிறேன்.

=0=0=0=0=0=0=

ஆனால் அந்தத் தம்பி, ஒரு எழவெடுத்த, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமர் – தொடர்ந்து கழுத்தை அறுத்து, என்னை வேதாளமாக்கி நேர்காணல் முருங்கை மரத்தில் ஏறவே வைத்து விட்டார். (ஹ்ம்ம் – அவர் சுலபத்தில் மனம் தளருபவராக இருந்திருந்தால், முதலில் என் குழுவில் சேர்த்தியே இருக்க மாட்டேன்; எல்லாம் என் கஷ்டகாலம் தான்.)

சூழ்நிலை / செயல்முறை: நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகள் – அதில் சுமார் முப்பது புதுப்பட்டதாரிகள் – நைஸாக இன்னொரு முப்பது தற்குறிப்புக்களையும் என்னிடம் தள்ளினார் அந்த இளைஞர் – மொத்தம் எழுபத்திச் சொச்சம் ஆவணங்கள் – அதில் இரண்டு பக்கங்க்ளுக்கு மேற்பட்டு வளாவளாவென்று ‘நான் இதைச் செய்தேன்,’ ‘நான் அதைச் செய்தேன்!’ என்று பார்த்தவுடனே பொய் என்று தெரியும் பிழைகளும் பொய்மையும் நிரம்பிய விண்ணப்பங்களை ஒதுக்கினேன் – மிச்சம் 20 போல இருந்தவற்றை இரண்டுமூன்று முறை படித்தேன். தேவையற்ற பொதுவாகச் சொதப்பப்பட்ட ‘Reading Books, Listening Musics,  Watching films, I want to design an Intelligent Robot, Designing AI Robot, Conducting Cultural Fest’ தத்துப்பித்து வகையறாக்கள் 5 ஒதுக்கல் – பின்னர் ஒரு இழவு கணினியியல் / மின்னியல் பற்றியும் தவறில்லாமல்  எழுதுவதை விட்டுவிட்டு , ஹேக்கர்<பெயர்>, க்யூட்டி<பெயர்> (அதாவது HackerSubbu, CutieMani, IAmTheBoss at somemail,com) போன்ற முதிராத்தன்மையுடைய மின்னஞ்சல் முகவரிகள் காரணமாக மேலும் 4 ஒதுக்கல் – மிஞ்சிய 11 பேருக்கு அந்த இளைஞத் தொழில்முனைவோன்  மூலமாக  மூன்று புதிர்கள் அனுப்பினேன் (இணையத்தில் மேய்ந்து, அவற்றின் விடைகளைக் கண்டுபிடித்துக் காப்பியடிக்கக்க முடியாதவை அவை, நானே தயாரித்து அனுப்பியவை – ஆனால் மிகச் சிக்கலானவை அல்ல)  – விடைகளை அனுப்புவதற்கு இரண்டு நாள் சமயம் அந்தப் பிள்ளைகளுக்கு – இதில் ஐந்து பேர்கள் மட்டும் ஒரு  புதிருக்கு அரைகுறை விடை அளித்திருந்தார்கள் – அதில் இருவருடையது வார்த்தைக்கு வார்த்தை அச்சாக ஒரே மாதிரியாக (அதே இலக்கணப் பிழைகள் கூட) இருந்ததால் கடைசியில் ஒருவழியாக, தேறியது – அதாவது ‘தேற்றியது’ மூவர் மட்டுமே! நான் சொன்னேன் – இவர்கள் மேல் நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம், அவர்களுக்கும் பாவம் அழுத்தம் கொடுக்கவேண்டாம், விட்டுவிடுவோம் என்றேன் – ஆனால் நண்பருக்கு நப்பாசை, இந்த மூவரை எப்படியாவது எடுத்துக் கொண்டால், மந்திரஜாலமாக அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்ற எண்ணம்.

விதிகள்: நான் நேர்காணல் செய்ய வீட்டை விட்டு நகர மாட்டேன், தொலைபேசியில் தான் பேசுவேன் – தொலைபேசிக் கட்டணம் கொடுத்து விட வேண்டும் – ஒவ்வொரு தொலைபேசிப் பேச்சுவார்த்தை / நேர்காணல் ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் – எனக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ரூபாய் ஐயாயிரம் – முன்னமேயே அறிவிக்கப் பட்ட, குறித்த நேரத்தில் அந்தப்பக்க இளைஞர் இல்லையானால் அந்த நேர்காணல் நடந்ததாகக் கருதப் படவேண்டும் – நான் இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கமாட்டேன் – தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நேர்காணல், இரண்டு மொழிகளிலும் கலந்தடித்து இல்லை – கேள்விகள் அவர்கள் தங்கள் குறிப்புகளில் எழுதியது பற்றி மட்டுமே கேட்கப் படும் – பொது அறிவு கிது அறிவு என்றெல்லாம் கேட்க மாட்டேன், அவர்களுக்கு இதற்கெல்லாம் கிலோ என்னவிலை என்று தெரியாது என்பது எனக்குத் தெரியும் – மொத்தம் 55 நிமிடங்களுக்கு நேர்காணல் – ‘Tell us something about yourself’ என்கிற பத்து நிமிட பஜனையெல்லாம் இருக்காது. ‘Do you have any questions’ என்றெல்லாம் கேட்கமாட்டேன் – வேண்டுமானால் அவர்களே கேட்டுக் கொள்ளட்டும் – நேர்காணல்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் ஒரு மணினேர ஆடியோ ஆவணங்களை நான் அந்த விண்ணப்பதாரர்களுக்கு அளிப்பேன் – அதில் ஐந்து நிமிடங்களுக்கு என் பேச்சு, நேர்காணல் பற்றிய கணிப்பு  / மதிப்பிடல்  இருக்கும் – தேர்வு செய்யப் பட்டார்களோ இல்லையோ, அவர்களுக்கு என்ன, ஏன், எப்படி ஆயிற்று எனத் தெரியவேண்டும், அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் – என்னுடைய முடிவுதான் கடைசி: நான் தேர்வு செய்தால்தான் தேர்வு பணி உத்தரவு எல்லாம்.

இளைஞத் தொழில்முனைவர் இவற்றுக்கு ஒப்புக்கொண்டார்.

இந்த மூன்று எழவெடுத்த ‘தொலைபேசிவழி நேர்காணல்களுக்கும் சில விஷயங்கள் பொதுவாக இருந்தன.

1. கேள்வி கேட்டவுடன் – பரக் பரக் பரக் என்று பக்கம் திருப்பும் சத்தம் கேட்கும், கூட யாராவது குசுகுசுவென்று பேசுவது கேட்கும், கீபோர்ட் சத்தங்கள் கேட்கும்… பின்னர் அரைகுறையாக ஏனோதானோவென்று பதில் – பெரும்பாலும் இணையத்திலிருந்து படிப்பார்கள். (ஒரு நேர்காணல்போது சம்பந்தப் பட்ட விக்கிபீடியா பக்கத்திலிருந்து படித்தார் ஒரு இளைஞர்!)

2. எந்தக் கேள்வி கேட்டாலும் – அந்தக் கேள்வியை ரிபீட் செய்து – அதைக் கேட்கிறீர்களா சார் என்பார்கள். பின்னர் கொஞ்ச நேரம் மௌனம் – பின்னர் அதற்குத் தொடர்பேயில்லாத பதில் வரும்.

3. நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்பார்கள் – தம்பீ, எனக்கு நீ என்ன செய்தாய் என்றுதான் தெரியவேண்டும் என்றால் முழிப்பார்கள். மௌனம். நான் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா சார், எனக் கேட்பார்கள். மறுபடியும் மௌனம். அல்லது சகட்டுமேனிக்குப் பொய்.

4. அது அப்படி செய்யப் பட்டது, இது இப்படி செய்யப் பட்டது என்பார்கள் – என்ன எப்படி என்று கேட்டால், நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்பார்கள் – மேலும் அதைப் பற்றிக் கேட்டால், நான் அதை மட்டும் செய்யவில்லை – ‘நான் அவனில்லை’ – நான் இதனை மட்டுமே செய்தேன் – சரி, அதில் என்ன செய்தாய் என்று கேட்டாம் – மௌனம்.

5. 7ஆவது செமஸ்டர் வரை படித்ததெல்லாம் மறந்து விட்டது என்பார்கள் – எட்டாம் செமஸ்டரில் ‘ப்ரோஜெக்ட்’ செய்தோம் என்பார்கள். அதில் என்ன செயதீர்கள் என்றால் மறுபடியும் உளறல், சொதப்பல்.

6. யார்தான் சொன்னார்களோ – இந்தப் பையன்கள் மகாமகோ கலைச்சொற்கள், சுருக்கங்கள் எல்லாம் தப்பும் தவறுமாக சுருக்கி விரித்து ஏகப்பட்ட அபத்தங்களைச் செய்தனர். சொல்லுக்குச் சொல், கோட்பாட்டுக்குக் கோட்பாடு தாறுமாறாகத் தாவி ஒரே கந்தறகோளம் – ரத்தக் களறி

7. I am team player, I am hardworking, I know java, please give me job என்று சொல்வார்கள். (யார் தான் இவர்களுக்கு இப்படிப் பேசச் சொல்லிக் கொடுத்தார்களோ!)

8. ஒருவர் கூட நான் கொடுத்த புதிர்களைப் பற்றிக் கேட்கவேயில்லை (ஆக, இவர்களுக்கு எதையும் பகுத்தறியவே தோன்றவில்லை)

தொடரத் தொடர – எனக்கு முட்டிக் கொண்டு வருகிறது…

சரி, நான் ஒருவரையும் தேர்வு செய்யவில்லை. கணக்குப் பார்த்தால் அப்படியும் இப்படியும் சுமார் 14 மணி நேரங்கள் இந்த விவகாரத்தில் செலவழித்திருக்கிறேன். வருத்தம் தான். நம் இளைஞர்கள் என்னவாகிக் கொண்டிருக்கிறார்கள்? நாம் அவர்களுக்கு என்ன செய்யக் கூடும்? அவர்கள் என்னதான் செய்யவேண்டும்?  கோபம் தான். அதற்கு மேல் அயர்வு

ஆனால் சொன்னசொல்படி, அந்தத் தொழில் நுட்ப இளைஞர் ரூபாய் பதினைந்தாயிரம் கொடுத்தார்.

ஆக, என் பள்ளியில் சுமார் மூன்று-நான்கு நாட்களுக்கு அனைவருக்கும் மதியவுணவுச் சோறு + காலைமாலைச் சிற்றுண்டி பொங்க வைத்த அந்த தொழில் நுட்ப இளைஞனுக்கு என் நன்றி. அவன் முனைவு வெற்றிபெற வாழ்த்துக்களும்…

குறிப்பு: தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள் பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் எங்கே அந்த ‘அரூபக் கருத்துநிலை வாத்துக்கள்’ என்று கேட்கிறீர்களா?

அந்தக் கேலிச்சித்திரம் இங்கே. Abstruse Goose எனப்படும் கார்ட்டூன் தொகுப்பில் உள்ள ஒரு கார்ட்டூன் தான் இது.

the_singularity_is_way_over_thereதொடர்புள்ள பதிவுகள்:

9 Responses to “தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள், அரூபக் கருத்துநிலை வாத்துக்கள்”

 1. Sriram Says:

  Am not sure if only students are responsible for this plight. That assumes decent colleges, profs, curriculum, books, exams and yet, poor quality engineers. Not sure if that is the case. The system is rotten and perpetuates the rot. At least some students could be seeking some decent learning for the money paid and many may not even know that they have been cheated. Incidentally, Zoho is figuring a way out by catching bright rural students of class 12 to join them directly. Why let students waste time and money in acquiring a fake degree?


 2. ஜெயமோகன் பதிவில் இதன் சுட்டியைப் பார்த்தேன். இரண்டு பதிவுகளும் பொதுவாக ஒரு முக்கியமான பிரசினையை சரியாகவே அடையாளம் கண்டுள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமான் பொதுமைப் படுத்தல் உள்ளது என்று நினைக்கிறேன்.

  விரித்தெழுத நேரமில்லையாததால் சுருக்கமாக சில புள்ளிகள்..

  மிக நேர்த்தியான சிவில் கட்டுமான தொழில் நுட்பம் கடந்த 15-20 ஆண்டுகளாகவே இந்தியாவில் மிகச் சிறப்பாகவே வளர்ந்துள்ளது என்பது என் எண்ணம். அதன் தரம் உலகத்தின் எந்த நாடுகளையும் விடக் குறைவானது அல்ல. எனவே குழாய் ஒழுகுதல் போன்ற பிரசினைகள் உருவாகும் சாத்தியக் கூறுகளை மிகக் குறைவாக (0.5%) ஆக்கவோ அல்லது வந்தால் 100% சரி செய்யவோ முடியும்.. ஆனால், அதற்குத் தரவேண்டிய விலை/கூலி மிக அதிகமாக இருக்கிறது. சாதாரணமாக தன் சேமிப்பில் வீடு கட்டும் ஒருவரால் அதைத் தர முடியாது.. ஆனால் மிகப் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், மால்கள் போன்றவற்றின் கட்டடங்களில் இந்த நேர்த்தியை இந்தியாவிலேயே நாம் பார்க்க முடியும் – எனவே நம்மால் அது செய்ய முடியாத ஒன்றல்ல.

  டாடா நேனோ கார் முழுக்க முழுக்க (சரி, 97%) இந்திய ஆடோமொபைல் பொறியாளர்களாலேயே திட்டமிட்டு, வடிவமைத்து, பரிசோதனை செய்யப் பட்டு, ப்ராடக்ட் ஆக வெளிவந்தது. “குறைந்த விலை” என்ற அதன் மைய அலகைக் கணக்கில் கொண்டு அது வடிவமைக்கப் பட்ட விதத்தை உலகத் தரம் வாய்ந்த இஞ்சினீயரிங் பத்திரிகைகளே புகழ்ந்து எழுதின.. இந்தப் புள்ளிக்கு நாம் வந்து சேர்ந்தது தாமதம் தான், ஆனால் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அதே போல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் (auto ancilliary) தயாரிக்கும் தொழில்நுட்பம் பல்வேறு பட்ட துல்லியமான கட்டுப் பாடுகளை (precision controls) கோருவது – ஒரு காரின் தரம் என்பது அதில் உள்ள ஒவ்வொரு உதிரி பாகங்களின் தரத்தையும் இணைத்தது தான்.. இந்த தயாரிப்புத் துறையில் டிவிஎஸ் உள்ளிட்ட இந்திய கம்பெனிகள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன.

  சிலிகான் பள்ளத் தாக்கின் பல வெற்றிகரமான ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்குப் பின்னால் பெங்களூரில் வேலை செய்த படைப்பூக்கமும் உலகத் தரமான தொழில் நுட்ப அறிவும்கொண்ட இந்திய இஞ்சினீயர்கள் உள்ளனர்.. வருடா வருடம் இந்தியாவில் இருந்து (குறிப்பாக, பெங்களூரில் இருந்து) வரும் அமெரிக்க காப்புரிமை விண்ணப்பங்கள் (US patent filing) எண்ணிக்கையைப் பாருங்கள்.. இந்தியாவின் எஞ்சினியர் தொகையுடன் ஒப்பிடுகையில் அவை மிகமிகக் குறைவு தான்.. ஆனால், உலகின் பல நாடுகளை ஒப்பிடுகையில் தரத்திலும், அளவிலும் அதிகம். அவற்றை சிந்தித்து உருவாக்கியவர்களை தொழில் நுட்ப அறிவற்றவர்கள் என்று யாரும் சொல்லி விட முடியாது..

  80-90 களில் இந்தியதொலை தொடர்புத் துறையில் மாபெரும் புரட்சியைக் கொண்டு வந்து எஸ் டி டி, ஐ எஸ் டி தொலைபேசிகள் ஊருக்கு ஊர் வருவதற்குக் காரணமான தொழில் நுட்பங்கள் அனைத்தும் CDOT என்ற மத்திய அரசின் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி புரிந்த நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த திறமை சாலி இஞ்சினீயர்களால் இந்திய சூழலை முழுவதுமாகக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டன.. ராஜீவ் காந்தியின் நண்பரும் சிறந்த டெக்னோகிராட்டுமான சாம் பிட்ரோடா இந்த நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டி வளர்த்தார்.. இவர்களது ரூரல் ஆட்டோமேடிக் எக்ஸ்சேஞ்ச் என்ற தொழில் நுட்பப் பெட்டி தான் தொலைபேசியை கோடிக்கணக்கான இண்டியர்களுக்குக் கொண்டு சென்றது.. பிறகு அரசியல் அழுத்தங்களாள் சாம் பிட்ரோடா வெளியேறியதாலும், 90களுக்கு பிறகு தாராளமயமாக்கலில் வெளீ நாட்டு தொலை தொடர்பு சாதனங்களுக்கான இறக்கு மதி வரி கடுமையாகக் குறைக்கப் பட்டதால் ஏற்பட்ட போட்டியாலும், நிறுவனம் தொய்வடைந்து அந்தத் தொழில் நுட்பங்கள் அதன் அடுத்தத்டுத்த தலைமுறைகளைக் காணாமல் போயின.. அப்போது அங்கு பணிபுரிந்த மிகச் சிறந்த இஞ்சினியர்களை இன்று நீங்கள் உலகின் பல MNC தொழில் நுட்ப கம்பெனிகளில் பார்க்கலாம்..

  இது போக, இஸ்ரோ, இராணுவ ஆய்வு மையங்கள் ஆகியவற்றில் இந்திய எஞ்சினியர்கள் செய்துள்ள சாதனைகளும் புறமொதுக்கத் தக்கவையல்ல.

  எனவே, இந்தியாவின் தொழில் நுட்ப அறிவு என்பது இந்த அளவு ஒட்டுமொத்தமாக நிராகரிக்கத் தக்க அளவில் இல்லை..

  முக்கியமான விஷயம் என்னவென்றால், உண்மையான தொழில் நுட்ப அறிவு கொண்ட இஞ்சினியர்களுக்கு துறைக்கு வந்த முதல் 1-2 வருடங்களிலேயே தெளிவாகத் தெரிந்து விடும்.. தங்களுக்கான நிறுவனங்களை அவர்கள் தேடி அடைவார்கள், தங்கள் மதிப்புக்கேற்ற விலையையும் கோருவார்கள்…. அதில் ஒரு சாரார் தேடியது கிடைக்காததால் வெளி நாடுகளுக்கும் போய் விடுவார்கள்..
  இன்னொரு சாரார் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடைந்து வாழ்க்கையை ஓட்டுவார்கள்..

  துரதிர்ஷ்டவசமாக, மத்திய மானில அரசுகள் சகட்டு மேனிக்கு பொறியியல் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கிக் கொண்டே இருப்பதால், வெளிவரும் இஞ்சினியர்கள் விஷயத்தில் தரக் கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. தமிழ் நாடு விஷயத்தில் இன்னுமே மோசம்.. எனவே, மொத்த இஞ்சினியர்களில் நல்ல இஞ்சினீயர்கள் ஒரு 10 – 15% க்கு மேல் தேறமாட்டார்கள் (அந்த 10 – 15% என்பதே எண்ணிக்கை ரீதியாக பெரிய அளவு தான்).. மிச்சமுள்ள அத்தனை பெரும் பதர்கள் .. அவர்களை இஞ்சினியர்களாக ஆக்க முயன்றதற்காக செலவிட்ட நேரம், பொருள் அனைத்தும் விரயமே.. இதைத் தான் சரி செய்ய வேண்டும்.

  ஒரு நல்ல உதாரணம் – C A (Chartered Accountancy).. அதில் ஒவ்வொரு வருடமும் பரிட்சையில் தேர்வு பெறுபவர்களின் சதவீதம் 2 – 3% மட்டுமே. அதனால் தான், ஒரு ஆடிட்டரைக் கூட சோடையாக நாம் பார்க்க முடியாது.. அதே போன்றதொரு rigour இஞ்சினியரிங் கல்வித் துறையில் வந்தால் இதற்கு ஒரு தீர்வு வரும்..

 3. ramasami Says:

  ‘ஜடாயு,’

  உங்கள் கருத்துகளுக்கு நன்றி; நலமா?

  இந்தியாவில் தரம் வாய்ந்த பொறியியல் தொழில் நுட்ப ஆட்கள் இல்லவேயில்லை என்பதாக, நான் சொல்லவில்லை. நான் சொன்னது கல்லூரிகளை விட்டு வெளியே வரும், வந்த பின் நிறுவனம் நிறுவனமாகத் தாவும் ஜந்துக்களைப் பற்றியே. இவர்கள் தாம் (என் கணக்கில்) சுமார் 95 சதம். எனக்கு பலபல வருடங்களாக நேரடி அனுபவம் இருக்கிறது – இவர்களுடனும் சில்சமயம் (வேறுவழியின்றி) ஈடுபட நேர்வதால். உதாரணத்திற்கு – இந்தப் பதிவின் பாடுபொருட்கள்.

  ஆனால் மிச்சம் ஐந்து சதவிகிதம் இருக்கிறார்களே, அவர்கள் மணிகள். இம்மணிகளைத் தவிர, இப்படிப் படிப்பு-கிடிப்பு-விடிப்பு இல்லாமல் இருந்தும் அற்புதமான பொறியியல் நிபுணத்துவமும் தொழில் நுட்ப அறிவும் பெற்றுள்ள இன்னமும் பலரை எனக்குத் தெரியும். மிகப் பலரை நேரடியாகத் தெரியும் மிகுந்த கஷ்டங்களுக்கிடையில், தகிக்கவைக்கும் வறுமைக்கிடையில் அற்புதமான முனைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொறியியலாளர்களையும் நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றி எழுதவில்லை. எழுதவேண்டும். இவர்களால்தான் வண்டி ஓடுகிறது – சில சமயம் மிக நன்றாகவே.

  அனைத்துத் துறைகளிலும் கதை இப்படித்தான் – புலம்பிக் கொண்டிருந்தால் கவைக்குதவாது…

  ஆனால், பெரும்பான்மைத் தமிழ் இளைஞர்களின் மீஅறிதல் திறன் குறைவு பற்றித் தான் நான் எழுதுகிறேன்.

  என்னுடைய கேள்வியெல்லாம், இந்தப் பெரும்பான்மையினரின் மோசமான சராசரித்தனம் (ஆனால் தொடர்பேயில்லாத பெருமை) பற்றித்தான். எனக்கு இந்த கும்பலின் பேரில் நம்பிக்கையில்லை.

  அவ நம்பிக்கைவாதம், ஸினிஸிஸ்ம் என்றெல்லாம் சொல்லலாம் – ஆனால் இப்படிச் சொல்பவர்கள் – ஒரு குழந்தையையாவது தெரிவு செய்து, போஷகம் செய்து, அதனை ஒர் நல்ல மனிதனாக, பொறியியலாளனான உருவாக்குகிறார்களா? அல்லது ஒரு இளைஞனையாவது ஊக்குவித்து அவனை ஒரு ஹூக்கு விக்கும் தொழில்முனைவோனாக ஆக்குகிறார்களா என்றால் இல்லை. புஸுக்கென்று கோபம் மட்டும் வந்து விடுகிறது. (எனக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது, ஒரு கீபோர்ட் போராளியிடமிருந்து)

  எதையுமே சுலபமாக புறங்கையால் தள்ளி விடுவது சுலபம். இது நிச்சயம் பொதுமைப் படுத்தல்தான்.

  எதையாவது சரியில்லை, மோசம் என்று சொன்னால் – அது மோசம். சரி, முதல் மோசத்தைச் சரி செய்ய என்ன அய்யா செய்கிறீர் என்றால் கோபம். சரி. இரண்டாம் மோசத்தைச் சரிசெய்ய என்ன செய்கிறீர் என்றால் ஒரு கோப போராளித்தன மின்னஞ்சல். பின், குண்டி மண்ணைத் தட்டிக் கொண்டு கிளம்பியாகி விட்டது, அடுத்ததற்கான இணையத்தில் போராட்டவாள் சுற்ற வேண்டுமல்லவா?

  ஜடாயு, உங்களிடம் ஆரம்பித்து இன்னொரு போராளியிடம் போய் விட்டேன். மன்னிக்கவும்.

  __ரா.

 4. Dinesh Says:

  //முதிராத்தன்மையுடைய மின்னஞ்சல் முகவரிகள் //
  Honestly what can we expect decent mail id from free Mail Providers?

 5. Nelson Says:

  Can you share those puzzles?

  • ramasami Says:

   Dear Nelson,

   I can’t. The set belongs to the young entrepreneur as he said he would regularly make use of the Qs. However, I can give the context for those puzzles in one of the posts, sometime later.

   __r.


 6. […] ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு. […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s