மந்திரவாதியின் சிஷ்யன்

30/06/2013

sorcerer-apprentice-med-img

மந்திரவாதியின் சிஷ்யன்: மருத்துவப் பிம்பவுருவாக்கங்கள் எப்படி நம் நல்வாழ்வுப் பராமரிப்பு முறைமைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன…

அண்மையில் படித்த, அசைபோட்ட புத்தகங்களில், ப்ரூஸ் ஹில்மன், ஜெஃப் கோல்ட்ஸ்மித் – எனும் வர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அழகானது

1) தொழில்நுட்பம் என்றாலே அலர்ஜி (பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே படுமோசம், தொழில் நுட்பம் எப்போதுமே மக்களுக்கு எதிரானது) அல்லது 2) ஆன்மீகமே உயர்ந்தது (’முகத்தில் கண்கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’) அல்லது 3) சுத்தத் தொழில் நுட்பம் மட்டுமே உலகைப் பக்கவிளைவுகளேயில்லாமல் உய்விக்கும் (அதுவும் நானறிந்த தொழில்நுட்பம் மட்டும்தான் இப்படி) மற்றையபடி அனைத்தும் போலி அல்லது 4) சாமியார்கள் அனைவரும் அயோக்கியர்கள் (+ ஆயுர்வேதம், சித்தர்முறை, ஹோமியோபத்னி போன்றவை வெறும் பம்மாத்துக்கள்) அல்லது 5) டாக்டர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் (கலைஞரைத் தவிர) – போன்ற நகைச்சுவைத் தளங்களில், கடன்வாங்கிய கருத்துக்களில்  ஊடாடாமல் — நேரிடைத் தன்மையுடன், பரந்துபட்ட ஆராய்ச்சி மனப்பான்மையுடன், நேர்மையான அறிவியல், தரவுகள் மூலமாகத் தெரிவிக்கப் படும் கருத்துக்கள் கொண்ட புத்தகம் இது.

மேலதிகமாக, மருத்துவப் பிம்பவுருவாக்கங்களின் அரசியல், எதிர்காலம் பற்றியெல்லாம் அலசும் பகுதிகளெல்லாம் வேறு.

sorcerer-apprentice-med-img-toc

ஒரு மாதிரிக்கு, இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்களின் / பகுதிகளின் கட்டமைப்பு மேலே. எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். தமிழில் இம்மாதிரி அலசல் புத்தகங்கள் வரவேண்டாமா? நம்மிடத்தில் இல்லாத அறிவாளிகளா? இல்லாத விற்பன்னர்களா?

-0-0-0-0-0-0-

கடந்த வியாழக்கிழமை மாலை,  கால்பந்தாட்ட மைதானத்தில் தடுக்கி விழுந்து, முழங்காலில் சிராய்த்துக் கொண்டான் ஒரு சூட்டிகையான மாணவன். கூட போனஸாக நெற்றியில் ஒரு சிறு வீக்கம். சிராய்ப்புக்காக முதலுதவி செய்து பின்னர், எங்கள் ஊர்ப்பக்க வாணூர் மருத்துவர் ஒருவரிடம் அந்தப் பையனுடன் சென்றேன். பாண்டிச்சேரி ஜிப்மர் போகவேண்டுமென்றால் மிகத் தாமதமாகி விடும், மேலும் இது ஒரு சாதாரண ரணம்தான் – அந்தப் பையனுக்கு ‘யாராவது தன்னை ஆதூரமாகப் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்’ என்று தோன்றுகிறது என எனக்குப் பட்டதால், சரி, சுமார் இரண்டு மணிநேரம் தானே ஆகப் போகிறது எனப் புறப்பட்டேன். பேசிக் கொண்டே சென்றோம் – அவன் குடும்பச் சூழ்நிலை பரிதாபமானது. அந்தப் பையனின் அப்பன் ஒரு சோம்பேறி மொடாக் குடிகாரன். அம்மா, காலையில் கிளம்பி மற்றவர் வீடுகளில் வேலை செய்து மாலை தன் வீட்டிற்கு வந்து இந்தக் குடிகாரனிடம் தினமும் உதை வாங்கிக் கொண்டிருப்பவள்.

வாணூர் டாக்டர் ஒரு சின்னப் பையன்.  பயிற்சி இல்லை எனப் பட்டெனத் தெரிந்தது. என் குழந்தையைப் பரிசோதனை என்று கூடச் செய்யாமல் – ஏதோ ப்ராட் ஸ்பெக்ட்ரம் அன்டீபயாடிக், ஏதோ பேராஸிடமால், ஏதோ விடமின் என்று கொடுத்தவன் நிமிர்ந்து பார்த்தவர், பையனின் நெற்றியில் புருவத்திற்கு சற்று மேலே புடைத்திருப்பதைப் பார்த்தவுடனே அதுவும் அடிதானே, உடனே கேட்-ஸ்கேன் பண்ண வேண்டுமென்றார். தம்பீ ஏன் செய்யணும், கொஞ்சம் விளக்கறீங்களா என்றேன். அவர் சொன்னார் – அதுக்கெல்லாம் இங்க்லீஷ் தெரியணும், உனக்கெல்லாம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண முடியாது. ( நான் = லுங்கி + பனியன் + மேல்துண்டு + கட்டைகுட்டையான தேகம் + கையில் பெயின்ட் கறைகள் – அதனால் தான் என நினைக்கிறேன்)

நான் சொன்னேன், தம்பீ எனக்கு கொஞ்சம் இங்க்லீஷ் தெரியும். சொல்லுங்க புரிஞ்சிக்க முயற்சி பண்றேன். ஏன் நீங்க ஸ்கேன் பண்ணணும்னிட்டு சொல்றீங்களா?

அவர்: அதெல்லாம் ஒனக்குத் தேவையில்லை. சொல்ல முடியாது. ஒங்க பையன் மேல ஆசையிருந்தா இந்தக் ஸ்கேன் சென் டர் போய் பண்ணிக்கிட்டு வா. அப்பால ஏதாவது பிரச்சினைன்னா என்கிட்ட வராத.

சரி தம்பி, என்றபடி ‘எழுபத்தைஞ்சு ரூபா’ அழுதுவிட்டு வெளியே வந்தேன் – அவர் ஸ்கேன் சென்டருக்கு எழுதியிலிருந்த பரிந்துரையில் வெறும் ‘தலை’ என்று இருந்தது.+ பின்னடித்த விசிட்டிங் கார்ட்-ல் அந்த ஸ்கேன் கடை முகவரி. அவ்வளவுதான்.

மறுபடியும் உள்ளே போய் – நீங்க எழுதுனது இவ்வளவு போறூங்களா? ஸ்கேன் ஆளுங்களுக்கு எதுக்கு எங்க பண்ணணுமினிட்டு சொல்ல வோணாமா?

பெருசூ – அவங்களுக்கு எல்லாம் தெரியும், மொதல்ல ஸ்கேன் பண்ணிக்கிட்டு வருவியா?

பெருசு பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பியது, சுபம்.

குழந்தைக்குச் சந்தோஷம் – என்னுடன் ஒரு சுற்றுச் சுற்றிவந்ததில்.  வழியெல்லாம் நண்பர்களைப் பார்த்துக் கையாட்டியவண்ணமிருந்தான். நான் மருந்தெல்லாம் வாங்கவில்லை. ஜுரம் வந்தால் எனக்குத் தெரிவிக்கும்படிச் சொன்னேன். எலக்ட்ரால் ஒரு பாக்கெட்டுடன், வாழைப்பழம் அரை சீப்பு வாங்கிக் கொடுத்தேன். இன்னும் சந்தோஷம்

இங்கு மதிய வெய்யில் பிளக்கிறது; எப்படியிருந்தாலும் ஜுரத்துக்கும் தலைவலிக்கும் – எங்கள் ஊரில் செய்வது போல,  ஃபேன்டா குடிக்காமல் எலக்ட்ரால் கலவை குடிப்பது சரிதானே!

-0-0-0-0-0-

ஹ்ம்ம். என் தந்தை தொடர்பான பலவித ஸ்கேன் சமாச்சாரங்களில் கூட – ஒரு சில டாக்டர்களே, பொறுமையாக விஷயுங்களைச் சொல்லி, அவசியத்துக்கு மட்டுமே ஸ்கேன் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பலர் அப்படியில்லை. (ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால் , எனக்குச் சில படு புத்திசாலியான (+ நேர்மை மிகுந்த)  டாக்டர்களைத் தெரியும். இவர்கள் மூலமாகத் தெரிய வரும் விஷயங்களை வைத்து பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த பல நாவல்கள் எழுதலாம்)

-0-0-0-0-0-0-

சரி, வீட்டிற்கு வந்து ஒரு வழியாக இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.

sorcerer-apprentice-med-img-titlepage

Bruce J. Hillman,  Jeff C. Goldsmith – – The Sorcerer’s Apprentice: How Medical Imaging Is Changing Health Care – 2011 – Oxford University Press (USA) (இதை ஃப்லிப்கார்ட் இணையப் புத்தகக் கடையில் வாங்க வேண்டுமா?)

நேரம் கிடைத்தால் அவசியம் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

ஏனெனில், நம்மை பாதிக்கும் விஷயங்களைப் பற்றி நாம் குறைந்த பட்ச அறிவுடனாகவாவது இருக்க வேண்டும். மேலதிகமாக, தொழில் நுட்பங்களின் பின்புலங்களைப் புரிந்து கொள்வதில் உள்ள லாகிரி இருக்கிறதே – அது அலாதி!

-0-0-0-0-0-0-

நிற்க – நேற்றும், இன்றும் இந்தத் தள மேலாண்மை விஷயமாகச் சில மாற்றங்கள், சுத்திகரிப்புகள் செய்தேன். அப்போது எனக்குத் தெரியவந்த சில விஷயங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தன – அவற்றில் இதுவும் ஒன்று: இந்த ஒத்திசைவையும் படிக்க முயலும் சிலரில் இரு மருத்துவக் கதிரியக்கக் காரர்கள் அடக்கம், பாவம்.

இவர்கள் தளங்களில் மேலதிக விவரங்களைக் கொஞ்சம் படித்தேன்.

ஒருவர்: விஜய் சதாசிவம் அவர்கள் ஒரு மருத்துவக் கதிரியக்க நிபுணர். சேலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி (அதுவும் அது ஒரு ‘டீச்சிங் ஹாஸ்பிடல்’) – எஸ்கேஎஸ் மருத்துவசாலையில் கதிரியக்க மருத்துவத்துறையின் தலைவராக இருக்கிறார். இவருடைய ஆங்கில வலைப்பூவில் கடந்த இரு வருடங்களாகப் பதிவு இல்லை.

இன்னொருவர்: கே மதன் அவர்கள் – இவரும் ஒரு மருத்துவக் கதிரியக்க நிபுணர்.  இவருடைய ஆங்கில வலைப்பூவிலும் கடந்த சுமார் ஒன்றரை வருடங்களாகப் பதிவு இல்லை. கடைசிப் பதிவு பிடர் ப்ரூகெல் ஓவியங்களும், சில மருத்துவ பிம்பங்களும் கொண்டதாக இருக்கிறது. பல ப்ரூகெல்கள் நினைவுக்கு வருகின்றனர். ஹ்ம்ம்.

… இவர்கள்  தமிழில் எழுதுகிறார்களா, எழுதுவார்களா, நேரமிருக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மருத்துவர்கள் (என் மரியாதைக்குரியவர்கள் – அல்லோபதியிலிருந்து அம்பிகாபதி வரை)  எப்போதும் வேலையோதிவேலையாக இருப்பவர்கள், வேலை அழுத்தங்களில் பொதுவாக இவர்களுக்கு மூச்சு விடவே நேரம் இருக்காது.

ஆனால் இம்மாதிரி நிபுணர்கள் / விற்பன்னர்கள் – தமிழில் வலைப்பூக்களிலோ அல்லது புத்தகங்களாகவோ மருத்துவத் துறையைப் பற்றி, அவற்றின் தொழில் நுட்பங்களைப் பற்றி, மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய அவர்கள் துறை தொடர்பான விஷயங்களைப் பற்றி – அல்லது இவற்றைப் பற்றி மட்டுமேயோகூட எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பின்குறிப்பு: அந்தக் குழந்தைக்கு ஒரு பிரச்சினையுமில்லை. நேற்று கூட விளையாடிக் கொண்டிருந்தான். எனக்கும் தேவையற்ற செலவும் அலைச்சலும் மனவுளைச்சலும் மிச்சம்.

Advertisements

One Response to “மந்திரவாதியின் சிஷ்யன்”


  1. நேரம் கிடைத்தால் என்று எழுதிவிட்டீர்கள் அல்லவா? அது என்னிடம் பஞ்சமில்லாமல் இருப்பதால் உடனே தாங்கள் தந்துள்ள இணைப்புக்குச்சென்றேன். தலை சுற்றியது விலையைப்பார்த்து.

    ஏற்கனவே என்னுடைய தம்பி ஒருவரின் மகன் மோட்டர் சைக்கிளிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டு கோமாவில் உள்ளான். அவனுக்கு மரபு முறையில் இல்லாமல் வேறு ஏதாவது செய்ய இயலுமா என்று சிந்தித்தபோது அவனுடைய ஆன்மாவுடன் தொடர்புகொண்டு பேச இயலுமானால் என்று சிந்தனை எழுந்தது.(எல்லாம் திருக்குறளைப்படித்ததனால் வந்த வினை) பிறகு பார்த்தால் பாரா சைக்காலஜிகாரர்கள் பழம் தின்று கொட்டை போட்டு உள்ளார்கள். அதிலும் பிரியன் எல் வியிஸ் என்ற சைக்கியேட்ரிஸ்ட் ஏகப்பட்ட வேலை செய்து இருக்கிறார். அவர் எழுதிய Many Lives Masters ( Many Masters = புத்தேளிர் 58,213, 234, 290,966,1323) என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என்னென்று சொல்வேன் திருவள்ளுவரின் ஆன்மாவைப்பற்றிய கருத்துக்கள் அப்படியே அச்சாக இருக்கின்றன ஆங்கிலத்த்ல் அவருடைய புத்தகத்தில். உடனே அவர் எழுதி உள்ள ஏழு புத்தகங்களில் இரண்டினைத் தவிர்த்துவிட்டு மீதம் நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்துவிட்டேன்.

    பையனுடைய ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள இயலுமா என ஆரம்பித்து உள்ளேன். ஏகப்பட்ட பேர் ஏகபட்ட இடங்களில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஒரு நர்சம்மா பல கோமா ஸ்டேஜ் நோயாளிகளை நனவு நிலைக்கு கொண்டு வந்து உள்ளார். மிகவும் நம்பிக்கையுடன் பரபரவென்று படித்துக்கொண்டு உள்ளேன். இந்த நேரத்தில் உங்கள் அனுபவம் ஒரு எல்லையுடன் நின்று விட்ட நரம்பியலர்களையே நினைவு படுத்துகிறது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: