பாம்பாட்டிச் சித்தரின் எலியும் ஷ்ராதிங்கெனார் பூனையும்

02/07/2013

ம்ம். மன்னிக்கவும். நான்தான் ஷ்ராதிங்கெர்.  எர்வின் ஷ்ராதிங்கெர்.

தமிழில் புதுக் கவிதைக்காக, கலைஞர் திருக்கரங்களிலிருந்து  நொபெல் பரிசு பெற்றிருக்கிறேன். அறிவியலில் என் பணிகளுக்காக எனக்குத் தமிழக அரசு கலைமாமணி பட்டம் கொடுத்திருக்கிறது. ‘விடுதலை’ வீரமணி அவர்களிடமிருந்து ‘அறிந்த அனைத்திலிருந்தும் விடுதலை’ பெற்றுக் கொண்டு, பதிலுக்கு என் பெயரில் ‘ஆர்’ விகுதியைச் சேர்த்திக் கொள்ளும் பேறு பெற்றேன். ஆகவே நான் எர்வின் ஷ்ராதிங்கெனார்.

எர்வின் ஷ்ராதிங்கெனார் எனப் புகழ்பெற்ற Erwin Schrödinger

எர்வின் ஷ்ராதிங்கெனார் எனப் புகழ்பெற்ற Erwin Schrödinger

சீமார் அவர்கள் எனக்குப் பாராட்டுவிழா நடத்தி தனக்குத்தானே  ‘நானே தமிழன்’ எனப் பட்டம் கொடுத்துக் கொண்டார். திருமாவளவனார் அவர்கள் எனக்குத் ‘தமிழ் இடிதாங்கி’ பட்டம் கொடுத்திருக்கின்றார்கள். இதைத் தொடர்ந்து டாக்டர் இராமதாசு அவர்கள் என்னை என்ன செய்வார் என நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது.

நிற்க, நடமாடும் வரலாறு, புவியியல், இயற்பியல், அடைஅவியல் இன்னபிற இன்னபிற டாக்டர் கலைங்கர் நடத்திய தமிள்மொளி செம்மொலி மானாடு மயிலாடுக்குப் பின் மரை கழன்ற நான், அணு அறிவியல் நாசமாப் போக என்று மனம் பேதலித்து மானாவாரியாகத் டமில் மொளியில் துபுக் கவிதை எளுதி வருகிறேன்.

வொங்க டமிலுக்கு இதெல்லாம் புத்சு பா!

அவியலையும் நாடார் கடையில் வாங்கிய ஆச்சி சாம்பார்ப் பொடியையும் கலந்தெடுத்த கங்னம் ஸ்டைல் என்னுடைய முத்திரை: ஒரே நொடியில் டுபுக் என்று புதுக் கவிதை ஆச்சி!

-0-0-0-0-0-0-

பாம்பாட்டிச் சித்தரின் எலி

நான்கு வளைகளின்மீது
பரக் பரக் என்று பிறாண்டிக்கொண்டிருந்த
பூனைகளைப் பார்வையிட்டது எலி
கரையும் ஒவ்வொரு காக்கையுடனும்
ஏதேனும் ஒரு வளைக்குள்
ஒரு வடை உருண்டோடுவதை உணர்ந்த
எலியின் மூக்கு ஊசியதை
மூக்மூக்கியது.
பந்திக்கு முந்த
எலி வளைப்பாதைகளின்
குறுக்கே நுழைந்தது.
வளைக்குச் செல்லும்போது
எலி உயிர் இழக்கலாம்
அல்லது வளைக்குச் சென்றபின்
ஊசியவடை சாப்பிட்டு
பேதியில் போகலாம்
ஆனால்
வளைக்குப் போக
யத்தனிக்கும் தருணத்தில்
அது உயிரற்ற ஊசிப்போன வடை.

—  எர்வின் ஷ்ராதிங்கெனார்  (’பாலஸ்தீனியம்’  தொகுப்பிலிருந்து)

ஆனால் அநியாயமாக, என் கவிதையைப் பகடி செய்து ‘பாம்பாட்டிச் சித்தர்’ எழுதியுள்ள கீழ்க்கண்ட கவிதையைப் பாருங்கள். ஆ.. நெஞ்சு பொறுக்குதில்லையே…

ஸ்க்ரோடிங்கரின் பூனை
—————————————–
நான்கு வழித்தடங்களோடு
பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த
நெடுஞ்சாலையை பார்வையிட்டது பூனை
கரையும் ஒவ்வொரு நொடியிலும்
ஏதேனும் ஒரு தடத்தில்
ஒரு வாகனம் பாய்ந்தோடுவதை
பூனையின் தலை ஊசலாய்
கண்காணித்தது.
தேவைகள் உந்த
பூனை நெடுஞ்சாலையின்
குறுக்கே நுழைந்தது…
நெடுஞ்சாலையை கடக்கும் போது
பூனை உயிர் இழக்கலாம்
அல்லது நெடுஞ்சாலையை கடந்தபின்
பூனை உயிரோடிருக்கலாம்
ஆனால்
நெடுஞ்சாலையின் குறுக்கே
பிரவேசிக்கும் கணத்தில்
அது ஓர் உயிரற்ற உயிருள்ள பூனை
பாம்பாட்டிச் சித்தன் (‘இஸ்ரேலியம்’ தொகுப்பிலிருந்து)

ராமசாமியாகிய எனக்கும் ஷ்ராதிங்கெனார் போலவே,  இந்தக் கவிதையைப் படித்ததும்,  கோபம்கோபமாக வந்தது.

இதெல்லாம் ஒரு கவிதை,  இதற்கெல்லாம் ஒரு அறிவியல். ஹ்ம்ம்ம்… பாவம் ஷ்ராதிங்கெர்.

பாம்பாட்டிச் சித்தர், ஒரு பூனையானது, சாலையை எப்படிக் கடக்கும் என்பதை முன்பின் பார்த்ததில்லை என நினைக்கிறேன். படு தைரியமாக பூனையின் ‘தலை ஊசலாய் கண்காணித்தது’ என்றெல்லாம் எழுதுகிறார். ஒரு பூனையையும் நாயையும் சாலையைக் கடக்க வைத்துப் பார்த்தாலே இவருக்குப் புரிந்திருக்கும் – பூனை ‘தலை ஊசலாய்’ கண்காணிக்காது என்று. நாய்கள் தாம் அப்படிச் செய்யும்.

இந்த அறிவியல்சார் பிரச்சினையைப் பற்றி இந்தப் பாம்பாட்டிச் சித்தர்,  தம் பாம்படச் சித்தியைக்  கேட்டிருந்தாலே அவரே சொல்லியிருப்பாரே! இந்த அளவு அடிப்படை புரிதல்கள் கூட இல்லாமல், தேவையேயில்லாமல், எதற்கு ஷ்ராதிங்கெரை இசு இசு என்று இசுக்கிறார் இவர்?

சரி. இவருக்கு, பூனைக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை. இவருக்கு உதவியாக நான் சொல்வதெல்லாம்: ஆங்கிலத்தில் – ஸி என்றால் கேட். டி என்றால் டாக். சரியா?

ஆனால், இந்த துபுக் கவிதையை மிகவும் சிலாகித்து எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். அப்போது தான் இந்தப் பாம்பாட்டிச் சித்தர் அருளிச் செய்த வரிகளைப் படித்து இறும்பூதடைந்தேன்.

ஆஹா!

வழக்கமான கவிதை மொழியில் இருந்து விடுபட்டு தனியான மொழியும், பார்வையும் கொண்டிருந்த இக்கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன

– நல்ல வேளை இறந்த காலத்தில் முடித்திருக்கிறார் எஸ்ரா. ஆனால், அவருக்கு இப்போது பிடிக்காத கவிதையை மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பானேன்?

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு அரங்கில் இந்தப் பா.சித்தனாரின் கவிதை ஒன்று வாசிக்கப்பட்டதாக, கோணங்கி குறிப்பிட்டதாக, எஸ் ராமகிருஷ்னன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  சந்தோஷம். இந்த மகாமகோப் படுபயங்கர பீதியளிக்கும் கவிதைகளுக்கு பயந்தாவது கூடங்குளம் உலை நிறுத்தப்படாதா என்கிற நப்பாசை தான் இவர்களின் இந்த முயற்சிக்குக் காரணமென்று நான் நினைக்கிறேன். நம் தமிழர்களின் அஹிம்சைப் போராட்ட முயற்சிகளே அதி அற்புதங்கள் தாம். ஆனால் தொழில் நுட்பம் என்றாலே வன்முறை என்கிற பார்வையிலிருந்து, நாம் முன்னேறி, கவிதை என்றாலே வன்முறையோ எனும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறோமோ எனச் சந்தேகமாக இருக்கிறது.

-0-0-0-0-0-0-

மேதகு பாம்பாட்டி சித்தர் அவர்களை எனக்குத் தெரியாது. ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்களை ஓரளவுக்கு அறிவேன். எனக்குப் பிடித்த சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார் கூட.

ஆனால் இவர் கொஞ்சம் கிண்டலாகவே ’ஸ்க்ரோடிங்கரின் பூனை என்ற இயற்பியல் கோட்பாடினை தெரிந்தவர்கள் இந்தக் கவிதையை கூடுதலாக ரசிக்க முடியும்’ என மதிப்புரையில் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.

இருந்தாலும்  இவர் – –  ப்ரைமோ லீவை, கின்ஸ்பர்க் போன்றவர்களோடு இந்தப் பா. சித்தனாரை  எப்படி தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார் என்பது சத்தியமாகப் புரியவில்லை; வருந்தத்தக்க விதத்தில், இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு ‘இஸ்ரேலியம்’ படிக்கும் திராணியுமில்லை.

ஆனால், ஆனால்… எஸ்ரா அவர்கள் எழுதியிருக்கும் ஒரு விஷயம் காரணமாக எனக்கு நேற்று இரவு  தூங்கவே முடியவில்லை. அது:

பாம்பாட்டி சித்தனின் கவிதை உலகம் அறிவியலின் மீது குவியம் கொண்டிருக்கிறது.

அய்யா, தயவு செய்து உங்கள் குவிமையத்தை வேறெங்காவது திருப்ப முடியுமா? எனக்கு இன்றிரவாவது தூங்க வேண்டும்.

இன்னொன்றும்:

இதில் நான் வாசித்த பத்து கவிதைகளும் எனக்குள் சுழன்றபடியே இருக்கின்றன,

அய்யய்யோ! என் பாவி மனது படபடக்கின்றது!

எஸ்ரா ஐயா, இந்தச் சுழற்சி கூடிய விரைவில் நிற்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

ஆனால் தலையில் இம்மாதிரிச் சுழற்றல்கள் நிற்கவில்லையானால், நான் உங்களுக்கு ஒரு உடனடி கேட் ஸ்கேன்  பரிந்துரைக்கிறேன். அதுவும் ஷ்ராதிங்கெர்  கேட் ஸ்கேன், சரியா?

-0-0-0-0-0-

பாவம் – யாராவது புதிய கவிஞர் – ஷ்ராதிங்கெர், ஐன்ஸ்டீன், பாலிங் என்று  அறிவியலில் புதிய தடங்களைப் பதித்தவர்கள், தமிழில் புதியதாக கவிதை கிவிதை என்று எழுத வந்தால், எனக்கு ஏனிந்தப் பொறாமை?

ச்ச்சீ. என்னைக் கண்டால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. *ப்ச*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s