’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள்

08/07/2013

நேற்றைய முன்தினம் காலை உள்ளூர் மளிகைக் கடை ஒன்றுக்கு இரண்டு கோழிமுட்டைகள் வாங்கப் போயிருந்தேன். என் பிள்ளைகளுக்கு மதிப்பெண் போடுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ அல்ல – சில பரிசோதனைகளைச் செய்து காட்டுவதற்காக. முட்டைகளை உபயோகப் படுத்தி பல கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான விஷயங்களைத் தொட முடியும். இதைத் தவிர முட்டை ஏன் உருண்டையாக இல்லை என்பதிலிருந்து பல பொதுப்புத்தி சார்ந்த அற்புதமான வடிவாக்கப் புரிதல்கள் பற்றியும் பேச முடியும். ஏன், கணினியியல் அடிப்படைகள் பற்றிக் கூடப் பேச முடியும்.  கடந்த இரண்டு வாரங்களாக, என் குழந்தைகளை இந்தப் பரிசோதனைகளுக்குத் தயார்ப் படுத்தியிருக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவு இந்த முட்டைகளைப் பற்றி மட்டும் அல்ல.

மேலே (அதாவது கீழே) படிக்குமுன், கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்தால் உருப்படி:

-0-0-0-0-0-0-

முட்டை வாங்குகிற கடையில் பார்த்தால் நம்முடைய பழைய இளஞ நண்பன் – ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  தமாஷிலிருந்து என்னால் ஒருமாதிரியாக (= மிரட்டி + திட்டி) மீட்கப் பட்டவன். ஆகவே — கண்டமேனிக்கும் உயர்வு நவிற்சியும் இல்பொருள் உவமையும் சுமத்தப்பட்ட அந்தக்  கவைக்குதவாத ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  விவகாரத்தில் இருந்து விலகி, உருப்படியாகக் காலத்தைக் கழித்தவன்.

மகிழ்ச்சியோடு சொன்னான்: சார், எனக்கு வேலை கெடெச்சிடிச்சி.

என்னய்யா சொல்ற, நீ இப்போ இஞ்சினீயரிங் மூணாம் வருஷம்னா படிக்கற?

இல்ல சார், நீங்க தான சொன்னீங்க – படிக்கும்போதே வேலை செய்யணும்னிட்டு. அத்தான்.

ஓ அப்படிப் போடு. ரொம்பச் சந்தோஷம்பா? பார்ட்-டைமா?

ஆமா சார். இருந்தாலும் நல்ல சம்பளம் கொடுக்கறாங்க சார்.

நல்லது தம்பி. சந்தோஷமா இருக்குது. எங்க வேல?

திருபுவனையில சார். வாரத்துக்கு அஞ்சு நாள் சாயங்காலம் வேல.

அப்போ எப்படி படிப்ப? நேரம் இருக்குமா?

பாக்கணும் சார். வெடிகாலேல எந்திரிச்சி படிக்கணும்.

வேலை என்னீலேர்ந்து?

ஜூலை பைஞ்சாந்தேதி ஜாயின் பண்ணப்போறேன்.

சரி, எப்டிப் போகப்போற?

அப்பாரு புது டூவீலர் கொடுக்கறேன்னிருக்காரு.

அப்டியா? அவர் தோட்டவேலல அவ்ளோ பணம் எங்க பாக்க முடியும்?

கடன்வாங்கிக் கொடுக்கிறேன்னாரு சார். மூணே வருஷத்துல அடைச்சுடலாம்னாரு.

தம்பி, ஒனக்கு இப்ப 20 வயதாகுது, இன்னமும் ஒங்க அப்பன் பணத்தை எதிர்பார்க்கறது என்ன நியாயம்? அவருக்கு எவ்வளவோ டென்ஷன் – வீட்டுமேல கடன் வாங்கியிருக்காரு ஒன்ன இஞ்சினீயரிங் படிக்கவெக்யறத்துக்கு. அவருக்கு ஒடம்பு வேற சரியில்ல. நீ கொஞ்சம் யோசிக்கணும் தம்பி.

ஆனா எனக்கு காலேஜும் போவணும், சாயங்காலம் வேலைக்கும் போவணுமே? எப்படி முடியும்?

ஏன், நாலு மாசம் வேலபண்ற இடத்துக்குப் பக்கத்துல ரூம் எடுத்துக்கிட்டு இருக்கலாமே, சமெச்சு சாப்டலாமே! இல்லன்னா தெனிக்கும் பஸ்ல போய்வரலாமே? அஞ்சு மாசம் பணம் சேமிச்சன்னாக்க இருவத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு செகன்ட் ஹேன்ட் ஹீரோ ஸ்பெலன்டர் கெடக்குமே! ஒங்க அப்பாவ ஏன் மேலமேல தொந்திரவு பண்ணணும்?

சரி சார். நான் யோசிச்சு அப்பாரு கிட்ட பேசறேன் சார்.

மன்னிச்சுக்க தம்பி. பாவம் ஒனக்கு மொகமே தொங்கிப் போச்சு. ஆனா, சொந்தக் காசுல, ஒழச்சு சம்பாதிச்ச பணத்துல  நம்பளுக்குத் தேவையான, அத்தியாவசியமான பொருட்கள வாங்கிக்கறதுல இருக்கற பெருமையே தனிதான? என்ன சொல்ற?

ஆமா சார். ஏன் சார், எங்க அப்பாரு ஒங்க கிட்ட இப்படிச் சொல்லச் சொன்னாரா?

இல்ல தம்பி. எனக்குத் தோணிச்சு, அதனாலதான் சொன்னேன். அவரு எங்கிட்ட பேசி ரெண்டு மாசமாச்சு. ஒங்கப்பா மானஸ்தன். ஒனக்கே தெரியுமில்லையா?

ஹ்ம்ம். சரி சார்.

பாவம் பையன். கொஞ்சம் அவனுக்குத் தெம்பு கொடுக்கலாம் என நினைத்துக் கேட்டேன் –  சரி, ஒன்னோட சகோதர ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  குஞ்சாமணிகளெல்லாம் எப்டி இருக்காங்க? என்ன பண்றாங்க? தமிழ் ஈழம் செட்-அப் பண்ணிட்டீங்களா?

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்: அய்யோ சார், அத ஏன் கேக்கறீங்க. அவங்களுக்கு ஒண்ணும் தெர்ல. சும்மனாச்சிக்கும்  பொழுதப் போக்கறத்துக்காக பண்ணியிருக்காங்க. நீங்களே சொன்னீங்களே!

ஆமா – அதனால என்ன வெளஞ்சுது, ஏதாவது உங்களுக்கோ உலகத்துக்கோ உபயோகமா ஏதாவது நடந்திச்சா?

(கொஞ்சம் யோசித்து) இல்ல சார். பரீட்சையெல்லாம் ரொம்ப தள்ளிப் போட்டுட்டாங்க. கடைசி வருடம் படிக்கறவங்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாயிடுச்சு. பாவம் சார் அவங்க. கொஞ்சம் பேர் மேல, பஸ்மேல கல் வுட்டத்துக்கு போலீஸ் கேஸ் வேற!

பேர் மறந்திடிச்சு – அமெரிக்கால குந்திக்கினு ஒரு ஆள், தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாரும் ஆயுதப் போராட்டம் செய்யணம்னிட்டு கூவிக்கிட்டிருந்தாரே – நீ கூடச் சொன்னயே – ஃபேஸ்புக் எரிமலையாக வெடிச்சிட்ருக்குன்னிட்டு?

சார், அதெயெல்லாம் ஞாபகப் படுத்தாதீங்க சார்.

ராஜபக்ஷ? தூக்கு??

சும்மா ஜோக அடிக்காதீங்க சார்.

ஜோக அடிக்கலப்பா. அன்னிக்கு அவ்ளோ உணர்ச்சிகரமா ஜெனிவா, தமிழினம், ஐநா, இனப்படுகொலைன்னிட்டு பேசினது நீயா நானா?

அதெல்லாம் அப்போ சார். இப்ப நான் சம்பந்தமில்லாத விஷயத்துல மூக்க நொழைக்கறதில்லன்னிட்டு உறுதியா இருக்கேன்.

நல்லது சமர்த்துப் பையா. எப்படியோ கண்ட கழுதைங்களோட சகவாசம் வெச்சுக்காம உருப்பட்டா சரிதான். அந்த திமுக எல்பிஎஃப் ஆளோட அரெகொறெப் பையன் என்ன செய்யறான்?

அவன் தலைமறைவா இருக்கான் சார். ரௌடித்தனம் பண்ணத்துனால போலீஸ்கேஸ். சார், ஆனா அவங்களோட நான் இப்போ பழகறதில்ல. நான் உண்டு என் படிப்புண்டுதான். அவங்களோட கழிக்கறத்துக்கு எனக்கு நேரமேயில்ல சார். இப்போ வேலேல வேற சேரப் போறேன். 

இவ்ளோ ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் பத்தி சொல்றீங்களே! ஒங்க கருணா நிதி மட்டும் என்ன – கெடச்சா ஈழம்னிட்டு ஆவேசத்தோட காங்கிரஸ்கூட லடாய் பண்ணிக்கினு வெளீல வந்திட்டு இப்ப மூணே மாசத்துல காங்கிரஸ் கிட்ட மறுபடியும் ஸரண்டர் ஆயிட்டாரே! அவ்ரு ஒரு பெரிய கட்சித் தலைவரு – அவரே அப்படியாயிட்டார்னாக்க, நாங்கல்லாம் ஸ்டூடெண்ட்ஸ் – நாங்க என்னதான் செய்ய முடியும்.

அட தம்பி – அரசியலெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டியே! சந்தோஷம். ஆனாக்க ஒண்ணு – அவர்  ‘என்னோட’ கருணாநிதி இல்ல. கட்சித் தலைவரும் இல்ல. அவரு தன்னோட மகாமகோ குடும்பத்தோட தலைவர் மட்டும்தான், சரியா.  இப்ப ஒன்னோட எதிர்காலத்துக்காக தன் சொத்தை அடமானம் வெக்ய ஒங்கப்பா தயாரா இருந்தமாரி அவரு தன் பொண்ணுக்கு ராஜ்யசபா சீட்டுக்காக த்ன்மானத்த அடமானம் வெச்சிருக்காரு, அவ்ளோதான்.  இன்னொண்ணு: அவங்களுக்கெல்லாம் தோல் தடிமன் ரொம்ப அதிகம். வெக்கம் மானமெல்லாம் கெடயாது. ஆனா ஒங்களுக்கு? ஏதாவது சொன்னா சுர்ருன்னு கோபம் வருதில்ல? மூணாவது: நீங்கதான் எதிர்காலம். ஒங்கள மாரி பசங்ககிட்ட பேசினா கொஞ்சம் புண்ணியம். அவ்ங்கள பத்தி பேசினா என்னோட ரத்த அழுத்தம்தான்  ஏறும், சரியா?

-0-0-0-0-0-

மளிகை சாமான் வாங்கிக் கொண்டு கிளம்பியவன், திரும்பி வந்தான்.

ஏன் சார், இந்த டீச்சர் வேலேல லோல் பட்டுக்கினு இருக்கீங்க? என்னோட மேனேஜர் கிட்ட ஒங்களப் பத்தி பேசினேன். அவர் ஒங்களுக்கு உடனடியாக வேல கொடுக்கறேன் அப்டீன்னாரு. ஒங்க பயோடேட்டா எல்லாம் கூட வேண்டாம்னிட்டாரு சார்! நீங்க எஸ்-னு சொன்னீங்கன்னா வேல ரெடி சார்!

ரொம்ப நன்றி தம்பி. ஆனா எனக்கு அது வேண்டாம்.

சார், சொளையா எனக்கே பத்தாயிரம் மாசச் சம்பளம் கொடுக்கப் போறாங்க. நான் நல்லபடியா வேல செஞ்சா, ஆறு மாசத்துல அதப் பைஞ்சாயிரமா ஆக்கிடுவாங்க. ஒங்களுக்குன்னா, மினிமம் க்யாரன்டி இருபதாயிரம் மொதல்லேயே கொடுப்பாங்க. வாங்க சார்.

ஒங்களுக்கு சின்னப் பசங்க இருக்காங்க, அவங்க படிப்புக்கின்னாச்சும் நீங்க வேற வேல தேடணும்.

தம்பி, அவங்க பொழப்ப அவங்க பார்த்துப்பாங்க. சரியா? அவங்க என் மசுத்த பிடுங்கி என்னை அங்க சேத்திவுடு, இவ்ளோ ரூபா கொடு, இந்த கோர்ஸ் ஒன் துட்டுலதான் பண்ணியே ஆவணும்னிட்டெல்லாம் கேக்க மாட்டாங்க. எனக்கு இருக்கிறது போதும்பா.

எவ்ளோ இருக்கு ஒங்க கிட்ட?

எனக்கு வேணுங்கறத்துக்கு மேலயே இருக்குப்பா? என்னப்பத்தி ஏன் கவலைப்படற?

சார், மிஞ்சி மிஞ்சிப் போனா, ஸ்கூல்ல ஒங்களுக்கு ஒரு அஞ்சாயிர ரூபா சம்பளம் கொடுப்பாங்களா? நீங்கதான சார் சொன்னீங்க – ஏதாவது நல்ல சந்தர்ப்பம் கெடச்சா, அதை லபக்னு கெட்டியா விட்டுடாம பிடிச்சுக்கிடணும்னு, பிடிச்சுக்கிட்டு மேலேறி வர்ணும்னிட்டு. சோம்பேறித்தனமா இருக்கக்கூடாதுன்னிட்டு. இப்ப நீங்களே இப்டிச் சந்தர்ப்பம் கெடக்யும்போது பிடிச்சுக்காட்டா எப்டி சார்?

அப்டியில்ல தம்பி, எனக்குக் கிடெச்ச சந்தர்ப்பம், இந்தப் பசங்களோட இருக்க முடியறது. இது என்னப் பொறுத்தவரை ஒரு நல்ல சந்தர்ப்பம் – நான் இத லபக்னு தான பிடிச்சுக்கிட்டு இருக்கேன்? இப்ப நீ என்கிட்ட மேத்ஸ், எலக்ட்ரானிக்ஸ்னிட்டு வந்த தானே – நான் ஒன்ன லபக்னு பிடிச்சுக்காம அப்டியே விட்டுட்டேனா?

சார், நீங்க ஏதோவொரு கற்பனேல இருக்கீங்க. ஒங்களோட சொந்த விஷயங்களப் பத்தி நான் பேசறேன் – நீங்க மத்த விஷயங்களப் பத்திச் சொல்றீங்க.

தம்பி, என்ன சொல்லவறேன்னிட்டு எனக்குப் புரியுது. ஆனால் நான் சுயநலத்தோடதான் இந்த வேலயச் செய்யறேன். எனக்கு ராத்ரீல நிம்மதியா – அன்னிக்குப் பொழுது கொஞ்சம் உபயோககரமாக முடிஞ்சுது, சில சந்தோஷங்கள் கிடைச்சுது, பூமிக்கு கொஞ்ச கொறச்ச பாரமாக இருந்தேன் – அப்டீன்னிட்டு தூங்க முடியணும். அவ்ளோதான், சரியா.  அப்டி முடியலன்னாக்க. இந்த வேலய ஏறக் கட்டிட்டு வேற வேல பாக்கப் போய்டுவேன், சரியா? இப்ப நீ ஓடு.  நானும் ஓடணும் க்லாஸுக்கு…

-0-0-0-0-0-0-

வெள்ளந்திப் பையன். வாழ்க்கை நல்லபடியாக அமையும் அவனுக்கு. ஏனெனில் ‘அறிவுரை’ கொடுத்தால் யோசிக்கிறான். அதனுடன் ஒப்புதல் இருந்தால் அதன்படி செய்கிறான். சுய கட்டுப்பாட்டுடன் கொஞ்சம் விரதமிருக்கத்  (=உணர்ச்சிகரக் கல்லெறிதலுக்கு, அதனால் எழும்பும் புளகாங்கிதத்துக்கு ஆட்படாமல், சில நாள் அமைதியாக உட்கார) தெரிகிறது. அடிப்படை அறவுணர்ச்சி இருக்கிறது. முனைப்பும் இருக்கிறது.

இம்மாதிரி இளைஞர்கள் அரசியலிலும் ஈடுபடவேண்டும்.  இவர்கள்தாம் விடிவெள்ளிகள்.

ஆனால், இளைஞத் தட்டச்சு ஃபேஸ்புக், ட்விட்டர் போராளிகள் விடிவெள்ளிகள் அல்ல. அவர்கள் மந்தமான கருத்த ஓட்டைகள் – black holes!  பணம், படிப்பு, காலம், வாழ்க்கை அனுபவங்கள் என, எதனைக் கொடுத்தாலும் கபளீகரம் செய்பவர்கள். ஆனால், அவற்றால் ஒரு விதமான வளர்ச்சியும் உடல் / உள ரீதியாக அடையாதவர்கள். என்ன சொன்னாலும் புரியாதவர்கள். சுயபுரிதல்களோ, மீஅறிதல்களோ இல்லாதவர்கள். அவர்களினுள்ளே என்ன நடக்கிறது என்றே அவர்களுக்கும் புரியாது – நமக்கோ என்றால், கேட்கவே வேண்டாம்!

-0-0-0-0-0-0-

ஒரு முட்டையை வெனிகர் திரவத்தில் (அஸிடிக் அமிலம்) ஊற வைக்கவேண்டும். இன்னொன்றில் கண்ணில் தெரியாத ஒரு மிகச்சிறிய துளையிட வேண்டும். அப்போதுதான் செவ்வாய்க் கிழமை பரிசோதனைகள் ஒரு மாயமந்திர விஷயம் போல இருக்கும். நாளை மற்றுமொரு நாளே!.

முட்டைகளுக்கு ஒருவாறான மீஅறிதல் உண்டு. அவை சுதேசி நாட்டு முட்டைகளாக இருந்தால், அவற்றில் இருந்து கோழிக்குஞ்சுகள் உயிர்த்தெழுந்து வரலாம் கூட!

கருத்த ஓட்டைகள் மகாமகோ புதிர்கள். அவற்றுள் என்ன நடக்கலாம் என்பதற்கு ஆயிரத்தெட்டுக் கருத்தாக்கங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு புரிதலும் முழுமையாக இல்லை.

ஆகவே, இந்த ஜந்துக்களின், தாங்கொண்ணாப் புதிர்களின் அருகில் போகவே போகாதீர்கள்! போனால், நீங்களும் கபளீகரம் செய்யப் படுவீர்கள். என்னுடைய  பல அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டுதான் சொல்கிறேன்.

ஜாக்கிரதை!

3 Responses to “’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள்”

  1. சான்றோன் Says:

    இதெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு அப்போ சொன்ன எங்க மேல எத்தனை பேரு பாஞ்சாங்க ? இப்போ என்ன சொல்லப்போறீங்க …….?


  2. சில சமயம், எல்லாரும் ஒப்புக்கொள்ளும்படியான கருத்துக்களையும் கூறிவிடுகிறீர்களே! முகநூலும், குருவிக்கூச்சலும் சுய சிந்தனையுள்ள இளைஞர்களை வெட்டிப் பொழுதுபோக்க வைக்கும் சாதனங்களாகவே அதிகம் பயன்படுவது வருத்ததிற்குரியது. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.


  3. இந்த பதிவில் நிறைய எழுத வேண்டியுள்ளது. மீண்டும் வருவேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s