திராவிட இயக்கம் IS for dummies!

11/08/2013

அதிஷா அவர்கள் ஒரு புத்தக அறிமுகம் செய்திருக்கிறார்கள்; அதன் தலைப்பு திராவிட இயக்கம் for dummies; வேலை அசதியால் – இந்தத் தலைப்பில் அவர் தவறு செய்திருக்கிறார் என நான் கருதுவதால், நான் கொஞ்சம் அதனைச் செப்பனிட்டு திருத்தியிருக்கிறேன்; ஏதோ என்னால் ஆன உபகாரம்.

இந்த அறிமுகத்தின் சுருக்கம்: இக்கால இளைஞர்கள் ஒன்றுமே தெரியாமல், திராவிட இயக்கத்தையும், கருணாநிதி அவர்களையும் கரித்துக் கொட்டுகிறார்கள். திஇ பல மகத்தான சாதனைகளைச் சாதித்துள்ளது. “நூறாண்டுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தொடர்ந்து சமூகநீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருகிறது.” ஆனால் விஜயகாந்த் குறுகிய காலத்திலேயே 10சதவிகிதம் வோட்டுக்களை அமுக்கிக் கொண்டுவிட்டார். “வருங்காலத்தில் திராவிட இயக்கம் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ளவும் புதிய இளைஞர்களிடம் தன் சமூகநீதி சார்ந்த கொள்கைகளை கொண்டு செல்லவும் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற பரிந்துரைகளையும்” வழங்குகிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கோவி லெனின்.

என்னுரை: அதிஷா அவர்களுக்கு மிகவும் நகைச்சுவை உணர்ச்சி அதிகம். இதைப் பற்றி மிகவும் சிலாகித்து ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனாலும், அவரும் இளைஞர்தான் என நினைக்கிறேன். இவரும் திஇ காரர்களைப் பற்றி ஒற்றைப் புத்தகத்தைப் படித்துவிட்டு பின்புல விஷயங்களை அறியாமல் திஇ-யையும், முக-வையும் புகழ்கிறார்.  ஆக, இவர் விமர்சனம் வைக்கிற இளைஞர்களில் இவரும் ஒரு மகத்தான பங்கை வகிக்கிறார். Tautology, what else! ஆக, என் சிலாகிப்புகளில் 80%த்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

இவர் சுற்றி வளைத்து எழுதுகிற  ‘அதிகாரத்தின் சகல இடங்களையும் ஆக்கிரமித்திருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக’ நானும் என் முதிராயிளம் பருவத்தில் திக மாயையில் சில வருடங்கள் இருந்தேன். ‘அந்தக் குறிப்பிட்ட சமூகத்தினனையும்’ பாம்பையும் பார்த்தால் முதலில் அவனை அடி என்கிற எளிமைப் படுத்தப்பட்ட கொள்கை முழக்கங்களை உச்சாடனம் செய்து  ‘அந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரை’ இளக்காரமாகவும் வெறுப்புடனும் பார்த்திருக்கிறேன். ஆனால் – ஈவே ராமசாமி அவர்கள் அளவிற்கு மிருகவியல் அறிவும், வன்முறையும் மிகுந்து பாம்பை இரண்டாவதாக அடி – எனும் கைவல்ய நிலையை அடைய, பாவியாகிய எனக்குக் கொடுப்பினை இல்லை; பாம்பால் கடிபட்டாலும், ஒரு பாம்பையும் கொன்றதில்லை – சில பாம்புகளைக் காப்பாற்றியிருக்கிறேன்; என் நல்லூழ் காரணமாக எனக்கு சில மகாமகோ நேர்மையும் படிப்பறிவும் மிக்க இடதுசாரியினரிடமும் பழக்கம் ஏற்பட்டதால் – இந்த உதிரி திராவிட இயக்கங்களை வெறுத்து ஒதுக்கினேன். நல்ல வேளை. இல்லையேல் ’வரலாறுக்கு 90000 வயது’  அல்லது ‘பூகோளத்துக்கு புண்ணாக்கு வயது’ என அசட்டுக் கழுதைகள் எழுதிக் கொண்டு, என் புறங்கையையும் நக்கச் சந்தர்ப்பம் வாய்க்காதா என அல்லாடிக் கொண்டிருந்திருப்பேன்.

-0-0-0-0-0-0-

திராவிடம், லெமூரியம், ஆரியச் சதி, பார்ப்பனக் குசும்பு, இடஒதுக்கீடு, மனு நீதி எதிர்ப்பு, இந்துத்துவா, தமிழ் இனம், இனமானம், அடமானம் எனப் பேசிப்பேசியே தமிழகத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறது, தமிழர்களைத் தொடர்ந்து முட்டாட்களாக்கிக் கொண்டிருப்பதுதான் இந்த திராவிட இயக்கம். தமிழின் செழுமைக்கு, அதன் வளர்ச்சிக்கு, ஜாதி நல்லிணக்கத்துக்கு, சமூக முன்னேற்றத்துக்கு – இவற்றையே விடுங்கள் –  தலித்களின் முன்னேற்றத்துக்கு எனக் கூட ஒரு துரும்பையும் கூடக் கிள்ளிப் போடாமல், குப்பைத் திரைப்படக்காரர்கள் பின்னும் அடுக்குமொழி பொறுக்கி நடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும், தத்தம் குடும்பங்களுக்கு வசதிவாய்ப்புக்களைப் பெருக்கிக்கொண்டும் இருப்பவர்கள்தாம் இந்த ஜந்துக்கள். சுயலாபம் இல்லாவிட்டால், சுருட்டும் வாய்ப்பு இல்லாவிட்டால், பதவி கிடைக்காவிட்டால் – ஒரு சுக்கு பணியும் செய்யாதவர்கள். அப்படிக் கிடைத்தாலும் புறங்கையை நக்குபவர்கள்.

ஆக, இந்தப் புத்தகத்தின் தலைப்பு – திராவிடர் இயக்கம் – நோக்கம், தாக்கம், தேக்கம் – என்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இதனை அப்படியே முன்னகர்த்தினால் – புதைப்பு அல்லது எரியூட்டல் என்று முடியும் என நான் நினைக்கிறேன்.

-0-0-0-0-0-0-

“திராவிடர் இயக்க அரசியலென்பது இம்மண்ணின் அரசியல், அது இந்த மக்களின் அரசியல், அவர்களுடைய விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட அரசியல் என்பதை படிக்கும்போது” என அதிஷா அவர்கள் எழுதும்போது, கூட கீழ்கண்ட வெகு ஆவேசத்துடன் ஆரம்பித்து புஸ்ஸென்று முடியும் – கருணாநிதி அவர்களின் அறிக்கையைப் படிக்கவும்:

ஆர்ப்பாட்டம் என்பது வெறும் சொல் அல்ல
வியாழன், 08 ஆகஸ்ட் 2013 15:45

போர்ப்பாட்டின் முன்னறிவிப்பு! தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் முழக்கம்!

”… தம்பி பிரபாகரன் போன்றவர்களை இழந்து, அவர்களுடைய குடும்பத் தையும் இழந்து, அவர்களுடைய உற்றார் உறவினர்களையும் இழந்து, மாபெரும் தலைவர்கள் பலரை இலங்கையிலே இழந்து – இனி யாவது, இதற்குப் பிறகாவது, அனைத்திந்திய அளவிலே மாத் திரமல்ல; அனைத்து நாடுகளின் அளவிலும் நம் மீது இரக்கம் காட்டி, நம் மீது அனுதாபம் தெரிவித்து, நம்மை வாரி அணைத்து, வஞ்சகர்களால் வீழ்ந்த இந்த இனத்தை மீண்டும் தலைதூக்கி விட, கை தூக்கி விட வரமாட்டார்களா என்ற எண்ணத்தோடு…” [அய்யா, வீரம் எல்லாம் எங்கே போயிற்று? எனக்கு அழுகையாக வருகிறது]

”… இதற்கும் இந்தியப் பேரரசு வாய் மூடி மவுனமாக இருக்குமேயானால், நாம் வேறு யாரிடத்திலே சென்று, துணை புரியுங்கள் என்று கேட்பது? உதவி செய்யுங்கள் என்று கேட்பது? என்பதையெல்லாம் மிகுந்த மன உருக்கத்தோடு, மன வேதனையோடு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டி ருக்கிறேன்…” [அடப் பாவமே! என்ன துன்பியல் சமாச்சாரமிது!]

”… அனைத்துத் தமிழர்களும், எல்லா இயக்கங்களும் இந்தச் சிந்தனையிலே இருந்தாலும், செயல் பாடுகள் வேறாக இருக்கலாம், ஒரே சிந்தனை தான், இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான்! அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும், முன்னேறும், முன்னேறும் (கை தட்டல்) என்று நான் சொல்லி – இன்றில்லா விட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் – அதுவும் தவறினால் என்றோ ஒரு நாள் திராவிடர்கள், தமிழர்கள், இலங்கையிலே வாடுவோர், இலங்கையிலே சீரழிவோர் இவர்கள் எல்லாம் புத்துயிர் பெற்றுக் கிளம்ப, காலம் நிச்சயமாக உருவாகும். அப்படிப்பட்ட ஒரு காலத்திற்கு இன்றைக்கு நாம் அச்சாரம் போடுகின்ற நாள் தான் இந்த நாள் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து, குறிப்பாக இதனை நம்முடைய மத்திய அரசுக்குத் தெரிவித்து – எவ்வளவு நாட்களுக்கு மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறது?” [தமிழர் படை தடைகளை உடைத்தெறிந்தாலும், மத்திய அரசின் மௌனத்தைப் பிளக்க முடியவில்லையே!]

”… இந்த ஆர்ப்பாட்டம் என்ற அந்தச் சொல், இது வெறும் சொல் அல்ல, ஆர்ப்பாட்டம் என்பது போர்ப்பாட்டின் முன்னறிவிப்பு (கைதட்டல்) என்பதை இங்கே நான் அவர்களுக்கு தெரிவித்து, இந்திய அரசு கேளாக்காதாக, தன்னுடைய காது களை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, வருகின்ற காமன்வெல்த் மாநாட்டில், நீங்கள் இலங்கைக்குச் சென்று கலந்து கொண்டால், அது திராவிடர்களை, தமிழர்களை இழிவுபடுத்துகின்ற, கேவலப்படுத்துகின்ற ஒரு செயல் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்தச் செயலுக்கு நீங்கள் ஆட்பட வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி, இந்த அறிவுரையை நீங்கள் கேட்காவிட்டால் – ஏதோ ஆபத்து ஏற்படும் என்று நான் அவர்களை அச்சுறுத்த விரும்பவில்லை எதிர்காலத் தமிழ் இனம் உங்களைச் சபிக்கும் என்பதை மாத்திரம் உங்களுக்குக் கோடிட்டுக் காட்டி – அந்த நிலைக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்…”  [வீரமாக போர்செய்யப் புறப்பட்டு, நடுவில் ஜகா வாங்கி, கடைசியில் பிலாக்கணம் வைத்துச் சாபம் கொடுக்கும் பாங்கே தனிதான்!]

”… இன்னமும் சில நாட்கள் நாம் அமைதியாக இருந்தால், பெய்கிற மழை பெய்து கொண்டே இருக்கட்டும் என்று நாம் அதைத் தடுப்பதற்கோ, தாங்குவதற்கோ தயாராக இல்லாமலிருந்தால் – இலங்கைத் தீவு என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு சூட்டப்பட்டு விடும் – தமிழ் நாட்டின் பெயரே மாறி விடும் – தமிழ்நாட்டுக்கு பெயரே இல்லாமல் ஆகி விடும் – சேரன் ஆண்டான், சோழன் ஆண்டான், பாண்டியன் ஆண்டான் என்றெல்லாம் இருந்த பெயருக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். இழப்பு ஏற்பட்டு விடும். அந்தப் பெயர் நம்முடைய வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதற்கு நாம் துணை போகப் போகிறோமா? வேடிக்கை பார்க்க போகிறோமா? என்கிற கேள்வி களுக்கெல்லாம் விடையளிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழா, நீ இருக்கிறாய், தமிழனே நீ இருக்கிறாய்,…” [இலங்கைத் தீவு என்கிற பெயர் தமிழகத்துக்குச் சூட்டப்பட்டால் எப்படி தமிழ் நாட்டுக்குப் பெயரே இல்லாமல் போய் விடும்? அதுதாண்ணே ’இலங்கைத் தீவு’ ஆகிவிட்டதே!  அப்படியே இருந்தாலும் தமிழ் நாடு ஒரு தீவு கிடையாதே? குடமுருட்டி குண்டு போல, போகிற போக்கில் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறீர்கள், சரிதான்.]

சில சமயங்களில் இந்த மனிதர் என்னதான் சொல்ல வருகிறார் என்றே புரிய மாட்டேன் என்கிறது (”உண்மையான தமிழர்கள் – தமிழ் ரத்தத்திலே ஊறியவர்கள் – தமிழ் ரத்தத்தின் எழுச்சி காரண மாக உணர்ச்சியைப் புரிந்தவர்கள் ” – என்னபா இது தமிழ் ரத்தம்? அதில் எப்படி ஊறுவார்கள் தமிழர்கள்? ரத்தம் உள்ளேயா, வெளியேயா?)… கடவுளே! இப்படி இவர் ஏறுமாறாக, தொடர்பேயில்லாமல், மகாமகோ நகைச்சுவையுணர்ச்சியுடன் பேசிக் கொண்டேயிருந்தால், குடும்பப் பாசமலராக, ஊழல் திலகமாக இல்லாமலிருந்தால் ”நேற்று முளைத்த நெல்லிவிட்டைகள் கூட கலைஞரை ஏகவசனத்தில் விமர்சித்துக்கொண்டிருப்பது”  என்பது சரிதானே? நீர் தன் மட்டத்தை (அது மட்டமாகவே இருந்தாலும் கூட) அடையும் என்பது சரிதானே?

-0-0-0-0-0-0-0-

ஊக்கபோனஸாக, திகவினரின் எழுச்சி ஆர்பாட்டங்கள்,  அடுக்கு மொழியில் மிளிர்வதைக் கண்டு ரசிக்கவும்… இதைப் படித்தவுடனே, அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க, ‘தமிழ்’ ஈழம் மலர, பிரபாகரன் ஈஸ்டர் அன்று உயிர்த்தெழுந்து மீண்டு  வர —  நான் உத்திரவாதம்… (வியாழன், 01 ஆகஸ்ட் 2013 தேதியிட்ட விடுதலைக் கட்டுரை)

ஆர்த்தெழுந்தனர் அரிமா படையினர்  ஆங்கே! ஆங்கே!!

திருப்பரங்குன்றத்தில் திராவிடர் எழுச்சி!
நாகையில் நாப்பறை!!
திருவள்ளூரில் தீரர்களின் முழக்கம்!!!
திமிறி எழுந்தது திருவண்ணாமலை!!!!
அரியலூரில் ஆவேசம்!!!!
கனன்றது கன்னியாகுமரி மாவட்டம்!!!!!
திருத்துறைப் பூண்டியில் திராவிடர் சங்க நாதம்!!!!!!
இராம நாதபுரத்தில் இடிமுழக்கம்!!!!!!!
கோபியில் கோடையிடி!!!!!!!!
அதிர்ந்தது ஆவடி!!!!!!!!!
திண்டோள் தினவெடுத்துத் திரண்டது திண்டுக்கல்!!!!!!!!!!
மேட்டுக்குடி மக்களை மிரட்டிய மேட்டூர்!!!!!!!!!!!
கோவையில் கோபப்புயல்!!!!!!!!!!!!
ஈரோட்டில் எழுச்சிக் குரல்!!!!!!!!!!!!!
நெல்லையில் நெடுங்குரல்!!!!!!!!!!!!!!
புதுச்சேரியில் புயலா!!!!!!!!!!!!!!!
மடைதிறந்த வெள்ளம்போல் மயிலாடுதுறை!!!!!!!!!!!!!!!!
திருச்சியில் திராவிட முழக்கம்!!!!!!!!!!!!!!!!!
சென்னையில் சீறிய புயல்!!!!!!!!!!!!!!!!!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா! இவங்க கேக்கறத கொடுத்ருங்கபா! இல்லாட்டி இப்படியே ஆச்சரியக் குறி போட வெச்சே நம்ம ஒழிச்சுருவாங்க.

-0-0-0-0-0-0-

நம் தமிழகத்தைப் பீடித்த திராவிட கிரஹணம் எனும் போலிக்கற்பிதம் நிச்சயம் விலகும்.  அப்படியே கொஞ்ச நாள் நீடித்தாலும் அதிக பட்சம் பேரளவில் இருக்கும் – ஆக, நம் தமிழகம் சிறக்கும் என்பதில் எனக்கு  ஐயமில்லை.

ஆம்! திராவிட இயக்கம் is  only for dummies!

ஆமென்.

தொடர்புள்ள பதிவுகள்:

6 Responses to “திராவிட இயக்கம் IS for dummies!”

 1. சரவணன் Says:

  திமுகவினரின் மேடைப் பேச்சு வீராப்புகள் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு எதிராக விடுக்கும் வீராவேச காமெடிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பது உண்மையாயினும், இன்றுவரை பா.ஜ.க.வை தமிழகத்தில் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. தொகுதிகூடப் பெற முடியாத பரிதாப நிலையில் வைத்திருப்பதற்கு திராவிட இயக்க legacy -தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

 2. சான்றோன் Says:

  சரவணன்…. உங்கள் அரசியல் அறிவு புல்லரிக்க வைக்கிறது……

  1996 ஆண்டு தனித்து போட்டியிட்ட பாஜக சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் , வேலாயுதம் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்…..

  அப்புறம் ….. 1967 முதல் இன்றுவரை திராவிட கட்சிகள் கூட்டணியில்லாமல் ,தனியாக நின்று ஒருசட்டமன்ற , பாராளுமன்ற தேர்தலைக்கூட சந்தித்ததில்லை என்பது உங்களுக்குத்தெரியுமா?

  உங்களைப்போன்றவர்களைத்தான் திரு. ராமசாமி அவர்கள் குத்திக்காட்டுகிறார்….. அது அப்படித்தான் என்பதை உங்கள் கருத்து உறுதிப்படுத்துகிறது……

 3. சான்றோன் Says:

  கருணாநிதியை நாம் விமர்சிப்பதைப்பற்றி இவ்வள‌வு அங்கலாய்க்கும் இந்த அதிஷா வகையறாக்களுக்கு. [ முன்பு உங்களிடம் மாட்டி வறுபட்ட ஆர். முத்துக்குமார் , யுவகிருஷ்ணா போன்றோரும் இதே வகைதான் ] …

  கருணாநிதி இவர்களைப்போல் இளைஞராக இருந்தபோது , அப்போதைய முதிர்ந்த அரசியல்வாதிகளான காமராஜ் , ராஜாஜி போன்றோரை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார் என்பது தெரியுமா?

  இத்தனைக்கும் அந்த மாபெரும் மனிதர்களை , கருணாநிதி போன்ற குப்பையோடு ஒப்பிடுவது மகா பாவம்…..

  இப்படிப்பட்ட அரைகுறைகளையே தொடர்ந்து உருவாக்கி , உலகம் முழுக்க உலாவவிட்டு , தமிழ் இளைஞர்கள் என்றாலே இப்படிப்பட்ட மூளையில்லாத முணடங்கள் தான் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே ,…….அதுதான் கழகங்களின் மாபெரும் சாதனை…….

 4. பொன்.முத்துக்குமார் Says:

  // ஆம்! திராவிட இயக்கம் is only for dummies! //

  கை கொடுங்கள் ராமசாமி சார். நானும் இதைத்தான் நினைத்தேன் !

  அவரவர்கள் தரத்துக்கேற்பவே அவரவர்கள் தேர்வும் அமையும் என்பதுதான் எவ்வளவு சரி. சும்மாவா சொன்னான், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்று !

 5. poovannan Says:

  சார் நீங்கள் சொன்ன மாதிரி ப்ளாக் ஆக உங்கள் கட்டுரைக்கு பதில் எழுதி இருக்கிறேன்.

  http://majpoovannan.blogspot.in/2013/08/blog-post_13.html

  • ramasami Says:

   அன்புள்ள பூவண்ணன்,

   நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது மிக மகிழ்ச்சியான விஷயம்; தொடர்ந்து எழுதுங்கள்.

   எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. சமயம் கிடைக்கும்போது அவற்றைப் பதிவு செய்கிறேன்.

   சுட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது, உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்.

   __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s